விஷ்வ மித்ரன்
💙 அத்தியாயம் 11
“திருடி திருடி” என்று கத்திய விஷ்வாவைப் பார்த்து பயந்து, தானும் “அய்யய்யோ திருடன்” என வைஷு அலற, விழி பிதுங்கிப் போனது என்னவோ அவன் தான்.
“யாராவது வாங்க. திருடன் நம்ம வீட்டுக்குள்ள நுழையப் பார்க்குறான்” கத்தியபடி ஓடப் பார்த்தவளின் கையை எட்டிப் பிடித்து நிறுத்திய விஷ்வா “ஏய் லூசு திருடி” என்று அழைத்தான்.
ஏகத்துக்கும் எகிற “நான் திருடியா டா? ஹான்!? என்னைப் பார்த்தா உனக்கு எப்படி விளங்குது?” என வைஷு இடுப்பில் கை குற்றினாள்.
“உன்ன பார்த்தா சுடுகாட்டுல இருந்து தப்பிச்சு வந்த பேய் மாதிரி இருக்கு. முதல்ல முகத்துல இருக்குறத கழட்டு. நீ யாருன்னு பார்த்தே ஆகனும்” அவளை ஆராய்ச்சியாக பார்த்தவாறே சொல்ல, “முடியாது” என தலையை இரு பக்கமும் ஆட்டினாள்.
“மரியாதையா கழற்று. இல்லனா அவ்ளோ தான்” என்று விஷ்வா கூற, “யோவ் நீ கைய பிடிச்சுட்டு கழற்று கழற்றுனா என்னத்த பண்ணுறது? கைய விட்டா தானே கழற்ற முடியும்” மரியாதை தூரப் பறந்து இருந்தது கடுப்பில்.
“கைய விட்ட உடனே எஸ்ஸாகிடலாம்னு ப்ளான் போடுறியா? அதெல்லாம் என் கிட்ட நடக்காது. இரு நானே ரிமூவ் பண்ணுறேன். பட் என் சுண்டு விரல் கூட உன் மேல படாது” என்றவன் அதைக் கழற்றப் போக, “க்கும்! பெரிய கற்புக்கரசன்னு நினைப்பு. சுண்டு விரல் படாதாமே. அப்போ என் கைய பிடிச்சுட்டு இருக்கது அடுத்த வீட்டுக்காரன் கையால போல” என்று முணு முணுத்துக் கொண்டாள் அவள்.
அவள் முகத்தை மூடியிருந்த துண்டை அவிழ்த்து விட்டு அதிர்ச்சியுடன் பார்த்தவனின் உதடுகளோ “குடிகாரி” என்று உச்சரிக்க, அதைக் கேட்டு விட்ட வைஷுவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது.
சட்டென எக்கி ஹெல்மட்டை உயர்த்தப் பார்க்க, அதற்குள் ஸ்டைலாக ஹெல்மட்டைக் கழற்றி புருவம் தூக்கினான் விஷ்வா. அவனைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள் பெண்.
விரிந்த விழிகளை இமைக்கக் கூட தோன்றாது, திறந்த வாய் மூடாது அவனையே பார்த்தபடி நிற்க, “ஓய் குடிகாரி” என்ற மெல்லிய குரலில் வைஷ்ணவி என்ற சிலைக்கு உயிரே வந்தது.
அவன் சொன்னதில் கோபம் கொண்டவளின் வெண்ணிற முகமோ செந்நிறம் கொள்ள “யாருடா குடிகாரி? அன்னைக்கு குடிகாரின்ன. இன்னிக்கு திருடின்னு பட்டம் சூட்டுற. இப்படி கூப்புடுற வேலை எல்லாம் என் கிட்ட வெச்சுக்காத சொல்லிட்டேன்” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.
சுட்டு விரலை காதுக்குள் விட்டுக் குடைந்து கொண்டு ” மிளகாப்பொடி மாதிரி காரமா இருக்கியே. இப்படி கடுகடுன்னு இருந்தா சீக்கிரமே கிழவியாகிடுவ” என்று சொல்ல,
“ச்சே உன்னால முடியல. உன்னைப் பார்க்கவே கூடாதுன்னு நெனச்சேன். ஆனா அது நடக்கல” முறைப்புடன் படபடத்தாள் வைஷு.
“நீ நெனக்கிறது எல்லாம் நடக்காது” என்ற விஷ்வாவை நோக்கி, “நீயும் கூடத் தான் என்ன பார்க்க கூடாதுனு சொன்ன. அதுவும் கூடத் தான் நடக்கல” என பழிப்புக் காட்டினாள்.
“நோ நோ. நீ என்னைப் பார்க்க கூடாதுன்னு சொன்ன. நான் என்ன சொன்னேனு ஞாபகம் இருக்கா? உன்ன பார்க்க கூடாதுன்னு வேண்டிக்க போறேன்னு தானே. பட் வேண்டிக்கவே இல்லை. சோ தோற்று போகவும் இல்லை” கண் சிமிட்டினான் அவன்.
அவனது கண்சிமிட்டலில் ஓர் நொடி தன்னையும் மறந்து தான் போனாள் காரிகையவள். மித்ரனை மட்டுமே அறிந்தவளுக்கு ஒரு அந்நிய ஆணுடன் பேசுவது புதிது தான். அவன் பார்ப்பதற்கு முன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பார்வையை விலத்திக் கொண்டாள்.
“அய்யோ நான் வேற லூசு மாதிரி திருடன் கூடல்லாம் பேசிட்டு இருக்கேன்” என சத்தமாகவே கூறி தலையிலடித்துக் கொள்ள, “வாட்? நான் திருடனா..? நான் என்னத்த திருடினேன்” கேள்வியாய் அவள் முகம் நோக்கினான்.
அவன் கையில் இருந்த ஹெல்மட்டை சுட்டிக் காட்டி “இதோ இருக்கு. என் அண்ணாவோட ஹெல்மட்டை ஆட்டைய போட்டுட்டு என்னத்த திருடினேன்னு கூலா கேட்குற” என்றாள் வைஷு.
“அண்ணாவா?” என புருவம் சுருக்கியவனுக்கு பொறி தட்ட “ஆர் யூ வைஷ்ணவி..??” என்று வினவினான்.
என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என்று புரியாமல் பார்த்தவாறு “ம்ம்ம்” எனப் பதில் கொடுத்தாள்.
கண்கள் மின்னிட “தாங்க் காட்! அவன் சொன்னது நீ தானா? உன் கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றவனிடம் “என்ன சொல்லனும்?” என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவனை ஏறிட்டாள்.
விஷ்வா “உன் அண்ணா உன் கிட்ட எது கேட்டாலும் நீ ஓகேனு தான் சொல்லனும்” என்று அதிகாரமாகக் கூறியவன் மேல் அவளுக்கு கோபம் தான் பொங்கியது.
“யாரு நீ? என் பெயர் சொல்லுறே? அண்ணா என் கிட்ட என்ன கேட்பாரு? நான் அதுக்கு ஓகே சொல்லனும்னு நீ யேன் ஆர்டர் போடுறே?” என கேள்விகளை அடுக்கினாள் வைஷ்ணவி.
“நான் சொல்லுறத நீ பண்ணித் தான் ஆகனும். நான் சொல்லுறத மட்டும் தான் பண்ணனும்” என்று கட்டளையிட்டவனை போடா எனும் ரீதியில் அலட்சியமாகப் பார்த்தாள்.
அப்பார்வை அவனை சீண்ட “என்ன டி பார்வை?” என்று கேட்டான்.
அவனது பேச்சு அவளுக்கு கசப்பாக இருந்தது. அன்று குடிபோதையில் மித்து என்பவளை காதலிப்பதாக உளறியவன், இன்று தன்னிடம் ஏதோ உரிமை உள்ளது போல் பேசுவதும், ‘டி’ போட்டு எகிறுவதும் எரிச்சலைக் கிளப்பியது.
“ஹலோ இந்த டி போட்டு கூப்பிடுற வேலை எல்லாம் வேணாம். நீ சொல்லுறத எதுக்கு நான் கேட்கனும்? உனக்கு என் மேல என்ன உரிமை இருக்கு? சும்மா சும்மா ரோட்டுல போற பொண்ணுங்க கிட்ட எல்லாம் இப்படி தான் ஓவர் உரிமை எடுத்துப் பேசி மயங்க வெச்சிடுவியா? ஆனா நான் அந்த மாதிரி ஆளு இல்லை. வேறு ஆளப் பாரு” என்றாள் கடுமையாக.
அவள் வார்த்தைகளில் கோபமும், கூடவே சிறு வலியும் தான் அவனுள் தோன்றியது. தன்னை பொம்பளைப் பொறுக்கி ரேஞ்சில் வைத்து அவள் பேசியதில் “ஏய்ய்” என ஆக்ரோஷமாக நெருங்கிட, அவள் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது, அவன் கரம் அல்ல.. அவனது முரட்டு இதழ்களே!
ஆம் விஷ்வஜித் அவளை அறையவில்லை. அவளது பட்டுக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
இவ்வளவு நேரமும் ஓயாது பேசிய வைஷ்ணவியின் வாய் கப்பென மூடிக் கொள்ள, கண்களும் அனிச்சையாக மூடிக் கொண்டன.
அவளை விட்டும் நிதானமாக விலகி, கண்களை இறுக மூடி அதிர்ச்சியுடன் நின்றவளைப் பார்த்து சொடக்கிட்டான்.
சிந்தை கலைந்து திறந்தவளின் விழிகளோ சிறிதே கலங்கியிருந்தன. இது அவன் தரும் இரண்டாவது முத்தம்! அன்று சுய உணர்வின்றி முத்தமிட்டவன், அவள் கண்களுக்கு சிறு குழந்தை போலத் தெரிந்தான். ஆனால் இன்று அவள் அனுமதியின்றி முத்தமிட்டவன் அடாவடிக்காரனாகவே மனதில் பதிந்து போனான்.
“என்ன உரிமை இருக்குன்னு கேட்டியே இப்போ புரிஞ்சுதா? ஓஹ் நீ பெக்க பெக்கனு முழிக்கிறதுலயே தெரியுது எதுவுமே புரியலன்னு. உனக்கு கிஸ் பண்ணதுக்கு சாரி கேட்க மாட்டேன். பிகோஸ் யூ ஆர் மை பியூச்சர் வொய்ப். அன்டர்ஸ்டார்ன்ட்?” அழுத்தமாக வெளி வந்தது ஒவ்வொரு வார்த்தையும்.
மங்கலான விழித்திரைக்குள்ளால் அவனைப் பார்த்து “வாட் தி ஹெல்?” என இயலாயுடன் சீற, “இங்க பார் வைஷ்ணவி! நான் உன் அண்ணாவோட ப்ரெண்டு. அவன் கூட உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமா இல்லையானு கேட்க தான் வந்தேன். விருப்பமில்லனா விடலாம்னு நெனச்சேன். ஆனா இப்போ நான் முடிவே பண்ணிட்டேன். உனக்கு விருப்பமோ இல்லையோ எனக்கு பொண்டாட்டியா வந்து தான் ஆகனும்” என உறுதியாகக் கூறி விட்டுச் சென்றான்.
அவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இவன் மித்ரனின் நண்பனா? தன் உயிரும் உணர்வும் என்று மித்து கூறியது இவனைத் தானா? அன்பே உருவான தனது அண்ணாவின் நண்பன் இப்படிப்பட்ட ஒருத்தனா என்று நினைத்து உடைந்து போனாள்.
போன வேகத்தில் திரும்பி வந்த விஷ்வா “உன் அண்ணன் கேட்பான். என்ன கட்டிக்க சம்மதமானு. நீ ஆமானு தான் சொல்லனும். இல்லனு ஒரு வார்த்தை வந்துச்சு எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணிடுவேன்” என்று சொல்லி விறு விறுவென அகன்றான்.
“மிரட்டிட்டு வேற போறானே. என்ன பண்ணுறது?” அவ்விடத்திலே தொய்ந்து போய் அமர்ந்தாள் வைஷ்ணவி.
…………………
மித்ரன் “விஷு! வாடா” என்றழைக்க, நல்ல பிள்ளையாக உள்ளே நுழைந்தவனை “விஷு கண்ணா” என ஏக்கமாக அழைத்தார் ஹரிஷ்.
அவ்வழைப்பில் உள்ளம் உருகியவனுக்கு அனைத்தும் மறந்து போக, “அப்பா” என்று ஓடிச் சென்று அவரை இறுக அணைத்துக் கொண்டான் விஷ்வா.
எத்தனை நாட்களுக்குப் பின் தன் மகனாக நினைக்கும் அவனின் அணைப்பில் கண்கலங்க “வந்துட்டியா டா. அப்பா மேல உனக்கு கோவமா கண்ணா?” என்று கேட்க,
விலகி அவர் முகம் பார்த்தவன் “என் அப்பா கூட நான் கோச்சுப்பேனா? உங்க மேல எந்த கோவமும் இல்லை” என்றவனின் பார்வையோ மித்ரனைத் துளைத்தது. உன் மேல் தான் கோபம்! இந்தப் பிரிவுக்கும் நீயே காரணம் என!
ஹரிஷ் “ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. ஜூஸ் குடிக்கிறியா?” என்று கேட்டவரின் அன்புக் கட்டளையை மறுக்க முடியாமல் தலையாட்டினான் விஷ்வா.
“வைஷு மா” என்று ஹரிஷ் கூப்பிட, “வந்துட்டேன் பா” என ஓடி வந்தாள் அவள்.
“மெதுவா வர வேண்டியது தானே பாப்பா?” மித்ரன் கடிந்து கொள்ள, “சாரி ணா. இனிமே ஓடி வர மாட்டேன்” என காது மடல்களைப் பிடித்துக் கெஞ்சியவள் அப்போது தான் விஷ்வாவைக் கண்டாள்.
‘அப்பாவி மாதிரி நிக்கிறதப் பாரு அப்பாடக்கரு’ மனதினுள் நொடித்துக் கொண்டு தந்தையைப் பார்க்க, அவள் விஷ்வாவைப் பார்ப்பதைக் கண்டவர் “வைஷு! இது விஷ்வா. மித்துவோட பெஸ்ட் ப்ரெண்டு” என்றவர், விஷ்வாவின் புறம் திரும்பி “கண்ணா! என் பொண்ணு வைஷ்ணவி” என்று அறிமுகப்படுத்தினார்.
அவருக்கு எங்கே தெரியப் போகிறது இருவருக்கும் இடையில் அறிமுகம் முதல், மூன்றாம் உலக மகாயுத்தமே நடைபெற்று விட்டது என.
தலை சாய்த்து “ஹாய்ங்க” என்று அப்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பார்க்க, “ஹலோ” என வலுக்கட்டாயமாக புன்னகைத்தவள் ஹரிஷின் வார்த்தைக்கிணங்க ஜூஸ் போடப் போனாள்.
விஷ்வா “அப்பா! நான் இங்கே வந்தது அக்ஷுவ பற்றி பேசத் தான்” என ஆரம்பிக்கும் போதே அவன் தோளில் தட்டிக் கொடுத்தவர், “மித்து எல்லாம் சொன்னான். இதெல்லாம் என் கிட்ட கேட்கவே தேவையில்ல பா. அக்ஷு குட்டிய இந்த வீட்டு மருமகளாக்குறது எனக்கு பல வருட ஆசை. நானே சிவா கிட்ட பேசனும்னு தான் இருந்தேன்” என்றவர் குரலிலும், முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
விஷ்வாவைப் பிரிந்ததில் இருந்தே மகிழ்வைத் தொலைத்து இருந்தவர் வைஷ்ணவியின் வருகைக்கு பிறகு சிறிது தெளிந்தார். இப்போது பழைய சந்தோஷம் மீண்டிருக்க அவர் முகத்தையே நிறைந்த மனதுடன் பார்த்தான் அருள் மித்ரன்.
ஹரிஷ் “வைஷு கிட்டவும் இது பற்றி பேசிடுங்க. நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்று விட்டு எழுந்து சென்று விட, மித்ரனும் விஷ்வாவும் மட்டுமே தனித்து இருந்தனர்.
எழுந்து சென்று ஹாலில் மாட்டிப்பட்டிருந்த அன்னபூர்ணியின் போட்டோவை “அம்மா” என்று வருடினான் விஷ்வா.
அவன் தோளில் மித்ரன் கை போட, தன்னை சமன் செய்தவன் “அம்மாவோட பர்த்டே முடிஞ்சிருச்சுல. அப்போ உன் கூட இருக்கவும் முடியல” என்றவன் குரலில் சிறு கலக்கம்.
“அதுக்கு நீ என்னடா பண்ணுவ? எல்லாம் என்னால தான். உன்ன விட்டுப் போனது நான் தானே?” என்று மித்து சொன்னாலும், விஷுவின் முகம் தெளியவில்லை.
“ஹேய் விஷு! இப்படி இருக்குறது நல்லாவா இருக்கு? நீ சும்மா கெத்தா நிக்கனும் டா. அப்போ தான் என் தங்கச்சி ஓகே சொல்லுவா” என்று அவன் சிரிக்க, “போடா ராஸ்கல்” என்றவன் இதழிலும் புன்னகை மலர்ந்தது.
ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்த வைஷு அப்படியே நின்றாள். ஒரே நிற டிசர்ட்டில், ஒன்று போல் தோளில் கை போட்டு சிரிப்புடன் நிற்கும் நண்பர்களின் நட்பு அவள் மனதைத் தொட்டது. இவர்கள் நட்புக்கு கண் பட்டு விடக் கூடாது என்று மானசீகமாக நினைத்துக் கொண்டாள்.
விஷ்வாவை உன்னிப்பாகக் கவனித்தாள். தன்னோடு கடுமையாகப் பேசிய அவன் எங்கே? இப்போது உதட்டில் புன்னகை தவழ நிற்கும் இவனும் தான் எங்கே?
அவளைக் கண்டு கொண்ட மித்ரன் “என்னடா நின்னுட்ட? விஷ்வாவுக்கு கொடு” என்க அவனிடம் ஜூஸை நீட்ட, “தாங்க்ஸ்” என சிரித்து விட்டு எடுத்துக் கொண்டான்.
திரும்பிச் செல்லப் போனவளின் நடைக்கு “வைஷு” எனும் மித்துவின் அழைப்பு தடை போட்டது.
தலையை மட்டும் திருப்பி “என்னண்ணா?” என்று கேட்க, அவனும் “இப்படி உட்காரு. உன் கூட கொஞ்சம் பேசனும்” என்றிட, அவள் இதயமோ படபடவென துடிக்க ஆரம்பித்தது.
கடினப்பட்டு இதழில் புன்னகையைப் பூசியவள் “சரிணா சொல்லுங்க ” என்று அமராமல் சொல்ல, “மரியாதை மனசுல இருந்தா போதும்னு சொல்லு மாப்ள” என்றபடி ஜூஸை உறிஞ்சினான் விஷ்வஜித்.
‘கொழுப்பெடுத்தவன்’ என பல்லைக் கடித்து விட்டு, “இல்ல சார்ர்ர். நான் நின்னுட்டே இருக்கேன்” வெளியில் இளித்துக் கொண்டு சொன்னாள்.
அவளைப் பார்த்த மித்து “வைஷும்மா! நீ யாரையாவது லவ் பண்ணுறியா?” என்று வினவ… “இல்லல்ல. அப்படி எதுவும் இல்ல” என உடனடியாக மறுத்தாள்.
மித்ரன் “நான் உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். இதோ இவன் என் விஷு தான். உனக்கு இவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதமா?” என்றவன் முகத்தில் எதிர்பார்ப்பு குமிழிட்டது.
இல்லை என்று சொல்லத் தான் தோன்றினாலும் மித்ரனின் முகத்தில் இருந்த மகிழ்வும், சரி என்று சொல்லி விடு என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் அவள் மனதை மாற்றியது.
தவிப்புடன் தன்னை நோக்குபவளை அன்பு கனிய சிரித்தபடி பார்த்து “பாப்பா நான் உன்னோட பதில தான் கேட்டேன். ஓகேனா ஓகே சொல்லு. இல்லைனா பட்டுனு சொல்லிடு. எனக்காக ஒன்னும் பார்க்க வேணாம்” என்றிட, அவனின் அன்பில் வைஷு நெகிழ்ந்தாள் என்றால், விஷ்வாவும் நண்பனைத் தான் பார்த்தான்.
சிறு வயது முதலே மித்ரனுக்கு எது பிடிக்குமோ அதையே தானும் விரும்புபவன் விஷ்வா. மித்ரனின் இத்தனை அன்புக்கு சொந்தக்காரியான வைஷ்ணவி மேலும் அவனுக்கு ஒரு வித அன்பும் ஈடுபாடும் தோன்றத் தான் செய்தது.
இல்லை என்று சொல்லலாமா? சரி என்று விடலாமா? என இருமனதாக இருந்தவளின் பார்வை விஷ்வாவைத் தழுவ, அவனோ இதழ் குவித்து முத்தமிடுவது போல் செய்கை செய்தான்.
அவன் செயலில் திக்கென அதிர்ந்து “எனக்கு முழு சம்மதம்ணா. உங்க ப்ரெண்ட்ட ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி விட்டு ஓடினாள் பெண்ணவள்.
அதை வெட்கம் என்று நினைத்துக் கொண்ட மித்ரனோ வாய் விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பதை மனம் குளிரப் பார்த்தான் அந்தத் தோழனும்.. வைஷ்ணவியை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்ததற்காக தோன்றிய குற்றவுணர்ச்சியும் நீங்கியதாக உணர்ந்தான் அவனது சிரிப்பில்!
“என்னடா இப்போ ஓகே தானே? நம்ம ரெண்டு வீட்டுலயும் டும் டும் தான்” என விஷ்வா சிரிக்க, “ஆமா விஷு. மித்து செம்ம ஹேப்பி” என்றான்.
மித்ரனைப் பார்த்து “மித்து நவி கூட பேசனும்டா” என்று சொல்ல, “ஓஹோ அதுக்குள்ள நவி ஆயிட்டாளா?” என கிண்டலடித்தவன் வைஷ்ணவியை விஷ்வாவுடன் பேச அனுப்பி வைத்தான்.
………………….
மொட்டை மாடியில் கையைப் பிசைந்து கொண்டு வைஷு நிற்க, அவளைப் பின்னிருந்து பார்த்தபடி நின்றான் விஷ்வா.
அமைதியைக் கலைக்கவே திரும்பி “எதுக்கு என்ன வர சொன்னீங்க? கம்பல் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சுட்டீங்க. எதுக்கு தனியா கூப்பிட்டீங்க?” என்றவளைப் பார்த்து, “ஆஹ் வேறெதுக்கு? டூயட் பாடத் தான்” என்றான் நக்கலாய்.
பின் அவளைக் கூர்மையாகப் பார்த்து “லுக் வைஷ்ணவி! மித்ரனும் என் தங்கச்சி அக்ஷுவும் லவ் பண்ணுறாங்க. மித்ரன் கிட்ட அக்ஷுவ கட்டிக்க சொன்னா உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு தான் அவன் மேரேஜ் பத்தி யோசிப்பேன்னு சொல்லுறான். சோ எனக்கு வேற ஆப்ஷன் இல்லங்குறதால நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்.
அதை உன் கிட்ட பேசி புரிய வைக்கலாம்னு தான் வந்தேன். பட் அதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சு” என்றவனின் முகமோ அவள் பேசிய வார்த்தைகளை நினைத்து இறுகிப் போனது.
அந்த வார்த்தைகளின் வீரியம் இப்போது புரிய தலையைக் குனித்துக் கொண்டாள் பாவையவள். அவளை நோக்கி ஒரு பார்வையை வீசி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம். அது மாதிரி உனக்கும் உன் அண்ணன் வாழ்க்கை முக்கியமா பட்டுச்சுனா என் கூட நடக்குற கல்யாணத்த ஏத்துக்க. இல்ல முடியலன்னு சொல்லிட்டீனா உனக்காக மித்துவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்” என்று சொல்ல,
“இல்ல நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன். எனக்கு அண்ணா தான் எல்லாமே” என்று பதறினாள் வைஷு.
அவளை மெச்சுதலாகப் பார்த்து விட்டு, “தட்ஸ் குட்! நமக்குள்ள என்ன ப்ராப்ளம் வந்தாலும் அத நம்மளுக்குள்ள மட்டுமே வெச்சுக்கனும். அது வெளியில போகக் கூடாது புரிஞ்சுதா?” என்று கேட்க ஆமென்று தலையாட்டினாள்.
“எனக்கு என் தங்கச்சி லைஃப் எந்தளவு முக்கியமோ அதை விட மித்து தான் முக்கியம். அவனுக்கு இது ஏதாச்சும் தெரிஞ்சுச்சுனா கண்டிப்பா சும்மா இருக்க மாட்டான். அடுத்தவங்க லைஃப் பாதிக்க, அவன் ஒரு பர்சன்டேஜ் ரீசனா இருந்தா கூட அத கில்டியா ஃபீல் பண்ணியே நொந்து போவான்” என்று விஷ்வா சொல்லச் சொல்ல, அவனையே பார்த்தபடி இருந்தாள் அவள். மித்ரன் மேல் அவனுக்குள்ள நட்பினில் வியந்து தான் போனாள்.
விஷ்வா “நீ அவன் தங்கச்சிங்குற காரணத்தால தான் உன் கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன். உனக்கு உண்மையாவே என்னைப் பிடிக்கலனு தெரிஞ்சு அவன் பீல் பண்ணா அத என்னால தாங்கிக்க முடியாது. அவன் என் நெஞ்சுல இருக்கான். அவன நல்லபடி பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று மிரட்டலாக கூறி சென்று விட்டான்.
‘இத்தனை நாளா அண்ணாவ நீயா பார்த்த? இப்போ பெருசா ஆர்டர் போடுற. மூஞ்சப் பாரு’ என திட்டித் தீர்த்தவளின் மனதில் மின்னலடித்திட அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.
அன்றும் இப்படித் தானே சொன்னான்? அப்படி எனில், நெஞ்சில் சுமப்பதாக கூறிய மித்து மித்ரன் தானா? பெண் என்று நினைத்து விட்டோமே என்றவளுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.
வேறொருத்தியை காதலிப்பதாக நினைத்து அவனை வார்த்தைகளால் வதைத்து விட்டதை நினைத்து வருந்தி “சாரி விஷ்வா! சாரி கேட்குற தகுதி கூட எனக்கில்ல” என முணகியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
………………………
துப்பட்டாவை இடையில் கட்டி முடியை உயர்த்திக் கட்டி “டன்டனக்கா” பாட்டை வொல்யூம் கூட்டி வைத்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் அக்ஷரா. அவள் முகத்திலோ அத்தனை சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
சற்று முன் தான் “நான் மித்து கிட்ட பேசிட்டேன். அவன் ஓகே சொல்லிட்டான் அக்ஷு. வந்து எல்லாமே டீடேய்ல்டா சொல்லுறேன்” என்று மேசேஜ் அனுப்பி இருந்தான் விஷ்வா.
தனது காதல் ஜெயிக்கப் போவதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வழிந்திட, குத்தாட்டம் போடும் மனதை அடக்க முடியாது தானும் குத்தாட்டம் போடலானாள் அக்ஷரா.
“ஹே அய்ம் சோ ஹேப்பி. அருள்..!! லவ் யூ டா செல்லம்” அவன் எதிரில் இருப்பதாய் எண்ணி பறக்கும் முத்தங்களை அள்ளி வீசியபடி டான்ஸ் ஆடினாள் அவள்.
திடீரென ஃபோன் அலற, சட்டென அழைப்பை ஏற்று துள்ளிக் குதித்து குதிக்காலில் சுழன்று கொண்டு “ஹலோ” என்றாள் அக்ஷு.
சிறிது நேரம் மௌனத்தை குத்தகைக்கு எடுத்த மறு முனையில் “அக்ஷராவா பேசுறது?” என்ற ஆண்குரல் ஒலித்தது.
“யெஸ். ஹூ ஆர் யூ?” என புருவங்களை நெறித்தாள்.
“நான் மித்ரன் பேசுறேன்” என்றதில் ஸ்டன்னாகி நின்று, “மி..மித்ரன்னா..? அருள் மித்ரனா?” தன் காதுகளையே நம்ப முடியாது போனது அவளுக்கு.
“ம்ம் நான் தான் அக்ஷு” என்றான் மித்ரன்.
அவளுக்கோ அவன் குரலைக் கேட்கையில் உடல் சிலிர்ப்பது போல் இருந்தது.
“அக்ஷு மா! லைன்ல இருக்கியா?” அவளது சத்தம் இல்லாது போனதால் சந்தேகமாக கேட்க, சட்டென தன்னை மீட்டுக் கொண்டு “ஆங் இருக்கேன் மித்து. எதுக்கு கால் பண்ண? சொல்லு” என்க,
“நான் உன் கிட்ட ஒன்னு சொன்னா கேட்பியா அக்ஷு?” என்றவன் குரலில் ஏதேதோ உணர்வுகள்.
“நீ என்ன சொன்னாலும் கேட்பேன் டா. என் உயிரை விடச் சொன்னாலும் கூட” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் மூளையில் அபாய மணி ஒலித்ததில்.
“நீ முதல்ல என்னனு சொல்லு” என்றாள் அக்ஷு.
“உஃப்ப்” என காற்றை ஊதித்தள்ளி விட்டு, “எனக்கு இந்த கல்யாணம் வேணாம் அக்ஷரா. ப்ளீஸ் இத நிறுத்திடுறியா?” என்றான் கெஞ்சுதலாக.
அதிர்ச்சியில் வார்த்தைகள் வராது உறைந்து போய் நின்றாள் அக்ஷரா.
“யே..யேன்? நீ தானே விஷு கிட்ட ஓ…கே சொன்ன?” திக்கித் திணறினாள்.
மித்து “அவன் கிட்ட முடியாதுன்னு மறுக்க முடியல அக்ஷு. ப்ளீஸ்! என்னால உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என உறுதியாக வார்த்தை வெளிப்பட்டது.
“ஏன்னு கேட்குறேன் மித்ரன்” அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்க, “பிகோஸ் ஐ லவ் மை அம்முலு” என்று விட்டு கட் பண்ணினான்.
அவள் கையிலிருந்த ஃபோன் நழுவி விழுந்தது. இத்தனை நேரம் இருந்த மகிழ்வு முற்றாக வடிந்து போய் விட, “அரூஊள் யேன்டா?” என வெடித்து அழுதாள் அக்ஷு.
விஷு வைஷுவிற்குள் காதல் மலருமா……??
அக்ஷரா என்ன செய்வாள்……??
நட்பு தொடரும்………!!
✒️ ஷம்லா பஸ்லி