💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 105
கடற்கரையைக் கண்டதும், கொள்ளை இன்பம் பொங்க கை கோர்த்து ஓடினார்கள் சிறுவர்கள்.
“எப்படி ஓடுறாங்க பாருங்க” என்றபடி நடந்த ஜனனியைப் பார்த்து, “நாமளும் ஓடலாமா?” எனக் கேட்டான் சத்யா.
“அச்சோ என்னால ஓட முடியாது” என அவசரமாக மறுக்க, “அகி யுகி வரட்டும். அவங்களை வெச்சு உன்னை இன்னிக்கு ஓட விடுறேன்” என்று அவளின் செல்லமான முறைப்பை வாங்கிக் கொண்டான்.
“வீடு கட்டலாமா?” என்று அகி கேட்க, “கட்டலாமே” மணலில் அமர்ந்து வீடு கட்டத் துவங்கினான் யுகி.
“அம்மா வாங்க” ஜனனியின் கையைப் பிடித்து அழைத்தான் அகி.
“அப்போ நானு?” சத்யா உதடு பிதுக்க, “நீங்களும் வாங்க டாடி” சத்யாவையும் அமர வைத்தான் மைந்தன்.
“நீங்களும் வரீங்களா டாடி? சூப்பர். வீடு கட்டுவோம்” என்று யுகி கூற, நால்வரும் சேர்ந்து மணல் கொண்டு வீடு கட்டினர்.
“எனக்கு வீடு கட்ட ரொம்ப பிடிக்கும் டாடி. நான் பெருசானா இப்படித் தான் வீடு கட்டுவேன்” என்று சொன்னான் யுகி.
“வாவ் சூப்பர் கண்ணா! அப்போவும் உனக்கு இதே ஆசை இருந்தா நீ அதையே பண்ணு” அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் தந்தை.
“ஏன் டாடி? நாம பெருசாகும் போது இதே எண்ணம் இருக்காதா?” யோசனையாகக் கேட்டான் அகிலன்.
“அதை உறுதியா சொல்ல முடியாது டா. இப்போ தோணுறதே அப்போதும் தோணும் என்றது சாத்தியம் குறைவு தான். அப்படி ஒரே இலட்சியம் வெச்சுக்கிறவங்களும் இருக்காங்க.
ஆனால் வேற மாதிரியும் நடக்கும். சின்ன வயசுல நமக்கு நிறைய விஷயங்கள் தோணும். வளரும் போது நம்ம விருப்பங்கள் மாறலாம். இப்போ இன்ஜினியர் படிக்க ஆசைப்படுற ஒருத்தருக்கு வளரும் போது மியூசிக்ல ஆர்வம் வரலாம். அது ஒவ்வொரு சூழ்நிலை, மனநிலையைப் பொறுத்தது” என்று விளக்கம் கொடுத்தான்.
“அதுவும் சரி தான். சித்தாவுக்கு சின்ன வயசுல சார் ஆகனும்னு ஆசை இருந்துச்சாம். அப்பறம் அவருக்கு பாக்ஸிங் மேல ஆசை வந்துச்சுனு சொன்னார். ரூபி அப்படி இல்ல, அவருக்கு எப்போவுமே ஆசை டாக்டர் தானாம்” என்று கூறினான் யுகன்.
“எஸ் யுகி. அப்படித் தான். வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமா அமையும். நமக்கு எது சரியோ அது தான் நம்மைத் தேடி வரும்” என்று சொன்னாள் ஜனனி.
“தூரமா போய் நனைஞ்சிட்டு வருவோமா?” என்று அகி கேட்க, அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
“எனக்கு தூரம் போறதுன்னா பயம். நான் வரல. நீங்க போங்க” மறுப்பை வெளியிட்டாள் பெண்.
“பயத்தை விடு. ஆசை இருக்கா இல்லையா?” ஆவலுடன் வினவினான் சத்யா.
“ஆசை இருக்கு. ஆனால் வேண்டாம். பயமா இருக்கே” கண்களைச் சுருக்கியவளைக் கண்டு, “ஆசைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கனும். பயம் தானா விலகிடும். வா” அவளின் கையைப் பிடித்து அழைத்தான்.
