62. விஷ்வ மித்ரன்

5
(1)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 62

 

இரண்டு வருடங்களின் பின்,

 

“நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அக்ஷு” என்று முறைப்பைப் பரிசளித்தவளை,

 

“சொல்லத் தான் வேணும்” என அதற்கு மேலாக முறைத்தாள் மற்றவள்.

 

எதிரும் புதிருமாக முறைத்துக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல அக்ஷராவும் அவளின் அருமை அண்ணி வைஷ்ணவியும் தான்!

 

“எங்கே அந்த சில்வண்டு?” என்று விழிகளை நாற்திசையிலும் சுழற்றினாள் வைஷு.

 

“சில்வண்டே சில்வண்டைத் தேடுறது தான் இங்கே ஆச்சரியக் குறி!”பைக் சாவியைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தவாறு வந்தான் விஷு.

 

“என்னையா சில்வண்டு சொல்லுறீங்க? கடுப்புல இருக்கேன் வாங்கி கட்டிக்காதீங்க என் கிட்ட” அவனிடம் காய்ந்தாள் மனைவி.

 

“ஓஓ சாரிமா! எதுக்கு இப்போ இவ கூட சத்தமா இருந்தே? என்னாச்சு முட்டபோண்டா?” மனைவியிடமும் தங்கையிடமும் அடுத்தடுத்து கேள்விகளை முன்னிறுத்தினான் அவன்.

 

“உங்க வைப் என் செல்லக்குட்டியை திட்டி இருக்கா. அவன் அழுதுட்டு வரான். அதான் என்னனு கேட்டுட்டு இருக்கேன்” பதிலளித்தாள் தங்கை.

 

“பாப்பா அப்படிலாம் திட்டிருக்க மாட்டா” தனது தங்கைக்கு சார்பாகப் பேசினான் மித்து.

 

“அப்படி சொல்லுங்கண்ணா! அன்னிக்கு நான் முறைச்சு பார்த்து அழுததும் அக்ஷு அவனுக்கு சப்போர்ட் பண்ணி என்னை திட்டுற மாதிரி பண்ணாளே. அதில் இருந்து இவன் வேணும்னே பண்ணுறான்” என்று பாவமாக பார்த்தாள் வைஷு.

 

“ம்மா” என்ற அழைப்பில் நால்வரும் திரும்ப மென்னடை பயின்று வந்தவன் பக்கம் அவர்களது கவனம் சென்றது.

 

சிவப்பு நிறத்தில் கையில்லாத டிசரட்டும் முழங்காலுக்குக் கீழாக டெனிமும் அணிவித்து தன் மகனுக்கு பூனை முடியை 

ஒரு பக்கமாக வாரி விட்டிருந்தாள் வைஷு.

 

தத்தித் தத்தி நடந்து வந்தவனை விஷு அலேக்காக தூக்கித் தோளில் வைத்துக் கொள்ள, “ம்மா” கள்ளச்சிரிப்புடன் தாயைப் பார்த்தான் மைந்தன்.

 

“போடா படவா! என்னை உன் அத்தை கிட்ட பேச்சு வாங்க வெச்சிட்டு அம்மானு கூப்பிடுற” பொய்க் கோபம் கொண்டவள் மகனது கன்னத்தைக் கிள்ளவும் தான் செய்தாள் செல்லமாக.

 

அக்ஷராவைக் கண்டு, “அச்சு” என்று அவளிடம் தாவினான். “வாடா பட்டு” அவனைத் தூக்கிக் கொண்டவளையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தான் விஷ்வா.

 

அப்படியே அக்ஷரா சிறு வயதில் எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தான். அவனுக்கும் அவள் என்றால் தனிப்பிரியம். அக்ஷு என்பது வாயில் நுழையாமல், “அச்சு” என்றே அழைப்பான்.

 

“மித்து உனக்கு என்ன கொண்டு வந்திருக்கான்னு கேளு டா” என்று அக்ஷரா கூற, “மித்தா தா” கையை நீட்டியவனிடம் குட்டி டெடி பியரைக் கொடுக்க அதனைக் கட்டிக் கொண்டு தன் பெற்றோரைப் பார்த்து அழகாகச் சிரித்தான் அவன்.

 

விஷ்வா மற்றும் வைஷ்ணவியின் ஆருயிர்ப் புதல்வன்!

