💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 104
எழிலழகனுடன் ஹாஸ்பிடல் சென்று வந்தாள் நந்திதா. வீட்டினுள் நுழைந்த நந்திதாவுக்கு கண்கள் அகன்று விரிந்தன.
அன்னம்மாளுடன் கதைத்துக் கொண்டிருந்த ஜெயந்தியின் அருகில் மாரிமுத்துவும் அமர்ந்திருந்தாரே. இத்தனைக்கும் அவர் இங்கு வந்ததில்லை.
“அப்பா” என்று அழைத்தவாறு செல்ல, “ஓடி வராத புள்ள. வாயும் வயிறுமா இருக்குறப்போ இப்படி பண்ணக் கூடாது” அன்புடன் கடிந்து கொண்டார் மாரிமுத்து.
ஆம்! நந்திதா கர்ப்பமாக இருந்தாள். இப்பொழுது எழிலுடன் சென்று அதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்திருந்தாள்.
“நல்லா இரு நந்து” அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் அன்னம்மாள்.
“நந்து” ஜெயந்தியும் அவளை அணைத்துக் கொள்ள, ஆனந்தம் பெருகி வழிந்தது அவளுக்கு.
“அக்கா ஸ்வீட்” இனிப்புப் பெட்டியோடு உள்ளே வந்து ஊட்டி விட்டாள் மகிஷா.
நந்துவின் அலைபேசி அலறியது. ஜனனி தான் அழைத்திருந்தாள். புன்னகையுடன் ஆன்ஸ்வர் செய்ய, “கங்ட்ராட்ஸ் நந்து! ரொம்ப ஹேப்பியா இருக்கு. நான் சித்தியாகப் போறேன்ல?” குதூகலமாகக் கூறினாள் ஜனனி.
“நீ மட்டும் இல்ல நானும் தான்” என்று மகி சட்டென சொல்ல, “அவ மட்டும் தான்னு சொன்னாளா? உனக்கு ஜானு கூட சண்டைக்குப் போறதே வேலையாப் போச்சு” மகியின் காதைத் திருகி விட்டாள் நந்திதா.
“பழங்கள் கொண்டு வந்திருக்கோம் நந்து. மார்கெட் போய் வாங்கிட்டு வந்தது. சாப்பிடும்மா. நான் போயிட்டு வர்றேன்” மகளின் தலையைத் தடவினார் மாரிமுத்து.
“அப்பா” அவரை அணைத்து விடுவித்தவளுக்குத் தந்தையின் அன்பில் மனம் குளிர்ந்தது.
மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையே நிறைவுடன் பார்த்து ரசித்தான் எழில். அவளின் சந்தோஷம் தானே அவனது ஆசை?
ஜெயந்தி அவளை அமர வைத்து பேசிக் கொண்டிருக்க, அன்னம்மாளும் டீ எடுத்து வந்து கொடுத்து விட்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
எழில் அறைக்குச் சென்று விட்டான். சற்று நேரம் கழித்து தன் வீட்டார் சென்ற பின்பே வந்தாள் நந்து.
“என்னங்க” என்று அழைக்க, அவளை ஆரத் தழுவிக் கொண்டான் கணவன்.
அவனுள் அத்தனை சந்தோஷம். ஒரு ஆணுக்கு தந்தை எனும் அந்தஸ்தைப் பெறுவதைத் தவிர நெகிழ்வும் சந்தோஷமும் பொருந்திய ஒரு தருணம் இருக்க முடியுமோ?
“சந்தோஷமா இருக்கு நந்து. உலகத்தையே ஜெயிச்சுட்ட மாதிரி இருக்கு. அப்பாவாகப் போறேன்னு நெனச்சாலே அப்படி ஒரு ஃபீல்” அவன் நெகிழ்ந்து போனான்.
