Home Novelsகரம் விரித்தாய் என் வரமே12. கரம் விரித்தாய் என் வரமே

12. கரம் விரித்தாய் என் வரமே

by Ambika ram
4.2
(5)

கரம் விரித்தாய் என் வரமே – 12

பார்வதியின் கேள்வி ராஜேஷிற்கு மிகுந்த கோபத்தை வரவழைக்க,

“எனக்கு நீங்க எங்களை மாதிரி ப்ரண்டஸா மட்டும் பழகினா எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா நீங்க அப்படியில்லை! அதனால் எங்களையும் உங்களையும் கம்பேர் பண்ணாதே!” என்றான் கோபமாக.

“அப்படி என்ன நாங்க செய்ய கூடாதது செஞ்சோம் ராஜேஷ்? சொல்லு….”

“நான், அஸ்வினியும் நீயும் குடி இருக்க வீட்டுக்கு வந்து அஸ்வினியை மீட் பண்ணி இருக்கேனா….? இல்லை ஆபிஸில் எங்களை பத்தி எல்லாரும் காசிப் பண்ற அளவு நெருக்கமா பழகி இருக்கேனா…. சொல்லு? என்றான் கோபமாக. அவள் செய்வதை சொல்லி காட்டினால் நன்றாக இருக்காது என்று அவள் தவறை வேறு விதமாக சுட்டி காட்டினான் ராஜேஷ்.

“ஓ! நான் அவன் வீட்டுக்கு போனா தப்பா? நீ வேற மாதிரி யோசிக்கிறியா….?” குதித்தாள் பார்வதி.

அவள் சென்றதையோ சாய்யுடன் பழகுவதையோ ராஜேஷ் சந்தேகப்பட வில்லை. ஆனால் இப்போது ராஜேஷுடன் பார்வதிக்கு ஏதோ பிரச்சனை, அதனால் சாய்யுடன் நெருக்கமாக பழகுகிறாள் என்ற வதந்தி தான் அவனை மிகவும் பாதிக்கிறது! அது அவளுக்கும் நிச்சயம் தெரிந்து இருக்கும்! இருந்தும் வேண்டுமென்றே கேட்கிறாள் என்றால் என்ன சொல்வது? ஆனாலும் சொல்லி தான் ஆக வேண்டும் என்று நினைத்தவன்,

“முன்னாடி மாதிரி நீ இப்போல்லாம் என்னை வெளியில் கூப்பிடுறதே இல்லை! அவன் கூட டைம் ஸ்பெண்ட் தான் போறே…. சோ நீ என்னை கழட்டி விட்டுட்டேனு பேசுறாங்க…. அது எனக்கு சுத்தமா பிடிக்கலை…. நீ கொஞ்சம் பார்த்து நம்ம பேர் கெட்டு போகாம பழகு!” என்றான்.

“பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க….! யாராவது பேசுறாங்கனு அஸ்வினி பிரண்ட்ஷிப் கட் பண்ணுவியா நீ….?”

“எதையும் எதையும் லிங்க் பண்றே நீ? நான் தான் தெளிவா சொன்னேனே…. நாம எல்லாரும் சேர்ந்தே தானே மீட் பண்றோம்….” அதிருப்தியுடன் உச்சு கொட்டினான் ராஜேஷ்.

“அதெல்லாம் கிடையாது…. பிரண்ட்ஸ் தானே…. அது தான் பாயிண்ட்….”

“இப்போ நீ என்ன சொல்ல வர்றே….? நான் அஸ்வினி கிட்ட பழகிறதுனால தான் நீ சாய் கிட்ட பழகுறியா?” அவளின் பேச்சில் ஏதோ புரிந்தவனாக கூர்மையுடன் கேட்டான் ராஜேஷ்.

“இப்போ உனக்கு பீல் ஆகுற மாதிரி தான் எனக்கு பீல் ஆகும் ராஜேஷ்…. எத்தனை பேர் என்கிட்ட, உன்னை விட ராஜேஷுக்கு அஸ்வினி தான் முக்கியம்னு சொல்லி இருக்காங்க தெரியுமா?”

