57. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன்

 

💙 நட்பு 57

 

இரவு வானினை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

 

அவனைத் தேடித் தேடி களைத்துப் போய் வந்த நவிக்கு தன் தேடலுக்கு சொந்தக்காரனைக் கண்டு கொண்டதில் விழிகளில் பளபளப்பு.

 

“ஜித்து இங்கே தான் இருக்கீங்களா?” என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் போகவே அவன் முகத்தை எட்டிப் பார்த்தாள் பாவை.

 

கண்கள் இமைக்கக் கூட மறந்து போயிருக்க, முகத்தில் அத்தனைப் பிரகாசத்துடன் இருந்தவனின் இதழ்களில் ஒய்யாரமாக வீற்றிருந்தது அழகிய புன்னகை.

 

அனைத்தும் மறந்தவளாய் தன் இதயத் திருடனின் அழகினில் மீண்டும் சுகமாய் விரும்பியே கொள்ளை போனாள் வைஷ்ணவி.

 

சில்லென்று வருடிய காற்றினில் மரங்கள் சாய்ந்தாடும் சப்தத்தில் சுற்றம் உணர்ந்த விஷ்வா தனதருகே கன்னத்தில் கை வைத்து தன்னையே பார்த்தவாறு நிற்கும் மனையாளைக் கண்டு ஓர் புன்னகையைச் சிந்தினான்.

 

அவளோ இன்னும் சிலையாக நின்றிருக்க, “நவி மா” என்று அழைத்தான்.

 

சடுதியில் சுயநினைவுக்கு வந்து, “ஆங் சொல்லுங்க ஜித்து. என்ன யோசனைல இருந்தீங்க?” என வினவினாள்.

 

“என்னை கண்ணுல காதல் பொங்கி வழிய பார்த்துட்டு இருந்த காதல் மங்கையை என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்” அவளை நோக்கி தலை சாய்த்து பதிலளித்தான் ஆடவன்.

 

“என்னை என்ன பண்ண போறீங்க?” முட்டைக் கண்களை உருட்டிக் கேட்டவளின் பாவனைகளில் அவனுள்ளம் சிக்கித் தான் தவிக்கலாயிற்று.

 

“என்ன என்னெல்லாமோ பண்ணப் போறேன்” அவளை ஊடுறுவும் பார்வை பார்த்தவனின் விழிகளில் கள்ளச் சிரிப்பு துள்ளிக் குதித்து விளையாடியது.

 

“கள்ள படவா” முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டாள் அவள்.

 

“உன் வெட்கம் மட்டும் இன்னும் போகவே இல்லைடி. அது தான் உன் கிட்ட இன்னும் இன்னும் ஈர்க்குது” அவள் கைகளைப் பிடித்து முத்தமிட்டான் காளை.

 

அழகாகப் புன்னகை பூத்தவளின் கைகளைப் பிடித்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.

 

“மித்துவைப் பற்றி தான் நெனச்சிட்டு இருந்தேன்”

 

“நீங்க நினைக்கலனா தான் ஆச்சரியம். அண்ணாவை எப்போவாவது நீங்க மறந்து இருப்பீங்களா? உங்க ஹார்ட் முழுக்க இருப்பது உங்க காதலி மித்து தானே” என்றாள் வைஷ்ணவி.

 

“என்ன டி கிண்டலா?” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டான் விஷு.

 

“ஒரு சுண்டலும் இல்லை. உண்மை அது தானே? நேற்று அண்ணா வரும் போது நல்லா வந்தார். ஆனா போகும் போது முகம் ஒரு மாதிரி இருந்ததே ஏன்?” என வினவினாள்.

 

“அது தான் எனக்கும் புரியல. அப்செட்டா இருக்கு” கட்டை விரலால் புருவத்தை நீவிக் கொண்டான்.

