விஷ்வ மித்ரன்
💙 நட்பு 61
( ஜித்து + ஹனி ஸ்பெஷல் )
“தடக் தடக்” ரயிலின் வேகத்தோடு தன்னவன் அருகே அமர்ந்து பயணித்த வைஷ்ணவியின் இதயமும் இதமான தாளத்தோடு கானம் இசைத்தது.
ரயிலின் ஓசை கேட்டு முன்பெல்லாம் ஓராயிரம் ஆசைகள் கொள்வாள் காரிகை. என்றாலும் ஆசிரமமே கதி என வாழ்ந்தவளுக்கு ரயிலின் ஓசை கேட்குமே தவிர அதில் பயணிக்கும் ஆசை மட்டும் முழுயாக நிறைவேறியதில்லை.
ஓரிரு தடவைகளே ரயிலில் பயணம் செய்திருக்கிறாள் ; ஆனால் அதுவும் ஆசிரம நிர்வாகியோடு. அப்பயணம் ரசிப்பதாகவோ, லயிப்பதாகவோ இருந்ததில்லை.
மாற்றமாக தன் காதல் கணவனுடன் கரம் கோர்த்துச் செல்லும் ரயில் பயணம் அவளுள் ஆனந்தச் சாரலடிக்கச் செய்தது. அவள் யன்னலினூடே இயற்கை அன்னையின் மடியில் தவழ, அவள் மீதான அன்புப் பெருக்கோடு தன்னவளை ஏறிட்டான் அவளது நாயகன்.
கதை பேசும் விழிகள், இணைந்து மீளும் இமைகள், செம்பவள இதழ்கள், வளர் பிறைக் கீற்றை ஒத்த நெற்றி, காற்று கள்ளத்தனமாய் வருடியதில் கன்னத்தில் இழைந்த முடிக்கற்றையை விரல் நுனியில் ஒதுக்கி விடும் கோலத்தில் அவள் அழகோவியமாய்த் தான் தெரிந்தாள்.
நான்கு மாத கருவுற்ற வயிறு சற்றே வெளித்தெரிய தாய்மையின் பூரிப்பில் மிளிரும் தன் உயிரானவளை நோக்கும் போது நேசம் பீறிட்டுப் பாய்ந்தது அவன் நெஞ்சிலே.
இறங்க வேண்டிய இடமும் வந்து விட லக்கேஜை ஒரு கையில் தூக்கிக் கொண்டு மறு கையால் அவளைப் பிடித்து மெதுவாக இறக்கினான்.
புகையிரத நிலையத்தில் இருந்து வெளியேறி பாதையில் நடந்தனர்.
“இந்த ரோட்ல போனா ரெஸ்டாரன்ட் போகலாமா?” ஆள்நடமாட்டம் குறைந்த இடத்தைப் பார்த்துக் கேட்டாள் அவள்.
“யாரு சொன்னா ரெஸ்டாரன்ட் போக போறோம்னு? நாம போற இடமே வேற” சற்று தூரம் நடந்ததும் அங்கே வயல்களில் மனிதர்கள் வேலை செய்து கொண்டிருக்க பச்சைப் பசேலென்று இயற்கை வனப்புகளோடு காட்சியளித்தது அவ்விடம்.
‘பூந்தளிர் கிராமம்’ முன்னே பதாகை ஒன்று தொங்கியது. வயல்களில் பசுந்தளிர்கள் பனித்துளிகளின் சில்மிஷத்தில் தலை சாய்த்துச் சிரித்தன.
“இது எந்த ப்ளேஸ் விஷு? இந்த கிராமத்தில் எங்கே போறோம்?” கேள்விக்கணைகள் சரமாரியாக விழுந்தன.
“கேள்விக்குப் பிறந்தவளே! கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வாடி”
“சரி ஒன்னும் பேசல” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.
“அச்சோ கோபத்தை பாரேன் என் கியூட்டிக்கு” மூக்கைச் செல்லமாக நிமிண்டினான்.
“போங்க ஜித்து” சிணுங்கிய நிலவை கண்சிமிட்டலுடன் நோக்கினான்.
அவளை அழைத்துச் சென்றது ஒரு சிறு வீட்டிற்கு. இயற்கையின் வாடை எங்கும் வீச எளிமையாக இருந்தது அவ்வீடு.
அவன் கையில் வீட்டு சாவியை ஒப்படைத்து விட்டுச் சென்றான் ஒரு சிறுவன்.
