கரம் விரித்தாய் என் வரமே -17
“ஏன் இவ்ளோ அதிர்ச்சி ஆகுறே ராஜேஷ்? பேரண்ட்ஸ் ஒத்துக்கலைனா எல்லா லவ்வர்ஸும் இதை தானே செய்வாங்க?”
“கல்யாணம் அவ்ளோ சின்ன விஷயமா உனக்கு? அதுவும் எங்க வீட்டுக்கு தெரியாம நான் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்னு எதிர்பார்க்கிறே….?”
“உன் பேரண்ட்ஸுக்கு தெரியக் கூடாதுனு நீ நினைச்சா அப்பறம் வேற என்ன பண்றது ராஜேஷ்?”
“இங்க பார் பார்வதி, இப்போ கல்யாணம் பண்ணிக்கிற நிலைமை இல்லை எனக்கு…. நீ என்கிட்ட ப்ரோபோஸ் பண்ணின அப்போவே நான் எல்லாத்தையும் க்ளியரா சொன்னேன்…. நீயும் ஒத்துக்கிட்டே…. இப்போ வந்து கல்யாணம் பண்ணிக்கோன்னா எப்படி…. ஸாரி பார்வதி…. என்னால் கண்டிப்பா முடியாது….”
“உன்னை கல்யாண்ம் பண்ணிக்கணும்னு தானே கேட்கிறேன்…. நீ எனக்காக எதுவும் பண்ண மாட்டியா ராஜேஷ்….?”
“அதுக்காக தான் நான் மட்டும் வேணா உங்க வீட்டில் பேசி பார்க்கிறேன்னு சொன்னேன்…. அது கூட, உன்னை பத்தி யோசிச்சு உன்கூட கமிட் பண்ணிக்கிட்ட என் முட்டாள்த்தனத்திற்காக தான்!” என்றான் சுள்ளென்று.
“என்ன கமிட்மெண்ட்டா? முட்டாள்தனமா….? என்ன ராஜேஷ் வித்தியாசமா பேசுறே….?”
“நான் கரெக்ட்டா தான் பேசுறேன் பார்வதி. நீ சாப்பிடாம இருக்கே, என் மேல் உனக்கு இவ்ளோ பீல் லான்னு, உன்னை பத்தி யோசிச்சேன்னே தவிர என்னை பத்தி நினைக்காம போய்ட்டேன்! அப்படி யோசிச்சு இருந்தா உன்கிட்ட ஓக்கே சொல்லி இருக்கவே மாட்டேன்! அதனால் தான் இப்போ வரை எனக்கு இது ரிலேஷன்ஷிப்பா தெரியலை, லவ்வும் இல்லை, கமிட்மெண்ட்ன்னு தான் தோணுது!” என்றான் தெளிவாக.
“ஓ!” என்றவளின் குரலில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அதே சமயம் அதை தொடராமல்,
“சரி நீயே சொல்லு! என்ன தான் பண்ணலாம் இப்போ?” என்றாள்.
அவளின் ஏமாற்றம் தெரிந்தாலும், இனி எந்த முட்டாள்தனமான செய்கையும் செய்ய கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்ததால்,
“நீ உங்க வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ பார்வதி! நமக்குள்ள சரியா வராது! ஸாரி….” என்று ஸ்ட்ரைட் பார்வேர்ட்டாக சொல்லி விட்டான் பட்டென்று.
“ராஜேஷ்!” என்றாள் அதிர்ந்து. உண்மையில் அவனிடம் இருந்து அவள் இதை எதிர்பார்க்கவே இல்லை! ஏதாவது குழப்புவான், சமாளிப்போம் என்று நினைத்தாள்.
“இதை முன்னாடியே செஞ்சு இருக்கணும்! ஸாரி அப்போ நிறைய விஷயம் புரியலை….” என்றான்.
“ஏன் ராஜேஷ்? ஏன் இப்படி….? இப்போ என்ன…. நான் கல்யாணத்தை பத்தி பேச கூடாது! அவ்ளோ தானே….ஓக்கே பேசலை…. ப்ரீயா விடு…. நான் எங்க அப்பாவை சமாளிச்சுக்கிறேன்…. ஆனா நோ பிரேக் அப்…. ப்ளீஸ் என்னால அது மட்டும் முடியாது…. ப்ளீஸ்…. நீ நமக்குள்ள இருக்கிறதுக்கு என்ன பேர் வேணா வைச்சுக்க, ஐ டோன்ட் கேர்! ஆனா நீ எனக்குத்தான்!” என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக விலகி நடந்தாள்.
