கரம் விரித்தாய் என் வரமே – 13
அஸ்வினியிடம் பேசி விட்டு வந்த ராஜேஷிற்கு மனமே ஆறவில்லை. இந்த பெண்கள் இருவரும் என்னை என்ன நினைத்து கொண்டார்கள்…. ஆளாளுக்கு அவர்களின் எண்ணங்களை என்னிடம் காட்டி என்னை பந்தாடுவது போல் செய்கிறார்கள்! இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று கடுப்பானான் ராஜேஷ்.
ராஜேஷிடம் பொரிந்து தள்ளி விட்டு வந்த அஸ்வினிக்கு வார்த்தைகளை கொட்டிய பின் தான் அறிவு வேலை செய்தது. இத்தனை நாள் இல்லாமல், அதுவும் அவன் மேல் தவறே இல்லாமல் அவனிடம் அப்படி பேசியது தவறு என்று புரிய மிகவும் சங்கடமாகி விட்டது அவளுக்கு. “சே! ரொம்ப கடுமையா பேசிட்டேனே அவனை….” தவித்தாள் அஸ்வினி.
அன்று மாலை அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் அவனை தனியே சற்று நேரம் பிடித்துவைக்க சொல்லி மதனிடம் சொன்னாள் அஸ்வினி.
மாலை, தனியாக நின்று கொண்டு இருந்த இருவரையும் நோக்கி சென்றாள் அஸ்வினி. சாய் பேசி சென்ற பின் அஸ்வினியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று பார்க்க எண்ணி மாலையில் இருந்து அவளின் மேல் தன் கண்காணிப்பை வைத்திருந்த பார்வதியும் அவளை தொடர்ந்தாள்.
ராஜேஷை நோக்கி போகும் அவளை கண்டதும், இவ அடங்கமாட்டாளா என்று கடுப்பாக நினைத்து கொண்டு ராஜேஷ் நிற்பதால் கொஞ்சமாக மறைவாக நின்று கொண்டாள் பார்வதி.
அவளுக்கு மதியம் ராஜேஷும் அஸ்வினியும் செய்த வாதம் தெரியாதே…. அதனால் கொஞ்சமும் ஆர்வமின்றி அவர்களை கவனிக்க துவங்கினாள்…. ஆனால் அஸ்வினி பேச தொடங்கிய சில நிமிடங்களிலேயே ராஜேஷ் அஸ்வினியிடம் கோபமாக பதில் பேசி, முகத்தை திருப்பவும், மிகுந்த உற்சாகமாகி விட்டாள் பார்வதி. அவர்கள் பேசுவது சரியாக கேட்காவிட்டாலும் அவர்களுக்குள் பிரச்சனை என்பதே இவளுக்கு போதுமானதாக இருந்தது. மதன் அவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே விலகி சென்று விட்டான்.
அங்கே அவர்களுக்குள்,
“ஸாரி டா, ஏதோ டென்ஷன்ல….” அஸ்வினி ஆரம்பிக்க,
“நீ எதுவும் தெரியாம பேசலை…. எல்லாமே தெரிஞ்சு, இத்தனை நாள் உன் மனசில இருந்ததை தான் பேசினே…. எனக்கு புரிஞ்சுது….”
“இல்லை டா….”
“ப்ளீஸ் ஸ்டாப் இட் அஸ்வினி…. பர்ஸ்டே என்னை பத்தி இன்னொருத்தர் கிட்டே ஏதோ பேசினேனு நமக்கு பிரச்சனை…. அப்போவும் என்னை ஹர்ட் பண்ற மாதிரி கொஞ்சம் சொன்னே…. நான் உனக்காக யோசிச்சு….நமக்காக பார்த்து பார்த்து பழகினேன்…. இப்போவும் என்னை பத்தி, என் மேல் தப்பே இல்லாத போதும் என்கிட்டேயே மோசமா பேசுறே…. இதோடு எல்லாத்தையும் முடிச்சுக்கோ….நீ சொன்ன மாதிரி நான் உன் கிட்ட இருந்து தள்ளியே இருந்துகிறேன்….” கோபமாக பேசினாலும் அவன் குரலில் ஆழ்ந்த வருத்தம் இருந்தது.
அவன் அப்படி சொல்லவும் அழ ஆரம்பித்து விட்டாள் அஸ்வினி.
“அழுதே கொன்னுடுவேன்…. நான் எந்த வகையிலாவது நீ பேசினதுக்கு காரணமா? சொல்லு….? பொறுத்து போனேன் போனேன்னு அடிக்கடி சொல்றே…. அப்படியா பீல் பண்றே….? அப்புறம் ஏன் இப்போ சமாதானம் செய்ய வர்றே…. தேவையில்லை…. ஜஸ்ட் லீவ்…. இனி எதையும் பேசி என்னை கோபப்படுத்தாதே….” என்று சொல்லி வேகமாக விலகி சென்று விட்டான் ராஜேஷ். அவள் அழுவதும் அவனுக்கு பிடிக்கவில்லை அதே சமயம், அவள் பேசியது அவன் நெஞ்சை அறுக்க, முற்றிலும் விலகிட வேண்டும் என்றே இருந்தது அவனுக்கு. அதனால் எதையும் கண்டு கொள்ளாமல் அவளை விட்டு சென்றே விட்டான்!
வாவ்! கையை தட்டி ஆர்ப்பாட்டம் செய்யாதது தான் குறை அவ்வளவு உற்சாகம் பார்வதிக்கு. இன்றே எப்படியும் ராஜேஷை சமாதானம் செய்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
இரவு, ராஜேஷின் வீடு
வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டு இருந்தார்கள் அனைவரும். வாசலில் காலிங் பெல் அடிக்க, யாரும் வருவதாக சொல்லவில்லையே, யாராக இருக்கும் என்றபடி மீனா கதவை திறக்க, அங்கே நின்று இருந்த பார்வதியையும் சாய்யையும் கண்டு,
“யாருங்க நீங்க?” குழப்பமாக கேட்டார்.
“ராஜேஷ் கூட வேலை செய்றோம், ராஜேஷ் இருக்கானா….?” கொஞ்சி கொஞ்சி பார்வதி பேச, அவள் தமிழ் பெண்ணில்லை என்று புரிந்து கொண்ட மீனா, மகனை அழைத்தார்.
அவனுமே அந்நேரத்தில் அவர்களை அவன் வீட்டில் எதிர்பார்க்காதால் திகைத்து விழித்தான். அதை விட பார்வதியின் வருகை அவனுக்கு பதட்டத்தை கொடுத்தது. தங்கை வீட்டில் இருக்கும் போது இதென்ன இவள் இப்படி செய்கிறாள்….? ஆனால் உள்ளே அழைக்காமல் இருக்க முடியாது என்பதால் அவர்களை அழைத்து சென்றான்.
அவர்கள் நால்வருடன் இவர்கள் இரண்டு பேரும் சேர், அந்த சிறிய ஹாலில் வெக்கை கூடியது. பார்வதி கண்களை வேகமாக சூழட்டினாள். அவனின் பொருளாதாரம் சிரமம் என்று தெரிந்தாலும் நேரில் காண்பது என்பது வேறு அல்லவா….? சிறிய டேபிள் ஒன்று அங்கே ஓரமாக இருக்க, இவர்கள் நால்வரும் கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அடையாளமாக இருந்த பாத்திரத்தை எல்லாம் பார்த்த பார்வதிக்கு அவ்வளவு திருப்தி இல்லை! இருந்தும் எதையும் முகத்தில் காட்டி கொள்ளாமல்,
“வெளியே போகலாமா?” என்றாள் ராஜேஷிடம்.
“என்ன மா? எதுனா பிரச்சனை யா….?” வேகமாக கேட்டார் மீனா.
“இல்லை இல்லை ஆன்ட்டி, இவன் என் பிரண்ட் சாய், இவனுக்கு தமிழ் தெரியாது…. இந்த பக்கமா ஒரு வேலையா வந்தோம், அது முடியிறதில கொஞ்சம் பிராப்ளம், அதான் ராஜேஷ் கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு….”
“என்ன, என்ன வேலை? என்ன ஹெல்ப்….?” மீனா எவ்வித தயக்கமும் இல்லாமல் அவளிடம் கேட்க, அவரின் அந்த தலையீடு அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அம்மா! மீனா…. என சுகுணாவும் செந்திலும் பார்வதியின் முகம் போன போக்கை பார்த்து அவரை அழைக்க,
“இருங்கங்க, ராத்திரியில் ஒரு பொண்ணு வந்து இருக்கு…. கூட இருக்க பையன் வாயே திறக்கலை, நம்ம பிள்ளையை கூப்பிடுறாங்க…. நாளைக்கு ஏதாவது ஒன்னுனா யார் பதில் சொல்றது….?” கொஞ்சமும் அசரவில்லை அவர்.
