💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 103
“ஜானு வாங்க” ஜனனியை அழைத்தான் அகிலன்.
“என்ன டா செல்லம்?” அவனது அருகில் வந்த ஜானு, தோட்டத்தைப் பார்த்தாள்.
வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. அவளுக்கோ மழையைப் பார்த்ததும் அதில் நனையும் ஆவல். இருந்தும் அவள் நனைவதைப் பார்த்து சிறுவர்களும் வந்து நனைந்தால் அது சரியாக இருக்காது என தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
வானத்தில் நிலவை நோக்கினாள். பௌர்ணமி நிலவு பால் ஒளி சிந்தி பளபளத்துக் கொண்டிருந்தது.
“மூன் பார் அகி” அவன் தலையை உயர்த்திப் பார்க்க வைத்தாள்.
“வாவ்! அழகா இருக்குல்ல ஜானு” அவன் கண்களும் விண்மீன்களுக்கு ஒப்பாகப் பிரகாசித்தன.
“யுகி எங்கே டா?” என்று வினவ, “அவன் என் கிட்ட கோவிச்சுக்கிட்டான்” முகத்தை உப்பிக் கொண்டான் சிறுவன்.
அவள் ஏன் என்பதாகப் பார்க்க, “நாங்க கலர் பண்ணிட்டு இருந்தோம். நான் ரெட் கலர் எடுக்கவும் அது அவனுக்கு தேவைப்பட்டுச்சு. கொடுத்தேன். அப்பறம் நான் எது எடுத்தாலும் அவன் எடுக்கிறான். நான் எடுக்கிறது தான் வேணுமானு கேட்கவும் கோபப்பட்டு போயிட்டான்” என்று அவன் சொல்லும் போது, சத்யாவுடன் வந்தான் யுகி.
“ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சாம். கேள்விப்பட்டியா ஜானு?” என சத்யா கேட்க, “நான் முட்டல. இவன் தான் என்னை திட்டுறான்” முறுக்கிக் கொண்டான் யுகன்.
“நான் திட்டல. நீ தான் சும்மா சும்மா என்னை சீண்டி விடுற” என்றுரைத்தான் அகி.
“சரி சரி. ரெண்டு பேரும் ச்சில் பண்ணுங்க. ஷெயார் பண்ணி தானே பண்ண சொல்லி இருக்கோம். ரெண்டு பேரு மேலயும் தப்பு தான். கை கொடுங்க” என சத்யா சொல்ல,
“அவனைக் கொடுக்க சொல்லுங்க” அகி கையைப் பின்னால் கட்டிக் கொள்ள, “நீ கொடு முதல்ல” யுகியும் சிலுப்பிக் கொண்டான்.
“சீன் போடாம கை கொடுங்க டா” ஜனனி இருவரது கையையும் பிடித்து ஒன்றாக வைக்க, முதலில் முறைத்து விட்டு பின்னர் சிரித்து விட்டனர்.
“சண்டை போடவே தெரியாது. இதுல ஓவரா பண்ணுறீங்க. வெட்டிக் கோபம் உங்களுக்கு” இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டாள் ஜனனி.
“மூன் பாருங்க. எவ்ளோ அழகா இருக்குல்ல” சத்யாவின் பார்வை முழுமதி மீது படிந்தது.
“சூப்பர்ல டாடி. அதில் ரெபிட் ஷேப் மாதிரி இருக்குல்ல. மூன்ல நெஜமாவே ரெபிட் இருக்கா?” ஆச்சரியமாகக் கேட்டான் யுகி.
“நெஜமாவே இருக்கிறதில்ல. நாம அப்படி நெனச்சிட்டு அதைப் பார்க்கிறதால அந்த மாதிரி தோணும். அது பிரம்மை தான்” என்றாள் ஜனனி.