“எனக்கும் தாங்க. டாக்டர் சொன்னப்போ உங்களைக் கட்டிக்கனும் போல இருந்துச்சு. எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. அதிலும் அப்பா எனக்காக வந்தது இன்னும் சந்தோஷம். எனக்கு ஒன்னுமே புரியல” என்றவளுக்கு மகிழ்வின் உச்சத்தில் தலை கால் புரியவில்லை.
“உட்கார் நந்து” அவளை அமர வைத்தவன், அருகில் அமர்ந்து அவளையே பார்த்தான்.
“உன்னை சந்தோஷமா பார்த்துக்கனும் நந்து. உனக்கு ஏதாவது வேணும்னா கேளு” என்று கேட்க, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“சந்தோஷமா தான் பார்த்துக்கிறீங்க. இதுக்கு மேல எந்த சந்தோஷத்தை நான் கேட்கிறது? எனக்காக எல்லாம் பண்ணுறீங்க. எனக்காக யோசிக்கிறீங்க. ஒவ்வொன்னும் பிடிச்சதா வாங்கித் தரீங்க. அன்பைக் கொட்டுறீங்க. என் அப்பாவை விட உங்களைப் பிடிக்குது தெரியுமா?
அவர் அன்பை உங்க கிட்ட உணர்றேன். அதிலும் பல மடங்கு அன்பைத் தரீங்க. எனக்கு சந்தோஷத்தைத் தர ரொம்ப மெனக்கெடுறீங்க. இதைத் தவிர எனக்கு எந்த சந்தோஷம் வேணும்?
எனக்குத் தெரியும். இனிமேல் நீங்க என்னை இன்னும் அக்கறை எடுத்து பார்த்துப்பீங்க. இன்னும் நேசிப்பீங்க. நான் கஷ்டப்படக் கூடாதுன்னு யோசிப்பீங்க. என்னை அம்மா மாதிரி தாங்குவீங்க. உங்க கிட்ட எனக்காகக் கேட்க ஒன்னுமே இல்ல.
நான் கேட்கிறது அந்த கடவுள் கிட்ட தான். என் எழில் சந்தோஷமா வாழனும், நிம்மதியா இருக்கனும், ஆரோக்கியமா இருக்கனும், எந்த நெருக்கடியான சூழ்நிலைகளிலும் மாட்டிக்காம அவரை நல்லபடியா வாழ வெச்சிடுன்னு எப்போவும் கேட்பேன்” என்று கூறினாள் நந்திதா.
“நந்தும்மா! நீ என்னை அவ்ளோ லவ் பண்ணுறியா?” அவள் கைகளை அழுத்திக் கொண்டான்.
“உங்களை விடவா? நான் உங்களுக்காக ஒன்னுமே பண்ணதில்ல. நீங்க தான் எனக்காக எல்லாம் பண்ணுறீங்க”
“நீ தான் நந்து எல்லாம் பண்ணுற. நான் பண்ணுற எல்லாத்தையும் மனநிறைவோட ஏத்துக்கிற, நான் கஷ்டப்படக் கூடாதுன்னு நீ என்னை மிஸ் பண்ணுனாலும் சொல்ல மாட்டேங்கிற. நான் படிக்கிறதுக்காக உன் ஏக்கங்களை மறைச்சிட்டு என்னோட செலவிடுற நேரங்களை தியாகம் செய்யுற.
இது வேணும் அது வேணும்னு நீ கேட்டதே இல்ல, நான் எது தந்தாலும் அதை உனக்கு பிடிச்சதா மாத்தி சந்தோஷப்பட்டு என்னையும் சந்தோஷப்படுத்துற, எனக்காக என் அம்மா எது சொன்னாலும் பொறுத்துப் போற. அவ்ளோ பெருசா நான் சம்பாதிக்கிறது இல்லனாலும் அதுக்கு ஏத்த மாதிரி உன் தேவைகளை வீட்டு செலவை ரோல் பண்ணிக்கிற. பணத்தால நான் பண்ணுற எல்லாத்தையும் நீ குணத்தால பண்ணுற. கணவனா நான் உனக்கு அழகுன்னா, ஒரு மனைவியா நீ நடந்துக்கிற விதம் பேரழகு நந்தும்மா” அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது. உங்களுக்காக நான் பண்ணுறேன். இனியும் பண்ணுவேன். நீங்க என்ன பண்ணாலும் அதை ஏத்துப்பேன், பொறுத்துப்பேன், ரசிப்பேன். ஏன்னா அது எல்லாம் நீங்க அன்பால பண்ணுறது. அந்த அன்புக்குப் பகரமா எதுவும் பண்ணலாம்” அவனை அணைத்துக் கொண்டாள் மனைவி.