“அம்மா என்கூட வேலை பார்க்கிறவங்க தான்…. அவனுக்கு தமிழ் தெரியாது…. நீ வேற….” என்றவன், அதிருப்தியை காட்டும் அம்மாவை கண்டு கொள்ளாமல் அவர்களுடன் கிளம்பினான்.
வெளியில் நின்றிருந்த காரை நோக்கி நடக்கையில்,
“நீங்க கிளம்புங்க, எதுனாலும் நாளைக்கு ஆபிஸில் பேசிக்கலாம்….” என்றான் ராஜேஷ் கடுமையாக.
“இல்லை…. நம்மளுக்குள்ள இருக்க இந்த வருத்தம் சரியாக போகமாட்டேன் நான்….” பிடிவாதம் பிடித்தாள் பார்வதி.
“இதுக்கு ஆரம்பமே நீ தான்…. இப்போ மட்டும் என்ன ஞனோதயம்? அஸ்வினி உனக்கு இப்போ ப்ராப்ளம் இல்லையா….?” நக்கலாக கேட்டான் ராஜேஷ்.
அவர்களுக்குள் சண்டை வந்தது தெரியாதது போலவே,
“ப்ளீஸ் ராஜேஷ், உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்னு எனக்கு நேத்தே தூக்கமே இல்லை…. ஸாரி ஸாரி…. உன் மனசு தான் எனக்கு முக்கியம்…. நீ எப்படி வேணா இரு…. ஆனா எனக்கு தான் உன் மேல் உரிமை” அவனை நெருங்கி கையை கோர்த்து கொண்டு கெஞ்சினாள் பார்வதி.
இருந்த கோபம், கடுப்பிற்கு பார்வதியின் சரண்டர் சட்டென்று ஒரு இதத்தை தந்தது அவனுக்கு. அவளின் மாஸ்டர் பிளான் மைண்ட் பத்தி எதுவும் தெரியாதவன், தான் அவள் எதிர்பார்ப்பது போல் இல்லையென்றாலும் தனக்காக இவ்வளவு பார்க்கிறாளே என்ற எண்ணத்தில்,
“சரி சொல்லிட்டேல்ல…. கிளம்பு….” என்றான் கொஞ்சம் சூடு தணிந்தவனாக.
“இல்லை…. உன் குரலில் இன்னும் பழைய மாதிரி வரலை, நீ நார்மலா பேசு….”
குறைந்த சூடு மீண்டும் ஏற,
“என்னை என்ன நினைச்சே….? நீ வான்னா வரவும், போன்னா போகவும் உன் வீட்டு நாய்க்குட்டினா….? உன் இஷ்டத்துக்கு வந்து கிட்ட தட்ட என்னை மிரட்டி ப்ரோபோஸ் பண்ணே…. நானும் நமக்காக ஒரு பொண்ணு இப்படி பீல் பண்ணுதேன்னு சரினு சொன்னேன்…. அப்புறமும் உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி பார்க்கிறே…. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு பார்வதி…. இப்போ முதல்ல நீ கிளம்பு…. யாரை கேட்டு நீ என் வீடு வரை வந்தே….?”
எப்போதும் பார்வதியின் பிடிவாதத்திற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஓரளவு வளைந்து கொடுக்கும் ராஜேஷ் இம்முறை மொத்தமாக எகிறி விட அவனை புதிதாக பார்த்தாள் பார்வதி.
“அப்போ உனக்கு என் மேல் ஆசை இல்லையா ராஜேஷ்….? இப்படி பேசுறே….? உன்னை சமாதானம் செய்ய தானே வந்தேன்….”
“சண்டையும் உன்னால் தான்! தேவை இல்லாம என் நிம்மதி போச்சு! இதில நீ நினைச்சு நினைச்சு சண்டை போட்டு, சமாதானம் செய்வே…. நான் அதை ஏத்துக்கணுமா….? எனக்குனு ஒரு மனசு இருக்கு…. அதிலும் உணர்வுகள் இருக்கும்னு உனக்கு தோணாதா….?
“ஸாரி ராஜேஷ்! நான் கிளம்புறேன்….” என்றவள் “வா சாய் போகலாம்….” என்று வேகமாக கிளம்பி விட்டாள்.
“முதல்ல அதை செய்….!” என்றவனும் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்கு திரும்ப வந்தவனிடம் நை நை என்று கேள்வியாக கேட்டு தள்ளினார் மீனா.
“என்ன மா….? இப்போ உனக்கு என்ன தெரியணும்….?”
“என்ன பிரச்சனை….? அந்த பொண்ணு ஏன் இந்த நேரத்தில் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கு….?”
பல விஷயத்தில் அவனை டென்ஷன் ஏற்றும் அம்மாவை அன்று டென்ஷன் செய்யலாம் என்று நினைத்த ராஜேஷிற்கு நிச்சயம் அன்று நாக்கில் சனி பகவான் இருந்து இருப்பார் போல்,
“ஹான்…. என்னை லவ் பண்றா…. என்னை பார்க்கணும் போல் இருந்துச்சாம், அதான் வந்தா….” என்றான் குறும்பாக.
“ஏண்டா, வீட்டிலே வயசு பொண்ணு இருக்கும் போது இப்படி சொல்றியே…. வெக்கமா இல்லை….?”
“அவ தான் லவ் பண்றா சொன்னேன்…. நான் பண்றேன்னு சொன்னனேனா….?”
“ஏண்டி அவன் சும்மா சொல்றான்…. உன்கிட்ட வம்பு பண்றான்…. உண்மையா லவ் பண்ணா தைரியமா வீட்டிற்கு எல்லாம் இப்படி வர மாட்டாங்க …. நாம அந்த பெண்ணை தப்பா நினைக்க கூடாதுனு நினைக்கும் தானே….” பார்வதி பற்றியும், இப்போதைய காலம் பற்றியும் தெரியாமல் அப்பாவியாக பேசினார் செந்தில்.
“அப்பா, இப்போ இருக்கவங்களை பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியாது….பசங்களை விட பொண்ணுங்களுக்கு தான் இப்போ தைரியம் ஜாஸ்தி….” சிரித்தபடி சொன்னாள் சுகுணா.
“பெரிய பணக்கார வீட்டு பொண்ணு மா…. ஒரே பொண்ணு…. நான் வீட்டோட மாப்பிள்ளையா போனேன்னு வை…. நம்ம லைப் செட்டில்…. யோசிச்சு சொல்லு….” என்றான் மீண்டும் ராஜேஷ் சிரிப்புடன்.
“பொண்ணு நல்லா தான் இருக்கு…. ஆனா உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு என்ன வேணா பண்ணிக்க…. இப்போ ஒழுங்கா தலைப்பிள்ளையா பொறுப்பா இரு…. வீட்டோட மாப்பிள்ளையா போற மூஞ்சியை பாரு, போடா, போய் படு….”
உள்ளுக்குள் கொஞ்சம் பதைத்தாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் பேசினார் மீனா. விளையாட்டாக பேசும் அவனிடம் மேற்கொண்டு எதையும் கேட்க விரும்பவில்லை அவர். கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்! அப்போது பார்த்து கொள்ளலாம் என்று விட்டார்.
“அம்மா அப்போ நீ லவ்வுக்கு ஓகே சொல்றே, அப்படி தானே….?”
“என்ன லவ்வா….?” இப்போது மீனா அலற,
“நான் நினைச்சேன் அம்மா…. பாருங்க அப்பா இது தான் உண்மை….” சுகுணாவும் சேர்ந்து கொள்ள,
“என்னடா இது….?” செந்தில் அதட்ட,
“சும்மா பா….” ராஜேஷ் சமாளிக்க பார்க்க,
“அண்ணா உன் லவ்வை பத்தி சொல்லேன்….” ஆர்வமாக கேட்டாள் சுகுணா.
“ஏய், வாயை மூடுடி….” என்று மகளிடம் கத்தியவர்,
“இனிமே இதை பத்தி யாரும் இங்க பேச கூடாது…. இங்க பாரு ராஜேஷ், உனக்கு நிறைய கடமை இருக்கு, ஏதாவது தப்பா போச்சு, நல்லா இருக்காது டா…. பார்த்துக்கோ….இப்போ நான் இதை பத்தி எதுவும் பேச விரும்பலை….” என்று கறாராக சொல்லி சென்றார் மீனா.
விளையாட்டாக ஆரம்பித்து வினையாக போனது போல் ஆனாலும், வீட்டினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பதால் ராஜேஷும் இந்த விஷயத்தை எளிதாக எடுத்து கொண்டான். பின்னாளில் இது அவன் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் சிக்கலை உண்டு பண்ணும் என்று தெரிந்திருந்தால் இப்போது இதை சொல்லி இருக்கவே மாட்டான் ராஜேஷ்.