19. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

5
(1)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 விழி 19

 

“டேய் ருத்ரா நில்லுடா” தன் அழைப்பைக் காதிலும் வாங்காமல் செல்லும் நண்பனைத் தொடர்ந்து ஓடினான் நிதின்.

 

அவனோ தன் போக்கில் வேக எட்டுகளுடன் முன்னேறிக் கொண்டிருந்தான்.

 

“கொஞ்சம் கேளேன்டா. எல்லாரும் ஏதோ மாதிரி பார்க்கிறாங்க. ஒரு பையன் பின்னாடி இன்னொரு பையன் போனா என்ன நினைப்பாங்க?” பாவமாகத் தான் அவனை வழி மறித்து நின்றான்.

 

“புரியுதுல்ல. மரியாதையா வழியை விடு. இல்லனா எனக்கு கல்யாணமானது தெரிஞ்சும் கூட ப்ரபோஸ் பண்ணுறேங்கிற பெயர்ல என்னை டாச்சர் பண்ணுறேனு எல்லார் கிட்டேயும் சொல்லி விட்றுவேன்” பேன்ட் பாக்கெட்டினுள் கையை விட்டவாறு கடுப்படித்தான் நண்பன்.

 

“ப்ரபோஸ்? மீ? உனக்கு? ஏன்டா நினைக்கவே கன்றாவியா இருக்கு” முகம் சுளித்தவனைப் பார்த்து பீறிட்டெழுந்த சிரிப்பை அடக்க வெகுவாய் சிரமப்பட்டும் தான் போனான் ருத்ரன்.

 

“இப்போ நான் என்ன தான் பண்ணனும்? வேணும்னா உன் கால்ல விழவா?”

 

“தாராளமா!” காலை அவன் முன் நீட்டினான்.

 

“அசிங்கமா போயிரும்டா. இன்னும் நாலு நாள்ல கல்யாண மாப்பிள்ளை” நாக்கு தள்ளியது நிதினுக்கு.

 

“யாராவது கேட்டா உன் பொண்டாட்டி கால்ல விழுறதுக்கு ப்ராக்டிஸ் பண்ணுறேனு சொல்லு” 

 

“அவ தானே என் கால்ல விழனும். நான் ஏன் ப்ராக்டிஸ் பண்ணனும் ருத்ரா?” அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டான்.

 

“ஆலி உன் மேல கொலை காண்டுல இருக்கா. அதனால தினமும் முப்பது தடவையாச்சும் கால்ல விழுந்தா சீக்கிரம் சமாதானம் பண்ணிரலாம்” ருத்ரன் அலட்சியமாக தோளைக் குலுக்கிக் கொள்ள,

 

“ஆலியாம் ஆலி! பத்ரகாளி மாதிரி ஆடுறாள். அவ கோபத்தை பார்த்து குளிர் காய்ச்சல் வந்த கோழி மாதிரி குறுகுறுனு இருக்கு எனக்கு. சமாளிக்கவே முடியல” உதடு பிதுக்கினான் அவன்.

 

“அவ்ச் நிதினு! ரைமிங்ல சும்மா பின்றியே” என்றவன் திடீரென மற்றவன் கழுத்தில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்து நெருக்கி, “என் கிட்டயே எல்லாம் மறைச்சிட்டல்ல. அவ்ளோ நெஞ்சழுத்தம் உனக்கு” என கடுகடுத்தான்.

 

“சாரி கேட்டு நியாயப்படுத்த விரும்பல ருத். இருந்தாலும் எனக்கு அந்த நிலமையை எப்படி கையாளுறதுன்னு தெரியல டா. ஏதோ இந்த தடவை விட்றேன்” தலைக்கு மேல் கும்பிடு போட, 

 

“சரி பொழச்சி போ. எனக்கும் சேர்த்து ஆலி கிட்ட வாங்கிக்குவ” கண்ணடித்து சிரித்தவனை முறைத்துத் தள்ளினான் நண்பன்.