………..
“ஓய் கார்த்தி” தனது அழைப்புக்கு செவி சாய்க்காமல் அலைபேசியை நோண்டிக் கொண்டு இருப்பதைக் கண்டு கடுப்பானது அவளுக்கு.
“கார்த்தீஈஈஈ” அவனது அலைபேசியைப் பிடுங்கி எடுக்க, “காது கேட்குது எனக்கு. என்னன்னு சொல்லு” என்றான் காட்டமாக.
“அப்பறம் ஏன் பேசாம இருக்க?” என்பவளை அவனின் கடும் பார்வை தாக்கியது, உனக்குத் தெரியாதா எனும் கேள்வியோடு.
“என்னை அறியாமலே தூக்கம் போயிடுச்சு டா. அதுக்கு நான் என்ன பண்ணுறது?” பாவமாகப் பார்த்தாள் அவள்.
“ஒரு நாளா ரெண்டு நாளா? அஞ்சு நாள் தொடர்ந்து நீ இப்படி தூங்கிட்ட. நானும் பாவம் இன்னிக்கு இருக்கட்டும் நாளைக்கு பார்த்துக்கலாம்னு விட்டா தொடர்ந்து இப்படி தான் பண்ணிட்டு இருக்க. வேணும்னே பண்ணுற மாதிரி இருக்கு எனக்கு” என்றவனால் இயல்பாக இருக்க இயலவில்லை.
“நான் அப்படி பண்ணல கார்த்தி. பேசனும்னு தான் எல்லா வேலையும் முடிச்சிட்டு வர்றேன். ஆனால் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் தூங்கிடுறேன். நேற்றும் அப்படி டயர்ட்” அவள் குரல் சோர்ந்து ஒலித்தது.
“பேசனும்னு நீ ஆசைப்பட்டா பேசுவ. தூங்காம இருப்ப. உனக்கு என் கூட பேசனும்னு எண்ணமே இல்ல. நீ முன்னெல்லாம் இப்படி இல்ல தனு. என் கூட பேசுவ. எனக்காக நேரம் ஒதுக்கி வருவ. எவ்ளோ நேரம் வேணா காத்திருப்ப. ஆனால் இப்போ ரொம்ப மாறிட்ட” அவன் குரலில் இருந்தது ஆதங்கம் தான்.
அது அவளுக்கும் புரியவே செய்தது. அவனிடம் கோபப்படவும் முடியாது. இரவு பேசுகிறேன், இத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்லி எதிர்பார்ப்பை விதைப்பதும் அவள் தான். வராமல் அவனுக்கு ஏமாற்றம் கொடுப்பதும் அவள் தான். என்னவென்று சொல்லி அவனைச் சமாதானம் செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, “ஏன்டி நான் இவ்ளோ பேசுறேனே வாயைத் திறக்கிறியா? ஒத்த வார்த்தை பேசாம நிக்கிற?” முறைத்துப் பார்த்தான் அவன்.
“எனக்கு என்ன பேசுறதுனு தெரியல கார்த்தி. ஒரு பக்கம் அழுகையா வருது. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல?” அவள் கண்கள் கலங்கத் துவங்க, “கண்ணீர் வந்துச்சு கன்னத்துலே ஒன்னு போட்றுவேன். சும்மா சும்மா கண்ணக் கசக்குற வேலை வெச்சுக்காத” என்றான்.
