“ஐயோ… தீப்…. அவன் வாறான்….” அலறிக் கொண்டு ஓடி வந்தான் ஆவன்யன்… அவன் அலறலே சொல்லியது யார் அவன் என்று…. அந்த இடத்தில் இருந்தவர்களில் முகம் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டியது….. ஒருவனின் முகம் அலுப்பைக் காட்ட ஒருத்தியின் முகம் ஆச்சர்யத்தைக் காட்ட அவளின் முகம் மட்டும் சாதாரணமாகத்தான் இருந்தது….. அதை அவள் எதிர்பார்த்தது போல் இருந்தது அந்த முக பாவனை….
“அதுக்குள்ளவா…. இப்பதானே இரண்டு மாசம் ஆச்சு…..” தீப் என்று அழைக்கப்பட்ட தீப்தி வாயைப் பிளக்க அதே கேள்விதான் அங்கிருந்த இன்னொருவன் முகத்திலும் இருந்தது…..
“அதுதான்… வயிறு பத்தி எரியுது….” ஆவன்யன் வெளிப்படையாகவே பொறாமையைக் காட்ட சிரித்து விட்டான் மற்றவன்…. யுகன்தேவ்…. ஆவன்யனின் கடுப்பு நன்றாகவே புரிந்தது அவனுக்கு…
“சரி விடு ஆவ்….”தீப்தி சமாதானமாக சொல்ல நடந்து கொண்டிருந்த பேச்சை விடுத்து விட்டு….
“ஆவ்னு சொல்லாதேன்னு எத்தனவாட்டி சொல்லுறேன்….” வெகு கடுப்பாய் கத்தினான்…
அவளோ அவனை ஆயாசமாக பார்த்து வைத்தவள்…
“நீ மட்டும் என்ன தீப்ங்குற…. நான் கேட்டேனா…” உதட்டை சுழித்து விட்டு…
“எந்த நேரத்துல இந்த கம்பெனி ஆரம்பிச்சோமோ…. இவனுக்கு மட்டும் நல்லா மாமா வேல பாக்குறோம்… இருந்தாலும் என்ன பண்ண.. ரெகுலர் கஷ்டமர்….” பெருமூச்சுடன் அவள் சொல்ல சரியாய் அந்த விசாலமான கட்டிடத்துக்குள் நுழைந்தான் அவன்….
வெளியே Friends and co என பலகை மாட்டப்பட்டிருந்தது… அதைப் பார்த்தவனுக்கு எப்போதும் போல் சிறிதாய் ஒரு புன்னகை…
எதுவும் யோசிக்காமல் கம்பெனியின் பெயரை பட்டென வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொள்வான்… முதல் முதலாய் அந்த இடத்தில் காலடி வைத்ததிலிருந்து இன்னும் தொடர்பு அகலவில்லை அவனுக்கு…
உள்ளே அவன் நுழைய அவரவர் அவரவர் வேலையைப் பார்ப்பது போல் நடித்தாலும் கண்கள் என்னவோ அவனைத்தான் தொட்டு தொட்டு மீண்டது…
அதில் ஆவன்யன் மட்டும் கண்களில் வெளிப்படையாகவே கடுப்பை காண்பித்தான்….
“ஹாய் காய்ஸ் எப்டி இருக்கீங்க…” சிரிப்புடன் கேட்டுக் கொண்டே அவன் உள்ளே வர…
“இதுவரைக்கும் நல்லாத்தான் இருந்தோம்… அதுதான் நீங்க வந்துட்டீங்களே கடுப்ப கிளப்ப….” முணுமுணுத்தவன் காகிதத்தில் ஏதோ வரைவது போல் பாவனை காட்ட அவன் முணுமுணுப்பு இவன் காதில் தெளிவாகவே கேட்டது… அதற்கும் அவனிடத்தில் புன்னகை மட்டுமே…
“உறைக்குதா பாரு…” மீண்டும் முணுமுணுத்தவனின் பேச்சில் இன்னும் சிரித்தவன் நேராய் அவளின் முன்னால் அமர்ந்தான்….
அவன் அமர்ந்தததும் கணணியில் இருந்த பார்வையை திருப்பி அவனை சலிப்போடு பார்த்து வைத்தாள்…
அவனும் நான் என்ன செய்ய என்பது போல் தோளைக் குலுக்க…
“இது உங்களுக்கே நியாயமா தரணி….” பெருமூச்சுடன் அவள் கேட்க பாவமாய் பார்த்தான் அவளை….
“நான் என்ன பண்ணட்டும்… அவன் நீங்கதான் ராசின்னு நினைக்குறான்… ” அவனும் தன்னால் எதுவும் முடியவில்லை என்பதைப் போல் சொல்ல அவளின் கண்டனப் பார்வையில் கெஞ்சலாய் பார்த்தான்…..
“தீப்தி… மிஸ்டர் வைஷாகானோட பைல்ல கொண்டு வா….” அவளின் கட்டளையான பேச்சில் அந்த ட்ரெக்கில் இருந்த அத்தனை பைல்களில் ஒரு நொடியில் அவள் கேட்ட பைல்லை எடுத்து அவள் முன்னால் வைத்தாள்..
அத்தனை பழக்கம் அந்த பைலோடு…
“இப்ப வரலாற எல்லாம் தோண்டனுமா… ” இளிப்புடன் அவன் சொல்ல அழுத்தமாய் ஒரு பார்வையை பதித்தவள் அந்த பைலைத் திறந்தாள்…
அதில் அழகாய் புன்னகைத்துக் கொண்டு புகைப்படமாக இருந்தான் வைஷாகன் ரமணா…. அவ்வளவு அழகான விரிந்த புன்னகை அவனிடத்தில்…
“இந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணி ஒன்பது வருஷம்….. எங்களுக்கு இவரோட ப்ரொஜக்ட்….” அவள் முடிக்கும் முன்…
“ஆறாவது…..” யுகன் அலுப்பாய் சொல்ல..
“ம்ம்… ஆறாவது…. கம்பெனி ஸ்டார்ட் ஆகி அடுத்த வருஷம் நீங்க எங்ககிட்ட வந்தீங்க… அப்ப உங்க ப்ரென்டுக்கு இருபது வயசு… இப்ப இருபத்தெட்டு வயசு…இடையில எட்டு வருஷம்…. இந்த எட்டு வருஷத்துல எத்தன லவ்….” கேட்கும் போதே அவள் பல்லைக் கடிக்க…
“ஆறு… இதோட ஏழு…இன்னும் தெரியாம எத்தனையோ….. ” ஆதங்கமாய் ஆவன்யன் சொல்ல தரணீஷையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்….
அவனோ அப்பாவி போல் முகத்தை வைத்திருக்க கடுப்புத்தான் ஆனது….
பிடித்து ஆரம்பித்த வேலை. பாதி இவனாலேயே வெறுத்து போனது பாவம்….. நண்பர்கள் நால்வரும் சேர்ந்து புதிதாய் ஏதும் ஒன்று செய்ய நினைத்த போது ஆரம்பித்ததுதான் இந்த கம்பெனி…
யாருக்காவது சர்ப்பரைஸ் செய்ய நினைத்தாவே ஞாபகம் வருவது இந்த ப்ரென்ட்ஸ் என் கோ தான்… அவ்வளவு பிரபலம்…. சர்ப்ரைஸ் டெகரேஷனிலிருந்து, பாடல் ஆடல், போட்டோஸ் என மொத்ததையும் செய்து கொடுப்பார்கள்…
ஒரு பெண்ணை இம்ப்ரெஸ் செய்வது என்றாலே நிறைய பையன்கள் அவர்களிடம் ஓடி வருவது உண்டு….
ப்ரோபஸ் செய்வதென்றால் சொல்லவே வேண்டாம்…
அப்படித்தான் வைஷாகனுக்கும் இது ராசியான இடமாகி போனது….
“நீங்க ஏற்பாடு பண்ணுனா எந்த பொண்ணுமே நோ சொல்றது இல்லன்னு பீல் பண்றான்….” தயங்கியவாறே தரணி சொல்ல..
“இது வேறயா…” தீப்தி சிரித்தே விட்டாள்..
“உங்க ப்ரெண்டுக்குத்தான் அறிவில்லன்னா உங்களுக்கு அறிவு எங்க போறது…” தாங்க மாட்டாமல் கத்தியே விட்டாள் மிராயா…. அந்த கம்பெனிக்கு மூல கர்த்தா… அவளின் தொடக்கம்தான் எல்லாமே…. மொத்த கூட்டமும் விளையாட்டாய் இருந்தாலும் நால்வரையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பவள்….
“ஏன் டென்ஷனாகுறீங்க… உங்க வேலையே இதுதானே….” பாவமாய் அவன் சொல்லி வைக்க..
“உங்க ப்ரெண்டு வேலையும் இதுதானே… ப்ரோபஸ் பண்றதும் கழட்டி விடுறதும் அடுத்த பொண்ண பாக்குறதும்….” யுகன் கலாய்க்க மிராவின் திரும்பிய முறைப்பில் வாயை மூடி விட்டான்…
“நீங்க சொல்றது சரிதான் தரணி… இதுதான் எங்க வேல… ஆனா எப்பவும் பொறுத்துட்டு இருக்க முடியாது… இதுவே கடைசியா இருக்கட்டும்... இந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணாரோ… கழட்டி விடுறாரோ… அது உங்க ப்ராப்ளம்… ஆனா இனிமே இங்க வந்து அடுத்த ப்ளானுக்கு நிக்காதீங்க…. ” ஒரு முடிவாய் அவள் சொல்ல சந்தோஷமாய் சரியெற தலையசைத்தவனின் மனமோ வேறு பேசியது…
“அதுக்கு அவன் செட்டல் ஆகனுமே….” மனது குறுகுறுக்க அதை அடக்கியவன் பாக்கெட்டிலிருந்த கவரை எடுத்து அவள் முன்னால் வைத்தான்…
“இதுதான் பொண்ணு…” மிரா அதைக் கையில் எடுத்து பிரிக்கவே வேறு வேலைகளில் இருப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டிருந்தவர்கள் மூவரும் அவசரமாய் ஓடி வந்து அவள் அருகில் நின்று புகைப்படத்தை எட்டி பார்த்தனர்..
அவ்வளவு ஆர்வம் அவர்களின் முகத்தில்….
“என்ன…” கவரிலிருந்து புகைப்படத்தையே எடுக்காமல் அவள் கேட்ட கேள்வியில் தரணிதான் சிரித்தான்…
“அவங்களும் பாக்கட்டும் இதுல என்ன இருக்கு….” தரணி சொல்ல அவர்களும் அப்படியே நிற்க பெருமூச்சுடன் புகைப்படத்தை வெளியே எடுத்தாள்…
அழகான பெண்ணவள் ஜீன்ஸ் டீசர்ட்டுடன் ஸ்டைலாய் நின்றிருந்தாள்..
அவர்களின் எழுதப்படாத விதி… புகைப்படம்தான் கையில் தர வேண்டும் என்பது…
“இவனுக்குன்னு எங்கதான் சிக்குறாங்க… ” யுகனின் கேள்வியில்…
“மச்சான்…. உன் பொண்டாட்டிகிட்ட சொல்லட்டுமா….” ஆவன்யன் கண்ணடிக்க..
“நீ வேற ஏன்டா….” பல்லைக் கடித்தான் மற்றவன்…
“நமக்கெல்லாம் வர்றாளுகளா பாரு…. நல்லவனா இருந்தா புடிக்க மாட்டேங்குது…. இப்டி டிமிக்கி கொடுக்குறவன்கிட்டேயே போறாளுக…” அவன் ஏக்கம் அவனுக்கு…
“சைட்டு வாக்குல நீ நல்லவனா… ஆளப் பாரு…”தீப்தி ஆவன்யன் தலையில் தட்ட அவனும் வாயை மூடிக் கொண்டான்…
“எந்த இடம்….” மிரா வேலையில் கவனமாக…
“அதே பீச்….” பட்டென சொன்னாள் தீப்…
இதுவரை எல்லாம் அறிந்ததுதானே….
அதற்கு ஏற்றாற் போல் தரணியும் தலையசைத்து…
“மூனு நாள்ல… உங்களுக்கு ஓகேதானே….”செய் சொல்லி உத்தரவிடாமல் அவன் உதவி போல் கேட்க..
“ம்ம்.. ஓகே…. “
“சரி காய்ஸ்… போய்ட்டு வாறேன்…” அவன் எழுந்து கொள்ள…
“தெய்வமே…” ஆவன்யன் கத்த…
“வரவே வேணாம்..” நால்வரும் ஒரே நேரத்தில் கை கூப்பி கோராஸாய் சொன்னர்…. மீண்டும் வருக என்று இப்படித்தான் கோராஸாக சொல்லி அனுப்புவர்கன் இவனைக் கண்டால் மட்டும் டயலாக்கை மாற்றி விடுவார்கள்…
“பன்னி காய்ஸ்…..” சிரித்துக் கொண்டே வெளியே சென்று விட்டான்….
வெளியே வந்ததும் அவன் அழைத்தது நண்பனுக்குத்தான்….
“ஓகேவாடா…”எடுத்ததும் மறுமுனையில் உற்சாகமாய் கேட்டது அவனின் குரல்….
“ம்ம்… ஓகேடா… ஆனா வைஷா திரும்பவும் யோசிச்சுக்கோ…. ” நண்பனாய் அறிவுரை சொல்ல அடுத்த பக்கத்தில் ஆழ்ந்த அமைதி…. அவனுக்கும் அவன் சொல்ல வருவது புரிந்ததுதான்… ஆனால் எதுவும் பேச முடியவில்லை… அவன் அமைதியில் கொஞ்சமே கவலையானவன்…
“சரிடா… உனக்கு புடிச்சிருந்தா செய்…. நான் எதுவும் சொல்லல…” சிறு சிரிப்போடு நின்றவன்..
“ஆனா ப்ரோபஸ் பண்றப்ப பின்னால வர பிரச்சினைய சொல்லிடு….. ” அவன் செய்வான் என தெரிந்தாலும் இவன் வலியுறுத்தினான்….
“என்ன உனக்கு தெரியாதா…. கண்டிப்பா சொல்லுவேன்….” அவன் சொல்ல சிரித்தவனுக்கோ அடி மனதில் நண்பனைப் பற்றிய கவலை அரித்துக் கொண்டே இருந்தது….
ஆனால் மற்றவனோ எந்தவித கவலையும் இன்றி காதலை சொல்லப் போகும் பரவசத்தில் இருந்தான்….
அடுத்த மூன்று நாட்களின் பின்…
அந்த கடலோரத்தில்… மாலை பொழுதில்….
அந்த பெண்ணின் முன் நடனமாடிக் கொண்டிருந்தது ஒரு குழு….
“ஓகே…யுகன்… ப்ளாஸ்ட்…” அவள் காதின் வழியே உத்தரவு கொடுக்க வானத்தில் கேளிக்கைகள் வெடிக்க மொத்த கூட்டமுமே அதைத்தான் வேடிக்கை பார்த்தது….
அந்த பெண்ணோ முகத்தில் கையை வைத்து புன்னகையும் கண்ணீருமாக ஆச்சர்யத்தில் நின்றிருந்தாள்….
“ப்ளவர்ஸ்…” தூரத்தில் இருந்து உத்தரவு கொடுக்க கொடுக்க ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது…
இறுதியாக…
“ரைட்… இப்ப அவர வர சொல்லு…”அவள் சொல்ல கூட்டத்திலிருந்து அவன் வர நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் இரு பக்கமாக நழுவ கையில் பூவுடன் ஸ்டைலாய் நடந்து வந்தான்… வைஷாகன்….
அந்த பெண்ணின் முகத்தில் அவனைக் கண்டதும் காதல் பொங்கி வழிய இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டாள் மிரா…. இன்னும் எத்தனை நாளைக்கோ என்று….
அவனைப் பார்த்தாள்… அவன் முகத்தில் கொஞ்சம் கூட பொய்யில்லை.. நடித்து ஏமாற்றும் தன்மையில்லை. அவ்வளவு உண்மையும் குழந்தை தனமும்… ஆனால் ஏன் இப்படி என்ற எண்ணம் வந்தாலும் அதை பெரிதாய் யோசிக்கவில்லை…
விட்டுவிட்டாள்…
ஒவ்வொரு முறையும் தப்புக்கு துணை போகிறோமோ என்று குற்றவுணர்ச்சியில் இருக்க அவன் முகத்தை கண்டதும் அது மறைந்து விடும்… அவன் நேசம் உண்மையென்றே தோன்ற அவள் சிறு கவலையும் இல்லாமல் சென்று விடும்…
அதனாலேயே அடுத்தடுத்து அவன் வந்து நின்றும் செய்து கொடுத்தாள்….
“ஹே..ஹே…”என்று கைதட்டலின் ஆராவரத்திலும்…
“சக்ஸஸ்…” புளூடுத்தின் வழியாக கேட்ட குரலிலும்தான் சிந்தனை கலைந்து அந்த இடத்தைப் பார்த்தாள்….
அந்த பெண் அவனின் அணைப்பில் இருந்தாள்…
“கடவுளே… இனிமே அந்த தரணி எங்க கம்பெனி பக்கம் காலெடுத்து வைக்க கூடாது….” அவசரமாய் கடவுளிடம் வேண்ட அந்த அவசரத்தில் அவரும் கவனிக்க மறந்து விட்டார் போல…
சரியாய் அதற்கு அடுத்த ஆறு மாசத்தில் நண்பர்கள் நால்வரும் முறைத்துக் கொண்டு நிற்க முன்னால் தலை குனிந்து நின்றான் தரணீஷ் வேந்தன்..
❤️❤️❤️தொடரும்❤️❤️❤️