🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 18
பனி கொட்டும் காலைப் பொழுதினில் வனப்பைச் சொட்டும் விடியலை கண்களால் படம் பிடித்து மனதிற்கு விருந்தளித்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
சூடான காபி குவளையின் கதகதப்பு கைகளுக்கு இதமளிக்க, அதனை வாயினுள் சரித்து தொண்டைக்கும் அவ் இதத்தைக் கொண்டு சேர்த்தாள்.
இயற்கையை ரசித்து அதில் இன்பம் காண்பவள் அஞ்சனா. கடின சித்தம் கொண்டோரையும் தன்னுள் ஆழ்த்தி மனதை இதமாய் வருடும் மென்னுணர்வைக் கொடுக்கும் இயற்கை எழில் மெல்லியவளை மயக்குவது விந்தை அல்லவே?!
என்றும் போல் இயற்கை அன்னையின் மடியில் மழலையாய் தவழ்ந்திட அவளால் முடியவில்லை. மனதை ஒருவித வெறுமை செல்லரித்துக் கொண்டிருக்கையில் எதிலும் முழுமனதுடன் ஈடுபட முடியுமா என்ன?
வெறுமையா? ஆமாம், தந்தையின் நினைவு அவளை அதிகமாய்த் தாக்க இயல்பாய் இருப்பது இயலாத காரியமாயிற்று. என்றுமில்லாத நினைவலைகள் மனதில் அலைமோதிட காரணம் ஒன்றும் இருக்கத் தான் செய்தது.
“அஞ்சும்மா!” என்ற அழைப்பு அவளின் அலைப்புறுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தன்னை சமன்செய்து கொண்டு வெளியே சென்று எட்டிப் பார்த்தாள்.
“கோயிலுக்கு போக போறோம் ரெடியாகிட்டு வர்றியா” என்று கூறிய சித்ராவின் பின் ருத்ரன், செல்வன் மற்றும் கோபால் குடும்பமும் அலைதிரண்டிருந்தது.
ஏதோ வித்தியாசமாகப் பட்டாலும் தனது மனநிலைக்கு கோயிலுக்கு செல்வது சரியென்றே தோன்ற கிளிப்பச்சை நிற காட்டன் சாரியை அணிந்து வந்தாள்.
கணவனின் பார்வை உணர்ந்து விழியுயர்த்த கண் சிமிட்டுதலோடு பார்த்தான். வழமை போல் புன்னகைக்க முயன்றவள் தோல்வியைத் தான் தழுவிக் கொள்ளலானாள்.
எழுந்த போது தன் முக வாட்டம் கண்டும் ஒன்றும் கூறவில்லையே இவன்? தன்னை ஒற்றைப் பார்வையில் புரிந்து கொள்பவனுக்கு இன்று என்ன ஆனது? அவன் செயலும் ஏதோ போல் வருத்தியது.
கோபால் குடும்பம் அவரது காரில் செல்ல, மற்றையதில் ருத்ரன் ஓட்ட மனைவி பக்கத்திலும் பெற்றோர் பின் ஆசனத்திலும் பயணித்து கோவிலை அடைந்தனர்.
உள்ளே வந்த போது பொம்மை போல அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றாலும் சுய உணர்வின்றி நின்றவள் “அஞ்சு” என்ற அழைப்பைத் தொடர்ந்து தோளில் விழுந்த சுரீர் என்ற அடியில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டாள்.
“வந்ததில் இருந்து பார்க்கிறேன். ஏன் உன் மூஞ்சு விடியாம இருக்கு? ருத்ர சூரியன் தரிசனம் கிடைக்கலையோ?” குறும்புப் புன்னகையோடு எழுந்தன ஆலியாவின் வினாக்கள்.
ஒன்றுமில்லை என்று மறுத்து விடவும் தோன்றவில்லை. பொய்யுரைத்து சமாதானம் கூற முடியாதளவுக்கு அவளது முகம் அகத்தின் உணர்வை பிரதிபலித்து விட்டதே?!
பூஜை ஆரம்பிக்க மகன் வேண்டுமென சித்ரா கூற “இந்த நேரத்தில் எங்கே போயிட்டான் இவன்?” மனைவியின் காதைக் கடித்தார் செல்வன்.
அப்போது தான் அவன் இல்லாததைக் கவனித்தாள் அஞ்சனா. சித்ராவின் முகத்தில் கவலை, அவர் அண்ணன் கோபால் ஒருவித இறுக்கத்துடன் நின்றிருக்க இவளுக்குத் தான் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் உணர்வு.