அந்த வீட்டு முற்றத்தில் இருந்த ஊஞ்சலைக் கண்டு ஓடப் போனவள் சற்று நிதானிக்க, குழந்தையின் நினைவில் தன் ஓட்டத்தைக் கை விட்டவளைக் கண்டு, கைப்பிடித்து அழைத்துச் சென்றான் விஷ்வா.
“அழகா இருக்கு ஜித்து. இப்படி ஒரு வீட்டில் உங்க கூட இருக்கனும்னு இதுவரை ஆசைப்பட்டதில்ல. ஆனா இப்போ தோணுது” என்றாள் அவள்.
“எனக்கு ஆசை இருந்தது ஹனி மா! நம்ம காலேஜ் டேய்ஸ்ல இப்படி ஒரு ஊருக்கு போனோம் அங்கே போனப்போ நிறைய பேர் அவங்கவங்க லவ்வர்ஸ் கூட ஊர் சுற்ற போய்ட்டாங்க ஜாலியா. அப்படி லவ்வர்ஸ் பார்க்கும் போதெல்லாம் நமக்கும் இப்படி இல்லையேனு கவலையா இருக்காது. ஆனா ஒரு நாள் நமக்குனு ஒருத்தர் வரும் போது இப்படி எல்லாம் கூட்டிட்டு வரனும்னு நெனச்சேன்” அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“உங்களுக்கு காலேஜ்ல யாரைப் பார்த்தும் லவ் வரலையா?”
“பேசாம நீ லாயர் ஆகி இருக்கலாம் அப்போ கேள்வி கேட்டு எதிர்த்தரப்பு வக்கீலை பதற வைக்கலாம்” என ஹாஸ்யமாகச் சொன்னாலும் அவள் வினாவுக்கு விடையளிக்கவும் தான் சித்தமானான்.
“அப்படினு பெருசா எதுவும் தோணுனது இல்லை. மத்த லவ்வர்ஸ் பார்க்கும் போது சில நேரம் கற்பனை போகும் நமக்கும் இப்படி இருந்திருந்தா நல்லா இருக்குமேனு. ஆனாலும் அதை பெருசா அலட்டிக்க மாட்டேன். காலேஜ்ல நிறைய மெமரீஸ் இருக்கு எனக்கு.
ப்ரபோசல்ஸ் வந்தா அதை வெச்சு எல்லாம் கலாய்ப்பாங்க. அந்த பொண்ணுங்களை மடக்கி அவனுகள் லவ் பண்ணி செட் ஆகிருவாங்க. தர்ஷன் டாச்சர் பண்ண வருவான். அதிலிருந்து அலர்ட்டா இருந்துட்டு மித்து கூட அரட்டையடிச்சிட்டு வீட்ட வந்தா அக்ஷு கூட ஆட்டம் போட்டுட்டு அப்படியே போயிருச்சு என் நாட்கள்.
எந்த பொண்ணு மேலயும் அட்ராக்ஷன்னு வந்ததில்ல. அப்போ நான் நல்லா பழகின பொண்ணு மாம் அன்ட் அக்ஷு தான்” தலை சரித்துக் கூறியவன் ஏனோ அவளுக்கு வித்தியாசமாகத் தெரிந்தான்.
“அப்படி இருந்த என்னையும் ஒருத்தி கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ண தான் செய்தா” என்றவனின் பேச்சில் இது என்ன புதுவகை குழப்பம் எனப் பார்த்தாள்.
“யாரும் இல்லனு சொல்லிட்டு இப்போ யாரு புதுசா அந்த ஒருத்தி?” வெடுக்கெனப் புருவம் உயர்த்தினாள்.
“என்னை முட்டி முட்டி ஹார்ட்டை ஓட்டை போட்டு உள்ளே நுழைந்தவள். என் இதயக்கோட்டையை கைப்பற்றிய ராணி! அது நீ இல்லாமல் வேற யாரு நவி?” காதல் பீறிட்டுப் பாய்ந்தது அவன் குரலில்.
அவள் இதயம் இதமாய் மலர ஒருங்கே இதழ்களும் அழகாய் விரிந்தன. மறுநாள் காலையில் பரபரப்பாக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த விஷ்வாவைப் புரியாது நோக்கினாள் மனையாள்.
நடைப்பயணத்தில் ஒரு வீட்டை அடைந்தனர் இருவரும். “வாங்க வாங்க” என அவர்களை வரவேற்றனர் ஒரு தம்பதியினர்.