 

இருவரும் ருத்ரனின் வீட்டிற்கு வர, அஞ்சனாவைப் பார்த்த நிதின் “நீ சித்துவோட அண்ணன் பொண்ணாமே அஞ்சுமா. ருத்ரா சொன்னான். இந்த சித்துவோட பாசக்கடலில் மூழ்கி போயிட போற பத்திரம்” சித்ராவையும் சேர்த்து வம்பிழுத்தான்.

 

“அதை நானும் என் மருமகளும் பார்த்துக்கிறோம். நீ வாயை விடாத” அவனது காதைத் திருகி விட்டார் சித்ரா.

 

“அம்மாவோட பாசக்கடலில் மூழ்கினாலும் ருத்ரனோட காதல் படகு உன்னை பத்திரமா கரை சேர்த்திடும்னு சொல்லு அம்மு” தன்னவள் கன்னம் கிள்ளினான் அபய்.

 

அவளோ நாணத்தை மறைத்து கண்களில் முறைப்பைக் கக்க, “டேய் டேய் போதும்டா. ஒரு சிங்கிளை வெச்சுட்டு இப்படி ரொமான்ஸ் பண்ணாத” கண்களை மூடிக் கொண்டான்.

 

“நீ சிங்கிளா? கல்யாணம் டா உனக்கு” 

 

“கல்யாணம் மட்டும் தான். மத்தபடி உன் மாமன் பொண்ணு ரொம்ப சூடா இருக்கா” தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான்.

 

“எல்லாம் ஓகே ஆகிரும். ஐஸ் கட்டியை கொண்டு போய் தலை பேல வை. கூல் ஆகிருவா” ஐடியா கொடுத்த ருத்ரனின் தோளில் அடித்தான் தோழன்.

 

“செல்பீ எடுத்து ரொம்ப நாளாச்சு நித்தி. வா நம்ம எடுத்துக்கலாம்” ருத்ரன் அழைக்க, “வா வா” என்றவன் நண்பனோடு சேர்ந்து செல்பீ எடுத்துத் தள்ளினான்.

 

செல்வன் வருவதைக் கண்டு அவரிடம் சென்று “சிரிங்க அங்கிள். செல்பீ எடுக்கலாம்” போனை நீட்ட, “அந்த செல்பீ காக்கா பீ எல்லாம் நீயே எடுத்துக்க” முறைப்புடன் சென்றார் அவர்.

 

“உங்களோட செல்பீ எடுத்து அதை பேஸ்புக் இன்ஸ்டானு போட்டு லைக்ஸ் வாங்கி உங்க பின்னாடி ஃபேன் பட்டாளமே திரண்டு வர்ற மாதிரி பண்ணிடலாம்னு நெனச்சா இப்படி முறைச்சுட்டீங்களே”

 

“முதல்ல உனக்கே ஒரு ஃபேன் இல்லை. இதுல என் பின்னாடி பட்டாளத்தை வர வைக்க போறியா? விளங்கிரும்” மாடியிலிருந்து குரல் கொடுத்தார் செல்வன்.

 

“பாம்புக் காது டா உன் அப்பாவுக்கு” 

 

“சும்மா போற மனுஷனை ஏன்டா கூப்பிட்டு வெச்சு வாங்கி கட்டிக்கிற?” முதுகில் ஒன்று வைத்த நண்பனைப் பார்த்து அசடு வழிய சிரித்தான் நிதின்.

 

♡♡♡♡♡

ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் ஆலியா. மனதில் இடைக்கிடை மின்மினியாய் மின்னிச் சிரித்தான் நிதின்.

 

“போடா போடா” கத்தியபடி கூறியவள் தன் முன்னே நின்றிருந்த கோபாலின் அதிர்ந்த முகம் கண்டு சப்பென வாயை மூடிக் கொண்டாள்.

 

“ப்பா…! உங்களுக்கு சொல்லல” படபடப்புடன் அவள் மொழிய, “சொன்னாலும் சொல்லுவமா நீயி வாயாடி” புன்னகைத்தவர், “உனக்கு ஃபோன்” என்று அலைபேசியைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

 

யோசனையுடன் “ஹலோ” என்றவள், “தீஞ்ச சோறு” என்ற கத்தலில் அலைபேசியை தூரமாக்கி தலையை ஆட்டிக் கொண்டாள்.

 

மீண்டும் அவனது சத்தம் கேட்க, “கல்யாணத்துக்கு அப்பறம் உன் பேச்சை என்னால கேட்க முடியாது நிதின்” என போனை காதுக்குக் கொடுத்தாள்.

 

“ஏன்? கல்யாணம் பண்ணுனா நான் சொல்லுறத நீ கேட்டு தான் ஆகனும்” வராத கடுமையை குரலில் உட்செலுத்தியவாறு சொன்னான் நிதின்.

 

“பின்ன என்னடா? மைக் விழுங்கின மாதிரி அந்த கத்து கத்துற. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் காது அவுட்டாகி இருக்கும். கிர்ர்” சுட்டு விரலை காதினுள் விட்டுக் குடைந்தாள் ஆலி.

 

“உனக்கு எத்தனை தடவை எடுத்தேன். ஆன்ஸ்வர் பண்ணுனியா? அதனால தான் மாமா போனுக்கு கால் எடுத்தேன். அப்படி என்ன வேலை உனக்கு?” மறுமுனையில் கடுப்பானான் நிதின்.

 

“நான் எவ்ளோ ஹாயா சாஞ்சி பாட்டு கேட்டுட்டு இருந்தேன். நீ டிஸ்டர்ப் பண்ணிட்ட” 

 

“என்னைத் தானே நெனச்சிட்டு இருந்த நீ. எனக்கு தெரியும் ஆலி” காதலில் பாகாக அவன் உருக,

 

“ஆசை ரொம்ப வழியுது தொடச்சிக்க. இவரை நாங்க நெனச்சிட்டு இருக்கிறோமாம். நான் என் அத்தை பையனை நெனச்சி எவ்ளோ கனவு கண்டேன் தெரியுமா?” என்கவே அந்தப்பக்கம் அமைதி ஆட்சி செய்தது.

 

“நிதினு”

 

“……”

 

“ஓய் காஞ்ச பிஸ்கட்”

 

“என்ன?” பட்டென வெளிவந்தது அவனது வினா.

 

“கோபமாகிட்டியா?” உட்சென்ற குரலில் கேட்டாள் காரிகை.

 

“இல்லை! வெட்கப்பட்டுட்டு இருந்தேன்” என்று அவன் சொல்ல, “வெட்கமா?” இவளோ குழம்பிப் போனாள்.

 

“நீ சொன்ன அத்தை பையன் நான் தான். அதனால என்னை நினைச்சனு சொல்லவும் வெட்கம் வெட்கமா வருது” 

 

“பரவாயில்லையே டியூப் லைட் இப்போல்லாம் ப்ரைட்டா எரியுது”

 

“உன் காதல் மின்சாரம் கிடைச்சதுல செமயா எரியுது ஆலி” 

 

அவன் கூறியதில் இவள் முகத்தில் புன்னகை அரும்பியது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அப்பறம் சார் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

 

“ரெடியாகி என்ன பண்ணுறது? எல்லாம் ஒரே சோகமா இல்ல இருக்கு. என் பொண்டாட்டி ஒழுங்கா பேச கூட மாட்டேங்கிறா” அவளிடமே அவளைப் பற்றி முறைப்பாடு செய்தான்.

 

“பேசுறதுக்கு நீ மட்டும் ஒழுங்கா இருந்தியா? கல்யாணம் வேணாம், பிரிஞ்சுடலாம், அம்மாவுக்கு பிடிக்கல அம்சாவுக்கு பிடிக்கலனு எத்தனை பேச்சு? அதைக் கேட்டு மனசு நொந்து போனதை அவ்ளோ சீக்கிரம் மறந்துர முடியுமா?” கூறும் போதே தொண்டை அடைத்தது.

 

என்ன இருந்தாலும் அவளால் அவன் சொன்னதை விட்டும் மனதை மீட்டெடுக்க முடியவில்லை என்பதே உண்மை. அது அவ்வாறிருக்க அக்கோபத்தால் அவனை முழுதாக விலகி வருத்தவும் முடியவில்லை.

 

“இப்படி இருக்கும் போது கல்யாணம் எப்படி ஆலியா?” நீண்ட மௌனத்திற்கு விடுதலை அளித்து வினவினான் காதலன்.

 

“அது முடிவு பண்ணியாச்சு. நாளன்னைக்கு கல்யாணம். கோபமோ வருத்தமோ உன் மேல வெச்ச காதலை பாதிக்காது. என்னிக்கா இருந்தாலும் கல்யாணம் நடக்க தானே வேணும். அதனால அது நடக்கட்டும்.

 

இதெல்லாம் ஒரு புறம் இருக்கும். பட் கல்யாணத்துக்கு முழு மனசோட தயாரா இருக்கேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிற அந்த நிமிஷத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நித்தி” அவளுக்கு என்னவோ அவனை நேரில் பார்க்கும் தவிப்பு மேலோங்கியது.

 

“உன் மனசு எனக்கு புரியுது. சரிடி உன் இஷ்டப்படி பண்ணு. உன் மனசு ஆறும் வரை நான் காத்துட்டு இருப்பேன். ஆல்வேஸ் லவ் யூ ஆலியா” காதல் மொழி கூறியதோடு முத்தமொன்றும் பரிசளித்தான் நிதின்.

 

அலைபேசி வழியே அவளவனின் முத்த சத்தம் அவள் இதயத்தில் ஊடுறுவி இனிய யுத்தம் புரியலானது. தானும் மறுமொழியளிக்க ஒரு மனம் விரும்பினாலும் மறு மனமோ தடுத்தது.

 

“நீ பதில் சொல்ல மாட்டேனு தெரியும். அதுக்காக சும்மா விட்ற மாட்டேன். கல்யாணத்துக்கு பிறகு இதை வட்டியும் முதலுமா சேர்த்து வாங்கிக்கிறேன்” மெல்லச் சிரித்தான் அவன்.

 

“ம்ம்ம்” ஹூம்காரம் ஒன்றே ரீங்காரமாய் அவளிடமிருந்து வெளிப்பட்டது.

 

“ஏய் சண்டக்கோழி! உன் லொட லொட வாயிக்கு லீவு விட்டுட்டியா? சத்தமே வர மாட்டேங்குது” அவன் கிண்டலடிக்க,

 

“ஒரு லொடலொட வாயே என் கிட்ட இதைக் கேட்கிறது தான் பெரிய அதிசயம்” பற்களை நறநறத்தாள் ஆலியா.

 

கேலியும், கடுப்பும், சண்டையுமாய் நேரங்கள் கழிய, நிதினின் வாய்ச்சேட்டைகள் தொடர்ந்தன.

 

♡♡♡♡♡

சூரிய பாலகன் வான மைதானத்தில் ஓடியாடிய களைப்பில் இளைப்பாற வேண்டி மேற்கினில் சங்கமித்து ஓய்வினை அரவணைத்த நேரமது.

 

பச்சை படர்ந்த வயல்வெளியில் சேற்றில் கால்கள் புதையப் புதைய நடந்து வந்தனர் ஒரு காதல் ஜோடி. கைகளை கோர்த்து நடந்து வந்த இரு ஜோடி விழிகளும் ரசனை தழுவித் தான் நின்றன.

 

மனதிற்கு இதம் சேர்க்கும் இயற்கைக் காட்சியைக் கண்டு பெண்ணுள்ளம் குதூகலித்து ரசனை சொரிந்தது. தன்னோடு தோள் உரச, கை கோர்த்து பயணிக்கும் மதியன்ன மங்கையின் வதனத்தை கண்ணுறும் போது ஊற்றெடுத்த ரசனையில் கண்ணிமைக்கவும் மறந்து போனான் அந்த ஆண்மகன்.

 

“அபய் அங்கே பாருங்க. குருவிக் குஞ்சு” விழிகளில் பதற்றத்துடன் திரும்பி ஓரமாக அமைக்கப்பட்டிருந்த வேலியைக் காண்பித்தாள் அஞ்சனா.

 

அப்பக்கமாக பார்வையை நகர்த்தி கீழே விழுந்திருந்த குருவிக் குஞ்சின் அருகே ஓடினான் ருத்ரன் அபய். அஞ்சனாவும் அதனைப் பார்க்க அந்த வேலியருகே ஒரு குருவி வந்தமர்ந்தது. அதன் தாயாக இருக்க வேண்டும்.

 

சின்னது “கீச் கீச்” என கீச்சுக் குரலிட, “அபய் அழகா இருக்கு பாருங்க. என் கையில கொடுங்களேன்” கையை நீட்டினாள் அஞ்சு.

 

“இந்தா பத்திரமா பிடி” அவள் கைகளில் அதனைப் பத்திரமாக ஒப்படைத்தான்.

 

படபடத்துப் பறக்க முயற்சிக்கும் மென்னிறக்கைகள் கையை அழகாய் வருடி கூச்சமூட்ட, கலீரென நகைத்தாள் அஞ்சனா. வரிசைப்பற்கள் மினுமினுக்க அவள் உகுத்த சிரிப்பு அவனைக் கட்டிப் போட்டிழுத்தது. அப்படியே அக்காட்சியை அலைபேசியில் அழியாமல் சேமித்துக் கொண்டான்.

 

“உனக்கு பிடிச்சிருக்கா அம்மு? இந்த குஞ்சை எடுத்துக்கலாமா?” அவள் ஆசையறிந்து கேட்க,

 

“ஆசையா தான் இருக்கு அபய். ஆனா அதோ பாரு அதோட தாய் நிக்குது. அம்மாவையும் குஞ்சையும் பிரிச்சு வைக்க கூடாதில்லயா? விட்டுறலாம்” அதன் தாயருகே மெதுவாக இறக்கி விட்டாள்.

 

தாயை இழந்து அவளுக்குண்டான ஏக்கம் இதற்கு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்திற் கொண்டு அவள் கூறியதை தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டு அவளோடு சேர்ந்து நடந்தான்.

 

திரும்பி அந்த குஞ்சைப் பார்க்கும் போது அதற்கு தாயைப்பறவை தன் அலகால் இரையை ஊட்டிக் கொண்டிருந்தது. தாயின் அருகாமை கிடைத்த மகிழ்வில் சின்னஞ்சிறு சிறகுகளை சடசடவென அடித்துக் கொள்ளும் காட்சி பார்க்கவே மனதை நெகிழ்வித்தது.

 

சற்று தூரம் நடக்கவே நிதினின் வயலை அடைந்தனர். விவசாயிகள் வேலையை முடித்துச் சென்றிருக்க கொக்குகள் இரண்டு ஒற்றைக் கால் மடக்கி நின்றிருந்தன.

 

அதனைக் கண்டு மென்னகை பூத்தான் ருத்ரன். அதே சிரிப்பு அஞ்சனாவின் முகத்திலும் படர்ந்தது.

 

“என்னாச்சு அபய்? ஏன் இந்த திடீர் சிரிப்பு?” காரணம் அறியாவிடினும் இதழ் சிரிப்பு அவளில் இன்னும் அதிகமாய் துளிர்த்தது.

