குறிஞ்சி மலர்.. 8
வானம் மழை மேகங்களை சுமந்து கொண்டு மப்பும் மந்தாரமுமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. சூரியனை வெகு பிரயதனப்பட்டு மேகங்கள் மூடி கிடக்க, வாயு பகவானும் வெகு பிரயத்தனப் பட்டு மேகங்களைக் கலைத்து சூரியனை வெளிக்கொணர முயன்று கொண்டிருந்தார்.
தனக்கு கொடுக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தின் வாசலில் அமர்ந்து கொண்டு, மழை வருமா? வராதா? என்பது போல விரல் நகங்களைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பூங்கோதை.
பூங்கோதை ஜீவோதயத்திற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்களாகி விட்டிருந்தன. இதுவரை அவளிடம் வந்து உனக்கு இது தான் வேலை என்று யாருமே சொல்லியிருக்கவில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணிற்கு வேலை ஏதும் செய்யாமல் சோம்பிக் கிடப்பது பெருங் கஷ்டமாகக் கிடந்தது.
அதன் காரணமாக தன்னால் இயன்ற வேலைகளை தானே இழுத்துப் போட்டு செய்ய தொடங்கியிருந்தாள் பூங்கோதை. வியாகேசும் அவள் கேட்டிருந்த பொருட்களை வாங்கி கொடுத்திருந்ததால், தனது மூன்று நேர சாப்பாட்டையும் தானே சமைத்து உண்ணத் தொடங்கியிருந்தாள் அவள். வியாகேசு தனக்காக செலவழித்த பணத்தையும் கணக்காக அவள் எழுதி வைக்க தவறவில்லை.
இப்போது கோதை மனதார வேண்டிக் கொண்டிருந்த ஒரே விடயம் ஒரு மழை பெய்தால் என்ன என்பதுதான். அதற்கான காரணமும் இருந்தது. அவள் இங்கே வரும்போது பார்த்த மல்லிகைப் பந்தல் கவனிப்பாரற்று வாடி வதங்கி போயிருந்தது. இந்த ஐந்து நாட்களில் அந்தப் பந்தலை சீராக்கி நீரூற்றி அழகு படுத்தி வைத்திருந்தாள் கோதை. கிணற்றிலிருந்து நீரை மொண்டு கொண்டு சென்று பந்தலுக்கு ஊற்றுவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஆனாலும் கோதை அதை விரும்பியே செய்தாள்.
ஆனால் இன்று என்னவோ அவளது காலில் ஒரு வலி ஏற்பட்டதால் அவளால் தண்ணீர் கொண்டு சென்று மல்லிகை கொடிக்கு ஊற்ற முடியவில்லை, அதனாலேயே வாசலில் அமர்ந்து கொண்டு மழை ஒன்று அடித்தால் தான் என்ன என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.
அவள் அவ்விதம் இருந்து யோசனை செய்து கொண்டிருந்த நேரம், ஜேம்ஸின் பாடிகார்ட்ஸ்ஸான தேவாவும் ரகுமானும் அவளை நோக்கி வந்தார்கள்.
கோதையின் பாதுகாப்பிற்காக எந்நேரமும் அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் வியாகேசு, அவளை நோக்கிச் சென்ற தேவாவையும் ரகுமானையும் பார்த்துவிட்டு தானும் அந்த இடத்தை நோக்கி விரைந்தார்.
“என்னப்பா என்ன விசியம்.. பீட்டர் இந்தப் பிள்ளையை கூட்டி வரச் சொன்னவனோ..”
“இல்லை..”
“அப்புறம்..”
“ஐயா இண்டைக்கு மலேசியா போறார்..”
“ஓம் தெரியும்..”
“இந்தப் பிள்ளையை உள்ள அவரிந்தை சித்தப்பா சித்திக்கு வேலை செய்ய விடோணுமெல்லோ..”
“ஓ..”
“ஓம் அதுதான் கூட்டிக் கொண்டு போக வந்தனாங்கள்..”
“உங்கடை எசமானுக்கு வந்திருக்கிறது பையனோ பொண்ணோ எண்டு தெரியுமோ தெரியாதோ நீங்கள் சொன்னனியளோ இல்லையோ..”
“அது எங்கடை வேலை இல்லை.. ஐயா நினைக்கிறதை செய்யுறது மட்டும்தான் எங்கடை வேலை..”
“சரி இப்ப உங்கடை ஐயா என்ன நினைச்சவர்..”
“இந்தப் பிள்ளையை கூட்டிக் கொண்டு போய் உள்ளே அவைக்கு அறிமுகப்படுத்தி வைக்கோணும்..”