நலம் விசாரிப்புகளோடு முறுவலித்து உள்நுழைந்தான் விஷ்வா. வைஷ்ணவியைப் பார்த்து, “எப்படி இருக்க கண்ணு? உனக்கு என்னை தெரியாது இல்லையா? ஆனால் எங்க பொண்ணைத் தெரியும்” என்ற அப்பெண்மணியின் பேச்சு ஏற்கனவே முழித்துக் கொண்டிருந்தவளுக்கு மேலும் குழப்பத்தைக் கொடுத்தது.
“ஸ்ரீ குட்டி…!!” என்று அழைத்ததில், “வந்துட்டேன்பா” என துள்ளிக் குதித்து ஓடி வந்த சிறுமியைக் கண்டு எழுந்தே நின்றாள் வைஷு.
“வைஷுக்கா!” பேருவகையோடு பூரித்தாள் ஆசிரமத்தில் அவளோடு அன்பாக இருந்த குட்டி சிறுமி சிட்டுஸ்ரீ.
“சி…சிட்டு” இத்தனை நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவளைக் காண்போம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அவள்.
“அப்படி இல்லை என்னை வழமையா கூப்பிடுற மாதிரி கூப்பிடுங்க” என்றது மழலை.
“சிட்டுக்குருவி” அன்பொழுக அழைத்தவளோ சின்னவளை அணைத்துக் கொள்ள, அவளும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வைஷுவைக் கண்டதில் இறுகக் கட்டிக் கொண்டாள்.
இருவரது பாசப்பிணைப்பு மற்றவரை வியக்க வைத்தது.
“சொன்ன மாதிரி அக்காவை கூட்டிட்டு வந்துட்டீங்க அங்கிள்” விஷ்வாவின் அருகில் செல்ல,
“கூட்டிட்டு வராம இருப்பேனா டா? நீ தான் நவியோட செல்ல தங்கச்சியாச்சே” அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“உங்களுக்கு எப்படி இவளைத் தெரியும்?” எனும் கேள்வியைத் தேக்கி தன்னவனை ஏறிட்டாள் நவி.
“அன்னிக்கு ஒரு நாள் ஆசிரமம் வழியா போயிட்டு இருந்தப்போ என் போன் கீழே விழுந்துச்சு. இவ தான் எடுத்து தந்தா. வால்பேப்பர்ல உன் போட்டோ கண்டுட்டு உன்னை பற்றி சொன்னா. அப்போ தான் உன்னை கூட்டிட்டு வந்து சிட்டுவைக் காட்டனும்னு தோணுச்சு” என்று அவன் நிறுத்த, அவ்விடத்திலிருந்து கூறத் துவங்கினார் சிட்டுவின் வளர்ப்புத் தந்தை.
“எங்களுக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் ஆச்சு. குழந்தை இல்லைனு என் பொண்டாட்டி உடைஞ்சு போயிட்டா. குழந்தையை எடுத்து வளர்க்கலாம்னு ஆசிரமத்துக்கு போனா பெரிய தொகையா கேட்டுட்டாய்ங்க. அவ்வளவு தொகை கொடுக்க எங்க கிட்ட வசதி இல்லைனு திரும்பி போக நெனச்சோம்.
அப்போ தான் இந்த மகராசன் வந்து நாங்க மறுத்தும் கட்டாயப்படுத்தி பணம் தந்து ஆசிரமத்தில் பேசி சிட்டுவை எங்க கையில் ஒப்படைச்சார். உன் மேல வெச்சிருக்கிற பாசம் தான் உனக்கு பிடிச்ச இவளை எங்க கிட்ட இவர் கொண்டு வந்து சேர்க்க காரணமாச்சு”
இப்படி ஒரு கதை இதற்குப் பின் இருக்கும் என்று வைஷு கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. இவனுக்குத் தான் தன் மீது எத்தனை காதல்?’ பூரித்துப் போகலானாள் பாவை.
“அக்கா! உங்க கிட்ட குட்டி பையன் இருக்கான்னு கேள்விப்பட்டேன். என்ன சொல்லுறான் அவன்?” வைஷுவின் குழந்தை பற்றி சிட்டு விசாரிக்க, அவளோடு கதைக்க ஆரம்பித்தாள்.
