💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 106
‘வெடிங் வேர்ஷன்’ திருமண மண்டபம் மங்களகரமாக விளங்கிற்று. எங்கும் தோரணங்கள் ஜெகஜோதியாகப் பளபளக்க, உறவுகளின் வருகையில் அவ்விடம் களைகட்டி இருந்தது.
ஒன்றல்ல, இரண்டல்ல. இன்று இம்மண்டபத்தில் மூன்று திருமணங்கள் நடைபெறுகின்றன என்றால் சும்மாவா? மேளதாளங்கள் செவியை நிறைத்தன.
அழகாக அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பதாகையில் மூன்று ஜோடியின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தன.
தேவன் வெட்ஸ் வினிதா
ரூபன் வெட்ஸ் மகிஷா
கார்த்திக் வெட்ஸ் தன்யா
சகோதரர்களின் திருமணம் மட்டுமே ஒன்றாக நடைபெற இருந்தது. கார்த்திக் வீட்டினர் வந்து தன்யாவைப் பெண் கேட்ட சமயம், இவர்களது திருமணத்தையும் ஒன்றாகச் செய்யலாமா எனக் கேட்டான் சத்யா.
அவன் வீட்டினரும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர். தன்யாவுக்கோ அவ்வளவு மகிழ்ச்சி. ரூபன், தேவனும், தனுவும் தனக்கு வேறு வேறில்லை என்பதை சத்யாவின் செயல் உணர்த்த நெகிழ்ந்து போனாள்.
அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் மகிழ்வுடன் கழிந்தன. மகியின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. தனது ஆசைப்படி ஊருக்கு ஒரு விருந்தே கொடுத்தார் மாரிமுத்து.
இதோ இன்று மணநாள்!
பந்தலின் கீழ் அமர்ந்து இருந்த மூன்று ஜோடியையும் கண்ணாரக் கண்டு ரசித்தார் மேகலை. அவர் மனம் மகேந்திரனை நினைத்துக் கொண்டது.
சத்யாவுக்கும் அவ்வெண்ணம் தான்.
‘அப்பா! உங்க ஆசைப்படி தனு எங்க குடும்பத்தில் ஒருத்தியா மாறிட்டா. இன்னிக்கு அதை ஊரறிய தெரியப்படுத்துற மாதிரி கல்யாணமும் நடக்குது. எங்க இருந்தாலும் உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்குனு தெரியும்பா’ என தந்தையுடன் மனதார உரையாடினான் மைந்தன்.
“ஜானு எங்கே டா?” மகனின் தோளை சுரண்டிக் கேட்டார் மேகலை.
“ரெடியாகிட்டு வர்றதா மேலே போனா. இன்னும் வரல. பசங்களைக் கூட காணல. நான் பார்த்துட்டு வர்றேன்” எனும் போதே, “டாடீஈஈ” மான் குட்டி போல் ஓடி வந்தனர் இருவரும்.
சத்யாவைப் போலவே பட்டர் கலரில் குர்தி அணிந்திருந்தனர். அச்சு அசல் ஒன்று போல் இருந்த மகன்களை ஆசை தீர ரசித்தான் சத்யா.
“உங்கம்மா எங்கே?” எனக் கேட்க, “அதோ வர்றாங்க” என்று யுகி கை காட்ட, அப்புறம் பார்வையைச் செலுத்திய சத்யா இமைக்க மறந்தான்.
தங்க நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சிவப்பு நிற சாரி அணிந்திருந்தாள். நகைகள் ஜொலிக்க, தலை நிறைய பூச்சூடி அளவான மேக்கப்புடன் வந்து நின்ற மோகனப் பாவையைப் பார்வையால் களவாடி நின்றான் காதல் கணவன்.
“என்னங்க..!!” என்று அவனை அழைக்க, “ப்பாஹ் செமயா இருக்க ஜானு. தேவதை மாதிரி! என் கொண்டே பட்றும் போல இருக்கு” அவள் நெற்றி வழித்து முத்தமிட்டான்.
“சும்மா இருங்க. எல்லாரும் நம்மளைத் தான் பார்ப்பாங்க” அவன் பார்வையில் சிவந்து போனாள் செவ்வந்தி அவளும்.
