🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 20
மயக்கத்தின் விளிம்பிற்குச் சென்ற தேன் நிலாவின் செவிப்பறையில் யாரினதோ இதயத் துடிப்பு இரட்டிப்பாய்க் கேட்டது போல் இருந்தது.
நாசி தீண்டிய வாசனை அவளுக்கு சுயம் உணர்த்த, “ரஷ்யாக்காரா” எனும் அழைப்போடு நிமிர்ந்தவளுக்கு அவனது மார்பில் தான் தலை சாய்த்து இருப்பதையும், அவன் மயக்கத்தில் இருப்பதையும் கண்டவுடன் மயக்கமெல்லாம் தெளிந்து போயிற்று.
தன்னவன்! தன் உயிரில் கலந்தவன். சுவாசமாய் ஆனவன். தன் நேசத்தின் சொந்தக்காரன்.
“ராகவ்! ரா..ராகவ்” அவனது கன்னம் தட்டியவளுக்கு என்ன செய்வதென்று புரியாமல் கரங்கள் நடுங்கின.
அவனுக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே என்பதை வெகு பதற்றத்தோடு ஆராய்ந்தவள் அப்படி எதுவும் இல்லை என்றதும் சற்று ஆசுவாசமானாள்.
அவனைத் தன் மடியில் கிடத்தி “என்னங்க. எந்திரிங்க. எந்திரிங்க ராகவ். ப்ளீஸ்ங்க! நான் உங்க கூட இனி சண்டை போட மாட்டேன். ஆர்கியூ பண்ண மாட்டேன். என்னைப் பாருங்க. கண்ணைத் திறங்க” என்று அவனை உலுக்கினாள்.
எழுந்து தண்ணீர் எடுத்து வரலாம் என்று நினைத்தவளது கையை அவன் இறுகப் பற்றியிருந்தான். விடுவிக்க முயன்றும் முடியாதளவு பிடி அத்தனை அழுத்தமாக இருந்தது.
ஆக்சிடன்டில் தப்பித்து வந்திருக்கிறான். ஆனால் மயங்கி விழுந்தானே. என்னவாக இருக்கும் என பரிதவித்தது அவளுள்ளம்.
“ராகவ்! கண்ணைத் திறங்க. நான் உங்க நிலா பேசுறேன்” அழுதவாறு புலம்ப, அவள் கன்னத்தில் வழிந்து அவனது இமைகளில் விழுந்தது கண்ணீர்.
இத்தனை நேரம் மயக்கத்தில் உணர்வற்று இருந்தவனது இமைகள் மெல்லமாய்த் திறக்க ஆரம்பித்தன. மீண்டும் மீண்டும் கண்களை இறுக மூடித் திறந்து அவளின் தெளிவான விம்பத்தைக் காண முற்பட்டான் கணவன்.
ஆக்சிடன்டில் அவனுக்கு அடி எதுவும் இல்லை. ஆனால் விமானத்தில் வந்த களைப்பிலும் விபத்து பற்றிய அதிர்ச்சியிலும் மயங்கியிருந்தான் அவன்.
“எழுந்திருங்க. என்னை ஹனி மூன்னு கூப்பிடுங்க” விழி நீர் அருவியெனப் பெருக்கெடுத்து ஓடிட அழுதவளை, “ஹனி மூன்” என அழைத்தான் ராகவேந்திரன்.
ஒற்றை அழைப்பு அவளின் ஒட்டுமொத்த சக்தியையும் மீட்டுக் கொடுக்க, “ராகவ்” அவனை அணைத்துக் கொண்டவளுக்கு கண்ணீர் மழை நில்லாமல் பொழிந்தது.
அவளைத் தன் கரங்களால் தழுவி “எனக்கு ஏதாச்சும் ஆகிருமோனு பயந்துட்டியா?” என்று வினவ, அமைதியாக அவன் முகம் பார்த்தாள்.
“பயப்படாத. அவ்ளோ சீக்கிரம் சாக மாட்டேன். நான் வாழனும். ரொம்ப வருஷம், ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழனும். நான் காதலோடு வாழனும், என் தேன் மிட்டாய் கூட” அவளைத் தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டான்.
அவன் வார்த்தைகளால் அவளது நயனங்களில் நீர்ப் பிரவாகம். எத்தனை உருக்கமாக சொல்லி விட்டான். அவனது காதலை உரைத்து விட்டான்.
“இனிமே உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். போகவே மாட்டேன். உன் கண்ணுல கண்ணீர் வரக் கூடாது. இனிமே காதல் தான் வரனும். எனக்கான காதல் மட்டுமே உன் கண்கள்ல பொங்கி வழியனும்” என்றவாறு எழுந்து நின்றான்.
“நீங்க போறது என்ன? இனிமே வெளியே போறேனு சொன்னா உங்க வாயைத் தச்சி வெச்சிருவேன். நீங்களே போனாலும் நான் போக விட மாட்டேன். அப்படியே போறதா இருந்தா என்னையும் கூட்டிட்டுப் போயிடுங்க. அவ்ளோ தான்” கோபமும் அழுகையுமாகச் சொன்னாள் செவ்வந்தியாள்.
“அடடே என் பொண்டாட்டி நான் நெனச்ச மூடுக்கு வந்துட்டா போல” என அவன் சிரிக்க, “டெரர் மூடுக்கு தான் வரப் போறேன்” என்றாலும் அவளால் முறைக்க முடியவில்லை.
“வேண்டவே வேண்டாம் மா. நானே ஆல்ரெடி நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கேன்” என்று சொன்னவன், “நான் இல்லாம எப்படி போச்சு நாள்?” எனக் கேட்க,
“நாள் போச்சுனா உங்களை அங்கேயே இருந்துட சொல்லிருப்பேன். சண்டை போடாம தூக்கமே வரல. போரடிச்சுது” முறுக்கிக் கொண்டாள் மங்கை.
“தூக்கம் வரலனா பில்லோவை கட்டிக்க சொன்னேன். ஆனால் நீ என் ஷர்ட்டையே கட்டிப் பிடிச்சிட்டு தூங்கி இருக்க” தரையில் கிடந்த தனது ஷர்ட்டைக் காட்டியதும் அதை எடுத்து கட்டிலில் வைத்தாள்.
“இனிமே அதற்குத் தேவை இருக்காது. அதனால அதை விட்டுட்டு என்னை ஹக் பண்ணிக்கலாம்ல?” அவன் கேட்ட கேள்வியில் விழி விரித்தாள்.
“நா..நான் ஹக் பண்ணிக்க மாட்டேன்” என அவள் வீம்பு பிடிக்க, “இல்லனா மிஸ் பண்ணுவீங்க. என்னை நினைச்சு வாடிப் போய் இருப்பீங்க. ஆனால் வந்ததும் எதுவும் இல்லைல்ல? பரவாயில்லை நான் போயிடுறேன். மறுபடி மிஸ் பண்ணுனா சொல்லி அனுப்பு” என்றவாறு திரும்பி நடக்க, ஈரெட்டில் நெருங்கி அவனைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் தேன் நிலா.
“போயிடுவீங்களா? என்னை விட்டுட்டு இருந்துடுவீங்களா? என்னால முடியாது. எங்கேயும் போகக் கூடாது. என்னால நீங்க இல்லாமல் இருக்க முடியாதுங்க” என்றவளது கண்ணீர் அவன் முதுகை நனைத்தது.
தன் மனையாட்டியின் வாயில் மலர்ந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்வோடு நின்றான் ராகவ். சட்டென அவளது கையைப் பற்றி தன் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவன், “என்ன சொன்ன? மறுபடி சொல்லு” தன் காதில் கேட்டது பிழையோ என்று மீண்டும் கேட்டான்.
“என்னை விட்டுட்டு போயிடாதீங்க. நீங்க இல்லாம நான் இருக்கவே மாட்டேன். எனக்கு நீங்க வேணும். நீங்க தான் வேணும்” அவனை ஆழ்ந்து நோக்கினாள் தேனு.
‘எனக்கு நீங்க வேணும்’ எத்தகைய வார்த்தைகள் அவை? அவளது வாயால் எதனைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டானோ அதனைக் கேட்டு விட்டான்.
உணர்வுகள் செறிந்த அவன் விழிகளைக் காதல் சொட்டும் தன் விழிகளால் ஊடுறுவி, “நான் உங்களைக் காதலிக்கிறேன் ராகவ். உங்க பக்கத்தில் எப்போவும் இருக்கனும்னு ஆசைப்படுறேன்” என்று மொழிந்தாள்.
மின்னல் கீற்றொன்று பட்டாற் போன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை ஓருணர்வு உச்ச கதியில் ஊடுறுவியது, ஆடவனின் உடலினுள். தன் மனையாள் தன்னைக் காதலிக்கிறாள். அதை வெளிப்படையாக சொல்லியும் விட்டாள்.
அவளது கன்னங்களைத் தன் கரம் கொண்டு தாங்கியவனுக்கு என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. இதையல்லவா எதிர்பார்த்தான்? எனினும் இத்தனை அவசரமாக நிறைவேறும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“நிலா….!!” அவளைத் தவிப்போடு நோக்க, “ம்ம். நிலா தான். உங்க நிலா. இப்போ சந்தோஷமா?” இமையுயர்த்தி அவள் கேட்ட போது இறகின்றி வானில் பறந்தான்.
தலையை மேலும் கீழும் பலமாக ஆட்டி வைத்தான் ராகவ். என்னவென்று அறியாதவொரு தவிப்பு. அவளைப் பாராமல் ஏழு நாட்கள் இருந்தானே? அந்த இரவுகள் சாதாரணமாகவா இருந்தன?
காலை மாலையெல்லாம் மனதை கடிவாளமிட்டு வேலையில் கவனம் செலுத்தியவனுக்கு இரவு அறைக்கு வந்ததும் காட்டாற்று வெள்ளமாக அவளது நினைவுகள் ததும்பி விடும்.
நினைவலைகளை அடித்துச் சென்று, மகிழ்வைத் தகர்த்தெறிந்து ஏக்கத்தின் மடியில் அவனைச் சிரம் சாய வைக்கும். நிலா! நிலா! என்று புலம்பலுடன் பொழுதைக் கழிப்பான்.
அவள் வாசத்தை நெஞ்சம் தேடும். அவள் குரல் கேட்காது உள்ளம் வாடும். அவள் ஒருத்தியின் பேச்சையும் மூச்சையும் மாத்திரம் அவன் அணுவெல்லாம் நாடும்.
“உன்னை விட்டு வந்திருக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன் டி. என்னால சத்தியமா முடியல. உன்னைப் பார்க்கனும் நிலா. என் கூட சண்டை போடு. கோபத்தில் சிவக்குற உன் முகத்தைப் பார்க்கனும். பார்த்துட்டே இருக்கனும் கண்ணு மூடாம” அவளோடு மானசீகமாக உரையாடுவான் அவன்.
அவளோடு நெருங்கிப் பழகவில்லை. ஆயினும் அவளின்றி அவனால் இருந்திட முடியவில்லை. அவளது முகம் பார்த்தால் போதும், வாழ்நாள் முழுவதையும் மகிழ்வோடு கழித்திட என்றிருந்தது அவன் நிலை.
அவளைக் காணவல்லவா பத்து நாள் வேலையை ஏழு நாட்களுக்குள் முடித்துக் கொண்டு விரைவாக வந்தான்? ஆனால் அவன் வந்த பேருந்து விபத்துக்குள்ளாகியதில் சர்ப்ரைஸ் கொடுக்க வந்த எண்ணம் முற்றிலும் மரித்து விட்டது.
சிந்தனையின் பிடியில் சிக்கித் தவித்தவனை சுய நினைவுக்கு மீட்டு வந்தது, தேனுவின் அழைப்பு.
“ராகவ்”
அவ்வழைப்பு செவி தீண்டியது தான் தாமதம், அவளை இறுகி அணைத்துக் கொண்டான் ராகவ். இன்னும், இன்னும்.. இன்னுமின்னும் இறுக்கமாக, காற்றுக் கூட இடை புகாதளவு இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான் ஆடவன்.
🎶 ஓ… இடி இடித்தும் மழை
அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம் 🎶
🎶 ஓ… இன்றேனோ நம்
மூச்சும் மென் காற்றில்
இணைந்து விட்டோம் 🎶
அவளை விட்டு இனியொரு போதும் விலக முடியாது. உன்னை விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன் என்பதாக இருந்தது அவ்வணைப்பு. அவளுக்குள் அதே உணர்வு தான். அவ்வணைப்பில் விரும்பியே கட்டுண்டு போனாள் பாவை.
🎶 இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே 🎶
“ஐ லவ் யூ ராகவ்” ரகசியம் கொஞ்சும் குரலில் சொல்லியவளின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.
முத்தம்! முத்தம்! இடை விடாத முத்தத்தால் அவளைக் குளிப்பாட்டினான் கணவன்.
“இனி எப்போதும் நமக்குள்ள பிரிவு வேணாம் நிலா” என்றவனைப் பார்த்து தலையசைத்து, அவனது இதழில் தன்னிதழ் பதித்தாள் தேனு.
🎶 ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம் 🎶
அத்தனை ஏக்கங்களையும், இத்தனை நாள் பிரிவையும் அம்முத்தத்தால் தீர்த்துக் கொள்ளத் துவங்கினர் அத்துணைவர்கள்.
🎶 ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம் 🎶
திருமணமானது முதல் சீண்டிக் கொண்டவர்கள் இன்று காதல் எனும் உணர்வால் நீயா? நானா? எனும் கேள்வியைத் தவிர்த்து ‘நாம்’ என்ற பந்தத்தில் இனிதே இணைந்தனர்.
🎶 நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி 🎶
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
2024-11-22