இவ்வாறு ஒவ்வொன்றும் அவளுக்காகவே செய்தான் விஷ்வா. ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் நேசத்தை மழையாகப் பொழிந்தான்.
நாட்களும் மெல்ல நகர்ந்தன. கேட்டதை வாங்கிக் கொடுப்பதை விட, கேட்க முன்னமே கொடுத்து விடும் கணவன் கிட்டுவது வரம் அல்லவா? அவளின் சிறு சிறு ஆசைகளும் நிறைவேறின.
அவன் ஒரு புறம் என்றால், “அண்ணி ஜூஸ்” என்று விதவிதமாய் ஜூஸ் செய்து அவள் பின்னால் சுற்றி பருக வைத்தாள் அக்ஷரா.
“பாப்பா அதை பண்ணாத. கவனமா இரு” அக்கறையை அள்ளிக் கொட்டினான் மித்ரன்.
இதில் பெரியவர்கள் வேறு உள்ளங்கையில் வைத்துத் தாங்க, சிறு வயது முதல் அன்பையே காணாதவளுக்கு அனைத்தும் ஒருங்கே கிடைக்கும் போது அவ்வன்பின் ஆழத்தில் திணறித் தான் போனாள் இன்பமாக!
வளைகாப்பு விழாவும் கூட சிறப்பாக நடைபெற்றது.
“இதை மட்டும் குடி அண்ணி லாஸ்ட் ஜூஸ். இனி தர மாட்டேன்” நிறைமாத கர்ப்பிணியாக அமர்ந்திருந்த வைஷ்ணவியின் அருகே வந்து நின்றாள் அக்ஷரா.
“முடியலடா சாமி உன் அன்புத் தொல்லை” அயர்ந்தே போய் விட்டாள் அவளது அண்ணன் மனைவி.
“உன்னை விட மாட்டேன் டா” எனும் குரலில் இருவரும் வாயிலை நோக்க, மித்ரனின் கழுத்தில் கையை மாட்டி நெறிப்பது போல் செய்தான் விஷ்வஜித்.
“உன்னையும் தான். என்ன வேலை பண்ணி வெச்ச நீ” அவன் சர்ட் காலரைப் பிடித்தான் நண்பன்.
“அக்ஷு என்ன பார்த்துட்டு இருக்க? அவங்களை பிரிச்சி விடு” இருவரது நிலையைக் கண்டு அரண்டாள் வைஷ்ணவி.
அவளோ “ஹேய் கமான் கைஸ்! அப்படி தான் அண்ணா நீ அவனோட காலரைப் பிடி. மித்து அப்படி தான் ம்ம் ம்ம்” என்று விசிலடித்து ஊக்கம் கொடுப்பவளின் பேச்சில் இருவரும் அதை விட ஒரு படி மேல் சென்று சண்டையிட,
“நோ டென்ஷன் டார்லிங்! கூல்” வைஷுவின் முறைப்பைக் கண்டு கண்ணடித்தாள் அக்ஷரா.
“டேய் அந்த பொண்ணுக்கு எதுக்குடா கை காட்டின?” என்று மித்ரன் கேட்க, “கையை தானடா காட்டினேன் நீ எதுக்கு காலைக் காட்டின மாதிரி என் காலை மிதிச்ச?” பதிலுக்கு எகிறினான் விஷு.
“யாரு கையைக் காட்டுனது யாரு காலைக் காட்டினது? என்னடா நடக்குது” இருவருக்கும் இடையே வந்து நின்றாள் அக்ஷரா.
“ஒரு ஃபாரின் பொண்ணு வந்து இருந்துச்சா இவன் வேணா வேணானு காலை மிதிச்சும் நான் கையைக் காட்டினேன். ஒரே மாதிரி டிசர்ட் போட்டிருந்தோமே. தூரத்தில் இருந்ததால அந்த பொண்ணு அது மித்துனு நெனச்சி ஹல்லோ டியர்னு சொல்லி இவனை ஹக் பண்ணிட்டா”
“எதே ஹக்கா?” கூவிய தங்கையைக் கண்டு, “ஆமாடி ராட்சசி! உன் ஆளுக்கு முகத்தை பார்க்கனுமே அப்படி இளிச்சிட்டு இருந்தான்” என்றான் பவ்வியமாக.
“அவனை எனக்கு தெரியாதா? அருள் இளிச்சி இருக்க மாட்டான். அய்யோ நம்மள ஹக் பண்ணலயேனு நீ தான் கடுப்பாகி இருப்ப” என்றவளின் பேச்சில் வைஷு சிரிக்க அண்ணன்காரனோ முறைத்தான்.
“சரி அப்படினு என் விஷுவை கலாய்க்க தொடங்கிடாத” நண்பனுக்காக பரிந்து கொண்டு வந்த மித்ரனின் தோளில், “நண்பேன்டா” என கையைப் போட்டுக் கொண்டான் விஷு.
“இப்போ பாரு வைஷு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நிஜமா சண்டை போடுற மாதிரி பயம் காட்டிட்டு இப்போ நம்மளை நோஸ் கட் பண்ணி விடுறூங்க. இது பார்த்து பார்த்து பழகிருச்சு நமக்கு” வைஷுவின் காதில் கிசுகிசுத்தவள் பேச்சு வாக்கில் ஜூஸையும் கொடுத்து விட்டாள்.
“என் பொண்டாட்டியை விழுந்து விழுந்து கவனிக்கிற. என்னை விட இப்போ நீ தான் அவ பின்னாடி சுத்துற டி” என்றான் விஷு.
“பின்ன? என் மருமகன் வந்து அவன் அம்மாவை நல்லா பார்த்துக்கலயானு கேட்டா என்ன பண்ணுறது? என் செல்லக் குட்டி வரட்டும். அப்பறம் இருக்கு அடுத்த கவனிப்பு” என்றவளின் முடியைச் செல்லமாக கலைத்து விட்ட விஷுவின் விழிகள் தன் உயிரைச் சுமப்பவள் மீது படிந்து மீண்டன.
அதே விழிகள் அடுத்த நாள் கண்ணீரில் தத்தளிக்கும் தருணமும் வந்து சேர்ந்தது. பிரசவ அறையின் முன் கலக்கத்தோடு நின்றவனின் தோளில் கை போட்டு ஆதரவாக அணைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
நீலவேணியும் சிவகுமாரும் பக்கத்து ஊருக்கு சென்றிருக்க, விஷ்வா வீட்டிலிருக்கும் சமயம் தான் அவளுக்கு வலியெடுக்க அழைத்து வந்திருந்தவனோடு மித்ரனும் அக்ஷுவும் உடன் வந்தனர்.
மனைவியின் வலியில் கசங்கிய முகம் அவனுள் மீண்டும் மீண்டும் தோன்றிற்று. சிறிது நேரத்தின் பின் அவனிடம் நீட்டப்பட்ட பொக்கிஷத்தை கண்களில் நீர் துளிர்க்கப் பார்த்தான் விஷ்வா.
அதனை வாங்கிய கைகளில் மெல்லிய நடுக்கம். பிஞ்சுக் கரத்தை முகத்தில் வைத்து அது காட்டிய முகபாவனையில் உலகையே மறந்து தன் அன்புச் செல்வனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான் நவியின் ஜித்து.
ஒரு ஆணுக்கு இவ்வுலகில் தன் மகவை முதலில் ஏந்தும் தருணம் அத்தனை உணர்வு பூர்வமானது. வார்த்தைகளில் அடக்க முடியாத மகிழ்வு அது. அதே நிலையில் தான் விஷ்வாவும் இருந்தான்.
“மித்து! இங்கே பாரேன் டா” என்றதோடு தன் நண்பனின் புதல்வனைப் பெற்றான் மித்து.
அவனுக்கும் ஏற்பட்ட உணர்வோ புதிதாக இருக்கவில்லை. ஏனெனில் சிறு வயதில் எப்போது விஷ்வாவின் கரத்தைப் முதலில் பற்றினானோ அதே உணர்வே இப்போதும் அவனது மகனின் தொடுகையிலும் அவனுள் ஊற்றெடுத்தது.
இதழ் விரியலுடன் பிஞ்சை ஏறிட, இமை மூடியிருந்தவனின் மெல்லிதழ்களும் மெல்ல விரிந்தன.
“மாப்ள! பாப்பா சிரிக்கிறான் டா” என்று கூற, “அவன் அப்பாவோட பெஸ்டு ப்ரெண்டு நீ. உன்னையும் அவன் உணர்வான் மாப்ள” என்று கூறினான் விஷு.
இந்நேரத்தில் கூட இருவரது நட்பை முதல் தடவை காண்பது போன்ற ஆச்சரியத்துடன் நோக்கிப் பூரித்துப் போகலானாள் அக்ஷரா.
“போதும்பா. வந்த உடனே என் மருமகனுக்கு உங்க பாச மழையில் நனைஞ்சு ஜுரம் வந்துட போகுது” என்றதும் இருவரும் புன்னகையுடன் திரும்பினர்.
அவளிடம் குழந்தையைக் கொடுக்க சிறு பயத்துடன் நின்றாள்.
“பயம் இல்லை அம்முலு! மெல்ல வாங்கிக்க” அவள் கைகளில் வைத்தான்.
“ஹேய் குட்டி பாப்பா! என்னை தெரியுமா உனக்கு? நான் தான் உன் அத்தை. உன் நோட்டி அப்பாவோட பியூட்டி தங்கச்சி” விஷ்வாவைப் பார்த்து கண்சிமிட்டினாள்.
“அடிங்ங்! இப்போவே சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிட்டியா வாயாடி” தங்கையைச் செல்லமாக முறைத்தான் அண்ணன்.
நீலவேணி, சிவகுமார் வந்து சேரும் போது ஹரிஷும் வந்தார். தம் முதல் பேரக் குழந்தையைக் கொஞ்சித் தீர்த்தனர் அவர்கள்.
சற்று நேரத்தின் பின்னர் வைஷு கண்விழிக்க குழந்தையுடன் அவளைப் பார்க்கச் சென்றான் கணவன்.
தம் காதலின் சின்னமானவனையும் காதல் கண்ணாளனையும் ஒன்றாகக் காண்கையில் காரிகையின் உள்ளம் குளிர்ந்தது.
“ஜித்து….!!” கட்டிலில் அமர்ந்தபடி தன்னை நோக்கி கையை நீட்டியவளின் அருகில் சென்று, அவளை ஒரு கையால் தன் மீது சாய்த்துக் கொண்டான் ஜித்து.
“ம்ம் உன் ஜித்து தான் ஹனி. இதோ நம்ம பையன் இருக்கான் பார்” அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
அதனை வாங்கித் தன் மடியில் வைத்து முகம் பார்த்தவளுக்கு சற்று முன் அனுபவித்த வலியெல்லாம் துளி கூட மீதமின்றி மறைந்த உணர்வு. உலகையே வென்றதாய்த் தான் உணர்ந்தாள் வைஷ்ணவி.
“அண்ணா கிட்ட காட்டுனீங்களா?” என்றவளின் கேள்விக்கு, “ஆமா ரொம்ப ஹேப்பி அவனுக்கு. அக்ஷுக்கு குழந்தையைத் தூக்கவே பயம். ஆனால் இவனை தூக்கினாள்” எனப் பதிலளித்தான்.
“இவன் அச்சு அசலா அக்ஷரா சாயல்ல தான் இருக்கான்” என்ற வைஷுவின் கூற்றை நூறு வீதம் உறுதிப்படுத்துவதாய் அவளுயே உரித்து வைத்திருந்தான் விஷ்வஜித் தம்பதியினரின் தவப்புதல்வன்.
அவனைத் தொட்டிலில் வைத்து விட்டு எழப் போனவள் கால் தடுக்கி விஷ்வாவின் மார்பில் மோதி நிற்க, “ஹேய் பார்த்து டி” அவளைத் தாங்கிக் கொண்டான் விஷு.
“அப்போல இருந்து இப்போ வரை என் ஹார்ட்டில் ஓட்டை போட தான் வாற” புருவம் தூக்கிப் பார்த்தான்.
“முதல் தடவை உங்களை கண்டப்போ இப்படி நடக்கவும் தான் பெரிய அலப்பறையே பண்ணிட்டீங்க” தம் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தாள் அவளும்.
“அப்போ ஹார்ட்டுல ஓட்டை போட்ட. அப்பறம் மொத்தமா ஆட்டையே போட்டுட்ட டி கள்ளி” அவளை மெதுவாக அணைக்க,
“ஓட்டை போட்டு ஆட்டைய போட்டு காதல் கோட்டையே கட்டிட்டேன். இனி உன்னில் என் ராச்சியம் தான்” என்றாள்.
“தங்கள் கட்டளையே சாசனம் தேவி” தன்னை இறுக அணைத்தவளின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் ஒற்றி அந்த தேவியை ஒற்றை முத்தத்தில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான் அவளின் காதல் சக்கரவர்த்தி!
நட்பு தொடரும்……….!!
ஷம்லா பஸ்லி