விஷ்வ மித்ரன்
💙 நட்பு 63 – Last episode
(Part 1)
வெஞ்சூரியன் வான்தனில் செஞ்சாந்தை அள்ளிப் பூசி கதகளி ஆடிய நேரமது.
அலங்காரங்களால் நிறைந்திருந்த சிவகுமார் இல்லத்தில் இத்தனை நேரமும் ஓங்கி ஒலித்த சப்தம் மெல்ல மெல்ல அடங்கி நிசப்தத்தில் ஆழத் துவங்கிற்று.
அவரது ஒரே செல்ல மகளின் வளைகாப்பு விழா என்றால் சும்மாவா?! சொந்தங்களை அழைத்து அசத்தி இருந்தார் சிவகுமார்.
வந்திருந்த சொந்தங்கள் வயிராற உண்டு அவளை மனதார வாழ்த்திச் சென்றிருந்தனர். அறையில் அமர்ந்து தனக்கான அறையில் அலங்காரங்களைக் கலைப்பதற்காக அறையினுள் நுழைந்த மனைவியைக் கண்டு இமைக்கவும் மறந்து போனான் மித்ரன்.
விழா நேரத்தில் கூட தன்னவளை அப்பட்டமாக ரசித்துக் கொண்டு தான் இருந்தான் அவன். அத்தனை அழகாகத் தெரிந்தாள் இன்று. நிறைந்த ஆனந்தத்துடன் மலர்ந்து சிரிக்கும் அவள் முகத்தைக் காணக் காணத் திகட்டவில்லை அவள் மீது தீராக்காதல் கொண்ட தலைவனுக்கு.
கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றப் போனவளைக் கண்டு “அம்முலு! வேணாம் இரு இரு” என்று உடனடியாக மறுப்புத் தெரிவித்தாள்.
“ஏன்?” கேள்வியைத் தாங்கி அவன் திசை நோக்கினாள் அக்ஷரா.
“இப்படியே இரு! கொஞ்ச நேரம்” அவளை கட்டிலில் அமர வைத்து நகர்ந்திருந்த நாற்காலியை இழுத்துத் எதிரில் போட்டு அமர்ந்தான்.
அவள் கைகளைத் தன்னுள் பொத்திப் பாதுகாப்பு வழங்கியதோடு அவள் கையில் ஐஸ்கிரீம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான்.
“ஹய்ய் செல்லம்” என்று கொஞ்சலுடன் குதூகலமாய் சாப்பிட்டவளை விழிகளால் அவளை அணுஅணுவாய் ரசிக்கலானான் ஆடவன்.
இமைகளின் சிமிட்டுதலால் மறைக்கப்பட்டு வெளித்தெரியும் கருமணிகளின் அசைவும் கூட அவன் சிந்தை கவர்ந்தது. அளவாக மேக்அப் இட்டிருந்தாள். நெற்றியில் சிறு பொட்டு, கன்னத்தில் பூசப்பட்டிருந்த சந்தனம் பளபளக்க பளிங்குச் சிலையாகத் தெரிந்தாள்.
“எ…என்ன இப்படி பார்க்குற?” அவன் பார்வையில் நாணம் படர வினவினாள் வஞ்சிக் கொடியாள்.
“பார்க்கனும் டி உன்னை இப்படி பார்த்துட்டே இருக்கனும் டி. காலம் முழுக்க உன் முகத்தை பக்கத்துல இருந்து அலுக்காம சலிக்காம பார்த்து ரசிக்கனும்” அவன் கரங்கள் அவளது கன்னங்களைப் பிடித்தன.
வெட்கம் தாளாமல் முகத்தை மறைக்கப் போன கைகளைப் பற்றி சிறைப்பிடித்தான் அருள் மித்ரன்.
அவன் பார்வையில் இவள் திணற, அவளின் முகபாவனைகள் ஒவ்வொன்றையும் மிக நிதானமாகத் தன்னுள் படம் பிடித்து அவளை இன்னுமின்னும் இன்ப அவஸ்தையால் சோதிக்கவும் தான் செய்யலானான் அவன்.
பெருந்தன்மை கொண்டானோ என்னவோ இத்தோடு போதும் என்று அவளுக்கு விடுதலை கொடுத்து விட்டுச் சிரிப்புடன் வெளிப்புற படிக்கட்டில் அமர்ந்து கொண்டான்.
உடைமாற்றி வந்தவளோ அவனைக் கண்டு “காதல் ராட்சசா!” என்று மீசையைப் பிடித்து இழுத்து வைத்தாள் அவள்.
“ஹா ஹா அவ்ளோ மோசமாகவா இருக்கேன்” அவனிதழ்களில் சிரிப்பின் துகள்கள்.
“ஆமா ரொம்ப மோசம்! மோசக்காரன் தான் ஆனாலும் அதை விட பாசக்காரன்” அவனிடத்தில் கூறினாள் காரிகை.
அவனோ சற்று சத்தமாகச் சிரித்து விட, “எதுக்கு சிரிக்கிற?” என்ற கேள்வி பிறந்தது.
“விஷுவும் இதே டயலாக்க இன்னிக்கு மார்னிங் என் கிட்ட சொன்னான். அதான் நீயும் சொன்னதும் சிரிச்சிட்டேன்” குறுந்தாடியை நீவிக் கொண்டான் மித்து.
“உன் கிட்ட ஒன்னு கேட்கவா?”
“தாராளமா கேளு. அனுமதி எல்லாம் கேட்கனுமா நீ?” என கைகளை விரித்துக் காட்டினான்.
“உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? என்னையா? விஷுவையா?” ஏற்கனவே அவன் இதற்கு பதில் கொடுத்திருந்தாலும் மீண்டும் கேட்க ஆவல் கொண்டாள்.
விநாடி கூட தாமதம் இன்றி ஒற்றை வரியில் விடை கிடைத்திருந்தது.
“என் விஷுவை” புன்னகை தவழ பதில் கொடுத்தான் விஷ்வாவின் தோழன்.
இதை அறியாமலா இருப்பாள்? அன்று கூட அவன் வாயால் சொல்லிக் கேட்டாளே. இத்தனை வருடமாக அவர்களது நட்பை கண்ணூடாகப் பார்ப்பவளுக்கு இப்பதிலே கிடைக்கும் என்று நிச்சயம் தெரியும்.
இருந்தாலும் அதனையும், அதற்கான விளக்கத்தையும் அவன் வாயால் மீண்டும் கேட்டிட வேண்டும் போல் இருந்தது. ஆக, கேட்டும் விட்டாள். விடையும் கிடைத்தது. ஆனால் இது போதவில்லை அவளுக்கு.
“ஏன் என்னைப் பிடிக்காதா அப்போ?” மீ்ண்டும் கேட்டாள்.
அதற்கான விடைக்குப் பதிலாக, “உனக்கு உன் அம்மாவைப் பிடிக்குமா அப்பாவைப் பிடிக்குமா? ஒருத்தர் பெயர் தான் சொல்லனும்” எனக் கேட்டான் மித்ரன்.
அவள் பதில் கூறாமல் இருக்க, “அப்பாவை தான். ஆம் ஐ ரைட்?” என்று கேட்டவனது கூற்றை அவளின் தலையாட்டல் ஆமோதித்தது.
“உன் கிட்ட யாரை ரொம்ப பிடிக்கும்னு கேட்டா அப்பாவைனு சொல்லுவ. அதுக்காக அம்மாவை பிடிக்காதுனு ஆகிருமா இல்லையே!? ரெண்டு பேரையும் பிடிக்கும். ஆனால் அப்பாவை கொஞ்சம் அதிகப்படியா. அப்படி தானே.
அதே மாதிரி தான் இதுவும். பொண்டாட்டியா ப்ரெண்டானு கேட்டா ரெண்டு பேரும். அவங்க ரெண்டு பேரிலும் யார்னு கேட்டா விஷுவை தான். அதற்கு உன்னைப் பிடிக்காதுனு அர்த்தமில்லை. அவனோட நட்பு எனக்கு சம்திங் ஸ்பெஷல்!
சின்ன வயசுல அம்மா இல்ல அப்பா ஹாஸ்பிடல் போவார். தன்னந்தனியா எனக்குள்ள நானே பேசிட்டு வெளியே யார் கூடவும் நெருங்கி பழகாம ஒதுங்கி ஒதுங்கி வாழ்ந்தேன்.
அவன் மட்டும் என் லைப்ல வரலனா இன்னிக்கு வரைக்கும் அப்படி தான் உப்புசப்பு இல்லாம என் வாழ்க்கை போயிருக்கும். நான் இவ்ளோ சந்தோஷமா உறவுகளோட இருந்திருக்க மாட்டேன்” என்று கூறினான் விஷுவின் மித்திரன்.
இவ்வளவு விரிவாக தன் நண்பனைப் பற்றி அவன் இதுவரை பேசியதில்லை. பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதில் விடவும் முடியுமா? முற்றுப்புள்ளி இட முடியாத நட்பல்லவா அது?!
இன்று அக்ஷராவே கேட்டதும் சொல்லத் துவங்கியவனுக்கு நிறுத்தும் வழி தெரியவில்லை.
“ம்ம் பேசு டா. உனக்கு தோணுறத எல்லாம் சொல்லு” அவன் உணர்ச்சிவசப்படுவது புரிந்து கூறினாள் அவள்.
இனியென்ன? அவன் மன எழுத்துக்களை வடிக்கும் நாட்குறிப்பாக மாறிப் போனாள் மனையாட்டி. கேட்பது ஒன்றும் சலிப்பாக இல்லை; அவளுக்கும் அந்நட்பின் ஆழம் அவளையும் ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியது.
அதே போன்றதொரு ஆழத்தில் இன்னுமிரு ஜீவன்களும் அமிழ்ந்து கொண்டு தான் இருந்தது. மித்ரனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருத்தது அக்ஷரா மட்டுமல்ல! அவர்களைத் தேடி வந்திருந்த விஷ்வாவும் நவியும் கூடத் தான்!
மித்ரனின் வார்த்தைகளில் உச்சி குளிர்ந்த விஷ்வாவுக்கோ அவன் முன் சென்று நிற்கவும் உணர்வற்று, அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.
அங்கு நின்றிருந்த வைஷ்ணவிக்கோ கனவுலகில் சஞ்சரிக்கும் உணர்வு! ஏனெனில் இதே போன்றதொரு கேள்வியை நேற்று கணவனிடம் அவளும் தான் கேட்டாளே.
அதற்கு அவன் கொடுத்த பதிலும் கிட்டத்தட்ட இதே போன்று தான் இருந்தது.
“நமக்கு பிடிச்ச ஒன்னை கேட்டு கடவுள் கொடுத்தா அந்த கடவுள் மேல நமக்கு ஒரு பக்தி வரும். அதை நம்புவோம். இன்னும் ஈடுபாட்டோட கும்பிடுவோம்.
என் மாப்ளய கும்பிட்டா கூட பத்தாது. மித்து எனக்கு அந்த கடவுளுக்கும் மேல நவி! ஏன்னா கேட்காமலே எனக்கு அவன் நட்பை தந்தான், அதே போல நீயும் எனக்கு அவன் மூலமா தான் கெடச்ச. அப்படிப்பட்டவன் மேல உன்னை விட பாசம் இருக்குனு சொல்லுறது நியாயம் தானே?”
இவ்வாறு நேற்று விஷ்வா கூறியதையும், தற்போது அண்ணன் பேசியதையும் எண்ணி பிரம்மித்தாள் வைஷ்ணவி.
பொதுவாக திருமணம் என்பது நட்பில் இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. சில திருமணங்கள் நட்பை முறித்து விடச் செய்கிறது. என்ன தான் இல்லை என்றாலும் முன்பு இருப்பது போல் திருமணத்தின் பின் நட்பைத் தொடர முடிவதில்லை. அப்போது நண்பர்களுக்கிடையில் விரிசல் ஏற்படும் என்பதுவே யதார்த்தம்!
ஆனால் இந்த விஷ்வ மித்ரனின் நட்பு அதனையும் கூட தாண்டி நின்றது. துணைவிகள் மீது அன்பைச் சொரிந்தனர் தான். அதே போல் எள்ளளவும் குறையாது தொடர்கிறதே அவர்களது நட்பும் என்று வைஷு நினைத்ததையே அக்ஷராவும் தான் நினைத்தாள்.
……………….
“பூ குட்டி…!!” என்று அழைத்துக் கொண்டு வந்த ரோஹன், “மியாவ் மியாவ் பூனைக்குட்டி” என்று கிண்டலடித்த மகனைக் கண்டு முறைத்தான்.
“கொஞ்ச நேரம் கூட என் பொண்டாட்டியை கொஞ்ச விடுறியா? ஆரம்பிச்ச உடனே சட்டுனு ஆப் பண்ணிடுற” தன் நான்கு வயது மகனைத் தூக்கிக் கொண்டான்.
“இறக்கி விடு ரோஹி அவனை. நீ இப்படி பழக்கி வெச்சி அவன் எனக்கும் தூக்க சொல்லுறான். இப்போ அவன் பெரிசு டா” மகளைத் தூங்க வைத்து விட்டு வந்தாள் பூர்ணி.
“ப்ரதி கண்ணா! அம்மாவை தூக்க சொல்ல கூடாது. என்னால முடியும் அம்மாவுக்கு கஷ்டம் தானே?” மகனின் தாடை பிடித்துக் கொஞ்சினான்.
“அப்போ அவங்க எதுக்கு கீர்த்துவை மட்டும் தூக்குறாங்க” முகத்தை உப்பிக் கொண்டு கேட்டான் அவன்.
“அவ வயசுல உன்னையும் தான் தூக்குனாங்க டா. இப்போ நீ நர்சரி போக போற. அங்கே போனா பெரிய பிள்ளை தானே? அதனால அப்படி இருக்கனும்” ரோஹன் மகனுக்கு சொல்லிக் கொடுக்க தலையாட்டி கேட்டுக் கொண்டான்.
“நான் சொன்னா எதையாச்சும் கேட்குறானா இவன்? நீ சொன்னா மட்டும் தலையாட்டி பொம்மை மாதிரி எட்டுபக்கமும் தலையை உருட்டி வைக்கிறான். அப்பா பிள்ளை. இரு பார்த்துக்குறேன் உன்னை” முறைத்துப் பார்த்தாள் அவள்.
“எனக்கு தூக்கமா வருதும்மா” பூர்ணியின் தோளில் சாய்ந்தான் ப்ரதீப்.
“இதுக்கு மட்டும் அம்மாவா?! ஓஹ் நான் பஞ்சு மெத்தை மாதிரி இருக்கேன்னு சொன்னல்ல நீ” அவனை அழைத்துச் சென்று தூங்க வைத்து விட்டு வந்தாள்.
“பூ பசிக்குது டி” பாவமாகப் பார்த்தவனைக் கண்டு, “இப்போவே பன்னிரெண்டு மணி ஆக போகுது. சாப்பிடாம என்ன செய்ற? லேட் ஆகுதுனா நேரத்தோட ஏதாச்சும் வாங்கி சாப்பிட்டு வர சொன்னேனே” படபடவென வெடித்தாள் அவள்.
“டைம் கிடைக்கல. கொஞ்சம் வேலை கூட” என்றான் மெதுவாக.
“ஏன் அந்த பீர்க்கங்கா மேனேஜருக்கு உன்னைத் தவிர வேற ஆளே இல்லையா? இப்படி வேலை தந்து சாவடிக்குறான். உடம்பை கெடுத்துட்டு என்ன வேலை வேலைனு” திட்டிக் கொண்டு உள்ளே சென்று மீதமிருப்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவிருந்த மாவை எடுத்து அவசரமாக தோசை ஊற்றிக் கொண்டு வந்தாள்.
மேசையில் பீங்கானை டக்கென்று வைக்க, “இன்னும் எரியுறாளே. என்ன பண்ணி சமாளிக்கிறது?” என யோசித்தபடி அவளைப் பாவமாக ஏறிட்டான்.
சட்டென்று அருகில் அமர்ந்தவள் தோசையை அவனுக்கு ஊட்டத் துவங்கினாள்.
“அம்மா வந்திருந்தாங்களா பூரி?” என அவன் விசாரிக்க,
“ஆமா! துர்காவும் திருவும் கூட வந்தாங்க. இதுங்களுக்கு நல்ல கொண்டாட்டம் அவங்களை பார்த்ததும்” என புன்னகையூடு சொன்னாள்.
பழைய கோபங்கள் மனக்கசப்புகள் நீங்கி மாமியாருடன் பேச ஆரம்பித்திருந்தாள் பூர்ணி. தன் புது பேரப்பிள்ளைகளைக் காண அடிக்கடி வருவார். துர்கா திரு என்பவனை திருமணம் செய்து ஒரு குழந்தையும் இருக்கிறது.
வனிதா கணவனோடு சேர்ந்து வெளியூர் சென்று விட்டாள். தற்போது அங்கு வாழ்கிறாள். பூர்ணியும் அவளும் அவ்வளவு கதைக்கா விட்டாலும் பிள்ளைகளுக்கும் வனிதாவுக்கும் இடையில் இணக்கமான உறவொன்று இருந்தது.
சாப்பிட்டு முடித்தவன் வந்து “தூங்கலாமா” என்று கேட்க,
“குட் நைட் போய் தூங்கு” வெடுக்கென வந்தது பதில்.
“என்ன கோவமா?”
“ஆமா அதுல உனக்கு என்ன? உனக்கு தூக்கம் தானே பெருசு. போய் தூங்கிக்க”
“அப்போ நீ?” அவளைப் பார்த்தான்.
“நான் என்ன வேணா பண்ணிக்குறேன். நீ அதை பற்றி எல்லாம் யோசிக்காத” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூர்ணி.
“தூக்கத்தை விட எனக்கு நீ தான்டி முக்கியம். தூங்கலாமானு கேட்டேன் உனக்கு தூக்கமா இருக்கும்னு நெனச்சி. இல்லனா சொல்லு அப்பறம் தூங்கலாமேனு கேட்டுக்குவேன். அதை விட்டுட்டு பட்டாசு மாதிரி வெடிக்கிற. நான் பாவம் இல்லையா?” அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான் ரோஹன்.
” நான் தான் பாவம். உனக்கு எப்போ பாரு வேலை. என் கூட சரியா பேசுறதில்ல வீட்ட வரதுக்கு ஒரு டைம் இல்லை. லேட்டா வர. உனக்கு வேலை தான். அது நல்லா புரியுது. ஆனால் என்னால அதை ஏத்துக்க முடியல.
இவ்ளோ நாள் நல்லா பேசி என் கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இப்போ வர்க் ப்ரஷரால திடீர்னு நீ இப்படி இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு” அவள் கண்களில் ஏக்கம் தெறித்தது.
“என் வேலை அப்படி இருக்கு. கொஞ்சம் பிரச்சினை அது இதுனு முடியல டி. அதுக்குனு உன்னை மறந்துட்டதா அர்த்தம் இல்லை டி. ஆனாலும் உன்னை தவிக்க விட்டுட்டேன். உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல” அவளை தவிக்க வைத்ததற்கு வருந்தினான் அவன்.
“ப்ச் விடு ரோஹி! அப்படிலாம் இல்லை உன்னை மிஸ் பண்ணுற மாதிரி இருந்துச்சுனு சொன்னேன். நீ ஒன்னும் பீல் பண்ணாத” அவன் வருந்துவது பிடிக்காமல் சட்டென கடினப்பட்டு புன்னகைத்தாள்.
தனக்காக யோசிக்கும் மனைவி மீது அன்பும் நேசமும் இன்னமும் அதிகரிக்க, “இனி உன்னை பழையபடி பார்த்துக்க ட்ரை பண்ணுறேன். சாரி பூ” என அவள் கைகளைப் பற்றிப் பிடித்து முத்தம் பதித்தான் கணவன்.
நட்பு தொடரும்……!!
ஷம்லா பஸ்லி