சொல்லிட்டோம் பார்வதி கிட்டே அப்பாடா! என்று ராஜேஷ் அடைந்த நிம்மதி அடுத்த ஒரு நிமிடத்தில் தகர்ந்துவிட்டது! தலையில் கை வைத்து விட்டான் ராஜேஷ்! அய்யோ…. என்ன இவ இப்படி பேசுறா….? இவளை எப்படி சமாளிக்கிறது?
***************
அந்த வாரம் முழுக்க பார்வதியே ராஜேஷை தவிர்த்தாள். எங்கே அவனுடன் பேசினால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று அவனை தவிர்த்தாள். ராஜேஷ் விட்டது தொல்லை என்று இருந்தான். அஸ்வினிக்கு தான் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ராஜேஷிடம் போனில் கேட்டதற்கு, அவன்,
“நான் வேணாம்னு சொல்லிட்டேன், ஆனா அவ இன்னும் க்ளோஷர் கொடுக்கலை! நான் பார்த்துக்கிறேன்…. நீ கவலைப்படாதே!” என்று முடித்து கொண்டான்.
*****************
அன்று தெய்வா, ஷிவாவின் திருமணம்! வடபழனியில் பெரிய திருமண மண்டபத்தில் திருமணம். ஷிவா, தெய்வா இருவருமே பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.
பார்ட்டிக்கு கழட்டி விட்டது போல் திருமணத்திற்கு செய்ய முடியாமல் பார்வதிக்கு அழைப்பு வைத்திருந்தாள் தெய்வா.
இம்முறை ஊரில் இருந்து வந்த பிறகு பார்வதியும் அஸ்வினியும் பேசுவது இல்லை! ராஜேஷ் அவளிடம் பேசாத கோபத்தை தன்னிடம் காட்டுகிறாள் போல் என்று தவறாக சந்தோஷப்பட்டுக் கொண்டாள் பார்வதி.
அஸ்வினிக்கு பார்வதியால் தான் அந்த சாய் வந்து இவளிடம் பேசினான், அதனாலேயே அவளிடம் பேசுவது இல்லை.
இப்போது திருமண மண்டபத்தில், மதனிடம்,
“மச்சான், பார்வதி கிட்டே என்னை தனியா மட்டும் விட்றாதே…. நான் அந்த சாப்டரை க்ளோஸ் பண்ணிட்டேன்…. ஆனா அவ ஒத்துக்க மாட்டேங்கிறா….” என்றான் ராஜேஷ்.
“ஹேய் எப்போ டா….?”
ஒரு வாரம் ஆச்சு டா….!”
மனதிற்குள் பரவாயில்லை தெளிஞ்சுட்டான் போல் பையன் என்று நினைத்து கொண்டு, “ஏண்டா?” என்றான்.
அதற்குள் ஒரு நண்பன் வர, அந்த பேச்சு நின்றது. பின் பார்வதியும் வந்து விட, ராஜேஷ் கேட்டு கொண்டதை போல் மதன் அவனுடனேயே இருந்தான். ராஜேஷின் அருகில் அமர்ந்தாலும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு தலையசைப்புடன் நிறுத்தி கொண்டான் ராஜேஷ். கூட்டத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று பார்வதியும் அமைதியாக இருந்தாள்.
சற்று நேரத்தில், அதுவரையில் தெய்வாவுடன் அறையில் இருந்த அஸ்வினி இப்போது இவர்களை தேடி வந்தாள்.
அவள் தூரமாக வரும் போதே அவளை கவனித்து விட்டான் ராஜேஷ். இப்போதெல்லாம் அவளை கண்டதுமே இவன் இதயம் துள்ள ஆரம்பித்து விடுகிறது…. மெல்லமாக நெஞ்சை நீவிக் கொண்டவன், புடவையில் இருந்த அவளை பார்வையாலே ஸ்கேன் செய்தான். ஊடுருவ முடிந்தவரை கவனித்து, ரசித்து கிறங்கினான். அவளை மிக அருகாமையில் பார்த்தாலோ, அவளுடனான நெருக்கமான தருணங்களை நினைத்தாலோ தான் கிளர்ந்து போவது உணர்ந்து சிரித்து கொண்டான் ராஜேஷ்.