 

“நீங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தீங்களே அப்போதில் இருந்து அண்ணா ஏதோ போல் ஆகிட்டார். ஏனோ தெரியல” தானும் யோசனையில் ஆழ்ந்து போகலானாள் நவி.

 

“என்ன இருந்தாலும் கடைசியில் மாப்ளனு கூப்பிட்டுக் கொண்டு என் கிட்ட தான் வருவான். அப்போ பார்த்துக்கலாம் விடு” என்று மெலிதாய் முறுவலித்தான்.

 

“உங்க ரெண்டு பேர் நட்பைப் பார்க்கும் போது எனக்கும் ஏன் உங்களை மாதிரி ஒரு ப்ரெண்டு கிடைக்காம போனானு கவலையா இருக்கு” சோகமாய் கூறியவளை நோக்கி,

 

“அது தான் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு அழகான, அன்பான, ஹேன்ட்ஸமான புருஷன் கிடைச்சு இருக்கானே” வலது கண்ணை நளினமாகச் சிமிட்டினான் சில்மிஷக்காரன்.

 

“அடேங்கப்பா இதற்குப் பெயர் தான் தற்புகழ்ச்சியோ?” பொய்யாக வியந்தாலும் அவள் கண்களுக்கு அழகாகத் தான் தெரிந்தான். சாதாரண அழகல்ல! பேரழகாக!

 

………………

“விஷு! மாப்ள! எங்கே இருக்க?” சத்தமாக அழைத்தவாறு விஷ்வாவின் வீட்டினுள் நுழைந்தான் நண்பன்.

 

ஆள் அரவமற்று மயான அமைதியில் தான் ஆழ்ந்திருந்தது சிவகுமார் இல்லம்.

 

“ஹாய் டா” என்ற குரலில் திரும்பியவனோ ஜாகிங் முடித்து விட்டு வியர்க்க விறுவிறுக்க வரும் விஷ்வாவைக் கண்டு முறைப்புடன் நின்றான்.

 

“இன்னிக்கு சூரியனோட ஜாப்பை நீ எடுத்துக்கிட்டியா?” என்று விஷ்வாவைப் பார்த்து,

 

“என்ன ஜாப்?” எனும் கேள்வியை வீசினான் மித்து.

 

“கண்ணுல நெருப்பை வெச்சிட்டு என்னை எரிக்க பார்க்குறியே அதை சொன்னேன்” தண்ணீர் போத்தலைத் திறந்து நீரை முகத்தில் ஊற்றிக் கொண்டான் விஷு.

 

“நீயும் தான் என்னை எரிச்சிட்டு இருக்கே கொஞ்ச நாளா. நானும் கேட்குறேனா சூரியன் சுடுதா சந்திரன் குளிருதானு” முறுக்கிக் கொண்டான் தோழன்.

 

“நான் எப்போவும் போல சாதாரணமாக தான் இருக்கேன். நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத”

 

“எதுக்கு கற்பனை பண்ணனும்? இத்தனை வருஷமா உன் கூட இருக்கிற எனக்கு தெரியாதா உன் ஒவ்வொரு அசைவைப் பற்றியும்” புருவம் உயர்த்திப் பார்த்தவன் சட்டென பைக்கில் ஏறி செல்ல ஆயத்தமானான்.

 

“டேய் மாப்ள!” என்று அவன் முன்னே வந்து நின்றான் விஷு.

 

“தள்ளிப் போ” முறைத்துப் பார்த்தான்.

 

“தள்ளித் தள்ளி போகாதய்யா நில்லு நில்லு. உன் கோபம் எதுக்குனு சொல்லு சொல்லு” பாட்டாகப் பாடியவனைக் கண்டு ஏகத்துக்குப் எகிறியது இவனுக்கு.

 

‘இன்னிக்கு என் பர்த்டே! அதைப் பற்றி ஒன்னும் சொல்லல. வழக்கம் போல பன்னிரண்டு மணிக்கு விஷ் பண்ணல. அதை விட்டுட்டு பாட்டு பாடிட்டு இருக்கான்’ உள்ளுக்குள் பொரிந்தவனுக்கு நண்பனின் வாழ்த்து வழக்கமான நேரத்தில் கிடைக்காதது கவலையைக் கொடுத்தது.

 

அவனைப் பற்றியே சிந்தித்தவனுக்கு மனைவி மற்றும் தந்தையும் கூட வாழ்த்தாதது கருத்தில் பதியவே இல்லை.

 

“வாசல் வரைக்கும் வந்துட்ட. வீட்டுக்கு வராம போனா நல்லாவா இருக்கும்?” என்று அழைத்தான் விஷு.

 

“நான் வரல” என அவன் மறுக்க, “சும்மா வாடா” என்று உள்ளே இழுத்துக் கொண்டு போனான்.

 

“அடே! மித்து கண்ணா குட் மார்னிங்” காபி கப்புடன் வந்து அமர்ந்தார் நீலவேணி. பேப்பர் படித்துக் கொண்டிருந்த சிவகுமாரும் புன்னகையைச் சிந்தி விட்டு மீண்டும் பத்திரிகைக்குள் தலையை நுழைத்துக் கொண்டார்.

 

“யாருக்குமே என் பிறந்தநாள் ஞாபகம் இல்லையா?” என்ன தான் வளர்ந்து

விட்டாலும் அன்பு என்று வரும் போது சிறுகுழந்தையாய் மாறி அனைவரதும் வாழ்த்துக்காக ஏங்கித் தவிக்கலானான்.

 

“இரு மித்து ப்ரெஷ் ஆகிட்டு வரேன்” மாடிப் படிகளில் ஏறினான் விஷ்வா.

 

எதுவும் பேசாமல் நின்ற மித்து விஷ்வா இன்னும் வராது தாமதமாகவே எழுந்து அவனது அறையினுள் நுழைந்தான்.

 

உள்ளே நுழைந்தவனின் விழிகள் அகல விரிந்தன. விஷ்வாவின் அறை அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வண்ண மின்குமிழ்கள் ஜொலிக்க, ‘வெல்கம் மித்து’ என்று அலங்கார எழுத்துக்கள் கோர்வையாக ஒட்டப்பட்டு இருந்தன.

 

“எங்கே போயிட்டான் இவன்?” நண்பனைத் தேடி பார்வை அலைந்து திரிய, “ஹேப்பி பர்த்டே டு யூ மாப்ள!” என்று கத்தியவாறு கையில் கேக்குடன் வந்தான் விஷ்வா.

 

அவன் பின்னால் ஹரிஷ், வைஷ்ணவி, அக்ஷரா, சிவகுமார் மற்றும் நீலவேணியும் உள்ளே நுழைந்தனர்.

 

“அம்முலு! நீ எப்படி இங்கே?” மனைவியைப் பார்த்துக் கேட்டான் மித்து.

 

“என் வீடு நான் எப்போ வேணா வருவேன்” என்று சொன்னவளைச் செல்லமாக முறைத்தான்.

 

“உன் ரொமான்ஸை அப்பறமா வெச்சுக்கோ. இப்போ கேக் கட் பண்ணு” என்றான் விஷ்வா.

 

“டேய் போடா” என்றவனோ கேக் வெட்ட பலூன்களை படபடவென வெடித்து மின்னும் துகள்களை அவன் மீது பொழிய வைத்தனர் அக்ஷுவும் விஷுவும்.

 

முதலில் விஷ்வாவுக்கு ஊட்டி விட, அவனும் மாறி ஊட்டினான். பின் அக்ஷு, வைஷு என்று ஒவ்வொருவராக கேக் ஊட்டி பரிசுகள் கொடுத்தனர்.

 

“நீ கிப்ட் கொடுக்க மாட்டியா தடியா?” அண்ணனிடம் வினவினாள் அக்ஷு.

