63. (2) விஷ்வ மித்ரன்

5
(2)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 63 – Last episode

(Part 2)

 

“என்னடி இது கோலம்?” தன் முன்னே நின்றிருந்த மனைவியைக் கண்டு திக்கென்று அதிர்ந்து நின்றான் விஷ்வஜித்.

 

“கேட்காதீங்க செம்ம காண்டுல இருக்கேன்” மூக்கிலிருந்து புகை வெளியேறியது அவளுக்கு.

 

“நான் என் பையன் கிட்ட கேட்டுக்குறேன்”என்றவன், “ஷ்ரவ்…!!” என அழைக்க குடு குடுவென ஓடி வந்தான்.

 

“ப்பா” என்றவனைக் கண்டு, அவன் உயரத்திற்கு குனிந்து நின்றான் தகப்பன்.

 

சின்னவனின் கண்கள் தாயின் மீது நிலைக்க, “போய் முகத்தை கழுவிட்டு வா நவி! பவுடரை இப்படி போட்டுட்டு பேய் மாதிரி இருக்க. பையன் பயப்படறான்” என்று கூறினான் விஷு.

 

“எதே? நான் பவுடரைப் போட்டுட்டு பேய் டான்ஸ் ஆட ப்ராக்டிஸ் பண்ணுறேன்னு நெனச்சீங்களா? சும்மா இருந்த என்னை உட்கார வெச்சு முடியை இழுத்துப் போட்டு என் முகத்தில் அப்பி பவுடர் டப்பாவையே காலி பண்ணிட்டான் உங்க அருமை மகன்” ஏகத்துக்கும் எகிறினாள் வைஷ்ணவி.

 

“ஓகே ஓகே. கூல் மை டியர் கியூட் பொண்டாட்டி. இப்படி கோபப்படாத, முகம் என்னமா சிவக்குது பாரு” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டான்.

 

“நானும் நானும்” என்று தாயின் மறு கன்னத்தை தன் பிஞ்சு விரல்களால் கிள்ளினான் ஷ்ரவன்.

 

“என் செல்லக்குட்டி டா நீ” அவனைத் தூக்கி தன் கன்னத்தை அவன் கன்னத்தில் வைத்து உரசி பவுடரை இடம்மாற்ற, கூச்சத்தில் கிளுக்கிச் சிரித்தான் மகன்.

 

இருவரையும் ஆசை தீர பார்த்து ரசித்தான் விஷ்வா. அவனை மகிழ்வில் ஆழ்த்தும் அழகான குட்டி உலகம் இது. அனைத்து வலிகளும் வேலைப் பளுக்களும் கூட இவர்களைக் கண்டால் மறைந்து விடும்.

 

தம்மைப் பார்க்கும் விஷ்வாவைக் கண்டு நவி புருவம் உயர்த்த, “ஐ லவ் யூ” என உதட்டசைவில் கூறினான் விஷ்வா.

 

“லவ் யூ டூ ஜித்து” அதே போல் ரகசியக் குரலில் மகனுக்கு விளங்காமல் சொல்லியதோடு பறக்கும் முத்தத்தையும் தான் கொடுக்க,

 

“மை ஹனி” அவனிதழில் பூத்த முறுவலைக் கண்ணுற்று தானும் நகை பூத்தாள் பெண்ணவள்.

 

“அக்ஷு வந்தாளா இன்னிக்கு?” என விஷ்வா கேட்க, “அச்சோ அக்ஷு பெயரை சொல்லிட்டீங்களா? இனி முடிஞ்சு” என தலையில் கை வைத்தாள் அக்ஷு.

 

“ப்பா அச்சு கிட்ட போனும்” என அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டான்.

 

“அங்கே போனா இவன் வாறதே இல்லை விஷ்வா. அக்ஷு கிட்ட போய் அவ பேபி கூட பேசி பேசி இருப்பான். நேற்று பார்த்தீங்கள்ல கூட்டிட்டு வர எவ்ளோ பாடுபட்டோம். அவளுக்கும் முடியல எழுந்து நிற்க. இவன் தூக்க சொல்லி வேற டாச்சர் பண்ணுறான். பாவம் அவளும்” என்றாள் வைஷ்ணவி.