பூனைக்குட்டி என்னை கெடுத்து வைச்சுட்டா…. கொஞ்சியது அவன் மனம் அவளை. இவளை மிஸ் செய்து இருந்தால் இது போன்ற உணர்வுகள் எனக்கு தெரியாமலே போய் இருக்கும்…. இது தான் காதலா….? இப்படி தான் உணர்வோமோ….? இப்போது தான் தன்னை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் ராஜேஷ்.
அவர்களை நெருங்கிய அஸ்வினி, “எப்போ வந்தீங்க ரெண்டு பேரும்?” என்றவள் அங்கிருந்த பார்வதியை கண்டுகொள்ளாமல் ஆண்கள் இருவரையும் மட்டும் கேட்டாள். அவள் வரவும், மதன் எழுந்து அவளுக்கு ராஜேஷின் அருகில் இடம் கொடுத்தான். கேஷுவலாக ராஜேஷின் அருகில் அமர்ந்தவளிடம்,
“சாப்பிட்டியா?” என்றான் ராஜேஷ். மற்றவர்கள் கவனத்தை கவராமல் ஒரு முறை அவள் கையை பற்றி விடுவித்தான். கொஞ்சமாக முகம் சிவந்தவள், தன்னை கட்டுபடுத்திக் கொண்டு,
“ம்ம்…. ஆச்சு! நீங்க? ஷிவாவை போய் பார்த்தீங்களா?” என கேட்டாள். சாதாரணமாக இருக்க இருவருமே முயற்சி செய்து வெற்றி கண்டனர். அவர்கள் மூவரும் சகஜமாக பேசி கொள்ள, பார்வதிக்குள் கோபம் கனன்றது. இவர்களுக்குள் சண்டையில்லையா? ஏமாற்றமாக உணர்ந்தாள் பார்வதி.
அதை விட அவர்களுக்குள் இன்று தெரிந்த உரிமை, நெருக்கம் அவளை மிகவும் டென்ஷன் செய்தது. வாயால் பேசுவதையும் மீறி இருவர் கண்களிலும் இருந்த உணர்வு, அது என்ன….? என்று தெளிவாக அவளுக்கு புரியவில்லை. எப்போதுமே அவர்கள் நெருக்கம் தான்! ஆனால் நட்புக்கும் காதலுக்கும் இருந்த எல்லை கோட்டை அவர்கள் தாண்டியதின் விளைவு அது என்று அவளுக்கு எப்படி தெரியும்? குழம்பி போனாள் பார்வதி.
அது வரை பொறுமையை கடைபிடித்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. ராஜேஷை தன் பக்கம் திரும்ப சொன்னவள்,
நான் இன்னும் சாப்பிடலை, இங்க எனக்கு யாரையுமே தெரியாது! பிரண்ட்ஸ் நம்பி தானே வந்தேன் என்றாள் முகத்தை சுருக்கி.
மதனிடம் கண் காட்டினான் ராஜேஷ்.
“வா பார்வதி! நான் அழைச்சிட்டு போறேன் சாப்பிட….” என்றான் மதன்.
நான் அவனுடன் போகவா கேட்டேன்? கடுப்பாக ராஜேஷை பார்த்தாள் பார்வதி.
“அவனும் உனக்கு பிரண்ட் தானே பார்வதி…. போயிட்டு வா” என்றான் ராஜேஷ் அமைதியாக.
“எனக்கு பசிக்கலை, ஸாரி மதன்….”
“இட்ஸ் ஓக்கே பார்வதி!”
“என்னை ரொம்ப இன்சல்ட் பண்றேனு உனக்கு புரியலையா ராஜேஷ்?”
“நீ எல்லாத்தையும் வேற மாதிரி யோசிக்கிறேனு உனக்கு புரியலையா பார்வதி?”
அந்த கூட்டத்தில் அதற்கு மேல் பேச முடியாமல் அமைதி ஆகி விட்டாள் பார்வதி. எதையும் நினைத்த உடனே செய்து பழக்கப்பட்டவள் அவள் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தாள்.
