Home Novelsகரம் விரித்தாய் என் வரமே8. கரம் விரித்தாய் என் வரமே

8. கரம் விரித்தாய் என் வரமே

by Ambika ram
5
(1)

கரம் விரித்தாய் என் வரமே – 8

அஸ்வினியும் தெய்வாவும் அமைதியாகவே இருக்க, மீண்டும் கேட்டான் ராஜேஷ்.

“என்ன அது…. என்னை பத்தின டிஸ்கஷன்….? அதுவும் இவ்ளோ அழுகையோட? ம்ம்…. நிறைய அழுதுட்டே…. போதும்…. இனிமே அழாதே….” சொல்லிக்கொண்டே அஸ்வினியின் அருகில் அமர்ந்தவன், அவளை இழுத்து தன் தோளில் சாய்த்து கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

“உன்னால தான் அவ இப்போ அழறாளே….” கிண்டலாக சொல்வது போல் உண்மையை சொன்னாள் தெய்வா.

“நான் என்ன பண்ணேன்? பார்வதி வந்து, அஸ்வினி ரொம்ப அழுதுகிட்டே இருக்கானு சொன்னா, அதுவரை எனக்கு தெரியாதே….” சொல்லிவிட்டு புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தான் ராஜேஷ்.

“அவ சும்மா சொல்றா ராஜேஷ், நீ விடு….” என்றாள் அஸ்வினி தெய்வாவை கண்ணால் கெஞ்சியபடி.

“இல்லை சொல்லு…. நீ கூட நான் வரும் போது என்னை பத்தி சொன்னே….” என்றான்.

ஏதாவது சமாளிடி என்பது போல் அஸ்வினியின் கண்கள் இறைஞ்ச, போனால் போகிறது என்ற தெய்வா ராஜேஷிடம்,

“அது ஒன்னுமில்லை ராஜேஷ், நீ காதல் மன்னன் ஆய்ட்டே, இனி தோழி எல்லாம் ஒருபடி கீழே தானே…. அதை தான் சொன்னா….” என்றாள்.

அப்படியா என்பது போல் அஸ்வினியை பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டான். வேறு எதுவுமே பேசவில்லை. அவன் கைகள் அவளை பிடித்திருந்த விதத்தில், நான் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன் உனக்கு என்று எந்த வார்த்தையாலும் சொல்லாமல் செயலால் காட்டினான்.

ராஜேஷை தொடர்ந்து அறைக்குள் வந்த பார்வதி, அந்த காட்சியை கண்டு கடுப்பானாள். சற்று முன் அவள் அஸ்வினியை பார்த்து சென்ற பின் அவன் அருகில் சென்று அமர்ந்து, நெருக்கமாக அவன் கையோடு கை கோர்க்க முயன்ற நொடி, மெதுவாக அவன் கையை உருவிக் கொண்டான் ராஜேஷ். கண்களால் மதனை வேறு காட்டினான். இப்போது இவளை மட்டும் தோளில் சாய்த்து கொண்டு, கையை பிடித்துக் கொண்டு இருக்கிறான்…. புகைந்தது அவளுக்கு. ஆனால் ஒன்றும் செய்ய முடியா நிலை. அவன் காதலை பெறவே அவள் மிகவும் மெனக்கெட்டு இருந்தாள், கொஞ்சம் கொஞ்சமாக தான் அவனை தன் வழிக்கு வரவைக்க வேண்டும் என்று பல்லை கடித்து அப்போதைக்கு பொறுமை காத்தாள் பார்வதி. அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்று விட்டாள்.

அஸ்வினி ஒய்வு எடுக்கட்டும் என்று அனைவரும் கிளம்ப, ராஜேஷை நிறுத்தினாள் பார்வதி. ஏற்கனவே அவர்கள் காதலை நினைத்து அவன் சங்கடப்பட, இப்போது தனியாக அவனை அவள் இருக்க சொல்ல, மிகவும் தயங்கினான் ராஜேஷ். தெய்வாவும் மதனும் கிளம்ப, அஸ்வினி அவர்களுக்கு தனிமை கொடுத்து அறைக்குள் சென்றாள். அஸ்வினி அப்படி வேகமாக அவர்களுக்கு தனிமை கொடுப்பது போல் விலகி சென்றதே பிடிக்கவில்லை ராஜேஷிற்கு.