“அதுவும் சரி தான். நாம எதையாவது நெனச்சிட்டு பார்த்தா அது மூன்ல தெரியுற மாதிரி ஃபீல் ஆகும்” சத்யாவும் ஜனனியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“இப்போ நாம கண்ணை மூடி நமக்கு பிடிச்சவங்கள நெனச்சுப்போம். யாரு தெரியுறாங்கனு பார்ப்போமா?” என்று யுகி கேட்க, “சூப்பர் ஐடியா யுகி” அகியும் அதனை ஒப்புக் கொண்டான்.
“வேண்டாமே. அப்பறம் அதுக்கும் சண்டை போட்டீங்கன்னா?” சத்யா மறுப்புத் தெரிவிக்க, “நோ! நாங்க சமத்தா இருப்போம்” என்ற இருவரையும் அள்ளிக் கொள்ளத் தான் அவன் கைகள் பரபரத்தன.
அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர். சில கணங்களில் இமை பிரித்து நிலவை நோக்கினர்.
“நான் டாடியைப் பார்த்தேன்” என்று யுகி சொல்ல, “நான் ஜானுவைக் கண்டேன்” முறுவலித்தான் அகிலன்.
“நான் உங்க மூனு பேரையும் பார்த்தேன்” சத்யாவும், ஜனனியும் ஏக காலத்தில் சொல்லி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“எங்களுக்கு தூக்கம் வருது” சிறுவர்கள் அறைக்குச் சென்று உறங்கி விட்டனர்.
பல்கோணியில் இருந்த ஜனனியின் பார்வை அவளவனைத் தீண்டியது. அவன் தோள்களில் சட்டென்று சாய்ந்து கொண்டாள்.
“என்ன ஜானு?” அவள் தலை வருடி மென்மையாக வினவினான்.
“ஒன்னும் இல்லங்க. என் பக்கத்துல இருங்க” அவன் கைகளை இறுக்கிக் கொண்டாள்.
அவள் மனம் அவனது அருகாமையை நாடியது. அவனும் அதை உணர்ந்து அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“நான் உன் கிட்ட தான் டா இருக்கேன். எங்கேயும் போக மாட்டேன் கண்மணி” அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்.
சற்று நேரம் சாய்ந்திருந்தவளுக்கு மனம் அமைதியடைய, “மழை பெய்யும் போது பார்க்க செமயா இருக்குல்ல. எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும். வீட்டுல இருக்கும் போது நனைவேன். அப்பாவுக்குத் தெரிஞ்சா ஏச்சும் விழும்” என்று சொன்னாள் அவள்.
“எனக்கும் மழைன்னா பிடிக்கும். ஆனால் பிறகு பிறகு மழை மீதான பிடித்தம் குறைய ஆரம்பிச்சிடுச்சு. ஒரு கட்டத்தில் அதை வெறுத்த மாதிரி ஆகிட்டேன். என்னனே தெரியல. நான் நனையுறதை விட்டுட்டேன்” என்றதும் சற்று யோசித்தவள் அவளை மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டு சென்றாள்.
“என்ன பண்ணுற ஜானு?” என்று கேட்பதற்குள் அவனை இழுத்து மழையில் நிறுத்தியிருந்தாள்.
மழையும் வலுக்க ஆரம்பிக்க, அவன் மேனியை மழைத்துளிகள் முத்தமிட ஆரம்பித்தன. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் பிறகு மழையைச் சுகிக்கிறான். அவன் மனதில் சொல்ல முடியாத உணர்வு.
“ஏன் திடீர்னு இழுத்து விட்ட?” அவன் செல்லமாக முறைக்க, “நேரம் காலம் பார்த்தா பண்ண முடியும். நினைக்கிறதை ஆறப் போடாம அப்பப்போ பாண்ணிடனும்” என்று கண் சிமிட்டினாள்.
“அப்போ அப்பப்போ பண்ணிட்டாப் போச்சு” அவள் இடையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்.
“ஆங்ங்” எதிர்பாராத இழுப்பில் நிலை தடுமாறிப் போய் அவனது தோள்களைப் பிடித்துக் கொண்டாள்.
“உனக்கு என்ன தோணுது?” புருவம் தூக்கிக் கேட்டான் அவன்.
“கையை விரிச்சு சுத்தனும் போல இருக்கு. துள்ளிக் துதிக்கனும் போல இருக்கு. அப்பறம், உங்களைக் கட்டிப் பிடிச்சுக்கனும் போல இருக்கு” சொல்லும் போதே அவளின் கன்னக் கதுப்புகள் செக்கச் சிவந்து போயின.
“நீ எங்கே கட்டிப் பிடிச்ச? நான் தானே பிடிச்சிருக்கேன்”
“அதான். நீங்க கட்டிப் பிடிச்சு இருக்கீங்க. நான் கட்டாம பிடிச்சு இருக்கேன். இப்போ பிடிக்கிறேன் பாருங்க” அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் வஞ்சி.
“ஹா ஹா! என் ஜானுவுக்கு இப்படி எல்லாம் பேச வருமா?” அவள் நாடி பிடித்துக் கேட்டான் அவன்.
“வருமே. ஏன் வரக் கூடாதா?” இமையுயர்த்திக் கேட்டாள் இணையவள்.
“வரலாம். வரனும். ஆனால் நீ இப்படி பேசி நான் பார்த்தது இல்லையே. கொஞ்சிப் பேசினா கொஞ்சம் அழகு, மிரட்டிப் பேசினா மிச்சம் அழகு, அட்வைஸ் பண்ணுனா அப்படி அழகு, கோபமா பேசினா கொள்ளை அழகு.. வெட்கப்பட்டு பேசும் போது ப்பாஹ்! பக்கா அழகு ஜானு” அவள் முகத்தில் விரல்களால் கோலம் போட்டான்.
“நீங்க பேசுறது மயக்கும் அழகு. பேசிப் பேசியே என்னை உங்க பக்கம் சாய்க்கிறீங்க” அவன் பேச்சில் வெட்கம் சூழ்ந்தது, அவள் செவ்வதனத்தில்.
“செம்ம கியூட்” அவளின் கன்னங்களைப் பிடித்துக் கிள்ளினான் கணவன்.
மழையில் நனைந்தவர்கள், அறைக்குச் செல்ல சத்யா குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
“இவருக்கு நைட்டுக்கு குளிக்கிறதே வேலையாப் போச்சு. வரட்டும்” ஊடல் கொண்டாள் ஊர்வசியவள்.
அவன் வரும் வரை காத்திருந்தவள், கட்டிலில் இருந்த ஷர்ட்டை எடுத்து பக்கமாக வைத்து விட்டு நிமிரும் போது பின்னிருந்து அணைத்துக் கொண்டான் சத்யா.
எதிர்பாராத அணைப்பில் திடுக்கிட்டுப் போனவளுக்கு இருதயம் இரட்டிப்பு வேகத்துடன் துடிக்கத் துவங்கிற்று. கோபம் எல்லாம் காற்றோடு கரைந்திடினும், திரும்பி அவனை முறைத்தாள்.
“கூல் டவுன் பொண்டாட்டி” அவளின் மூக்கோடு மூக்கு வைத்து உரசினான்.
“விடுங்க” அவள் விலக எத்தனிக்க, “தலை துடைக்க வேண்டாமா?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் சேலை நுனியைப் பிடித்து தலை துவட்டினான்.
அவளின் கண்கள் பளிச்சென்று ஒளிர்ந்தன. அவனைப் பார்த்துச் சிரிக்க, “என்ன?” எனக் கேட்டான்.
“ஒரு பாட்டு ஞாபகம் வந்துச்சு” என்றவளைப் பார்த்து, “என் கூட இருக்கும் போது உனக்கு எல்லா பாட்டும் தான் ஞாபகம் வரும். இன்னிக்கு என்ன வந்துச்சாம். பாடு பார்ப்போம்” என்று வினவினான்.
தலையசைப்புடன் அவனைப் பார்த்தவாறே பாடத் துவங்கினாள்.
🎶 தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை 🎶
🎶 திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை… 🎶
🎶 யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே 🎶
அவள் பாடியதை ரசித்துக் கேட்டான். இன்று நடந்தது அப்படியே பாடலாக உள்ளது அல்லவா?