“என்ன பூஜை இன்னிக்கு? திடீர்னு ஏற்பாடு?” – மண்டையை வண்டாகக் குடைந்த வினாவை வாய் விட்டு கேட்கவும் செய்தாள் அஞ்சனா.
“அது எங்க பெரியப்பா பர்த்டே இன்னிக்கு..” கதை சொல்லத் திறந்த ஆலியாவின் வாய் தந்தையின் முறைப்பில் கப்பென மூடி பூட்டு போட்டுக் கொண்டது.
அந்நேரம் நல்ல பிள்ளையாக வந்து நின்ற மகனை செல்வன் பார்வையால் எரிக்க, அசடு வழிந்தபடி நின்றான் அவன்.
யோசனையுடன் நின்ற அஞ்சனா பின் ஏதோ முடிவெடுத்தவளாய் “அத்தை! என் அப்பாவுக்கும் இன்னிக்கு பிறந்த நாள். அவர் பெயருக்கும் அர்ச்சனை செய்ய சொல்லலாமா?” தயக்கமாகக் கேட்டாள்.
“என்ன அதிசயமா இருக்கு. அப்படியே பண்ணிரலாம். உன் அப்பா பெயர் ராசி நட்சத்திரம் எல்லாம் சொல்லிரு” முதல் முறையாக வாய் திறந்து தன்னிடம் பேசிய செல்வனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“பெயர் பிரபாகரன். மேஷ ராசி, பரணி நட்சத்திரம்” அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி, ஒருவனைத் தவிர.
ஈரெட்டில் அருகினில் வந்து, “உ..உன் அப்பா எந்..எந்த ஊரு? உன் அம்மா.. அம்மா பெயரை சொல்லு” என அவள் கைகளிரண்டையும் பற்றி உலுக்கியவாறு கேட்டார் சித்ரா.
அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் இவ்வாறு கேட்கிறார். எதற்காக இத்தனை படபடப்பும் பதற்றமும்?
“அப்பா கோபால் சித்தப்பாவோட ஊரு. அம்மா பெயர் ஆனந்தி” அவளுக்கும் ஏனோ நெஞ்சத்தில் ஏதோ பதற்றம் அலைக்கழித்தது.
அவளை விட்டும் விலகி செல்வனிடம் சென்று அவர் முகம் பார்க்க அவர் முகத்திலும் பலவித உணர்ச்சிகள்.
“எஸ் மை டியர் மம்மி! உங்க நினைப்பு சரி தான். உங்க அருமை அண்ணன் பிரபாகரனோட பாசக்கிளி அம்மு தான்” தன்னவளைக் கை காட்டினான் ருத்ரா.
அவர்களுக்கோ அதிர்ச்சி.
அஞ்சனாவுக்கோ பேரானந்தம்.
ஆக! இரண்டும் ஒரு சேரவே உள்ளங்கள் ஆனந்த அதிர்ச்சியில் உழலத் துவங்கின.
தன் மனையாட்டியின் அருகில் சென்றவன் “உனக்கு யாரும் இல்லனு கவலைப்பட்டுட்டு ஃபீல் பண்ணிட்டு இருந்தியே. இனி எதுவும் தேவையில்லை. இதோ உன் மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, தங்கச்சி எல்லாரும் இருக்காங்க. ஸ்பெஷலா உன் அத்தை பையன்” தன்னைச் சுட்டிக் காட்டினான்.
நொடிகளில் கைது செய்த மௌனச் சிறையிலிருந்து வலுக்கட்டாயமாக தன்னை மீட்டுக் கொண்டு, “அபய்” என்ற அழைப்புடன் அவனைக் கட்டிக் கொண்டாள் அஞ்சனா.
அவளது அணைப்பில் உச்சபட்ச பூரிப்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்னலாய் தோன்றி ஒட்டுமொத்த அணுக்களினூடாகவும் சிலீரிட்டுப் பாயலானது.
அத்தோடு அவளை நேருக்குநேர் கண்ட முதல் பொழுதும் சிந்தையில் முழக்கம் செய்தது.
அன்று, அவளை கோயிலில் கண்டு அவன் அணைத்தான் சற்றும் எதிர்பாராத விதமாக. அன்று தன் இன்னுயிரில் இரண்டறக் கலந்தவளைக் கண்டு கொண்ட சந்தோஷத்தில் அவனது கண்ணீர் அவளை முத்தமிட்டது.
இன்று?!
அதே போன்று கோயிலில் எதிர்பாரா விடயமொன்றை அறிந்ததால் இவள் தன்னை அணைக்கிறாள். இன்றோ அவன் தன் தந்தையின் தங்கை மகன் என்றறிந்த எல்லையில்லா இன்பத்தில் இதயத்தில் ஊற்றெடுத்த ஆனந்தம் கண்ணீராய் இமையிடுக்கில் வழிந்து அவன் நெஞ்சில் இதழ் பதித்தது.
இரண்டுக்கும் எத்தனை ஒற்றுமைகள் என்று அவன் நினைக்க, என் வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள் என்று நினைத்தாள் அஞ்சன விழியாள்.
இந்த ருத்ரனைக் கண்டது விசித்திரம் தான்.
ஓர் ஆடவனின் அணைப்பு திடுமெனக் கிட்டிய அதிர்ச்சி விலகும் முன்னே அவன் கரம் தாலி கட்டியது. அதே வியப்பை முற்றிலும் மறக்க முன்பு கணவன் காதலனாய் நெஞ்சம் தொட்டான். அக்காதலை உரைக்க சமயம் பார்த்திருக்க இன்றோ தன் உற்ற பந்தமாக விந்தைத் தகவல் அறிவிக்கிறான்.
அனைத்தும் கனவில் நடப்பது போல் தான் இருந்தது அவளுக்கு. தனிமையே உரிமையென வாழ்ந்தவளுக்கு உறவாக, உதிரத்தால் இணைந்திட்ட உயிர்கள்!
துன்பங்களின் கனத்தை இலகுவாய் சுமந்து பழகிய இதயத்தினால் இன்பத்தின் இறகு பாரத்தைத் தாங்குவதே பெரும் சுமையாக இருக்கும் பொழுது, இத்தனை பெரிய இன்பத்தில் மூச்சடைத்துப் போனது பேதைக்கு.
சித்ராவைப் பார்த்து “அ..அத்தை” என்றழைத்தவளுக்கு இதுகாறும் கணவனின் தாயாக எண்ணி அத்தை என மொழிந்த அழைப்புகள் மொத்தமும் இவ்வழைப்புக்கு முன் சரணடைவதாய் உணர்ந்தாள்.
“அம்மாடி என் அண்ணன் பெத்த ரத்தினமே” அவளை அணைத்து அழுது உச்சி முகர்ந்தார் சித்ரா.
எத்தனை வருடங்களாய் பிரிந்து சென்ற உடன் பிறப்பை எண்ணி கவலைப்பட்டிருப்பார்? தேடித் தேடி ஓய்ந்து போய் அவருடனான உறவே முறிந்து விட்டது என வருந்தி முடித்த சமயத்தில் அவர் உயிர் நீரில் உருவெடுத்தவள் முன்னே வந்து நின்றால் எப்படி இருக்கும்?
அதுவும் அண்ணன் மகளே தன் மகனுக்கு மனைவியாக வந்தவள் என்பதையறிந்த இக்கணப் பொழுது வேறு எங்ஙனம் இருக்குமாம்?
பிரபாகரன் செல்வனுக்கு மச்சான் முறை மட்டுமல்ல! அவரது உற்ற நண்பரும் கூட. ஒன்றாக இருந்தவர் திடீரென யாரோ ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக ஊரே தூற்றவும் ஒடிந்து போனவர். நண்பனின் மீது கோபமெல்லாம் வரவில்லை. மாறாக அவர் பிரிவில் வருத்தம் தான்.
அப்பிரிவிலிருந்து மனைவி உட்டபட அக்குடும்பம் மீண்டு வர அந்நேரம் புதுமாப்பிள்ளையாக இருந்த செல்வனே பெரும்பங்கு வகித்தார். நண்பன் மகளை நேரில் காண்பது அவரையும் கண்கலங்க வைத்தது.
“நீ எனக்கு பெரியப்பா பொண்ணா? அஞ்சு அக்கா? ச்சே நல்லா இல்லை நான் அஞ்சுனு தான் கூப்பிடுவேன்” அவளைக் கொஞ்சித் தீர்த்தாள் ஆலியா.
“எனக்கும் அதான் கம்பர்டபிளா இருக்கு. நீ சித்தப்பா பொண்ணுனாலும் நம்ம நல்ல ப்ரெண்ட்ஸ் ஆலியா” பதிலுக்கு அவளைக் கட்டிக் கொண்டாள் அஞ்சனா.
லீலாவும் தன் பங்கிற்கு மகிழ்வைத் தெரிவிக்க, கோபால் மட்டும் இறுக்கத்தோடு நின்றிருந்தார்.
ஓடிச் சென்ற பிரபாகரன் மீது தந்தை விட்டுச் சென்ற கோபம் அவரிடத்தில் இன்னும் மீதமிருந்தது. என்றாலும் தாயின் சொற்படி வருடாவருடம் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கோயிலுக்கு வந்து சித்ராவின் குடும்பத்தோடு இணைந்து பூசை செய்து அன்னதானம் வழங்குவார்.
அஞ்சனாவைப் பார்த்த நாள் முதல் தனக்கு நெருக்கமான உறவாக தோன்றியதற்கான காரணமும், அவள் பேச்சைக் கேட்டு மனதை மாற்றி மகளின் திருமணத்திற்கு சம்மதித்ததற்கான காரணமும் அவள் தன் அண்ணன் மகள் என்ற மறைமுக உறவு என்பது புரிந்தது.
“சித்தப்பா” கோபாலின் முகம் நோக்க, “உன் அப்பா என்னைப் பற்றி சொல்லிருக்காரா? எங்கே சொல்லி இருப்பார்? அவர் தான் நம்ம உறவு வேணாம்னு உதறிட்டு போனவராச்சே” இறுக்கத்தைத் தளர்த்தாமலே பேசினார் கோபால்.
“அப்பா உங்களை பற்றி நிறைய சொல்லுவார் கோபி கோபினு. சித்து, செல்வா, அம்மா இந்த வார்த்தைகள் அவர் வாயில இருந்து வராம போகாது. ஆனா அது நீங்க தான்னு எனக்கு தெரியாது. இவ்ளோ நாளா உங்களை பக்கத்தில் வெச்சுட்டு ஒன்னும் தெரியாம வாழ்ந்திருக்கேன்” தழுதழுத்த குரலில் பேசினாள் அஞ்சனா.
“உன் கஷ்டத்துக்கு காரணம் உன் அப்பாம்மா தான். அதை நீ மறுக்கலாம். ஆனால் அவரால எங்க குடும்பம் பட்ட அவமானமும், வேதனையும் எனக்கு ஞாபகம் இருக்கு. கோபி கோபினு கூடவே இருந்துட்டு சட்டுனு விட்டுப் போனப்போ நான் அனுபவிச்ச கஷ்டம் என்னிக்குமே மறக்காது.
அண்ணன் தம்பியாம்! ஹூம், அந்த உறவு என்னிக்கோ அறுந்து போச்சு. இனிமே உன் அப்பனோட தம்பினு நெனச்சு என் கூட பேச வராத. ஜஸ்ட் ருத்ராவோட பொண்டாட்டி அவ்ளோ தான்” வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து நின்றார்.
இத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாய் கலைத்துப் போட்டது கோபாலின் கோபம்.
மனைவியின் கண்கலங்கியது கண்டு “மாமன் மவளே! உன் சித்தப்பா ஒரு சீன்பார்ட்டி. கொஞ்ச நாள்ல சட்டுனு மாறி அண்ணன் பொண்ணுனு கூப்பிட்டு கன்னா பின்னானு பாசத்தை பொழிய தான் போறார். சோ ச்சில்” கண்களை மூடித் திறந்தான் ருத்ரன்.
தன் கண்ணீரைத் தாங்கும் சக்தி அவனுக்கில்லை என்பதை அறிவாள் அல்லவா? ஆக, பூதாகரமாக வெளிவந்த வேதனையை கடினப்பட்டு குழி தோண்டிப் புதைத்து விட்டு அவனுக்காக சகஜமானாள்.
என்ன தான் கோபத்தைக் கொட்டினாலும், அண்ணனின் அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்ட பிறகே குடும்பத்தோடு கிளம்பினார் கோபால். செல்வனை விட ஆதுரமாக தன்னோடு பழகிய கோபாலின் விலகல் அவளைப் பாதிக்காமல் இல்லை.
வீடு திரும்பிய மருமகளை இழுத்துப் பிடித்து அமர வைத்து பேசத் துவங்கிய சித்ரா அன்புப்படலத்தை முடிப்பதாக தெரியவில்லை. அண்ணன், அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதில் இருந்தே தெரிந்தது தந்தை மீது சித்ராவுக்குள்ள பாசம்.
