அவளோ அழுது முடித்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.
“ஹாஸ்பிடல் போகலாம் தீரா ப்ளீஸ்.”
“ப்ச் வேணாம்னு சொன்னா கேளு.” என உறுமியவன் எழுந்து செல்ல அவனைப் பின்னால் சென்று அணைத்துக் கொண்டவள் கண்ணீரோடு அவனுடைய முதுகில் முகம் புதைத்தாள்.
“எனக்காக வாங்க தீரா. நீங்க என்னைக் காதலிக்கிறது உண்மையா இருந்தா வாங்க.” என அழுகையோடு கூற, அவளுடைய கண்ணீரை காண முடியாது விழிகளை மூடியவன் அவளை இறுக அணைத்தான்.
“சரிடி வர்றேன்.” என பெருமூச்சோடு கூறினான் அவன்.
“தேங்க்ஸ்பா.” என்றவளின் உதடுகள் அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது.
சற்று நேரத்தில் இரவு நெருங்கி விட, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு படுத்துக் கொண்டனர்.
இருவருடைய மனதையும் வேதனை ஆட்கொண்டு வருத்தியது. அவனோ அவளுடைய மனம் நோகக் கூடாது என்றும் அவள் அவனுடைய மனதை நோகடிக்கக் கூடாது என்றும் தம் வேதனையை தனக்குள்ளேயே பூட்டி வைத்து இயல்பாக இருப்பதைப் போல நடிக்க ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் காலை விடிந்ததும் தீரனை எழுப்பியவள் மருத்துவமனை செல்லத் தயாராகினாள்.
இருக்கும் சொற்ப நாட்களை சிகிச்சை மூலம் அதிகரித்து அவனுடன் வாழ்ந்துவிட வேண்டுமென அவளுடைய மனம் ஏங்கியது.
சற்று நேரத்தில் இருவரும் தயாராகி அந்த மருத்துவமனைக்குச் செல்லத் தொடங்கினர்.
மருத்துவமனையை அடைந்ததும் அவளுடைய மனமோ இன்னும் இன்னும் படபடக்கத் தொடங்கியது.
வைத்தியர் என்ன கூறப் போகிறாரோ என எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தவளின் முகமோ சட்டென கூம்பிய தாமரை போல மாறிப் போக, அவளுடைய உணர்வுகளை புரிந்து கொண்டவன் அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“இதுக்குத்தான் இதெல்லாம் வேணாம்னு சொன்னேன் அம்மு. நீ இப்படி கஷ்டப்படுறதைப் பார்க்க எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. நீ கிளம்பு வீட்டுக்குப் போகலாம்.” என்றவனின் கரத்தை பிடித்துக் கொண்டவள் அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்தாள்.
அவளுடைய விழி நீர் அவளுடைய மார்பை நனைக்க, அவளுடைய காதலையும் தனக்கான கண்ணீரையும் கண்டு அவனுக்கோ உள்ளம் உருகியது.
“கடவுள் ஏன் நம்ம வாழ்க்கைல இப்படி பண்ணிட்டார்.? ஏன் தீரா.?” என்றவளை இறுக அணைத்தான் அவன்.
அவளை எப்படி சமாதானப் படுத்துவது என அவனுக்குப் புரியவே இல்லை.
மருத்துவமனையில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு நின்றவர்களின் தோளில் தட்டினார் வைத்தியர்.
“ஹாய் மிஸ்டர் ருத்ர தீரன்.” என்றவர் அடுத்த கணம் அவனை திட்டாத குறையாக பேசத் தொடங்கினார்.
“நீங்க ஃபேமஸ் ஆக்டர்தான். பிஸியா இருப்பீங்கதான் அதுக்காக எங்க காலைக் கூடவா அட்டன்ட் பண்ண மாட்டீங்க.? உங்களுக்கு எத்தனை தடவை ட்ரை பண்ணிட்டோம். நீங்க ஒரு காலைக் கூட எடுக்கலை. சரின்னு உங்களைப் பார்க்க நேர்ல ஆளை அனுப்பினா உங்க வாட்ச்மேன் அவரை உள்ளே கூட விடலை.?” என்க,
“சாரி டாக்டர்.” என்றான் அவன்.
“சரி உங்க ரிப்போர்ட் கொடுத்து விட்டோம். பார்த்தீங்களா.?” எனக் கேட்டார் அவர்.
அப்போதுதான் சில நாட்களுக்கு முன்பு மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்று தன்னைத் தேடி வந்ததும் அதைத் தான் திறந்து கூட பார்க்காததும் புரிய, தன் பின்னந் தலையில் அழுத்தமாக வருடினான் ருத்ர தீரன்.
“ஆல்ரெடி நீங்க அன்னைக்குக் கொடுத்த ரிப்போர்ட் என்கிட்டதான் இருக்கு. அப்புறம் எதுக்கு இன்னொரு ரிப்போர்ட் கொடுத்து விட்டீங்க.?” எனக் கேட்டான் அவன்.
“ஓ மை காட். அப்போ உங்களுக்கு என்ன நடந்திச்சுன்னே இன்னும் தெரியாதா.? அன்னைக்கு உங்க ரிப்போர்ட் மாறிடிச்சு மிஸ்டர் ருத்ரதீரன். உங்க நேம்ல இன்னொரு பேஷன்ட் அட்மிட் ஆகியிருந்தாரு. அவருக்கும் உங்க ஏஜ்தான். சோ ரிப்போர்ட் மாறிடுச்சு. அவருக்குதான் தலைல கட்டி, இன்னைக்கு ஆப்ரேஷன் ரெடி பண்ணிட்டோம். உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. இது அந்த பேஷன்டோட ரிப்போர்ட்டா? அதை என்கிட்ட கொடுங்க.” என்றவாறு அதனை வாங்கிய வைத்தியர் சென்றுவிட தீரனும் விழியும் திகைத்துப் போய் நின்றனர்.
அடுத்த கணம் ஆனந்தக் கதறலோடு அவன் மீது பாய்ந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். தானும் அளவிட முடியாத நிம்மதியோடு விழிகள் மூடி அவளுடைய அணைப்புக்குள் நெகிழ்ந்து போய் நின்றான்.
தன் மார்பில் சாய்ந்து விசும்பியவாறு நின்றவளின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவன் அவளை அழைத்து வந்து தன்னுடைய காரினுள் ஏறிக் கொண்டான்.
அடுத்த கணம் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட தீரனுக்கோ தான் இழந்து விட்டதாக நினைத்த அத்தனையும் மீண்டும் கிடைத்து விட, சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியவன் அவளுடைய எலும்புகள் உடையும் வண்ணம் இறுக அணைத்தான்.
அவளோ இறுகிப் போயிருந்தவள் சட்டென அவனைத் தள்ளி விட்டு அவனுடைய கன்னத்தில் அறைந்து விட, அவனோ அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.
“ஹேய் ஏன்டி அடிக்கிற.?”
“அடிக்காம உங்களை கொஞ்ச சொல்றீங்களா.? எவ்ளோ பெரிய விஷயம் இது.? இதை கன்ஃபோர்ம் பண்ணிக்காம ஏன் வந்தீங்க.? அப்பவே ஹாஸ்பிடல் போயிருந்தா இந்த உண்மை தெரிஞ்சிருக்கும்ல. நீங்களும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தி…
நான் எப்படி துடிச்சுப் போனேன் தெரியுமா.? நானும் உங்க கூட வாழ்ந்துட்டு உங்ககூடவே ஒன்னா சாகலாம்னு முடிவும் எடுத்தேன்.” என்றவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.
“,ஹி… ஹி… சரி சரி விடுடி. அன்னைக்கு ஏதோ ஷாக்ல அப்படியே வந்துட்டேன். எனக்கென்ன டி தெரியும்? இது ஹாஸ்பிட்டலோட மிஸ்டேக்தானே.” என்றான் அவன்.
“இது சின்ன விஷயம் இல்ல தீரா. இதால நாம அனுபவிச்ச வலி கொஞ்சமா.? நான் உள்ளுக்குள்ள ஒவ்வொரு நிமிஷமும் செத்துகிட்டு இருந்தேன். ரிப்போர்ட் மாறிடிச்சுன்னு அவ்ளோ சிம்பிளா சொல்றாங்க இடியட்ஸ். கேர்லஸ்ஸா இருக்கிறது ரொம்ப தப்பு தீரா. அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுங்க..” என சீறிக் கொண்டிருந்தவளின் கன்னங்களை பற்றிக் கொண்டவன்,
“ஹேய் அம்மு கல்யாணம் பண்ணிக்கலாமா.?’ எனக் கேட்க, விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் கண்களில் வழிந்த நீரோடு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.? நம்ம வாழ்க்கை நமக்கு மறுபடியும் கிடைச்சிருச்சு.” என்றவள் அவனுடைய காதல் தாங்கி வந்த பார்வையை கண்டு சிலிர்த்தாள்.
அவனுக்கு சற்றும் குறையாத காதல் பார்வையை அவளும் வழங்கியவள், “பண்ணிக்கலாமே.” என திருமணத்திற்கு சம்மதம் சொன்ன அடுத்த நொடி அவளுடைய இதழ்களை கவ்விக் கொண்டான் மன்னவன்.
எபிலாக்
மாலைகள் தோரணங்கள் என்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த பிரம்மாண்டமான மண்டபம். மண்டபம் முழுவதும் திரையுலகமே திரண்டு இருந்த அற்புத நேரம் அது.
மண்டபத்தை சுற்றி காவலுக்காக பல அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருக்க அதற்கு வெளியே மக்களின் கூட்டமோ அலை மோதியது.
தலைசிறந்த அனைத்து நடிக, நடிகைகள், தயாரிப்பாளர்கள் எனவும் அரசியலில் முக்கிய பதவி வகிக்கும் பலரும் வந்திருக்க அவர்களை பார்க்க சேர்ந்த கூட்டமே அதுவாகும்.
அலங்கரித்து வைக்கப்பட்ட மேடையில் இளம் ஜோடி ஒன்று அமர்ந்திருக்க மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த மணமக்கள் வேறு யாரும் இல்லை நம் ருத்ரதீரன் மற்றும் மைவிழியேதான்.
இயற்கையாகவே அழகின் உருவான நம் நாயகி மணமகள் கோலத்தில் கோவிலில் வீற்றிருக்கும் அம்மனைப் போல பேரழகாக இருந்தாள்.
தீரனோ வேட்டி சட்டை அணிந்து அவளின் அருகே வீற்றிருக்க இருவருக்கும் பின்னால் மைவிழியும் பாட்டியும் தந்தையும் நின்றார்கள்.
மைவிழியின் முகமோ வெட்கத்தில் பாதி மகிழ்ச்சியில் மீதியென ஜொலித்துக் கொண்டிருந்தது.
திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்கள் இருவரையும் பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.
தன் காதல் நாயகியின் கழுத்தில் ஏறவிருக்கும் தாலியானது அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று புரோகிதரின் கையில் கிடைக்க மந்திர உச்சாடனங்களோடும் நாதஸ்வர, மேள தாளங்களோடு மங்கையின் கழுத்தில் தீரனின் கையினால் தாலி ஏறியது.
தலையை குனிந்தபடி இருந்த மைவிழியின் நெஞ்சில் தொங்கிய தாலியை பார்த்தவுடன் அவளை அறியாமல் ஆனந்த கண்ணீர் பொங்க கண்ணீர் கூட அவளது தாலிக்கு தீர்த்தமாக மாறியது.
எத்தனை இடர்களைத் தாண்டி வந்து இன்று தன் ஆசைக்காதலன் தனக்கான ஓர் நிரந்தர இடத்தை தந்துவிட்டான் எனும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே அது.
மைவிழியின் கழுத்தில் தாலியைக் கட்டியபின் குனிந்திருந்தவளின் காதின் அருகே சென்று,
“அம்மு ஆர் யூ ஹாப்பி…” என தீரன் கேட்க,
ஒற்றை விரலால் தன்னுடைய கண்ணீரைத் துடைத்த மைவிழியோ,
“நாங்க ரெண்டு பேரும் ரொம்பவே சந்தோஷமா இருக்கோம்” என கூறினாள்.
“ரெண்டு பேருமா.? யார் அம்மு..?” எனப் புரியாமல் கேட்டான் அவன்.
மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்த மைவிழி,
“நானும் நம்மளோட பாப்பாவும்” என்றவாறு அவளது வயிற்றில் கை வைக்க,
“அம்முஉஉஉ…., வாவ்…., ஓவ்…” என மணமேடையில் சத்தமிட்டவன் சுற்றம் மறந்து ஆனந்தக் கூச்சலோடு அவளை இறுக அணைத்து முத்தம் இட்டிருந்தான்.
அங்கிருப்பவர்களுக்கு தீரன் எதற்காக இப்படி செய்கின்றான் என தெரியாமல் இருக்க துள்ளி குதித்த திரனின் கரத்தை வெட்கத்தோடு பிடித்து அமர்த்திய மைவிழி,
“அச்சோ நம்மளை சுத்தி நிறைய பேர் இருக்காங்க.., அமைதியா இருங்க” என அவள் முகம் சிவக்கக் கூற, சட்டென சத்தமாக சிரித்தான் அவன்.
அங்கிருப்பவர்களும் அவனோடு இணைந்து சிரிக்க அங்கிருந்த அனைத்து கேமாராக்களிலும் பதிந்த படங்களோ மறு நாள் காலை கல்யாண மாப்பிள்ளையின் குதூகலம் என பிரசித்தியாகத் தயாராக இருந்தது.
இனி அவர்களது வாழ்வெனும் நதியோ சந்தோஷ கடலில் இனிதாக கலக்கத் தொடங்கியது.
முற்றும்.