 

“என்னை திட்டிட்டான் இவன் அதனால ஒன்னும் கிடையாது” சிறுபிள்ளையாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் அவன்.

 

“டேய் சாரிடா! நீ எனக்கு எப்போவும் முதல் ஆளா விஷ் பண்ணிருவ. ஆனா இன்னிக்கு அப்படி பண்ணாததால அப்சட் ஆகிட்டேன்” வலது புருவத்தை ஒற்றை விரலால் நீவி விட்டுக் கொண்டான் மித்ரன்.

 

“எல்லாம் ஒரு சேன்ஜுக்கு தான். அதுக்குனு படபட பட்டாசு மாதிரி வெடிச்சிருவியா” அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் விஷ்வா.

 

“வெடிக்க மாட்டேன். வெடியை போட்டு உன்னை பட்டாசு மாதிரி அலற வைப்பேன் டா ராஸ்கல்” விஷுவின் தோளில் மெல்ல அடித்தான் தோழன்.

 

“இதுங்க அலப்பறை தொடங்கியாச்சு. இனி நம்ம காதை வெச்சுட்டு இருக்க முடியாது. வாடி போய் கேக் சாப்பிடுவோம்” வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு சென்றாள் அக்ஷரா.

 

“இந்த அரிசி மூட்டையை எப்படி சமாளிக்கிற மித்ரா?” நண்பனினிடம் சத்தமாகவே கேட்டான் விஷு.

 

“ஈசி மாப்ள! அரிசி மூட்டையை முதுகில் சுமந்து எப்படியோ சமாளிக்கிறேன்” வருந்தத்துடன் உரைத்தவனோ தன் முன்னால் பத்ரகாளியாக நிற்கும் மனைவியைக் கண்டு, “அ…அம்முலு” என தடுமாறினான்.

 

“நான் அரிசி மூட்டையா? அதுவும் தோளில் சுமந்து சமாளிக்கிற ஹும்? அவ்ளோ கஷ்டப்பட்டு ஒன்னும் நீ சுமக்க வேணாம்” முறைப்பை அள்ளி வீசினாள் அக்ஷரா.

 

“கஷ்டம் இல்லை! இந்த அழகான சுமையை நான் இஷ்டப்பட்டு தான் சுமக்கிறேன். அழகான, சுகமான, இதமான சுமை நீ!” மித்ரன் கவிஞனாய் மாற,

 

“என் விழி காக்கும் இமை நீ! ரைமிங் ஓகேவா மாப்ள?” விஷ்வா இடையே கேட்கவும், அப்போது தான் அவனும் அருகில் இருப்பது ஞாபகம் வந்தவனாக நடப்பிற்கு வந்தான் மித்து.

 

“கொஞ்சம் கூட ரொமான்டிக்கா பேச விடறியா நீ?! பாரு உன் தங்கச்சி மதுவுண்ட மந்தி மாதிரி காதல் மயக்கத்தில் இருக்கா” மித்ரன் தன்னவளை கலாய்க்கும் நோக்கில் சொல்ல,

 

“பார்த்தியா குட்டிமா உன்னை மங்கினு சொல்லுறான்” போட்டுக் கொடுத்தான் அண்ணன்காரன்.

 

“அவனுக்கு கொழுப்பு கூடிப் போச்சுடா. இரு உன்னை பிறகு ஒரு கை பார்க்குறேன்” முறுக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

 

“ஏன்டா ஏன் உனக்கு இந்த கொலைவெறி?” பாவமாகப் பார்த்தான் மித்ரன்.

 

“ச்சும்மா ஒரு கிக்கு டா” கண்ணடித்தான் காளை.

 

“உன்னை மாதிரி கவிதை சொல்ல ட்ரை பண்ண பார்த்தா இன்னும் சிறப்பா பண்ணிட்ட”

 

“அது உனக்கு வராது விடு மாப்ள! அதுக்குனு சில ரசனையுள்ள, அழகான மனசு இருக்கனும். அப்போ தான் கவிதை மழையா பொழியும்” இல்லாத காலரை உயர்த்தி விட்டுக் கொண்டான் விஷ்வா.

 

“த்தூ போடா பன்னாட” துப்புவது போல் செய்கை செய்த மித்துவிடம் சிறிய அளவிலான பெட்டியொன்றைக் கொடுத்தான் விஷ்வா.

 

திறந்து பார்த்தவனோ உள்ளிருந்த சிறு சாவியைக் கண்டு புருவம் சுருக்கினான்.

 

“இது என்ன இவ்ளோ சின்னதா சாவி?” என்று வினவ,

 

“என் ரூம்ல இரகசிய அறையை ஒளிச்சு வெச்சிருக்கேன். அதோட கீ இது” என்றான் விஷு.

 

“போடா பொய்காரா” என முறைத்தவன் திடீரென நண்பனின் முகத்தை ஏறிட்டான். ஒரு கணம் கூர்ந்து பார்த்தான். அவன் கண்களில் விஷமம் இருந்தாலும் அதனோடு உண்மையும் உறவாடிக் கொண்டு தானிருந்தது.

 

“டேய் மாப்ள!” வியப்புடன் விழி விரித்தவனிடம், கண்களை மூடித் திறந்து ஆம் என்பதாய் தலையசைத்தான்.

 

பின், எழுந்து வந்து அந்த அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த தனது ஒரே புகைப்படத்தை அகற்ற சுவரில் சிறிய கைப்பிடி போன்று இருக்கக் கண்ட மித்ரன் வாயில் கை வைத்து நிற்கையிலே அதனைத் திருகினான் விஷ்வா.

 

சுவரின் நிறத்திலேயே இருந்த கதவு மெல்ல விலக, “உள்ளே வா” என அழைத்தான்.

எங்கும் இருட்டாக இருந்தது.

 

அவன் உள்நுழைய காலடி எடுத்து வைக்கும் போது, “ஹேப்பி பர்த்டே டா! திஸ் ஸ்மோல் கிப்ட் ஃபார் யூ” என்று கூறியவாறு லைட்டை ஆன் செய்தான்.

 

விழிகளோ தெறித்து விடும்படியாக விரிந்து கொள்ள, இதயமோ ஓர் கணம் நின்று தான் துடித்தது விஷ்வாவின் ஆருயிர்த் தோழனுக்கு.

 

அந்த அறையின் சுவர் முழுக்க விஷ்வ, மித்ரனின் புகைப்படங்கள் நிறைந்திருந்தன. 

 

அறையில் புகைப்படம் ஒன்றையும் வைத்திருக்கவில்லையே என்று தன்னை கவலைப்பட வைத்தவன் இவ்வறை முழுக்க அவனுடனான நினைவுச் சின்னங்களை நிரப்பி அவனது இதயச் சுவரில் என்றும் நிலையான ஓவியமாக தன்னை வைத்திருப்பதை நிரூபித்து விட்ட பூரிப்பில் விம்மியது விஷ்வாவின் மித்திரனது நெஞ்சகம்!

 

அரைக்காற்சட்டையும் டிசர்ட்டும் அணிந்து கையில் துடுப்பு மட்டையுடன் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து பதினொராம் வயதில் பிடித்த புகைப்படம்!

 

ஒரு நாள் சாக்லேட்டை முகத்தில் அள்ளிப் பூசி செல்லச் சண்டையிட்ட போது சிவகுமாரினால் எடுக்கப்பட்ட புகைப்படம்!

 

காலேஜில் முதல் முதலாக இருவரும் அடியெடுத்து வைக்கும் போது ஒருவனிடம் சொல்லி எடுத்துக் கொண்ட புகைப்படம்!

 

கடற்கரையில் ஒருவர் தோள் மீது மற்றவர் கை போட்டு நடக்கும் புகைப்படம்!

மித்ரன் பைக் ஓட்ட விஷ்வா பின்னால் ஸ்டான்டில் ஏறி நின்று கைகளை விரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம்!

 

இவ்வாறு பர்த்டே, காலேஜ் பங்ஷன், பைக் ரைட், பேமிலி ட்ரிப் என்று ஒவ்வொரு தருணங்களிலும் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்த அத்தனை புகைப்படங்களும் வரிசையாக அழகாக, அங்கே காட்சியளித்தன.

 

வாய்திறந்து பேச வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு! விவரிக்க இயலாத சந்தோஷம் அவனை பூரிக்கச் செய்து தன்னிலை மறக்க வைத்திருந்தது.

 

சுயத்திற்கு வந்த மித்ரன், “விஷு! எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியல. தாங்க்ஸ் சொல்லி பத்தாது உனக்கு, சொல்லவும் மாட்டேன். உன் மனசு திருப்தியடையுற மாதிரி இதை சொல்லுவேன். அது என்னன்னா உன் மித்து உன்னால இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கான்! இந்த சந்தோஷம் தான் என் பர்த்டேக்கு கிடைத்த மறக்க முடியாத கிப்ட்” என புன்னகையுடன் உரைத்தான்.

 

கைகளைக் கட்டிக் கொண்டு நண்பனையே பார்த்திருந்தான் விஷ்வஜித்!

இது, இந்த சந்தோஷத்தைத் தானே நண்பனின் முகத்தில் காண விரும்பினான்?! 

கண்டு விட்டான்! அதை அவன் வாயால் சொல்லியும் கேட்டு விட்டான். இதற்கு மேல் என்ன வேண்டும்?

மனம் நிறைந்து போனது அவனுக்கு.

 

“இந்த போட்டோஸ்லாம் எடுக்கும் போது உன் கிட்ட கேட்பேன் ஏன்டா எப்போ பார் போட்டோ போட்டோனு அலையுறேனு. நீ சொல்லுவல்ல அந்த நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவும் அப்படினு. அது அப்போ புரியல ஆனா இப்போ இந்த போட்டோஸ் பார்க்கும் போது அப்படி ஒரு சந்தோஷம் வருது. அந்த நிமிடத்திற்குள் நாம திரும்ப போயிட்ட மாதிரி ஃபீல்” உவகை பொங்க உரைத்தான் மித்து.

 

“டியூப் லைட்ல நீ! அதான் எரிய லேட் ஆகுது” மெல்ல நகைத்தான் நண்பன்.

 

“உன் ரூம்ல என் போட்டோ எதுவும் இல்லையே. என்னை பார்க்க பிடிக்காம எல்லாம் கழற்றி போட்டுட்டியானு தெரியாம தவிச்சு போய் இருந்தேன் விஷு! இப்போலாம் உன் ரூமுக்கு வரவே எனக்கு கஷ்டமா இருந்தது. நம்ம போட்டோஸ் இருந்த இடம் வெறுமையா இருக்கிறத பார்க்க பிடிக்கல. ஆனா இங்கே எனக்காக நீ ஒரு ரூமே உருவாக்கி இப்படி நம்ம நினைவுகளை சுமந்து வாழ்ந்திருக்க. இதை பார்க்கும் போது என்ன சொல்லுறதுனே தெரியல டா”

 

“அப்படினா இதுக்கு தான் அப்போ வந்த நேரம் என் ரூம் விட்டு சோகமா போனியா? டேய் லூசு! உன் போட்டோவை எடுத்துட்டா உன்னை மறந்துட்டதா அர்த்தமா?! இங்கே வைக்கிறத விட எனக்கு பிடிச்ச இந்த ரூம்ல உன் போட்டோஸ் வெச்சு உன்னோடான நினைவுகளை தினமும் மீட்டிப் பார்த்துட்டு தான் வாழ்ந்தேன்” என்ற விஷ்வாவை அன்பு பெருகத் தான் பார்த்திருந்தான் மித்து.

 

“உன்னை மறந்து இருந்தா என்னடா பண்ணிருப்ப?” என்று விஷ்வா கேட்க,

 

“தொலச்சிடுவேன் ராஸ்கல்! என்னை மறந்துருவியா நீ… அவ்வளவு சீக்கிரம் மறக்க விட்றுவேனா?” என முறைத்தான்.

 

இவனோ செல்லமாய் முறைக்க, “இந்த முறைப்புக்காக அந்த கப்போர்டை கிப்ட் பண்ணுறேன்” அங்கிருந்த அலுமாரியைத் திறந்து காட்டினான் விஷு.

 

உள்ளே ஒரே மாதிரியான டிசர்ட், சேர்ட், ட்ரவுசர், டெனிம் என இரண்டு இரண்டு செட் இருந்தன. அனைத்தும் அவர்களது அளவு உடைகள் தான்.

 

மித்து கண்களால் என்னவென்று வினவ பதிலளிக்கத் துவங்கினான் விஷ்வா.

 

“நாம பிரிந்து இருந்த நேரத்தில் நீ என்னை விட்டு போட பிடிக்காம எந்த ட்ரெஸ்சும் புதுசா வாங்கல! ஆனா நான் வாங்கினேன்னு சொன்னன்ல.

 

ஆமா வாங்கினேன் எனக்கு மட்டுமல்ல உனக்கும் சேர்த்து வாங்கினேன். அதை இன்னும் ட்ரெஸ் பண்ணவே இல்லை. நீ வரும் வரை இதோ இங்கே வெச்சிருந்தேன். இனி நாம ஒவ்வொன்னா எடுத்து போட்டுக்கலாம்” 

 

இதைக் கேட்டு ஆனந்தம் பொங்க நின்றான் மித்து. தான் இல்லாத சமயம் கூட தன்னை நினைவிற் கொண்டு தனக்காக இதை எல்லாம் வாங்கி வைத்திருக்கிறானே! 

 

இது மட்டுமா?

இன்னும் தனக்காக என்னவெல்லாம் செய்தான்?

தனக்காக அவன் இதயத்தையே தர முன்வந்தானே?

இத்தகைய நட்பு யாருக்குக் கிடைக்கும்?

நண்பனே ஆனாலும் எல்லையில்லாத, எதிர்பார்ப்பில்லாத அன்பை யாரால் தான் கொடுக்க இயலும்?

 

அவ்வன்பை கொடுத்து விட்டானே!

தனக்கு தன் விஷு தந்து விட்டானே!

கைம்மாறு என்று எதனையும் கொடுத்து சரி செய்ய முடியாத நிலையில் தன்னை வைத்து விட்டானே!

இவன் வெறும் நண்பன் அல்ல!

தனக்காக கடவுளால் கொடுக்கப்பட்ட விலை மதிக்க முடியாத ஓர் வரம்!

 

இவன் அன்பிற்காக கை நீட்டி யாசகம் கூட வாங்கலாம் என்று நினைத்தான்.

அவனைப் பார்த்தான் மித்ரன்!

அருகே வந்து அவன் முடியைக் கலைத்து விட்டான் விஷ்வா!

 

விஷ்வாவிடம் “ப்ரெண்ட்ஸ்?” எனக் கேட்டு ஒற்றைக் கையை நீட்டி மெலிதாய் புன்னகை பூத்தான் நண்பன்!

புருவம் உயர்த்திப் பார்த்து விட்டு அவன் கையைப் பற்றி, “ஆல்வேஸ் ப்ரெண்ட்ஸ்” என்று கண்சிமிட்டினான் அன்பன்!

 

நட்பு தொடரும்……!!

 

விஷ்வ மித்ரன் நட்பு பற்றிய உங்கள் கருத்து?? மறக்காம சொல்லிட்டு போங்க டா.

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!