💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 108
“யுகி! நான் அழகா இருக்கேனா?” தனது டிஷர்ட்டை சரி செய்தவாறு கேட்டான் அகி.
“இப்படி கேட்டா இல்லன்னா சொல்ல முடியும். ஆமா அழகாத் தான் இருக்க” என்றவாறு முடியைச் சீவினான் யுகி.
“அவன் எவ்ளோ ஆசையா கேட்டான்? அதுக்கு இப்படியா பதில் சொல்லுவ?” அண்ணன் மகனின் தலையில் தட்டினான் தேவன்.
“நான் அவன் கூட கோவமா இருக்கேன் சித்தா. என் முடியைக் கலைச்சு விட்டான்” அவன் முகத்தை உப்பிக் கொள்ள, “அப்படி இருந்தா அவன் அழகுன்னு சொன்னேன். இரக்கமா தான் சித்தா பண்ணேன். அவன் கோவிச்சுக்கிட்டான்” உதட்டைப் பிதுக்கினான் அகி.
“அப்படியா? சாரி அகி” உடனே சரண்டர் ஆனவனைப் பார்த்து, “இட்ஸ் ஓகே டா” எனச் சிரித்தான் மற்றவன்.
அங்கு வந்த மேகலை, “இந்த ரூபன் எங்கே? இன்னும் ஆளைக் காணோம்” என்று கேட்க, “ஹாஸ்பிடல் போயிட்டு வர்றேன்னு சொன்னான். ஏதாவது எமெர்ஜன்சில மாட்டிக்கிட்டானோ தெரியல” என்றவாறு கைக்கடிகாரத்தைப் பார்த்தான் தேவன்.
“நான் இல்லாமலா? இதோ வந்துட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல ரெடியாகிடுவேன்” என்றவாறு அறையினுள் புகுந்தவன், “ஹேய் மகி” என்றவாறு தன்னவளை நெருங்க,
“சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க. லேட் ஆகுது. ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகிடும்” என்றவாறு அவனை அவசரப்படுத்தினாள் மனைவி.
ரூபன் அவசரமாக ஆயத்தமாகி வந்து “இன்றைய விழாவின் நாயகி எங்கே?” எனக் கேட்க, “நாயகியையும் காணோம். அவங்க நாயகனையும் காணோம்” என்றாள் வினிதா.
இவர்களது தேடலுக்குக் காரணமான நாயகியோ தன் கணவன் செய்யும் அலப்பறை தாங்க முடியாமல் அவனைக் கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள்.
“கண்ணுக்கு கொஞ்சம் மை தீட்டிக்க ஜானு. அப்போ உன் கண்ணு இன்னுமே அழகா இருக்கும்” மை எடுத்துக் கொண்டு வந்தவனைப் பார்த்து, “நாம கல்யாண வீட்டுக்கா போறோம்? அது புத்தக வெளியீட்டு விழா” இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“எனக்கு இது ரொம்ப ஸ்பெஷல் தான் ஜானு. நான் ரொம்ப நாளா ஆசைப்பட்டது இன்னிக்கு நடக்குது. நம்ம கல்யாண நாளை விட இது சந்தோஷமான விஷயம் தான்” என்றவனைக் காதலுடன் நோக்கினாள் பெண்ணவள்.
அவனுக்கு இது எதிர்பார்த்த விடயம். ஆனால் அவளுக்கு சற்றும் எதிர்பாராத விடயம். இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டானே சத்யா. அவளுக்கென விழா எடுக்க வைத்திருந்தான் அவன்.
இதோ, அந்த அவையில் அமர்ந்திருந்தாள் ஜனனி. ‘ஜீவ ஜனனம்’ கவிதைத் தொகுப்பு வெளியீடு. ஜனனியால் எழுதப்பட்ட நூறு கவிதைகள் கொண்ட நூல் அது.
சாதாரணமாக அவள் டைரியில் எழுதி வைத்த அனைத்தையும் சேகரித்து ஒருங்கிணைத்து நூல் வடிவில் தொகுக்க நினைத்தான் அவன். ஜனனிக்குக் கவிதை மீதுள்ள பிரியத்திற்காக தன் பிரியமானவளுக்கு அவன் கொடுக்க நினைத்த பரிசு தான் அது.
இதனைப் பற்றி அவளிடம் சொன்னதும், உச்சி குளிர்ந்து தான் போனாள் பாவை. ஆனால் இது எப்படிச் சாத்தியம்? நிறைய மெனக்கெட வேண்டுமே என பின்வாங்கினாள்.
“உனக்காக நான் பண்ணப் போற விஷயம் இது. நீ மறுப்பு சொல்லவே கூடாது ஜானு. கண்டிப்பா நாம புக் வெளியிடலாம்” என்றவன், சொன்னவாறே செய்தும் காட்டி விட்டான்.
எங்கெங்கோ சென்று, பேசி இதோ அவளின் ஆக்கங்கள் புத்தகமாகத் தவழ்கிறது. கவிதைத் தொகுப்புக்குப் பெயர் கேட்ட போது அவள் தான் ‘ஜீவ ஜனனம்’ என்று கொடுத்தாள்.
“அடடா! அண்ணிக்கு இதுல கூட அண்ணனைப் பிரிய முடியல போல” என்று ரூபன் கலாய்த்தது எல்லாம் ரசனைக்குரிய பக்கங்கள்.
எழில், நந்து, மாரிமுத்து மற்றும் ஜெயந்தியும் கூட வருகை தந்திருந்தனர். பெரிய பெரிய எழுத்தாளர்களும் அவ்விடத்தை நிறைத்தனர். இனிமை இலக்கிய வட்டத்தினால் இளம் கவிதாயினி பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டாள் ஜனனி.
இதையெல்லாம் அவள் என்றும் நினைத்துப் பார்த்ததில்லை. அவளுக்காக ஒரு விழா, அவளுக்கென்று இந்த மேடை.. இதை விட வேறு என்ன வேண்டும் என்பது போல் இருந்தது.
“இந்த கவிதாயினியின் எழுத்துத் திறமை என்னை ஈர்த்தது. வியக்கவும் வைத்தது. விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பர். ஜனனியோட எழுத்தில் முதிர்ச்சி இருக்கு. இன்னும் நிறைய எழுதனும், ஏராளமான விருதுகளை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” வாழ்த்துரை பகன்றார் மூத்த கவிஞர் ஒருவர்.
சத்யாவின் பார்வை தன்னவள் மீது நிலைத்தது. அவளின் பூரிப்பையும், மகிழ்வையும் ஆழ்ந்து உள்வாங்கினான். இதற்காகத் தானே அவன் எல்லாம் செய்தான்?
“ஜானு சூப்பர்ல டாடி? அவங்களை இப்படி பார்க்க ஹேப்பியா இருக்கு” யுகி கை தட்டி ஆர்ப்பரித்தான்.
மாரிமுத்துவின் மனம் ஆனந்தத்தில் விம்மித் தணிந்தது. தன் மகளின் இந்த உயர்வு தந்தையாக அவருக்குப் பெருமை சேர்த்தது.
நூல் வெளியீட்டின் பின்னர், ஜனனிக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவளுக்கோ என்ன பேசுவதென்று தெரியாத நிலை. உணர்வுகளின் உச்சத்தில் வார்த்தைகள் வர மறுத்தன.
“எல்லாருக்கும் வணக்கம்! ஆரம்பத்துல நான் எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என் குடும்பத்தினரையும் ஞாபகப்படுத்திக்கிறேன்.
இந்தளவு பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நான் தகுதியானவளானு தெரியல. பெருசா எந்த இலக்கும் இலக்கிய உலகத்தில் இருந்ததில்ல. அந்தந்த நேரம் என் மனசுல தோணுற விஷயங்களை, உணர்வுகளை வார்த்தையா வடிப்பேன். அவ்வளவு தான்.
என் எழுத்துக்காக இப்படி ஒரு அங்கீகாரத்தை நான் எதிர்பார்க்கல. நிறைய பேர் எழுதுவாங்க. அவங்க எழுத்துக்கள் பேசப்பட வேண்டியவையா இருந்தாலும் கொண்டாடப்படாமலே இருந்துட்டு போயிடும். இந்த ஒரு தருணம் எல்லாருக்கும் அமஞ்சிடாது. எனக்கு இது அமைஞ்சுதுன்னா அதுக்கு காரணம் என்னோட எழுத்துக்கள் மட்டுமில்ல, அதை உங்களுக்கு எடுத்துக்காட்டின என் ஜீவாவும் தான்.
எஸ்! சத்ய ஜீவா! என்னோட ஹஸ்பண்ட். அவரைப் பற்றி நான் சொல்லியே ஆகனும். எந்த ஒரு மனைவியும் ஆசைப்படுறது தனக்கு பக்கபலமா இருக்கக் கூடிய ஒரு கணவனைத் தான். எனக்கு அதுக்கும் மேலயே கெடச்சதா நெனக்கிறேன்.
அப்படி என்னத்த எழுதிக் கிழிக்கிறியோனு மனைவி எழுதுறது என்னனு கூட தெரியாம அலட்டிக்கிற ஆட்கள் இருக்காங்க. அவங்களுக்கு மத்தியில் நீ என்ன வேணா எழுது ஜானு! நான் அதை வாசிக்கிறேன்னு சொல்லுற இவரு கணவனா கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும். இதை பெருமைக்காக சொல்லல. நீங்களும் உங்க துணைக்கு இப்படி உறுதுணையா இருக்கனும்னு சொல்லுறேன்.
அவங்க எழுதினா அதை நேரம் எடுத்துப் படிங்க, ரசிங்க, நல்லா இருக்குனு பாராட்டுங்க. இதெல்லாம் அவங்களுக்கு கொஞ்சம் இல்ல ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்றவள் சத்யாவை மேடைக்கு அழைத்தாள்.
மேடையேறி வந்தான் அவன். மனைவியின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போயிருந்தான்.
“என் கவிதைகளுக்கு புத்தகமா உசுரு கொடுத்தவர் அவர். என் திறமைக்கு அங்கீகாரம் வழங்கி அன்பை அள்ளித் தந்து இந்த ஜனனிக்குப் புது ஜீவன் தந்தவர். இந்த ‘ஜீவ ஜனனம்’ நூலை என் ஜீவாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” அவன் கையில் நூலை வைக்க, அதை வாங்கிக் கொண்டான் கணவன்.
“இதுல என் பங்கு எதுவும் இல்லங்க. எல்லாம் ஜனனியோட திறமைக்காக கெடச்சது. அவ நல்லா எழுதுவா. அவளை வாழ்த்தின அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அதோட நான் இங்கே ஒரு பர்சனல் விஷயம் பேசப் போறேன். இது பிடிக்கலனா சாரி. ஆனால் நான் இதை சொல்லியே ஆகனும்னு ஆசைப்படுறேன்.
நாலு வருஷத்துக்கு முன்னாடி இருந்து பிரதிலிபி ஆப்ல ஒரு எழுத்தாளரோட கவிதைகளை நான் விரும்பிப் படிப்பேன். என் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களின் போது நான் உடைஞ்சு போயிட்டேன். அந்த டைம்ல அந்த ரைட்டரும் சோகம், தனிமையை மையப்படுத்தியே கவிதை எழுத ஆரம்பிச்சாங்க. அதோட, வலிகள் நிரந்தரமில்லை. எல்லாம் ஒரு நாள் வசந்தமா மாறும்னு தெம்பாவும் எழுதுவாங்க.
அதையெல்லாம் நான் உணர்ந்து படிப்பேன். அந்த ரைட்டரோட கவிதைகள் எனக்குள்ள ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச்சு. அவங்க எழுத்து என் நிலமையோட ஒத்துப் போச்சு. அந்த ரைட்டருக்கு நான் கமெண்ட் பண்ணியும் இருக்கேன். அவங்க யாருன்னு மூனு நாளைக்கு முன்னால தெரிய வந்தப்போ எனக்கு தோணுன உணர்வை சொல்லத் தெரியல.
ஜானு ஃபோன்ல அந்த ரைட்டரோட ஐடியை பார்த்தேன். அதை செக் பண்ணுனேன். ‘ஜே கவி’ என்ற பெயர்ல கவிதை எழுதி எனக்கு கவி வழி ஆறுதலா இருந்தது என் ஜானு தான்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னால அந்த ஃபீல் எப்படினு சொல்ல முடியல. அதை சர்ப்ரைஸா இன்னிக்கே சொல்லலாம்னு இருந்தேன். உனக்கு சத்யாங்குற ஐடில இருந்து கமெண்ட் பண்ணுறது நான் தான் ஜானு” என்று சொன்னவனுக்கு இன்னும் கூட நம்ப இயலாத நிலை தான்.
ஜனனி அதிர்ந்தாள், இன்பமாக. சத்யா எனும் ஐடியில் இருந்து வரும் விமர்சனங்கள் அவளை எத்தனை மகிழ்வில் ஆழ்த்தியுள்ளன? அந்த சத்யாவை பெண் என்று அல்லவா நினைத்துக் கொண்டிருந்தாள். அது தனது கணவன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.
“அ..அது நீங்க தானா?” அவன் கையைப் பற்றிக் கொண்டவளுக்கு தனது இன்பத்தின் அளவை சுமக்க முடியவில்லை. ஒரு நாளில் எத்தனை இன்ப அதிர்வுகளைத் தான் தாங்குவது?