“ம்ப்ச்…. என்ன பார்வதி?” அலுப்பும் சலிப்புமுமாக கேட்டான் ராஜேஷ்.

உடனே கண்ணில் நீர் கொண்டாள் பார்வதி. “உன் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டு தானே உன்னை இருக்க சொன்னேன்…. என் கையைப் பிடிக்க அவளோ யோசிக்கிறே…. ஆனா அஸ்வினி கையை மட்டும் ஈஸியா பிடிச்சுக்கிறே….”

அவளின் குற்றச்சாட்டில் கோபம் வந்தாலும் அவளின் கண்ணீரில் தடுமாறியவன், “என் பிரண்ட்ஸ் முன்னாடி நாம ரொம்ப க்ளோசா இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்குமா…. அதான்….” என்றான் சமாளிப்பாக.

“பிரண்ட் கிட்டே அப்படி இருக்கலாம்….. லவ்வர் கிட்டே இருந்தா தப்பா….? லவ்வர் வந்த அப்புறம் பிரண்ட் கிட்டே அப்படி இருக்கிறது தான் தப்பு….” அவன் இளகுகிறான் என்ற தன்னம்பிக்கையில் விடாமல் குற்றம் சாட்டினாள் பார்வதி.

இப்போது மிகக் கோபம் கொண்டான் ராஜேஷ். “ஏய்…! இப்போ அஸ்வினி இருக்க நிலைமையில் எல்லாமே சரி தான்! இன்னொரு முறை இப்படி பேசாதே….” நறுக்கு தெறித்தார் போல் வந்த பேச்சை கேட்ட பார்வதி கொஞ்சம் சுதாரித்தாள்.

“சரி…. உன் பிரண்டோட நீ எப்படி வேணா இரு எனக்கு கவலையில்லை, ஆனா என்னை தள்ளி வைக்காதே…. என்னால தாங்க முடியாது…. நீ மொத்தம் எனக்கு தான் ராஜேஷ், உன் மேல் நான் எவ்ளோ அன்பு வைச்சு இருக்கேன் தெரியும் தானே….?” அவனை நெருங்கி அணைத்து கொண்டு மிகுந்த சோகமாக கொஞ்சி கொஞ்சி பேசினாள் பார்வதி.

அவளின் கொஞ்சலில் கோபம் குறைந்தவன், “ஓக்கே ஓக்கே எனக்கு புரியுது, என்னையும் புரிஞ்சுக்கோ பார்வதி….” கொஞ்சமாக அவள் பக்கம் இறங்கினாலும் மூடி இருந்த அஸ்வினியின் அறை பக்கமே அவன் பார்வை சென்றது. ஏனோ மனம் நிலை இல்லாமல் துடித்தது. அது கொடுத்த தாக்கத்தில் அவனையும் மீறி வாய் விட்டு “அஸ்வினி….” என்றான் ராஜேஷ். அந்த குரலில் அத்தனை தவிப்பு….

“இப்போ நம்மளை பத்தி மட்டும் யோசி ராஜேஷ்….” அணைப்பை இறுக்கினாள் பார்வதி. அவனை அறைக்குள் இழுக்க,

மீண்டும் அஸ்வினி அறையை பார்த்தவன், “பாவம் அஸ்வினி….” என்று தயங்க,

“ம்ம்…. ஆமா” என்றவள் அங்கேயே நின்று எக்கி அவனின் இதழில் இதழ் பதித்து அவனையே எதிர்பார்ப்புடன் பார்த்தாள். அவள் பார்ப்பது புரிய,

அவளை நன்றாக அணைத்து, அவள் ஆசைப்படி இதழில் முத்தமிட்டு “சந்தோஷமா?” என்று கேட்டு அவள் சிரித்த முகத்தை பார்த்த பின் கிளம்பினான். அந்நேரம் அவனுக்கு அந்த நெருக்கத்தில் துளி கூட சந்தோஷம் இல்லை, மிகுந்த சங்கடம் தான். ஆனால் அவனையே சுற்றி வரும் பார்வதியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து தான் முத்தமிட்டான்.