“ராஜேஷ், கொஞ்சம் வெளியே வா…. உன்கிட்ட பேசணும்!” என்றாள் அதிகாரமாக.
அவளின் அதிகாரத்தில் அவளை உறுத்து விழித்தவன், “எதுவா இருந்தாலும் கல்யாணம் முடியட்டும், அப்புறம் பேசலாம்.” என்றான் பொறுமையாக.
“இப்போவே வரணும், வா ராஜேஷ்!” அவளை கட்டாயப்படுத்தினாள் பார்வதி.
“முடியாது!”
அவனின் மறுப்பில் அவளின் பிடிவாதம், ஈகோ அனைத்தும் தலைதூக்க, அமர்ந்து இருந்த நாற்காலியை விட்டு எழுந்து நின்றவள்,
“இப்போ நீ வரலை! நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” என்றாள்.
அனைவரும் திருமணத்தை விட்டு அவர்களை வேடிக்கை பார்க்க, மிகவும் அசிங்கமாக இருந்தது ராஜேஷிற்கு. பல்லை கடித்துக் கொண்டு எழுந்தவன், அவளின் கையை பிடித்து வேகமாக வெளியே இழுத்து சென்றான்.
“அசிங்கமா இல்லை, உனக்கு? சே…. பப்ளிக் பிளேஸ்ல இந்த மாதிரி பிஹேவ் பண்றியே….? வெளியே யாரும் இல்லாத இடத்திற்கு வந்தவன் அவன் கட்டுப்பாட்டை இழந்து கத்தினான்.
“நீதான் என்னை கத்த வைக்கிறே ராஜேஷ்! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்…. அவ்ளோ தானே….? அது கூட உன் மேல் இருக்க ஆசையில்…. உன்னை பிரிய கூடாதுங்கிற டென்ஷன்ல தானே….? அதுக்கு நீ உடனே என்கூட பிரேக் அப் ஆனா மாதிரி பிஹேவ் பண்றே….? என்னை இக்னோர் பண்றது மட்டுமில்லாம இன்சல்ட்டும் பண்றே…. இது நியாயமா ராஜேஷ்….?” கண் கலங்க கேட்டாள் பார்வதி.
அவளின் கேள்வியில் கொஞ்சம் தடுமாறி விட்டான் ராஜேஷ், ஆனால் சமாளித்து கொண்டு,
“பர்ஸ்ட் நம்ம ரெண்டு பேருக்கு இடையில் இருக்கிறது லவ்வே இல்லை பார்வதி! எப்போ இது உன்னோட பிரச்சனை எனக்கு இதனால் ஒன்னுமில்லைனு நான் சொன்னேனோ அப்போவே எனக்கு புரிஞ்சுடுச்சு…. நீயும் புரிஞ்சுக்கோ…. உனக்கு மட்டும் லவ் இருந்தா போதாது…. ஐயம் ஸாரி, உன் ப்ரோபோசலை நான் பாவம் பார்த்து அக்செப்ட் பண்ணி இருக்கவே கூடாது! அது ஒரு பெரிய தப்பு! இனியும் நான் இதை கண்டின்யு பண்ண முடியாது! என்னை புரிஞ்சுகிட்டு என்னை விட்ரு ப்ளீஸ்….” என்று கை எடுத்து கும்பிட்டான் ராஜேஷ். அவளின் பதிலை எதிர்பார்க்காமல் விலகியும் சென்று விட்டான்.
எப்போதும் போல் இவள் கெஞ்சினால், கொஞ்சினால் இளகி வருபவன், இன்றும் அது போல் வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி தரும் வகையில் முழுதும் வெட்டி கொண்டு சென்று விட்டானே….! ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவளால்.
உடனே சாய்க்கு அழைத்தவள், அவனை கிளம்பி அவள் வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு அவளும் கிளம்பினாள். அஸ்வினி வீடு வர எப்படியும் தாமதம் ஆகும், அதற்குள் சாய்யுடன் கலந்து பேசி ராஜேஷை என்னவாவது செய்து அவளுடனான திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாள். அனைத்தையும் வேகமாக செய்து முடிக்க துடித்தாள். இனி அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டாள் பார்வதி!