“எல்லார் பார்வையும் மேடை மேல தான் இருக்கும். என் பார்வை உன் மேல இருக்கும். உன் பார்வை என் மேல இருக்கட்டும்” காதோரம் கிசுகிசுத்தான்.
“ஆசையைப் பாரு. இன்னிக்கு புதுமாப்பிள்ளை நீங்க இல்லை. அவங்க தான். உங்க பார்வை தம்பிங்க மேலயும், தங்கச்சி மேலயும் இருக்கட்டும். அங்க பாருங்களேன். எவ்ளோ அழகா இருக்காங்க. பார்க்கவே மனசுக்கு சந்தோஷமா இருக்குல்ல” என்றவள் குரலில் அத்தனை ஆனந்தம்.
அவனும் விளையாட்டைக் கை விட்டு அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனின் உடன்பிறப்புகளை மணக்கோலத்தில் பார்ப்பது மட்டற்ற மகிழ்வை வழங்கிற்று.
காதல் கை கூடிய களிப்பில் தேவன் தன்னவள் கையை ரகசியமாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“யாராவது பார்த்துட போறாங்க. கையை எடுங்க” என்று வினிதா சிணுங்க, “பார்த்தா பார்த்துட்டு போகட்டுமே. அவங்க கம்ப்ளைண்டா கொடுக்க முடியும்? என் பொண்டாட்டி கையை நான் பிடிக்கிறேன்” என்றவனின் பிடி இறுகியது.
“இன்னும் ஆகல சார்” என அவள் கிசுகிசுக்க, “எப்போவோ ஆகிட்ட டி. நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருசம் மேலாச்சு. ஹனிமூன் தான் போகல. இனி போயிடுவோம்” எனக் கூற,
“தேவ்வ்வ்” சிணுங்கியவளின் வதனத்தை விழித்திரைக்குள் படம் பிடித்துக் கொண்டான் தேவா.
மறுபக்கம் ரூபனும் மகியும் ஒருவர் பார்க்காத நேரத்தில் மற்றவர் பார்ப்பதாக இருந்தனர். மகியுடன் ரூபன் பேசுவான் தான். ஆனாலும் அவனிடம் இன்னும் விலகல் இருந்தது. அவனை இதுவரை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பு அமையவில்லை.
அவளுக்காக உடை எடுத்து அனுப்பினான். பரிசுகள் தந்தான். இருப்பினும் மனம் விட்டுப் பேசவில்லை. அது அவளை நெருடவே செய்தது.
மகியின் பார்வை உணர்ந்த ரூபன் சட்டென்று திரும்ப, இருவரது பார்வைகளும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன.
“எதுக்கு நான் பார்க்காத டைம் பார்க்குற?” வலது புருவத்தைத் தூக்கிக் கேட்டான் ரூபன்.
“நீங்களும் அப்படி தான் பண்ணுறீங்க. நான் எதுவும் கேட்கலயே” என்று அவள் சொல்ல, “நான் பார்க்கலனா பார்க்க மாட்ட. நான் பேசலனா நீயும் பேச மாட்ட. அப்படித் தானே?” என்று கேட்டவனின் குரலில் ஒருவித கடுமை.
அவள் தன்னை விடுத்து இன்னொருவனை திருமணம் செய்யவில்லை தான். இருப்பினும், அவள் அப்படிச் செய்வதாக அன்று சொன்னது இன்னும் மனதின் ஓரம் மறையாமல் இருந்தது.
அவள் முகம் வாடி நிற்க, “நீ பேசலனாலும் நான் பேசுவேன். நீ என் மகி டி! உன்னோட பேசாம நான் எங்கே போவேன்” என்று சொன்னதும் முகம் மலர்ந்தாள்.
“ஆஹ் இது என் மகி. இப்படியே சிரிச்சிட்டு நிற்க வேண்டாமா? மத்தவங்க கவனிச்சா உனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லனு நெனச்சிடப் போறாங்க” என்றதும், “நீங்க சிரிச்சா தானே நானும் சிரிக்கலாம்” என்று கூற,
“நான் பண்ணுறத அப்படியே பண்ணுவ போல. இப்போ முத்தம் தந்தா நீயும் திருப்பி தரனும். டீலா?” எனக் கேட்க, “அய்யோ என்னால முடியாது” அவனை முறைப்புடன் நோக்கினாள் மகிஷா.
மற்றொரு ஜோடியோ கண்களாலே காதல் புரிந்து கொண்டிருந்தனர்.
“இப்படிலாம் பார்க்காத டா. என்னமோ பண்ணுது” என்று தனு சொல்ல, “சத்தியமா முடியல டி. இத்தனை நாள் இந்த அழகை எங்கே வெச்சிருந்த? சாரி உடுத்ததும் அப்படி அழகா இருக்கே. கண்ணை எடுக்க முடியல” அவளை ரசித்துப் பார்த்தான் கார்த்திக்.
“நீயும் தான். இந்த காஸ்டியூம்ல வேற மாதிரி. அப்படியே உனக்கு கிஸ் அடிக்கனும் போல இருக்கு” என்றவளைப் பார்த்து, “சும்மா இரு. வெட்கம் இல்லையா உனக்கு?” அவனுக்கு வெட்கம் வந்தது.
“நான் என்ன அடுத்த வீட்டுக்காரனுக்கா கொடுக்கப் போறேன். என் கார்த்திக்கு தானே? நாம இனிமே புருஷன் பொண்டாட்டி ஆகிடுவோம். லவ்வர்ஸா ஒரே ஒரு தடவை கிஸ் பண்ணட்டா?” என்று கேட்க,
“அடி வாங்குவ. பொண்ணு மாதிரி அடக்கமா இரு. அராத்து மாதிரி பேசுற. அத்தனை பேர் முன்னாடி இது ஒன்னு தான் குறை. நாம புருஷன் பொண்டாட்டி ஆனாலும் லவ்வர்ஸ் தான். உனக்கு எல்லாமே சேர்த்து வெச்சு தரேன் சரியா?” முகத்தைத் தூக்கிக் கொண்டவளைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானம் செய்தான் ஆடவன்.
எழிலின் விழிகள் மேடிட்ட வயிற்றுடன் நிற்கும் தன்னவள் மீது நிலைத்தன. அன்னம்மாள் அவளைத் தனது அருகில் அமர வைத்துக் கொண்டிருந்தார்.
“பெரியம்மா! குட்டி பாப்பா எப்போ வரும்?” எனக் கேட்டு அவளது வயிற்றில் பார்வை பதித்தான் அகி.
“சீக்கிரமே வரும். வந்து பாருங்க. உங்களுக்கு பாப்பாவைத் தரேன். சமத்தா பார்த்துப்பீங்க தானே?” என்று நந்து கேட்க, “ஆமா பெரியம்மா” யுகன் தலையாட்டினான்.
தாலி கட்டும் நேரம் வந்தது. வஐயர் மந்திரம் ஓத, மேள தாளங்கள் முழங்கின. மணமகன்கள் கையில் தாலி வழங்கப்பட்டன.
அனைத்து முகங்களும் மகிழ்வில் பூரித்தன. தம் இணைக்குத் தாலிச்சரம் சூட்டி தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டனர் அவர்கள்.
வினிதாவின் கண்களில் கண்ணீர். தனது காதலுக்காக அவள் எவ்வளவு போராடினாள்? எத்தனை வலிகளைத் தாங்கினாள்? இன்று அவளது தேவன் அவளுக்கெனக் கிடைத்ததில் மனம் நிறைந்தது.
தேவனுக்கும் அதே உணர்வு. அவளின்றி அவன் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா? தன்னவளின் கண்ணீர் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
ரூபனும் மகியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அப்பார்வையில் ஏக்கங்கள் தீர்ந்த உணர்வு. நிலைக்குமா இல்லையா என்ற வினாவோடு இருந்த காதல் அல்லவா அவர்களுடையது? இதோ இன்று ஒன்று சேர்ந்தது.