 

“உன்னைப் பார்க்க முன்னாடி நித்தி சொன்னானே வயல்ல தேடினா கொக்கு தான் கிடைக்கும்னு. ஆனா பக்காவா எனக்கேற்ற மாதிரி ஒரு பொண்ணு கெடச்சுட்டா. அதை நெனச்சேன் சிரிச்சேன்” அக்கூற்றில் இருவரின் புன்னகையின் பரப்பளவும் இரு மடங்கானது.

 

“நீங்க அந்த கொக்கு மாதிரி உங்க காதல் மேல நம்பிக்கை வெச்சு ஒத்த கால்ல நின்னீங்க. அதான் எனக்கும் சிரிப்பு வந்துருச்சு” தன் புன்னகைக்கான காரணத்தை அவளே கூறினாள்.

 

“ஹா ஹா” அட்டகாசமாய் அவன் நகைக்க, சட்டென எக்கி அவன் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள் பெண்.

 

இரண்டு மீற்றருக்கு அப்பால் கிளை பரப்பி வளர்ந்திருந்த விருட்சத்தின் அருகில் சென்று வளைந்திருந்த கொப்பை இழுத்துப் பிடித்தான் ருத்ரன். உட்கார்வதற்கு லாவகமாய் வளைந்து நீண்டிருந்து அக்கிளை.

 

தானும் உட்கார்ந்து அவளுக்கும் கை கொடுத்து அமர வைத்தான். அதிலிருந்து பார்க்கும் போது அஞ்சனாவுக்கு புருவங்கள் மேலேறி இமைகள் பெரிதாக விரிந்தன.

 

தந்தையுடன் வாழும் போதும் சரி, தனிமையைத் துணை கொண்ட போதும் சரி இயற்கை மீது ஈடுபாடு கொண்டிருந்தாலும் கூட வீட்டை விட்டு அதிகம் வெளிச்சென்றதில்லை. வீட்டு முற்றத்திலிருந்து வானை ரசிப்பவளுக்கு இவ்வாறான வயல்களுக்கு வந்து பெரிதும் அனுபவம் இல்லை.

 

ஆனால் இன்று கொள்ளயழகு கண்முன்னே!

நீல பட்டுச் சேலையுடுத்தி, அஸ்தமிக்கும் சூரியனை பொன்மஞ்சள் சந்தனமாக கன்னத்தில் பூசி இன்னும் சில நொடிகளில் நிலவு மகளைப் பிரசவிக்கக் காத்திருக்கும் நிறை மாதக் கர்ப்பிணியாய் சிரிக்கும் வானமங்கை!

 

பச்சைப் பாவாடை போர்த்தி இளந்தென்றலில் தலையாட்டி காண்போரை வருக வருகவென வரவேற்பு கீதம் இசைத்து அரவணைத்திடும் வயல்!

 

இரை தேடிய மகிழ்வில், தம் குஞ்சுகளைக் கொஞ்சித் தீர்க்கும் ஆவலுடன் வானுயர வட்டமிட்டு வேடிக்கை காட்டிப் பறக்கும் வண்ணப்பறவைகள்!

 

எழில்கள் அருவியாய் கொட்டிக் கிடக்கையில் எதை ரசிப்பது எதை விடுவது எனத் தெரியவில்லை. பேராசை மிகக் கொண்டவளாய் அனைத்தையும் விழிகளால் அள்ளிப் பருகினாள் அஞ்சனா.

 

“அழகா இருக்கு அபய். இவ்ளோ நாள் இதையெல்லாம் மிஸ் பண்ணிருக்கேன். மனசுல பாரமே இல்லாம எல்லாம் மறந்து சந்தோஷமா உணர்றேன்” அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

 

“ஆமாம் அம்மு! நானும் நித்தியும் இங்கே வந்து பேசிட்டு இருப்போம். அவன் இல்லாத நேரத்திற்கும் தனியா வந்து ரசிச்சு பார்ப்பேன். இனி உனக்கு தோணும் போது சொல்லு. கூட்டிட்டு வரேன்” அவளை இவ்வாறு சந்தோஷமாகப் பார்ப்பதே அவனுக்கு ஏதோ சாதித்து விட்ட திருப்தியைக் கொடுத்தது.