அக்ஷரா, மித்ரனின் செல்ல மருமகன்!

அக்குடும்பத்தின் முடிசூடா இளவரசன்!

ஷ்ரவ் எனும் ஷ்ரவன்….!!

 

“அத்தை மாமாவை கைக்குள்ள போட்டுட்டு நல்லா வாங்கிக்க டா” என்று விஷு சிரிக்கும் போது மித்ரனின் அலைபேசி அலறியது. பூர்ணி தான் வீடியோ கால் எடுத்திருந்தாள்.

 

அழைப்பை ஏற்று, “ஹாய் பூரி” என அழைக்க, “நான் தான் மாம்ஸ்” என்று கையைக் காட்டினான் ப்ரதீப்! பூர்ணியின் மூன்று வயது மகன்.

 

“ப்ரதி நீயா? பூர்ணி எங்கே?” வைஷ்ணவி கேட்டாள்.

 

“அவ வேணா. என் கூட பேசுங்க?” என அவன் சண்டைக்கு வரும் போது, “சண்டைக் கோழி சும்மா இரு” அவன் தலையில் கொட்டு வைத்து கையில் ஒரு வயது நிரம்பிய புதல்வியுடன் வந்து மகனின் அருகில் அமர்ந்தாள் பூர்ணி.

 

“ஹாய் ஷ்ரவ் குட்டி! எப்படி இருக்கீங்க” ஷ்ரவனைக் கொஞ்சினாள் பூரி.

 

“கீர்த்து என்ன பண்ணுறா?” என அக்ஷு விசாரிக்க, “தூக்கம் அக்ஷு” என்றவளின் கைகளுக்குள் அடங்கி சுகமாக துயில் கொண்டிருந்தாள் கீர்த்தனா!

 

“பெண்கள் கூட்டம் சேர்ந்துட்டீங்க இனி நம்மளுக்கு ஏது பேச்சு?” விஷ்வா பெருமூச்சு விட, “அன்னிக்கு கால் எடுத்தப்போ எங்களை பப்பரப்பானு நிற்க வெச்சிட்டு நீங்க மூனு பேரும் பிசினஸ் கதை பேசல. அது தான் இன்னிக்கு நாங்க” என்றாள் பூர்ணி.

 

“கிரேட் இன்சல்ட்” விஷ்வா தலையில் தட்டிக் கொள்ள, “அக்ஷுமா! நீ மித்து கூட சண்டையாம்னு கேள்விப்பட்டேன்” என பூர்ணி சொல்ல,

 

“அந்த ப்ரேக்கிங் நியூஸ் யூ.எஸ் டிவிலயும் போயாச்சா?” வாய் மூடிச் சிரித்தான் விஷ்வா.

 

பூர்ணி குடும்பம் சகிதம் விடுமுறைக்கு யூ.எஸ் சென்றுள்ளாள்.

 

“நியூஸ்லாம் எதுக்கு விஷ்வா? அவ கோப மூஞ்சா ஸ்டேட்டஸ் போடுறதும் மித்து பேபி சோக மூஞ்சா போடுறதும் அய்யய்யோ தாங்கல” தானும் புன்னகைத்தாள் பூர்ணி.

 

“பேபியா இவன்? பேய் பிசாசு! ஹூம்” அக்ஷரா அவனைத் திட்ட, “ஏன் பூரி இப்போவா திறக்கனும் இவ வாயை” பாவமாகப் பார்த்தான் அவன்.

 

“நேற்று அடிதடியோட சண்டை போச்சு டி. நாங்களும் பதறிப் போய் என்ன ஏதுனு விசாரிச்சா ஐஸ்கிரீம் வாங்கி தரலனு தான் சண்டையாம்” என வைஷு சொல்ல, “இந்த குள்ள கத்திரிக்காய்க்கு அதலாம் பெரிய ரீசன் தான்” என்று பொய்க்கோபத்துடன் கூறியவனைத் திருப்பி முறைத்தாள் மனைவி.

……………………

 

பல்கோணியில் நின்று நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். 

 

“ஹாய் டார்லு! இங்கே என்ன பண்ணுற” அவன் தோளில் கை வைத்தும் அசராமல் நின்றவனைக் கண்டு,

 

“ஐஸ்கிரீம் கோபம் எல்லாம் போச்சு டா. இப்போ பேசு என் கூட” சில நாட்களாக சண்டை பிடித்துக் கொண்டாலும் வாய் மூடாமல் பேசுபவனின் இன்றைய அமைதி அக்ஷராவைத் துளைத்தது.

 

“என்னாச்சு மித்து உனக்கு? ஏன் இப்படி பண்ணுற” என்று கேட்டவளின் குரல் உடைய,

 

“டைம் ஆச்சு நீ போய் தூங்கு அக்ஷு” என்று கூறியும் அவள் அப்படியே நின்றாள்.

 

“சொன்னேன்ல வா வந்து தூங்கு” கையோடு அழைத்து வந்து அவளைத் தட்டிக் கொடுக்க உறங்கி விட்டாள்.

 

அவள் தலையை வருடி விட்டு எழுந்தவனின் விழிகளோ அங்கிருந்த டைரியை எடுத்தன. அதில் எங்கும் குழந்தையின் உருவங்களை வரைந்து வைத்திருந்தாள். எவ்வளவு தான் வெளியில் சிரிப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவளுள் அந்த ஏக்கம் இருப்பதை உணர்ந்தே இருந்தான்.

 

ஆனால் இந்தளவுக்கு அவள் எழுதியிருப்பது இன்னும் வலியைக் கொடுத்தது. யாரோ அவளிடம் ‘ஏதும் விசேஷம் இல்லையா’ என்று கேட்ட போது ஏற்பட்ட காயத்தை டைரியில் பகிர்ந்து கொண்டிருந்தாள். அவளின் அளவிறந்த வேதனையை அத்தாள்களில் காய்ந்து விட்டிருந்த கண்ணீர்த் தடங்கள் பறைசாற்றின.

 

“இதை எல்லாம் மித்து கிட்ட சொல்லி அழனும் போல தோணுது. ஆனால் நானும் கஷ்டப்பட்டு அவனையும் கஷ்டப்படுத்த விரும்பல” என்று கடைசியாக எழுதியிருந்தாள்.

 

அவளருகே சென்று, “அந்த கடவுள் கிட்ட வேண்டுறத தவிர இதற்கு வேற வழி இல்ல டி. உன் நல்ல மனசுக்கு எப்போவும் நல்லது தான் நடக்கும் அம்முலு. என்னால இதை பார்த்ததுல இருந்து உன் கிட்ட சகஜமா பேச முடியல. இதை கோபம்னு நெனச்சிட்டியா நீ. உன் மேல நான் ஏன் செல்லம் கோபப்பட போறேன்” அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

 

அதே மித்ரன் மறுநாள், “அக்ஷராஆஆ” என்று கத்திய கத்தல் ஒட்டுமொத்த கோபத்தையும் உள்ளடக்கி இருந்தது.

 

அவன் குரலில் தெறித்த கோபத்தில் உள்ளிருந்து ஓடி வந்தவளோ கலங்கிச் சிவந்த கண்களைக் கண்டு ஓர் நொடி பதறியும் தான் போனாள்.

 

“என்னாச்சு உனக்கு?” மெதுவாகக் கேட்டாள்.

 

“நான் ஒன்னு கேட்டா தருவியா?” என்றவனது கேள்விக்கும் முகபாவனைக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை.

 

“கேட்டா தர போறேன். அதை ஏன் இவ்ளோ கோபமா கேட்கிற? என்ன வேணும் உனக்கு?”

 

“நான் டிவோஸ் கேட்டா தருவியா?” அவளது அதிர்ந்த வதனம் கண்டு, “தருவியா?” மீண்டும் கேட்டான்.

 

“அப்படி சொல்லாத மறுபடி” என்றவளுக்கு அவ்வார்த்தையைக் கேட்க என்னவோ செய்தது.

 

“நான் பேச்சுக்கு சொல்லுறது கூட உனக்கு பிடிக்கல. அப்போ நீ என்ன பண்ணி வெச்சிருக்க இது” தன் கையிலிருந்த தாளை அவள் முன் காட்டிக் கேட்டான்.

 

டிவோஸ் கேட்டு எழுதியிருந்த அத்தாளில் கண்சிமிட்டியது அவளின் கையெழுத்து.

 

“என்னை டிவோஸ் பண்ண அவ்ளோ ஆசை உனக்கு ம்ம்” என்று கேட்க, “இல்லை அருள்! உனக்கும் பேபிக்கு ஆசை இருக்கும்ல. ஆனா என்னால அதை தர முடியல அதான்” என்று ஆரம்பிக்க,

 

“அறைஞ்சேன்னா பாரு கன்னம் வீங்கிரும்” கையை ஓங்கியவன் சட்டென அதைக் கீழிறக்கி உதறிக் கொண்டான்.

 

“எப்படி டி இப்படி ஒரு முடிவை எடுக்க போன? நீ டிவோஸ் எடுக்கலாமானு கேட்டு சைன் கூட வெச்சிருக்க. அந்த ஆள் எனக்கு தெரியும்கிறதால அப்படியே என் கிட்ட கொண்டு வந்து தந்தார். இல்லனா இது இன்னும் எத்தனை நாள் கழிச்சு தெரிஞ்சிருக்கும்? எத்தனை பிரச்சினையை கொண்டு வந்திருக்கும்?” தலையை அழுந்தக் கோதி தன்னை நிலைப்படுத்த முயன்றான்.

 

அப்படி ஒரு தாக்கம் அவனில் ஏற்பட்டு இருந்தது. தன்னை விட்டும் பிரிய அவள் எப்படி முடிவு செய்திருப்பாள் என்பதை நினைத்து உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது.

 

“கேட்டேனா? உன் கிட்ட பேபி வேணும்னு கேட்டேனா? ஆசை இருக்கும் தான் அது வேற. ஆனால் அதுக்காக உன்னை விடுவேன்னு நெனச்சியா? இது எதுவும் நம்ம கையில இல்லை. அதுக்கு நீ என்ன செய்வ? எனக்கு உன்னைத் தாண்டி எதுவும் பெரிசில்ல டி புரிஞ்சுக்க. இட்ஸ் ஹர்ட்டிங் மீ” வேதனையுடன் கூறியவனை அவளால் பார்க்க முடியவில்லை.

 

சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. ஒன்றும் பேசாமல் தலையைக் குனித்துக் கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து வழியும் நீரைக் கண்ணுற்றவனுக்கு இதயம் கசிய, அவளை இழுத்துத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

அவனது அன்பில் உடைந்து போனவளோ மார்பில் தஞ்சம் புகுந்து ஏங்க, அவளை அரவணைக்கும் தாயாகத் தான் மாறினான் அவனும்.

 

“இனிமே இப்படி லூசு மாதிரி பண்ணாத அம்முலு! என்னால தாங்க முடியாது” கரகரப்புடன் ஒலித்தது அவன் குரல்.

 

“சாரி டா! நீயாவது ஹேப்பியா இருக்கனும்னு ஏதோ பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டேன். இனி இப்படி பண்ண மாட்டேன் மன்னிச்சிரு” என்றவள் அவன் மார்பில் முத்தமிட்டாள்.

 

“சரி விடு விடு! அதை எல்லாம் மறந்துரலாம்” அவளது கன்னத்தில் முத்தமிட மறு கன்னத்தைக் காட்டினாள்.

 

அவன் முத்தமிட நெற்றிச் சுட்டிக் காட்டினாள். நெற்றியிலும் இதழ் பதிக்க, மீண்டும் தன்னைப் பார்த்தவளைக் கண்டு, “இப்போ எங்க டி தரனும்?” செல்லமாய்க் கடிந்து கொண்டான்.

 

“இங்கே” தன் வயிற்றைப் பிடித்துக் காண்பித்தாள்.

 

“சரி” அவள் கூறியது வித்தியாசமாகப் பட்டாலும் முட்டியிட்டு முத்தமிட்டவனிற்கு ஏதோவொரு உணர்வு! 

 

அவ்வாறு இருந்தவாறே, தலையுயர்த்தி தன் நெஞ்ச வானின் நிலவானவளை நோக்கினான்.

 

“எப்படி இருந்துச்சு நம்ம பேபி இருக்கிற இடத்திற்கு கிஸ் பண்ண ஃபீல்?” சாதாரணமாகக் கேட்க, “என்ன?” இன்ப அதிர்ச்சி அவனை ஆட்கொண்டது.

 

சட்டென எழுந்தவன் “மறுபடி, மறுபடி சொல்லு” என அவளை அவசரப்படுத்தினான். தான் கேட்டது உண்மையாக இருக்க வேண்டும் என அத்தனை தெய்வங்களையும் மனதார வேண்டிக் கொள்ளவும் தான் செய்தான்.

 

“எஸ் அருள்! அய்ம் ப்ரெக்ன்ட். நம்ம பாப்பா இருக்கு இங்கே” என்றதோடு அவன் கையைப் பிடித்துத் தன் வயிற்றின் மீது வைத்தாள் பெண்ணவள்.

 

அவன் உடலினுள் ஆனந்தக் கீற்று மின்சாரமாகப் பாய, அவள் வயிற்றில் பதிந்த கையில் மெல்லிய நடுக்கம் இழையோடியது. அவளைப் போன்று வெளிக்காட்டிக் கொள்ளா விட்டாலும் அவன் மனதிலும் குழந்தைக்கான ஏக்கம் இருந்தது அல்லவா? மூன்று வருட காத்திருப்பின் பலன் இன்று கிட்டியிருக்க அவன் கண்கள் கலங்கின.

 

அவள் கைகளைப் பிடித்துத் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டவனால் அவ்வுணர்விலிருந்து சட்டென மீள முடியவில்லை. 

 

“அருள் ஏதாச்சும் பேசு டா. ஏன் அமைதியா இருக்கிற” அவனது நிலை புரிந்தாலும் அவ்வமைதி இவளுக்கு ஏதோ போல் இருந்தது.

 

“சில சமயம் உணர்ச்சிகள் நம்மளை கட்டிப் போட்டுடும் டி. அப்போ பேச வார்த்தை வராது. அப்படி இருக்கு என் நிலமை. இதோ பார் என் ஹார்ட் பீட் எவ்ளோ பாஸ்டா இருக்குனு” அவள் கையைப் பற்றித் தன் நெஞ்சில் வைத்தான்.

 

ஆம்! உண்மையில் அவ்வளவு துரிதமாகத் தான் துடித்தது அவளை சுமந்திருக்கும் அவ்விதயம்! தற்போது சொல்லொணா மகிழ்வில் நிலை தடுமாறும் அந்த ஆடவனின் இதயம்!

 

இன்று காலையில் எழுந்ததில் இருந்து குமட்டுவது போலிருக்க அவள் மனதில் இப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் உதித்தது. 

 

ஆனால் உறுதிப்படுத்தாமல் தன்னவனிடம் கூற வேண்டாம் என்று முடிவெடுத்தாள்; தன் கணிப்பு பொய்த்து விட்டால் தன்னோடு அவனுக்கும் தானே ஏமாற்றம் என்று.

 

அருகிலிருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்று பரிசோதித்தவளுக்கு முடிவு தெரியும் வரை இருப்பு கொள்ளவில்லை. அவளை ஆனந்தக் கண்ணீரில் திண்டாட வைத்தது கர்ப்பமாக இருக்கும் தகவல்.

 

பல வருடக் கனவு! தனது பேரவா! நிறைவேறியது உணர்ந்து சிலிர்த்தது. ஏக்கங்கள் தவிப்புகளிற்கு இனி முற்றுப் புள்ளி வைத்து விடலாம் என்ற சிந்தனை சிறகடித்தது. 

 

தன்னவனை அணைத்து இத்தருணத்தைப் பகிர்ந்து கொள்ள வீட்டிற்குச் சென்று அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். ஆனால் அவன் வந்ததும் நடந்ததுமோ இங்கு வேறாக இருந்தது.

 

“உனக்கு சந்தோஷமா?” தன்னவன் முகம் பார்த்துக் கேட்க, “ரொம்ம்ம்ம்ம்ப” கண்களைச் சுருக்கி கையை விரித்துக் காட்டினான்.

 

“என்னால கன்ட்ரோல் பண்ண முடியல அம்முலு. அவ்ளோ ஹேப்பியா இருக்கு. நமக்குனு ஒரு பேபி. உன்னை அம்மான்னு கூப்பிட, என்னை அப்பானு கூப்பிட. அதை நினைக்கவே அப்படி ஒரு இனம் புரியாத சந்தோஷம். அழகான ஒரு ஃபீல். உன்னை டைட்டா கட்டிப் பிடிச்சுக்கனும் போல இருக்கு” அப்படிக் கூறும் போது அவன் விழிகளில் ஒரு பிரகாசம்.

 

“சரி கட்டிப் பிடிச்சுக்கோ” கைகளை விரிக்க, “இப்படி இருக்கும் போது ஹக் பண்ண முடியுமா? உனக்கு வலிக்குமே” என்றான்.