“அப்புடி எண்டு அவன் நினைச்சானோ..”
“இல்லை.. ஆனா அதுதானே வழக்கம்..”
“அது சரி போங்கோ போங்கோ கொஞ்ச நேரத்துல நானே கூட்டிக்கொண்டு வந்து விடுறன்..”
“ஐயாவுக்கு என்ன சொல்லுறது..”
“அவனா ஒண்டும் கேக்க மாட்டான் எண்டு தெரியும் தானே.. போங்கோ நான் கூட்டி வந்து விடுவன்..”
என வியாகேசு சற்றே அழுத்தமாகச் சொல்ல, ரகுமானும் தேவாவும் அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து போய் விட்டார்கள்.
அவர்கள் இருவரும் சென்றதும் வியாகேசு பூங்கோதையைப் பார்த்தார். அவளும் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள், மெல்லத் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அவளுக்கு பக்கத்தில் அமர்ந்த வியாகேசு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க அந்த அமைதியைக் கோதை தான் உடைத்தாள்.
“என்னப்பா என்ன விசியம்..”
“என்னம்மா எதைக் கேக்கிறாய்..”
“இல்லை இப்ப நீங்கள் எதையோ என்னட்டை சொல்லத்தானே வந்தனியள்.. ஆனா அமைதியா இருக்கிறியளே அது தான் கேக்கிறன் என்ன விசியம் எண்டு..”
“அது
“சொல்லோணும் எண்டு தானே வந்தனீங்கள் சொல்லுங்கோ.. நான் ஒண்டும் தப்பா நினைக்கவும் மாட்டன் உங்களை திட்டவும் மாட்டன் சொல்லுங்கோ..”
“நீ என்னைத் தப்பா நினைச்சாலும் சரி என்னைத் திட்டினாலும் சரி நான் சொல்லித்தான் ஆவன்.. நீ வேறை வாத்தைக்கு வாத்தை என்னைய அப்பா அப்பாண்டு சொல்லுறாய்.. நீ என்ன நினைச்சு அப்புடி கூப்பிடுறியோ எனக்குத் தெரியாது.. ஆனால் நான் உன்னை மகளாத் தான் பாக்கிறன்.. அதனால நான் சொல்லித்தான் ஆகோணும்
“அப்ப சொல்லுங்கோவன்..”
“இங்க பாரு பிள்ளை.. இந்த வீட்டுக்கு நீ வரேக்க முதல் உன்ரை அப்பா என்னவோ இங்கினை கடன் வாங்கினதாயும் அதை அடைக்கோணும் எண்டால் நீதான் போய் அங்க வேலை செய்யோணும் எண்டதாயும் சொன்னவர் எண்டு சொன்னீ தானே..”
“ஓம் சொன்னனான்..”
“ஆனால் இந்த வீட்டுக்கு நீ வந்த விசியமே வேறை.. அது என்னெண்டு நான் உனக்குச் சொல்லியாக வேண்டிய நிலையில இருக்கிறன்..”
“ஐயோ அப்பா உப்புடி சுத்தி வளைக்காமல் விசியம் என்னெண்டு டக்கெண்டு சொல்லுங்கோ.. எனக்கு தலையே வெடிச்சிடும் போல கிடக்குது..”
“…………”
“ஏனப்பா அமைதியாயிட்டியள்..”
“இந்த வீட்டுக்கு நீ அடிமையாய் வந்திருக்கிறாய் எண்டு உனக்குத் தெரியுமோ..”
“அடிமையாவோ என்ன சொல்லுறியள்.. நான் இங்கினை வேலை செய்யப் போறதை அடிமை எண்டு சொல்லுறியளோ..”
“இல்லை பிள்ளை..”
“அப்ப என்ன.. நீங்கள் சொல்லுறது எனக்கு விளங்கவேயில்லை..”
“உனக்கு எப்புடி சொல்லுறது.. சரி நான் விளக்கமாவே சொல்லுறன்..”
“ம்ம்..”
“இந்தப் பங்களாவோட முதலாளி இருக்கிறார் எல்லோ.. அவருக்கும் அவரிந்தை மாமன் மாமி சித்தப்பன் சித்திக்கும் ஆகவே ஆகாது.. இன்னும் சொல்லப் போனால் உறவுகள் எண்டுற பேரில இருக்கிற விஷக்கிருமிகள் அதுகள்.. உறவு எண்டதாலே அவையளுக்கு நேரடியாப் பாடங் கற்பிக்க முடியாமல் போய்விடும்.. மறைமுகமா இந்த வீட்டு முதலாளி அவைக்கு நல்ல தகடு குடுக்கிறவன்.. அது எப்புடியெண்டால்..”
