கரம் விரித்தாய் என் வரமே – 9
கோபம் வருத்தம் என கலந்து கட்டி பேசி சென்றவனிடம் செல்ல துடித்த மனதை கடினப்பட்டு அடக்கி தெய்வாவை பாவமாக பார்த்தாள் அஸ்வினி. தோழியை முறைத்த தெய்வா, அவளுக்காக ராஜேஷை சமாதானம் செய்ய துடிக்கும் அவளின் மனதிற்காக, பார்வதியிடம்,
“என்ன பார்வதி? உங்க ஆளு இப்படி முறுக்குறார்? போய் ஒரு அடி போட்டு இழுத்துட்டு வா!” என்றாள் சிரித்து.
இவர்கள் பேசும் முன்னேயே ஷிவாவும், மதனும் எழுந்து ராஜேஷிடம் சென்றிருந்தனர். அவர்களை கண் காட்டிய பார்வதி, வாயை திறந்து ஒன்றும் பேசாமல் உர்ரென்று இருந்தாள். அவளுக்கு ராஜேஷின் மேல் கோபமாக வந்தது. அவனுடன் தனிமையில் இருக்க அவள் துடிக்க, அழகாக வாய்த்த தனிமையை கெடுப்பது மட்டுமில்லாமல் அஸ்வினியை அவர்களோடு அழைக்கிறானே…. கடுகடுவென்று ஆனது அவள் முகம்.
ராஜேஷின் அருகில் சென்ற மதனும் ஷிவாவும் அவனை சமாதானம் செய்தார்கள்.
“டேய், பார்வதி என்ன நினைப்பாங்க? என் இப்படி எல்லாம் பேசுறே? உங்களுக்கு தனிமை கொடுத்து தானே நாங்க அப்படி பண்ணோம்?” பார்வதி பற்றி தெரிந்தவனாக படப்படத்தான் மதன்.
“நான் கேட்டேனா உங்களை….?” சொல்லியவாறு முறைத்தான் ராஜேஷ்.
“பார்வதிக்கு ஆசை இருக்கும் டா….” பொறுமையாக சொன்னான் ஷிவா.
“ம்ப்ச்….” உச்சு கொட்டியவன், “நாம வந்தது அஸ்வினிக்காக, எனக்கு உங்களோட தாண்டா இருக்கணும்….” அலுப்பாக வந்தது ராஜேஷ் குரல்.
“சரி வா….” அவனை அழைத்து கொண்டு வந்தவர்கள் அவனுடன் அமர்ந்தார்கள். முகத்தை உர்ரென்று வைத்திருந்த பார்வதியை கண்டு சங்கடமாக இருந்தது அவர்களுக்கு. ஆனால் நண்பனை சமாதானம் செய்ய வேண்டுமே…. கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.
இன்னும் மற்றொரு டேபிளிலேயே அமர்ந்து இருந்த அஸ்வினியை கண்ட ராஜேஷிற்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதை அப்படியே குரலில் காட்டியவன்,
“உங்களுக்கு தனியா சொல்லணுமா?” என்றான் பல்லை கடித்து கொண்டு. கேட்டவன், வேகமாக இரண்டு டேபிளையும் ஒன்றாக போட்டான். யாரை பற்றியும் கவலைப்பட வில்லை.
அங்கு வேலை செய்பவர்களிடம், “நாங்க இப்படியே சேர்ந்து உட்கார்ந்துகிறோம், கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க….” என்று அவர்கள் மறுக்க வழியில்லாத வகையில் தன்மையாக சொன்னான்.
சற்று நேரத்தில், பார்வதி சுணக்கமாக இருப்பதை பொருட்படுத்தாமல், தெய்வா கலக்கலக்க, அவளின் கலகலப்பு மற்றவரையும் பற்றியது. அனைவரும் பேசி சிரித்தபடி உண்டனர். அஸ்வினியின் சிரித்த முகத்தை பார்த்தபடியே உண்ட ராஜேஷிற்கு அப்போதுதான் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவள் மேல் சற்று கோபமாக இருப்பது போலவே அவ்வப்போது அவளை முறைத்து வைத்தான்.
உணவு உண்ட பின், அஸ்வினியையும் ராஜேஷையும் தவிர்த்து மற்றவர்கள் ரெஸ்ட் ரூம் செல்ல, தன்னை முறைக்கும் நண்பனை மெதுவாக நெருங்கினாள் அஸ்வினி.