“அழகா பாடுற ஜானு. செம்ம செம்ம” அவள் கன்னத்தைப் பிடிக்க, “இன்னிக்கு நீங்க பண்ணுனதைப் பார்த்ததும் சட்டுனு ஞாபகம் வந்துச்சு” என்று வெண்பற்கள் விகசிக்க நகைத்தாள்.
அவன் கைகள் அவள் கைகளோடு பிணைந்தன. விரல்கள் விரல்களோடு உறவாடின. விழிகள் இரண்டும் நேசப் பார்வையை வீசிக் கொண்டன.
“உனக்கு என்னை ஏன் ஜானு பிடிச்சது?” அவன் ஆச்சரியமாகக் கேட்டான்.
“பிடிக்க காரணம் வேணுமா? சில பிடித்தங்கள் இயல்பாகவே வந்துடும். காரணம் யோசிச்சா நிறைய வருமே தவிர, இது தான்னு குறிப்பா ஒன்னைச் சொல்ல முடியாது. அகி யுகியைப் பிடிச்ச மாதிரியே உங்க மேலயும் எனக்கு ஒரு வகை அன்பு வந்துருச்சு.
அந்த அன்போட ஏக்கமும், நெருக்கமும் ஒன்னா கலக்கவும் காதல் உருவாச்சு. காதல் என்ற கண்ணோட்டத்துக்குப் பிறகு எல்லாமே மாறின மாதிரி இருக்கு. இப்போல்லாம் உங்களை அதிகமா தேடுறேன். இன்னும் அதிகமா உரிமை எடுத்துக்கிறேன்.
உங்க கிட்ட அதிகாரமா மனைவி என்கிற அந்தஸ்தை எடுத்துக்கிறேன். வெட்கம் வருது, உங்களை ரசிக்கத் தோணுது, செல்லமா கோவிச்சுக்க தோணுது, கொஞ்சனும் போல இருக்கு” என்று சொன்னவளை நேசப் பார்வை பார்த்தான் சத்யா.
“எங்கே கொஞ்சு பார்ப்போம்” கன்னத்தைக் காட்டிக் கேட்டான் அவன்.
“என் செல்லம்! தங்கம்..” என்று கன்னத்தைப் பிடித்தவளோ, “வெட்கம் வருதுங்க” என மார்பில் முகம் புதைத்தாள்.
“அச்சோ கொல்றியே ஜானு. நான் கொஞ்சுறேன் பார்” என்றவன் அவள் முகம் தாங்கி, “என் செல்லப் பொண்டாட்டி! பட்டுக் குட்டி. அம்முக் குட்டி. கன்னுக் குட்டி. என் உசுரு. பப்புக் குட்டி. மை பேபி. டார்லிங். கண்மணி. ஹனி மா! என் பியூட்டி. பொம்மு குட்டி” அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டுக் கொஞ்சல் மொழி பேசினான்.
“என்ன ஜீவா இவ்ளோவா?” அவள் விழி விரிக்க, “இன்னும் இருக்கே. அதை காதில் சொல்லுறேன் வா” காதோரம் ரகசியம் பேசியவன், “நானும் பாட்டுப் பாடப் போறேன்” என்றவன் அவள் நயனங்களை ஆழ்ந்து பார்த்தவாறு பாடினான்.
“அடை மழை வரும் அதில் நனைவோமே…
குளிர் காய்ச்சலோடு சிநேகம்…
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்”
அவன் பாடியதைக் கேட்டவள், “குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்…
அது தெரிந்தும் கூட அன்பே…
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்” என்றிட, அவள் செவ்விதழைத் தன் வசப்படுத்தினான் வேங்கை.
பாவையவள் மெழுகாய் உருக, கொஞ்சல்கள் மிஞ்சத் துவங்க, அஞ்சன விழியாளை வஞ்சமின்றி ஆளத் துவங்கினான் ஜானுவின் ஜீவா.
தொடரும்….!!
ஷம்லா பஸ்லி