கரம் விரித்தாய் என் வரமே – 16
நிமிடங்கள் நீள, முத்தத்தால் யுத்தம் செய்தவன் கரங்களில் தொய்ந்தாள் பேதை! அவளின் நிலை புரிய, சட்டென்று தன்னை மீட்டு கொண்டு, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து அவளோடு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான். அமர்ந்தவனை அணைத்து கொண்டாள் அஸ்வினி.
“ஏண்டி இப்படி பண்ணே….?” ஆதங்கமாக கேட்டான் ராஜேஷ்.
“என்ன டா….?” தான் நெருக்கமாக நடந்து கொண்டதை சொல்கிறானோ என்ற சங்கடத்தில் அவன் கண்ணை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு கேட்டாள் அஸ்வினி.
“என்னை பார்!” என்றவன் அவள் நாடியை பற்றி அவனை பார்க்க வைத்து,
“இது லவ் தானே….?” என்றான்.
அவள் கண்ணீருடன் தலையசைக்க, “எப்போ இருந்து….?” என்றான்.
“ரெண்டு வருஷமா!” என்றாள் மெதுவாக.
“இவ்வளவு நாள் இல்லாம இப்போ உன் காதலை காட்டணும் ஏன் முடிவு பண்ணே….? என்னை பைத்தியம் ஆக்கவாடி….?என்றான் காட்டமாக.
“என்னடா இப்படி பேசுற….?”
“வேற எப்படி பேச….? இன்னொரு பொண்ணுகிட்டே லவ்னு கமிட் பண்ண நான் உன்கிட்ட என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுது தானே….? ஆனா நீ இப்படி நெருங்கி வரும் போது என்னால உன்னை ஒதுக்கவும் முடியலை, வெளிப்படையா சொல்லணும்னா எனக்கும் ஆசை தான் வருது! அதே சமயம் அசிங்கமாவும் இருக்குடி….!! ஏண்டா இப்படி கேவலமா இருக்கேனு மனசாட்சி துப்புது!” அவமானத்துடன் பேசினான் ராஜேஷ்.
அவனை தாவி அணைத்து கொண்டவள், “உன் மேல் எந்த தப்பும் இல்லை டா…. ப்ளீஸ் அப்படி எல்லாம் பீல் பண்ணாதே…. நான் வேணா பழைய மாதிரி தள்ளியே இருந்துகிறேன்….”
“அறைஞ்சேன்னு வை….” பல்லை கடித்து ஆத்திரத்தை அடக்கினான் ராஜேஷ்.
“என்னை மன்னிச்சுடு டா, என் லவ்வை சொல்றதுக்கு பர்ஸ்ட் எனக்கு தைரியமே இல்லை! உனக்கு என் மேல் அப்படி ஒரு பீலிங் இல்லைனு புரிஞ்சுது! சோ, நீ நோ சொல்லிட்டா உன் ப்ரண்ட்ஷிப் கட் ஆகிடுமே…. அட்லீஸ்ட் அதுவாவது இருக்கட்டும் நினைச்சேன்…. அப்புறம் சொல்லிடலாம்னு முடிவு எடுத்தப்போ அம்மா….” என்று வார்த்தையை முடிக்க முடியாமல் அழுதாள் அஸ்வினி.
“அழாதே அஸ்வினி….” என்று அவளை ஆறுதல் படுத்தியவன், “பார்வதி கிட்டேயே எனக்கு பீலிங்ஸ் எதுவும் இல்லாமலே, அந்த பொண்ணு என்னை இப்படி விரும்புதேனு தான் ஒத்துகிட்டேன்…. உன் மனசில நானிருக்கேன்னு தெரிஞ்சு இருந்தா எப்படிடி உன்னை மிஸ் பண்ணுவேன்…. உன்னை எப்படி வருத்தப்பட விடுவேன்….? என்ன…. முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, நான் பார்வதிகிட்டே கமிட் ஆகாம இருந்திருப்பேன்….” பெருமூச்சு விட்டான் ராஜேஷ். அதோடு விடாமல்,
“சொல்லு, இவ்ளோ நாள் என்னை இன்னொரு பொண்ணோட வேடிக்கை பார்த்துட்டு இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் என்கிட்ட உன் லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ண நினைச்சே….?”
உண்மையை சொன்னால் அவனை பற்றி அவர்கள் பேசியதை சொல்ல வேண்டும், அது அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்பதால் அதை எல்லாம் பேச வேண்டாம் என்று,
“நீ தனியா இருந்தவுடனே என்னையும் மீறி வெளியே வந்துடுச்சு டா…. பார்வதி இருந்தா கண்ட்ரோல் பண்ணி இருப்பேன்….” என்றாள் அனைத்தையும் மறைத்து.
“அவக்கிட்டே இந்த விஷயத்தை எப்படி சொல்றதுனு யோசிச்சாவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு! சிக்கலோ சிக்கல்!!!” என்றான் ராஜேஷ் இயலாமையுடன்.
“நீ அதை அடிக்கடி கமிட்மெண்ட்னு தானே சொல்றே…. லவ் இல்லாம கமிட்மெண்ட் மெண்டாலிட்டி கஷ்டம் தானே….? அதையே சொல்லு….”
“ஆறு மாசம் கழிச்சு தான் அது உனக்கு புரிஞ்சுதானு அவ கேட்டா என்ன சொல்வேன்….?”
“நம்மளை பத்தி சொல்லு!”
“நோ! ப்ளீஸ் அஸ்வினி, நான் பார்வதி கிட்டே நோ சொன்ன அப்புறமும் கொஞ்ச நாள் கழிச்சு நாம நம்ம விஷயத்தை வெளியே சொல்லலாம்…. எனக்கே ஒரு மாதிரி இருக்கும் போது, மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க….?”
“அப்புறம் எப்படி நோ சொல்லுவே….?”
“யோசிக்கிறேன்….!”
“அதுக்கு அப்புறம், என்கிட்டயும் பீலிங்ஸ் இல்லாம எனக்காக கமிட் பண்ணிக்க போறியா ராஜேஷ்….?” அவனை அவன் கொஞ்சமாவது புரிந்து கொள்ளட்டும் என்று பேச்சு கொடுத்தாள் அஸ்வினி.
“ம்ப்ச்…. என்ன கேள்விடி இது?” முகத்தை சுளித்தான் ராஜேஷ்.
“இல்லை நீ சொன்னதில் இருந்து உன் மனசில என்ன இருக்குனு எனக்கு புரியலை டா அதான் கேட்கிறேன்…. எனக்காக நீ இதை செய்றியோனு….”
“செஞ்சா என்ன தப்பு? யாரோ ஒரு பெண்ணுக்கு செஞ்ச நான், உனக்காக செய்ய மாட்டேனா….?”
அதற்கு மேல் உடைத்து கேட்க முடியாமல் தயங்கினாள் அஸ்வினி. எதுவும் இல்லாமலா எனக்கு முத்தம் கொடுக்கிறாய்? ஒரே நாளில் உனக்கு ஆசையாக இருக்கிறது என்று சொல்கிறாய்….? மனதோடு நினைத்து கொண்டாள் அஸ்வினி.
“என்ன முகம் சீரியஸா இருக்கு…. எதுவா இருந்தாலும் கேளு….!”
“என் விஷயத்தில் உன் மனசில் எந்த வித்தியாசமும் பீல் பண்ணலையா நீ?”
அவளின் கேள்வியில் அவன் முகம் மிருதுவானது! அவளை பார்த்து புன்னகைத்தவன்,
இங்க என் பக்கத்தில் வா பூனைக்குட்டி என்றவன், அவள் வரவும், அவளை அணைத்துக் கொண்டு, “நேற்றில் இருந்து எப்போதும் இதே மாதிரி உன்னை கட்டிப்பிடிச்சு ஏதாவது கசமுசா பண்ணனும்னு தோணிக்கிட்டே இருக்கு…. இதுக்கு முன்னாடி யாரை பார்த்தும் இப்படி இருந்தது இல்லை…. ஏன் உன்கிட்டேயே அப்படி இருந்தது இல்லை!” என்றவன், அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து ஆழ மூச்செடுத்தான். அவன் கைகள் தாரளமாக அவள் மேனியில் எந்த தயக்கமும் இன்றி அத்து மீறியது.
“நான் உன்கிட்ட க்ளோஸா வந்ததால் நீயும் அப்படி பீல் பண்றியோ….?” அவனுக்கு எப்படியும் அவனை உணர்த்தி விடும் வேகத்தில் பேசினாள் அஸ்வினி.
“இருக்கலாம், உன் மேல் ஆல்ரெடி எனக்கு ஸ்பெஷல் பாண்ட், அதுனால இந்த நெருக்கம் ரொம்ப இயல்பா வருது போல் எனக்கு….! ஏண்டி இதுக்கு சந்தோஷப்படாம என்னை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கிறே….?”
சரி இவனுக்கு பல்ப் எரிய கொஞ்சம் நாள் டைம் கொடுப்போம்…. பார்வதி பிரச்சனை முதல்ல தீரட்டும் என்று அமைதியானாள் அஸ்வினி.
அன்று மாலை வரை அஸ்வினியுடன் இருந்தவன் மாலையில் வீட்டிற்கு கிளம்பினான். கிளம்பும் வரை அஸ்வினி தவிர எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்தவனுக்கு கிளம்பிய பின் பல சிந்தனை வந்து அவனை தொல்லை செய்தது.
ஒரு பெண்ணிடம் கமிட் செய்து கொண்ட பின் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக பழகுவது அந்த பெண்ணிற்கு செய்யும் பச்சை துரோகம்! உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று மனசாட்சி குரல் கொடுக்க, தவித்து போனான் ராஜேஷ். அவனின் இன்னொரு மனமோ, பாரவதியிடம் நோ சொல்லிவிடலாம் என்பது உனக்கு எவ்வளவு ஆசுவாசத்தை கொடுக்கிறது…. அதை நினைத்து பார்…. இப்படி இருக்கும் நிலையில் நீ எப்படி அவளுடன் நீண்ட கால வாழ முடியும்? என்று கேள்வி கேட்டது.
பின் அவனே, இதுவரை நான் என் மனதிற்கு உண்மையாக தான் நடந்து கொண்டேன்…. நான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை! பார்வதியிடம் விரைவில் ஏதாவது காரணம் கூறி விலகி விடுவேன் என்று அவனே அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.
“விடுவாளா பார்வதி?”
****************
திங்கள் காலை, ஊரில் இருந்து நேரடியாக அலுவலகம் வந்திருந்தவள், காலை பிரேக் நேரத்தில் ராஜேஷை தேடி வந்தாள். ஒரு வாரம் முன்பு அவள் மேல் கோபமாக இருந்தவன் அல்லவா? இப்போது இருக்கும் பிரச்சனையில் அது மறந்து போய் இருந்தது அவனுக்கு. ஆனால் குற்ற உணர்ச்சியில் அமைதியாக இருந்தான்!
“இன்னுமா என் மேல் கோபம் போகலை உனக்கு?” என்ன ராஜேஷ்….? கொஞ்சினாள் பார்வதி. அவள் சிணுங்கியதில் பக்கத்தில் இருந்தவர் எல்லாம் நமுட்டு சிரிப்பு சிரிக்க, ஒரு மாதரியாகி விட்டது ராஜேஷிற்கு.
“ஆபிஸ் ஹவர்ஸ்ல இதெல்லாம் பேச வேண்டாம், நீ போ அப்புறம் பேசலாம்!” பட்டும் படாமல் பதில் சொன்னான் ராஜேஷ். அது நாள் வரை தோன்றாது அன்று தோன்றியது…. இந்த பொண்ணு கொஞ்சம் சாதாரணமா பேசினா என்ன?
**************
மாலையில் பார்வதியுடன் பேசிக் கொண்டு இருந்த ராஜேஷை பார்த்தபடி வீட்டிற்கு கிளம்பினாள் அஸ்வினி. “இனி கொஞ்ச நாளைக்கு ஆபிஸில் என் பக்கத்திலேயே வந்துடாதே பூனைக்குட்டி, என் பார்வையும் சும்மா இருக்காது! கையும் சும்மா இருக்காது….!” என்று சொல்லி இருந்தான் ராஜேஷ். அதனால் அவள் விலகி செல்ல, பார்வதி அவள் தனியே செல்வதை திருப்தியாக பார்த்தாள்.
“சொல்லு ராஜேஷ், இன்னுமா நீ கோபமா இருக்கே….?”
“இல்லை….”
“அப்புறம் பேசவே மாட்டேங்கிற….?”
“எப்போதும் நீ தான் பேசுவே…. நான் கேட்பேன்….” யோசித்து பார்த்தபடி சொன்னான் ராஜேஷ். பாதி நேரம் அவள் எப்போதடா பேசி முடிப்பாள் என்று தான் இருப்பான். அவன் கவனம் அவள் பேச்சில் இருப்பது மிகவும் குறைவு…. அவளுடன் அவன் இருந்த விதம் எல்லாம் அவனுக்கு இப்போது தான் புரிந்தது. கடவுளே வழக்கம் போல் என் ஏஞ்சல் என்னை காப்பத்தி விட்ருச்சு! நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“ம்ம்…. கரெக்ட் தான்! உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்….!”
“என்ன….?”
“எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை ஒன்னு பார்த்து வைச்சுக்கிட்டு ரொம்ப போர்ஸ் பண்றாங்க! நம்மளை பத்தி சொன்னேன். ரொம்ப பேசின அப்புறம் உன் பேரண்ட்ஸோட உன்னை மீட் பண்ணனும்னு எங்க அப்பா சொல்றார்! எங்க அப்பாவால இப்போ வரமுடியாது, நாம எல்லாரும் எங்க ஊருக்கு போயிட்டு வரலாமா….?”
“ஹேய், எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா! இப்போ என்னால என் கல்யாணம் பத்தி எல்லாம் எங்க வீட்டில் பேச முடியாது! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ….எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு…. இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் தானே….?”
“நானும் எங்க அப்பா இவ்ளோ பிடிவாதம் பிடிப்பார்னு எதிர்பார்க்கலை ராஜேஷ்! வேற வழியே இல்லை!”
“ஸாரி பார்வதி! நான் வேணா உன் பேரண்ட்ஸ் பார்க்க வரேன்! ஆனா என்னால் என் பேரண்ட்ஸை இதில் இன்வால்வ் பண்ண முடியாது! ஐயம் வெரி ஸாரி” என்றான் ராஜேஷ்.
மனதினில் போய் பார்த்து விட்டு அவள் அப்பாவிடம் பார்வதியை விட்டு விலகி கொள்வதாக சொல்லி விடலாம் என்று நினைத்தான் ராஜேஷ்.
ஆனால் பார்வதி வேறு சொன்னாள். “இல்லை இல்லை ராஜேஷ், நீங்க தனியா எல்லாம் வர வேண்டாம்! எங்க அப்பா நிச்சயம் ஒத்துக்க மாட்டார்.”
“அப்போ வேற என்ன பண்றது?”
“நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமா போய் எங்க வீட்டில் நிற்போம்! உங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம்…. ஓகே வா…?”
“என்ன….? ரிஜிஸ்டர் மேரேஜா….?” அதிர்ந்து விட்டான் ராஜேஷ்.