56. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 56

 

“பூக்குட்டி! பேசு டி செல்லக் குட்டி” மனைவிக்கு அழைத்து கொஞ்சிக் கொண்டிருந்தான் ரோஹன்.

 

“பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு பூக்குட்டி நாய்க் குட்டினு கொஞ்சினா நான் மயங்கிப் போயிருவேனா?” நொடித்துக் கொண்டாள் அவள்.

 

“நீ மயங்க மாட்ட! ஆனால் என்னை மாயமா மயக்கி உனக்குள்ள மொத்தமாக விழ வெச்சுருவ” குழையும் குரலில் உரைத்தான் ஆடவன்.

 

“மயக்க மாட்டேன் டா. இப்போ இருக்கிற கடுப்புக்கு என் பக்கத்துல வந்தா நடக்கிறதே வேற” கடுகாகப் பொரிந்து தள்ளினாள் பூர்ணி.

 

“அப்போ கண்டிப்பா வருவேனே” எனும் குரல் அருகாமையில் கேட்கவும் சடாரென திரும்பிப் பார்க்க, அறைக் கதவில் சாய்ந்து கொண்டு அவளைப் புருவம் தூக்கிப் பார்த்தான் ரோஹி.

 

“வந்துட்டாரு மைசூர் மகாராஜா” முறைப்போடு உதட்டைச் சுளிக்க, “சீக்கிரம் சீக்கிரம்” என அவளை நெருங்கி வந்தான்.

 

“என்ன சீக்கிரம்?” புரியாமல் நோக்கினாள் அவள்.

 

“நான் உன் பக்கத்தில் இருக்கனும்னு ஆசைப்பட்டியே. அதனால தான் ஓடோடி வந்தேன். இப்போ குயிக்கா பண்ணு” கைகளை விரித்துக் காட்டினான்.

 

“எது பண்ணனும்? தெளிவாக பேசவே மாட்டியா நீ?” புரியாத பாவனையுடன் அவனை ஏறிட்டாள் பாவை.

 

“நான் உன் பக்கத்தில் வந்தால் நடக்கிறதே வேற என்று சொன்னியே. அதான் அதை நடத்திக் காட்ட சொன்னேன்” என்று கரகரப்பான குரலில் ரகசியம் பேசியவனைக் கொலைவெறியுடன் முறைத்துத் தள்ளினாள் மனைவி.

 

“இவ்ளோ பாசமா பார்க்காத டி. ஃபர்ஸ்ட் டைம் எனக்கு வெட்கமா வருது” வெட்கம் கொள்வது போல் செய்தவனின் செய்கையில் முணுக்கென சிறு சிரிப்பு எட்டிப் பார்த்தது அவள் இதழில்.

 

“போடா! உன் கூட கொஞ்ச நேரம் கோபமாகவே இருக்க முடியல” என்று அங்கலாய்த்துக் கொண்டவளை இழுத்துத் தன் கைவளைவுக்குள் நிறுத்திக் கொண்டான் ரோஹன்.

 

“எனக்குத் தெரியும் டி செல்லக் குட்டி” அவள் நெற்றி முட்டினான்.

 

“இன்னிக்கு கோயிலுக்கு கூட்டிட்டு போக சொல்லி நைட் சொன்னனே. எழுந்து பார்த்தா நீ இல்லை. அதான் கொஞ்சம் கோபம் வந்து சண்டை போட்டேன். சாரி” உடனே மன்னிப்புக் கேட்டு அவன் மார்பில் அடைக்கலம் புகுந்தாள் பெண்.

 

“ச்சு என்ன இது? என் கிட்ட மன்னிப்பு கேட்பியா நீ?” கோபத்துடன் பார்வையை எங்கோ செலுத்தினான் அவன்.

 

“அச்சோ கோபம் வந்துருச்சா? என்ன பண்ணனும் கோபம் போக?” அவன் முகத்தை உற்றுப் பார்க்க,

 

“ஒன்னும் வேணாம்” என முறுக்கிக் கொண்டான் மன்னவன்.

