கரம் விரித்தாய் என் வரமே – 11
அறையில் வந்து படுத்தவனுக்கு தூக்கம் தூரம் போனது. மனதில் சொல்ல முடியாத உணர்வு அவனை அசௌகரியப்படுத்தியது. அஸ்வினியின் வார்த்தைகளே அவனை சுற்றி சுற்றி வந்தது. அவர்கள் பழகிய காலங்களை எல்லாம் நினைவு கூர்ந்தான் ராஜேஷ். அனைத்தையும் சிந்தித்து பார்த்தவனுக்கு தான் அஸ்வினியிடம் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்து பழகி இருந்தது புரிந்தது. அவளை அவன் மனதிற்கு மிக நெருக்கமாக எடுத்துக்கொண்டு அதை அவளுக்கு சரியாக உணர்த்தாமல் அவளை நடத்தியது அவளின் மனதை பெரிதாக பொருட்படுத்தாதவன் ராஜேஷ் என்ற பிம்பத்தை தோற்றுவித்து இருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது. அஸ்வினி இப்போது விலகி இருக்க பிரியப்படும் போது அவன் அதை நிச்சயம் ஏற்று கொள்ள வேண்டும் என்று நினைத்தான். இவை அனைத்தையும் சிந்தித்தவன், இனி அவளின் விருப்பத்திற்கு மாறாக அவளிடம் உரிமை கொண்டு அவளை கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்று முடிவு செய்தான். அதன் பின்னர் தான் அவனுக்கு உறக்கமே வந்தது.
மறுநாள் காலை எழுந்து தயாராகி கொஞ்சம் ஊரை சுற்றிய பின் மதிய உணவை முடித்து கொண்டு சென்னைக்கு பயணமானார்கள் நண்பர்கள் குழு. கிளம்பும் முன் அஸ்வினியை தனியாக ஓரங்கட்டிய தெய்வா,
“என்ன ஆச்சு உனக்கும் ராஜேஷுக்கும்? நேத்தெல்லாம் உன்னையே கவனிச்சுட்டு இருந்தான்…. இன்னைக்கு பெரிசா உன்னை எதுவுமே சொல்லலை…. நேத்து நான் போன அப்புறம் ரெண்டு பேருக்கும் சண்டையா?” என்று அஸ்வினியிடம் கேட்டாள்.
அனைத்தையும் அஸ்வினி சொல்ல தலையில் அடித்து கொண்டாள் தெய்வா. அவளால் வெளிப்படையாக அவளின் சந்தேகத்தை அஸ்வினியிடம் சொல்ல முடியாததால்,
“அவனே உன்னை அவன்கிட்ட எப்போதும் போல் இருனு சொல்றான், நீ ஏண்டி இப்படி பண்ணே?” என்றாள் கொஞ்சம் எரிச்சலுடன்.
“பார்வதி பத்தி நான் உனக்கு சொல்லணுமா? அவ நேரா கேட்பா டி….” என்றாள் அஸ்வினியும் எரிச்சலாக.
“கேட்டா உனக்கு பதில் சொல்ல தெரியாதா….?”
“நீயும் ராஜேஷ் மாதிரி புரியாம பேசுறே…. அவங்க நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறவங்க, அவங்களுக்குள்ள என்னால எதுக்கு பிரச்சனை….?”
ராஜேஷிற்கு இருப்பது காதலே இல்லை என்று சொல்ல துடித்தவள், எதையும் உறுதியாக தெரியாமல் சொல்லி அஸ்வினியின் மனதை கலைக்க கூடாது என்ற நிதானத்திற்கு வந்து,
“பிரண்டா உன் லிமிட்ல இரு…. அவங்க லவ் பண்ணினா மொத்தமா நீ விலகிக்கணும்னு அவசியம் இல்லை….”
“ம்ம்….பார்ப்போம் டி…. ராஜேஷ் என்ன யோசிக்கிறான் தெரியலை…. நேத்து மாதிரி பேசலை…. கோபமா இருக்கிற மாதிரியும் இல்லை…. அதே சமயம் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றான்….” என்றாள் வருத்தமாக.
தெய்வா பதில் சொல்லாமல் இருக்கவே, அவள் பார்வை போகும் இடத்தை பார்த்தாள் அஸ்வினி.