 

மனைவியின் மனமறிந்து தேவைகளை நிறைவேற்றி, அவளை மகிழ்வித்து, அதில் தானும் மகிழும் கணவன் கிடைத்தால் அதனைத் தவிர வேறென்ன வேண்டும்?

 

“இப்படி உட்காரும் போது எனக்கு ஒரு ஆசை வரும். அதாவது உன் கூட இங்கே வந்து பாட்டு கேட்கனும்னு. அதை இப்போ செய்ய போறேன்” எனக் கூறி தனது அலைபேசியை எடுத்தவன் அவள் நயனங்களையே ஆழ்ந்து பார்த்தவாறு ஒரு பாடலை ஒலிக்க விட்டான்.

 

🎶 உன் விழிகளில் விழுந்த நாட்களில்…

நான் தொலைந்தது அதுவே போதுமே…

வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…🎶

 

🎶 உன் உயிரினில் கலந்த நாட்களில்…

நான் கரைந்தது அதுவே போதுமே…

வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே… 🎶

 

🎶 என் கனவினில் வந்த காதலியே…

கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே…

நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்…

என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்…

நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்…

அட உன்ன வாங்கிட்டேன்… 🎶

 

🎶 நீ தினம் சிரிச்சா போதுமே…

வேற எதுவும் வேணாமே…

நான் வாழவே…

நான் உன்ன ரசிச்சா போதுமே…

வேற எதுவும் வேணாமே…

நான் வாழவே… 🎶

 

🎶 காற்று வீசும் திசை எல்லாம்…

நீ பேசும் சத்தம் கேட்டேனே…

நான் காற்றாய் மாறி போவேனே அன்பே… 🎶

 

இளஞ்சூட்டைச் சுமந்த காற்று மேனியைத் தழுவ, இணையின் கரம் கோர்த்து, இமைகள் மூடியபடி செவி வழியே இசையை ரசித்தனர்.

 

தன் பல நாள் ஆசை, அவள் மடியில் தலை சாய்த்து பாடல் கேட்பது. அது நின்று நிறைவேறியதில் இதயம் இறக்கை விரித்துப் பறந்தது ஆடவனுக்கு.

 

“அம்மு….!!” என்று அழைத்தவனை இமைகளை மெல்லமாய் விரித்து தலை குனித்துப் பார்த்தாள்.

 

அந்த விழிகள்!

தன்னைக் கவர்ந்து காதலை தன்னுள் உட்செலுத்திய காந்த விழிகள்!

 

அவற்றையே விழியகற்றாமல் நோக்கியவன் கழுத்துயர்த்தி அவளது மாம்பழக் கதுப்புக் கன்னங்களில் முத்தமொன்று பதிக்கவும் தான் செய்தான். அவளது பூவிதழ்களில் பூத்தது அழகிய புன்னகைப் பூவொன்று. 

 

“அலைபாயும் உன் விழிகளில், பித்துப் பிடிக்குதடி

என்னிதயம் செத்துப் பிழைக்குதடி

நித்தம் உன் முத்துச் சிரிப்பினிலே

என் சித்தம் மாறுதடி

கன்னத்தில் முத்தம் தருகையிலே

புது ரத்தம் ஊறுதடி

எனக்கென சொத்தாய் வந்தவளே!

மொத்தமும் உன்னில் வீழுதடி”

 

பளிச் பளிச்சென்று கண்சிமிட்டித் தோன்றும் விண்மீனை ஒத்த அவளின் அஞ்சன விழிகளுக்கு முன் கணவன் கவிஞனாயும் உருமாறி நின்றான்.

 

தொடரும்……..♡

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!