குறிஞ்சி மலர்..6
தென்றல் காற்று பூ மரங்களின் ஊடே புகுந்து அப்பால் நகர்கையில், தன் குளுமையோடு பூக்களின் சுகந்தத்தையும் ஏந்திக் கொண்டே நகர்ந்தது.
அத்தனை இதமான சுகந்தத்தை எங்கும் பரப்பும், பூமரங்களைக் கொண்ட தெருவின் முனையில் தான் ஜேம்ஸ்ஸின் ஜீவோதயம் அமைந்திருந்தது.
வீடு அமைந்திருந்த தெருவில் மட்டும் தான் வாசனை மரங்கள் ஏராளமாக இருந்தன ஆனால், ஜேம்ஸின் பங்களா அமைந்திருந்த வளாகத்தில், வாசனைப் பூக்களுக்கு மட்டும் பஞ்சம். அங்கே நின்ற பூ மரங்கள் வாசனையுள்ள பூக்களைப் பூக்காமல், வாசனையற்ற மலர்களையே பூத்து கண்கவரும் வண்ணத்தோடு ஆடியசைந்து கொண்டு நிற்கும்.
பங்களாவின் தலை வாசலில் இருந்து உள்ளே சென்ற நீளமான நடைபாதையில் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தின் ஜன்னலோரம் ஒட்டியமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூங்கோதைக்கு, வீட்டின் அமைப்பை பார்த்து ஒரே பிரம்மிப்பாக இருந்தது.
“ஆத்தாடி என்ன இது வீடோ இல்லாட்டிக்கு பாராளுமன்றமோ.. இதைச் சுத்தி பாக்கவே ஒரு நாள் பிடிக்குமே..”
என முணுமுணுத்தபடி, தான் வந்த வாகனத்தில் இருந்து கீழே இறங்கினாள் பூங்கோதை.
கீழே இறங்கி நின்றவாளோ முதலில் பார்வையால் தேடியது, இந்த பங்களாவில் மல்லிகைப் பந்தல் இருக்கிறதா என்று தான், பங்களாவின் வலது பக்க மூலையில், நீச்சல் தடாகத்துக்கு பின்னால் மல்லிகைப் பந்தல் கிடந்தது. ஆனால் கேட்பாரற்று இலைகள் எல்லாம் வாடிப் போய்க் கிடந்தது.
அதே பந்தலுக்கு முன்பாக, நீச்சல் தடாகத்துக்கும் பந்தலுக்கும் நடுவில் வரிசையாகக் கடதாசிப் பூ மரம் நின்றிருக்க, அவை எல்லாவற்றையும் பார்த்த கோதை
“என்னடா இது.. இந்த வீட்டுல வாசப் பூவள் ஒண்டையும் காணோம்மே.. எல்லாம் வாசமே வராத பூக்கள் தான் கிடக்கும் போல.. எனக்கு வேறை பூவாசம் மணக்காட்டிக்கு நித்திரையே வராதே.. ஆனா வெளியால தெருவில மட்டும் நல்ல நல்ல வாசம் உள்ள பூ மரங்களா நிக்குது..”
எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டபடி நின்ற இடத்தில் இருந்தே சுழன்று சுழன்று வீட்டை பார்த்தாள்.
அதே சமயம் வீட்டுக்கு வந்த புதியவளைத் சற்றே தூரத்தில் பார்த்ததுமே, ஜேம்ஸின் திபெத்திய மாஸ்டிஃப் நாய்கள் உறும ஆரம்பித்தன.
அந்த உறுமல் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கோதைக்கு, இதயம் வெளியே எகிறிக் குதித்துத் துடிக்கத் தொடங்கியது.
“அடியாத்தி.. இந்த வீட்டுல சிங்கமெல்லாம் வளக்கிறாங்கள் போல கிடக்கு.. கடவுளே எப்புடிக் குறுகுறுண்டு பாக்குது.. நம்மளைத் தான் பாக்குதோ.. எதுக்கும் அந்தப் பக்கம் ஒளிச்சு நிப்பம்.. எதுக்கு வம்பு..”
என்று கொண்டே, ஏகத்துக்கும் எகிறிய இதயத் துடிப்பை மட்டுப் படுத்த நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
பங்களாவின் பக்கவாட்டில் இருந்த விருந்தினர் விடுதியில் இருந்து, பூங்கோதையையே பார்த்துக் கொண்டிருந்த, வியாகேசுக்கும் வஞ்சிமாறனுக்கும் அவள் மீது இனம் புரியாத ஒரு அக்கறை வந்து ஒட்டிக்கொண்டது.
“வஞ்சி நீ இங்கயே நில்லடா.. நான் போய் அந்த பிள்ளையிட்ட எல்லாத்தையும் சொல்லி முடிஞ்சால் திரும்ப அனுப்பியிட்டு வாரன்.. ஆனா அது முடியாதெண்டு தான் நினைக்கிறன்..”
“ஓம் ஓம் சொல்லி அனுப்பி விடுங்கோ.. ஆனா பாஸை நினைக்கத் தான் பயம்மா கிடக்கு.. அவர் இந்தளவும் உந்தப் பிள்ளை வந்ததை பாத்திருப்பரே.. அதோட எங்கட பாஸுக்கு தெருவில ஏதும் நடந்தாலே தெரிஞ்சிடும்.. உந்த பிள்ளை வேறை பங்களாவுக்குள்ள வந்துட்டுது..”
“ஓமடா அதுவும் ஒரே யோசனையாக் கிடக்குது..”
“பெரிசு.. இனி எங்கட பாஸ் நினைச்சாலே தவிர உந்தப் பிள்ளை இங்க இருந்து நகரேலாது..”
“அப்ப ஒண்டு செய்வம்..”
“என்ன..”
“அந்த பிள்ளைக்கு இங்க நடக்க போறதை பத்தி சொல்லுவம்.. இங்க ஏன் இப்ப உன்னைக் கூட்டிக் கொண்டு வந்ததெண்டும் சொல்லுவம்..”
“சரி சொல்லுவம் ஆனா பாஸுக்கு தெரியாமல்..”
“அது கஷ்டமடா சாமி.. சொல்லுவம்.. பிறகு பாப்பம் என்ன நடக்குதெண்டு..”
“சரி சரி வாங்கோ வெள்ளனப் போவம்.. இல்லை நான் இங்கயே இருக்கிறன் நீங்கள் மட்டும் போங்கோ.. அந்தப் பிள்ளையக் காப்பாத்துற அவசரத்துல என்ரை தலைக்கு மேல தூங்குற கயித்த மறந்திட்டன்.. எப்புடியும் ரெண்டு நாளைக்கு சரி நான் பாஸுக்கு முன்னால வரக்கூடாது.. நீங்கள் போய்க் கதையுங்கோ..”
என்றபடி வஞ்சிமாறன் ஒதுங்கிக் கொள்ள, வியாகேசு பூங்கோதையை நோக்கிப் போனார்.
“அம்மாடி உன்ரை பேர் என்ன.. எங்க இருந்து வாராய்..”
“என்னையா கேக்கிறியள்..”
“ஓம் உன்னைத் தான் கேக்குறன்..”
“நான் பூங்கோதை எல்லாரும் என்னைய கோதை எண்டு கூப்பிடுவினம்.. நான் வவுனியாவில இருந்து வாரன்.. எங்கடை அப்பா இந்த வீட்டுக்காரருக்கு கடன் நிறைய குடுக்கோணுமாம்.. அப்ப பின்ன என்னைய இங்க போய் வேலை செய்து கடனை அடைக்கச் சொல்லிச் சொன்னாரா அது தான் நானும் வந்திருக்கிறன்..”
“உங்கடை அப்பா வேலை செய்து கடனை அடைக்கச் சொன்னாரா.. ஆரவர் அவரிந்தை பேர் என்ன..”
“எங்கடை அப்பாவை உங்களுக்குத் தெரியாதோ..”
“தெரியாதெண்டுறதனால தானேம்மா கேக்குறன்..”
“தில்லையம்பலம்.. அவரிந்த மூத்த பொண்ணு தான் நான்..”
“என்னது தில்லையம்பலத்திந்த மூத்த பொண்ணா..”
“ஓம் அவரிந்த மூத்த பொண்ணு தான் அதுக்கேன் இப்புடி வாயைப் பிளக்குறியள்..”
“இல்லை அந்தாளுக்கு ஒரு பிள்ளை எண்டு தானே கேள்வி..”
“என்னத்த பெரிசா கேள்விப்பட்டிட்டியள் நானும் அவரிந்த பிள்ளை தான்..”
“சரிம்மா சரிம்மா ஒத்துக் கொள்றன் நீயும் தில்லையம்பலத்திந்தை மகள் தான்.. இப்ப எதுக்கு டென்ஷன் ஆகிறாய்..”
“டென்ஷனாகாம என்ன செய்றது அவரிந்த மகள் எண்டு சொல்லுறன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறியள்..”
“சாரிம்மா.. கொஞ்சம் வயசாயிடுச்சா அது தான் திரும்பத் திரும்ப தெளிவு படுத்துறதுக்காக கேக்க வேண்டி கிடக்கு..”
“ம்ம்.. பரவாயில்ல பரவாயில்ல.. ஆனா உங்கள பாத்தா வயசான மாதிரி தெரியேல்லையே.. என்ரை அப்பாவை விடவே வயசு குறைஞ்ச மாதிரி தான் இருக்கிறியள்..”
“அப்புடியோ உன்ரை அப்பாவுக்கு எத்தினை வயசு..”
“என்ரை அப்பாவுக்கு அறுபது முடிஞ்சு அறுபத்தியொண்டு நடக்குது..”
“எனக்கு அறுபத்தைஞ்சு வயசம்மா..”
“பாத்தா அப்புடி தெரியேல்லையே.. சரி சரி நான் என்ன வேலை செய்யோணும்.. என்னைய இந்த வீட்டுக்கார முதலாளியிட்ட கூட்டிட்டு போறியளா.. வீட்டுக்கு வேலை செய்ய வந்துட்டு இப்புடி வெட்டி பேச்சு பேசிட்டு இருந்தா முதலாளிக்கு கோவம் வந்திடும்.. பிறகு சம்பளத்தில பிடிச்சிக்குவாங்களே எதுக்கு வம்பு..”
என்று கொண்டே வாகனத்தில் இருந்து, தன்னுடைய ஒரு துணி பையையும், ஒரு சிறிய மரப்பெட்டியையும் எடுத்துக் கொண்ட கோதையையே பார்த்திருந்தார் வியாகேசு.
“ஆ.. கேக்க மறந்துட்டன் உங்கட பேர் என்ன.. நீங்களும் இங்கினை தான் வேலை பாக்கிறியளோ.. உங்கள நான் எப்புடி கூப்பிடுறது.. இந்த வீட்டு முதலாளி ரொம்பக் கோவக்காரரா..”
என்று மீண்டும் கோதை கேள்விக் கணைகளை தொடுக்க, வியாகேசோ அவள் கேட்ட கேள்விகளை காதில் வாங்காமல் அப்படியே நின்றிருந்தார்.
தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்தபடி கிட்டத்தட்ட சிலையாக நின்றிருந்த வியாகேசின் தோளை மெல்லத் தொட்டு உலுக்கி
“அப்பா.. உங்களிட்டைத் தான் கேக்கிறன்.. இங்கின தான் வேலை பார்க்கிறியளா.. பேரென்ன..”
என்று மீண்டும் கேட்க, அவளது உலுக்கலிலும் அப்பா என்ற அழைப்பிலும், வியாகேசின் சிலைக்கு அப்போது தான் மீண்டும் உயிர் வந்தது.
“என்ன பிள்ளை என்னை இப்ப என்னெண்டு கூப்பிட்டனீ..”
“இதென்ன கேள்வி அப்பாண்டு கூப்பிட்டனான்..”
“புதுசாப் பாக்குற எல்லாரையும் இப்புடித்தான் கூப்பிடுவியோ..”
“அது எப்புடி கூப்பிட முடியும்.. எல்லாரையுமே அப்படி கூப்பிட முடியாது.. உங்கள பாத்தா தானாவே மரியாதை வருகுது.. அதுதான் அப்புடி கூப்பிட்டனான்.. ஏன் உங்களுக்கு அப்புடி கூப்பிடுறது பிடிக்கேல்லையோ.. பிடிக்காட்டிக்கு சொல்லுங்கோ இனி அப்புடி கூப்பிடேல்லை..”
“அப்புடி எல்லாம் இல்லை.. நீ எப்புடி எண்டாலும் கூப்பிட்டுக் கொள்..”
“சரி நான் கேட்டதுக்கு நீங்கள் பதில் சொல்லேல்லையே..”
“ஓ அதுவா.. என்ரை பேர் வியாகேசு.. இங்க தான் வேலை பாக்குறன்.. போதுமா..”
“போதாதே கடைசியா ஒரு கேள்வி கேட்டனே.. முதலாளி ரொம்ப கோவக்காரரா எண்டு ஒரு கேள்வி கேட்டனே.. அதுக்கு நீங்கள் பதில் சொல்லேல்லையே..”
“ஏன் அப்புடி ஒரு கேள்வி கேக்கிறாய்..”
“அங்க வீட்டில இருந்து வரும் போது அப்பா அப்புடித்தான் சொல்லி அனுப்பி விட்டவர்.. அதுதான் அதை தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டனான்..”
“இஞ்சை பாரு பிள்ளை அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்..”
“அப்புடி எண்டுறியளோ.. அப்ப சரி.. நான் இங்க எங்க தங்கோணும்.. என்னைய முதலாளியிட்டை கூட்டிட்டு போறீங்களோ..”
என்று கோதை பதிலுக்கு கேட்க, வியாகேசு பக்கத்தில் நின்றிருந்த ஜேம்ஸ்ஸின் பாடிகார்ட்ஸ் இருவரையும் பார்த்தார்.
“என்ன தேவா.. உங்கடை எஜமான் என்ன சொன்னவர்.. வந்ததுல இருந்தே அமைதியாய் நிக்கிறாய்.. ரஹ்மான் நீயாவது வாயைத் திறந்து சொல்லன்..”
என்று வியாகேசு அவர்கள் இருவரையும் கேட்க, சட்டென்று திரும்பிய கோதை, அந்த இரண்டு பாடிகார்ட்ஸையும் பார்த்து மெல்லச் சிரித்தாள்.
“என்னங்கப்பா இவையள் ரெண்டு பேரும் யாரு..”
“வீட்டு முதலாளியோட பாடிகார்ட்ஸ்..”
“பரவாயில்லையே உங்கடை முதலாளி நல்ல இசையமைப்பாளர்களாக பாத்து பாடிகார்ட்ஸ்ஸா வைச்சிருக்கிறார்..”
“என்னது இசையமைப்பாளர்களோ..”
“ஓம் ஓம்.. இவரு தேனிசைத் தென்றல் தேவா.. அப்புறம் அவரு இசைப்புயல் ரஹ்மான்.. அப்ப உங்கட முதலாளி ஒரு நல்ல இசை ரசிகன் தான்..”
என்று சொல்லிக்கொண்டே தேவாவையும் ரஹ்மானையும் காட்டினாள் கோதை.
பூங்கோதை சொன்னதை கேட்டு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அப்படியே கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள் ஜேம்ஸின் பாடிகார்ட்ஸ்.
தான் சொன்னதைக் கேட்டு மெல்லிய புன்னகை கூட சிந்தாமல் நின்றிருந்த இருவரையும் பார்த்த கோதை சட்டென்று வியாகேசின் பக்கமாக குனிந்து
“ஏனுங்கப்பா உவையளுக்கு காது கேக்காதோ.. நான் சொன்னதை கேட்டு சின்னதா கூட ஒரு சிரிப்பும் சிரிக்காமைக்கு நிக்கினம்..”
எனத் தன் சந்தேகத்தை கேட்க,
“அவையள் அப்புடித்தான் முதலாளியிந்தை பாடிகார்ட்ஸ் எல்லோ அதனால சிரிக்க மாட்டினம்..”
என்று பதில் சொன்னார் வியாகேசு.
அவர் சொன்ன பதிலை கேட்டதும்
“அவையள் என்னவோ செய்து தொலையட்டும்.. ஆனா எனக்கு தான் சிரிக்காத உம்மணா மூஞ்சியளைப் பாத்தா அலர்ஜி.. அதனால இவையள் வேண்டாம் நீங்களே உங்கடை முதலாளியிட்டை கூட்டிக்கொண்டு போங்கோ..”
என்று பூங்கோதை சொல்லிக் கொண்டே, வியாகேசுவின் பக்கத்தில் போய் நிற்க, அவரோ அப்போதும் தேவாவையும் ரஹ்மானையும் தான் பார்த்தார்.
இருவரும் பங்களாவின் பின்பக்கம் இடது மூலையில் இருந்த அந்த மாட்டுத் தொழுவத்தை காட்டினார்கள். அதைப் பார்த்த வியாகேசு உண்மையிலும் விக்கித்துத் தான் போனார்.
“கடவுளே இது என்ன சோதனை இந்த பிள்ளை எப்புடி அந்தத் தொழுவத்துல இருக்கும்..”
என வியாகேசு வாய் விட்டே முணுமுணுக்க,
“என்னப்பா அந்த கொட்டில் தான் என்ரை இடமா.. அப்ப நான் வாரன்.. நீங்க இங்கதான இருப்பியள் நாங்கள் பிறகு சந்திப்பம்..”
என்று சொல்லிக் கொண்டு ஒரு கையில் தன்னுடைய துணி பையையும், மறுகையில் அந்த சிறு மரப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு அந்த தொழுவத்தை நோக்கி நடக்க தொடங்கினாள் பூங்கோதை.
“கொஞ்சம் பொறும்மா.. அவங்கள் சொல்லுறதைக் கேட்டு தான் நீ நடக்கோணும்.. உன்னைய பாத்தாத் தைரியமான பிள்ளை மாதிரி தெரியுது.. அதனால இங்க என்ன நடந்தாலும் உடைஞ்சு போகாமல் தைரியமா எதிர்கொள்ளப் பார்.. நீ இங்க இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கேல்லை ஆனாலும் எனக்கும் வேறை வழி தெரியேல்லை..”
என்று பூங்கோதையை வியாகேசு வழி மறித்து சொல்ல, அவரைப் பார்த்து மெல்ல புன்னகைத்து விட்டு போய்விட்டாள் பூங்கோதை.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த வியாகேசு ‘கொஞ்சம் வித்தியாசமான பெண்தான்’ என்று தனக்குள் சொல்லி விட்டு தானும் அங்கிருந்து போய்விட்டார்.