பிரபாகரனின் இறப்பைக் கேட்டு கண் கலங்கவும் செய்தார்.
“கொஞ்சம் தேடி இருந்தா அவரை சந்திச்சிருப்பேன்ல? என்ன பண்ணுறது எல்லாம் கடவுளோட கணக்கு” என மனதைத் தேற்றிக் கொண்டார். அதனைப் பேசுவதால் கடந்த காலத்தை மாற்றிட முடியாதே.
“உங்கம்மா போட்டோ இருக்கா அஞ்சு?” சித்ரா ஆர்வமாக வினவ, “ஏன்மா? அத்தையை பார்த்தது கூட இல்லையா?” அவர் மடியில் தலை வைத்திருந்த ருத்ரன் கேட்டான்.
“எங்கேடா? எங்கப்பா காட்ட விடவும் இல்லை. இவங்கப்பா காட்டவும் இல்லை. ரெண்டும் ஒரே குணம். முசுட்டு ஆம்பளைங்க” சலித்துக் கொண்டே தானறிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பிரபாகரன் கோயமுத்தூரில் வேலை நிமித்தம் சென்ற போது அங்கிருந்த ஆனந்தியைக் கண்டு காதலில் விழுந்தார். அவரிடம் காதலைத் தெரிவிக்க அவரும் ஒப்புக் கொண்டு காதலித்து வந்தனர்.
வீட்டிற்கு வரும் போது பிரபாகரனின் அருணாச்சலம் அவருக்கு லீலாவை மணம் பேசி முடித்து விட்டார். அதிர்ந்து போனாலும் தந்தையிடமிருந்த பயத்தை விட்டு ஆனந்தி மீது அரும்பிய காதலைக் கூற, ஜாதி வேறுபாடு ஒரு பக்கமும் லீலாவின் தந்தைக்கு கொடுத்த வாக்கு இன்னொரு பக்கமும் இடிக்கவே சாமியாடி விட்டார் அருணாச்சலம்.
“எந்த காரணம் கொண்டும் அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க மாட்டேன். நீ லீலாவை கட்டியே ஆகனும்” விடாப்பிடியாக நின்ற தந்தை மறுக்கவே அவருக்கு வேறு வழி தோன்றவில்லை.
ஆனந்தியைத் தவிர்த்து வேறு ஒருத்தியை மணமுடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் திருமணத்திற்கு முன்னைய நாள் யாருமறியாது ஊரை விட்டுச் சென்றார்.
அங்கு ஆனந்தியின் விருப்பத்தோடு அவள் கழுத்தில் தாலி கட்ட, விடயமறிந்த அவளது பெற்றோர் அவளுடனான உறவை அறுத்துக் கொண்டனர்.
பின்னர் திருப்பூர் சென்று வாழ்ந்தவர்கள் சில பிரச்சினைகளால் ருத்ரன் அஞ்சனா திருமணம் நடந்த ஊரிற்கு வந்தனர்.
இங்கு, மகன் வீட்டை விட்டுச் சென்றதை அறிந்த அருணாச்சலமோ பொங்கியெழுந்தார். என்றாலும், லீலாவின் தந்தையின் விருப்பப்படி கோபாலை அவளுக்கு மணாளனாக்கி திருமணம் செய்து வைத்தார்.
“என் மானத்தை காப்பாற்றினவன் கோபால்! அவன் மட்டுமே எனக்கு பையன். அந்த தறுதலை வீட்டு பக்கம் வந்தா வெட்டிப் போட்றுவேன். இந்த வீட்டுல யாராவது அவனோட உறவாடினீங்கனு தெரிஞ்சுது அப்பறம் என்னை மறந்துருங்க” கோபத்தோடு துண்டை உதறிக் கொண்டார் அருணாச்சலம்.
கோபாலுக்கு அண்ணனின் பிரிவில் வருத்தமும் கோபமும் ஒருசேர ஆட்கொண்டது. அருணாசலத்தின் மனைவி மூத்த மகனை நினைத்து அழுது வடிய, சித்ரா தன் பாசமிகு அண்ணனின் பிரிவில் தொய்ந்து போனார். அவர் இயல்பு நிலைக்கு மீள செல்வன் கால்வாசி பங்கு வகித்தார் என்றால், அவர் கருவில் உதித்த ருத்ரன் மீதி முக்காற்பங்கையும் தனதாக்கிக் கொண்டான்.
ஆம்!
பிறக்கும் போதே பிரபாகரனின் சாயலில் பிறந்தான் ருத்ரன் அபய். அண்ணனே திரும்ப வந்ததாக எண்ணினார் சித்ரா. பிறக்கும் போது மட்டுமென்ன வளரும் போது கூட அச்சு அசலாக அவரையே உரித்து வைத்திருந்தான்.
“உங்களுக்கு எப்படி நான் தான் உங்க மாமா பொண்ணுனு தெரியும்?” இத்தனை நேரம் கழித்துக் கேட்கும் மனையாட்டியை செல்லமாக முறைத்தவன் அதனைச் சொல்லாது விடுவானோ?
“உன்னோட பேக்ல இருந்த உன் அப்பாம்மா போட்டோவை பார்த்தேன். அம்மா எனக்கு மாமா போட்டோ காட்டிருக்கார். சோ அதை வெச்சு கண்டுபிடிச்சேன். ஈசி” தோளைக் குலுக்கிக் கொண்டான் ருத்ரன்.
மகனைப் பார்த்து புன்னகைத்த சித்ரா, “அஞ்சுமா எனக்கும் அந்த போட்டோவ காட்டேன். உன் அம்மாவை பார்க்கனும். அவங்க ஜோடி பொருத்தம் எப்படினு பார்க்க ஆசையா இருக்கு” என்று கேட்டார்.
“இதோ நானே கொண்டு வரேன். என் அம்மு குட்டி காலு வலிக்கும்ல” துள்ளலுடன் சென்று போட்டோவை எடுத்துக் கொண்டு வந்தவனைக் கண்டு,
“விளையாட்டுப்பிள்ளை! இன்னமும் சின்ன வயசுல குச்சி மிட்டாய் வாங்கி கேட்டு அடம்பிடிச்ச குட்டி ருத்ராவா தான் தெரியுற” மருமகளிடம் கூறினார் சித்ரா.
எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு அவர் பிள்ளை என்றும் சின்னக் குழந்தை தான்!
அக்குழந்தைப்பருவ நினைவுகளை அடிக்கடி மீட்டிப் பார்த்து மனம் குளிர்வதும் பெற்றோரின் இயல்பு தான்!
“ம்மா! இதோ உங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்குனு பாருங்க” தன்னவளைத் தோளோடு சேர்த்து அணைத்துப் பிடித்தான் ஆடவன்.
“உங்க ஜோடிப்பொருத்தம் பார்த்து அலுத்துப் போச்சு டா. என் அண்ணா, அண்ணியைக் காட்டு” மகனின் முகம் சென்ற போக்கைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினார்.
“எங்களைப் பார்த்தா அவங்களை பார்க்க அவசியமில்லை. இருந்தாலும் உங்க ஆசைக்காக காட்டுறேன்” அவர் கைகளில் புகைப்படத்தை ஒப்படைத்தான்.
அதனைப் பார்த்த சித்ராவின் விழிகள் அகல விரிந்தன. ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சிகளைத் தாங்குவது என நினைத்தார்.
இருவரும் மாலையும் கழுத்துமாக திருமணத்தின் போது நண்பன் ஒருவனால் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
தற்போது அஞ்சனா எப்படி இருக்கிறாளோ அவளையே உரித்து வைத்தது போல் தான் அதில் ஆனந்தியும் இருந்தார். பிரபாகரனோ ருத்ரனை ஒத்திருந்தார்.
ருத்ரன் கூறியது தான் எத்தனை உண்மை?
புகைப்படத்தில் நிழலாய் இருந்தவர்கள் நிஜமாய் உயிர் பெற்று வந்தது போல் அஞ்சனாவும் ருத்ரனும் காட்சியளித்தனர்.
புல்லரித்தது சித்ராவுக்கு. இப்படியும் இருக்குமா என்ற வியப்பை ஸ்திரப்படுத்தியது இப்படித் தான் இருக்கும் என கண்முன் காணக்கிடைக்கும் நிஜம்!
இரு கரம் நீட்டி அழைப்பு விடுத்தவரின் கைகளுக்குள் இருவரும் ஒன்றாக தஞ்சம் கொண்டனர். அஞ்சனா சித்ராவை அணைத்துக் கண்களை மூடிக் கொண்டாள். தாயை ஒரு கையால் அணைத்து மறு கையை நீட்டி மனைவியின் கழுத்தில் கை போட்டுக் கொண்டான் அஞ்சுவின் அபய்.
தொடரும்………….♡
ஷம்லா பஸ்லி