 

“ஆனா எனக்கு வேணுமே. ஏதோ கேட்டியே சொன்னதை நடத்திக் காட்ட சொல்லி. அதை நடத்த போனேன். நீ வேணாம்னு சொன்னதால சும்மா இருக்கேன்” அவனை விட்டு நகர்ந்து செல்ல எத்தனித்தாள்.

 

“ஹேய் என்ன சொன்ன? என்ன சொன்ன?” கண்கள் பளிச்சிட அவள் இடை வளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் ரோஹன்.

 

“இது மட்டும் காதுக்கு கணக்கா கேட்றுமே. ஒன்னுமில்லை” முகம் திருப்பியவளை இதழுக்குள் விழுங்கிய நகைப்புடன் பார்த்தான்.

 

“பொண்ணுங்க ஒன்னுமில்லைனு சொன்னா அதில் ஆயிரம் விஷயங்கள் இருக்குனு அர்த்தமாம்” என்றவனை, “அப்படியா?” எனும் கேள்வியைத் தாங்கி ஏறிட்டாள்.

 

“எஸ்! பொண்ணுங்க இந்த விஷயத்தில் எது சொன்னாலும் அதை எதிர்மறையாக பார்க்கனும். வேணாம்னா வேணும்னு அர்த்தம், போக சொன்னா வர சொல்லி அர்த்தம்” தன்னவள் மதிமுகத்தில் விரல்களால் கோடிட்டான் ரோஹன்.

 

“அப்போ வேணும்னு சொன்னா வேணானு அர்த்தமா?” என்று கேட்டாள்.

 

“வேணாம்னு சொல்லி விட வேணாம்னு அர்த்தம். அதாவது இன்னும் வேணும்னு. ஐ மீன்…” என சொல்ல வந்தவனைத் தடுத்து,

 

“மீன் கருவாடுனு ஆரம்பிச்சிடாத. உனக்கு என்ஜினீர் மூளை மாதிரி இல்லை என்னோடது. இந்த லெக்சரைக் கேட்டா கொஞ்ச நஞ்சம் இருக்கிற என்னோட மூளையும் ஏதாவது ஆகிரும்” என்று பேச வேண்டாம் என்பதாய் சைகை செய்தாள்.

 

“இப்போ நீ பேசுவதைக் கேட்டு எனக்கு ஒன்னு மட்டும் தெளிவாகுது. உனக்கு நான் பேசுவதைக் கேட்க நேரமில்லை. வேறு ஒன்னு வேணும்னு நினைக்கிற” 

 

“எனக்கு என்ன?” என்று கேட்கும் போதே அவள் இதழைச் சிறைப்பிடித்து அக்கேள்விக்கு பதிலை இதழ் வழியே கடத்தத் துவங்கியிருந்தான் காளை.

 

முதலில் உறைந்தாலும் பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனுக்கு ஈடுகொடுக்க ஆரம்பித்தாள் ரோஹியின் பூ.

 

சிறிது நேரம் நீண்ட முத்த யுத்தத்தை ரோஹனின் அலைபேசி ஒலிப்பு முடிவுக்குக் கொண்டு வர, மெல்ல விலகினர் இருவரும்.

 

கோயில் செல்வதற்காக வந்த பூர்ணி வீட்டுக்கு வெளியே வனிதா நிற்பதைக் கண்டு திகைத்து நின்றாள்.

 

அவளைக் கண்ட ரோஹனுக்கு அவள் பேசிய பேச்சுக்கள் நினைவில் உதிக்க முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு, “எதுக்கு இங்கே வந்திருக்கீங்க? கொஞ்சம் நிம்மதியா இருக்கிறதும் உங்களுக்கு பிடிக்கலையா?” கோபமாக வினவினான் ரோஹன்.

 

“உன் கோபம் நியாயமானது தான் ரோஹி. இருந்தாலும் நான் பூர்ணி கூட கொஞ்சம் பேசியே ஆகனும் ” என்ற வனிதா தனக்கு அருகில் வரவும் அனிச்சை செயலாக ரோஹனின் கரத்தைப் பற்றிக் கொண்டது அவள் கரம்.

 

“உன் கூட அண்ணி அண்ணினு பாசமா பழகி இருக்க வேண்டியவ நான். ஆனா இப்படி என்னைக் கண்டாலே உனக்குப் பிடிக்காத மாதிரி நிலமை ஆகிருச்சு. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். என்னோட வன்மம், பொறாமை, கோபம், வெறுப்பு இதெல்லாம் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு” குரலில் வருத்தம் மீதூறப் பேசிய வனிதாவை வாய் பிளந்து பார்த்தாள் பூர்ணி.

 

இப்படி எல்லாம் பேச வருமா இவளுக்கு? இது வரை அன்பாக அக்கறையாக ஒரு வார்த்தை பேசியதில்லை. கடுப்போடும் முகத்தைச் சுளித்துத் திருப்பிக் கொண்டும் தான் இருப்பாள்.

 

“என்னடி நடிக்கிறியா? இப்போ எதுக்கு படம் காட்டுற? உன் ட்ராமாவை நம்பி எல்லாம் மறந்து உள்ளே கூப்பிட்டு உறவு கொண்டாடி என் தலையில் நானே மண்ணள்ளி போட்டுக் கொள்ள மாட்டேன். இடத்தை காலி பண்ணு” சீற்றத்துடன் சீறினான்.

 

“போயிருவேன் ரோஹி! நீ கூப்பிட்டாலும் உள்ளே வர்ரதா இல்லை. என்னால எதையும் மறக்க முடியலை. உன் வாழ்க்கையை நான் பாழாக்கி பொண்டாட்டியைப் பிரியுற மாதிரி பண்ணிட்டேன். என்ன தான் பண்ணினாலும் அந்த நாட்களில் நீ இழந்த எந்த சந்தோஷத்தையும் மீட்டுத் தர முடியாது” அண்ணனிடம் கூறினாள் வனிதா.

 

“என்ன திடீர் ஞானோதயம் உனக்கு?” நம்பமாட்டாமல் விசாரித்தான் ரோஹன்.

 

“சொல்லுறேன். தப்புக்கு மேல தப்பு பண்ணுறவங்களை திருத்த முடியலைனா பட்டால் தான் புத்தி வரும்னு சொல்லி விடுவாங்களே. அது உண்மை தான். எனக்கும் பட்டதும் தான் புத்தி வந்தது” விரக்திச் சிரிப்பை சிந்திய வனிதா தொடர்ந்தும் பேச ஆரம்பித்தாள்.

 

“எனக்கு கல்யாணம் ஆகி பல வருஷம் ஆச்சு, ஆனால் குழந்தையே பிறக்கலை. போகாத டாக்டரே கிடையாது. என்ன பிரச்சனைனு தெரியலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஸ்பெஷல் டாக்டர் கிட்ட போய் செக் பண்ணுனோம்” என்றவள் பேச்சை நிறுத்த குரல் கமறியது.

 

ரோஹனுக்கு அவளைக் காண என்னவோ போல் இருந்தது. என்ன தான் தவறு செய்திருந்தாலும் உடன் பிறந்த பாசம் போகுமா? ஆனால் அமைதியாக இருந்தான்.

 

“என்னாச்சு வனிதா?” அடக்க முடியாமல் கேட்டே விட்டாள் பூ.

 

“என் கருப்பையில் ஏதோ ப்ராப்ளமாம். இப்போ மட்டுமல்ல இனி எப்போவும் என்னால குழந்தை பெத்துக்க முடியாது. எனக்கு ஒருபோதும் தாயாக முடியாது” வாயில் கை வைத்து அழுதாள் வனிதா. அவள் கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிந்தது.

 

ஒரு பெண்ணுக்கு இது மகா கொடிய வேதனை அல்லவா? அவளாலும் தாங்க முடியவில்லை. பூர்ணி மற்றும் ரோஹனுக்கு கலக்கமாக இருந்தது. என்ன தான் தமக்கு வினை விதைத்தாலும் இவளுக்கு இது வேண்டும் தான்’ என்று நிம்மதியடைய முடியாது போனது. மாறாக வருத்தமே இருவருக்கும்.

 

“டாக்டர் அதைச் சொன்ன அந்த நிமிஷம் என் மனசுல வந்து போனது உன் முகம் தான் பூர்ணி. உன்னை அன்னிக்கு எவ்வளவு கீழ்த்தரமாக பேசினேன். உன் வயிற்றில் வளரும் குழந்தையை நான் தப்பா பேசினேன். அந்த பாவம் தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கு. அதுக்கு தான் இந்த தண்டனை” வனிதாவின் குரல் உடைந்தது.

 

“ப்ச்! வனி” என்று பூர்ணி ஆரம்பிக்க, “எதுவும் சொல்லாத. எனக்கு இந்த தண்டனை வேணும் தான். பழசை நினைவுபடுத்தி உன்னை வருத்தத்தில் போட வரலை. உன் கிட்ட ஒரு வார்த்தையாவது பேசி மன்னிப்பு கேட்கனும்னு வந்தேன். இப்போ தான் என் மனசுக்கு ஆறுதலா இருக்கு” போலியான புன்னகை ஒன்றை உதட்டில் தவழ விட்டாள் அவள்.

 

பதில் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தது பூர்ணி மற்றும் ரோஹனின் நிலை.

 

“உன்னை, பழசை எல்லாம் என்னால அவ்வளவு ஈசியா மறக்க முடியுமானு தெரியலை. மறக்க முடியாதுன்னு தான் சொல்லுவேன். இந்த குழந்தையை நினைக்கும் போது நீ பேசுன பேச்சு, என் வயிற்றில் அவன் குழந்தை வளர்வதை அவன் கிட்ட சொல்ல முடியாமல் தவிச்சது, ரோஹி இல்லாத அந்த நாட்களின் வலி எல்லாம் என் மனசுல ஆழமா பதிந்து போய் இருக்கு. அதை மறப்பது கஷ்டம் தான்.

 

ஆனாலும் உன் நிலைமையைப் பார்த்து சந்தோஷப்படவும் என்னால முடியலை. யாருக்காக இருந்தாலும் இந்த வலி தாங்க முடியாதது. இதற்குப் பதிலாக உனக்கு நிச்சயம் சிறந்த ஒன்னை தருவார். மனசு விட்டுடாத” என்று சொல்லி விட்டு உள்ளே நுழைந்து கொண்டாள் பூர்ணி.

 

“ரோஹி! உன் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. பார்த்தியா இவ்வளவு கெடுதல் பண்ணியும் கூட எனக்கு ஏதோ வகையில் ஆறுதல் சொல்லிட்டு போறா. என்னோட மட்டமான புத்திக்கு இது அப்போ புரியல. நீயும் என்னை முடிஞ்சா மன்னிச்சுரு” கண்ணீருடன் திரும்பி நடக்கலானாள் வனிதா.

 

………………..

கழுத்தில் கை போட்டுக் கொண்டு சந்தோஷமாக விஷ்வாவின் வீட்டிற்குள் நுழைந்தனர் விஷ்வாவும் மித்ரனும்.

 

“ஹாய் மாம்!” சோபாவில் அமர்ந்திருந்த நீலவேணியின் அருகில் தொப்பென விழுந்து அவர் கன்னம் கிள்ளினான் மைந்தன்.

 

மித்து அவருக்கு மறுபக்கத்தில் உட்கார்ந்திட, “போடா” என்று டிவியில் பார்வையை நிலைக்க விட்டார் நீலா.

 

“என்னாச்சு மை டியர் மம்மி? ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரலைனு கோபமா?” தாயின் தோளில் சாய்ந்து கேள்வி கேட்டான் விஷ்வா.

 

“ஐஸ்கிரீம் சாப்பிட நான் சின்ன பாப்பாவா? என் கிட்ட வாங்கி கட்டிக்காம இரு” முறைப்பை அள்ளி வீசினார் அவர்.

 

“ஏன் மா சுடச்சுட இருக்கீங்க? அவன் கூட அப்படி என்ன கோபம்?” என்று மித்ரன் வினவ, “அவன் கூட மட்டும்னு யார் சொன்னது? உன் கூடவும் தான்” என்று பதிலளித்தார் நீலவேணி.

 

“அவன் என்ன பண்ணுனான் மாம்?” என்று விஷ்வா இடைபுகுந்து கேட்க, “என்ன பண்ணல? ரெண்டும் கூட்டு களவாணிங்க” என்று கூறியவாறு வந்தமர்ந்தார் சிவகுமார்.

 

நண்பர்கள் இருவரும் முழித்துப் பார்க்க, “ஆபிஸ்ல அத்தனை பேர் முன்னாடி சண்டை போட்டு இருக்கீங்களே! எதுக்கு இப்போ முழிக்கிறீங்க?” என்று கேட்ட நீலவேணியின் பேச்சில் விதிர்விதிர்த்து நிற்கலாயினர்.

 

“அது.. அது.. என்ன சொல்லுறீங்க மா?” வர மறுத்த வார்த்தைகளைக் கோர்த்து மெல்ல வினாவைத் தொடுத்தான் மித்து.

 

“எனக்கு எல்லாமே தெரியும். இதை சொல்லாம மறைக்கிற அளவுக்கு போயிட்ட தானே? அவ்வளவு பெரிய ஆட்கள் ஆகிட்டீங்க” விரக்தியுடன் செப்பினார் நீலா.

 

“மாம்! அப்படி இல்லை. இதை சொல்லி உங்களை ஏன் கஷ்டப்படுத்தனும்னு இருந்துட்டேன்” என தாயின் கையை விஷ்வா தொடப் போக,

 

“ப்ச் போடா பேசாத! என் பையனை என்னென்னவோ எல்லாம் பேசின தானே? உன் கூட நான் கோபம்” என்று தட்டி விட்டார்.

 

“எனக்கு தெரியாம உங்களுக்கு யாரு பையன்? டாட்கு தெரியாம வேற கல்யாணம் ஏதாவது” என்று விஷ்வா விஷமமாகச் சொல்ல,

 

“பேச்சைப் பாரு பேச்சை படவா” அவன் கன்னத்தில் அடித்தார் நீலவேணி.

 

“அடேய்! என் வாழ்க்கையில் குழி தோண்டி விளையாடப் பார்க்கறியா?” சிவகுமார் அச்சத்தோடு பார்த்தார்.

 

“ஹா ஹா உங்க லைஃப்ல விளையாடுவேனா நான்? இந்த அன்பு மகனைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?” மூக்கை உறிஞ்சினான் பாவமாக.

 

“உலகமகா நடிப்புடா சாமி! உன் நடிப்பை நான் நம்பிய காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்னிக்கு அக்ஷு மூலமா உங்களுக்குள்ள நடந்த பிரச்சினை தெரிய வந்தது. அவனை எப்படிடா அத்தனை பேர் முன்னாடி வெச்சு திட்டின” மகனின் தோளில் அடித்துக் கொண்டார் சிவா.

 

“ஓஓ! அந்த சீன் போடுற சில்வண்டு தான் எல்லாம் பத்த வெச்சு இருக்காளா அவளுக்கு இருக்கு” என்று உள்ளுக்குள் புகைந்தவனோ, “இதெல்லாம் சொன்ன அந்த ஓட்டை வாய் இதற்கான காரணத்தையும் முழு விவரங்களையும் சொல்லி இருக்கும் தானே. பிறகு எதற்கு இப்படி தப்பு பண்ணுன ஸ்டுடன்டை ப்ரின்சிபல் விசாரிக்கிற மாதிரி கேட்குறீங்க?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

 

“சொன்னாள் தான். இருந்தாலும் இதை ஏத்துக்க முடியல கண்ணா! ஏதோ கெட்ட காலம் அப்படி ஆகிருச்சு. இனி பிரச்சினை முடிந்தது. எந்த கெட்டதும் நடக்காது” மகனிடம் கூறியவாறு மித்ரனின் தலையை வருடிக் கொடுத்தார் நீலவேணி.