“என்னவோ உன்னை தனியே விட்டு நாங்க டூர் போயிட்டு வந்த மாதிரி ஓவர் ஸீன் போடுறே…. ம்ம்….?” அவனின் மன வருத்தம் தாளாமல் அவனை சமாதானம் செய்ய நினைத்தாள் அஸ்வினி. அதனால் கிண்டலாக பேசினாள்.
“ஓ! அப்படி கூட செய்வீங்களா?” கடுப்படித்தான்.
“அடேய், லவ்வர்ஸ் எல்லாம் இப்படி தானே தனிமை தேடுவீங்க….? இதுக்கு ஏண்டா இவ்ளோ அக்கப்போர் பண்றே….?”
“அதனால் தானே நீ என்னை விட்டு தள்ளி தள்ளி போறே…. எனக்கு தெரியும்…. நானும் இரண்டு வாரமா பார்த்துகிட்டு தான் இருக்கேன்…. நான் அந்த மாதிரி இல்லை….” கண் இரண்டும் சிவக்க, அவன் கண்ணீர் இப்பவோ அப்போவோ என்று இருக்க, வலியுடன் பேசினான் ராஜேஷ்.
அழுகிறானா ராஜேஷ்….? அதிர்ச்சி ஆனாள் அஸ்வினி. அவன் கண்ணீர் மட்டும் கொட்டி இருந்தால் அவளும் அழுது இருப்பாள்…. அவன் சமாளித்து கொள்ள, இவளும் சமாளித்து கொண்டாள்.
“சே….! சே….! அப்படி எல்லாம் இல்லை டா…. சரி விடு! இனிமே ப்ளீஸ் எங்களை கொஞ்சம் தனியா விடுனு நீ கேட்கிற வரை உன்னையே பிடிச்சு தொங்குறேன்….” என்று அவனின் தோளில் நிஜமாகவே தொங்கினாள் அஸ்வினி.
“அப்படி நான் என்னைக்கும் சொல்ல மாட்டேன்….” என்றவன் அவளை தூக்கி தட்டாமலை சுற்றினான். ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தவர்கள் கண்டது, கலகலத்து சிரிக்கும் இருவரையும் தான். பார்வதி தவிர மற்றவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
மீண்டும் பயணம் தொடங்க, அஸ்வினி வலுக்கட்டாயமாக ராஜேஷை பின்னால் அமர்ந்து இருந்த பார்வதி அருகில் தள்ளினாள். தள்ளி விட்டு, “உன் ஆளை உன்கிட்ட கொடுத்தாச்சு மா…. இனிமே உன் பாடு” என்றாள். அவள் அப்படி சொல்லவும் மலர்ந்து சிரித்தாள் பார்வதி. ஒழுங்கா சமாதானம் படுத்து என்று ராஜேஷின் காதிலும் முணுமுணுத்துவிட்டு முன்னால் சென்று அமர்ந்து கொண்டாள் அஸ்வினி.
தாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை கண்ட பார்வதியின் முகம் சூம்பி போனதை கவனித்தாள் அஸ்வினி. நண்பன் தனக்காக இவ்வளவு பார்க்கும் போது, தன்னால் அவர்கள் காதலில் எந்த பிரச்சனையும் வர வேண்டாம் என்று நினைத்தாள் அஸ்வினி. அதனாலேயே அவனுக்காக பார்வதியிடம் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு பேசினாள். எப்போதும் எல்லாம் ராஜேஷை கொண்டு தானே அஸ்வினிக்கு….!
“என்ன தியாகமா?” நக்கலாக கேட்டாள் தெய்வா.
“அவனுக்காக, அவனும் எனக்காக எப்படி இருக்கான் பார்த்தே தானே….?” தெய்வாவை சமாதானம் செய்தாள் அஸ்வினி.
தெய்வாவிடம் பேசிய பின் அஸ்வினியின் கவனம் பின் சீட்டில் இருப்பவர்களிடம் சென்றது. ராஜேஷ் மெல்லிய குரலில் பார்வதியிடம் பேசுவது அவளுக்கு கேட்டது.
“இன்னும் எவ்ளோ நேரம் இப்படி இருக்க போறே….? நாம ஜாலியா இருக்க தான் வந்து இருக்கோம் பார்வதி. நீ இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டா நல்லாவா இருக்கும்?”