 

ஆனால் அவன் மகனோ கேட்பதாக இல்லை. வேறு வழியின்றி அழைத்துச் செல்ல அக்ஷு தூங்கி இருந்தாள். அவளருகே சென்று, “பென்குயீன்” என்று மெதுவாக பேசினான்.

 

ஆம்! அவன் தனது அத்தையின் மகளிற்கு வரும் முன்னே செல்லப் பெயரிட்டு விட்டான்.

 

அவளோடு பேசி விட்டு வந்த போது தான் அவனது முகத்தில் சந்தோஷம் துளிர்த்தது.

 

…………………….

சூர்ய கதிர்கள் பொன்னொளியை வாறி இறைக்க, தொழிற்சாலைகள், கம்பனிகள் என வேலைத்தளங்கள் யாவும் பணிச் சுமையில் சுழன்றிருந்தன.

 

புதிதாக திறக்கப்படவுள்ள அந்த கம்பனியின் வாயிலின் முன் ஸ்டாப் அனைவரும் நடுவில் வழிசமைத்து இரு மருங்கிலும் வரிசையாக நின்றனர்.

 

இரு வரிசைகளிலும் முன் நிற்பவர் கைகளில் பொக்கே இருக்க, அனைவர் விழிகளும் வழி மீது பதிந்திருந்தன.

 

அவ்வேளை இரண்டு கார்கள் வர அதிலிருந்து இறங்கினர் விஷ்வா மற்றும் மித்ரனின் குடும்பத்தினர்.

 

அந்த கார்கள் நகர்ந்த மாத்திரத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு புழுதி பறக்க கிரீச்சிட்டு வந்து நின்றது வெள்ளை நிற BMW கார். அதன் இரு பக்க கதவுகளும் ஏக காலத்தில் திறக்க, அதிலிருந்து இறங்கிய ஆடவர்கள் அங்கிருந்த சகலரின் இமைகளையும் ஆடாமல் அசையாமல் தான் விரித்தபடி நிற்க வைத்தார்கள்.

 

வெள்ளை சர்ட்டை டக்கின் செய்து, அதற்கு மேலால் கறுப்பு கோர்ட் அணிந்து டை போட்டு, கையில் பிரான்டட் வாட்ச் பளபளக்க, மறு கையில் வெள்ளிக் காப்பு அணிந்து, குளிர் கண்ணாடியை கோர்ட்டில் மாட்டி, முகத்தில் தீவிரத்தோடும் இதழில் குறுநகையோடும் ஒரே அச்சில் வார்த்தது போல் தோன்றினர் விஷ்வாவும் மித்ரனும்.

 

இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்திட, மறுகணம் தலையுயர்த்தி அந்தக் கட்டிடத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நோக்கினர்.

 

‘விஷ்வ மித்ரன் க்ரூப் ஆப் கம்பனீஸ்’ பல வருடகாலக் கனவு ஈடேறியதில் தோழர்களின் பெருமகிழ்வு நிறைந்த நயனங்கள் அவ்வெழுத்துக்களைக் கண்டு அகம் பூரித்தன.

 

எதனாலும் அசைக்க முடியா நட்புக் கட்டிடத்தைக் கட்டிய நண்பர்கள் தம் நட்பின் மகுட வாசகமாகிய ‘விஷ்வ மித்ரன்’ எனும் வாசகத்தில் இன்று ஒரு கம்பனியை ஆரம்பித்திருந்தனர்.

 

இருவரும் முன்னேறிச் செல்ல, தம்மிடம் நீட்டப்பட்ட பொக்கேவை வாங்கிக் கொண்டனர்.

 

வாயிலில் வெட்டுவதற்கு ரிப்பன் வைக்கப்பட்டிருக்க கத்தரிக்கோல் ஒன்றும் வழங்கப்பட்டது.

அதனை முதலில் வாங்கிய விஷ்வா பிடியின் ஒரு பகுதியைப் பிடிக்க, மித்ரன் மறு பக்கத்தைப் பிடித்து ஒன்றாக வெட்டினர்.

 

இந்த சிறு செயலில் கூட ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத தன்மை இன்னும் அழகாக இருந்தது.