 

“அப்போ நான் மாம் வீட்டுக்கு போய் இருக்கேன். நீயும் அங்கே வராம இன்னும் எட்டு மாசம் பக்கத்துலயே வராம இருந்துக்கோ” என்று திரும்பி நடக்க ஆயத்தமானாள்.

 

அவள் கையைப் பிடித்து “எங்க டி போற? உன்னை எங்கேயும் விட மாட்டேன் இனி. என் கிட்டயே தான் இருக்கனும்” என தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் அருள் மித்ரன்.

 

“நீ போடினு சொன்னா நான் போயிடுவேன்னு மட்டும் கனவு காணாத. உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கே இப்படித் தான் இருப்பேன்” அவன் மார்பில் புதைந்து போகுமளவிற்கு மேலும் இறுக்கி அணைத்தாள்.

 

“அப்படி சொல்லு என் செல்லக் குட்டி” அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

 

அவள் விழிகளோ அவனைப் பார்த்தபடியிருக்க, அதிலிருந்த செய்தியை உணர்ந்து கொண்டவனோ மெல்லியவளின் செவ்விதழ்கழைத் தன் அதரங்களுக்குள் ஆழப் புதைத்துக் கொண்டான்.

 

அழகான ஒரு முத்த யுத்தம் இன்று மென்மையாக, இனிமையாக, நெஞ்சில் பீறிட்ட ஆனந்தத்துடன் அரங்கேறியது.

 

அக்ஷரா கர்ப்பமாக இருப்பது தெரிந்து குடும்பமே அணி திரண்டு வந்து விட்டது. நீலவேணிக்கு மகிழ்வு தாங்கவில்லை. மகள் உள்ளுக்குள் அனுபவித்த வேதனைகளை ஒரு பெண்ணாக உணர்ந்தவர் தானே அவரும்?! வைஷுவும் அணைத்துக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாள்.

 

சிவகுமார், ஹரிஷுக்கு இன்னுமொரு வாரிசு கிட்டும் களிப்பு.

 

“ஓய் ராட்சசி ஏதாச்சும் க்ரீம் யூஸ் பண்ணுனியா நீ? முகம் இவ்ளோ ப்ரைட்டா இருக்கு” கேலி செய்தாலும் அக்ஷுவின் முகத்தில் இருந்த பூரிப்பும் பிரகாசமும் விஷ்வாவுக்கு மனநிறைவைக் கொடுத்தது.

 

“போடா எரும உனக்கு என்னை ஏதும் சொல்லாம இருக்க முடியாதே” அவன் தோளில் அடித்தவளின் நாடி பிடித்து, “உன்னை சொல்லாம வேற யாரை நான் கலாய்க்கிறது. எனக்கு கூடப் பிறந்தது நீ மட்டும் தானே குட்டிமா” என்று அவளையும் மறு கையால் மித்ரனையும் சேர்த்து அணைத்தான் விஷ்வஜித்.

 

“அச்சு நான்” என உதடு பிதுக்கிய ஷ்ரவனையும் தன்னிடம் வாங்கிக் கொண்டாள் அக்ஷரா.

 

“பப்பா பப்பா” என்று அவன் அரிசிப்பல் தெரிய சிரிக்க, “ஆமா அச்சு கிட்ட பாப்பா இருக்கு. நம்ம பாப்பா டக்குனு வருவா” என்றான் மித்து.

 

அக்ஷுவின் மடியில் அமர்ந்திருந்தவனோ வேகமாக தலையை இடம் வலமாக ஆட்டி, “இல்ல! ஷவ் (ஷ்ரவ்) பப்பா” என தனது அத்தையின் வயிற்றைப் பிடித்து உரிமையை நிலைநிறுத்தினான்.

 

“நம்மோட இல்லையாம். அவனோட பாப்பாவாமே. இப்போவே பாசசிவ்னஸ்ஸா உனக்கு? நல்லாருக்கு டா” விஷ்வா வாயில் கை வைத்தான்.

 

“சரிடா பட்டு! உன் பாப்பா தான். பாப்பாவை உனக்கே தரேன்” என அக்ஷரா சொல்ல, மகிழ்வுடன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் விஷ்வாவின் மைந்தன்.

 

நட்பு தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!