“வேண்டாங்க. நீங்க போயிட்டு வாங்க” என்றவளின் அச்சத்தை அலட்சியப்படுத்தி விட்டு அழைத்துச் செல்ல, சிறுவர்கள் குதூகலமாகச் சென்றனர்.
“ப்ளீஸ் வேண்டாம்” கண்களை மூடிக் கொண்டவள், ஒரு கட்டத்துக்கு சென்ற பிறகே இமை பிரித்தாள்.
அதிக தூரம் அவளை அழைத்து வந்திருந்தான் சத்யா. இத்தனை தூரம் அவள் வந்ததே இல்லை. கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்க்க, “பயமா இருக்கா ஜானு?” என்று கேட்டான் காளை.
“கொஞ்சம்” என்றவளோ சின்னக் குழந்தை போல் சுற்றும் முற்றும் சுழன்று சுழன்று பார்த்தாள்.
அந்தி வானைப் பார்த்தாள், அதிரும் அலைகளைப் பார்த்தாள், அழகான காட்சிகள் யாவும் அத்தனை பரவசம் தந்தன.
பெரிய அலையொன்று பின்னால் மோதவே நிலை தடுமாறி, “ஜீவாஆஆ” என்று கத்தியபடி விழுந்தாள்.
“ஜானு பார்த்து” அவள் தோள்களைப் பிடித்து நிற்க வைக்க, “அய்யோ இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன். கண்ணு எரியுது. மூக்குல தண்ணி போயிருச்சு. ஆஆஆ.. என்னால முடியல. கரைக்கு கொண்டு போய் விடுங்க” படபட பட்டாசாய் வெடித்தாள் வஞ்சி.
“ஹேய் கூல் டா. இதெல்லாம் சாதாரணம். இதோ நம்ம பாப்பாங்களைப் பாரேன். அவங்க உன்னைப் பார்க்கிறாங்க” பிள்ளைகளைக் காண்பித்தான் சத்யா.
“இதெல்லாம் ஜாலியா இருக்கும் ஜானு. தினமும் வந்தா சரியாகிடும்” என்று அகி பெரிய மனிதன் போல் சொல்ல, “பயப்படாதீங்கம்மா. ஃபன் பண்ணுவோம்” கண் சிமிட்டிச் சிரித்தான் யுகி.
ஜனனியின் இதழ்கள் மெல்லமாய் விரிந்தன. அதே புன்னகையோடு சத்யா அவளைப் பார்க்க, அவளோ முறைத்தாள்.
“அவனுங்க கூட சிரிக்கிற. என்னை எதுக்கு முறைக்கிற?” இதழ் சுளிப்புடன் கேட்டான் சத்யா.
“நீங்க தானே வேண்டாம்னு சொல்லியும் கூட்டிட்டு வந்தீங்க. நான் விழுந்தப்போ ரொம்ப பயந்துட்டேன்” அவள் முகத்தைச் சுருக்க, “நான் பக்கத்தில் இருக்கும் போது என்ன பயம்? என் கையைப் பிடிச்சுக்க. உன்னை பத்துரமா பார்த்துப்பேன் டா” என்று கூறியவனின் பேச்சில் அச்சம் துறந்தாள் துணைவி.
“வானம் அழகா இருக்குல்ல. வானத்தை எப்போ பார்த்தாலும் அழகு தான். ஆனால் இந்த டைம்ல, பீச் வந்து பார்க்குற வானத்தோட அழகே வேற. ப்பாஹ்” ரசனை உணர்வுகள் உந்தப் பெற்றன அவளுக்கு.
“சூரியனோட வருகைக்காக காத்திருந்த மேற்கு வானம், அது தனக்குள்ள சங்கமிச்சு முத்தமிட்டு முத்தெடுக்கும் போது வெட்கப்பட்டுப் போயிடுது, அப்படியே என் ஜானுவை மாதிரி. பொண்ணுங்களுக்கு வெட்கம் தனி அழகு தான்ல?” இப்படிச் சொல்லும் போது அவள் நாணிச் சிவந்த எழிலை அப்பட்டமாக ரசித்தான் அவன்.
