110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்)

4.6
(9)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 110 (எபிலாக்)

 

ஐந்து வருடங்கள் கழித்து,

 

அழகான அந்திப் பொழுதில், ஆகாசமெங்கும் பட்சிகள் கீச்சிட்டுப் பறந்து செல்ல, அவற்றைப் பார்த்து அலை வீசி ஆர்ப்பரித்தது கடல்.

 

காதல் கதை பேசும் காதல் கிளிகளைப் பார்த்தவாறு தன்னவள் கை கோர்த்து நடந்தான் சத்யா. அவன் கண்கள் தன் கண்மணியை நோக்க, “என்னங்க?” எனக் கேட்டாள் காரிகை.

 

“இத்தனை வருஷம் கழிச்சும் எப்படி நீ அழகா இருக்க ஜானு?” அவன் பார்வை அவளின் பௌர்ணமி வதனத்தில் வட்டமிட்டது.

 

“நான் எங்கே அப்படியே இருக்கேன்? கொஞ்சமே மாறிட்டேன். உங்க கண்ணுக்கு தான் அப்படி தெரியுறேன் போல” 

 

“நீ மாறினாலும் என் காதல் மாறலயே. அதான் நீ அப்படியே தெரியுற போல” என்று அவள் கன்னம் கிள்ள, “ஹலோ மிஸ்டர்” என்றழைத்தாள்.

 

“சொல்லுங்க மிஸ்ஸிஸ் சத்ய ஜீவா” இதழ் கடையோரச் சிரிப்புடன் அவளை நோக்கினான்.

 

“நாங்க ஒன்னும் புது மாப்பிள்ளை பொண்ணு இல்ல. நீங்க அஞ்சு குழந்தைங்களுக்கு அப்பா. அதை மறந்துடாதீங்க” ஞாபகப்படுத்தினாள் அவள்.

 

“அது மறக்குமா? அதுக்காக நாம ரொமான்ஸ் பண்ணக் கூடாதுன்னு எங்காவது சட்டம் இருக்கா? அஞ்சு இல்ல ஐம்பது குழந்தைங்க வந்தாலும் நான் இப்படித் தான் உன் கூட பேசுவேன். லவ் பண்ணுவேன். காதலுக்கு வயதில்லை மேடம்” கண் சிமிட்டிச் சொன்னான் சத்யா.

 

“என்னங்க இப்படி பேசுறீங்க” சிரிப்புடன் வெட்கமும் ஒருசேரக் கேட்டாள் ஜனனி.

 

“இத்தனை வருஷமானாலும் உனக்கு வெட்கம் வருதுல்ல. அந்த வெட்கம் வரும் வரை, நம்ம இறப்பு வரும் வரை என் காதலும் தொடரும். ஒரு கட்டத்துக்கு மேல சில்மிஷத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டோம்னா போரடிக்க ஆரம்பிக்காதா? நாளுக்கு நாள் விதவிதமா, வித்தியாசமா லவ் பண்ணனும். அப்போ நம்ம உறவு சலிக்கவே சலிக்காது” அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் கணவன்.

 

“எப்படித் தான் இப்படிலாம் பேசுறீங்களோ. நான் ஒத்துக்கிறேன் நீங்க காதல் மன்னன் தான். அதுல உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல. இப்போ நம்ம பசங்களைப் பார்க்க போகலாமா? அத்தை கிட்ட அவங்களை விட்டு வந்தேன்” என்று சொல்ல,

 

“நீ ரொம்ப மோசம் ஜானு. கிடைக்கிற ப்ரைவசிய கூட அனுபவிக்க விட மாட்டேங்கிற” முறுக்கிக் கொண்டு அவளோடு நடந்தான்.

 

“டாடீஈஈஈ” “அம்மாஆஆ” என்ற அழைப்புடன் இரு மகவுகள் ஓடி வந்து இருவரையும் கட்டிக் கொண்டனர்.

 

“இவங்க உங்களைத் தேடிட்டு இருந்தாங்க ஜானு” என்று சொன்னவாறு தலையில் நீர் சொட்டச் சொட்ட வந்து நின்றான் யுகி.

 

“ஆமா ஜானு. எங்களால சமாளிக்க முடியல. பாட்டி என்னென்னவோ சொல்லி வெச்சுக்கிட்டாங்க. எங்கே போனீங்க?” எனக் கேட்டான் பத்து வயது நிரம்பிய அகி.

 

“பூ பறிக்க போயிருப்பாங்க அகி” என்று ரூபன் சொல்ல, சத்யா அவனை முறைக்க ஆரம்பித்தான்.

 

“நாம பூ தான் பறிக்க போறோம். உங்க தம்பி வயல்ல போய் நெற்கதிரே பறிப்பாரே” என்று ஜானு சத்யாவிடம் சொல்ல, “ஏன்கா?” சிணுங்கலுடன் கேட்டாள் மகி.

 

“ரூபி” என்று அழைத்தவாறு தன் கழுத்தைக் கட்டிக் கொண்ட அண்ணன் மகனைப் பார்த்தான் ரூபன்.

 

“வாடா மினி யுகன். உனக்கும் என்னை ரூபி சொல்லலனா தூக்கம் வராதே” ஐந்தே வயதான குட்டிச் சிறுவனின் கன்னத்தைப் பிடித்து ஆட்ட, 

 

“யுகிண்ணா தான் சொன்னார்” என்றபடி அரிசிப் பல் தெரிய நகைத்தான் சத்யா-ஜனனியின் இரட்டைப் புதல்வர்களுள் ஒருவனான விஷ்ணு!

 

“ஆமா சித்தப்பா. நான் சொன்னாலும் கேட்காம ரூபி சொல்லுறான்” சித்தப்பாவின் தோளில் தொங்கினான் மற்றவன்.

அவன் ஜிஷ்ணு!

 

விஷ்ணு அப்படியே யுகியின் குணம் கொண்டவன். குறும்பின் மறு உருவம் அவன். ஜிஷ்ணுவோ அகியை ஒத்திருப்பான். அமைதியான சுபாவம் கொண்டவன். ஆனால் இரண்டும் சேர்ந்தால் படுசுட்டி தான்.

 

“ரூபி! மயூவும் உங்களுக்கு ரூபி சொல்லுறான்” என்று ஒருவனைக் காட்ட, “அப்படி கூப்பிட மாட்டேன்பா. சும்மா சொல்லிப் பார்த்தேன். ஆனா நல்லாருக்கு” கண்களைச் சுருக்கிக் குறும்பாகச் சிரித்தான் மயூரன்.

ரூபனின் ஐந்து வயது அருமைப் புதல்வன் அவன்.

 

“நீ அப்படியே என்னை மாதிரி இருக்க டா மகனே” மகனின் நெற்றி முட்ட, “உங்க பையன் உங்களைப் போலத் தான் இருப்பான். என்னையே மகி சொல்லுறான். அவனுக்கு வாய் அதிகம்” தன் மேடிட்ட வயிற்றில் கை வைத்தபடி கூறினாள் மகிஷா.

 

“தேவா இன்னுமா வரல?” சத்யா நேரத்தைப் பார்க்க, “வினோ நர்சரிக்கு ஏதோ திங்க்ஸ் வாங்கனுமாம். அதை வாங்கிட்டே வர்றதா வினி கால் பண்ணுனா” என்று பதிலளித்தாள் ஜனனி.

 

அதே நேரம் பைக் வந்து நின்றது. அதில் மொத்தம் ஐந்து பேர். தேவனின் முன்னால் நின்றிருந்தான் அவனது மூத்தவன் வினோத். பின்னால் வினியின் கையில் அவர்களது ஒரு வயது மகள் விதுஷா வீற்றிருந்தாள்.

 

“பப்பூஊஊ” என விஷ்ணு அழைக்க, “விச்சுண்ணா” தேவனுக்கும் வினிதாவுக்கும் நடுவில் இருந்து எட்டிப் பார்த்தாள் இரண்டு வயதுச் சிறுமி.

 

அந்த வீட்டின் இளவரசி அவள்.

அவ்வீட்டில் உதித்த முதல் பெண் வாரிசு என்பதால் மொத்தக் குடும்பத்தாலும் கொண்டாடித் தீர்க்கப்படுபவள். 

நான்கு அண்ணன்களைத் தனக்கு அரணாகக் கொண்ட அழகி.

 

அவள் சாஹித்யா!

சத்ய ஜீவாவின் அன்பு மகள். ஜனனியின் அருமைப் புதல்வி. சித்தப்பாக்களின் செல்லம். சித்திகளின் அழகு பொம்மை. மேகலையின் உலகம் அவள் தான்.

 

அதற்கு முக்கிய காரணம் அவளது சாயல். அப்படியே மகேந்திரனை உரித்து வைத்திருந்தாள் சாஹித்யா. சத்யாவுக்கோ மகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனது அன்புத் தந்தையை அவளில் பார்த்ததும் இன்னும் மகளிடம் அன்பு கொண்டான்.

 

அகி, யுகிக்கோ கேட்கவே வேண்டாம். தங்கை என்றால் உயிரையே விடுவார்கள். விஷ்ணு, ஜிஷ்ணுவும் அப்படியே! இவர்கள் நால்வர் மட்டுமல்ல மயூரனுக்கும் அவள் தான் தங்கை. வினோத்திற்குக் கூட சாஹிக்கு அடுத்துத் தான் விதுஷா.

 

தேவன் அவளைத் தூக்கி இறக்கி விட, தத்தி நடை பயின்று வந்தவள் கால் தடுக்கி விழ எத்தனிக்க, “பாப்பு” அத்தனை பேரும் பதறி இருந்தனர்.

 

“பார்த்து டா ப்ரின்சஸ்” அவளைப் பிடித்து அலேக்காகத் தூக்கித் தன் கழுத்தில் அமர வைத்தான் ரூபன்.

 

அண்ணன் மகளின் மீது அத்தனை அன்பு அவனுக்கு. அவளை ப்ரின்சஸ் என்று தான் அழைப்பான். அவளோ அவனை ரூபி என்பாள்.

 

“ரூபி! ரூபி” தன்னை உயர அமர்த்தியதில் கை கொட்டிச் சிரித்தாள் சிறுமி.

 

“நல்லா இருக்கா. என் பட்டுக் குட்டி” ரூபன் அவளைக் கொஞ்ச, “எங்களுக்கு மட்டும் ரூபி சொன்னா திட்டுறீங்க. பாப்புவை எதுவும் சொல்ல மாட்றீங்க” இடுப்பில் கை வைத்து சண்டைக்கு வந்தான் விஷ்ணு.

 

“இவன் யுகியோட பார்ட் டூ. உன் கூட சண்டை போட வர்றான்” தேவன் அவனது முடியைக் கலைத்து விட, “சித்தா” அவனிடம் ஒட்டிக் கொண்டான் சிறுவன்.

 

“பெரிப்பா” என்றவாறு மயூரனும் வினோத்தும் சத்யாவிடம் ஒட்டிக் கொண்டனர்.

 

“ரூபன் பாப்புவைக் கொஞ்சுனா இவங்க பொறாமையில் மாமா கிட்ட ஒட்டிக்கிட்டாங்க. பார்த்தீங்களாக்கா?” வினிதா ஜனனியிடம் கேட்க, “எல்லாமே ஒன்னு தான் வினி” என்றவாறு அவள் தலையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள் ஜனனி.

 

“ஸ்ஸ் ஸ்ஸ்” சத்யா சத்தம் எழுப்ப, “என்ன ஜீவா?” அவனை நோக்கினாள் மனைவி.

 

“இன்னொரு குழந்தைக்கு அடி போடலாமா..?” அவன் புருவம் உயர்த்திக் கேட்க, “அடி தான் போடனும், உங்க வாய்ல” அவனைக் காரசாரமாக முறைத்தாள்.

 

“ச்சும்மா சொன்னேன் டி. பார்வையிலே நெருப்பைக் கக்காத. பொசுங்கிடப் போறேன்” இளித்து சமாளித்து வைத்தான் அவன்.

 

“நாம குளிக்கலாமே” என்று வினோத் சொல்ல, “கண்டிப்பா. அதுக்கு தானே வந்திருக்கோம்” என்றார் மேகலை.

 

“ஜானுவுக்கு தண்ணின்னா பயம். வர மாட்டா” என்று யுகி சொல்ல, “அடேய்! என் ஜானுவை இப்படி கிண்டல் பண்ணாத. அவ வருவா‌. வராட்டியும் விட்றுவோமா? இழுத்துட்டு போக மாட்டோம்” என்று சத்யா கூற,

 

“ஆக! என்னைக் கதற விடப் போறீங்க” என்று அலறினாள் ஜானு.

 

“நம்ம அண்ணியை பயமுறுத்தக் கூடிய ஒன்னு கடல் தான் போல. இனிமே கடலை சொல்லி மிரட்டி வைக்கனும்” என ரூபன் சிரிக்க, “எங்க அக்காவை மிரட்டினா உங்களை நான் மிரட்டுவேன். நீங்க எதுக்கு பயம்னு சொல்லட்டுமா?” என்று கேட்டாள் மகி.

 

“தாயே” அவன் தலைக்கு மேலால் கும்பிடு போட, “ரூபிக்கு கரப்பான் பூச்சின்னா பயம்” உண்மையைப் போட்டு உடைத்தான் விஷ்ணு.

 

“மறைக்கப்பட்ட உண்மை வெளிவந்தது. பிரபல வைத்தியர் ரூபன் கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார் என்பது உண்மையில் அதிர்ச்சியான தகவலாகும்” தேவன் செய்தி வாசிக்கும் பாணியில் கூற,

 

“இது எனக்கு எப்போவோ தெரியும் கொழுந்தனாரே. அத்தை ஒரு வாட்டி சொன்னாங்க” கண் சிமிட்டினாள் ஜனனி.

 

“வெட்கம், வேதனை, அவமானம். அவ்வ்வ்” என்று சொன்ன யுகனின் கன்னத்தில், “டேய் சில்வண்டு” எனக் கடித்து வைத்தான் ரூபன்.

 

“பாப்பு! அம்மா கிட்ட வாடா” சாஹியை ஜானு தூக்கிக் கொள்ள, “ம்மாஆ” அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் தலை சாய்த்தாள் மகள்.

 

நீரில் ஆட்டம் போடச் சென்றனர் அனைவரும். ரூபன் மகியை அழைத்துக் கொண்டு காலாற நடந்து சென்றான்.

 

“ஜானு வா” சத்யா அவளின் கையைப் பிடிக்க, “நான் சாஹி கூட இருக்கேன். அவளுக்கும் தண்ணினா பயம்” என்று பின்வாங்கினாள் பெண்.

 

“பாப்புவைக் காட்டி தப்பிக்கப் பார்க்கிறாங்க. விடாதீங்க டாடி” என அகி கூற, “சாஹியை இப்படிக் கொடு” மகளைத் தூக்கி கழுத்தில் வைத்துக் கொண்டவன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

“டாடி பயம்” சாஹித்யா கண்களைச் சுருக்க, “உன் அம்மா மாதிரியே பண்ணுறியே பாப்பு” அவளைப் பார்த்துச் சிரித்தவன் சற்று தூரம் சென்று விட்டு, கரையில் விட்டான்.

 

“பாட்டி கூட வீடு கட்டி விளையாடு” என சத்யா சொல்ல, “வாடா தங்கம்” அவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டார் மேகலை.

 

சற்று நேரம் இருக்கும் போது சத்யாவுக்கு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவன், “வாங்க வீட்டுக்குப் போகலாம். அத்தை, மாமாவும், நந்து ஃபேமிலியும் வந்து இருக்காங்களாம்” என்றான் அவன்.

 

“வாவ்! துஷ் வந்திருப்பான்” ஜிஷ்ணு துள்ளிக் குதிக்க, “உங்களுக்கு ஆட்கள் சேர்ந்தா கொண்டாட்டம் தான். வாங்க போவோம்” என ரூபனும் வந்து விட, அனைவரும் வீடு நோக்கிப் புறப்பட்டார்கள்.

 

காரில் செல்லும் போது, “இண்டியா கொடி இருக்கு. பாருங்க எல்லாரும்” என்று காண்பித்தான் யுகன்.

 

“உனக்கு இண்டியா பிடிக்குமா கண்ணா?” முன்பொரு நாள் இனியாவுக்காகப் பிடிக்காது என்று சொன்னதை நினைவுறுத்திக் கேட்டான் சத்யா.

 

“எஸ் டாடி! முன்ன பிடிக்காம இருந்துச்சு‌. இப்போ இண்டியாவை ரொம்ப பிடிக்குது. ஏன்னா இங்கே வந்ததால தானே ஜானு எங்களுக்கு கெடச்சாங்க” என்று யுகி சொல்ல, “என் தங்கக் கட்டி” அவனை அணைத்துக் கொண்ட ஜனனிக்கு அவன் தன் மீது வைத்துள்ள அன்பில் அகம் கனிந்தது.

 

வீடு வந்ததும், ஜெயந்தி, மாரிமுத்து நின்றிருந்தனர். எழிலும் நந்துவும் தம் மகள் நதியா மற்றும் மூன்று வயது மகன் துஷ்யந்துடன் இருந்தனர்.

 

“வர்றதா சொல்லவே இல்ல. சொன்னா நாங்க வீட்டில் இருந்திருப்போமே” என்றவாறு கதவைத் திறந்தாள் ஜனனி.

 

“நான் சொல்லப் போனேன் ஜானு. எழில் தான் வேணானு சொன்னார். நீங்க வீக்கெண்ட்ல வெளியே போவீங்களே. போயிட்டு வர்ற நேரமா நாம போகலாம்னு சொன்னார்” என்று பதிலளித்தவாறு உள்ளே சென்றாள் நந்திதா.

 

“தாத்தா” என்று அழைத்தவாறு சிறுவர்கள் அனைவரும் மாரிமுத்துவைச் சூழ்ந்து கொள்ள, “என் குட்டிப் பசங்களுக்கு ஊர்ல இருந்து மிட்டாய் வாங்கி வந்தேன். ஜானு மா! பிரிச்சு கொடு” என்றதும், அவள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.

 

“வா துஷ்! நாம விளையாடலாம்” வினோத் துஷ்யந்தைப் பிடித்துக் கொண்டான்.

 

“நதிக்கா! நாங்க நர்சரில ட்ராவிங் பண்ணுனேன். ரூம் வாங்க. எல்லாமே சுவர்ல ஒட்டி இருக்கு” நதியாவின் கைப்பிடித்து அழைத்துச் சென்றனர் விஷ்ணு மற்றும் ஜிஷ்ணு.

 

“எப்படி இருக்கே மகி? செக் அப் எல்லாம் கரெக்டா போறியா?” நந்திதா மகிஷாவிடம் கேட்க, “போறேன்கா. சில நேரம் இவர் கூட போறேன். இல்லனா ஜானுக்கா வருவா” என்று பதிலளித்தாள் தங்கை.

 

மேகலையும் ஜெயந்தியும் ஒரு புறம் கதையளக்க, ஆண்கள் ஒரு பக்கம் பிசினஸ் கதை பேசினர். பெண்கள் குடும்பக் கதை பேசிக் கொண்டிருக்க, யுகியும் அகியும் மாரிமுத்துவுடன் பேசினார்கள்.

 

“உங்க சிங்கப் பேரனுங்க என்ன சொல்லுறாங்கப்பா?” ஜனனி தந்தையிடம் வந்து அமர்ந்தாள்.

 

“வேற என்ன சொல்லப் போறாங்க? ஜானு அது பண்ணுனா, இது சொன்னானு உன் பெயரைத் தான் சொல்லிட்டு இருக்காங்க. நீன்னா அவங்களுக்கு உசுருல்ல?” கர்வத்துடன் கேட்டார் மாரிமுத்து.

 

“ஆமாப்பா! இவங்க என்னை யார் கிட்டவும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. சாஹிக்கு கூட என் விஷயத்தில் அவங்க இடத்தைக் கொடுக்க மாட்டாங்க. ஆனால் அவ மேல அவ்ளோ பாசம்” என்று ஜனனி சொல்லும் போது மாரிமுத்துவின் மடியில் வந்து அமர்ந்தாள் சாஹித்யா.

 

“தாத்தாவோட செல்லம்! என்ன வேணுமாம் என் கன்னுக் குட்டிக்கு?” அவள் நாடி பிடித்துக் கொஞ்சியவருக்கும் குழந்தையாக மாறிவிட்ட உணர்வு.

 

ஜனனி தந்தையின் அன்பை கண்ணாரக் கண்டு ரசித்தாள். மகளிடம் அதிகாரம் காட்டும் தந்தைமார், மகளின் குழந்தைகளிடம் அடங்கிப் போய் விடுவார் அல்லவா? மகள் மீது உள்ளூர வைத்திருந்த நேசமும் பேரப்பிள்ளை மீது பெருகி வழிந்து விடுமே. 

 

“உன்னை யாரும் கொஞ்சலயேனு ஃபீல் பண்ணாத. நான் என் ஜானு பேபியை கொஞ்சிக் கொஞ்சித் தீர்க்குறேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தவாறு அவளருகில் உட்கார்ந்தான் சத்யா.

 

“என்ன மாப்பிள்ளை?” மாரிமுத்து மருமகனைப் பார்க்க, “நீங்க பாப்புவைக் கொஞ்சுறத பார்த்து உங்க பொண்ணுக்கு பொறாமை. அவளை இப்படி கொஞ்சுறது இல்லையாமே” என்று சொன்ன சத்யாவின் இடுப்பில் அழுத்தமாகக் கிள்ளி விட்டாள் அவள்.

 

“அவளைக் கொஞ்சுனா தான் அன்பு இருக்குனு அர்த்தமா? உண்மை தான். நான் முரட்டுத் தனமா இருப்பேன். கொஞ்சி அன்பா பேசினது இல்ல. ஆனால் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஜானு. உன்னை மகளாக பெத்தத்துக்கு நான் பெருமைப்படுறேன். எனக்கு கெடச்ச பொக்கிஷம் நீ. எப்போவும் சந்தோஷமா வாழனும்” அவள் கையைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டுத் தான் போனார்.

 

“அப்பா” தந்தையின் தோள் சாய்ந்தவளுக்கு வாய் வழியாகக் கேட்ட அவரது அன்பான வார்த்தைகளில் கண்கள் கலங்கின.

 

“அழாதீங்க ஜானு” அகிலன் அவளது கண்களைத் துடைத்து விட்டான்.

 

“என்னை விட்டுட்டு நீங்க சந்தோஷமா இருக்கீங்க. நான் கோவமா இருக்கேன்” எனும் குரலில் அனைவரது பார்வையும் வாயிலில் நிலைக்குத்தியது.

 

கார்த்திக் மற்றும் தனது இரண்டு வயது மகன் க்ரிஷ்ஷுடன் நின்றிருந்தாள் தன்யா.

 

“ஹேய் தனு” சத்யா ஆச்சரியமாகப் பார்க்க, “அண்ணா” ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் தங்கை.

 

“இவளைப் பாரு தேவா. நாமளும் அண்ணன் தான் என்றதை மறந்துட்டா” ரூபன் முகம் சுருக்க, “அப்படி மறப்பேனா? என் அண்ணனுங்களை நெஞ்சுக்குள்ள குடியமர்த்தி வெச்சிருக்கேன்” என்றவாறு ரூபன் மற்றும் தேவனை இரு கைகளாலும் பற்றிக் கொண்டாள்.

 

“நம்பாதீங்க. நேற்று தான் என்னை நெஞ்சுக்குள்ள வெச்சிருக்கிறதா சொன்னா. இவ பேச்சு மாறுறா” என்று கார்த்தி சொல்ல, “உன்னைஐஐ” அவனைக் கிள்ளி வைத்தாள்.

 

“மாப்பிள்ளையை என்ன பண்ணுற தனு?” மேகலை அவளைக் கடிந்து கொள்ள, “இவளாச்சும் பரவாயில்லை வெளிப்படையா பண்ணுறா. நாம யாரும் காணாம கிள்ளு வாங்கிட்டு வாயைத் திறக்கவும் முடியாம, மூடவும் முடியாம அவஸ்தைப்படுவோம்” என்று பாவமாகச் சொன்ன ரூபனை முறைத்துப் பார்த்தாள் மகி.

 

“இந்த அக்காவுக்கும் தங்கச்சிக்கும் முறைக்கிறத விட்டா வேற வேலை இல்லை” என்ற சத்யா, “அத்தை! ஜானு எதுக்கு கண்ணுல ஃபயர் வெச்சிருக்கா?” எனக் கேட்டான்.

 

“அந்த ஃபயர் எல்லாம் அவங்க அப்பாவைப் பார்த்து வந்ததுப்பா. ஜானு மகி ரெண்டு பேரும் சண்டைக் கோழிங்க. முறைச்சிக்கிட்டு திரிவாங்க” என்று கிடைத்த சாக்கில் கணவனை முறைத்தார் ஜெயந்தி.

 

“பாருங்க மாப்பிள்ளை. என்னை சொல்லிட்டு அவ முறைக்கிறா. நான்லாம் இப்போ சிரிச்சிட்டே தான் இருப்பேன். என் டியூட்டியை அவ எடுத்துக்கிட்டா” மருமகனிடம் முறையிட்டார் மாரிமுத்து.

 

“நீங்க அம்மாவை கொஞ்சநஞ்சமா முறைச்சீங்க. அதுல பாதியை சரி அவங்க திருப்பி தரப் பார்க்கிறாங்க போல. என்னம்மா நான் சொல்லுறது சரியா?” என மகி கேட்க, “உனக்கு கொழுப்பு ஏறிப் போச்சு டி” மகளின் காதைச் செல்லமாகக் திருகி விட்டார் தாய்.

 

“அம்மா”

“ஜானு”

“பெரிம்மா” விதவிதமான அழைப்போடு ஜனனியைச் சூழ்ந்து கொண்டனர் சிறுவர்கள்.

 

“அத்தை” க்ரிஷ் அவன் பங்குக்கு அழைக்க, “என்ன வேண்டுமாம் குட்டீஸ்கு?” கேள்வியாக நோக்கினாள் ஜனனி.

 

“ஐஸ்கிரீம் ஜானு” விஷ்ணு சொல்ல, “அம்மா சொல்லு. ஜானு சொல்லக் கூடாது” என்றான் அகிலன்.

 

“ம்மா! ஐஷ் ஐஷ்” என்று சாஹித்யா சப்புக் கொட்ட, “சின்னப் பிள்ளையையும் ஐஸ்கிரீம் ஆசை காட்டி வெச்சி இருக்கீங்க” ரூபன் மற்றவர்களை முறைத்தான்.

 

“எங்களுக்கு ஆசை காட்டினது நீங்க தான் ரூபி” என யுகன் கூற, “நான் எங்கே டா. நான் சாக்லேட் தான் தருவேன். சித்தாவும், உங்க டாடியும் தான் ஐஸ்கிரீம் பிசாசுங்க” என்றுரைத்தான் அவன்.

 

“டாடிக்கு தான் சாக்லேட் ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும்” என்று விஷ்ணு கூற, “அதை விட அவருக்கு ஜானுவைத் தான் பிடிக்கும்” இடையிட்டுக் கூறிய ஜிஷ்ணுவின் பேச்சில் அங்கே மெல்லிய சிரிப்பலை.

 

“குழந்தைங்களுக்கு என்னெல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்கீங்க” ஜனனி அவனிடம் பல்லைக் கடிக்க, “நான் எதுவும் சொல்லல. அவங்களா சொல்லுறதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவங்களுக்கே அது தெரியுது பாரு. உனக்கு தான் தெரியல” என்றான், கிசுகிசுப்பாக.

 

“எனக்கு தெரியுமே. என்னை விட யாருக்கு உங்களைப் பற்றி தெரியும் ஜீவா?” என மொழிந்தவளைக் காதலுடன் நோக்கினான் நாயகன்.

 

சமையலறைக்குச் சென்ற ஜனனி அனைவருக்கும் ஐஸ்கிரீம் எடுத்து வந்து கொடுத்தாள்.

 

“எனக்கு வேண்டாம் ஜானு மா. குழந்தைங்களுக்கு கொடு” என்று மேகலை கூற, “அதெல்லாம் முடியாது. சாப்பிட்டு தான் ஆகனும் அத்தை. அவங்களுக்கும் நிறைய இருக்கு” அவரையும் சாப்பிட வைத்தாள்.

 

ஜனனி அமர்ந்ததும் அவளைச் சூழ்ந்து கொண்டனர் அனைவரும்.

 

“இப்போ என்னடா?” என அவள் கேட்க, “அவங்களுக்கு ஊட்டி விட சொல்லுறாங்க. உன் கையால சாப்பிடனும் போல” என சிரித்தான் சத்யா.

 

“ஆமாம்மா. நீங்க டாடிக்கு தானே ஊட்டுவீங்க. இன்னிக்கு எனக்கு வேணும்” என விஷ்ணு சொல்ல, “ம்மா ம்மா” சாஹித்யா அவளது கையைச் சுரண்டினாள்.

 

“பாப்புக்கும் வேணுமா?” அவளின் கன்னம் கிள்ளி ஊட்டினாள். 

 

அவ்வாறே ஒவ்வொருவராக ஊட்டி விட, “இன்னிக்கு சத்யாவுக்கு கடைசி வாய் தான் போல” என்றான் தேவன்.

 

“ஃபர்ஸ்ட் வாய் எனக்கு தான். நான் அப்போவே கிட்சன் போய் ஜானு கையால சாப்பிட்டு வந்தேன்” என்று சொன்னவனைப் பார்த்து, “அடப்பாவி அண்ணா” வாயில் கை வைத்தாள் தன்யா.

 

“மழை வருது” மயூரன் மகிழ்வோடு துள்ளிக் குதிக்க, “கடதாசி கப்பல் செஞ்சு விடுவோமா?” என வினோத் கூற, மற்றவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

 

அகியும் யுகியும் சின்னவர்களுக்கு கப்பல் செய்து கொடுத்தார்கள்.

 

“மழையில் நனையப் போறீங்களா இப்போ?” என வினிதா கேட்க, “இன்னிக்கு மட்டும் தான்மா. எல்லாரும் இருக்காங்கள்ல. ப்ளீஸ் ப்ளீஸ்” அவள் கையைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கினான் வினோத்.

 

“பாப்பு எங்கே போயிட்டா?” என்று கார்த்திக் தேட, “அவளைப் பாருங்க. முதல் ஆளா போயிட்டா” கையை நீட்டி மழைத்துளிகளைப் பிடித்து விளையாடும் தங்கையைக் காண்பித்தான் அகிலன்.

 

“இன்னிக்கு குடும்பமா சேர்ந்து குளியல் போடுவோம். வாங்க வாங்க” ரூபனும் மழையில் சென்று நின்றான்.

 

மொத்தக் குடும்பமும் தோட்டத்தில் குழுமி மழை நீருக்கு மேனியை விருந்தளித்தனர். மாரிமுத்து மட்டும் ஒதுங்கி நின்றார்.

 

“வாங்க மாமா” என்று சத்யா அழைக்க, “அப்பாவுக்கு மழைன்னா ஆகாது. எங்களையே நனைய விட மாட்டார்” மெல்லிய குரலில் சொன்னாள் ஜனனி.

 

“தாத்தா வாங்க” மழலையில் பேசி, அவர் கையைப் பிடித்து சாஹி அழைக்கவும், “சரிடா குட்டிம்மா” மறுப்புக் கூறாமல் வந்து விட்டார் அவர்.

 

“பேத்தி சொல் கேட்டு பொம்மை மாதிரி வந்துட்டாரே. மிஸ்டர் மாரிமுத்துவா இது?” மகிஷா நாடியில் கை வைத்து வியக்க, “அவர் நம்ம அப்பா டி” அவள் தலையில் தட்டினாள் நந்திதா.

 

“இதை நீ நினைவுபடுத்தலனா மறந்து போயிடுவேன்கா. டோட்டலா மாறிட்டார்” சிரிப்புடன் சொன்னாள் மகி.

 

“சளி பிடிக்காம இருந்தா சரி தான். அப்பறமா எல்லாரும் தலையைத் துடைச்சுக்கங்க” என்று மேகலை சொல்ல, “போனதும் துடைச்சிடுவோம் பாட்டி” என்று யுகன் சொல்ல,

 

“டாடிக்கும் கூட அம்மா அவங்க சாரியால துடைச்சு விடுவாங்க” என ஜிஷ்ணு சொல்ல, “இதெல்லாமா சொல்லுவ?” விஷ்ணு அவனை முறைத்தான்.

 

“அய்யோ இவனுங்களுக்கு இதை எல்லார் முன்னாடியும் சொல்லுறதே வேலையாப் போச்சு” ஜனனி வெட்கித்துச் சிரித்தாள்.

 

“இவனுங்க மினி அகி, யுகி போல பார்க்க அப்படியே இருக்காங்க. குணமும் அப்படித் தான்” என்று ரூபன் சொல்ல, “ரூபி” என அழைத்தாள் சாஹித்யா.

 

“நீயும் தான் டா செல்லம். என் ப்ரின்சஸ் தனி அழகு” அவள் நெற்றி முட்டிச் சிரித்தான்.

 

“ஜானு” தன்னவளின் கரம் கோர்த்துக் கொண்டான் சத்யா.

 

“சொல்லுங்க” அவன் முகம் நோக்க, “லவ் யூ சொல்லு” எனக் கேட்டான்.

 

“ஐ லவ் யூ ஜீவா” அழகாக இதழ் பிரித்துச் சிரித்தாள் பெண்ணவள்.

 

“லவ் யூ சோ மச் ஏஞ்சல்!” அவள் நெற்றி தொட்டு வழியும் மழை நீரை சுட்டு விரலால் சுண்டி விட்டான்.

 

அவள் ஒற்றைப் புருவம் உயர்த்த, “பாட்டுப் பாடேன்” என்றிட,

 

“நம் காதல் சொல்ல…

மொழி தேவை இல்ல…

என் ஜீவன் என்றும் நீதானே…

 

ஏ… ஒரு பார்வையால என்ன சாச்சிட்டானே…

விழி மூடவில்ல உன்னாலே…” விழி மூடாது அவனைப் பார்த்துக் காதல் வழிய கானமிசைத்தாள்.

 

தனக்கு உயிர் கொடுத்த அன்புப் பெண்ணை ஏறிட்டு “உன்னாலே உயிர்த்தேனே

உயிர்க் காதல் உணர்ந்தேன் பெண்ணே..” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான் சத்ய ஜீவா.

 

“நான் உங்களுக்கு யாரு ஜீவா?” பக்கவாட்டாகத் திரும்பி அவனை நோக்கினாள்.

 

அவளது கையைத் தன் நெஞ்சில் வைத்து “ஜீவனின் ஜனனம் நீ…!!” என்று பதிலளிக்க, “என் உசுரு” என்றவாறு அவனது தோளில் தலை சாய்த்தாள் ஜீவனின் ஜனனமானவள்!

 

காதல் தங்கு தடையின்றி அடைமழையாய்ப் பொழிந்தது. அன்பு வெள்ளமாய்ப் பாய்ந்தது. இனி என்றும் இடையறா இன்பம் அங்கு துள்ளி விளையாடும்.

 

முற்றும்!

 

ஹாய் மக்களே!

மனசுக்கு நிறைவா இருக்கு. கதை எழுதி முடிச்சுட்டேன். மனசுக்கு பாரமில்லாத கதை தான். உங்களுக்கு எப்படி இருந்தது?

எந்தளவுக்கு உங்களுக்கு இந்தக் கதை பிடிச்சது? ரொம்ப பிடிச்ச கேரக்டர் எது? 

மறக்காம சொல்லிட்டு போங்க. ஒரு வார்த்தையில் முடிக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க.

முக்கியமான விஷயம், உங்க ஆதரவுக்கு நன்றி. ரீடர்ஸோட சப்போர்ட் இல்லாம நல்ல மைண்ட்செட்டோட என்னால கதை எழுத முடியாது. இந்தக் கதை எனக்கு நிறைய வாசகர்களை தேடித் தந்தது. ரொம்ப சந்தோஷம். இதே ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். தாங்க் யூ சோ மச் பட்டூஸ்!

 

அன்புடன்,

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!