 

பெற்றோர் தம் மகன்களை மகிழ்வோடு பார்த்தனர். அவர்கள் இவ்வாறு என்றும் ஒன்றாக இருந்து பிசியிஸ்சிலும் முன்னேற மனதார வேண்டிக் கொண்டனர்.

 

மகனின் கையைப் பிடித்திருந்த வைஷ்ணவியோ இந்த அற்புத நண்பர்களைக் கண்டு நெகிழ்ந்து போயிருந்தாள். நீலவேணி மறுத்தும் கேளாமல் அங்கு நிறைமாத கருவை சுமந்து கொண்டிக்கும் அக்ஷராவும் தான் வந்திருந்தாள்.

 

அனைவரும் உள்ளே நுழைந்தனர். விஷ்வா மித்ரன் இருவரும் உரையாற்றினர். இரட்டையர் என்றால் ஒரு தாய் வயிற்றில் பிறந்து முக ஜாடையில் தான் ஒன்று போல் இருப்பார்கள் அல்லவா? ஆனால் விஷ்வாவும் மித்ரனும் முகத்தால் அன்றி அகத்தில் கொண்ட ஆழ்ந்த நட்பால் ஒன்று போல் காட்சியளித்தனர்.

 

எதிரெதிரே தான் கேபினையும் அமைத்திருந்தனர் அந்த கம்பனியின் பங்குதாரர்களான விஷுவும் மித்துவும்.

 

அக்ஷுவால் நீண்ட நேரம் இருக்க முடியாதென்று மற்றவர்கள் சென்று விட, மித்ரனின் கேபினுக்குள் நுழைந்த விஷ்வா அவன் பேனையை எடுத்து காலன்டரின் அருகில் ஏதோ செய்வதைக் கண்டு என்னவென்று பார்த்தான்.

 

இன்றைய திகதியை பேனையால் குறித்து விட்டு, “நம்ம ரெண்டு பேரும் சிக்ஸ்த் படிக்கும் போது ஒரு தடவை சிவாப்பா கம்பனிக்கு போனப்போ பேசிக்கிட்டோமே நாமளும் இப்படி ஒரு கம்பனி வைக்கலாம்னு. அது தான் நம்ம லட்சியமாவே இருந்தது. இன்னிக்கு அது நிறைவேறிடுச்சு. இந்த நாள் என்னால மறக்கவே முடியாது விஷு” என்றான் மித்து.

 

“எஸ்டா! விஷ்வ மித்ரன்’ என்கிற நம்ம நட்புப் பெயர் இன்னிக்கு கம்பனிக்கே உரிமையாகிடுச்சு. இந்த கம்பனி நம்ம நட்பின் சின்னம். இதை என்னிக்கும் நல்லபடியா முன்னேற்றி எடுக்கனும்” என்று தன் தோளில் கை வைத்த விஷுவின் கையைப் பிடித்து அழுத்தினான் சினேகிதன்.

 

இவ்வாறு சில மணித்துளிகள் கடக்க, சிணுங்கிய அலைபேசியினைக் காதுக்குக் கொடுத்த விஷ்வா நண்பனை ஏறிட்டு, “சீக்கிரம் வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான்.

 

“என்னாச்சு ஏன்?” பதறித் தான் போனான் மற்றவன்.

 

“அக்ஷுக்கு பிரசவ வலி வந்துருச்சாம். மாம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்காங்க” எனும் போது மித்ரனின் அலைபேசி அலறியது.

 

சட்டென அழைப்பை ஏற்க, “அருள்! சீக்கிரம் வா டா. எனக்கு உன்னைப் பார்க்கனும் அருள்” ஈனஸ்வரத்தில் ஒலித்த தன்னவளின் குரல் அவனுள் ஊடுறுவித் தாக்கியது.

 

“இதோ வரேன் டி. ஒன்னும் இல்லை நான் வரேன்” என்று அழைப்பைத் துண்டித்தவனுக்கும் குரலில் சிறு நடுக்கம்.

 

இருவரும் ஹாஸ்பிடலுக்கு விரைய, அக்ஷரா உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தாள். நீலவேணி அவளுக்கான பொருட்களை எடுத்து வருவதாகக் கூறிச் செல்ல, மித்ரனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. உள்ளம் நிலை கொள்ளவில்லை.

 

ஏனோ அவன் இதயம் படபடத்தது. 

“டென்ஷன் ஆகாத மாப்ள. அந்த முட்டபோண்டா அவளை மாதிரி ஒரு குட்டி பொம்மையோட வருவா வெயிட் பண்ணு” அவன் தோளில் கை வைத்து அழுத்தி ஆறுதலளித்தான் விஷ்வஜித்.

 

நண்பனின் கூற்றில் புன்னகைக்க முயன்றும் தோற்றுத் தான் போனான் மித்து. தன் உள்ளங்கவர்ந்த அம்முலுவைக் காணும் வரை அவனுக்கு பொறுமை இல்லை.

 

டாக்டர்ஸ் அங்குமிங்கும் பரபரப்பாக வருவதும் போதுமாக இருக்க, நண்பர்கள் இருவருக்கும் ஏனோ இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

 

பிரசவம் பார்க்கும் லேடி டாக்டர் வந்து, “மித்ரன்! உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றார்.

 

அவர் முகமே ஏதோ சொல்லக் கூடாத ஒன்றை சொல்ல வருவது போலிருக்க “சொல்லுங்க டாக்டர்” என்றுரைத்தான்.

 

“பேபி… பேபிக்கு” மேற்கொண்டு கூற முடியாது அவர் திணற, “பேபிக்கு என்ன? ஒன்னும் இல்லல டாக்டர்” கண்களும் சட்டென கலங்கியது மித்துவுக்கு.

 

“குழந்தை நல்லபடியா தான் பிறந்தது. ஹார்ட் பீட் நார்மலா தான் இருக்கு. வழமையா பிறந்த குழந்தைங்க அழும் இல்லையா? ஆனா உங்க பொண்ணு கிட்ட இருந்து எந்த சத்தமுமே வரல. அசைவும் இல்லை கண்ணும் திறக்கல. அதான் எங்களுக்கு ஒன்னும் புரியல” மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டார் டாக்டர்.

 

மித்ரனுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. விஷ்வாவும் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

 

“டாக்டர் என்ன இப்படி சொல்லுறீங்க? ஏதாவது பண்ணுங்க” படபடவென சொன்னது விஷ்வா தான்.

 

மித்ரனால் ஒன்றும் பேச முடியவில்லை. டாக்டர் உள்ளே அழைக்கவும் சென்றவர்கள் கண்டது மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அக்ஷராவையும் அவளருகே இருந்த அழகான பெண் குழந்தையையும் தான்.

 

அருகில் சென்று நடுங்கும் கரங்களால் ஏந்தி “பாப்பா” என அழைத்தான் மித்து.

 

அப்படியே அசைவேதும் இன்றி இருந்த தன் அன்புப் புதல்வியைக் காண நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது ஆடவனுக்கு.

 

“உன் டாடி வந்திருக்கேன். பேசுறது கேட்குதா பாப்பா. கண்ணை திறந்து பாரு டா” கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“மித்து ப்ளீஸ் அழாத” சொல்ல முடியா விட்டாலும் வேறு வழியின்றி கூறினான் நண்பன். மூன்று வருடங்களின் பின் கிடைத்த பொக்கிஷம் இப்படி ஒரு நிலையில் இருப்பதை எந்த ஒரு தந்தையால் தான் தாங்கிட முடியும்?

 

விஷ்வாவும் பேசினான். பேசிக் கொண்டே இருந்தான். டாக்டர்ஸ் செய்வதறியாது நின்றிருந்தனர். இப்படியான நிலையை அவர்கள் எதிர்கொள்வது அரிது தான்.

 

கண்விழித்த அக்ஷரா தன்னவனை, “அருள்” என அழைக்க, அவளிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முகம் பார்த்தான் கணவன். அவனாலே ஏற்க முடியாத போது மென்மையான உணர்வுள்ள அவள் எப்படி தாங்கிக் கொள்வாள் என்றிருந்தது.

 

மலர்ந்திருக்கும் ரோஜா மொட்டைப் பார்க்க அவள் கைகளில் ஒப்படைத்தவனின் முகத்தைக் கண்டு “பேபியைப் பார்த்தியா? எதுக்கு இப்படி ஒரு மாதிரி இருக்க” அதற்கும் பதில் இல்லை அவனிடம்.

