🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 23
நிலா தேவி விண்மீன்கள் புடைசூழ ஆகாய சிம்மாசனத்தில் சிம்ம சொப்பனமாய் அமர்ந்து செங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் நீதி வழுவா ஆட்சியில் பூமி தேசமும் ஒளி பெற்று மகிழ்ந்தது.
திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்து மடியில் ஊன்றிய இரு கைகளாலும் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள் அஞ்சனா.
சுஜித்தின் வீட்டினர் வந்து அவனைத் தனக்கு முடிவாக்கி நிச்சயத்திற்கு தேதி குறித்துச் சென்ற நாள் அது. அவனோடு சில நிமிடங்கள் தனித்திருந்த சமயத்தை நினைத்துப் பார்த்தாள்.
அது அத்தனை உவப்பாக இருக்கவில்லை. வெட்கத்தில் தலை தாழ்ந்திருக்க வேண்டும், இனிய அவஸ்தையில் இமைகளை படபடவென சிமிட்டியிருக்க வேண்டும், இதயம் இரட்டிப்பாக எகிறித் துடித்திருக்க வேண்டும், பேச நினைத்த வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கி சுகந்தமான காற்று வினாவாகியிருக்க வேண்டும், மௌனம் ரகசியம் பேசியிருக்க வேண்டும், விழிகள் மொழிகள் புனைந்திருக்க வேண்டும்…
இவ்வாறு ஏராளமான வேண்டும்’கள் நடக்காமல் போனதே! சுஜித்தை மறுக்க காரணம் இல்லாத அதே சமயம் அவனை விரும்புவதாக, தனக்குப் பிடித்திருப்பதாக யூகிக்கவும் காரணங்கள் இருக்காமல் இருந்தது மாயையாக இருந்தது.
அதே மாய வலையில் இருந்து விடுபடாதவளாக துயில் கொண்டாள் அஞ்சனா.
“தூங்கி எழும்போது அவர் முகம் மனசுல வருதானு பார்ப்போம்” எனும் எண்ணத்தோடு தூங்கியவள் காலை விழி மலர்த்தும் போது மனதினுள் பூவாக மலர்ந்தது ஆடவனின் உருவம்.
முதுகு காட்டி நின்றிருந்தவனை கண்டதும் அவன் சுஜித் இல்லை என்பதை அறிய ஒற்றை நொடி தேவைப்படவில்லை. அது யார் என அறியும் நோக்கில் மூளையை கசக்கிப் பிழிய நேரம் எடுக்கவும் இல்லை.
ஆம் அது சாட்சாத் ருத்ரனே தான்.
நேற்று அவள் வீடு வந்து தண்ணீர் வாங்கி சிறுவனுக்கு புகட்டி விட்டுத் திரும்பியவனின் பின்புறமல்லவா அவள் கண்களுக்கு விருந்தளித்தது?
“அந்த ஆள் யாரு? எனக்கு ஏன் அவர் ஞாபகம் வரனும்?” புதிர் போட்டன வினாக்கள்.
யாரென்றே அறியாதவன், முகமறியா பெயரறியா ஆண்மகன். அதுவும் மீண்டும் அவனைக் காண்பதே அதிசயம் தான் அப்படியிருக்கையில் அவன் முகம் ஏன் தன் அகத்தில்?
அதே சிந்தனையோடு வழக்கம் போல் தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். பாடசாலை விடுமுறை என்பதால் மிச்சம் மீதி வைத்திருந்த ஏகப்பட்ட வேலைகள் கழுத்தறுத்தன. அவனைப் பற்றிய வினாக்கள் கூறு போடும் போது இடி இடித்து, அவன் நினைவு தீண்டும் போது மின்னல் மின்னிய பாவை மனதில் தூறல் விழத் துவங்கியது யன்னல் வழியே எதிர்வீட்டு பல்கணியில் தெரிந்த ஓர் ஆடவனின் உருவத்தில்.
“இ..இது அவரா?” என்றுமில்லாத எதிர்பார்ப்பு மண்டிக் கிடக்க இமைகளை கிஞ்சித்தும் அசைக்காமல் பார்த்திருக்கையில் அவன் வதனம் அருட்காட்சி தந்ததும் தூறல் சாரலாகி பெரும் ஆரவாரத்துடன் பொழிந்தது அவள் நெஞ்சில் மாமழை!
ஆர்ம் கட் டிசர்ட்டும் போட்டமும் அணிந்திருந்தான். மேனியை ஸ்பரிஷித்துச் செல்லும் சிலுசிலு தென்றலில் அவன் முடிகள் நெற்றியைத் தொட்டுத் தீண்டி சில்மிஷம் புரிந்ததில் விரல்களை உள்நுழைத்து அவன் தலை கோதிய பாவனையில் தன்னிலை மறந்து நின்றாள் அஞ்சன விழியாள்.
டிசர்ட்டையும் தாண்டித் தெரியும் கட்டுமஸ்தான தேகமும், திரண்ட புஜங்ளும் அவளில் நாணப் பூக்களை கொத்துக் கொத்தாக மலர வைத்தன.
ஏனென்றே தெரியாமல், அந்நொடி தானே அறியாமல் தன் அன்புப் பெண்ணை ஆகர்ஷித்திருந்தான் ருத்ரன் அபய்.
அவனைப் பார்த்த அஞ்சனாவுக்கு இந்த காந்த விசை கொண்ட கட்டிளங்காளை யாரென அறியும் அளவில்லா ஆவலும் தான் முகிழ்த்தது.
பக்கவாட்டுத் தோற்றத்தையே கண்டவளுக்கு நேரிடையாக அவன் முகத்தைக் காண இருதயம் துடித்தது. அவன் உள்ளே சென்று விட ஏமாற்றமும் தழுவிக் கொள்ளலாயிற்று.
“அஞ்சு டீச்சர்” எனும் அழைப்போடு சுடிதாரை இழுத்துக் கொண்டிருந்த சிறுவனைக் கண்டு புன்முறுவல் பூத்தாள்.
“வாடா குட்டி வாண்டு! நேற்று ரோட்ல புட்பால் மேட்ச் ஆடுனியாம். கொஞ்சம் தவறி இருந்தா இடிக்க வந்த வாகனம் உன்னை தூக்கி உதைச்சு புட்பால் ஆடியிருக்கும்” கிண்டலாக சிரித்தபடியே கூறியவள்,
“இனிமே பார்த்து கவனமா இரு பேபி! என் செல்ல குட்டிக்கு ஏதாச்சும்னா நான் அழுவேன் பாரு” அவனது கொழுக் மொழுக் கன்னங்களை கஞ்சத்தனமின்றி பிடித்து ஆட்டினாள்.
“சாரி சாரி அஞ்சுக்கா! இனிமே கலர்புளா இருப்பேன்” என்றதும், “கலர்புளா?” என புருவம் சுருக்கினாள் அவள்.
“ஆமா. என்னை காப்பாற்றின அங்கிள் அப்படி தான் எத்தனையோ தடவை சொன்னார். கலர்புள்ளா இருக்கனும்னு” அபய் கூறியது போல ஒப்புவித்தும் காண்பித்தான்.
“ஹேய் பெரிய மனுஷா! அது கலர்புள் இல்லை, கேர்புள். அப்படினா கவனமா இருக்கனும்னு அர்த்தம்” குறுஞ்சிரிப்பு இதழ்களில் ஒட்டிக் கொள்ள சின்னவனின் பேச்சு காரணமானது என்றால், அதன் பரப்பு விஸ்தரிக்க அந்த அங்கிள்’ அதாவது அபய்யின் நினைவு ஏதுவாயிற்று.
“ஏதோ ஒன்னு டீச்சர். ஆனா அந்த அங்கிள் சூப்பர். என் மேல ரொம்ப பாசம். உங்களை பார்க்க வந்த மாப்பிள்ளைய விட அழகா சிரிச்சிட்டே இருக்கார்” ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளினான் அவன்.
“அப்படிங்கிற” என்றவளுக்கு சுஜித்தின் நினைவு வந்தது. இது தவறல்லவா அவனை நிச்சயிக்க முடிவு செய்த பின் வேறொருவனை நினைப்பது சரியல்ல என அபய்யின் சிந்தனையை புறந்தள்ளி விட முடிவு செய்தாள்.
நினைத்தாலும் அத்தனை சுலபமாக அதனை நடைமுறைப்படுத்தத் தான் முடியவில்லை. சின்னவன் வேறு அஞ்சுக்கா, அஞ்சு டீச்சர் என்று விதவிதமாக அழைத்து ருத்ரனைப் பற்றியே புகழ்பாட இவளுக்குத் தான் அய்யோ என்றானது.
