அசுரனின் குறிஞ்சி மலரே.. 20

4.7
(9)

குறிஞ்சி மலர்.. 20

சமைத்த காலை உணவை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த கோதைக்கு, எலிசபெத் மற்றும் செபமாலை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

அவர்கள் இருவருக்கும் நடந்திருப்பது கொடூரம். சொந்த வீட்டிலேயே மனநோயாளிகள் என முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால் அதை விடக் கொடுமை வேறு என்னவாக இருக்கும்.

இந்தக் கொடூரம் இங்கிருப்பவர்களுக்குத் தெரியுமா தெரியாதா, இல்லாது போனால் தெரிந்ததும் தெரியாதது போல நடந்து கொள்கிறார்களா, இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க இதைப் பற்றி அசுரனிடம் பேசலாமா வேண்டாமா என்பது தான் கோதையின் இப்போதைய பெரிய கேள்வியாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இது பற்றிப் பேசலாம் என்கிற நிலைக்கு அவள் வந்திருந்தாள்.

ஜேம்ஸுக்கான உணவை ஒரு தட்டில் எடுத்து வைத்தவள், கொஞ்சமே கொஞ்சம் தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டு, கீழ்த் தளத்தில் இருந்த அவனது அறையை நோக்கிச் சென்றாள். ஜேம்ஸ் காலையில் கீழ்த் தளத்தில் இருக்கும் அறையிலும், இராத்திரியில் மேல் தளத்தில் இருக்கும் அறையிலும் தங்குவதால் இப்போது அவன் கீழறையில் தான் இருப்பான் என்ற எண்ணத்தில் அந்த அறைக்குச் சென்றாள்.

மடிக்கணினியில் வேகமாக ஏதோ தட்டிக் கொண்டிருந்தவன், வாசலில் வந்து நின்று கதவை தட்டியவளை நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவனின் நீல விழிகள் அவள் முகத்திலேயே நிலைத்து நிற்க, அவனது பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாதவளுக்கு ஏன்டா இங்கே இப்பொழுது வந்தோம் என்றாகிவிட்டிருந்தது. இப்பொழுதெல்லாம் அசுரனின் பார்வை அவளை விடாமல் தொடர்கிறது. இது தன்னுடைய பிரம்மையாக இருக்கும் என தட்டிக் கழித்தவளால் அவனுடைய அந்நேரப் பார்வையையும் பிரம்மை தான் என்று ஒதுக்க முடியவில்லை.

அவனது நீல விழிகளை நேர்கொண்டு பார்க்க திராணியற்று மெல்ல தன்னுடைய விழிகளை கீழே பதித்துக்கொண்டு, சாப்பாடு என சதி செய்த தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள் கோதை.

அவள் தன்னைப் பார்ப்பதும் பின்னர் கீழே பார்ப்பதுமாக தடுமாறிக் கொண்டிருப்பதை பார்த்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை உம் கொட்டி உள்ளே வருமாறு கண்ணை அசைத்தான். பேசாமல் அப்பாவிடமோ அண்ணனிடமோ உணவுத் தட்டைக் கொடுத்து விட்டிருக்கலாம் என யோசனை செய்து கொண்டிருந்தவள், அவன் கண்ணசைவில் வேகமாக வந்து உணவை அவனுக்கு முன்னால் இருந்த மேசை மேல் வைத்துவிட்டு அதே வேகத்துடன் வெளியே செல்ல திரும்பினாள்.

அவளையே பார்த்த வண்ணம் இருந்தவன் அவள் சாப்பாட்டை வைத்து விட்டு வெளியே செல்ல திரும்பியதை பார்த்ததும்,
“ஒரு நிமிஷம்..”
என்றான் அழுத்தமான குரலில், அந்தக் குரலை கேட்டதுமே கோதைக்கு லேசாக உள்ளே உதற தொடங்கி விட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை அவனைப் பார்க்கும் போதும் அவன் குரல் கேட்கும் போதும் அவளுக்கு உள்ளூர ஏதோ ஒரு பயம் உருவாகத்தான் செய்கிறது. அவன் இல்லாத நேரத்தில் தான் அவளுக்கு துணிவும் பேச்சும் மடை திறந்த வெள்ளம் போல பாய்கிறது.

லேசாக நடுங்கிய தன் கைகளை  இறுகப் பிடித்துக் கொண்டு என்னவென்பது போல திரும்பி பார்த்தாள்.

“புட் கொண்டந்தா அதை சேவ் செய்யோணும்..”
என்றான் அழுத்தம் குறையாத குரலில், அதைக் கேட்டவள் அவ்வளவு தானா நான் கூட என்னவோ ஏதோவென்று பயந்து விட்டேன் என மனதினுள் எண்ணிக் கொண்டு, வேகமாகப் போய் அவனுக்கு முன்னால் கிடந்த சிறிய மேசையின் முன்னால் சட்டென்று அமர்ந்து கொண்டாள்.

ஜேம்ஸின் நீல விழிகள் அவளையே தொடர்ந்தது. கோதை எல்லோருக்கும் கீரைப்பிட்டு அவித்திருந்தாள். அதற்கு துணையாக சிவப்பு மிளகாய்ச் சம்பல், பச்சை மிளகாய்ச் சம்பல், கத்தரிக்காய் குழம்பு என மூன்று வகை செய்திருந்தாள். ஜேம்ஸுக்கு பிட்டை எடுத்து வைத்து ஓரத்தில் சம்பலை வைத்து, நடுவில் குழம்பை ஊற்றினாள்.

தன் முன்னால் பரிமாறப்பட்ட கீரைப்பிட்டை ஒரு நொடி பார்த்தவன், மறுநொடியே மேசையைத் தள்ளி விட்டு, அங்கிருந்து போக வேகமாக எழுந்தான். உணவைத் தட்டில் வைத்து முடித்தவள், அவன் உணவைப் பார்த்ததும் மேசையைத் தள்ளி விட்டு எழ முயலவும் சட்டென்று அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டு
“என்ன நீங்கள் போட்ட சாப்பாட்டைத் தொட்டுக் கூடப் பாக்காமல் போறியள்.. காலமையில நேரத்துக்குச் சாப்பிடோணும் இல்லாட்டிக்கு வயித்துல அல்சர் விழுந்திடும்.. கை கழுவுறதெண்டால் இதுல கழுவுங்கோ..”
எனச் சொன்னவளை ஒரு நொடி ஆழமாகப் பார்த்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை அப்படியே அமர்ந்து விட்டான்.

ஒரு குருட்டு தைரியத்தில் அவனது கையைப் பிடித்தவளுக்கு, எங்கே தன்னை அறைந்து விடுவானோ என்கிற பயம் பிடிக்க, அவனை வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ அமைதியாக அமர்ந்து கையைக் கழுவி விட்டு, அவள் பரிமாறிய உணவை நிதானமாக உண்ணத் தொடங்கியிருந்தான். பார்வை மட்டும் அவளை விட்டு விலகவேயில்லை. எப்போதும் போல தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டவள், இனி அவன் உண்டு முடிக்கும் வரை அங்கிருந்து அசைய முடியாதே என்ற எண்ணத்தில், மார்பிள் பதித்த தரையில் தன் ஆட்காட்டி விரலால் கோலமிடத் தொடங்கினாள்.

சாப்பிட்ட வண்ணம் அவளையே பார்த்திருந்தவன், தன் பக்கத்தில் இருந்த பட்டனை அழுத்தினான். உடனே தேவாவும் ரகுமானும் ஆஜரானார்கள்.

அவர்கள் வந்ததும் கோதையை ஒரு நொடி ஆழமாகப் பார்த்தவன், பின்னர் அவர்களை நோக்கி
“ருமோரோ.. அந்த தில்லையம்பலத்தை வரச் சொல்லிடுங்க..”
என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய் விட்டான்.

அவன் அங்கிருந்து சென்ற பின்னரே, பெருமூச்சு விட்டுத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள், வியாகேசிடம் ஓடினாள்.

“அப்போய்..”

“என்ன பிள்ளை என்ன.. ஏனுப்புடி ஓடியாறாய்..”

“அப்பா உங்கடை குவாட்டர்.. அவரை வரச் சொல்லி விட்டிருக்காரு.. எனக்கு பயம்மாக் கிடக்குது..”

“இரு பிள்ளை இரு.. ஆர் ஆரை வரச் சொன்ன..”

“உங்கடை முதலாளி தான்..”

“பீட்டரை நீ குவாட்டராவே ஆக்கிட்டியோ.. சரி அவன் ஆரை வரச் சொன்னவன்..”

“அது தான் என்ரை வளர்ப்பு அப்பாவை வரச் சொல்லியிருக்கிறார்.. அதுவும் நாளைக்கு வரட்டுக்குமாம்.. என்னத்துக்கு கூப்பிடுறாரோ எண்டு பயமாவே கிடக்குது..”

“ஏதும் பிஸினஸ் சம்மந்தமாக் கதைக்கப் போறான் போல கிடக்குது.. நீ கண்டதையும் நினைச்சுக் குழம்பாத பிள்ளை..”

“என்ன பிஸினஸ்ஸோ என்னவோ.. ஏதும் உடையாமல் இருந்தால் சரி தான்..”

“பிள்ளை.. பீட்டர் கொஞ்சம் கோவக்காரன் தான் ஆனால்..”

“கொஞ்சம் பொறுங்கோ கொஞ்சம் பொறுங்கோ.. என்னண்டு சொன்னியள் திரும்ப ஒருக்காச் சொல்லுங்கோ..”

“பீட்டர் கொஞ்சம் கோவக்காரன் எண்டு சொன்னன் ஏன் பிள்ளை..”

“எது.. இந்த பெரிய பெரிய மேசையளாப் பாத்துத் தூக்கியடிப்பாரே அதுக்குப் பேர் தான் கொஞ்சனூண்டு கோவக்காரனோ.. இல்லை தெரியாமல் தான் கேக்கிறன்.. கொஞ்சக் கோவத்துக்கே உந்த நிலையெண்டால் பெரிய கோவக்காரன் எண்டால் என்ன நடக்கும்..”

“சரி சரி கோவிச்சுக் கொள்ளாத.. அவன் அதிகமாக் கோவப் படேக்குள்ள அவனைக் கன்ரோல் செய்ற ரெக்னிக் சொல்லித் தரட்டோ..”

“அதெதுக்கு எனக்கு..”
என்று சிலிர்த்தபடி உள்ளே செல்லத் திரும்பியவள், மீண்டும் அவரிடம் வேகமாக ஓடி வந்து
“சொல்லுங்கோ சொல்லுங்கோ அவரை எப்புடி கன்ரோல் செய்றது..”
எனப் படபடப்புடன் கேட்டாள்.

அவளையே பார்த்திருந்தவர், தலைசாய்த்து சிரித்தார்.

“கொஞ்சம் முன்னம் அதெதுக்கு எனக்கு எண்டு ஆரவோ கேட்ட போல இருந்திச்சுது.. ஏன் பிள்ளை அவாவை நீ கண்டியோ..”

“கலாய்ச்சது போதும்.. தப்பு தான் தப்பு தான் அப்புடிச் சொன்னது தப்பு தான்.. இப்பயாச்சும் சொல்லுங்கோப்பா.. என்னையப் பாத்து முறைச்சுக் கொண்டு நிண்டால் எனக்கு அந்த நேரத்தில உதவியா இருக்குமெல்லோ..”

“ஓஓ வரும்முன் காப்பது போல..”

“எப்புடியோ ஒண்டு.. சொல்லுங்கோப்பா..”

“சரி சொல்லுறன்.. பீட்டர் தம்பிக்கு எப்புடிக் கோவம் வரும்.. எப்ப கோவம் வரும் எண்டே தெரியாது..”

“அது தெரிஞ்ச விசியம் தானே..”

“இப்ப நான் சொல்லவோ வேண்டாமோ..”

“சாரிப்பா இனி வாய் துறக்க மாட்டன்.. நீங்கள் சொல்லுங்கோ..”

“பீட்டருக்கு ரொம்ப பெரிய கோவம் வந்தால் அவனைக் கன்ரோலே செய்ய ஏலாது.. ஆனா ஓரளவான கோவம் வந்தால் கன்ரோல் செய்யலாம்..”

“ஓரளவு கோவம் எண்டால்.. எந்த மாதிரியான கோவம் அப்பா..”

“இப்ப கொஞ்ச நாளுக்கு முந்தி தில்லையம்பலம் வந்த நேரம் மேசையைத் தூக்கி அடிச்சானே..”

“ஓம்..”

“அது ஓரளவான கோவம் தான்..”

“என்னப்பா சொல்லுறியள்..”

“ஓம் பிள்ளை.. ஓரளவு கோவத்துக்கே உந்த மாதிரியான வெளிப்பாடு எண்டால் மத்த நேரத்துல வார கோவத்துக்கு எப்புடி நடந்து கொள்ளுவான் எண்டு யோசிக்கிறியோ..”

“ஓமப்பா..”

“நீ இங்க வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் தானே பிள்ளை.. அது தான் அவனைப் பாக்க உனக்குப் பயமாக் கிடக்குது.. போகப் போகப் பழகியிடும் பிள்ளை..”

“நான் பழகிறது கிடக்கட்டும் அப்பா.. உங்களை ஒண்டு கேக்கோணும்..”

“என்ன பிள்ளை..”

“இல்லை அவருக்கு ஏனுப்புடிக் கோவம் வருகுதெண்டு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமோ..”

“ஏன் தெரியாமல்.. எல்லாம் அவனைச் சுத்தியிருக்கிற நரகாலியள் செய்த வேலையள் தான் காரணம்..”

“எனக்குப் புரியேல்லையப்பா..”

“அதெல்லாம் சொல்லி நான் உன்னைக் குழப்பேல்லை.. உனக்கு கன்ரோல் செய்ற விசியம் மட்டும் சொல்லுறன்..”

“அதுவும் சரி தான்.. சரி சொல்லுங்கோ..”

“அவன்ரை வலது கையைப் பிடிச்சு.. தோளில தட்டிக் குடுத்து.. கண்ணைப் பாத்து அவனிந்தை பேரைச் சொல்லிக் கூப்பிட்டுச் சமாதானப் படுத்தோணும்.. கொஞ்சம் கஷ்டம் தான்.. அப்புறம் நம்மளை ஒருக்கா முறைச்சுப் பாத்திட்டுப் போயிடுவான்..”

“கிழிஞ்சுது போங்கப்பா..”

“என்ன பிள்ளை என்ன கிழிஞ்ச..”

“நீங்கள் சொன்னதைக் கேட்டு என்ரை இதயம் தான் கிழிஞ்சு போட்டுது..”

“ஏன் பிள்ளை..”

“உங்களுக்கு பூனைக்கு மணி கட்டின கதை தெரியுமோ..”

“தெரியாது பிள்ளை..”

“அது தானே பாத்தன்.. அந்தக் கதை தெரிஞ்சிருந்தால் நீங்கள் உந்தக் கதை கதைச்சிருக்க மாட்டியள்.. ஒரு பூனையொண்டு ஒரு வீட்டுக்குள்ள இருக்கிற எலியளை ஒவ்வொரு நாளைக்கு ஒண்டு வீதம் பிடிச்சுச் சாப்பிட்டு வந்திச்சாம்..”

“சரி..”

“இப்புடியே ஒவ்வொரு நாளும் நடக்க.. நிறையவா இருந்த எலியள் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சிட்டே வந்திச்சாம்..”

“சரி..”

“அப்ப இதைப் பாத்த எலியளிந்தை தலைவர்.. ஒரு கூட்டம் போட்டாராம்..”

“சரி..”

“அந்தக் கூட்டத்துல அவர் சொன்ன விசியம்.. பூனை வீட்டுக்குள்ள வாரது எங்களுக்குச் சட்டெண்டு தெரியுதில்லை.. அதனால தான் நாங்கள் ஓடி ஒளியாமல் இருக்கிறம்.. அதனால தான் பூனையும் உள்ள வந்த உடன எங்களில ஒராளைத் தூக்கிட்டுப் போயிடுது எண்டு சொன்னாராம்..”

“சரி..”

“அப்ப அதைக் கேட்டிட்டே இருந்த எலியளில ஒரு எலி சொல்லிச்சாம்.. அப்ப பூனை உள்ள வாரது எங்களுக்குத் தெரிஞ்சால் நாங்கள் தப்பிக்கலாமே.. அதனால பூனை உள்ள வாரதை நாங்கள் அறிஞ்சு கொள்ளுறதுக்கு என்ன ஐடியா செய்யலாம் எண்டு கேட்டிச்சாம்..”

“சரி..”

“அப்ப தலைவர் சொன்னாராம் இதுக்கு ஒரே வழி.. பூனையிந்த கழுத்துல மணியொண்டு கட்டி விடோணும்.. அப்ப தான் பூனை உள்ள வரும் போது அந்த மணிச்சத்தம் கேட்டு நாங்கள் அலேட்டா இருக்கலாம் எண்டு சொன்னாராம்.. அப்ப அதைக் கேட்டு மத்த எலியள் தங்கடை தலைவரிந்தை புத்திக்கூர்மையைப் பாராட்டித் தள்ளிச்சினமாம்..”

“சரி..”

“அப்ப அந்தக் கூட்டத்துல இருந்த அறிவுள்ள எலியொண்டு கேட்டிச்சாம்.. எல்லாஞ் சரிதான் தலைவரே அந்தப் பூனைக்கு ஆரு மணி கட்டுறதெண்டு.. அதைக் கேட்ட உடன தான் மற்றவைக்கும் அந்த எண்ணமே வந்திச்சாம்.. எல்லாரும் உடன தலையில கை வைச்சுக் கொண்டு இருந்திட்டினமாம்..”

“சரி..”

“இந்தக் கதை போல தான் நீங்கள் சொன்ன கதையும்.. எல்லாஞ் சரி தான் அசுரன் கோவப் படும் போது அவருக்குப் பக்கத்துல நிக்கவே தைரியம் பத்தாது.. பிறகு எப்புடிக் கையைப் புடிச்சு தோளைப் புடிச்சு சமாதானம் சொல்லுறது..”

“சரி..”

“என்ன சரி சுரி.. இப்ப விளங்கினதோ கதையிந்தை அர்த்தம்..”

“கதையிந்தை அர்த்தம் விளங்குதோ இல்லையோ.. சந்தடி சாக்கில அறிவுள்ள எலியெண்டு உன்னை நீயே சொன்னது மட்டும் விளங்குது..”
என வியாகேசு சொல்ல, ஈ எனச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓடி விட்டாள் கோதை.

அவள் அங்கே வந்து வியாகேசோடு பீட்டரைப் பற்றிப் பேசத் தொடங்கியதில் இருந்து, உள்ளே ஓடியது வரை அடுத்த அறையின் சாளரத்தின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!