 

தற்போது அவளுக்குள் அபாய மணி ஒலித்தது. 

“என்னாச்சு?” மொட்டையாகக் கேட்டாள்.

 

எப்போது இருந்தாலும் சொல்லித் தானே ஆக வேண்டும். சொன்னான் அவன். குரல் கமறியது.

 

கேட்டவளோ அப்படியே விழிகளை விரித்து நின்றாள். தன் குழந்தையைப் பார்த்த கண்களில் நீர் குளம் கட்டியது. பேயறைந்தது போல் அவள் இருந்த நிலை மித்ரனை இன்னும் அச்சத்தில் அமிழ்த்தியது.

 

“அம்முலு! இப்படி இருக்காத ஏதாச்சும் பேசு” அவள் முதுகை வருடிக் கொடுத்தான் ஆதரவாக.

 

அதற்கும் மௌனமாகவே அவன் மீது லேசாக சாய்ந்து கொண்டு குழந்தையையே நோக்கியவாறு இருந்தாள்.

 

“ஏன் இப்படி பார்த்துட்டு இருக்கீங்க. ஏதாச்சும் பண்ண முடியுமானு பாருங்க டாக்டர். நீங்களே கை விட்டா என்னாகுறது?” ஆற்றாமையுடன் கேட்டான் விஷ்வா.

 

“எங்களால முடிஞ்சளவு ட்ரை பண்ணி பார்த்துட்டோம். எதுவும் சரியாகல. இனி அந்த கடவுள் கையில் தான்” கையை விரித்தார் அவரும்.

 

விஷ்வாவின் உள்ளம் கடவுளை மனதில் நிறுத்தி வேண்டிக் கொண்டது.

 

அக்ஷரா, மித்ரனின் நிலையோ வார்த்தைகளால் கூற இயலவில்லை. இத்தனை வருடமாய் தவமிருந்து பெற்ற அழகான பொக்கிஷம் கை நழுவிப் போய் விடுவது போலிருந்தது. அப்படி வாழ வேண்டும் இப்படி வளர்க்க வேண்டும் என்று கட்டிய கனவுக் கோட்டை கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக சரியத் துவங்கிற்று.

 

அங்கு வந்தவுடன் விடயத்தை விஷு மூலம் கேள்வியுற்ற நீலவேணி நெஞ்சில் கை வைக்க கண்களில் கண்ணீர் வழிந்தது. தன் மகளின் நிலையைக் காண முடியவில்லை அவரால்.

 

நீலவேணியின் கைகளில் இருந்த ஷ்ரவன் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தவனின் கண்கள் குழந்தை மீது பதிய அவன் கண்களில் பளபளப்பு.

 

“அச்சு! அச்சு பேபி” என அவன் துள்ளி இறங்க,”ஆமா. அக்ஷுவோட பேபி தான் டா. சத்தம் போடாம சும்மா இரு இப்போ” மகனைக் கடிந்து கொண்டான் விஷ்வா.

 

அக்ஷரா அண்ணன் மகனைத் தலை உயர்த்திப் பார்த்த நொடி அவன் குழந்தையின் அருகில் சென்றான்.

 

அழகான பொம்மையாக இருந்த பிஞ்சையே கணநேரம் உற்றுப் பார்த்தவன், “பாப்பா” என்று அழைத்தான்.

 

இப்போதாவது அதனிடம் ஏதாவது அசைவு ஏற்படுமா என்று எதிர்பார்த்த அக்ஷராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

அவ்வளவு தான் தன் நம்பிக்கை என்று கண்களை மூட, மீண்டும் தன் விரல்களால் கையைப் பிடித்து “பென்குயீன்” என அழைத்தான் சின்னவன்.

 

அவ்வளவு தான்! 

ஆச்சரியமொன்று நிகழ்ந்தது அங்கே! ரோஜா இதழ்களை விரித்து மென்சிணுங்கலோடு அழுதாள் ஷ்ரவனின் பென்குயீன்.

 

சகலரும் இன்ப அதிர்ச்சியுடன் தம் கவனத்தை சிசு மீது பதித்தனர். ஒட்டியிருந்த இமைகள் தம் பிடியைத் தளர்த்தி விரிய கருமணிகளை அங்குமிங்கும் உருட்டியது அக்ஷர மித்ரனின் கண்மணி!

 

கைகளும் அசையத் துவங்க கால்களை ஒன்றன் மேல் ஒன்று போட்டுக் கொள்ள அதன் அழுகுரல் செவி நிறைத்தது.

 

“அச்சு பாரு. பென்குயீன் பாரு” என்று துள்ளிய சிறுவனை அள்ளித் தன்னோடு சேர்த்து இறுக அணைத்தாள் அக்ஷரா.

 

“பட்டுக் குட்டி. என் சாமிடா நீ! என் உசுரை என் கிட்ட ஒப்படைச்சிட்ட” அவனை உச்சி முகர்ந்தவளுக்கு கண்களில் பீறிட்டுப் பாய்ந்தது கண்ணீர் அருவி.

 

காரணம் அறியா விட்டாலும் தன் அன்புக்குரிய அச்சு அழுவது பிடிக்குமா என்ன? தன் பிஞ்சு விரல்களால் கண்ணீரைத் துடைத்து விட்டதோடு நில்லாமல் அவள் உதட்டில் விரல்களை வைத்து, “அச்சு ஸ்மைல்” என்று கொஞ்சவும் தான் செய்தான் சின்னவன்.

 

அவனது செய்கையில் பூரித்து கண்ணீரை உள்ளிழுத்து கடினப்பட்டு புன்னகை சிந்தினாள் அக்ஷரா.

 

டாக்டரிடம் அழைக்கவும் தனியாகச் சென்று பேசி விட்டு வந்த மித்துவிடம் அக்ஷு என்னவென்று கேட்க சொல்ல ஆரம்பித்தவனுக்கு டாக்டர் கேட்டது மீண்டும் செவிப்பறையில் எதிரொலித்தது.

 

“அந்த பையன் உங்க பேபி கூட தினமும் பேசுவானா?”

 

அறிந்தவர் போன்று அவர் கேட்டதில் வியப்பில் மேலெழுந்த புருவங்களுடன் ஆம் என தலையசைத்தான்.

 

“அதுவே தான்! ப்ரெக்னன்டா இருக்கும் போது நல்ல விஷயங்களை பேசனும்னு சொல்லுவாங்க. சண்டை போடக் கூடாது தேவை இல்லாததுகளை பேசக் கூடாதுனு சொல்லுவாங்க. ஏன்னா வயித்துல இருக்குற பேபிக்கு எல்லாமே கேட்கும்.

 

நல்ல விஷயங்களை கேட்குற ஒரு பேபி பிறப்பிலேயே நல்ல குணங்களோட பிறக்கும். வளரும் போது நாம சொல்லிக் கொடுக்காமலே அது கிட்ட நல்ல நடத்தைகள் பிரதிபலிக்கும். ஏன்னா அந்த விஷயங்கள் அதோட மூளையில் அச்சொட்டா பதியப்பட்டிருக்கும்.

 

இன்னிக்கு உங்க பேபி தன்னோட குரலை வெளிப்படுத்த ஷ்ரவன் தான் காரணம். அதாவது அவன் தினமும் பேசி பேசி இருந்ததால அவன் குரல் மனசுல ஆழமா பதிஞ்சுருக்கு. அதைக் கேட்க இருந்த ஏக்கம் அதைக் கேட்ட உடனே சரியாகி தன்னோட இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கு. உங்க பேபி துலங்கலைக் காட்டுறதுக்கான தூண்டுதல் அந்தக் குரல்” சொல்லி முடித்து தனது சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டார் டாக்டர்.

 

வெளியில் வந்து நடந்த மித்ரனால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு காரணம் இதன் பின்னால் இருக்கும் என அவன் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.

 

அவன் கூறியதைக் கேட்ட விஷ்வா, நீலவேணி மற்றும் அக்ஷராவுக்கும் பிரம்மிப்பாக இருந்தது இப்படியும் இருக்குமா என்று?

 

அதற்குக் காரணமானவனைப் பார்க்க, விழிகளில் அன்பு பெருக தன் பென்குயீனையே பார்த்து அவள் பாதங்கள் இரண்டிலும் முத்தமிட்டான் ஷ்ரவன்.

 

நட்பு தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!