எழுத்தாளர்கள் மத்தியிலும் கிசுகிசுப்புகள். அவர்களும் ‘ஜே கவி’ எனும் எழுத்தாளரின் கவிதைகளை வாசித்து ரசித்துள்ளனரே. ஜனனிக்கு இன்னும் பாராட்டுகள் வந்து குவிய, திக்குமுக்காடினாள் அவள்.
“ஜனனி நிறைய கவிதை எழுதுவா. அவ அளவுக்கு என்னால முடியாது. ஆனால் ஏதோ என் ஜானுவுக்காக ஒரு கவிதை” என்ற சத்யா அவளைப் பார்த்தவாறே சொல்ல ஆரம்பித்தான்.
“என் ரகசிய ராட்சசியே
ரசித்தேனே உன் எழுத்தை
தக்க சமயத்தில் எனக்கு
ஆத்மார்த்தமாய் ஆறுதல் தந்ததென்ன
வந்தாய் நீ
எதிர்பாராது என் வாழ்வில்
வசந்தமாக்கினாய் என்னை..
வரம் தந்தாய்! வசீகரித்தாய்!
அன்பில் நீ அமுத சுரபி தான்
அடங்கிப் போனேன் உன்னிடம் நான்
கோபம் கொன்றாய் கண்மணி
எனை குளிர்வித்தாய் வெண்பணி!
தாரமாய் வந்து
தாயுமானாய் எனக்கு
தாலிக்கொடி சுமந்து தாய் மடி தந்தவளே
தேவதை நீ! தெய்வமும் நீயே!
குழந்தையாய் என்னை சீராட்டி
அன்பின் வித்தை அணுதினம் காட்டி
மென்மை நேசம் தந்தவளே – ஜென்மம் பல எடுத்தாலும்
நீயே எனக்கு மணவாட்டி!
உன்னைப் பாட வார்த்தைகளெனக்குப் போதவில்லை
எனதன்பு வரிகளில் வடித்துத் தீர்வதில்லை
அன்பில் நீ இன்னோர் தாயடி
ஜீவனின் ஜனனம் நீயடி!”
கவிகள் வடிப்பவள் அவள். இன்று அவளுக்காக கவி வரிகள். அதுவும் அவளின் கணவனிடமிருந்து. அவள் மகிழ்வைக் கூற வார்த்தைகள் வரவில்லை. தன் ஜீவனை அணைத்துக் கொண்டாள் ஜனனி.
மிக மிக நெகிழ்வான நொடியது! இருவருக்குமே அப்படித் தான் இருந்தது. அந்த அவையிலும் அமைதி ஆட்சி புரிந்தது.
மேகலையின் மனம் பூரித்துப் போனது. மூத்த மகனின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள் அவரை சித்தம் தடுமாற வைத்தனவே. ‘என் பையனுக்கு மட்டும் ஏன் இப்படி?’ என அவர் அழாத நாளில்லை. ஆனால் இன்று அனைத்தும் எதிர்ப்க்கம் திரும்பி விட்டது.
அவனது அழகான வாழ்வும், அவனுக்கு அர்த்தம் தர வந்த மனைவியும் அதற்கு சான்று பகர, கூடவே அன்பின் குழந்தைச் செல்வங்களும் அவர் அகத்தை நிறைத்தனர்.
மாரிமுத்துவுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. மூத்தவளின் செயலால் ஜனனி இந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு சென்றதும் அவர் மனம் உள்ளுக்குள் தவிக்கத் தான் செய்தது. ஒரு ஆண் குழந்தை உடையவனுடன், எதிர்பாராமல் நடந்த திருமணத்தை எப்படி ஏற்றுக் கொள்வாள் என்று நினைத்தார்.
அவளின் வாழ்க்கை இன்று கண்முன் சொர்க்கத்தைக் காட்டியது. காதல் திருமணத்தைக் காட்டிலும் அழகாக அவள் வாழ்வதில் யார் கண்ணும் பட்டு விடக் கூடாது என நினைத்துக் கொண்டார். ஜெயந்திக்கும் பெற்ற வயிறு குளிர்ந்தது.
“என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த என் குழந்தைங்களையும் இந்த மேடையில் ஏற்றனும்னு ஆசைப்படுறேன்” என்ற ஜனனி, “யுகி! அகி வாங்க” என்று அழைத்தாள்.
“அம்மாஆஆஆ” எனும் அழைப்போடு இருவரும் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டனர்.
இருவரும் அவள் கன்னத்தில் முத்தமிட, அவள் சத்யாவைப் பார்த்துச் சிரித்ததை அலைபேசியில் படமாக சேமித்துக் கொண்டான் ரூபன்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி