முகில் 1
பனிச்சாரலுடன் காற்றும் சேர்ந்து தன் துணை தேடி உலாவி வரும் அவ்வேளையில் பூக்களின் வாசமும் தென்றலோடு தூது வந்து அதன் துணையை தேட இன்னிசையாய் இசை மீட்டியபடி வயல் வெளிகளில் மணி மணியாக அசைந்தாடும் நெற்கதிர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி நடனமாட இவை அனைத்தையும் பார்த்து இயற்கை அன்னை தன் குழந்தைகளின் விளையாட்டுகளை கண்டு பெருமிதம் கொண்டு அகம் மகிழ வானமும் மத்தளமிட்டு மலைச்சாரலை பொழியத் தொடங்கியது.
அந்த இயற்கையின் சந்தோஷத்தில் பங்கு கொள்பவளோ இன்று அதனை தொலைத்தவளாக தனது தாவணியைத் தூக்கி தலையில் போட்டபடி வேகமாக ஓடி வந்து மரத்தின் கீழே நின்றாள் நம் செந்தாழினி.
அவள் தான் நம் கதையின் நாயகி செந்தாழினி. பெயரைப் போல அவளுக்கும் அழகில் எந்த குறையும் இல்லை. வாகாக மெல்லியே கொடி போன்ற உடலும், நீண்ட அழகான முடியும், தொட்டால் சிவந்து விடும் வெண்ணிற மேனியும் கண்களோ கயல் மீனை கொள்ளும் அளவு வசீகரமும், இதழ்களோ ரோஜா இதழின் மென்மையும் நிறமும் பொருந்தி நிற்க, கண்களின் இமைகளோ பிறை நிலவினை தோற்கடித்து விடும் அளவிற்கு வதனத்தை மெருகூட்ட முற்றும் முழுதாக மழையில் நனைந்து வரும் தங்கத்தேராகவே செந்தாழினி கண்களுக்கு விருந்தளித்தாள்.
நமது நாயகி அப்படி இந்த மழையிலும் இங்கும் அங்கும் ஓடி ஓடி யாரைத் தேடிக் கொண்டிருக்கின்றார்.
வேறு யாரும் இல்லை அவளது தந்தை சரவணமுத்துவைத்தான் அவளுக்கென்று வேறு யார் தான் இருக்கிறார்கள்.
அவளுக்கு 15 வயது இருக்கும் போதே அவளது தாய் இறந்து விட்டார். கடந்த ஏழு வருடங்களாக தனது தந்தை அரவணைப்பில்தான் அவள் வாழ்ந்து வருகிறார்.
தந்தையின் அரவணைப்பில் தான் இவள் வளர்ந்தால் என்று சொல்ல முடியாது எப்பொழுது தனது தாய் புஸ்பமலர் இருந்தாரோ அன்றிலிருந்து தனது தந்தை செந்தாழினிக்கு மகனாக மாறிவிட்டார்.
புஷ்பமலர் அவரை விட்டுப் பிரிந்ததிலிருந்து அவருக்கு உறவாக குடிப்பழக்கம் வந்து சேர்ந்தது.
தாயின் பிரிவைத் தாங்க முடியாத தந்தை மது என்றால் என்ன என்றே தெரியாதவர் தனது காதல் மாது சென்ற பிறகு மதுவை நாடினார்.
முதல் அன்னை ஞாபகம் தோன்றும் போதெல்லாம் வாரத்திற்கு ஒரு தடவை இரண்டு தடவை எனக் குடித்தவர் பின்பு அதுவே பழக்கமாகி குடிக்கு அடிமையாகி விட்டார்.
எத்தனை தடவை செந்தாழினி கூறியும் அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.
வளமையாக எவ்வளவு குடித்தாலும் இரவு வீட்டுக்கு சரியாக எட்டு மணிக்கு முதலில் வந்து விடுபவர் ஆனால் நேற்று நல்லிரவு கடந்தும் சரவண முத்து வரவே இல்லை.
இறுதியாக உறக்கமே இன்றி வெளியே எழுந்து வரவும் பயந்து கொண்டு வீட்டிற்குள்ளேயே கதவை பூட்டிவிட்டு தந்தைக்காக காத்திருந்தாள்.
என்ன பயன் மதுவின் பிடியில் அகப்பட்ட சரவணமுத்து விடிய விடிய காத்திருந்தும் செந்தாழினிக்கு தரிசனம் அளிக்கவில்லை. கிழக்ககில் வெளிச்சம் தெரிந்தவுடன் அதிகாலையில் தந்தையை தேடி மனதில் பயத்தை மட்டும் சுமந்து கொண்டு புறப்பட்டாள்.
அவர் வராமல் போக மனதில் சிறு படபடப்பும் தொற்றிக் கொண்டது. தந்தையைத் தவிர அவளுக்கு வேறு கதி ஏது..?
செந்தாழினி இருப்பது ஒரு குக்கிராமம் ஆகும். அங்கு வயல்வெளிகள், மூன்று பெரும் மலைகள், ஆறு, நீர்வீழ்ச்சி என்று இயற்க்கை அன்னையின் கொடைகள் நிறைந்து செழித்து விளங்கும் ஒரு அழகிய நந்தவனம் என்றே கூறலாம்.
அதனால் என்னவோ அங்கிருக்கும் மக்கள் எந்த விதத்திலும் குறை இல்லாமல் செழிப்புடன் வாழ்கின்றனர்.
அந்த கிராமத்தின் மூன்று புறமும் மலைகள் சூழ்ந்து பெரும் அரணாகக் காணப்படுகின்றது.
அந்த உயர்ந்து பரந்த மலைகள் தான் அந்த கிராமத்துக்கு பெரும் பாதுகாப்பு என்றே கூறலாம்.
காலையிலேயே மழை தூரலாக அவள் மீது படிய அந்நேரத்தில் அதனை இரசிக்க முடியாத வேதனையில் தவித்துக் கொண்டு தந்தை வளமையாக நிற்கும் இடங்களை எல்லாம் மனம் அலை பாயத் தேடிக் கொண்டிருந்தாள்.
அங்கு வயல் புறத்தில் வரம்பு வெட்டிக் கொண்டிருக்கும் தனது தந்தையின் நண்பனான சிவராசாவை பார்த்ததும் மனதில் சிறு உற்சாகத்துடன்,
“சிவா அப்பா.. சிவா அப்பா..” என்று கூக்குரல் இட்டாள் செந்தாழினி.
“யாரு காலங்காத்தால..” என்று நெற்றியில் கையை வைத்து அந்த காரிருளில் கண்கள் சிமிட்டி பார்த்தார் அந்தப் பெரியவர்.
“நான் தான்பா செந்தாழினி எங்க அப்பாவ எங்கயாவது பார்த்தீங்களா..?”
“என்ன புள்ள பொழுது விடியிறதுக்கு முன்னுக்கு இப்படி குளிர்ல மழையின் பெய்து கிட்டு இருக்கு இந்நேரம் வெளியே சுத்தி திரிகிறாயே உடம்புக்கு ஏதும் ஆகப்போகுது..”
“அதெல்லாம் இருக்கட்டும் சிவா அப்பா எங்க அப்பாவை பார்த்தீங்களா..?” என்று அவரது அக்கறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு தனது காரியத்திலேயே குறியாக இருந்தாள்.
“இல்லம்மா நேத்து பொழுது சாய தென்னந்தோப்பு வழியா வந்தத பார்த்தேன் அதுக்கப்புறம் அவன காணலையே ஏமா இரவுக்கு வீட்டை வரலையா..?”
“இல்ல சிவா அப்பா மனுசன் எங்க போய் தொலைஞ்சதோ தெரியல இரவெல்லாம் எனக்கு நிம்மதியே இல்லை வளமையாக குடிச்சா வீட்டை வந்துருவாரு அதுதான் கொஞ்சம் மனசுக்கு பயமா இருக்கு..”
“அதெல்லாம் அவனுக்கு ஒன்னும் ஆகி இருக்காது எங்கேயாவது போதையில விழுந்து கிடப்பான் பாரு நானும் இங்கிட்டு தேடுறன்..”
“இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்ல எப்ப பாத்தாலும் குடிச்சி என்னோட உயிர வாங்குறது தான் வேலை வரட்டும் இன்னைக்கு..” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு தென்னந்தோப்பு பக்கம் புறப்பட்டாள் செந்தாழினி.
தென்னந்தோப்பிற்கு அருகில் வரும் பொழுது ஓரளவு நன்றாக விடிந்து விட்டது. அதனால் சற்று வெளிச்சம் கூடுதலாக தெரிய மனதில் தைரியம் வரப்பெற்றவள் “அப்பா… அப்பா..” என்று கூவிக்கொண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் தந்தையை தேடினாள்.
அவளது மனதில் ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறி தோன்றி பாடாய்ப்படுத்த இன்னும் தந்தை கிடைக்காமல் போக அவளது நெஞ்சம் வாடி கண்களில் கண்ணீரும் இதோ வெளியே வருகிறேன் என்று துடிக்கத் தொடங்கியது.
சந்தேகத்துடன் மோட்டர் இருக்கும் அறையை எட்டிப் பார்க்க கும்பகர்ணனை விட மோசமாக சரவண முத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு ஒன்றை விட்டபடி உடனே உள்ளே சென்று தந்தையை குனிந்து தட்டி எழுப்ப கரத்தை நீட்ட வலிய கரம் ஒன்று அவளது கரத்தை இரும்புப் பிடியாகப் பிடித்தது.
யார் என்று திரும்பிப் பார்த்ததும் செந்தாழினி ‘இவனா..?’ என்று சற்று அதிர்ந்துதான் போனாள்.
அது வேறு யாரும் இல்லை அவளது முறை மாமன் என்று ஊருக்கு பொய் கூறிக்கொண்டு தெரியும் அந்த ஊரின் பண்ணையார் மகன் செந்தூரன்.
“என்ன புள்ள இந்தப் பக்கம் மாமனை தேடி வந்தியா..?” என்று செந்தாழியின் நீரினால் நனைந்து உடலோடு ஒட்டி இருந்த தாவணி உடலில் உள்ள அங்க வளைவுகளை அப்பட்டமாகக் காட்ட அவனது மோகம் தோய்ந்த விழிகள் பார்வையை அதில் வீழ்த்தியபடி பேசினான்.
அவனது குரல் கேட்டதும் கோபம் மேலிட திரும்பிப் பார்த்தவள்,
“கைய விடுடா..’ என்று சினத்துடன் சீறினாள்.
அதனை கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாமல்,
“என்ன புள்ள மாமாவ பாத்து இப்படி மரியாதை இல்லாம பேசுற..” என்று செந்தூரன் அவளை கிறக்கத்துடன் பார்க்க,
“யாருக்கு யாரு மாமா டா அதெல்லாம் ஏழு வருஷத்துக்கு முன்னமே முடிஞ்சுது இப்போ கையை விடுறியா இல்லையா..?”
“விடமாட்டேன் என்ன பண்ணுவ..?”
“கத்தி ஊரக் கூட்டிடுவன் உன்னோட மானம் மரியாதை காத்துல பறந்து போயிடும் பரவாயில்லையா..?”
“அச்சச்சோ பயந்துட்டேன் என்ன பூச்சாண்டி காட்டுறியா இதுக்கெல்லாம் நான் பயப்படற ஆளு இல்ல நீ வேணும்னா கத்து யாரு வந்து என்னை எதிர்த்து கேள்வி கேட்கிறா என்று பார்ப்போம்
என்னால மரியாதை போன சிரிக்கிகதான் இந்த ஊர்ல விளைஞ்சு கிடக்கிறாளுக உனக்கு தெரியாதது ஒன்றுமில்லை..” என்று அவன் பெண்கள் மீது எல்லை மீறி நடப்பதை பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதே சரவணமுத்து கண்களை துடைத்துக் கொண்டு,
“என்ன புள்ள அதுக்குள்ள விடிஞ்சிருச்சா..” என்று எழுந்து நின்றார்.
சரவணமுத்து எழுந்ததும் அவ்வளவு நேரமும் செந்தாழினி கத்திக் கூப்பாடு போட்டும் கைகளை விடாமல் இருந்தவன் கைகளில் மின்சாரம் பாய்ந்தது போல உடனே செந்தாழினியை பிடித்திருந்த கரத்தினை விட்டான்.
இருவரும் ஒன்றாக செந்தூரனை முறைத்துப் பார்த்தனர். உடனே அவ்விடத்தை விட்டு ஒரு கொரூர பார்வையுடன் நகர்ந்து சென்றான்.
அவன் சென்றதும் செந்தாழினி தனது தந்தையை பார்த்து,
“என்னப்பா இது வழக்கமா நீங்க இப்படி எல்லாம் செய்ய மாட்டீங்களே என்ன இது புதுசா வீட்ட ஒரு மகள் இருக்கான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா உங்களுக்காக நான் எவ்ளோ நேரம் காத்துட்டு இருக்கிறது இந்த பாழா போனக் குடிய நீங்க எப்போதான் விடப் போறீங்களோ..!” என்று கண்களில் நீர்க் கசியக் கூற,
முகத்தில் எந்த உணர்ச்சியை காட்டிக் கொள்ளாமல்,
“முதல் வா வீட்ட போகலாம்..” என்று சுற்றம் அறிந்து ஒரு தந்தையாக அந்த இடத்தில் செயல்படத் தொடங்கினார் சரவணமுத்து.
நடப்பவை அனைத்தும் மனதில் எதனையோ நினைவூட்ட தந்தையின் பின் சிறு பிள்ளையாக அவரது கை பிடித்து சென்றாள் செந்தாழினி.
********************””””
நேரத்தை விட மிக வேகமாக பயணிக்கும் வாகன நெரிசல்களுக்குள் சிக்குண்டவனாக தவித்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.
நமது நாயகன் இன்று முக்கிய மீட்டிங்குக்காக அவசர அவசரமாக வேலைக்கு புறப்பட்டவனோ ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டான்.
வேறு வழி இல்லாமல் தொலைபேசிகளில் அழைப்பு வந்து தொல்லை செய்ய இறங்கி ரோட்டில் பாய்ந்து வாகன நெரிசல்களுக்குள் புகுந்து 15 நிமிடங்களில் கம்பெனியை அடைந்தான்.
உள்ளே சென்றதும் அலுவலகமே வெறிச்சோடி போய் இருந்தது. ஒருவரின் நடமாட்டத்தையும் காணவில்லை.
என்ன என்று திகைத்தபடி மெதுவாக நடந்து செல்ல அவனது ஷூத் தடங்கள் மிகவும் அழுத்தமாக அந்த அமைதியான அலுவலகத்தில் தனது ஓசையை நிரப்பியது.
நேராக தனது சிஇஓ வின் அறையினை திறக்க முற்பட அவ்வறைக்குள் உள்ளிருந்து அலுவலகத்தின் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றாக சப்ரைஸ் என்று கூச்சலிட்டுக் கத்தினர்.
அனைவரிடமும் ஆரவாரமான குரலை திடீரென கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த ஆதிரன் சிறிதாக புன்னகையை சிந்தி விட்டு கைகட்டி நின்று அனைவரையும் பார்த்து,
“இதுதானா அவசர மீட்டிங்..” என்று கேட்டபடி முறைத்தான். அந்தக் கூட்டத்திற்குள் இருந்து வெளிவந்த சிஇஓ விக்னேஷ்,
“ஹாய் ஆதிரன் கங்கிராஜுலேசன் உங்கட ப்ரொஜெக்ட் யூகேல பெஸ்ட்டா செலக்ட் ஆயிருக்கு இதனால எங்களுக்கு இரண்டு மில்லியன் கேஸ் கிப்ட்டா கிடைச்சிருக்கு அதோட வேர்ல்டிலேயே எங்கட கம்பெனி மூணாவது இடத்தை பிடிச்சிருக்கு இதெல்லாம் உங்களோட ஹார்ட் வொர்க் அதோட உங்க ஐடியாவும் நீங்க செய்து தந்த புரஜெக்ட்டாலையும் தான் இது சாத்தியமாச்சு.
நீங்க மூன்று மாதமா கண் விழித்து செய்த அந்த அயராத உழைப்பு தான் இந்த கம்பெனியோட பெயர் இந்த உலகத்துக்கே தெரிய காரணம்..” என்று கூறி தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
ஆதிரன் சிறு புன்னகையுடன்,
“அப்படியெல்லாம் இல்ல சார் நான் மட்டும் இதுக்காக முயற்சி செய்யலை என்னோட ஐடியாவாக இருந்தாலும் எல்லோரோட உழைப்பும் இதுல நிறைஞ்சு கிடக்கு அதனால எல்லாருக்கும் என்னோட பெஸ்ட் விஷஸ் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் இது என்னோட வெற்றி இல்ல நம்மளோட வெற்றி..” என்று தற்பெருமை இன்றி அனைவரையும் மனதார பாராட்டினான்.
அவனது தன்னாலமற்ற பேச்சை கண்டு அவனுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விக்னேஷ்,
“உனக்கு என்ன வேணும் ஆதிரன் சொல்லு நான் இப்ப இருக்குற சந்தோஷத்துல உனக்கு எது வேணாலும் கேட்டால் தருவேன் என்ன வேணும் கேளு..?” என்று கூற,
அனைவரும் ஆடி கார், கோல்ட் வாட்ச், ஃபாரின் ட்ரிப் என்று இப்படி தங்களுக்குப் பிடித்த பரிசுகளைக் கூற,
அவனும் தயங்கி நிற்க, அவனைப் பார்த்து விக்னேஷ்,
“தயங்காம கேளு உனக்கு என்ன வேணும்னாலும் செய்வேன் எனக்கு அவ்வளவு சந்தோஷம்…”
“ஒன் மந்த் லீவு வேணும் சார்..” என்று கூற,
விக்னேஷ் உட்பட அனைவரும் “வாட்..? என்ன..?” என்று ஆதிரனின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கினர்.
என் காதில் ஏதும் தவறாக விழுந்து விட்டதோ என்று விக்னேஷ் ஆதிரனைப் பார்த்து “வாட் கம் எகைன்..” என்று கூறிவிட்டு நன்கு காதினை தீட்டி வைத்தான்.
“ஒன் மந்த் லீவு சார்..” என்று மீண்டும் அதனையே கூறினான் ஆதிரன்.
அவனை எண்ணி சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியாமல் சரி என்று ஒத்துக் கொள்ள துள்ளிக் குதித்த ஆதிரன்.
அதே சந்தோஷத்தில் வீட்டிற்கு புறப்பட்டான்.
ஆனால் அதிரனுக்கோ தெரியவில்லை அந்த ஒரு மாத விடுமுறையில் தனது வாழ்க்கை பயணமே சிக்குண்டு சின்னா பின்னமாக வழி தெரியாத காட்டிற்குள் செல்ல போகின்றது என்று அப்படி தெரிந்திருந்தால் முன்கூட்டியே அந்த விடுமுறையை எடுக்காமல் வேலையிலேயே தனது நிம்மதியை போக்கிக் கொண்டு இருந்திருப்பான்.
விதி யாரைத்தான் விட்டது. விதியின் களியாட்டத்தில் நாமெல்லாம் பொம்மைகள் தானே..!