குறிஞ்சி மலர்.. 26
இரண்டு மூன்று தினங்களாக கோதையால் அவளது அறையை விட்டு வெளியே வரவே முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் அன்று கண்ட பயங்கரக் கனவே மீண்டும் மீண்டும் வந்து அவளைப் பயமுறுத்தித் தள்ளியது.
அந்தக் கனவின் வீரியத்தால் அவள் அறையிலேயே முடங்க, வியாகேசும் வஞ்சியும் ஆள் மாற்றி ஆள் அவளுக்கு துணைக்கு இருந்தார்கள்.
இப்படியே அவளது நாட்கள் படு மோசமாகப் போக, வெளியே அவளது அறையையே பார்த்த வண்ணம் தினமும் மூன்று முறையாவது நடை பயிலும் ஜேம்ஸ் சட்டென்று அந்த வீட்டில் அப்போதிருந்த எல்லோரையும் உடனே வந்து தன்னை சந்திக்குமாறு சொல்ல, அடுத்த நிமிடமே கோதையைத் தவிர எல்லோரும் அவனின் முன்னால் ஆஜரானார்கள்.
கீழே வரவேற்பு கூடத்தில் அமர்ந்திருந்தவனது பார்வை, தன் முன்னால் நின்றிருந்தவர்களை ஒரு நிமிடம் நிதானமாக அளந்து விட்டு, மாடிப் பக்கம் போய் மீண்டு வந்தது.
அவரின் முன்னால் நின்ற தில்லையம்பலமோ வாயெல்லாம் பல்லாக
“சொல்லுங்கோ தம்பி என்ன விசியம்.. இனியாவது கலியாணத்துக்கு சின்ன சின்ன வேலையாச் செய்யத் தொடங்குவமோ..”
எனக் கேட்க, அவரை அழுத்தமாகப் பார்த்தவன்
“நோ.. நாளைக்கே வெடிங்.. புதுசா யாரும் வேண்டாம்.. இங்க இருக்கவங்க மட்டும் போதும்..”
எனச் சட்டென்று சொல்ல, தில்லையம்பலம் அதிர்ந்து விழித்தார்.
அவரைப் பொருத்தவரை இந்த கல்யாணம் ஒரு ஆடம்பரமான நிகழ்வாகவும், அவர் விருப்பம் போலவும் நடக்க வேண்டும் என அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். தன் மகளின் திருமணத்தை எல்லோருமே மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்க வேண்டும் என ஆசை கொண்டிருக்க, அந்த ஆசையில் ஜேம்ஸ் அலுங்காமல் மண்ணள்ளிப் போட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
ஜேம்ஸிடம் அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கவும்
“நான் சொன்னதுக்கு சம்மதமானவங்க மட்டும் இங்க இருக்கலாம்.. மத்தவங்க..”
என வாசலைக் கை காட்டினான் அவன், அதன் பின்னர் அவரால் வாயைத் தான் திறக்க முடியுமா. திறந்தாலும் அதற்கு பயன் தான் இருக்குமா. தில்லையம்பலம் ஏக்கப் பார்வை பார்த்தபடி நிற்க, உனக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலேயும் வேண்டும் என அவரைப் பார்த்தார் வியாகேசு.
அவருக்கு இந்த நிமிடம் வரை தன் பீட்டர் அந்த தில்லையம்பலத்தின் மகள் ரூபவர்ஷியை மணந்து கொள்ளப் போகிறான் என்பதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி இருக்க கல்யாணம் இன்று நடந்தால் என்ன நாளை நடந்தால் என்ன என்கிற ரீதியில் தான் அவர் இருந்தார். ஆனாலும் ஏதாவது மாயம் நடந்து இந்த திருமணம் தடைப் படக் கூடாதா என அவர் ஏங்கித் தவிக்காத நேரம் இல்லை.
போற போக்கில் வீட்டை மட்டும் அலங்காரம் செய்யுங்கள் என ஜேம்ஸ் ஆணை பிறப்பித்து விட்டு போக, அடுத்த கணமே வீடு கல்யாணக் களை கட்டத் தொடங்கியது.
அதே நேரத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்த வஞ்சியின் பக்கத்தில் வந்தார் வியாகேசு.
“ஏன்டா மூஞ்சியை இப்புடி மூண்டு முழத்துக்கு தூக்கி வைச்சிக்கிறாய்.. உனக்கு இப்ப என்ன நடந்த..”
“போ பெரிசு.. இது அநியாயம் அக்கிரமம்..”
“எது அநியாயம் எது அக்கிரமம்.. விளங்கச் சொல்லடா வெண்ணை..”
“பின்ன என்ன கலியாணத்துக்கு மூண்டு மாசம் இருக்கெண்டு சொன்னப்பவே எனக்கு ஒரே கவலை நாள் காணாதெண்டு.. ஆனா இப்ப பார் மூண்டு நாள் கூட இல்லாமல் நாளைக்கே கலியாணமாம்.. கொஞ்சம் கூட சரியில்லை.. பாஸ் ஏன் தான் உப்புடி செய்றாரோ தெரியேல்லை..”
“சரி விடு விடு.. அவனுக்கும் என்ன பிரச்சினையோ.. அவனும் பாவம் தானே.. அவன் திரும்பி வந்து இண்டைக்கே இப்பவே கலியாணம் எண்டு சொல்ல முந்தி வா போய் வேலையைப் பாப்பம்..”
“ஓம் ஓம்.. எங்கடை பாஸ் அப்புடி வந்து சொன்னாலும் சொல்லுவார்.. வாங்கோ ஓடுவம்..”
என்று கொண்டு வஞ்சி ஓட,
“இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..”
எனச் சலித்துக் கொண்டே அவனைத் தொடர்ந்தார் வியாகேசு.
நாளைக்கே திருமணம் என கட்டளை போல சொல்லி விட்டு வந்த ஜேம்ஸின் நீல விழிகள், கோதையின் அறை வாசலில் அடிக்கடி பதிந்து மீளவே, அடுத்த நொடியே அவளது அறைக் கதவைத் தட்டினான்.
நேரம் மதியத்தை தாண்டி மாலையின் ஆரம்பத்தைத் தொட்டுக் கொண்டிருக்க, உடம்பும் மனதும் அசதியில் இருக்க, எழ முடியாமல் எழுந்து
“என்னைய கொஞ்ச நேரங்கூட நிம்மதியா இருக்கவே விட மாட்டாங்கள்..”
எனச் சலித்தபடி வந்து கதவைத் திறந்தாள் கோதை.
வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்ததும், அவளை அறியாமலேயே அந்தப் பயங்கரக் கனவு நினைவு வரவே, பயத்தில் கோதைக்கு கையும் காலும் நடுங்கத் தொடங்க, அப்படியே வாசலில் தொய்ந்து விழுந்தாள் அவள்.
வேகமாக அவளைப் பிடித்துக் கொண்டவன், தானும் அவளோடு அந்த வாசலிலேயே அமர்ந்து கொண்டான்.
“என்னாச்சு..”
“ஆ..”
“என்னாச்சுனு கேட்டன்..”
“ஒண்டுமில்லையே..”
“அப்புறம் ஏன் கையும் காலும் நடுங்குது..”
“தெரியல்லை..”
“என்னைப் பாத்தா பேய் பிசாசு மாதிரியா இருக்கு..”
“…………”
“அமைதியா இருக்கிறதை பாத்தால் அப்புடி தான் போல..”
“அச்சோ.. அப்புடி எல்லாம் இல்லை..”
“சரி அதென்ன ஒரே ரூமுக்குள்ளயே தவம்..”
“அது.. கொஞ்சம்.. தலைவலி..”
“நிஜமாவே தலைவலின்னா காத்தாட வெளிய நடக்கணுமே..”
“ஆ.. ம்ம்..”
“அப்போ வெளிய போலாமா..”
“வெளியாலயோ இப்பவோ..”
“ம்ம் இப்ப தான்..”
“நான் வரேல்லை..”
“வர்ரியா வரலையானு நான் கேக்கலை.. வரணும் வரலைன்னா தூக்கிட்டு போயிட வேண்டியது தான்..”
என ஜேம்ஸ் சொல்லி முடிக்கவும், கோதை எழுந்து வெளிப் பக்கமாக வேகமாக நடக்கத் தொடங்க,
“இது நல்ல பிள்ளைக்கு அழகு..”
என்றபடி அவளைத் தொடர்ந்தான் அவன்.
வெளி வாசலுக்கு வந்தவள் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ திபெத்திய மாஸ்டிஃப் நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டருகே போக,
“அங்க ஏன் போறீங்கள்..”
என கோதை கிட்டத்தட்ட கத்தியே விட்டாள்.
அவளது கத்தலில் காதுக்குள் குடைவது போல விரல் வைத்து எடுத்தவன்,
“கத்தினால் என்னோட பெற்ஸ்ஸுக்கு பிடிக்காது.. மேல பாஞ்சிடும்..”
என சொல்லவும் அதற்கு பிறகு கோதை வாயைத் திறப்பாளா. பூட்டு போட்டு வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
கூண்டைத் திறந்தவன் இரண்டு பெரிய நாய்களையும் ஒரு குட்டி நாயையும் மாத்திரம் வெளியே வர வைத்து, சங்கிலியால் பிணைத்தான். நாய்கள் மூன்றும் அவன் மேல் ஏறி விழுந்து அவனைக் கொஞ்ச, கோதைக்கோ பயத்தில் மீண்டும் கை கால் நடுங்கத் தொடங்கியது.
நாய்களை கட்டிய சங்கிலியை பிடித்தபடி, அவளருகே வந்தவன்
“லெற்ஸ் கோ..”
என்றபடி முன்னே நடக்க, நடக்க மறுத்த கால்களை வலுக் கட்டாயமாக இழுத்து வைத்து அவனுக்கு பின்னே போனாள் கோதை.
ஜீவோதயம் பங்களா அமைந்திருந்த இடத்தில், பக்கத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வீடுகள் எதுவுமே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தூர தூரமாக ஒன்றிரண்டு வீடுகளே அமைந்திருந்தன.
ஆனால் ஜீவோதயம் அமைந்திருந்த இடம் மட்டும் இயற்கை அழகிற்கு எந்தக் குறைவும் இல்லாமல் பச்சை பசுமையாக அத்தனை அழகாக இருந்தது.
பங்களாவின் மெயின் கேட்டில் இருந்து மணலால் போடப் பட்ட கொஞ்சம் பெரிதான பாதை இருக்க, அதன் இரண்டு பக்கமும் மரங்களும் செடிகளும் கொடிகளும் கொண்ட காடு தான். பாதையின் தொடக்கத்திலும் முடிவிலும் பெரிய பெரிய பெயர் தெரியாத பூமரங்கள் கிளை பரப்பி நிற்க, பாதையின் முடிவில் தான் தார்ச் சாலை குறுக்கே போனது.
தார்ச்சாலையில் நின்று பார்க்கும் போது ஜீவோதயம் அமைந்திருந்த அந்த ஒற்றைத் தெரு அழகாகத் தெரிந்தாலும் கூட, பங்களா ஒன்று அங்கே இருப்பதை பக்கத்தில் வந்து தான் தெரிந்து கொள்ளலாம். அந்தளவிற்கு பூ மரங்கள் வளர்ந்து கிளை பரப்பி நின்றன.
இப்போது கோதையோடு வெளியே வந்த ஜேம்ஸ் அந்த தெருவில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்து விட்டு, வலது பக்கமாகத் திரும்பினான். அவனோடு பின்னாலேயே வந்த கோதை, இந்த பாதையே இல்லாத காட்டுக்குள் எதற்கு போகிறான் என தயங்கி நிற்க, இந்த பக்கமாக நீட்டிய வண்ணம் இருந்த கிளையை அவன் லேசாக வளைக்க அங்கே ஒரு ஒற்றையடிப் பாதை தெரிந்தது.
அந்தப் பாதையை கோதை வாய் பிளந்தபடி பார்க்க, அவளைத் திரும்பிப் பார்த்துக் கண் சிமிட்டியவன் முன்னே நடக்க, அந்தக் கண் சிமிட்டலில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்ற கோதை அடுத்த நொடியே தலையை உலுக்கி தன்னை சரிப் படுத்திக் கொண்டு அவனைத் தொடர்ந்து உள்ளே போனாள்.
இருவரும் அந்த ஒற்றையடிப் பாதையில் புகுந்ததும் பழையபடி அந்தக் கிளை அந்தப் பாதையை மறைக்க, அதைத் தாண்டி வெளியே எதுகுமே தெரிவில்லை. அநேகமாக அந்தப் பக்கம் இருந்து பார்த்தால் இப்படி ஒரு பாதை இருப்பதே யாருக்கும் தெரியாது எனப் புரிந்து கொண்ட கோதை. அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அவனைத் தொடர்ந்தாள்.
அந்தப் பாதையில் நடக்க நடக்க கோதையின் விழிகள் அங்கு கண்ட காட்சியில் விரிந்து கொண்டே போயின. பாதையின் பக்கத்தில் சிறு சிறு குட்டைகள் போல நீர் தேங்கி நிற்க, அதனுள் அழகழகான பூச் செடிகள் தண்ணிக்குள் முக்குளிக்காமல் வெளியே எட்டிப் பார்த்து காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.
போதாக்குறைக்கு இலந்தைமரம், ஈச்சம்மரம், காரைக்காய், சோத்துப்பழம், மைப்பழம், புளியமரம், நாவல்மரம், விளாமரம் என ஏராளமான மரங்களும் பற்றை பற்றையாக நிற்க, அவளது கரம் தன்னிச்சையாக இடுப்பில் செருகி இருந்த அவளது டப்பா ஃபோனை தடவ, அது இருந்த இடத்தில் இல்லை. அப்போது தான் அதை அறையில் விட்டு வந்தது அவளுக்கு நினைவே வந்தது.
அவளையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு முன்னே நடந்து போன ஜேம்ஸ்
“என்ன பசிக்குதா..”
எனக் கேட்டு வைக்க, அப்போது தான் தன் முன்னால் நிற்பவனையே அவள் பார்த்தாள்.
அந்த இடத்தின் அழகில் எல்லாவற்றையும் மறந்து போய் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனது குரலும் முகமும் அந்தக் கனவை மீண்டும் நினைவூட்ட அவனையே பார்த்த வண்ணம் அசையாது நின்று விட்டாள் கோதை.
மேற்கு பக்கமாக நின்றிருந்த மரங்களின் ஊடே ஊடறுத்து வந்த மாலைச் சூரியனின் மஞ்சள் கதிர்கள், இவளைப் பார்த்தபடி நின்றவனின் தலைப் பக்கமாக வெளிச்சம் கொடுக்க, அவளது கண்ணுக்குள் மீண்டும் மீண்டும் நெருப்பும் இரத்தமும் வந்து போக, இரண்டடி பின்னே நடந்தாள் கோதை.
அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளது ஒவ்வொரு அசைவும் வித்தியாசமாக இருக்கவே
“ஏய் என்னாச்சு..”
என்று கேட்டு கொண்டே அவளருகே போக, அவளோ இன்னும் வேகமாகப் பின்னே போனாள்.
ஒரு கணம் அப்படியே நின்றவன், கையில் வைத்திருந்த அந்த சிங்கம் போன்ற உருவம் கொண்ட நாய்களைப் பார்த்தான். பின்னர் அவளைப் பார்த்தான். மறுகணமே அவற்றை பிடித்திருந்த பிடியை அவன் விட, தங்கள் எஜமான் எப்போது தங்களை விடுவான் என முறுக்கி கொண்டு நின்ற நாய்கள் மூன்றும் வேகமாக கோதையின் முன்னே பாய்ந்தன.
அவ்வளவு தான் அதைப் பார்த்த கோதை ஒரே ஓட்டமாக ஓடி வந்து ஜேம்ஸின் பின்னால் நின்று அவனை இறுகக் கட்டிக் கொண்டு, அவன் தோளின் வழியே அந்த நாய்களை எட்டி எட்டிப் பார்த்தாள்.
அவளது கைகளுக்குள் அடங்கி நின்றவனது முகத்தில், அந்த நேரத்தில் அபூர்வமாய் பூத்த புன்னகையை பின்னால் நின்றிருந்த அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.