சற்று தூரத்தில் ராஜேஷுடன் உற்சாகமாக வளவளத்துக் கொண்டு இருந்த பார்வதியை காண்பித்த தெய்வா, “இது எல்லாம் நீ கோட்டை விட்டதால் தான்…. அவனை விட்ட மாதிரி அவன் ப்ரண்ட்ஷிப்பையும் விட்றாதே….” என்றாள் கடுப்பாக.
தெய்வா சொன்னால் அஸ்வினி கொஞ்சம் யோசிப்பாள், அவள் ஒரேடியாக அவர்களிடம் இருந்து ஒதுங்கி கொள்ள கூடாது என்று நினைத்தாள் தெய்வா. அதனால் அப்படி பேசினாள்.
அவள் நினைத்தது போலவே அஸ்வினி யோசித்தாள். என் பிரண்டை என்கிட்ட இருந்து அவ தான் பிரிச்சா… நான் ஏன் இவளுக்கு பயந்து ஒதுங்கனும்…. ராஜேஷ் சொன்ன மாதிரி நாங்க க்ளோசா பழகினா தப்பானவங்களா என்ன? நான் ஏன் என் சந்தோஷத்தை விட்டு கொடுக்கணும்? அதுவும் இவ்ளோ செல்பிஷ் ஆன பார்வதிக்காக….?
தெய்வாவும் அஸ்வினியும் அவர்களை கவனித்தது போல் ராஜேஷ் பார்வதியுடன் பேசி கொண்டு இருந்தாலும் அவள் அறியாமல் அவன் கவனத்தை அஸ்வினியிடம் வைத்து இருந்தான். தெய்வா சீரியஸாக பேசுவதும் அதற்கு அஸ்வினியின் முகம் வாடுவதையும் கண்டவன் அவர்களிடம் செல்ல துடித்தான். ஆனால் நேற்று முடிவு செய்தபடி இருப்போம் என்று கடினப்பட்டு அவன் மனதை கட்டுப்படுத்தி கொண்டான். காலையில் இருந்து அஸ்வினியிடம் அளவாக தான் பேசி இருந்தான் ராஜேஷ். அது அவனுக்கு மிகுந்த கடினமாக தான் இருந்தது. மிக நெருங்கிய ஒருவரிடம் பட்டு கொள்ளாமல் பழகுவது என்பது எளிதா? வேறு வழியில்லை என்பதால் அப்படியே இருந்தான். அதற்கு பார்வதி வெகுவாக வழி செய்து கொடுத்தாள். அஸ்வினியிடம் பேச துடிக்கும் மனதை கட்டுப்படுத்த அன்று காலையில் இருந்து பார்வதியிடம் சென்று விட்டான் ராஜேஷ். சும்மாவே அவனை சுற்றி வருபவள், அவனாக அவளை தேடி சில முறை வரவும், தலை கால் புரியாமல் இருந்தாள். அவள் நினைத்தது போலவே ஏலகிரியில் இருந்து கிளம்பும் போது ராஜேஷ் அவள் வசம் வந்து இருந்தானே!!! அந்த சந்தோஷம்! பார்வதியும் அஸ்வினி, ராஜேஷின் ஒதுக்கத்தை கவனித்து இருந்தாள்! முந்தைய நாளிற்கும் இன்றும் தான் எத்தனை வித்தியாசம்? எப்படி தெரியாமல் போகும்?
ஒருவழியாக லக்கேஜ் எல்லாம் காரில் ஏற்றி விட்டு கிளம்ப ஆயத்தம் ஆனார்கள் நண்பர்கள். ராஜேஷ் ஓட்டுகிறேன் எனவும், பார்வதி வேகமாக முன் இருக்கையை நோக்கி நகர்ந்தாள். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்,
“நான் முன்னாடி உட்கார்ந்துகிறேன் பார்வதி….” என்றாள் அஸ்வினி.
பார்வதி, ராஜேஷிற்கும் அஸ்வினிக்கும் பிரச்சினை ஏற்படுத்திய பின் ஒதுங்கி போனவள் இப்போது இப்படி உரிமை கேட்டு பேசவும் சட்டென்று பதில் கொடுக்க முடியாமல் நின்றாள் பார்வதி. அந்த இடைவெளியில் அஸ்வினி முன் சீட்டில் ஏறி அமர்ந்து விட, கோபம் மூண்டது பார்வதிக்கு.
“எங்களுக்கே கொஞ்சம் நேரம் தான் கிடைக்குது, ஏன் எங்களை பிரிக்கிறே அஸ்வினி?” என்றாள் கோபத்தை மறைத்து கொண்டு.
“காலையிலே இருந்து கொடுத்தாச்சு நிறைய டைம்! ஷிவா நீ சொல்லு, இன்னைக்கு ராஜேஷ் யார் கூட நிறைய நேரம் இருந்தான்?” என்றாள் வம்படியாக.
ஷிவா அதிகம் பேச மாட்டான், பேசினால் அதற்கு மாற்று இல்லாத மாதிரி தான் பேசுவான். பார்வதி அவனிடம் அதிகம் வைத்து கொள்ள மாட்டாள்.
“கொஞ்சம் நேரம் நட்புக்கு விட்டு கொடு மா….” என்றான் ஷிவா சிரித்தபடி.
முனகி கொண்டே பின்னால் சென்று ஏறினாள் பார்வதி. போகும் முன் ராஜேஷை பார்த்து முறைக்க தவறவில்லை. அவனுக்கு அவள் கோபம் எங்கே கருத்தில் பதிந்தது? தான் விலக, தோழி நெருங்கி வருகிறாளே…. அடடே என்ற மகிழ்ச்சியில் இயென்றிருந்தான்.
பின்னால் சென்று ஏறியவளுக்கு மனதே ஆறவில்லை. காலையில் இருந்து கிடைத்த சந்தோஷம் நிலைக்கவில்லையே…. அஸ்வினி இனி ராஜேஷிற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தால் இப்படி மீண்டும் உரிமையோடு பேசுகிறாளே…. கொதித்தது பார்வதி உள்ளம். நிச்சயம் இவளிடம் என் ராஜேஷை விட்டு கொடுக்க மாட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் பார்வதி.
அவளுக்கு நேர்மாறாக அஸ்வினியும் ராஜேஷும் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு கதை பேசி கொண்டு வந்தனர். தெய்வா பின்னிருந்து சூப்பர்! நண்பேன்டா என்று அஸ்வினிக்கு குறுந்தகவல் அனுப்ப, குருவே உங்கள் அறிவுரை என்று பல ஹார்ட், சிரிக்கும் ஸ்மைலி போட்டு அஸ்வினியும் ரிப்ளை செய்தாள். திரும்பி பார்க்கவில்லை அவள். பார்வதி கவனித்து விட்டால்? அதனால் அடக்கி வாசித்தாள்.
*********
மூன்று மாதம் செல்ல,
அலுவலகத்தில் இப்போது அனைவருக்கும் ராஜேஷும் பார்வதியும் காதலர்கள் என்று அனைவருக்கும் தெரியும்! அஸ்வினியுடன் உரிமை போராட்டம் நடத்தி கொண்டு ராஜேஷையே தொங்கி கொண்டு திரிய, அனைவருக்கும் காட்சி பொருளாக ஆயினர் அவர்கள் இருவரும். ராஜேஷ் எவ்வளவு தான் சொன்னாலும் கேட்க மாட்டாள் பார்வதி. என்ன தான் அவனை தொங்கினாலும், அஸ்வினியை விலக்க முடியவில்லை அவளால். அவளுக்கு மட்டுமா பிடிவாதம் பிடிக்க வரும், அனைவருக்கும் வரும் தானே? இப்போது அஸ்வினி விட்டு கொடுக்க தயாரில்லை என்பதால் கடந்த இரண்டு மாதமும் பார்வதியை கடுகடுக்க வைத்திருந்தாள் அஸ்வினி! அவளிடம் கற்ற பாடத்தை அவளுக்கே திருப்பி கொடுத்திருந்தாள் அஸ்வினி.
வீட்டில் இருக்கும் பாதி நேரம் அஸ்வினியிடம்,
“எங்களுக்கே கொஞ்சம் நேரம் தான் கிடைக்குது, அதில நீங்க எல்லாரும் எங்க கூட சேர்ந்தே இருந்தா எப்படி….? ராஜேஷுக்கு தான் புரியலை, உங்களுக்குமா….” என்று சண்டையிடுவாள் பார்வதி. அவளிடம் வாயே திறக்காமல் இருந்து விட்டு, அதை அப்படியே போய் மறுநாள் ராஜேஷிடம் பாவம் போல் சொல்லி விடுவாள் அஸ்வினி,
“ஹேய், பார்வதி உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண ஆசைப்படுறது உனக்கு புரியவே இல்லைனு வருத்தப்படுறா டா….பாவம் உன் மேல் எவ்ளோ லவ்…. இதில நாங்க வேற உங்க கூடவே இருக்கோம்னு பீல் பண்றா…. இதே என்கிட்ட சொன்னது ஓகே…. மதன் கிட்டே சொன்னா உன்னை பங்கம் பண்ணிடுவான்…. ஜாக்கிரதை…. உன் ஆளை அதுக்குள்ள கரெக்ட் பண்ணிடு….” என்பாள் சாது பிள்ளையாக.
“அஸ்வினிகிட்டே சொன்னேங்கிறதால பரவாயில்லை…. எனக்கு ரொம்ப கோபம் வரலை…. உனக்கே தெரியும் நான் எப்படினு….” என்று ஆரம்பித்து அவள் நொந்து போகும் அளவிற்கு அவளை அமர வைத்து நட்பு, மரியாதை, சுய கவுரவம் என்று பாடம் எடுத்து விடுவான் ராஜேஷ்.
அஸ்வினியை புரிந்து கொண்ட பார்வதி,
“என்ன அஸ்வினி, எங்க ரெண்டு பேருக்குள்ள வர ட்ரை பண்றியா? சீப்பா பிஹேவ் பண்ணாதே….” என்றாள் ஒரு நாள் கடுப்பாக.
“சே…. சே…. நான் உன்னை மாதிரி ஒரு சில விஷயம் ட்ரை பண்றேன் தான்…. ஆனா அதுக்காக உன்னை மாதிரியே என்னால் ஆக முடியாது மா….” என்றாள் நக்கலாக.
“அஸ்வினி, நீங்க வெறும் பிரண்ட்ஸ் தான்…. நான் தான் ராஜேஷுக்கு எல்லாம்…. நீ என்ன ட்ரை பண்ணாலும் வேஸ்ட்….” என்றாள்.
அவள் பேச்சில் மனம் வருந்தினாலும், “சரி நான் வெறும் பிரண்ட் தானே…. நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறே…. நான் என்னை ராஜேஷை உன்கிட்ட இருந்து பிரிக்கிறேனா…. நல்லா யோசிச்சு பாரு…. நாங்க எப்போதும் போல் இருக்கோம்…. நடுவில் வந்துட்டு நீ தான் பிரச்சனை பண்றே…. எங்களை பத்தி யோசிக்காமல் உங்க லவ்வை மட்டும் பாரு….” என்றாள் அஸ்வினி.
அதானே முடியவில்லை பார்வதியால்! நான்கு மாதங்கள் ஆகி விட்டது அவர்கள் காதல் ஆரம்பித்து! இன்று வரை ராஜேஷை தனியாக ஒரு ட்ரிப் அழைத்து செல்ல முடியவில்லை அவளால்! உள்ளூரில் மிக அரிதாக தனியாக செல்வார்கள். நண்பர்களால் பிரச்சனை என்று இல்லை, இவர்களை விட்டு அவன் வரமாட்டேன் என்பது தான் பிரச்சனை! இவர்களில் முக்கியமான ஆளான அஸ்வினியை ஒரங்கட்டினால் தெய்வா விலகி விடுவாள், தெய்வா விலகினால் ஷிவா பின் மதன் என அனைவரும் விலகி விடுவார்கள்! ராஜேஷ் அவளுக்கே அவளுக்கு! ஆனால் அதை செயல்படுத்தும் வழிமுறை தான் புலப்படவில்லை அவளுக்கு!
இவர்களை ஒரங்கட்ட நினைத்த பார்வதி, ராஜேஷின் மனநிலையை யோசிக்க தவறி விட்டாள். இவர்கள் விலகினால் அவன் அப்படியே இருந்து விடுவானா என்ன?
ராஜேஷ் கலவையான மனநிலையில் தான் எப்போதும் பார்வதியுடன் பழகுகிறான். அவ்வப்போது அவனுடன் தனிமையில் இருக்க படுத்துவாள் என்றாலும் அதில் அவன் குறை கண்டதில்லை. அவளின் அன்பு தொல்லை தாங்காமல் அவளை சந்திக்க ஒத்துக் கொள்வான். ஆனால் அந்த நாள் அதிகாலையிலேயே எழும் போதே, அய்யோ போக வேண்டுமா? ஏதாவது காரணம் சொல்லி வரவில்லை என்று சொல்லி விடுவோமா என்று தான் யோசிப்பான்! ஆனால் வரிசையாக வரும் பார்வதியின் அழைப்போ, மெசேஜோ ஏதோ ஒன்றில் கிளம்புவான்! சந்தித்த பின்னும், அவளின் அதிக நெருக்கத்தின் போது அவனால் அவளுடன் முழுதாக ஒன்றவே முடியாது. அவனுக்கு பெரிதாக அதில் சந்தோஷம் ஏற்படவில்லை என்றே அவனுக்கு தோன்றும். ஒரு வேளை தனக்கு பொறுப்பு நிறைய இருப்பதால், தங்கை இருப்பதால் தன்னால் சரியாக காதலிக்க முடியவில்லையோ என்று குழம்புவான். இதை அவனால் யாரிடமும் சகஜமாக பேச முடியவில்லை. அவள் இவன் மேல் மிகவும் அன்பாக இருப்பது இவனுக்கு குற்றஉணர்வை தான் கொடுக்கும்! அவள் போல் இவனுக்கு அவள் மேல் அன்பு பொங்கி பிரவாகமாக வரவில்லையே…. அதனாலேயே அவளிடம் இளக்கமாக நடந்து கொள்வான். அவள் கோபப்பட்டால்,
“எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? ஆனா அடிக்கடி நாம இப்படி தனியா மீட் பண்ண எனக்கு ஒரு மாதிரியா இருக்கு! ப்ளீஸ்….” என்று அவளை சமாளித்தும் விடுவான் ராஜேஷ். உண்மையில் அவளின் நெருக்கத்தை விரும்பினால் அவளை அடிக்கடி தனிமையில் சந்திக்க தானே அவன் ஆசைப்படுவான்? அப்படி கேட்க தோன்றாமல் பார்வதியும் இந்த அளவிற்கு அவன் வருவதே பெரிது, விட்டு பிடிப்போம் என்று விட்டு விடுவாள். மேலும் இப்படி தன்னிடம் அன்பாக, இளக்கமாக இருக்கும் அவனிடம் எப்படி குறை காண்பது?
இருவரும் காதல் என்று சொல்லிக் கொண்டு வெவ்வேறு மனநிலையில் இருக்கிறார்கள். பார்வதியின் காதலால் ராஜேஷிற்கு இன்று வரை பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை! என்றேனும் பார்வதியின் காதலால் ராஜேஷிற்கு பிரச்சனை வந்தால்? அப்போது அவன் மனநிலை எப்படி மாறும்?
************
அன்று பார்வதியின் டீமிற்கு புதிதாக ஒரு மானேஜர் வந்தான். அமெரிக்காவில் இவர்கள் கம்பெனியில் இருந்தவன் சில பல சொந்தக் காரணங்களுக்காக கொஞ்ச நாள் இந்தியாவில் இருக்க போகிறான். ஆந்திராவில், ஓங்கோல் என்ற ஊரில் பிறந்த அக்மார்க் தெலுங்கு பையன் அவன். பெயர் சாய் பிரகாஷ். தமிழ் சுத்தமாக தெரியாது. மதனும் அஸ்வினியும் மட்டும் ஒரே ப்ராஜெக்ட். மற்ற இருவர் தனி தனி ப்ராஜெக்ட்.
சாய் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. அன்று மாலை, அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பும் சமயம், கோபமாக பார்வதியிடம் வந்த ராஜேஷ்,
“உனக்கு சாய் கூட என்ன வேலை அடிக்கடி?” என்றான் கோபமாக.
“உனக்கு ஒரு நியாயம்? எனக்கு ஒரு நியாயமா ராஜேஷ்?” நிறுத்தி நிதானமாக கேட்டாள் பார்வதி.
“நான்…. எனக்கு என்ன? என்ன சொல்றே நீ?”
“உனக்கு அஸ்வினி பிரண்ட்னா…. எனக்கு சாய் பிரண்ட்! இதில் நீ என்ன தப்பை பார்த்தே….? ஏன் பையன் ஒரு பொண்ணு பிரண்ட் வைச்சுக்கலாம் பொண்ணு ஒரு பையன் பிரண்ட் வைச்சுக்க கூடாதா? இதே அஸ்வினிக்கு மாப்பிள்ளை வந்தா நீ விலகிடுவியா?”
இப்படி ஒரு சந்தர்ப்பம் வர எத்தனை வேலை பார்த்தாள் பார்வதி! வந்ததை சும்மா விடுவாளா? கெட்டியாக பிடித்து கொண்டாள். பல நாள் ஆசைப்பட்ட கேள்வியை கேட்டும் விட்டாள்.
எப்படி சமாளிக்க போகிறான் ராஜேஷ்? பார்ப்போம்!