“கார்த்தி..”
“தனு பேபி” என்று அவன் மென்மையாக அழைக்க, சட்டென்று அழுது விட்டாள்.
“ஏய்! அழக் கூடாதுன்னு சொல்லுறேன்ல” அவளின் கண்ணைத் துடைத்து விட, “அது தானா வருது. நான் என்ன பண்ணட்டும்?” பாவமாகப் பார்த்தாள்.
“உனக்கு எல்லாம் தானாத் தான் வரும். தூக்கம் வரும், அழுகை வரும். அதைப் பார்த்தா எனக்கு கோபம் வரும் பார்த்துக்க”
“கோபப்படாத கார்த்தி. எதுவும் வேணும்னு பண்ணல டா. அதுவா நடக்குது. இப்போ என்ன பண்ண சொல்லுற?”
“கோபத்தை இல்லாம பண்ணு” என்று விட்டான்.
“சாரி” என்று சொன்னவளின் தலையில் தட்டி, “சாரியைக் கொண்டு போய் சாக்கடையில் போடு. சாரி சொல்ல வந்துட்டா சாரி” என்றவன், “லவ் யூ சொல்லு” என்றான்.
“ஐ லவ் யூ கார்த்தி” என்று சொன்னதும் அவன் கோபம் மட்டுப்பட்டது.
“முத்தம் கொடு” கன்னத்தைக் காட்டினான்.
“உம்ம்ம்ம்ம்மா” அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
“எல்லாமே சட்டு சட்டுனு கிடைக்குது” அவன் வியந்து பார்க்க, “கோபத்தை இல்லாம பண்ண வேண்டாமா?” எனக் கேட்டாள் காரிகை.
“கோபமா இருந்தா இப்படி ஒன்னு இருக்குல்ல. அப்போ..” என சொல்ல வந்தவனை இடைமறித்து, “அதுக்குன்னு தினமும் கோபமா இருக்காத. என்னால தாங்க முடியாது” அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“நான் கோபமா இருக்கேன் டி. தள்ளிப் போ” அவளை விலக்கி வைக்க, “பரவாயில்லை. கோபமா இருந்துக்க. ஆனால் நான் இப்படித் தான் இருப்பேன். என் கூட கோவிச்சுக்கிட்டு நீ எங்க போகப் போற?” அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“உனக்கு குளிர் விட்டுப் போச்சு டி”
“குளிர் இல்ல டா. ரொம்ப சூடா இருக்கு. போய் ஜூஸ் குடிக்கலாமா?” என்று கேட்க, “பேசாம கொஞ்ச நேரம் இரு” அவளைத் தன்னருகில் இருத்திக் கொண்டான்.
“யாரோ தள்ளி நிற்க சொன்னாங்க” என்று அவள் சொல்ல, “தள்ளியே இருக்கேன்” நகரப் போனவனைத் தடுத்து, “சும்மா சீன் போடாத டா பக்கி” அவன் மடியிலேயே அமர்ந்து கொண்டாள்.
“யாராவது பார்த்துட போறாங்க. இறங்கு” அவன் சங்கடத்துடன் நெளிய, “கோபம் போச்சா உனக்கு?” என்று கேட்டாள் அவள்.
“போகலனா என்ன பண்ணுவ?” கேள்வியாக நோக்க, “மடியை விட்டு இறங்க மாட்டேன்” அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“கோபம் போச்சு டி. மொத்தமா பறந்து போயிடுச்சு” என்றான் கார்த்திக்.
“அந்த பயம்” என்றவளோ, அவனது அலைபேசியை எடுத்து ஒரு செல்பீ எடுத்த பின்னரே இறங்கி அமர்ந்தாள்.
“ராட்சசி” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டான்.
“உன்னை லவ் பண்ணுனா அப்படித் தான் இருக்கனும். இந்த ராட்சசனுக்கு ஏற்ற ராட்சசி நான் தான்” அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள் தன்யா.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி