குறிஞ்சி மலர்..22
ஜீவோதயம் பங்களாவே களை கட்டத் தொடங்கி விட்டிருந்தது. காரணம் தேடி வெகு தூரம் போகத் தேவையில்லை. அசுரனுக்கு கல்யாணம் இது தான் காரணம்.
கல்யாணத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் ஏன் தான் இந்த ஆர்ப்பாட்டமோ எனக் கோதை அத்தோடு பதினெட்டாவது தடவையாகச் சலித்துக் கொண்டாள்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வஞ்சிமாறன் தான் விளக்கமும் கொடுத்தான்.
“என்ன அண்ணாச்சி இது.. கலியாணத்துக்கு இன்னும் மூண்டு மாசம் முழுசாக் கிடக்குது.. அதுக்குள்ள ஏதவோ நாளைக்கு தான் கலியாணம் எண்ட போல ஏன் உந்தக் கூத்து..”
“அடி போடி பிள்ளை நீ.. நானே என்னடா இது மூண்டு மாசம் தானா கிடக்குது எண்டுற கவலையில இருக்கிறன்..”
“என்னாது..”
“ஓம்.. கடைசி ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கொண்டாட வேண்டிய சுபகாரியம் எங்கடை பாஸுக்கு நடக்கப் போகுதெண்டுற சந்தோஷத்துல நானும் பெரிசும் அம்புட்டு சந்தோஷமா இருக்கிறம்.. நீ என்னடா எண்டால் இப்பவே அலுத்துக் கொள்ளுறாய்..”
“அப்புடி என்ன பெரிய கலியாணம் ஊர் உலகத்துல நடக்காத கலியாணம் உங்கடை பாஸுக்கு நடந்திடப் போகுது..”
“பெரிய கலியாணம் தான்.. ஊர் உலகத்துல நடக்காத கலியாணம் தான்.. எங்கடை பாஸுக்கு எத்தினை வயசெண்டு சொல்லு பாப்பம்..”
“என்ன ஒரு இருபத்தாறு இருக்குமா..”
“ஹா ஹா.. சரி எனக்கு எத்தினை வயசு இருக்கும்..”
“உனக்கு ஒரு நாப்பது..”
“வெளுப்பன்.. நான் உன்ரை வயசைக் கேக்கேல்லை என்ரை வயசைக் கேட்டனாக்கும்..”
“சரி சரி கடுப்பாகாத.. உனக்கு ஒரு முப்பது வருமா..”
“என்ரை வயசு சரி.. ஆனால் பாஸுந்தை வயசு நீ சொன்னது இல்லை..”
“அப்போ எத்தினை வயசு அவருக்கு..”
“முப்பத்தைஞ்சு வயசு..”
“என்னடா அண்ணாச்சி சொல்லுறாய்.. பொய் புழுகாத..”
“சத்தியமாடி பிள்ளை..”
“என்னடா அண்ணாச்சி.. பாக்க இருபத்தைஞ்சு வயசு ஆள் போல கிடக்கு..”
“ம்ம்.. அது தான் எங்கடை பாஸுந்தை ஸ்பெஷல்.. அதோட அவையிந்த பரம்பரையில பையனா இருந்தால் இருபத்தைஞ்சு வயசுலயே கலியாணம் கட்டியிடுவினம்.. பொண்ணா இருந்தால் இருபது வயசுல கலியாணம் கட்டியிடுவினம்..”
“ஆ..”
“ஆனா எங்கடை பாஸ் பத்து வருஷமாக் கலியாணம் வேண்டாம் எண்டு இருந்திட்டு, இப்ப தான் சம்மதமே சொல்லி இருக்கிறார்.. அதுவும் தானாவே சொல்லி இருக்கிறார்.. அப்ப அது எவ்வளவு ஸ்பெஷல் சொல்லு..”
“ம்ம்ம்.. அதுவும் சரி தான்..”
“அதனால நாங்கள் எல்லாரும் அம்புட்டு சந்தோஷமா இருக்கிறம்.. அதனால..”
“அதனால..”
“நீ எல்லாருக்கும் பால் பாயாசம் செஞ்சு குடு..”
“என்னது மறுபடியுமா.. ஆளை விடுங்கடா சாமி.. இவைக்கு பாயாசம் செஞ்சு முடிக்குறதுக்குள்ள நான் பரலோகம் போயிடுவன் போலயே..”
“என்ரை பட்டுத் தங்கமெல்லே..”
“ஒரு புட்டு சங்கமும் இல்லை.. இனி ஏதாவது செஞ்சு குடுக்கோணும் எண்டால்.. அதுக்குரிய பொருளும் செய்முறை வீடியோவும் குடு.. அதுக்குப் பிறகு யோசிக்கிறன்..”
“அதுக்குப் பிறகும் யோசிக்கத் தான் போறியோ..”
“இப்ப பாயாசம் வேணுமோ இல்லையோ..”
“உந்த மாதிரி எல்லாம் பாஸிட்டை கதைப்பியோ.. அவர் கேட்ட உடனே மட்டும் செஞ்சு குடுத்தனீ தானே.. நான் உன்ரை அண்ணன் தானே அந்தப் பாசம் கொஞ்சமாச்சும் இருக்கோ..”
“அண்ணன் எண்டுற பாசம் பாயாசம் எல்லாம் நிறையவே இருக்கு.. அந்தாளிட்டை இந்த மாதிரிக் கதைக்க எனக்கு என்ன பயமே.. நான் நல்லாக் கதைப்பன்.. முதல் கேக்க ஏசிப் போட்டன்.. பிறகு அந்தாள் கெஞ்சிக் கேட்டது அது தான் பாவம் எண்டு செஞ்சு குடுத்தன்..”
“ஆர் நீ.. நீ பாஸை ஏசின்னீ..”
“ஆமா..”
“அவர் உன்னையக் கெஞ்சினவர்..”
“அப்கோசு..”
“என்ன குளுக்கோசா.. பாஸ் பக்கத்துல இல்லாத நேரம் வண்டில் வண்டிலாப் புழுகித் தள்ளு.. அவர் பக்கத்துல வந்தால் பம்மிக் கொண்டு நில்லு.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்..”
என்று கொண்டு கோதையின் காதைப் பிடித்து, வஞ்சி முறுக்க
“அண்ணாச்சி.. உங்கடை பாஸ் வாரார் அங்க பாருங்கோ..”
எனக் கோதை சொன்னது தான் தாமதம், அடுத்த நிமிடமே வஞ்சி அஞ்சித் தலைமறைவானான்.
அவன் ஓடிய வேகத்தைப் பார்த்து, கோதை வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, அந்த நேரத்தில் உண்மையிலேயே மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தவளோ ஜேம்ஸைப் பார்த்ததும், சிரிப்பு பாதியில் தடைப்பட வேகமாக சமையலறையினுள் புகுந்து கொண்டாள்.
அவள் சிரிப்பதையே விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு போனவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை திரும்பி வந்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு, சமையலறையைப் பார்த்தான்.
அவனது அசைவுக்கு ஏற்றது போல, உடனுக்குடன் சேவைகள் செய்யும் தேவாவும் ரகுமானும் சமையலறை நோக்கி ஓட, வேண்டாம் என்பது போல சைகை செய்தவன், சில நொடிகள் கண்கள் மூடி அமர்ந்து விட்டே வெளியே போனான்.
ஜேம்ஸ் வெளியே சென்ற அதே நேரம் தில்லையம்பலம் தன் குடும்பத்தோடு அந்த பங்களாவினுள் நுழைந்தார்.
அது ஜேம்ஸின் கட்டளை, திருமணம் முடியும் வரை தில்லையம்பலம் இங்கே தங்க வேண்டும் என்று சொல்லி விட்டான். தில்லையம்பலமும் பணக்காரர் தான் ஆனால் ஜேம்ஸ் போன்ற அளவுக்கு அவர் செல்வந்தர் இல்லை. அவனது சொத்தின் ஆறில் ஒரு பங்கு தான் அவரின் மொத்த சொத்தும். அதே போல ஜீவோதயம் போன்ற ஒரு அரண்மனையில் தங்கிக் கொள்ள யாருக்கு தான் கசக்கும். அது தான் ஜேம்ஸ் சொன்ன மறு நாளே பெட்டி படுக்கை மனைவி மகளோடு அவர் ஜீவோதயத்துக்கு குடிபெயர்ந்து விட்டார்.
ஒப்பந்த அடிப்படையில் ஐந்து மாதங்கள் தில்லையம்பலத்திடம் சேவகம் செய்ய வேண்டும் என்று அனுப்பி வைக்கப் பட்ட மாலினியும் அவர்களோடு அந்த பங்களாவுக்கு திரும்பி வந்து விட்டார்.
பங்களா வாசலில் கேட்ட தடல்புடல் சத்தத்தில் என்னவென பக்கவாட்டு சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்த கோதைக்கு, யாருடைய முகமும் தெரியவில்லை. அவளுக்கு தெரிந்த ஒரே முகம் நீலரூபியின் முகம் மட்டும் தான். அவரைப் பார்த்தவுடனேயே கோதையின் முகத்தில் அத்தனை சந்தோஷம். இந்த உலகத்தில் அவளுக்கே அவளுக்கென இறைவன் அனுப்பி வைத்த ஒரேயொரு பாவப் பட்ட ஜீவன் அவர் மட்டும் தானே.
அம்மா என்று கத்த வேண்டும் போல தோன்றிய உணர்வை பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டவள். தாயின் உருவத்தை நிதானமாகக் கண்களால் படம் பிடித்துக் கொண்டாள்.
காரில் இருந்த இறங்கிய நீலரூபியின் விழிகளும், அங்குமிங்கும் அலைந்து தன் செல்ல மகள் எங்கேனும் தென்படுகிறாளா என்பது போல தான் நோட்டமிட்டது. அவளைக் காணவில்லை என்றதும் அப்படியே சோர்ந்தும் போய் விட்டது. நீலரூபி தன்னைத் தான் தேடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு லேசாகக் கண்கள் கலங்கவே, திரும்பிப் போய் தன் தாய்க்குப் பிடித்த பிட்டும் கடலைக் கறியும் செய்யத் தொடங்கினாள் நீலரூபியின் ஆசை மகள் கோதை.
பங்களாவினுள் நுழைந்த மூவருக்குமே கீழ் தளத்தில் தான் அறைகள் ஒதுக்கிக் கொடுக்கப் பட்டன. தில்லையம்பலமும் ரூபவர்ஷியும் மூக்கு முட்ட உண்டு விட்டு, நித்திராதேவியை வரவேற்க போய் விட, அறையில் இருந்து மெல்ல நழுவி கோதையைத் தேடிக் கொண்டு போனார் நீலரூபி.
வெளியே வந்து எந்த அறைக்குள் மகள் இருப்பாளோ என்பது போல யோசனையோடு நின்றவரின் அருகே வந்த வியாகேசு அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
“என்ன பிள்ளை ஆரைத் தேடுறியள்..”
“இல்லை என்ரை மகள் இங்க தான் வேலை செய்ய வந்தவள்.. அது தான் எங்க எண்டு தேடுறன்..”
“உங்கடை மகளிந்தை பேர்..”
“கோதை..”
“அட நீங்கள் தில்லையம்பலத்திந்தை மனுஷியே..”
“இல்லை..”
“பின்னே..”
“கோதையிந்தை அம்மா..”
“ஓ சரி சரி..”
என நீலரூபியின் மனதைப் புரிந்து கொண்டவர்,
“உங்கடை மகள் தானே என்னோட வாங்கோ காட்டுறன்..”
என்று கொண்டு சமையலறை நோக்கி நடக்க, மகளைப் பார்க்கும் ஆவலில் அவரைப் பின் தொடர்ந்தார் நீலரூபி.
சமையலறையினுள் பிட்டும் கடலைக் கறியும் செய்து முடித்து, அப்போது தான் மூடி வைத்துக் கொண்டிருந்த கோதை, உள்ளே வந்த வியாகேசைப் பார்த்துச் சிரித்தபடி
“என்னப்பா.. புட்டும் கடலைக் கறியும் செஞ்சிருக்கிறன்.. சுடச் சுட சாப்பிடுறியளே.. என்ரை அம்மாக்குட்டி வந்திருக்கிறா.. அவாக்கு புட்டும் கடலைக்கறியும் எண்டால் உயிர் அது தான்.. அவாக்கு பிடிக்கும் எண்டு கடகடெண்டு செஞ்சு முடிச்சிட்டன்..”
என்று கேட்ட கோதை, ஒரு தட்டத்தில் பிட்டுப் போட்டு கடலைக்கறி ஊற்றி அவரிடம் நீட்டினாள்.
வியாகேசின் பின்னால் வந்த நீலரூபிக்கு கோதை சொன்ன வார்த்தைகள் மனதைத் தொட்டுச் செல்ல,
“என்ரை செல்லம்..”
என அழுதபடி கோதையை பின்னால் சென்று இறுகக் கட்டிக் கொண்டார்.
அந்த செல்லம் என்ற அழைப்பிலும் அன்பான அணைப்பிலும் தன் வளர்ப்புத் தாயைக் கணத்தில் கண்டு கொண்டவள், திரும்பி நின்று தானும் அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள்.
தாயும் மகளும் அத்தனை நாள் பிரிவுத் துயரை கண்ணீர் மூலம் கழுவிச் சுத்தம் செய்வது போல அழுது கொண்டிருக்க, அவர்களின் பாசப் பிணைப்பை இரசித்தபடி, கோதை போட்டுக் கொடுத்த உணவை கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தார் வியாகேசு.
அவர் சாப்பிட்டு முடித்த பின்னர் கூட, தாயும் மகளும் இந்த லோகத்துக்கு வந்து சேரவில்லை. அவர் தான் இரண்டு மூன்று முறை செருமி இந்த லோகத்துக்கு இழுத்து வந்தார்.
“பிள்ளை.. எனக்கு கொஞ்சம் புட்டும் கடலைக் கறியும் போட்டிட்டு.. ரெண்டு பேரும் ஆறுதலா பாசப் பயிர் வளவுங்கோ..”
என்று சொன்ன வியாகேசைப் பார்த்து அசடு வழிந்தபடி, அவருக்கு நிறையப் பிட்டும் கடலைக் கறியும் போட்டுக் கொடுத்தாள் கோதை.
“இனி நான் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டன்.. வடிவா ஒப்பாரி வையுங்கோ..”
என்று கொண்டு அவர் ஓரமாகப் போய் அமர்ந்து பிட்டையும் கடலைக் கறியையும் இரசித்து ருசித்து உண்ணத் தொடங்கினார்.
“என்னடி கோதை இளைச்சுப் போயிட்டாய்..”
“அட போங்கம்மா நானே ஒரு சுத்து பெருத்திட்டன் எண்டு கவலையா இருக்கிறன்.. நீங்கள் இளைச்சிட்டன் எண்டுறியள்..”
“எனக்கு இளைச்ச போல தான் கிடக்கு.. ஒழுங்கா சாப்புடுறியோ..”
“ஒழுங்காவும் சாப்பிடுறன் விதம் விதமாயும் சாப்பிடுறன்..”
“அப்புடி எண்டால் சரி தான்..”
“அது சரி எத்தினை நாள் இங்க இருப்பியள்.. நாங்கள் ரெண்டு பேரும் மட்டும் ஜாலியா இருப்பம்..”
“மூண்டு மாசம் எண்டு நினைக்கிறன் பிள்ளை..”
“என்ன நீலாம்மா.. பொண்ணுக்கு கலியாணம் ஆனா உங்கடை மூஞ்சியில கொஞ்சமுமே சந்தோஷத்தைக் காணேல்லையே..”
“அது பொண்ணு இல்லை பொறுக்கி..”
“என்ன இப்புடிச் சொல்லிப் போட்டியள்..”
“வேறை என்ன சொல்லுறது.. எப்பவும் புலம்புறது தான் எனக்கு வந்ததும் சரியில்லை.. பிறந்ததும் சரியில்லை.. என்னை ஒரு மனுஷியாவே மதிக்குதுகள் இல்லை.. அதுகள் என்ன செய்தால் எனக்கென்ன.. நான் இங்க வந்ததே உன்னையப் பாக்கத் தான்டி..”
“கலியாணம் ஆயிட்டா ரூபா சரியாயிடுவாள் எண்டு நினைக்கிறன் அம்மாச்சி..”
“கட்டுற பெடியன் எல்லே பாவம்..”
“அம்மாச்சி.. மாப்பிள்ளையை உங்களுக்கு முன்ன பின்ன தெரியுமோ..”
“இனித்தான்டி முன்ன பின்ன பாக்க போறன்.. ஆர் பெத்த பிள்ளையோ எனக்கு தாலி கட்டின வெங்கிளாந்திக்கும் நான் பெத்த வெந்தகோழிக்கும் நடுவுல மாட்டிச் சாகப் போகுது.. அந்தப் புள்ளைய ஆரும் மகராசி தான் காப்பாத்தோணும்..”
என்று நீலரூபி புலம்ப ஆரம்பிக்க, அவரை சமாதானம் செய்து, அவருக்கு பிடித்த பிட்டையும் கடலைக் கறியையும் கொடுத்து அவரின் வாயை அடைந்தாள் கோதை.