 

“வர வர நீங்க சரியே இல்லை மாம். எனக்கு அம்மாவா இல்லை இவனுக்கான்னே தெரிய மாட்டேங்குது” செல்லக் கோபத்தில் சிணுங்கினான் விஷு.

 

“பொறாமையில் பொங்காத மாப்ள! அம்மா இவனையும் உங்க மகனா ஏத்துக்கங்க பார்க்க பரிதாபமா இருக்கான்” என்று மித்து சொல்ல,

 

“என் செல்லம் சொல்லி கேட்காமல் இருப்பேனா? இவனையும் மகனா ஏத்துக்கிறேன்” விஷ்வாவைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டார்.

 

“போடா போடா! நீ சொல்லி தான் என்னைக் கொஞ்ச சொல்ல வேண்டி இருக்கு” அவன் சிலுப்பிக் கொள்ளும் போது, “யார் இல்லாட்டியும் உன்னை நான் கொஞ்சுவேன் விஷு” என்றபடி வந்தாள் அக்ஷரா.

 

“நானும் என் செல்ல தங்கச்சியை விட்டுட்டு யாரைக் கொஞ்ச போறேன்” அவளை தோளோடு சேர்த்து அணைப்பது போல் வந்தவன் காதைப் பிடித்தான்.

 

“ஏன்டி குட்டி சாத்தான் என்னையோ கோர்த்து விடறியா? உன்னை நாலு தட்டு தட்டினா தான் அடங்குவ” அவள் தலையில் கொட்ட,

 

“டேய் என் கண்கண்ட தெய்வமே! உன் பொண்டாட்டியை இப்படி நூடுல்ஸ் செய்யுறான் இந்த மலைமாடு. நீ சுரணையே இல்லாம வேடிக்கை பார்க்கிற. வந்து காப்பாத்து டா” தன்னவனை அழைத்தாள் அக்ஷு.

 

“சுரணை இல்லை டி ஆனால் ரசனையா பார்த்துட்டு இருக்கேன். செமயா இருக்கு” புன்னகையுடன் அவளை நோக்கினான் மித்ரன்.

 

“இங்கே படமா ஓடுது செமயா இருக்கு சுமையா இருக்குன்னு கமண்ட் குடுக்குற” என்று கண்களால் எரித்தாள்.

 

“அவன் கிட்ட எதுக்கு காயுற உளறுவாய்” தங்கையின் தலையில் விஷ்வா கொட்ட, “அவளை விடுங்க விஷு!” என்று கூறியவாறு வந்தாள் வைஷ்ணவி.

 

“கொஞ்சம் சொல்லு வைஷு உன் அருமை புருஷன் கிட்ட. என் காதைக் கழட்டி கையோட எடுக்க போறான்” அண்ணனிடமிருந்து விலகி நின்றாள் அக்ஷரா.

 

“அக்ஷு எதுவும் சொல்ல இருக்கல. நாங்க ரெண்டு பேரும் அது பற்றி பேசிட்டு இருக்கும் போது அத்தை காதுல கொஞ்சம் விழுந்திருக்கு. என்னனு கேட்டாங்களா மறைக்கிறது சரி இல்லைனு தான் சொல்ல வேண்டியதா போச்சு” என்று விளக்கினாள் வைஷு.

 

விஷ்வா தங்கையைப் பார்க்க, “என்னை பார்க்காத. காதை திருகின தானே?” முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.

 

“சாரி டி பட்டுக்குட்டி! இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்று” என்று கெஞ்சினான்.

 

“மன்னிக்க முடியாது போ” என்றவள், “ம்ம் தோப்புக்கரணம் போடு. அப்போ மன்னிக்கிறேன்” என்றிட விழி விரித்துப் பார்த்தான் சகோதரன்.

 

“என்னடி இப்படி பண்ணுற?” விஷ்வா அரண்டு போய் பார்க்க, “சொன்னத செய் இல்லேனா மன்னிக்க மாட்டேன்” அசராமல் நிற்கலானாள் அவள்.

 

“கல்நெஞ்சக்காரி” என்று இரு கைகளாலும் காதுகளைப் பிடித்து குனிந்து நிமிர்ந்தவனைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றாள் குறும்புக்காரி.

 

“ஹலோ சார் எல்லாம் நண்பனுக்காக பண்ணுவீங்களே. இதையும் அவன் கூட சேர்ந்து செய்ய மாட்டீங்களோ?” ராணியின் தோரணையுடன் புருவம் உயர்த்திக் கேட்டாள் அவளவனிடம்.

 

“ஒரு முடிவோடு தான் டி இருக்கே” என்று செல்லமாக முறைத்த மித்ரனும் அவள் சொன்னதைத் தட்டாமல் செய்தான்.

 

விஷ்வா கண்களால் ஜாடை காட்ட, அதை உணர்ந்தவனும் சட்டென கையை நீட்டி பூச்சாடியில் அழகுக்காக வைத்திருந்த மயிலிறகை எடுத்து அக்ஷுவின் முகத்தைத் தீண்டினான் நண்பன்.

 

அவள் கூச்சத்தில் முகம் சுருக்குவதைக் கண்ட விஷு அவளது கையைப் பிடித்துக் கொள்ள மித்ரன் இன்னும் மயிலிறகால் அவளை கிச்சு கிச்சு மூட்டினான்.

 

“டேய் பக்கிங்களா! கூசுது போங்கடா” கத்தியவளைக் கண்டு வைஷ்ணவி வாய் மூடிச் சிரிக்க சண்டைகளும் சீண்டல்களும் முடிந்து நால்வரும் சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

 

“குட்டிமா கையை கொஞ்சம் நீட்டு” என்று விஷ்வா சொல்ல,

 

“முடியாது. நீ தானே இவனுக்கு இந்த மயிலிறகு ஐடியாவைக் கொடுத்த போடா” 

 

“அப்போ இதை நானே சாப்பிடறேன்” என்று சொன்னவனின் கையில் இருந்த சாக்லேட்டைக் கண்டு கண்கள் மின்ன, “அண்ணா” என்று கையை நீட்டினாள்.

 

“தீனிப்பண்டாரம்” என்று அவள் தலையில் தட்டி விட்டு அவளுக்கு இரண்டு சாகலேட்டில் ஒன்றை அவளுக்கும் மற்றையதை நவிக்கும் கொடுத்தான்.

 

“தாங்க் யூ லாசு விஷ்வா” சிரிப்புடன் சாக்லேட்டைப் பிரித்து சாப்பிடத் துவங்கினாள் அக்ஷரா.

 

“அப்போ அண்ணா! இப்போ லூசா? நல்லா இருக்கு அரிசி மூட்டை” முறைத்துப் பார்த்தவனோ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷுவைப் பார்த்துக் கண்ணடிக்க, இன்று தலையைக் குனித்துக் கொள்ளாமல் வழமைக்கு மாறாக அவளும் கண்ணடிக்க,

 

இதயம் வழுக்கி விழ இமைக்கக் கூட மறந்து இன்று உறைந்து போனது ஜித்து தான்.

 

“சாக்லேட் தர மாட்டியா அம்முலு?” என்று காதில் கேட்ட மித்ரனிடம், “இந்தா எடுத்துக்கோ” என நீட்டினாள்.

 

“கையால் இல்லை…!!” என்று சொன்னவனின் விழிகள் அவளது இதழை மொய்க்க, “அருள்ள்ள்” அவன் கையை இறுகப் பிடித்துக் கொண்டவளைக் கண்டு அவன் கண்களில் சுவாரசியம்.

 

நட்பு தொடரும்……!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!