போகும் அவனை வெற்றி புன்னகையுடன் பார்த்தாள் பார்வதி. ராஜேஷை சமாளிப்பது மிகவும் எளிது அவளை பொறுத்தவரை. அவன் மேல் அவள் வைத்திருக்கும் அன்பை சொல்லி காட்டி, அவனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை காட்டினால் போதும், அவன் இளகி விடுவான்! அவனிடம் இறங்கி போவது போல் எல்லாம் பார்வதிக்கு தோணாது, அவளுக்கு தேவை அவனின் காதல்! முக்கியமாக அவளின் சந்தோஷம். இப்போது அவள் இப்படி இருப்பதின் நோக்கம், பிற்காலத்தில் அவன் இவளிடம் இருந்து மீளாமல் இருக்க தான்! அப்போது தானே அவள் என்றும் சந்தோஷமாக இருக்க முடியும்! அந்த அந்த நேரத்திற்கு உரிய உணர்வுகளை மட்டும் யோசித்தாள் பார்வதி. உண்மையில் ராஜேஷின் மனதில் இடம் பிடித்து இருக்கிறாளா? இல்லையா? அதை யோசிக்கவே இல்லை அவள்!

அதே நேரம் போகும் ராஜேஷும் பார்வதி தன் மேல் வைத்திருக்கும் அளவில்லாத அன்பை நினைத்து வியந்தபடி போய் கொண்டு இருந்தான். குறுகிய காலத்தில், அவளுக்கு எப்படி தன் மேல் இவ்வளவு காதல் என்பது அவனுக்கு ஆச்சரியமே! ஆச்சரியம் இருந்தாலும் அவனை கர்வப் படுத்தியது அவளின் காதல். அவர்கள் காதலர்கள் ஆனதை நினைத்து பார்த்தான்.

அஸ்வினியின் அம்மா இறப்புக்கு சென்று வந்த பின் ஒரு வாரம் அவன் பார்வதியிடம் பேசவே இல்லை. மூன்று நாள் அமைதியாக இருந்த பார்வதியால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை. அவனை அழைத்து விட்டாள்.

“எனக்கு எப்போ பதில் சொல்லுவீங்க ராஜேஷ்? நான் காதல் சொல்லி ரொம்ப நாள் ஆச்சு….” ஏமாற்றமாக பேசினாள் பார்வதி.

“என்னால இப்போ அஸ்வினி தவிர வேற எதை பத்தியும் யோசிக்க முடியலை பார்வதி, எனக்கு கொஞ்சம் டைம் கொடு….”

ஒன்றும் சொல்லாமல் போனை வைத்து விட்டாள் பார்வதி. அவள் வைத்ததும் இவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இந்த விஷயத்தை பற்றித்தான் அஸ்வினியிடம் டிஸ்கஸ் செய்ய நினைத்து இருந்தான். இப்போது என்ன செய்வது? பார்வதிக்கு உடனடியாக ஓக்கே சொல்லவும் தயக்கமாக இருந்தது. அவனின் வீடு, பொறுப்பு அனைத்தும் வரிசையாக மனதில் ஊர்வலம் வர குழம்பினான். ஆனால் ஒரு பெண் வலிய வந்து அவனிடம் காதல் சொன்னதும் மனதிற்குள் சந்தோஷத்தை விதைத்து இருந்தது மறுக்க முடியாத உண்மை. அவளுடன் பழகிய நாட்களில் தேவையில்லாத வேலை பார்த்து என்னை இந்த நிலைமைக்கு இழுத்து விட்டாள் அஸ்வினி என்று கரித்து கொட்டியபடி தான் பார்வதியுடன் பொழுதை கழிப்பான். போக போக, பார்வதியின் ஆர்வத்தால் அது ஒரு கமிட்மெண்ட் போல ஆனது அவனுக்கு. குழம்பியவன் பார்த்து கொள்ளலாம் என்று எந்த முடிவும் எடுக்காமல் இருந்தான்.

அவனை அப்படியே விடுவாளா என்ன பார்வதி? அவளின் ஆசை எதையும் இதுவரை அவள் நிறைவேற்றிக் கொள்ளாமல் விட்டதில்லையே….

ஐந்தாம் நாள் காலை அவனிற்கு வந்த அழைப்பினால் அடித்து பிடித்து பார்வதியை பார்க்க சென்றான் ராஜேஷ்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் பார்வதி. அவளின் தெலுங்கு தோழி ராஜேஷை அழைத்து விவரம் சொல்லி மருத்துவமனைக்கு வரச்சொல்லி இருந்தாள். ஒரு நாள் முழுக்க உண்ணாமல், உறங்காமல் இருந்த விளைவில் மயக்கம் போட்டு இருந்தாள் பார்வதி. அவன் வந்தவுடன்,

“இங்க பாருங்க ராஜேஷ், ட்ரிப்ஸ் முடிஞ்சு போச்சு. இப்போ இவளுக்கு பால், பிரெட் ஏதாவது கொடுங்க சொன்னாங்க…. ஆனா இவ எதுவுமே சாப்பிட மாட்டேங்கிறா…. யாராவது இப்படி பண்ணுவாங்களா? ஏற்கனவே இழுத்து விட்டது பத்தாதா? உங்களை நினைச்சு தான் அவளையே இப்படி வருத்திக்கிறா…. நீங்களே சாப்பிட சொல்லுங்க…. சாப்பிட வைச்சுட்டு போங்க, சிஸ்டர் எல்லாம் இவளை திட்டுறாங்க….” என்றாள் அந்த தோழி கொஞ்சம் எரிச்சலாக.

அதிர்ந்து போய் இருந்தான் ராஜேஷ் பார்வதியின் இந்த பரிமாணத்தில். தனக்காக ஒருத்தி இப்படி சாப்பிடாமல் இருக்கிறாளா?

“ப்ளீஸ் பார்வதி, சாப்பிடு…. இது என்ன பிடிவாதம்?”

“என்னால முடியலை ராஜேஷ், எனக்கு நீங்க பாசிட்டிவ்வா ஒன்னும் சொல்லலை…. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….” அழுவதை அவனிடம் காட்டாமல் முகத்தை திருப்பி கொண்டாள் பார்வதி.

அவள் முகத்தை வலுக்கட்டாயமாக அவன் பக்கம் திருப்பியவன், “இப்போ நீ சாப்பிடு…. நிச்சயம் அப்புறம் நாம பேசலாம்….” என்றான்.

“ம்ம்….” என்றவள் அவன் முகத்தையே ஒரு எதிர்பார்ப்போடு பார்த்தாள். அதில் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் திடம் எனக்கு இல்லை என்ற செய்தியும் இருந்தது.

சாப்பிட்ட பின் அவன் பேச ஆரம்பிக்க, அவள் அவனை பேசவே விடவில்லை. மாறாக, கண்களில் இறைஞ்சலுடன் “உங்களை பத்தி எனக்கு எல்லாம் தெரியும், எல்லாமே எனக்கு ஓக்கே…. உங்களுக்காக நான் வெய்ட் பண்ணுவேன்…. எங்க வீட்டில் என் விருப்பம் தான், நான் என்னை பத்தி சொல்லி இருக்கேன்ல்ல…. இப்போ நீங்க எஸ் ஆர் நோ அதை மட்டும் சொல்லுங்க….ப்ளீஸ்….” என்றாள்.

“சொல்றதுக்கு ரொம்ப ஈசி பார்வதி, ஆனா ரியாலிட்டி வேறயா இருக்கும்…. என் தங்கை கல்யாணம், எங்க வீட்டு வேலை எல்லாம் முடித்து, நான் ஓரளவிற்கு பணம் சேர்த்து செட்டில் ஆக பத்து வருஷம் கூட ஆகும்….” யாதார்த்தம் பேசினான் ராஜேஷ்.

“இந்த காரணத்துக்காக எல்லாம் நான் உங்களை மிஸ் பண்ணினா நான் ஒரு ஸ்ட்டுபிட் ராஜேஷ்….”

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல், அவள் கைகளை தன் கைக்குள் எடுத்து கொண்டு சம்மதம் என்பது போல் தலையசைத்து சிரித்தான் ராஜேஷ்.

இப்படி தான் ராஜேஷ் பார்வதியின் காதலை ஏற்றுக்கொண்டான். அவன் மறுக்க முடியாத சூழ்நிலையில் அவனை நிறுத்தி தன்னை ஏற்றுக் கொள்ள வைத்தாள் பார்வதி. அப்போது தயக்கமாக ஏற்றுக் கொண்டாலும் இப்போது அவனுக்கு பார்வதியை பிடித்தது. ஒரு பெண் எந்நேரமும் ஒருவனை புகழ்ந்து கொண்டு, அவனை ஆராதித்து அன்பை காட்டி கொண்டு இருந்தால், அந்த ஆணிற்கு எப்படி அவளை பிடிக்காமல் போகும்?

*************

இரு வாரம் கழிய, மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டு இருந்தாள் அஸ்வினி. அலுவலகத்தில் பழைய மாதிரி ராஜேஷ், மதன் மட்டும் இல்லாமல் பார்வதி இருந்தது அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் ராஜேஷிற்காக அவளை சகித்து கொண்டாள். அளவோடு பேசுவார்கள் இருவரும். ஒட்டி உறவாட இருவருமே விரும்பவில்லை. கவனமாக ராஜேஷிடம் அவன் காதலை பற்றி பேசவில்லை அஸ்வினி. அவளால் பேசவும் முடியாது…. ராஜேஷும் பார்வதி பற்றியோ அவர்கள் காதல் பற்றியோ அவளிடம் பேசவில்லை, அவனுக்கும் அதை பற்றி அவளிடம் சகஜமாக பேச முடியவில்லை. அஸ்வினியின் முன் அவன் பார்வதியுடன் பேசும் நேரமெல்லாம் தடுமாறினான் ராஜேஷ். என்ன முயன்றும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அஸ்வினி அவனின் காதலை பற்றி என்ன நினைப்பாள் என்பதே அவனின் பெருங்கவலையாக இருந்தது. அதனால் கோபம் கொண்டாள் பார்வதி. உன் பிரண்ட்ஸ் இருந்தா நீ என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறே என்று சண்டையிட்டாள். அலுவலகத்தில் இப்போது அனைவருக்கும் அவர்கள் காதலர்கள் என்று தெரியும்!

************

அந்த வாரக்கடைசியில் அனைவரும் வெளியூர் செல்லலாம், இரண்டு நாள் தங்குவது போல சென்று வரலாம் என்று முடிவெடுத்தனர். முக்கியமாக அஸ்வினிக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று தான் அந்த சின்ன ட்ரிப். ஏலகிரிக்கு செல்லலாம் என்று முடிவு செய்து பயண ஏற்பாட்டை செய்தனர்.

பயண ஏற்பாடு நடக்கையில், அனைவரும் அஸ்வினிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கண்டு பார்வதிக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அஸ்வினியின் அம்மா இறப்பிற்க்காக பார்வதியும் வருந்தினாள் தான்…. அதே சமயம், அனைவரும் அவளை அதிகமாக தாங்குவதாக கடுப்பாகவும் ஆனாள். அதை ராஜேஷிடம் சொல்லவும் செய்தாள்,

“நீங்க எல்லாரும் அவளை நார்மலா நடத்துங்க, ரொம்ப ஓவரா கேர் பண்ணினா அவ எப்படி சரி ஆவா?”

“என்ன இப்போ ஓவரா பண்ணோம் நாங்க? அவளோட இழப்பு எவ்ளோ பெரிசு…. நீ பேசுறது எனக்கு பிடிக்கலை பார்வதி….” பட்டென்று சொன்னான் ராஜேஷ்.

அவன் சீறுவது போல் தெரிய, தன் தொனியை மாற்றி வேறு மாதிரி பேசினாள் பார்வதி.

“இல்லை ராஜேஷ், எப்போதும் எப்படி அவளை கிண்டல் பண்ணி, ஜாலியா பேசுவீங்களோ அது மாதிரி….”

“ம்ப்ச்…. அவ முகத்தை பார்…. அப்படி ஜாலி பண்ற மாதிரி நிலைமையிலா இருக்கா அவ….?” கடுப்பாக கேட்டான் ராஜேஷ். அஸ்வினி வேறு அவனிடம் இருந்து விலகி விலகி போவது போல் இருந்தது அவனுக்கு. அனைத்தும் சேர்ந்து கொள்ள, இவளிடம் கடுப்படித்தான்.

இதற்கு மேல் இப்போது பேசக் கூடாது என்று புரிய அமைதி ஆகி விட்டாள் பார்வதி.

********
அந்த வாரம் வெள்ளி அன்று மாலையே சென்னையில் இருந்து ஏலகிரிக்கு பயணமானார்கள் நண்பர் குழு. வேலூர் தாண்டி ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று மதன் அடம் பிடித்தான். அதனால் அனைவரும் அங்கேயே இரவு உணவை உண்டனர். அது ஒரு சின்ன அளவில் இருக்கும் ஹோட்டல் தான். ஆறு பேர் ஒன்றாக அமர இடம் இல்லை. காதலர்களுக்கு தனிமை கொடுக்கலாம் என்று மற்ற நால்வரும் ஒரு இடத்தில் அமர, பார்வதி முகம் மலர்ந்தது என்றால் ராஜேஷின் முகம் சுருங்கியது. அவனை தனியாக விட்டு விட்டார்கள் போல் மனம் வருந்தியது அவனுக்கு. அதுவும் முக்கியமாக இன்றும் அஸ்வினி அவனிடம் இருந்து தள்ளிப்போனது ஒரு மாதிரியாக இருக்க, வருத்தத்தை மறைத்து கொண்டு கேஷுவலாக,

“ஹேய், அஸ்வினி நீ இங்க வா, எங்கக்கூட உட்கார்….” என்றான்.

பார்வதி முகம் மாறுவதை உணர்ந்த அஸ்வினி, “என்ஜாய் பண்ணுங்க நீ…. நான் இங்கேயே இருக்கேன்….” என்றாள் சின்ன சிரிப்புடன்.

அவன் அழைத்தும் அவள் வரவில்லை என்றதும் சட்டென்று மூண்ட கோபம், ஏமாற்றத்துடன், “நீங்க எல்லாம் ஒன்னு, நான் மட்டும் வேறயா….? என்றான்.

“ஹேய் என்னடா? நீங்க தனியா பேசலாம்னு தானே விட்டோம்….” என்றான் ஷிவா சமாதானமாக.

“நான் என்ன ஜோடியா ஊர் சுத்தவா வந்தேன்? எல்லாரோடும் இருக்கணும்னு தானே?” என ஆதங்கமாக கேட்டு விட்டு எழுந்து வெளியே சென்று நின்று விட்டான் ராஜேஷ்.

வெளியே சென்றவனுக்கு மனமே ஆறவில்லை. என்னுடனேயே இருப்பவள் இப்போதெல்லாம் என்னை தவிர்க்கிறாளே….இனி என்னிடம் பழைய மாதிரி உரிமையுடன் பழக மாட்டாளா….? அவளிடம் என்னாலும் உரிமை எடுக்க முடியவில்லையே, என்னை தள்ளி நிறுத்துகிறாளே…. தவித்தான் ராஜேஷ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!