தன்யாவுக்கு உள்ளமெங்கும் உவகை. அவளுக்கே அவளுக்கென்று அவளின் கார்த்திக். அவளின் காவலனாக, காதலனாக இருந்த கார்த்தி இன்று கணவனாக மாறி விட்டான். அவளின் கையைப் பற்றித் தனது மகிழ்வின் அளவை வெளிப்படுத்தினான் கார்த்தி.
குங்குமம் இட்டு, மெட்டி அணிவித்து ஏனைய சடங்குகளும் இனிதென முடிய, பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“இதைப் போட்டு விடுங்க” மூன்று ஜோடிக்கும் மோதிரங்களைப் பரிசளித்து பரஸ்பரம் அணிய வைத்தான்.
“வாவ் எல்லாருக்கும் ஒவ்வொரு கலர்ல இருக்கு” என சிரித்தான் ரூபன்.
“நந்து எழிலுக்கு கூட இருக்கு” சத்யா அதனை வழங்க, அவர்களும் மாற்றிக் கொண்டனர்.
“உனக்கும் ஜானு” தன்னவளுக்கு சிவப்புக் கல் பதித்த மோதிரத்தை அணிவித்து, அவள் கையால் தானும் அணிந்து கொண்டான்.
“மனசுக்கு சந்தோஷமா இருக்கு. என் பிள்ளைங்க கல்யாணம் சீரா நடந்து முடிஞ்சிருச்சு” மனத்திருப்தியுடன் மொழிந்தார் மேகலை.
“ஆமாம்மா. அப்பாவோட மனசும் நிறைஞ்சு போயிருக்கும்” தாயைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சத்யா.
அகியும் யுகியும் ஜனனியின் கைப்பிடித்து இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. வினிதாவின் சொந்தம் என்பதால் அவளுக்கும் பத்திரிகை வைக்கப்பட்டிருந்தது.
வர மாட்டாள் என்று தான் அவர்கள் நினைத்தனர். இருப்பினும் அவள் வந்திருந்தாள். மேடிட்ட அவளின் வயிறு ஜனனியின் கண்களில் பட்டது. ஆம்! அவள் கர்ப்பமாக இருந்தாள். குழந்தை இல்லை என்ற குறையும் தீர்ந்தது. இந்தப் பிள்ளையையாவது உண்மையான தாயன்புடன் வளர்க்க நினைத்திருந்தாள். அவளும் நன்றாக இருக்கட்டுமே என எண்ணிக் கொண்டாள் ஜானு.
“அந்த அஷோக் பையன் பாவம்பா. அவனுக்கும் யாரையாச்சும் தேடிக் கொடு தேவா” என ரூபன் சொல்ல, “நான் தேடத் தேவல. அவன் கிட்ட ஒரு மீன் சிக்கிருச்சே தெரியாதா? அங்கே பார்” என கை காட்டினான் தேவன்.
அஷோக்குடன் வால் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல, அவர்களது அத்தை பெத்த ரத்தினம் தான். அதாவது மகேந்திரனின் தங்கை நீலாம்பரியின் மகள் நீரஜா.
“ஓஹ்ஹோ கதை அப்படிப் போகுதா?” ரூபன் ராகம் இசைக்க, “ஏன் ப்ரோ! அவங்களுக்கு லவ் வரக் கூடாதா?” எனக் கேட்ட தனுவைப் பார்த்து,
“வரலாம் வரலாம். நீரு என் கிட்ட நல்ல பையன் சிக்கினா லவ் பண்ணுவேன்னு தான் சொன்னா. ஆனா நீ கில்லாடி! ப்ரெண்டு ஃப்ரெண்டுனு சொல்லிட்டு இதோ கல்யாணமே பண்ணிக்கிட்ட” அவளின் காலை வாரி விட்டான் ரூபன்.
தன்யா அவனை முறைக்க, “நாங்க ஃபேமிலியா இருந்து ஃபோட்டோ எடுப்போம்” என தேவன் அழைக்க,
“நீயும் உங்க அண்ணியைப் போல ஃபோட்டோ பைத்தியமா இருக்கியே” என அலறிய சத்யாவை, ஜானு முறைக்க அங்கு சிரிப்பலை எழுந்து அடங்கியது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி