அரண் 36
வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான்.
வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது.
அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள்,
“இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் அருகில் இருந்த ஒரு பொருளை எடுத்து அவனுக்கு நெஞ்சில் குத்தினாள்.
அது குத்தியதும் அவன் உயரமான சிகரம் சரிந்து விழுவது போல சரிந்து கீழே விழுந்தான்.
இதனை கண்கள் விரித்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தரா கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்தேற,
“என்னவல்லி பண்ணின..?”
“என்னன்னு தெரியல அத்தை அவனைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பயம் வந்துச்சு அவன் திடீரென்று என்னை தாக்குவான்னு நான் எதிர்பார்க்கல என்னோட முடியைப் பிடிச்சு இழுத்ததும் எனக்கு சரியா வலிக்க தொடங்கிச்சு இவன் கிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சிரணும்னு பக்கத்துல ஏதாவது கிடைக்குமான்னு கையால தேடினேன் ஏதோ கையில் தட்டுப்பட கிடைத்ததை எடுத்து அதனால அவனை குத்தினேன். அவன் வலியில கைய விட்டுவிடுவான்னு தான் எதிர்பார்த்தேன் ஆனா இப்படி சரிந்து விழுவான் என்று நான் நினைக்கவே இல்லை…” என்று பரபரப்பில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறி முடித்தாள்.
வசுந்தரா அவளது செய்கை எண்ணி மனதிற்குள் மெச்சிய படி,
“அப்படி என்னவா இருக்கும்..” என்று அவன் மீண்டும் எழுப்பி விடுவானோ என்ற பயத்தில் அவன் அருகே போய் பார்த்தால் அது ஒரு தடுப்பூசி மாதிரித் தெரிந்தது.
‘இந்த கெமிக்கல் ஃபேக்டரில ஏதாவது தடைபட்ட விஷயங்கள செய்து இருப்பாங்க அதனால இப்படியான மருந்துகளை பயன்படுத்தும் போது அது சிலது விஷமாகவும் இருக்கலாம் அப்படி விஷம் கலந்த ஊசியதான் வள்ளி செலுத்தினாலோ..’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட வசுந்தரா,
“ஏதாவது மயக்க ஊசியா இருக்கும் நல்ல வேலை நீ நிலைமையை புரிஞ்சுகிட்டு நடந்துகிட்ட இல்லன்னா இவன்கிட்ட நாம மாட்டி இருந்தோம்னா இந்நேரம் எங்களை கைலாசம் அனுப்பி இருப்பான் பாரு பார்க்கவே எரும மாடு மாதிரி இருக்கான்…”
“ஆமாங்க அத்தை இவனோட உருவத்தைப் பார்த்து நான் மிரண்டு போயிட்டேன் இப்படியும் சில மனிதர்கள் இருக்காங்களா என்னால நம்பவே முடியல..”
“இவன பார்த்தா மனுஷ ஜென்மம் மாதிரியா தெரியுது..”
“எனக்கு ஒரு சந்தேகம் இவன் ஊசியால குத்தினதும் மயங்கிட்டானா இல்ல நான் இறந்துட்டானா..?”
“இவன் உயிரோட இருந்து என்னத்த தான் கிழிக்கப் போறான் இப்படி நாலு பேர கடத்தி அவங்கள துன்புறுத்தி அதுல காசு சம்பாதிச்சு உயிர் வாழ்வதற்கு செத்தே போகலாம்..”
வசுந்தராவின் பேச்சைக் கேட்டு பயத்தில் வார்த்தைகள் வெளிவராமல் மெல்லிய குரலில்,
“ஆனா போலீஸ்க்கேஸ்..” என்று வள்ளி கூறியதும் மிரண்டு போன வசுந்தரா,
உண்மையிலேயே இந்தியா போலீஸ் போல அங்கு போலீஸ் தீர விசாரித்த பின்பு தண்டனை கொடுப்பதில்லை கொலை செய்தவர் இவர் தான் என்று தடயங்கள் மூலம் முடிவாகிவிட்டால் உடனே தண்டனை தான் அதுவும் அங்கு பயங்கரமான தண்டனையாக தான் இருக்கும் ஆவுஸ்திரேலியா அரசாங்கம் சட்ட திட்டங்களிலும் தண்டனை கொடுப்பதிலும் மிகவும் கண்டிப்புடன் செயல்படும் என்பது அங்கு வாழும் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே!
அதனால் வசுந்தரா அந்த அடியாளை பார்த்தபடி,
“கொஞ்சம் இரு உயிர் இருக்கான்னு கிட்டப் போய் ஒருக்கா செக் பண்ணி பார்ப்போம்..” என்று வள்ளியை அருகில் நிற்க வைத்து விட்டு வசுந்தரா மெதுவாக போய் அவனது இதயத் துடிப்பை சோதிக்க தொட்டுப் பார்க்க தனது கரத்தினை நீட்டினார்.
அவன் அசைவது போல வசந்தராவிற்கு பயத்தில் தோன்றியது அதனால் நீட்டிய கரத்தினை மீண்டும் எடுத்துக் கொண்டார்.
“என்னங்க அத்தை உசுரு இருக்கா..?”
“உசுரு இருக்கா இல்லையான்னு தெரியல ஆனா எனக்கு பயமா இருக்கு..” என்று கைகள் உதற வசுந்தரா கூறுவதைப் பார்த்து சிரித்த வள்ளி,
“இருங்க நான் பார்க்கிறேன்..” என்று கூறிவிட்டு தைரியமாக வள்ளி அருகில் போயிருந்து அவனது நெஞ்சை தொட இதயத்துடிப்பை நன்றாக உணர்ந்தாள்.
“அப்பாடா..” என்று நெஞ்சில் கைவைத்தபடி,
“இவனுக்கு உயிர் இருக்கு..” என்று புன்னகை பூத்தபடி மகிழ்ந்தாள் வள்ளி.
“ஏன் நீ இப்படி சந்தோசப்படுற வள்ளி..?”
“இல்லைங்க அத்தை இதுவரைக்கும் நான் ஒரு உயிருக்கு கூட கெட்டது செய்ததில்லை கெட்டதை நினைச்சதும் இல்லை ஆனால் ஒரு உயிரை கொன்னுட்டோமேன்னு சொல்லி என் மனசுக்குள்ள ஒருவகையான கவலை வந்துடுச்சு என்னதான் கெட்டவனா இருந்தாலும் அவனும் ஒரு உயிர் தானே கடவுளால படைக்கப்பட்ட எந்த உயிரையும் நாங்க துன்புறுத்தவோ கொள்ளவோ கூடாதுன்னு எங்க அப்பா சின்ன வயசுல எனக்கு சொல்லித் தந்திருக்கிறார்
அப்படித்தான் நான் இதுவரைக்கும் நடந்திருக்கேன் ஒருவேளை இவன் இறந்திருந்தா எனக்கு வாழ்க்கை ஃபுல்லா ஒரு உயிரை கொன்னுட்டோமே என்று சொல்லி மனசு உறுத்திக்கிட்டே இருந்திருக்கும் அதுதான் நான் சந்தோஷப்பட்டேன்..” என்று வள்ளி கூற,
“ரொம்ப நல்ல பொண்ணு இதெல்லாம் நல்லா பேசுற ஆனா சில விஷயங்கள்ல நீ ரொம்ப வீக்கா இருக்கியே..! ஓகே ஓகே நல்ல புள்ள நல்ல வேலை செஞ்ச குட் கேர்ள்..” என்று வசுந்தரா பாராட்ட,
ஏக்கத்துடன் வள்ளி, “சரிங்க அத்தை அவர பாத்துட்டீங்களா..?”
“அதோ பார்..” என்று துருவனை ஜன்னல் வழியாக காட்டினாள் வசுந்தரா.
துருவனை ஜன்னல் வழியாக பார்த்ததும் வள்ளிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது கண்களில் இருந்து நீர் பெருக “என்னங்க..” என்று அழத் தொடங்கினாள்.
அவளது அழுகையைப் பார்த்ததும் வசுந்தரா,
“வள்ளி கவலைப்படாத எப்படியும் துருவனை காப்பாற்றிடலாம் வைதேகிக்கு மகன்னா துருவன் எனக்கும் மகன்தான் அதுதான் நான் என்னோட உயிரையும் பெருசா நினைக்காம அவனுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்தேன்.
இங்க வந்தா எப்படியும் ஆபத்து அதுவும் உயிர் ஆபத்து ஏற்படும் என்று எனக்கு தெரியும் இருந்தும் துருவனுக்காகவும் என்னோட பிரண்டு வைதேகிக்காவும் தான் நான் இவ்வளவும் செய்கிறேன்..”
“ரொம்ப நன்றிங்க அத்தை..”
“அதோட என்னோட செல்ல மருமகளுக்காகவும் அத்தை அத்தைன்னு எப்பவும் பூனை குட்டி போல ரெண்டு நாளா என் பின்னுக்கு திரிஞ்சல்ல அதுக்காகத்தான்..” என்று அவளை கட்டியணைக்க இருவரும் தங்களுக்குள் பாசமலையை பொழிந்து கொண்டனர்.
“சரி சரி வள்ளி விடு முதல் எப்படி துருவன இங்க இருந்து வெளியே கொண்டு போறதுன்னு யோசிப்போம்..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே
துருவன் மயக்கத்தில் இருந்து எழுவது போல அவனது தூங்கிக் கொண்டிருக்கும் தலை அங்கும் இங்கும் அசைந்தது.
அதனைப் பார்த்ததும் அங்கிருந்த அடியாட்களுள் ஒருவன் அவன் அருகில் வந்து குனிந்து அவனை அவதானித்து யாருக்கோ தொலைபேசி மூலம் அழைப்பெடுத்தான்.
உடனே வள்ளி வசுந்தராவிடம்,
“மெயின் கடத்தல் காரன் இன்னும் ஆங்கே வரவில்லை போல அவனுக்கு தான் கால் பண்றாங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது
துருவன் முற்று முழுதாக மயக்கத்தில் இருந்து தெளிந்து தனது தலையை நிமிர்த்தி அங்குள்ளவர்களை தனது விழிகளை சுழற்றி சுழற்றிப் பார்த்தான்.
அதனைப் பார்த்ததும் அருகில் அந்த அடியாட்களில் ஒருவன் வந்து எதையோ கேட்டு மிரட்டினான்.
“அத்தை ஏதோ அவரோட பேசுறாங்க நாம கொஞ்சம் கிட்ட போய் என்ன பேசுறாங்கன்னு கேட்போமா..?”
“இரு வள்ளி வந்ததிலிருந்து நான் போலீசுக்கு இன்ஃபோர்ம் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ஆனா இங்க டவர் கிடைக்குதில்ல என்ன செய்றன்னு தெரியாம நானே யோசித்துக்கொண்டு இருக்கிறேன் இந்த நேரம் பார்த்து அவர்களுக்கு பக்கத்துல போய் நாம மறைந்திருக்கிறது அவங்களுக்கு தெரிஞ்சிருச்சுனா அதுவே பெரிய பிரச்சினையா போயிடும் கொஞ்சம் பொறுமையா இரு.
நாம ஒரு முட்டாள்தனமான வேலையை செய்து விட்டோம் ஹோட்டலில் இருந்து புறப்படும் போதே நாம போலீசுக்கு அறிவித்துவிட்டு புறப்பட்டு இருக்க வேண்டும் ஆனா நான் அப்படி யோசித்தேன் தான் அப்புறம் இங்க வந்ததும் துருவன் இல்லைன்னா போலீசுக்கு பொய்யான தகவல கொடுத்ததா போயிடும் பிறகு அவங்க எங்களுக்கு பனிஷ்மென்ட் தந்துருவாங்க அவன் இங்கு இருக்கானான்னு பார்த்ததும் தான் அவங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று பொறுமையாக இருந்தேன்
ஆனால் இங்க வந்ததும் டவர் கிடைக்காம போயிடுச்சே நம்மளுக்கு எல்லாமே பிரச்சனையா தான் இருக்கு..”
வசுந்தராவின் பேச்சைக் கேட்டு அற்புதவள்ளி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க,
வசுந்தரா ஒரு முடிவு எடுத்தபடி,
“வள்ளி நான் சொல்றத கவனமா கேளு இங்க இதே இடத்துல இந்த கதவுக்கு பின்னால மறைந்திரு நான் கொஞ்ச தூரம் நடந்து போய் டவர் கிடைக்குதான்னு பார்த்துட்டு போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு இப்போ வந்துடறேன் எங்கேயும் போயிராத இங்கேயே இரு கவனம்…” என்று வசுந்தரா கூறிவிட்டு வள்ளியை திரும்பி திரும்பி பார்த்தபடி மரங்களுக்குள் சென்று மறைந்தார்.
வள்ளி வசுந்தரா சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு ஜன்னலோரம் துருவனையும் பார்த்தபடி இருக்க, இருவர் பேசி சிரித்தபடி அங்கு சிறுநீர் கழிக்க வந்தனர்.
அந்த இருவரையும் பார்த்து மிரண்டு போன வள்ளி இரண்டு அடிகள் பின்னோக்கி இருளில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
மறைந்திருந்தவள் சில நிமிடங்களுக்கு பின்பு அவர்கள் சென்றுவிட்டனரா என்று எட்டிப் பார்க்க, முன்னிருந்த உடைந்த கதிரை வள்ளியின் கை பட்டு சரிந்து விழுந்துவிட்டது.
அங்கு சிறுநீர் கழித்து விட்டு புகை பிடித்துக் கொண்டு நின்ற இருவரும் அந்தச் சத்தம் கேட்டு “யாரது..” என்று பயங்கரமான குரலில் சத்தமிட்டபடி கதிரை விழுந்த இடத்திற்கு வந்து பார்த்தனர்.