“சோ…. இப்போ நீ என்ன சொல்ல வர்றே….?”

“நீ அவகிட்டே இருந்து டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணு, நானும் சாய்கிட்டே பண்றேன்…. அதர்வைஸ் நான் இப்படி தான் இருப்பேன்….” எவ்வித தயக்கமும் இன்றி அழுத்தமாக சொன்னாள் பார்வதி.

“நான் பேசுறது உனக்கும் எனக்கும் ஏற்படுற அவப்பெயர் பத்தி, நீ வேற ஏதோ பேசுறே….” என்றவன் வேகமாக பேச்சை கத்தரித்து விட்டு விலகி போனான். மனம் அவளின் அநியாய பேச்சில் ஆற்றாமையில் துடித்தது.

**********

அன்று மாலை ராஜேஷின் அதிருப்தியை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எப்போதும் போல் சாய்யை சந்தித்தாள் பார்வதி. சென்னையில் சாய்க்கு சொந்த வீடு இருந்தது. அவன் தந்தை அவரது தொழிலை சென்னையிலும் செய்கிறார். அதற்காக அவ்வப்போது சென்னை வந்து போவார்.

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது அவனின் அம்மா சாய்யை அழைத்தார். அவருடன் பேசி விட்டு வைத்தவன்,

“நீ அடிக்கடி இங்கே இருக்கியா…. எங்க அம்மாவுக்கு பயங்கர டௌட்…. தெலுங்கு அம்மாயி தானே…. லவ் பண்ணா சொல்லுனு சொல்றாங்க…. உனக்கு லவ்வர் இல்லைனா பேசாம நான் உன்னையே கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்….” என்றான் சிரிப்புடன்.

“ஜோக் பண்ணாதே….” என்றாள் பார்வதி கொஞ்சம் தயக்கமாக. அது நாள் வரை அவன் தெலுங்கு பையன், தமிழ் தெரியாது என்று பேச ஆரம்பித்து அவன் குணம் நன்றாக இருக்கவே நண்பனாக தான் அவனுடன் பழகினாள். போதாக்குறைக்கு ராஜேஷிற்கு பிரச்சனையும் கொடுப்பது போல் ஆச்சு! இவ்வளவு தான் அவள் எண்ணம்.

“ஹேய் ரியலி…. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு…. ஆனா நீ வேற ஒரு ஆளை லவ் பண்றேனு தான் சொல்லலை…. இந்த பொண்ணுங்க மட்டும் எப்படி தான் பொருத்தம் இல்லாத ஆளை தேடி தேடி லவ் பண்ணுவீங்களோ…. ஓக்கே…. அது உன் சாய்ஸ்…. ஸாரி உன் பெர்சனல் பத்தி பேசினதுக்கு…. சரி என்ன சாப்பிடுற சொல்லு….” என்று பேச்சை மாற்றிவிட்டான் படக்கென்று.

அவன் அதையே தொடர்ந்து பேசி இருந்தால் பார்வதிக்கு கோபம் வந்து இருக்கலாம்…. அவளே கூட அந்த பேச்சை வெட்டி பேசி இருக்கலாம்…. ஆனால் அவன் பேச்சை மாற்றியதும், இவளே எடுத்து கொடுத்தாள்.

“ஏன் ராஜேஷுக்கு என்ன….? ஏன் அப்படி சொல்றே….? ஹி ஈஸ் அ குட் கய்!” என்றாள்.

“நான் அவனை கெட்டவன் சொல்லலையே, நல்லா யோசிச்சு பாரு…. உனக்கு பொருத்தமில்லாதவன்னு தான் சொன்னேன்….” பார்வதியாக அவள் காதலன் என்பவனை பற்றி கொஞ்ச நாள் பழகிய அவனிடம் கருத்து கேட்கவும் அவளின் காதலில் ஆழம் எப்படி பட்டது என்று தெரிந்து கொண்ட சாய், புள்ளி மான் வலையில் விழும் காலம் மிக அருகில் என்று புரிந்து வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டான்.

இதுவே அவளின் காதல் உண்மையானதாக, ஆழமானதாக இருந்து இருந்தால் இந்நேரம் அவள் வெளிநடப்பு செய்து இருப்பாள்! அல்லது நல்ல நண்பன் என்றாலும் அவனிடம் கோபம் காட்டி இருப்பாள்…. இப்படி அடுத்தவரின் கருத்து கேட்க மாட்டாள்!

“பொருத்தம்னா என்ன மீன்(mean) பண்றே நீ….?”

“உன் கேரக்டர் வேற, தாட்ஸ் வேற…. அவனை பார்த்தாவே உன் லெவலுக்கு கொஞ்சமும் செட் ஆகிற ஆள் மாதிரி தெரியலை…. அந்த குரூப்பிலே நீ ஆட் ஒன் அவுட்(odd one out) மாதிரி பொருந்தாம வித்தியாசமா இருக்கே….” என்றான் சாய்.

அவன் சொல்வது அவளுக்கு மிக பெருமையாக இருக்க, குரலில் பெருமை தொனிக்க,

“நீ சொல்றது கரெக்ட் தான்…. மத்தவங்க பெரிசா எனக்கு செட் ஆக மாட்டாங்க…. பட் ராஜேஷ் ஓக்கே தான்….”

அவளின் பேச்சில் கொஞ்சமாக தெரிந்த சஞ்சலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் சாய். அவனுக்கு பார்வதி போல் ஒரு வாழ்க்கை துணை வந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் வந்திருந்தது. அவளை வளைக்க எண்ணி,

“உன்னோட பேச்சில் ஹண்ட்ரட் பெர்ஸன்ட் சேட்டிஸ்பேக்ஷன் இல்லையே…. அவன் உன்னை ரொம்ப கார்னர் பண்ணி லவ்வை ஒத்துக்க வைச்சானா? இருக்கும் இருக்கும்…. அவனுக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிறது ஈசி இல்லையே….”

சாய்யின் பேச்சை மறுத்து உண்மையை சொல்ல தயக்கம் வந்தது பார்வதிக்கு…. அவளை இவ்வளவு பெருமையாக பேசுபவனிடம், நான் தான் ராஜேஷை தொல்லை செய்து என் காதலை ஒத்துக்க வைத்தேன் என்று சொல்ல முடியாமல் வெறுமேனே சிரித்து வைத்தாள் பார்வதி.

ராஜேஷ் என்ன அவ்ளோ சுமார் பையனா….? இவன் ஏன் இப்படி சொல்றான் என்று யோசித்தாள் பார்வதி. சாய்யின் திட்டப்படி, பார்வதி மனதில் ஏற்பட்ட அந்த சிறு அதிர்வு, அவளின் காதல் அஸ்திவாரத்தை லேசாக ஆட்டம் காண வைத்தது!

அவளின் பதிலை எதிர்பார்க்காதவன் போல், மேலே பேசி கொண்டே சென்றான் சாய். “ராஜேஷ் மாதிரி பசங்களுக்கு கொஞ்சம் ஈகோ இருக்கும்…. ரொம்ப தன்மானம் பார்ப்பாங்க…. பார்த்து இரு…. உன்னை ரொம்ப லவ் பண்றான்னு இப்போவே லூஸில் விட்றாதே….” என்றான்.

ஏற்கனவே அவளாக காதல் சொன்னதால் தான் ராஜேஷ் தன்னை பலநேரம் பொருட்படுத்துவது இல்லை என்ற மனக்குறையில் இருந்தவளுக்கு சாய்யின் பேச்சு இன்னும் தூபம் போட்டது போல் ஆகியது. அதனால் உறுதியாக இனி ராஜேஷ், அஸ்வினியிடம் இருந்து கொஞ்சம் விலகினால் ஒழிய தான் பேசுவது இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

அதை செயல்படுத்த எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தாள். அதை செயலாற்ற சாய்யிடமே உதவி கேட்டாள்.

“சாய் எனக்கு ஒரு உதவி பண்ணனும் நீ….” என்றவள் ராஜேஷையும் அஸ்வினியும் பற்றி சொல்லி, “அவங்களை கொஞ்சம் தள்ளி வைக்கணும்…. அதனால் நீ போய் அஸ்வினி கிட்டே அவ ஹர்ட் ஆகுற மாதிரி பேசணும்…. அதில அவளே பீல் பண்ணி ராஜேஷை விட்டு ஓடணும்!” என்றாள்.

வாவ்!! என் ஆசை நிறைவேற எனக்கு சான்ஸ் இருக்கு போலையே….இவங்க லவ்க்குள்ள இப்படி ஒரு பிரச்சனை இருக்கா? என்று மகிழ்ந்து போனான் சாய். அதனால்,

“ஓ! ஷுயர்…. உனக்காக இது கூட செய்ய மாட்டேனா….?” என்றான் உற்சாகமாக.

இது போல் ஒரு உதவியை குறுகிய காலத்தில் பழகிய ஒருவனிடம், அவனை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது…. அவனிடம் போய் கேட்கிறோமே… தவறு செய்கிறோம் என்று புரியவில்லை பார்வதிக்கு. அதோடு அவனும் செய்கிறேன் என்கிறான் ஏதேனும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்வானா? எதுவும் யோசிக்கவில்லை அவள்! கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று மனதில் தோன்றுவதை எல்லாம் செயலாற்ற எண்ணினாள் வழக்கம் போல்!

**********

மறுநாள் அலுவலகத்தில், அவர்களின் திட்டப்படி, அஸ்வினியை சந்திக்க சந்தர்ப்பத்தை உருவாக்கி கொண்டு வந்தான் சாய். அவளிடம் சில வார்த்தைகள் அபிஷியலாக பேசுவது போல் பேசி விட்டு,

“உங்க கிட்ட ஒன்னு சொல்லணும், ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ…. நீங்க ரொம்ப நல்ல பொண்ணு எல்லாரும் சொல்றாங்க, நீங்க ஏன் தேவையில்லாமல் லவ்வர்ஸ்குள்ள போறீங்க….? இதனால் உங்க பேர் கெட்டு போகுது பாருங்க….” என்றான் அக்கறையாக.

“சாய், எதுவும் தெரியாம, தேவையில்லாத பேச்சு எல்லாம் பேசாதீங்க…. இப்படி எல்லாம் உங்களை பார்வதி பேச சொன்னாளா….?” அவன் பேச பேச கோபம் பொத்து கொண்டு வந்தது அஸ்வினிக்கு. அதை அப்படியே காட்டினாள்.

“எஸ்! பார்வதி என் பிரண்ட்…. நீங்க எல்லாரும் ஒரு சைட் இருக்கீங்க…. அவளுக்கு யாருமே இல்லைனு அழுறா…. அதனால் தான் நான் கேட்கிறேன்…. அவ சொன்னப் பிறகு உடனே எல்லாம் நான் கேட்க வரலை…. நானே கவனிச்சு பார்த்து தான் கேட்கிறேன்…. டைம் கிடைக்கிற அப்போ எல்லாம் ராஜேஷ் கூட தான் இருக்கீங்க…. புதுசா பார்க்கிறவங்களுக்கு நீங்க தான் லவ்வர் போல் இருக்கும்…. ” பார்வதி சொன்னதை விட தானே நிறைய பேசினான் சாய்.

“ஹலோ, மைண்ட் யுவர் வோர்ட்ஸ் சாய்…. உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க….” அஸ்வினி அவனிடம் கோபமாக பொரிய துவங்கும் நேரம், சாய் ஏற்பாட்டின் படி அங்கு வந்த ஒரு பெண், அஸ்வினியை கண்டு,

“ஹேய் என்ன பா ஜோடி மாறி போய் இருக்கு…. ராஜேஷ் எங்கே….?” கேட்டபடி வேகமாக அவர்களை கடந்து போனாள்.

“பார்த்தியா…. பாவம் பார்வதி, அவள் காதலனுக்காக எவ்ளோ போராட வேண்டி இருக்கு….” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான் சாய். அவனின் முகபாவனையில் கேவலமான எண்ணம் தெரிய, கூசி போனாள் அஸ்வினி.

அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல், அங்கிருந்து விறுவிறுவென்று அகன்றாள். ஆத்திரத்தில் மூச்சிரைத்தது அவளுக்கு. தெய்வாவிற்கு அழைத்து பேசலாம் என்று தனிமையான இடம் நோக்கி சென்று கொண்டு இருந்தவளை கண்டான் ராஜேஷ். வேகமாக செல்லும் அவளை கண்டவனுக்கு ஏதோ சரியில்லை என்று புரிய, தோழியை நோக்கி ஓடினான் அவன்.

அன்று அவர்களின் போதாக்காலம் போல்,

“ஹேய் அஸ்வினி, என்ன ஆச்சு….? எங்கே போயிட்டு இருக்கே நீ இவ்ளோ வேகமா….?”

எதிர்பாராமல் அவனை கண்டவுன், பார்வதி, சாய்யின் மேல் இருந்த அத்தனை கோபமும் அவன் மேல் திரும்பிற்று.

“அய்யோ! சார் நீங்களா….? வேண்டாம் சார்….நீங்க என்கிட்ட பேசுறதை உங்க லவ்வர், அவங்க பிரண்ட்ஸ் எல்லாரும் பார்த்தா என்னெல்லாம் பேசுவாங்களோ…. எனக்கு வேண்டாம் சார்…. எனக்கு எந்த கெட்ட பேரும் வேண்டாம்…. நீங்களாச்சு…. உங்க லவ்வர் ஆச்சு…. உங்க தெய்வீக காதல் ஆச்சு…. ஆளை விடுங்க….” என்றாள் ஆத்திரத்தில் படு நக்கலாக.

பாவம் ஒரு இடம், பழி ஒரு இடம் என்பது போல் அஸ்வினியின் பேச்சில் தேவையில்லாமல் ராஜேஷ் மிகுந்த காயப்பட்டு போனான். பார்வதியால் தான் ஏதோ என்று புரிந்ததால், மிகுந்த அவமானத்துடன் முகம் கன்றியவனாக,

“யார் என்ன சொன்னா உன்னை….? வா….நான் கேட்கிறேன்….!”என்றான்.

மிகுந்த கோபத்தில் இருந்த அஸ்வினி, “வேண்டாம், வேண்டவே வேண்டாம்…. உண்மையிலே நம்ம ப்ரண்ட்ஷிப்பிற்காக தான் நான் நிறைய விஷயம் பொறுத்து போனேன்…. ஆனா இனிமே முடியாது…. என் கேரக்டரையே கெடுத்துடுவாங்க போல்….இனிமே என்கிட்ட இருந்து தள்ளியே இரு ராஜேஷ்!” என்றவள் அவனின் பதிலை கூட கேட்க நிற்காமல் நடந்து விட்டாள்!

முகத்தில் அறை வாங்கியவன் போல் உணர்ந்தான் ராஜேஷ். விஷயம் என்ன என்று சரியாக சொல்லாமல், எவ்வித பேச்சும் இல்லாமல் அவனை குற்றவாளி போல் பாவித்து தீர்ப்பு சொல்லி விட்டு போன தோழி அவன் நெஞ்சை வலிக்க வைத்து இருந்தாள். அவளின் பார்வையும், பேச்சும் அதில் இருந்த விலகல் தன்மையும் ராஜேஷை மிகவும் வருந்த செய்தது! நான் என்ன தவறு செய்தேன்….? இப்படி பேசி விட்டாளே…. என்னை தள்ளியே இரு என்று இவ்வளவு கடுமையாக சொல்லி விட்டாளே….

கடந்த நான்கு மாதங்களாக அவளின் மனதிற்காக யோசித்து யோசித்து பார்த்து பார்த்து நடந்து கொண்ட அவனுக்கு, அவளின் இந்த பேச்சு மிகுந்த வலியையும் வருத்தத்தையும் மட்டும் தராமல் கூடவே அவளின் நடத்தையால் ஆத்திரத்தையும் விலகலையும் சேர்த்தே கொடுத்தது!

அஸ்வினியின் விஷயத்தில் இப்போது பார்வதி நினைத்தது நடந்தே விட்டது! ஆனால் அவள் நினைத்தது எல்லாம் எப்போதும் நடக்குமா? பார்ப்போம்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!