அரண் 28
பிரிவால் துடித்த இருவரும் தங்களுக்குள் மலர்ந்த காதலை சிறிது சிறிதாக உணரத் தொடங்கினர். அது அவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது.
துருவனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. எந்நேரமும் அற்புதவள்ளியின் நினைவாகவே இருந்தது.
அதனால் அவன் மீது அவனுக்கு கோபம் வந்தது. வேலையில் மனதை ஒருநிலைப்படுத்தாமல் இருக்க 20 நாட்களில் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் தாமதமாகிக் கொண்டு போனது.
அத்துடன் அவன் இந்தியா திரும்பிச் செல்வதற்கும் தாமதமாக எரிச்சலுடன், கோபமும் பொங்கி வழிந்தது.
‘வீட்டுக்கு போனதும் இங்கிருந்து ஒரு நல்ல பரிசினை வாங்கிக்கொண்டு இன்ப அதிர்ச்சியுடன் எனது காதலை நான் கட்டாயம் அவளிடம் தெரிவிக்க வேண்டும்..’ என்று எண்ணியவன்,
தினமும்ப வள்ளிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி தொலைபேசி மூலம் அழைப்பான். எப்படியும் ஒரு நாளைக்கு இரண்டு முறைகளுக்கு மேற்பட்ட அழைப்புகள் மூலம் அவர்களது அன்பை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்திக் கொண்டனர்.
அவளோடு அருகில் இருந்து பேசுவதை விட தொலைவில் இருந்து அவளுக்காக அதிக நேரத்தை செலவிட்டான். இருவரும் பேசிப் பேசி சிறந்த நண்பர்களாக மாறினார். அதற்கும் மேலாக அவர்களுக்குள் சிறு பிணைப்பு தானாக துளிர் விட்டது.
ஆவுஸ்திரேலியா சென்ற ஒரு கிழமையிலேயே இருவருக்கும் ஒரு நாள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அழைப்பு எடுத்து பேசாவிட்டால் இருவருக்குமே அந்த நாள் வெறுமையான நாளாகவேத் தோன்றும்.
இப்படியே சென்று கொண்டிருக்க சில நாட்கள் அவன் தனது காண்ட்ராக்ட் சம்பந்தமான பிரச்சனையில் மூழ்கியவன், அங்கிருக்கும் மோஸ்ட் பாப்புலர் கம்பெனிகளுக்கு தனது பிரத்தியேகத் திட்டங்களை விளங்கப்படுத்த ஒரு வாரமாக அவன் மிகவும் வேலைபழுவுடன் காணப்பட்டதனால் ஒழுங்காக வள்ளியுடன் பேச முடியவில்லை.
உணவு உறக்கமின்றி அதற்காக மிகவும் கடினப்பட்டு அதற்கான ஒழுங்குகளை செய்து கொண்டிருந்தான்.
வள்ளி ஒரு நாளைக்கு 50 60 என அழைப்பினை எடுப்பாள் ஆனால் அனைத்தும் தவறவிட்ட அழைப்பாகவே மாறிவிடும். ஒரு கட்டத்துக்கு மேல் வள்ளியால் அங்கு இருக்க முடியவில்லை. அவளது நிலையைப் பார்த்த தனபாலுக்கும் வைதேகிக்கும் தனது மகனுக்கு மனதுக்குள் அர்ச்சனை செய்து கொண்டே இருந்தனர்.
ஒரு வாரமாக அவளுடன் பேச முடியவில்லை என்று தனது வேலைகளை முடித்து விட்டு தனது அறைக்குள் புகுந்தவன், அப்போதுதான் வேலை முடித்த திருப்தியில் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
கையில் தொலைபேசியை எடுத்து வைத்து அவளது புகைப்படத்தை அடுத்து பார்த்தவனது முகத்தில் அவன் அறியாமலேயே ஒரு அழகிய புன்னகை பூத்தது.
‘என்னோட அழகு ராட்சசி இப்போ தூங்கிருப்பாளே! சரி நாளைக்கு லீவு போட்டுட்டு அவள் கூடவே நாள் பூராகவும் பேசணும் என்ன ரொம்ப தேடி இருப்பாள் மிஸ் பண்ணி இருப்பாள்..’ என்று எண்ணிவிட்டு வெளியே இரவு உணவை உண்பதற்காக சென்றான்.
அருகில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றவன் தன்னை யாரோ பின் தொடர்ந்து கண்காணிப்பது போல உணர்ந்தான்.
திடீரென அருகில் இருந்த தூணின் பின் வளைவில் திரும்பியவன் அங்கு நிற்பவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
அப்படி அதிர்ச்சியடையும் வகையில் யாரைப் பார்த்தான். வேறு யாரும் இல்லை அது துருவனின் பழைய பாட்னர் அல்லிராணி ரேகா தான்.. இல்லை இல்லை அவள் அல்லிராணி இல்லை கல்லி ராணி…
“ஹாய் ரேகா வாட் எ சர்ப்ரைஸ் என்ன ஒளிஞ்சிருந்து நோட்டம் விடுற பார்த்தா வந்து நேரா பேச வேண்டியதுதானே தூணுக்கு பின்னுக்கு இருந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” என்று துருவன் கேட்க,
உடனே என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறிய ரேகா,
“நா…ன் நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம்னு நினைச்சேன்..” என்று வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அசடு வழிந்தாள்.
“நீ என்ன ரொம்ப நாளா என்ன ஃபாலோ பண்றியா..?” என்று அவனுள் முளைத்த சந்தேகத்தை நேரடியாகவே கேட்டுவிட்டான்.
ஆம் கடந்த ஏழு நாட்களாக துருவனை யாரோ கண்காணிப்பது போலவே உணர்ந்தவன் இந்த வேலை பிரச்சனையில் அதனை ஒத்தி வைத்துவிட்டு தனது வேலையில் மும்முறமாக இருந்தவனுக்கு இன்று ரேகாவை பார்த்ததும் ஒருவேளை இவள் தான் பின் தொடர்ந்து வந்திருப்பாளோ என்று நினைத்தவன் அதனை நேரடியாக கேட்டே விட்டான்.
“இல்லையே ஏன் அப்படி கேக்குறீங்க துருவன்? எனக்கு உங்கள ஃபாலோ பண்றது தான் வேலையா..?” என்று அவள் வார்த்தைகளை மென்று முழுங்க,
“இல்ல யாரோ என்ன கண்காணிக்கிற மாதிரியே எனக்கு ஒரு வாரமா தோனிச்சு இப்பவும் அதே பீலிங்ஸ் அதுதான் வந்து தூணுக்கு பின்னுக்கு பார்த்தேன் ஆனா அது நீ என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல..”
“அப்போ யாரா இருக்கும்னு நினைச்சீங்க..”
“ஒரு சூப்பர் பிகரா இருக்கும்ன்னு நினைச்சேன்..” என்று துருவன் கூறிச் சிரிக்க,
“துருவன்..” என்று கூறிவிட்டு முறைத்தாள்.
“ஜஸ்ட் எ ஜோக் ஓகே விடு நீ எப்படி இங்கே..?”
“என்னோட க்ளோஸ் பிரண்டு இங்கதான் இருக்கா அவளுக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ் அதுதான் வந்தேன் வன் வீக் முன்னமே வந்து கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு அப்படியே சுத்தி பார்த்துட்டு மேரேஜ் முடிஞ்ச கையோட கிளம்பலாமுன்னு இருக்கேன்..”
“ஓகே ஓகே எப்போ மேரேஜ்..?”
“ஜூலை ஃபர்ஸ்ட்..”
“ஜூலை வேஸ்ட் நாளன்னைக்கு தான் வருது..”
‘அச்சச்சோ எப்படி பொய் சொல்லி சமாளிக்கிறது என்று தெரியாம மாட்டிகிட்டியே..” என்று மனதுக்குள் எண்ணி பதறியவள், தனது தடுமாற்றத்தையும், பதட்டத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் முன் சிரித்து சமாளித்துவிட்டு,
“அப்படியா இப்போதான் ஆவுஸ்திரேலியாவுக்கு வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள வன் வீக் ஆயிடுச்சு நாளைன்னைக்குத் தான் அவளுக்கு மேரேஜ் நீங்களும் வாரிங்களா..?”
“இல்லறம் எனக்கு முக்கியமான பிசினஸ் மீட்டிங் ஒன்று இருக்கு..”
“ஓகே இது ஒருவன் சாப்பிடவா வந்தீங்க..?”
“இல்ல சும்மா ஹோட்டல்ல சுத்தி பார்த்துட்டு போவோம் என்று வந்தேன்..”
“என்ன துருவன்..?”
“சரி வா இன்னைக்கு உன் கூட தான் சாப்பிடணும் என்று தலையில எழுதி வச்சிருக்கு..” என்று கூற,
“இல்லை துருவன் எனக்கு ரொம்ப லேட் ஆயிட்டு நாம நாளைக்கு இதே ஹோட்டலில் 8:30க்கு சந்திப்போம் என்னோட ட்ரீட் ஓகேயா நான் இப்ப அவசரமா கிளம்பனும் பாய்..” என்று கூறிவிட்டு சிட்டாக பறந்து ஒரு கருப்பு நிற காரில் ஏறிச் சென்று விட்டாள்.
அந்தக் கார் ஹோட்டலை மீண்டும் மீண்டும் வலம் வந்தது.
அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையிலா துருவன் இருந்தான் அவனுக்கு நீண்ட நாட்கள் வேலை வேலை என்று ஒழுங்காக வயிற்றினை கவனிக்காமல் விட அவனுக்கு வயிற்று வலியே வந்து விட்டது.
இன்று ஆறுதலாக அளவாக விரும்பிய உணவை உண்ண வேண்டும் என்று அருகில் இருந்த ஹோட்டலுக்கு வந்து தான ரேகாவை பார்த்தான்.
ஏனோ அவனுக்கு உணவு வாயில் இருந்து உள் இறங்கவே இல்லை. அன்னை தரும் ருசியான உணவை எண்ணி அம்மா உங்க சாப்பாட நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று மனதளவில் வாடினான்.
உண்டு முடித்துவிட்டு தனது அறைக்குள் செல்ல அவன் செல்லும் வழியில் அவனை பின்தொடர்ந்து அவனது விடுதிக்கு முன் அந்தக் கார் நின்றது.
அப்படியே அறைக்கு வந்து உறங்கிப் போனவன் தன்னை மறந்து பாதி வேலை முடிந்த சந்தோஷத்திலும், நிம்மதியிலும் நாளை நடைபெற இருந்த அனைத்து மீட்டிங்க்களையும் கேன்சல் செய்துவிட்டு, நாளை முழுவதும் அற்புதவள்ளியுடன் பேசி பின்பு வெளியில் சென்று அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வர வேண்டும் என்று திட்டமிட்டவன் தனது காதல் மனைவியை எண்ணியபடி அப்படியே உறங்கி விட்டான்.
அதிகாலை 4 மணி அளவில் யாரோ கதவைத் தட்ட கனவில் தான் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது என்று புரண்டு படுத்தான்.
மீண்டும் அதே சத்தம். கதவு தட்டும் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலிக்க நித்திரை கலைந்து யார் என்று பார்ப்பதற்காக இரு கண்களை கசக்கி கொண்டு எழுந்து கதவைத் திறந்தான்.