“உன் பிரண்ட் மட்டும் ஜாலியா இருக்கணும் உனக்கு…. என்னை பத்தி நினைக்கலை நீ….”
“உனக்கும் பிரண்ட் தானே அவ?” கூர்மையாக கேட்டான் ராஜேஷ்.
“ஆனா நீ எனக்கு மட்டும் தான்…. உன்கூட தனியா இருக்க எனக்கு எவ்ளோ ஆசை தெரியுமா? நீ இருக்கும் போது எனக்கு வேற யாரும் தெரிய மாட்டாங்க….” உருகினாள் பார்வதி.
“ம்ப்ச்…. நாம தனியா வரலை பார்வதி….” அவள் பேசிய விதத்தில் கோபம் சற்று மட்டுப்பட அலுப்பாக சொன்னான் ராஜேஷ்.
“நான் என்ன பண்றது? எனக்கு அப்படி தான் இருக்கு எப்போதும்…. உன்னை பத்தி மட்டும் தான் என் மனசு, மூளை யோசிக்குது….” சொன்னபடி அருகில் அமர்ந்து இருந்த அவனை தழுவி அணைத்தாள் பார்வதி. தழுவியது மட்டுமின்றி அவனை அவள் ஸ்பரிசிக்க, அதில் மயங்கியவனாக அமைதியாக பார்வதியை அணைத்து கொண்டான் ராஜேஷ்.
அவர்களின் பேச்சு நின்று விட ஒன்றும் புரியாமல் ரியர் வியூ மிரர்ரில் அவர்களை பார்த்தாள் அஸ்வினி. பார்வதி, ராஜேஷின் நெஞ்சில் சாய்ந்து இருந்ததில் அவளின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் ராஜேஷின் முகத்தை பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. பார்வதியின் செயலில் நெகிழ்ந்தும், அவள் காதலில் பெருமையும் பூரிப்பாகவும் இருந்தது அவன் முகம். அதற்கு மேல் அவர்களை கவனிக்காமல் அருகில் அமர்ந்து இருந்த தெய்வாவின் மடியில் தலையை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள் அஸ்வினி. மனம் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தது.
முன்னால் அமர்ந்து இருக்கும் தோழியின் மனம் படும் பாட்டை உணராதவன், தன் மேல் சாய்ந்து தன்னை இறுக்கி அணைத்து இருக்கும் பெண்ணிடம் கிறங்கி இருந்தான். அவள் அவனிடம் காட்டும் விருப்பம் அவனுக்கு பேருவுகையை கொடுத்தது. அவளுக்கு ஈடாக அவனும் அவனிடம் இழைந்தான். அனைவருக்கும் பின்னால் அமர்ந்து இருந்ததால் அவர்களின் லீலை யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கை.
எவ்வளவு கடுப்பு கோபம் இருந்தாலும் தன் காரியத்தில் கெட்டி ஆன பார்வதி, ராஜேஷை தன்னிடம் வரவைத்த மகிழ்ச்சியில் அவனிடம் சற்று தாராளமாக நெருக்கம் காட்டினாள். அந்த காரில் அவனின் உணர்வுகளுடன் விளையாடி, இவளை நாட வைத்து மகிழ்ந்தாள். அதில் இவளும் ஏலகிரியில் இருந்து திரும்ப செல்லும் போது அவனுக்கு அஸ்வினியை பற்றிய எண்ணங்களை விட தன்னை பற்றிய எண்ணம் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
ஆனால் அவள் அறியாதது, இதே ராஜேஷ் அஸ்வினி அவனை நெருங்கி பேசாமல், சிரிக்காமல் இருந்திருந்தால் இது போல் அவளிடம் நெருங்கி இருக்க மாட்டான் என்பது தான். அவன் தோழி இயல்பாகி, அவன் காதலை ஏற்று கொண்டது போல் பார்வதியிடம் பேசியதால் மிகுந்த சந்தோஷம் அடைந்து இருந்தான். அந்த மனநிலையில் தான் அவளிடம் இளகினான். இரு வாரங்களாக அஸ்வினியும் பார்வதியும் பேசி கொள்வது இல்லை என கவனித்து இருந்தான். அது அவனுக்கு ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுத்து இருந்தது. இப்போது அஸ்வினி பேசவும் அவள் தன் காதலை அங்கீகரித்தது போல் சட்டென்று அவனுக்குள் ஒரு இளக்கமான மனநிலை.
ராஜேஷின் சிந்தை முழுதும் அஸ்வினியே நிறைந்திருக்க, பார்வதி நினைப்பது போல் ராஜேஷை காதலி என்ற நிலையில் இருந்து முழுவதுமாக தன் பக்கம் இழுத்து விடுவாளா? போக போக தெரியும்!
*************
மறுநாள் அதிகாலை, மெல்லிய பனியுடன் குளிராக இருந்த ஏலகிரி மலையின் அழகை ரசித்து கொண்டு இருந்தாள் அஸ்வினி. தெய்வாவும் பார்வதியும் நல்ல உறக்கத்தில் இருக்க, யாரையும் தொந்தரவு செய்யாமல் வெளியில் வந்து விட்டாள் அஸ்வினி.
சட்டென்று பக்கவாட்டில் அவளை தோளோடு தோள் சேர்த்து அணைத்தது ஓரு உருவம்.வேறு யார் ராஜேஷ் தான்! அவனும் தூக்கம் கலைந்து எழுந்து வந்திருந்தான்.
இப்போல்லாம் அடிக்கடி இந்த மாதிரி ஹக் பண்றான்…. முன்னாடி நான் தான் அவனை தொடுவேன்…. என்று மனதோடு நினைத்து கொண்டவள்,
“உங்க ஆளு இன்னும் எழுந்துக்கலை….” என்றாள் வேண்டுமென்றே
அவளை இன்னும் தன்னோடு இறுக்கியவன், “ச்சு…. பேசாம இரு…. ரொம்ப ரம்மியமான சூழ்நிலை…. என்னை என்ஜாய் பண்ண விடு….” என்றான்.
தூங்கி எழுந்து வந்தவன் கண்ணில் அஸ்வினி பட, எதிர்பாராமல் அவளை கண்டதும் அவன் உள்ளம் போட்ட ஆட்டம் என்ன? அதே உற்சாகத்தில் ஓடி வந்து அவளை அணைத்து கொண்டான். அவனும் அடிக்கடி அஸ்வினியை தொடுவதை உணர்ந்து இருந்தான்…. அவள் விலகி விலகி போவதால் தான் அவன் அவளை இழுத்து பிடிப்பதாக அவனே ஒரு காரணமும் கற்பித்து கொண்டு இருந்தான்.
“நீ என்ஜாய் பண்ண என்னை ஏண்டா இழுக்கிறே….?” அவனிடம் மயங்கும் மனதை சரி செய்ய அவனிடம் இருந்து விலகி போக திமிறினாள் அஸ்வினி.
இதோ ஆரம்பிச்சுட்டா என்று மனதில் சலித்து கொண்டவன், அவளை இன்னும் இறுக்கி பிடித்தான். அவன் இறுக்க, அவள் திமிர இருவருக்கும் அந்த காலை வேளையில் சுற்றுப்புறம் மறந்து போனது. ஒருவருள் ஒருவர் மூழ்கி விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் களைத்து போன அஸ்வினி அவனின் கைக்குள் பாந்தமாக அடங்கி கொள்ள, அவனும் அமைதியானான்.
சற்று நேரம் அவர்களுக்குள் மௌனம் ஆட்சி செய்ய, அதை கலைக்கும் விதமாக,
“ஸாரி டா பூனைக்குட்டி….” என்றான் ராஜேஷ் மெதுவாக.
ஏன்? எதுக்கு? என்று எதுவும் கேட்காமலேயே அவன் மனதின் பரிதவிப்பை புரிந்து கொண்டவள்,
“ஸாரி கேட்கிற அளவு காதல் ஒன்னும் தப்பில்லை டா…. நீ சொல்லி தான் நான் உன்னை புரிஞ்சுக்கணுமா? ப்ரீயா விடு….” என்றாள்.
அவள் புரிதலில் உடைந்து போனவன், சற்று நேரம் அமைதியாக இருந்து தன்னை சமாளித்து கொண்டான். பின் அவளிடம், “நீ ஒரு தேவதைடி பூனைக்குட்டி! ஒரு வார்த்தை நான் சொல்லாமலே என் வருத்தத்தை போக்கிட்டே….” என்றான் மனம் நெகிழ்ந்து.
வரம் தரும் அவனின் தேவதையை அவனையும் அறியாமல் தள்ளி வைத்து விட்டானே…. இனி எப்போது அவன் கை சேருவாள் அவன் தேவதை….?