மதிய வேளை பசி வயிற்றைக் கிள்ளியது. தோசை மாவு இருக்க அதனைப் பிசைந்து தோசைகளை சுட்டெடுத்து சட்னி அரைத்தாள். வழமைக்கு பிஸ்கட்டை கொறித்து விட்டும் இருந்ததுண்டு.
தந்தை இருக்கும் போது லிஸ்ட் போட்டு அவரோடு கதையளந்து கொண்டு ருசியாக வகைவகையாக சமைப்பாள். அவருக்குப் பிறகு தான் அவள் வாழ்வே மாறியதே, உணவுப்பழக்கம் மட்டும் விதிவிலக்கா என்ன?
வழமைக்கு மாற்றமாக இன்று மனம் குதூகலிக்க சமைத்தவளின் உள்ளம் எதிர்வீட்டில் வாடகைக்கு இருக்கும் புதியவனின் நினைவைத் தான் பாசமாக தத்தெடுத்திருந்தது.
“கூப்பிட்டீங்களாக்கா?” கீச்சுக் குரலோடு கிறீச்சிட்ட சிறுவன், “ம்ம்ஹாஆஆ! என்னா வாசனை? எனக்கு இதை கட்டி தாங்க” தோசையின் மீதான ஆசை அவனுக்கு நாவில் எச்சில் ஊறச் செய்தது.
“வேணும்னா ஆஆ காட்டு ஊட்டி விடுறேன்”
“இல்லை டீச்சர். எனக்கு இல்லை அங்கிளுக்கு. அவர் பசிக்குதுனு ஆர்டர் பண்ண போனதும் நான் வேணாம்னு சொல்லிட்டு உங்க கிட்ட கேட்க வந்தேன். நீங்க டேஸ்டா சமைப்பீங்களே”
“அடேய் என் லட்டு குட்டி! அவருக்கு கொடுக்க தான் இதை பண்ணுனேன். நீ கொடுத்துட்டு வர்றியா” லன்ச் பாக்சில் தோசைகளை அவனுக்காக வைத்துக் கொடுத்தாள்.
“நீங்க அங்கிளை லவ் பண்ணுறீங்களா?” திடுமென பிறந்த கேள்வியில் திகைத்து நின்றாள் பெண்ணவள்.
“ஆமா என் லவ்வர் தான். அப்படியே வாயிலே ஒன்னு போட்டேன்னா..” அவன் கன்னத்தில் செல்லமாக அடித்து விட்டு, “வயசுக்கு ஏத்த பேச்சா பேசுற? குட்டி டார்லிங்! லவ்வுனா அன்பும் அடங்கும்? ஏனோ அவர் மேல அன்பு வருதுடா” நெஞ்சை நீவிக் கொண்டவள் அவனை அனுப்பி வைத்தாள்.
அதனை எடுத்துக் கொண்டு சென்றவன் ருத்ரனிடம் கொடுக்க அதனைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான் ருத். வயிற்றை வேகுவித்த பசியை பஞ்சாக பறக்கச் செய்து விட்டது அவனவளின் கைப்பக்குவம்.
“ப்பாஹ் சூப்பரா இருக்கு குட்டி. உன் அம்மாவுக்கு நன்றி சொல்லு” குளிர்ந்த நீரால் தொண்டையை நனைத்துக் கொண்டான்.
“அம்மா இல்லை. எங்கக்கா செஞ்சது. உங்க கிட்ட கேட்டேனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி” நினைவுறுத்தியவனின் பேச்சில், “ஓஓ அவங்களா?” என்றவனுக்கு அவளைப் பார்க்கும் ஆவல் மேலெழத் தான் செய்தது.
அவனைப் பற்றிய யோசனையில தான் இவளும் இருந்தாள்.
“ப்பா! எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. அவர் யாரு? ஏன் எனக்கு அவர் ஞாபகமாவே இருக்கு. சுஜித் கூட கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கொடுத்த பிறகு இதெல்லாம் ஏன்?” மனதினுள் தந்தையுடன் பேசினாள்.
“சுஜித்கு எவ்ளோ எதிர்பார்ப்போட கால் பண்ணேன். ஆனா ஏதோ கடமைக்குனே பேசுறார். சந்தோஷமே இல்லை அவர் பேச்சுல. பிசினஸ்னு அதை கட்டிக்கிட்டு இருக்கார். உங்க கிட்ட கேட்டு கேட்டு எனக்கும் காதல் மேல அவ்ளோ ஆசை. ஆனா சுஜித் அதுக்கு ஒத்து வர்ற மாதிரி இல்லை.
“அம்மாவை நீங்க எப்படி லவ் பண்ணீங்களோ அதே மாதிரி என்னை காதலிக்க கூடிய ஒருத்தர் தான் எனக்கு வேணும். உங்களை மாதிரி என்னை கவனிச்சுக்கனும்” என்றவளுக்கு அவனை நினைக்காதிருக்க முடியவில்லை.
காதல் இவ்வாறான உணர்வுகளில் ஆழ்த்திடக் கூடும் என்ற உணர்வு சுஜித்திற்குப் பதிலாக இவன் மீது தோன்றியது. குழப்பத்தில் இருந்தவளால் அதனை உணர முடியவில்லை.
அதே குழப்பம் நிச்சயதார்த்தத்திற்கு ஆயத்தமாகும் போதும் தொடர்ந்தது. முழு மனதோடு எதிலும் ஈடுபட முடியாது போயிற்று. எவ்வளவு தடுத்தாலும் தங்கு தடையின்றி ஆட்டம் போட்டன அந்த நெடியவனின் நினைவுகள்.
தாமரையுடன் கோயிலுக்கு சென்றவள் நேரே போய் தன் இஷ்ட தெய்வத்தை வணங்கினாள்.
“மனசு படபடனு இருக்கு. யார்னே தெரியாத ஒருத்தர் நினைவு அடிக்கடி வருது. ஏன் இப்படி? எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. என் வாழ்க்கையில் எதுவோ நடக்க போற மாதிரி உணர்வு வருது. உனக்கு தான் எல்லாம் தெரியும். நீயே பார்த்துக்க சாமி” மனமுருகி வேண்டிக் கொண்டாள் அஞ்சனா.
அவ்வாறு யோசனையோடு நடந்தவள் தன்னை யாரோ திடீரென கட்டியணைத்துக் கொள்ளவும் உடல் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தாள். பக்கவாட்டு முகம் பார்வைக்கு புலப்படவே அது யாரென அறிந்தவளுக்கு நின்றிருந்த மூச்சு சீராகத் தான் செய்தது.
முழுதாக அவன் முகத்தைக் கண்ட அஞ்சனா பேரதிர்ச்சி அடையலானாள். ஆச்சரியமும் ஆனந்தமும் போட்டி போட அளப்பரிய அதிர்ச்சியில் மெலிதான சிலிர்ப்பும் அவளுள் ஊடுருவியது.
“ப்பா….!!”
இதயம் எக்குத் தப்பாகத் துடிக்க அவளிதழ்கள் மெல்ல அசைந்தன. தந்தையை அச்சில் வார்த்து நிற்கும் இவனுக்கும் தனக்கும் ஏதோ முடிச்சை விதி போட்டு விட்டதாக எண்ணினாள்.
அவனின் அணைப்பு இறுக, சுற்றிப் பார்த்தவளுக்கு எல்லோரும் தம்மைப் பார்ப்பதாக உணர்வு தோன்ற தள்ளி விட்டாள். ஆச்சரியம் ஒரு புறம் என்றால் அறிமுகமில்லாத தன்னை எங்கனம் அனுமதியின்றி அணைப்பான் என்ற காரணத்தால் சீறிச் சினந்தாள்.
அறிமுகமில்லாதவள் அல்ல!
தன் அறிமுக சரிதத்தையே தன்னால் இழந்தவன் அவன் என்பதை அவள் அறியாள் அல்லவா?
தன்னால் அவனையே மறந்தவன், தன்னை நினைக்கவே பிறந்தவன், தனக்காக வாழ்பவன், தன் மீது எல்லையற்ற அன்பு பூண்டவன், தன்னை உலகமாகக் கொண்டவன்…
இவ்விதம், அம்மு அம்மு என்று தன்னையே உயிர்மூச்சாகக் கொண்டுள்ள காதல் பித்தன் இந்த ருத்ரன் அபய் என்பதை அஞ்சன மங்கை அறியவில்லையே?!
நிச்சயதார்த்தம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற போதும் அவன் ஞாபகம் தான். இன்னும் தன் மீது அவனின் வாசமும், ஸ்பரிஷம் தந்த கதகதப்பும் இருப்பதாக உணர்ந்தாள் ஊர்வசியவள்.
“இவர் நினைப்பாவே இருக்கிறது ஏன்? யாரிந்த பையன்? அப்பா மாதிரி இருக்கிறதால மனசு இப்படி ஏதேதோ நினைக்குதா?” பதிலறியா வினாக்கள் இனம் புரியாத உணர்வுகளை உள்ளத்தில் குவித்தன.
அடுத்து நிகழ்ந்ததெல்லாம் அதிசயங்கள் எனலாம். யாரையோ நிச்சயிக்க வந்து அது நின்று போய் சுஜித்தின் தாயின் பேச்சுக்கும் தக்க பதிலடி கொடுத்தாயிற்று.
அதிலிருந்து மீளும் முன் மற்றொரு அதிர்வலையை ஏற்படுத்தியது தாமரையின் செயல். அதற்கும் மேலாக மறுப்புச் சொல்லாமல் மங்கல நாண் பூட்டி மனைவியாக ஏற்றுக் கொண்ட ஆடவனின நடத்தை பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது எனின் மிகையாகாது.
அவனன்றி வேறு யாராக இருந்தாலும் தாமரை கூறினாலும் கழுத்தை நீட்டியிருக்க மாட்டாள். கண்ணுக்குத் தெரியாத பந்தம் இவனோடு தனக்குள்ளது என்பதை அவன் தன் கண்களைப் பார்த்து தாலி கட்டிய நொடியில் ஆணித்தரமாக உணர்ந்து கொண்டாள்.
ஆக! அச்சம் ஏதுமின்றி அவன் கைப்பிடித்து வீட்டிற்கும் சென்றாள். அவளுக்கு அவன் காதல் தெரியவரவும், அவன் மீது அக்காதல் தரு முளைக்கவும் வெகுநாட்கள் பிடிக்கவில்லை.
இதனைக் கூறி முடித்ததும் ருத்ரனால் நம்ப இயலவில்லை. சில போது ஒன்று நடக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிந்தும் அதிசயமாகவாவது இப்படி நடந்து விடாதா என ஏக்கம் கொள்ளும் நம் மனது.
அது அவ்வாறிருக்க, வேறு சில விடயங்கள் நாம் எதிர்பாராமல் நிகழும் பொழுது ஆச்சரியத்துடன் கூடிய அதிர்விலிருந்து மீட்சி பெற கண நேரத்தை பறிகொடுக்க வேண்டியிருக்கும்.
“எப்படி இருக்க? ஸ்கூல் போறியா?” தன்னை மடியில் அமர்த்தி கேட்ட அஞ்சுவுக்கு,
“போறேன் டீச்சர். ஆனா நீங்க இல்லாம போரடிக்குது. புது டீச்சர் திட்டுறாங்க” மூக்கை சுருக்கினான் சின்னவன்.
“யாரும் சும்மா திட்ட மாட்டாங்க செல்லம். ஏதாவது காரணம் இருக்கலாம். அடுத்த விஷயம் என்னன்னா என்னோட ஒப்பிட்டு பார்க்காம அந்த டீச்சர மேல அன்பும் மரியாதையும் வெச்சு ஆசையோட படி. அப்போ அந்த டீச்சரும் உனக்கு அஞ்சு டீச்சர் மாதிரி தான் தெரிவாங்க” அவள் முடியை சிலுப்பி விட, தலையசைப்புடன் ஆமோதித்தான்.
கன்னம் தொடும் முடியின் கூச்சத்தில் கண்களை சுருக்கி முடிக்கற்றையை காதோரம் சொருகி விட்ட அழகில் மையல் கொண்டது மன்மதனின் மனம். வனப்பு மிக்க விழிகளின் வித்தையில் வீழ்ந்து போனான் ருத்ரன்.
அவளுக்குத் தான் அவனது குறுகுறு பார்வையில் அவஸ்தையாகிப் போனது. கண்களை விரித்து முறைக்க, “முட்டக்கண்ணி! முறைக்கும் போதும் கியூட்டா இருக்காளே” அவள் கண்களைக் களவாடி நின்றான் காதல் கண்ணாளன் அவனும்.
சின்னவன் சென்று விட, “என்ன அப்படி பார்க்குறீங்க? கண்ணா? அது வேற ஏதுமா?” சமயம் பார்த்திருந்தது போல் கீச்சுக் குரலில் கத்தினாள்.
“அதை நான் கேட்கனும். கண்ணா?இல்லை உலகத்தில் இருக்கக் கூடிய அத்தனை ஈர்ப்பு விசையையும் அடக்கி வெச்சுக்கிட்ட காந்தமா?” கன்னத்தில் கைவைத்து அவளது அழகு நயனங்களை கவர்ந்திழுத்தான் அபய்.
அந்தோடு விடவில்லை. கவிதையும் படித்தான்.
“புவியீர்ப்பு விசையும் தோற்றே போகும், நின் நீள் விழிகளின் காந்த விசைக்கு முன்னே!”
“நல்லா பொய் பேசுறீங்க. கவிதைக்கு பொய் அழகல்லவா கவிஞரே?!” தாடை தூக்கி அவனை ஏறிட்டாள்.
“கவிதைக்குப் பொய்யழகு. கண்களுக்கு மை அழகு. ஆனால் உன் கண்களை பற்றி பாடும் போது மெய்யும் அழகு. அந்த கவிதையே அழகு. சாதாரண அழகு இல்லை, அசாத்தியமான அழகு! அப்பப்பா பேரழகு” அவனுக்கு அபயமளித்த அஞ்சன விழிகள் அல்லவோ அவை! இல்லாவிடின் வேறெப்படி பேசுவானாம்?
“உயர்வு நவிற்சி அணியைக் கூட விடல நீங்க” களுக்கென நகைத்தாள் அஞ்சனா. ஆனாலும் அவனது வர்ணிப்பால் மனதில் ஊற்றெடுத்த சந்தோஷத்தோடு கூடிய வெட்கம் முகத்திலும் சற்றே வர்ணமிடத் தான் செய்தது.
“கைவிட மாட்டேன். எனக்கே தெரியாமல் என்னை சைட்டடிச்சு இருக்க. இந்த தப்புக்கு தண்டனை தர வேண்டாமா?”
தப்பா? தண்டனையா? என்று கேட்க முன்பே அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் ஒற்றி தண்டனையின் முதற்படியை நிறைவேற்றி இருந்தான்.
அவளது கையைப் பிடித்து, “இது எனக்கு ருசியா சமைச்சு நாக்கை கெடுத்ததற்கு” என இதழ்களை பட்டும் படாமல் பதித்தான்.
“என்னை தினமும் களவாடி, பார்வையால கொன்னு, அன்னிக்கு எனக்கே தெரியாம உன் வீட்டிலிருந்து என்னை கொள்ளையடிச்சதுக்கு பெரிய தண்டனை” அத்தனை தவறுகளுக்குமாக தனக்குப் பிடித்த அவளின் விழிகளில் ஆழமாக முத்தமிட்டான்.
கன்னங்களைக் கையில் ஏந்தி “அடிக்கடி முடியால மறைச்சுக்கிட்டு எனக்கு சைட்டடிக்க விடாம டிஸ்டர்ப் பண்ணுறதுக்கு நெற்றிக்கும் தண்டனை இருக்கு” வாயினுள் காற்றை சேகரித்து இதழ் குவித்து ஊதி முடியை அகற்றி அவளின் பிறை நுதலில் இதழ் ஆயுதத்தால் இனிய தண்டனை விதித்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால மாமானு கூப்பிட்டு இதயத் துடிப்பை கூட்டி ஆபத்தில் சிக்க வைத்ததற்கு, கவிதைக்குப் பொய்யழகுனு சொல்லி இந்த அப்பாவி மனசை உடைச்சதுக்கு இந்த லிப்ஸ்க்கும் என் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது” செவ்விதழ்களை சட்டென சிறைப்பிடித்து அனைத்து தப்புகளுக்கும் ஒருசேர இனிய தண்டனையை தப்பாமல் வழங்கத் துவங்கினான் காதல் காவலன்.
தவறுக்காக தண்டனை பெற்று அதனை அவனுக்கும் திருப்பிக் கொடுத்து மதுவுண்ட வண்டாக மதிமயங்கி நிற்கலானாள் அபய்யின் காதல் கைதியானவள்.
தொடரும்……….!
ஷம்லா பஸ்லி