“நீங்க என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று கேட்டாள் அவள்.
“எனக்கு பேச வாய் இருக்கு, ரசிக்க மனசு இருக்கு, உணர்வுகளைத் தூண்டுற நரம்புகள் இருக்கு, உன் கிட்ட சொல்லுற உரிமை இருக்கு. இதை விட வேற என்ன வேணும் இப்படிப் பேச?” அவள் காதோரமாய்ப் பேச, “போதும் போதும். ஆல்ரெடி மொத்தமா விழுந்துட்டேன்” என்றாள், சிணுங்கலுடன்.
“டாடி வாங்க! கரைக்குப் போகலாம். யார் ஃபர்ஸ்ட் போறாங்கன்னு பார்ப்போம்” என்றவாறு அகியும் யுகியும் வேக நடை போட, “பார்த்து மெதுவா போங்க” என்றவாறு சென்றவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான் சத்யா.
“நான் தான் ஃபர்ஸ்ட்” என அகி துள்ளிக் குதிக்க, “இதை போட்டியா எடுத்துக்க வேணாம். டாடியும் ஜானுவும் ஓடியே வரல” என்றவாறு அமர்ந்தான் யுகி.
“அடிங்! நீ வின் பண்ணாததால போட்டியையே கேன்ஸல் பண்ணிட்டியா?” அவன் முடியைச் செல்லமாகக் கலைத்து விட்டான் தகப்பன்.
“சுடச்சுட பஜ்ஜி இருக்கு. வாங்கிட்டு வரலாம்” என சத்யா அழைக்க, பிள்ளைகளும் துள்ளலுடன் சென்றனர்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருவரையும் அமர வைத்து சாப்பிடக் கொடுத்தான்.
ஜனனி சத்யாவுக்கு ஊட்டி விட, “எனக்கும்” “எனக்கும்” பிள்ளைகளும் போட்டி போட ஆரம்பித்தனர்.
“எல்லாருக்கும் தர்றேன்” முறுவலுடன் ஊட்டி விட்டவளுக்கு மூவரும் சேர்ந்து ஊட்டி மகிழ்ந்தனர்.
“நாம ஏதாச்சும் பண்ணலாமா?” என சத்யா கேட்க, “நாலு பேரும் கையைப் பிடிச்சிட்டு கொஞ்சம் தூரமா நடந்து போவோம்” என்று ஜனனி சொன்னதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
சத்யா தன் கைகளால் அகி மற்றும் யுகியைப் பிடித்துக் கொள்ள, யுகி ஜனனியின் கையைப் பிடித்தான். நால்வரும் பேசிக் கொண்டே மணலில் கால் புதைய நடந்தனர்.
“அந்த பாப்பாவைப் பாருங்க. அழகா அழுறா” என்று தூரத்தே இருந்த பெண் துழந்தையைக் காண்பித்தான் யுகி.
“அழகா சிரிக்கிறானு சொல்லுறதுல நியாயம் இருக்கு. அதென்ன அழகா அழுறது?” மகனைப் பார்த்தான் சத்யா.
“உதட்டைப் பிடிச்சுக்கிட்டு அழுறது பார்க்க செம கியூட்டா இருக்கு. அதை சொன்னேன் டாடி” சிரித்து வைத்தான் அவன்.
“நீ என்ன யோசிச்சுட்டு இருக்க அகி?” ஜனனி புருவம் சுருக்கிக் கேட்க, “நாம ஃபோட்டோ ஒன்னும் எடுக்கலயே ஜானு. எடுக்கலாமா?” எனக் கேட்டவனைப் பார்த்து, “உங்க பையன் இவ்ளோ நேரம் பண்ணுன ஆராய்ச்சி இது தான்” கணவனை நோக்கினாள் ஜானு.
“அது என்ன என் பையன். அவன் உன் பையன். உன்னை மாதிரி ஃபோட்டோ பிசாசா இருக்கான்” என்று சத்யா சொல்ல, “ஃபோட்டோ எடுக்கிறது ஒரு தப்பா?” சிலுப்பிக் கொண்டாள் அவள்.
அகியை ஃபோட்டோ எடுத்து விட்டு “வா யுகி” என அவனை அழைக்க, “என்னால முடியாது. நீ எடு” என்று விட்டான் அவன்.
“அடேய் செல்லமே! ஒரு போஸ் கொடு” என ஜனனி கேட்க, தலையசைப்புடன் அகியின் அருகில் சென்று நின்றான்.
ஒன்று என்றவள் விதவிதமாக எடுத்துத் தள்ளி விட்டு இறுதியில், “தோள்ல கை போடுங்க” இருவரையும் தோளில் கை போட்டு எடுத்தாள்.
“அழகா இருக்குல்லங்க” சத்யாவிடம் புகைப்படத்தைக் காண்பிக்க, “அழகா இருக்க” அவன் பார்வை அவளைத் தழுவியது.
“போட்டோவைக் காட்டினேன்” அவள் முறைப்பைச் சிந்த, அதனைப் பார்த்தவனது பார்வையில் அத்தனை கனிவு.
“இவங்களை சேர்த்து வெச்சு பார்க்கவே முடியாதோனு நான் ரொம்ப ஏங்கினேன் தெரியுமா ஜானு? அவங்களை சின்ன வயசுல எடுத்த போட்டோவை அப்ரோட் போகும் போது எடுத்துக்கிட்டு போனேன். யுகி தூங்கின நேரத்தில் நான் அதை எடுத்துப் பார்ப்பேன்.
ஒன்னுக்கு ரெண்டு பொக்கிஷங்களைத் தந்த அந்தக் கடவுள் என் கிட்ட இருந்து ஒன்னைப் பறிச்சிட்டாரேனு கவலைப்படுவேன், இவங்க ரெண்டு பேரும் ஒன்னா பிறந்தாலும் வேற வேறயா வளர்றாங்களே, இந்தப் பிரிவு நிரந்தரமானதா மாறிடுமானு தவிச்சுப் போவேன்.
ஆனால் என் ரெண்டு கண்ணுங்களும் இப்படி ஒன்னு சேர்ந்து என் கண்ணு முன்னாடி வளருவாங்கனு எதிர்பார்க்கவே இல்ல. அவங்களை கடவுள் சேர வெச்சாலும் நான் புத்தி கெட்டுப் போய் அகியை தள்ளி வைக்க முடிவு பண்ணுனேன். ஆனால் அதைத் தடுத்தது நீ தான் ஜானு.
என் குழந்தைங்களை ஒன்னு சேர்த்த. அவங்க கூட வாழுற வரத்தைத் தந்த, என் சந்தோஷத்தை இரட்டிப்பா மாத்தின, என் வாழ்க்கையையும் வசந்தமாக்கின. எல்லாமே உன்னால ஜானு. உன்னை மட்டும் நான் சந்திக்காம போயிருந்தேன்னா இந்த சத்யா மரணம் வரை ஜடமா தான் வாழ்ந்திருப்பான். எனக்கு இன்னொரு ஜீவனைத் தந்து என்னை சத்ய ஜீவாவா பிறக்க வெச்சது நீ தான் ஜானு. யூ ஆர் மை லக்! அன்ட் யூ ஆர் மை லவ்” அவளின் கைகளை இறுக்கிப் பிடித்தான் சத்யா.
🎶 உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் என் சுவாசம்
உன் மூச்சில் சேருதே 🎶
🎶 உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே… ஓஓஓ..🎶
“டாடி அப்படி இல்ல. எங்களை மாதிரி தோள்ல கை போடுங்க” என்று அகி கூற, தன்னவளின் தோளில் கை போட்டான்.
ஜனனி சத்யாவை நோக்கிப் பார்வை வீசுவதும், அவன் அவளைக் காதலுடன் ஏறிடுவதும் யுகியால் அலைபேசியில் படமாக்கப்பட்டது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி