12. விஷ்வ மித்ரன்

5
(2)

💙  விஷ்வ மித்ரன் 💙

💙 அத்தியாயம் 12

 

“ராட்சஸி! அடியே முட்ட போண்டா. கதவ திற டி” என்று உற்சாகம் பொங்க அக்ஷராவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா.

 

சற்று நேரத்தின் பின் கதவு திறந்து கொள்ள “ஹே அக்ஷூஊஊ” என கத்திக் கொண்டே அவள் கைகளைப் பிடித்து சுற்ற,

 

“டேய் விடு டா. தலை சுத்துது எரும” என அலறியவளுக்கு அவனது சந்தோஷத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை அருள் கல்யாணத்தை நிறுத்த சொன்னதை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை.

 

இருந்தும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, உதட்டில் புன்னகையை பூசியபடி கட்டிலில் அமர்ந்து கொள்ள, விஷ்வாவும் சோபாவில் தடாலென சரிந்தான்.

 

தங்கைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி அவளுக்கு பிடித்த வாழ்வை பெற்றுக் கொடுத்ததில் அவன் மனம் நிறைந்து போயிருந்தது.

 

அமைதியே உருவாக தன்னைப் பார்த்தபடி நிற்கும் அக்ஷராவைப் புருவம் சுருக்கிப் பார்த்து “அடியே பக்கி! நான் மித்து கூட பேசி கல்யாணத்த ஓகே பண்ணிட்டு வந்தா சந்தோஷப்படுவ. அவன் என்ன சொன்னானு ஆர்வமா கேப்பன்னு பார்த்தா எதையோ பறிகொடுத்தவ மாதிரி சோககீதம் இசைச்சுட்டு இருக்கியே” என சலித்தான் அவன்.

 

கலங்கிய கண்கள் அப்போவா இப்போவா கண்ணீரை வெளியேற்ற? என்ற கேள்வியுடன் நிற்க, கடினப்பட்டு அதை உள்ளிழுத்து அவனைப் பார்த்தாள்.

 

“என்னடா இது? இதற்கெல்லாம் போய் யாராவது கண்ணு கலங்குவாங்களா? அருள் ஓக்கே சொல்லிட்டான். இனி அவன கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் போற வேலைய பாரு” என்க, அவள் கன்னங்கள் குப்பென சிவந்து கொண்டன.

 

அதைப் பார்த்து வாய் விட்டே சிரித்த விஷ்வா “ஹா ஹா இப்போ தான் டி பொண்ணு மாதிரி இருக்க. இல்லனா நான் பசங்கள எல்லாம் கட்டிக்க மாட்டேன்னு மித்து பயந்து அலறிடுவான்” என்றவனின் அருகில் இருந்த குசனை எடுத்து அவனுக்கு பட் பட்டென்று அடிக்கத் துவங்கினாள் அக்ஷு.

 

“கொஞ்சம் நேரம் சைலன்டா இருந்தா போதுமே. இது தான் சான்ஸ்னு என்னை ஓட்ட வந்துடுவ. உன்ன விட மாட்டேன். உனக்கும் கல்யாணம் வரும்ல அப்போ உன்ன இத விட வெச்சு செய்வேன்” என்றவள் அவனை இன்னும் மொத்தி எடுத்தாள்.

 

அவளின் அடிகளில் இருந்து தப்பித்துக் கொண்டே குசனைப் பறித்தெடுத்து மடியில் வைத்துக் கொண்டு “அப்டினா நீ என்னை இப்போவே கலாய்க்கனும். ஏன்னா உன் கூடவே எனக்கும் கல்யாணம் நடக்க போகுது” என்று தோளைக் குலுக்கினான்.

 

“என்னாதூஊஊ. உனக்கு கல்யாணமா? ” கண்களோடு சேர்ந்து வாயும் விரியத் தான் கேட்டாள் அக்ஷரா.

 

கைகளால் வாயை மூடுமாறு சைகை காட்டி விட்டு “ஆமா அக்ஷு! பொண்ணு யாரு தெரியுமா?” என்று ஏதோ சொல்லப் போனவனை இடைவெட்டி “உன்னை யாராவது லவ் பண்ணுறாங்களோ? இல்லல்ல உன் மூஞ்ச யாரு லவ் பண்ணுவா. யாரோ ஒரு அப்பாவி ஜீவன் பாவம் பார்த்து அவங்க பொண்ண ஒப்படைக்கிறாங்க போல இருக்கு” அவன உச்சுக் கொட்டினாள் பாவமாக.

 

“போடி போ. அந்த அப்பாவி ஜீவன் யார் தெரியுமா? உன்னோட வருங்கால மாமனாரே தான்” என அவள் காதைத் திருகினான் விஷ்வா.

 

“வருங்கால மாமனாரா? ஹரிப்பாவயா சொல்லுறே? அவருக்கு பொண்ணு இருக்காங்களா என்ன” நெற்றியைத் தேய்த்தவாறு குழப்பமாகக் கேட்க,

 

தலையசைத்த விஷ்வா “ஆமாடி . உனக்கு ஒரு நாத்தனார்.. ஐ மீன் மித்துக்கு தங்கச்சி இருக்கு” என்றவன் வைஷ்ணவி பற்றியும், கல்யாணம் பற்றி இன்று பேசியது பற்றியும் கூறியவன், வைஷுவை மிரட்டி சம்மதிக்க வைத்ததையும் மித்ரனிடம் ப்ராமிஸ் கேட்டதையும் சொல்லவில்லை.

 

“அடப்பாவிப் பயலே! எனக்கு கல்யாணம் பேசிட்டு வரச் சொன்னா நீ உனக்கும் ஆள் செட் பண்ணி டூயட் பாடிட்டு வந்திருக்கியே” என்று வாயில் கை வைத்தாள் அக்ஷு.

 

‘க்கும். அந்த பிசாசு கூடயாவது டூயட் பாடுறதாவது. என் கோவத்த கிளறுறதிலே குறியா இருக்காள்’ என அவளை மனதினுள் வறுத்தெடுத்தான் விஷ்வஜித்.

 

“சரி சரி. உன் கனவை அப்பறமா கன்டினியூவ் பண்ணு. இப்போ என் அண்ணிய பத்தி சொல்லு. எப்படி இருப்பா? அழகா பொம்மை மாதிரி இருப்பாங்களா?” ஆவல் மேலிடத் தான் கேட்டாள் அவள்.

 

“ம்ம் பொம்மை மாதிரி தான் இருப்பா. போய் எடுத்து விளையாடு” என அவன் முறுக்கிக் கொள்ள,

 

“டேய் ரசனை கெட்டவனே. ஒழுங்கா அண்ணிய பத்தி சொல்லிடு. இல்லனா பல்ல தட்டி கையில கொடுத்துடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் அக்ஷு.

 

தலையைச் சொறிந்து கொண்டவன் “இப்போ என்னடி உன் பிரச்சனை? அண்ணி நொண்ணினு உயிர வாங்குறே. உன் அலும்பு தாங்கல ராட்சஸி” கடுப்புடன் கேட்டவனைப் பார்த்து சிரித்து விட்டு, “நீ முதல்ல கண்ண மூடிக்க. அப்பறமா அண்ணிய மனசுல கொண்டு வந்து நிறுத்தி அவ எப்படி இருப்பான்னு சொல்லு. சிம்பிள்” என தோளைக் குலுக்கினாள் அவள்.

 

“ஏதோ பண்ணித் தொலைக்குறேன்” என்ற விஷ்வா கண்களை மூடி வைஷ்ணவியின் உருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

 

“நிலா மாதிரி முகம். அடிக்கடி விரியிற முட்டை கண்கள். கூர்மையான மூக்கு. அழகான குட்டி ரெட் லிப்ஸ். நெத்தில பொட்டு வெச்சு அழகா தேவதை மாதிரி இருந்தா. ரெட் சுடில ரோஸ் மாதிரி அசைஞ்சு சிரிச்சா” என்று அவளை வர்ணித்தவனின் அதரங்களோ அழகாக விரிந்தன.

 

என்றுமில்லாத மென்மையுடன் தோன்றும் விஷ்வாவின் முகத்தை விழி விரித்துப் பார்த்து நின்றாள் தங்கையும்.

 

“அடடே விஷு! அண்ணிய பார்க்கவே இல்லன்னுட்டு இப்படி சைட் அடிச்சுட்டு வந்திருக்கியே” என கிண்டலடிக்க,

 

“நீ கேட்டதால நானே எவ்ளோ கஷ்டப்பட்டு சொன்னேன். நீ என்னடான்னா சைட்டுனு சொல்லுறே. ஒன்லி கிஸ்” என்று சொல்ல வந்தவன் சட்டென நாக்கைக் கடித்து கப்பென வாயை மூடிக் கொள்ள,

 

“என்ன சொன்ன?” புரியாமல் வினவினாள் அக்ஷரா.

 

வாய் தவறி உழறப் போனதை அறிந்து மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டு “இல்லமா! ஒன்லி லுக்கிங்னு சொல்ல வந்தேன்” என சமாளித்து வைத்தான்.

 

அக்ஷுவின் முகத்தில் ஏதோ வாட்டம் இருப்பதாக அவனுக்குத் தோன்ற “ஏய் கூமூட்டை! யேன்டி மூஞ்சு அப்படி இருக்கு? பீ ஹேப்பி டி” என்று அவள் தலையை செல்லமாக கலைத்து விட,

 

இதழ் பிரித்து புன்னகைத்து “சரிண்ணா” என்று கூறி விட்டு சட்டென அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

 

அவளின் செய்கை வித்தியாசமாக தோன்றினாலும் எதுவும் கேட்க நினைக்காது அவளது தலையை பாசமாக தடவியபடி ” அக்ஷு! அண்ணி வந்தா உன்னைக் கழற்றி விட்டுடுவேன்னு ஃபீல் பண்ணுறியா? ஐ மீன் இப்டி உன்னால என் கூட ஜாலியா இருக்க முடியாதுன்னு” எனக் கேட்க, அவனை அண்ணாந்து பார்த்தாள் அக்ஷரா.

 

“நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்? இப்போ எப்படி இருக்கேனோ கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படி தான் ஜாலியா இருப்பேன். நீ என் அண்ணன். அந்த உரிமைய நான் என்னிக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ சொன்னத வெச்சு பார்க்கும் போது அண்ணி ரொம்ப நல்லவங்களா ஸ்வீட்டா தான் இருப்பாங்கனு தோணுது. சோ நோ மோர் திங்கிங்” என்று மெல்லப் புன்னகைத்தாள்.

 

“அப்படி சொல்லு என் செல்லம்” என்று விஷ்வா செல்லம் கொஞ்ச, “அண்ணா! அண்ணிய பார்க்க ஆசையா இருக்குது டா. ஒளிச்சு மறைச்சு வெக்காம எனக்கு காட்டிடு” என்றாள் அவள்.

 

போலியாக அவளை முறைத்துக் கொண்டு “அண்ணி மேல ரொம்பத் தான் பாசம் பொங்குது உனக்கு. கண்டிப்பா உனக்கு வைஷுவ இன்ட்ரடியூஸ் பண்ணி வைப்பேன். இப்போ டாட் கூட பேசனும்” என்று விட்டு எழுந்து சென்றான்.

 

அவன் சென்றதும் தலையணையில் முகம் புதைத்த அக்ஷராவிற்கு உள்ளமெல்லாம் கவலை பெருகியது. இத்தனை சந்தோஷமாக செல்பவனிடம் எப்படி மித்ரனின் விடயத்தைக் கூறுவது!? என்று புரியாமல் தவித்துத் தான் நின்றாள் பேதையவள்‌.

 

“இந்த கல்யாணத்த நிறுத்திடு” என்ற அவனது வார்த்தை ஞாபகம் வர கண்கள் கலங்கியே போனது.

 

“ஏன்டா அருள் இப்படி சொன்னே? நீ இல்லாம நான் எப்படிடா இருக்க முடியும்? விஷுவோட சந்தோஷத்த என்னால உடைக்க முடியாது. உனக்கு என்னைப் பிடிக்காதா அருள்? உனக்கு யேன்டா என் மேல காதல் வர்ல?” எனக் கதறியழுதாள் அவள். கண்களில் நிற்காமல் வழிந்த நீர் தலையணையை நனைத்தது.

 

“யார அவன் காதலிக்குறதா சொன்னது? ஹான் அம்முலு. அம்முலுவாமே அம்முலு ம்ஹூம்” என்று கோபமும் அழுகையுமாக நினைத்துக் கொண்டவளுக்கு ஏதோ தோன்ற சட்டென எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

துப்பட்டாவை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நீலவேணி அழைப்பதைக் கூட செவியில் வாங்காமல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து விருட்டெனக் கிளம்பினாள் அக்ஷு.

 

…………………….

“ஹேய் என்னடி சொல்லுற? விஷ்வா கூட உனக்கு கல்யாணமா? மித்து விஷு சேர்ந்துட்டாங்களா?” என்று அதிர்ச்சியும் ஆனந்தமுமாய் வைஷ்ணவியிடம் கேட்டாள் பூர்ணி. வைஷு சொன்னதை அவளால் இன்னமும் நம்ப முடியாது தான் போயிற்று.

 

“அத தானே இத்தனை நேரமா சொல்லிட்டு இருக்கேன். மித்துணாவோட ப்ரெண்டு தானே விஷ்வா. ஏன் பூரி என் கிட்ட இத பத்தி சொல்லல? அவங்களுக்குள்ள என்ன தான் நடந்துச்சு?” புரியாத புதிராகத் தான் வினாத் தொடுத்தாள் வைஷு.

 

“மித்து விஷு ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்! சும்மா சொல்ல முடியாது டி. உயிரும் உணர்வுமா கலந்து ஒன்னாவே இருந்தாங்க. அவங்களுக்குள்ள சின்னதா ஒரு சண்டை கூட வந்ததில்லன்னு தான் சொல்லனும். மித்து பேபி என் கூட கால் பேசுறப்போ மூச்சுக்கு முந்நூறு தடவை விஷு, என் மாப்ள அப்டினு தான் சொல்லுவான்.

 

அவங்கள யாராலயும் பிரிக்க முடியலங்குற அளவுக்கு திக் ப்ரெண்ட்ஸ்” என்று சொன்ன பூர்ணி அவர்களது முதல் சந்திப்பிலிருந்து தொடர்ந்த நட்பைப் பற்றி கூறினாள்.

 

வைஷ்ணவியின் மனமும் நெகிழ்ந்தது இவ் ஆடவர்களது நட்பினால்! “அப்படி இருந்தவங்களுக்குள்ள எப்படி பிரிவு வந்துச்சு?” சோகமாகக் கேட்டாள்.

 

“அது தான் எனக்கும் தெரியல. அதுக்கான ரீசன் மித்துவ தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நெனக்கிறேன்” என்ற பூர்ணிக்கும் அது கேள்விக்குறியே!

 

“சரி அத விடு. உனக்கு விஷ்வாவ பிடிச்சிருக்கா? நெஜமாவே பிடிச்சு தான் ஓகே சொன்னியா. இல்லனா மித்துக்காக சரினு தலையாட்டிட்டு வந்தியா?” என்று புருவம் உயர்த்தினாள் பூர்ணி.

 

தலையை நாலா பக்கமும் உருட்டி “இல்ல பூரி. எனக்கு நெஜமாவே விஷ்வாவ பார்த்த உடனே பிடிச்சு போச்சு. அண்ணா ப்ரெண்ட்ங்குற காரணமே இன்னும் பிடிக்க வெச்சுருச்சு” என்று வேகமாக மறுத்தாள்.

 

வாய் தான் அப்படிக் கூறினாலும் மனமோ அவன் முத்தமிட்டதைத் தான் நினைத்துக் கொண்டது. இதழ் குவித்து மிரட்டலாக புருவம் தூக்கியது நினைவு வர கன்னக் கதுப்புகள் சூடேறிச் சிவக்கலானது.

 

அவளின் வெட்கத்தைக் கண்டு விழி விரித்த பூர்ணி சுட்டு விரலால் நாடி தொட்டு நிமிர்த்தி “ஓய் டார்லு! வெட்கப்படறியா நீ? அச்சோ சோ ஸ்வீட்டு டி.  விஷு மட்டும் கண்டான்னு வை, அப்படியே அலேக்கா தூக்கிட்டு போய் தாலியே கட்டிடுவான்” என வைஷுவைக் கலாய்த்தே ஒரு வழி செய்தாள்.

 

கைகளால் முகத்தை மறைத்து “போடி! இப்படிலாம் கலாய்க்காத” என சிணுங்கினாள் பெண்.

 

“ஹா ஹா ஹா. இன்னிக்கு நீ வேற மாதிரி தெரியுற வைஷு” மகிழ்வுடன் கூறி, நெட்டி முறிப்பது போல் சைகை செய்தவளின் கை அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது.

 

தன் குழந்தையை நினைத்து தானும் குழந்தை போலவே மென்மையாக இதழு விரியலுடன் இருப்பவளை நோக்கினாள் வைஷ்ணவி.

 

“பூரி! இன்னும் எய்ட் மன்த்ஸ்ல நம்ம வீட்டுல குட்டி பாப்பா வந்துடும்ல? நினைக்கவே ஹேப்பியா இருக்குல்ல” 

 

“ஆமாடி! என்னால இத இன்னுமே நம்ப முடியாத மாதிரி இருக்கு. இதெல்லாம் கனவோனு கூட தோணுது. ஒரு புறம் எனக்கு கில்டியாவும் இருக்கு டி. இது ரோஹியோடயும் குழந்தை. ஆனா அவனுக்கே இது தெரியாது” என்று விரக்தியில் வெந்தாள் பூர்ணி.

 

“விடு டி. நீ இப்படிலாம் ஃபீல் பண்ணாத. எல்லாமே சரியாகிடும்” என்று ஆறுதல் அளித்தாள் தோழியாய்.

 

வைஷ்ணவி “அண்ணா அக்ஷராவ லவ் பண்ணுறானா பூரி?” என்று கேட்க,

 

“தெரியல டி. உன் அண்ணன் இத பத்திலாம் என் கிட்ட சொன்னதில்ல. அவனுக்கு அக்ஷுனா ரொம்ப பிடிக்கும். அது லவ்வானு கேட்டா விடை தெரியாது. கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதால லவ் இருக்குமோனு ஒரு டவுட். மேடம் இதெல்லாம் யோசிக்காம விஷ்வாவ பற்றி மட்டும் யோசி” என அவளும் கண்ணடிக்க,

 

“போடி லூசு” என பூர்ணியை முறைத்து விட்டுச் சென்றாள்.

 

பல்கோணியில் நின்ற வைஷ்ணவிக்கோ விஷ்வாவின் நினைவுகள் மனதில் சூழத் தொடங்கின.

 

அவனைக் கண்ட முதல் நாள் ஏனென்றே தெரியாமல் அவனைப் பிடித்தது. அந்தக் குடிகாரன் அவள் மனதின் ஓரமாக குடி கொண்டு விட்டான். ஐஸ்கிரீம் ஃபார்லரில் தன்னைக் குடிகாரி என்று சொன்னது சண்டையிட்டது ஒவ்வொன்றாய் மனதில் வலம் வரத் துவங்க, உதட்டில் புன்னகை உறைந்தது.

 

அதன் பின் இன்று மித்ரனின் நண்பனாக வந்து, தனக்கே மணாளனாக வரப் போவதையும் நினைக்க நினைக்க கனவுலகத்தில் சஞ்சரிப்பது போல் தான் இருந்தது.

 

அக்கனவு அவனைத் தவறாக எண்ணித் திட்டியதில் உடைந்து சிதறிப் போனது. இனி எப்படி அவன் முகத்தில் முழிப்பது? உன்னைத் தவறாக நினைத்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்பதா? அவன் அதைக் கேட்டு கோபம் கொள்வானோ எனப் பயந்தும் போகலனாள்.

 

வைஷ்ணவி “பயப்பட்டு பிரயோசனமில்லை வைஷு! தப்பு பண்ணது நீ. சோ மன்னிப்பு கேட்டு தான் ஆகனும். அதனால அவன் கோபப்பட்டாலும் அதத் தாங்கிக்க வேணும். உன்னப் பார்த்து சாரி கேட்டா தான் என் மனசு ஆறும் விஷ்வா. அய்ம் சாரி” என்று மனதினுள் வருந்தினாள் அவள்.

 

அவனது முத்தத்தின் ஈரம் இன்னும் கன்னத்தில் இருப்பதாய்த் உணர்ந்தவளுக்கோ ஏனென்றே தெரியாமல் வெட்கம் வெட்கமாய் வந்தது.

 

“எப்படி பட்டுனு கிஸ் பண்ணிட்டான். ராட்சசன்! ஆனாலும் ஹேன்ட்ஸமான கியூட் ராட்சசன்” என அவனைச் செல்லமாக திட்டினாள் வைஷ்ணவி! விஷ்வாவின் நவி!

 

………………….

கண்களை மூடி கட்டிலில் சாய்ந்திருந்தான் அருள் மித்ரன். அவன் உள்ளம் அலைகடலாய் கொந்தளித்துக் கொண்டு தான் இருந்தது.

 

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அக்ஷராவிற்கு கால் பண்ணி கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி விட்டான். ஆனால் இப்போது அவளின் மனம் எப்படித் தவிக்கும்? அது போக இதைக் கேட்டால் விஷ்வாவிற்கு தன் மேல் இருக்கும் கோபம் இன்னும் அதிகரிக்குமோ? என்று நினைக்கும் போதே பெரும் வலி அவனுள் ஊடுவித் தாக்கியது.

 

“சாரி அக்ஷு! என்னை நீ எவ்ளோ காதலிக்கிறன்னு இன்னிக்கு உன் குரல்ல இருந்த ஏக்கம், சந்தோஷமே சொல்லிடுச்சு. பட் என்னால உன் கூட சந்தோஷமா வாழ முடியுமான்னு தெரியல. சாரி டா. உனக்கு என்னை விட நல்ல ஒருத்தன் கிடைப்பான்” என்று மனதால் பேசியவனின் இதயமோ வலியில் துடித்தது.

 

“மித்து பேபி” எனும் அழைப்பில் சட்டென கண்களைத் திறக்க, அங்கு அவனை அழைத்தவாறு நின்றிருந்தாள் பூர்ணி.

 

“ஹேய் பூரி! உன் கிட்ட என்ன சொன்னேன்? அடிக்கடி நடமாடிட்டு இருக்க வேணாம்னு படிச்சு படிச்சு சொல்லுறேன்ல” என முறைத்தான்.

 

அவளும் லேசாக முறைத்து “போ மித்து. உன்னோட அலும்பு தாங்கல. நீ சொல்லுற மாதிரி பபிள்கம் போல ஒரே இடத்துல ஒட்டிக்கிட்டு இருக்க முடியுமா டா? போரடிக்குது” எனப் பாவமாகப் பார்த்தாள்.

 

அவளின் முகபாவனையில் கிளுக்கிச் சிரித்து “சரிடா. பார்த்து கவனமா ஸ்டெப்ஸ் ஏறனும்” என்று கூறியவனின் அக்கறையும், பாசமும் அவளை மனம் உருக வைத்தது.

 

“ஓகே ஓகே! நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வந்தேன்” என பீடிகையுடன் ஆரம்பித்தவளை சிறு குழப்பத்துடன் பார்த்து வைத்தான் மித்ரன்.

 

“என்ன விஷயம் சொல்லு மா”

 

“அ…அது நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் மித்து பேபி” என தயக்கமாக இழுக்க,

 

“நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு சப்போர்ட்டா நான் நிப்பேன் பூரி. என்னன்னு சொல்லு” 

 

கீழுதட்டை பற்களால் கடித்து விடுவித்துக் கொண்டு “நான் ரோஹி கூட போகலாம்னு இருக்கேன்” பட்டெனப் போட்டு உடைத்தாள் அவள்.

 

மித்ரனின் முகத்தில் புது சந்தோஷம் வந்து குடிகொள்ள “ஹேய் உண்மைய தான் சொல்லுறியா பூரி? உன்னோட முடிவுல மனசு நிறைவா இருக்கு. இந்த மாதிரி டைம்ல பொண்ணுங்க மனசு தன் ஹஸ்பண்ட தான் ரொம்ப தேடும். நீயும் ரோஹி கூட இருந்தா இத விட சந்தோஷமா இருப்ப” என்று உரைத்தான்.

 

அவனைப் பார்த்து ‘இல்ல மித்து. நான் ரோஹன் கூட போக முடிவெடுத்தது எனக்காக இல்ல உனக்காக தான். ரோஹன் என்னை உன் கூட சேர்த்து வெச்சு சந்தேகப்பட்டான்னு உன்னால தான் நான் அவன பிரிஞ்சு கஷ்டப்படுறேனு நீயா நெனச்சிக்கிட்டு உள்ளுக்குள்ள வருந்திட்டு இருக்க.

 

அந்த கில்டி ஃபீலிங்கல தான் அக்ஷு கிட்ட கல்யாணத்த நிறுத்த சொல்லி அவ வாழ்க்கையோட உன் வாழ்க்கையையும் பாழாக்கிக்க போறே. நான் ரோஹி கூட சேர்ந்துக்க போறேன். ஆனா கண்டிப்பா அவனோட பழையபடி வாழ முடியுமானு கேட்டா தெரியாது’ என்று நினைத்துக் கொண்டாள் பூர்ணி.

 

அவளை நோக்கிய மித்து “பூரி! நீ உண்மையாவே மனசு மாறி அவன ஏத்துக்க தானே போற? பழசெல்லாம் மறந்துட்டு எந்த ப்ராப்ளமும் இல்லாம வாழு டா. நீ சண்டை போட்டு கவலைப்பட்டுட்டு இருக்குறப்போ அது பேபியோட ஹெல்த்துக்கு நல்லதில்ல” என்று அவள் தலையை வருடினான்.

 

“ஓகே டா. நான் நல்லா இருப்பேன். கண்டதையும் போட்டு  நீயே ஒன்ன கற்பனை பண்ணிட்டு இருக்காம அக்ஷு கூட ஜாலியா இரு” என கண்சிமிட்டி விட்டு அகன்றாள்.

 

அவளது முடிவில் மித்ரனுக்கு ஏக மகிழ்வு! அவள் கணவனைப் பிரிந்து வர தானும் ஒரு காரணம் என நினைத்து உள்ளுக்குள் புழுங்கி மருகிக் கொண்டிருந்த குற்றவுணர்வு முற்றிலும் நீங்கிய உணர்வு. இனியாவது அவள் கணவன், குழந்தை என குறையாத இன்பத்துடன் வாழ வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டான்.

 

கப்போர்டைத் திறந்து ஒரு போட்டோவை எடுத்துப் பார்த்தான் மித்ரன். ஃபிரேம் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தில், கையில் ஒற்றை ரோஜாவுடன் கூந்தல் காற்றில் நடனமாட சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

“அம்முலு! மனசுல இருந்த கவலை எல்லாம் போயிருச்சு டி. நான் உன் கிட்ட வந்து லவ்வ சொல்லி கல்யாணமும் பண்ணிக்க போறேன். நீயும் என்ன உயிரா நேசிக்கிறேனு எனக்கு தெரியும் டி. உன்னைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. ப்ளீஸ் டி என் கிட்ட வா. உன்னை இத்தனை நாள் காக்க வெச்சதுக்கு ரியல்லி சாரி ” என்று கூறி தன்னவள் போட்டோவை வருடி நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

ஏதோ உந்துதலில் திரும்பியவனோ இன்பமாய் அதிர்ந்திட, அவன் இதழ்களும் “அம்முலு” என்பதாய் உச்சரித்தன.

 

கதவில் சாய்ந்து, கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைப்புடன் ஏறிட்டாள் அவள்.

அருளின் ஆருயிர் அம்முலு!

அவள் அக்ஷரா!

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!