“எப்புடி..”
“அதைத் தான் சொல்ல வாரன்.. முதலாளியிட்டை ஏதும் வேலை ஆகோணும் எண்டு நினைக்கிறவைக்கு, இல்லாட்டிக்கு நிறைய கடன் வாங்கிட்டு அதை அடைக்க முடியாதவைக்கு அவர் ஒரு அக்ரிமெண்டு போடுவார்.. அது என்னெண்டால் வாங்கின கடனை அடைக்க முடியாமல் போற பட்சத்துல.. உங்கடை வீட்டுல இருக்கிற உறவுக்காரர் ஆராவது ஒராளை தன்ரை வீட்டுக்கு அஞ்சு மாசத்துக்கு அனுப்பி வைக்கோணும் எண்டும்.. அந்த நபர் தான் சொல்லுற வேலை எல்லாத்தையும் முகஞ் சுளிக்காமல் கிட்டத்தட்ட ஒரு அடிமை போல அடுத்த கேள்வி கேக்காமல் செய்யோணும் எண்டும் ஒரு ஒப்பந்தம்.. அதே மாதிரி இங்கே இருந்தும் ஆராவது ஒராளை எதிர்த்தரப்பிட்டை முதலாளி அனுப்பி வைப்பார்.. இந்த விசியம் கிட்டத்தட்ட மூண்டு வருஷமா நடந்து கொண்டிருக்குது.. இது ஆரம்பிச்சு வைச்சதுக்கான காரணம் இந்த வீட்டுல இருக்கிற விஷமியள் அங்கினை போய் நல்லா விழுந்து எழும்பியிட்டு வரோணும் எண்டு தான்.. ஆனா போகப் போக அவருக்குப் பிடிக்காத எதிரியளிந்தை மகன்மாரையும் இங்க அஞ்சு மாசம் வைச்சு வேலை வாங்கத் தொடங்கியிட்டார்.. அந்த வகையில இப்ப வந்து மாட்டுப் பட்டது நீ தான்..”
“சரியான திமிர் புடிச்ச ஆளா இருப்பர் போல உங்கடை முதலாளி..”
“இதுல என்னம்மா திமிர்.. அவர் ஆரையும் கட்டாயப் படுத்தேல்லையே.. அவை தானே அக்ரிமெண்டு போட்டு வருகினம்.. உங்கப்பன் கூட கடன் வாங்கீட்டு அதைக் கட்ட முடியாமல் உன்னை இங்க அனுப்பேல்லை.. அவனுக்கு இங்க முதலாளியிட்டை ஏதோ காரியம் ஆக வேண்டிக் கிடக்கு அதை நிறைவேத்த தான் உன்னைய பலியாடா அனுப்பி இருக்கிறான்..”
“போதும் நீங்கள் சொன்ன வரைக்கும் போதும்.. நானும் கேட்ட வரைக்கும் போதும்.. எங்கப்பா பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. அவர் உப்புடிக் கீழ்த்தரமா எல்லாம் யோசிக்க மாட்டார்.. உண்மையிலயே கடன் தான் வாங்கி இருக்கிறார்..”
“சரி கடனை வாங்கினவன் வேலை செய்ய தன்ரை சொந்த மகளை அனுப்பாமைக்கு உன்னை ஏன் அனுப்பினவன்..”
“அது தான் இங்க வந்த அண்டைக்கே சொன்னனே..”
“எது உன்ரை தொங்கச்சிக்கு குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்து பழக்கமில்லை எண்டியே அதுவா.. அட என்னம்மா நீ இன்னும் உலகந் தெரியாத ஆளா இருக்கியே.. பத்து வயசுப் பிள்ளைக்குக் கூட இப்புடிச் சொல்லி வேலைக்கு அனுப்பினால்.. தன்னை எந்த நிலையில வைச்சிக்கினம் எண்டுறது புரியும் உனக்குப் புரியவே மாட்டன் எண்டுது..”
“போதுமப்பா.. சில விசியங்களைப் பத்திக் கதைக்காமல் விடுறது தான் நல்லது..”
“சரியம்மா நான் கதைக்கேல்லை.. ஆனா..”
“என்னப்பா..”
“இந்த வீட்டுக்காரருக்கு தில்லையம்பலம் எண்டாலே ஆகாது.. உன்னை வேறை தன்ரை ஒரேயொரு மகள் எண்டு அவன் அனுப்பி இருக்கிறான்.. அப்ப முதலாளி உன்னை நடத்திறதே வேறை விதமா இருக்கும் அது தான் யோசனையா இருக்கும்மா..”
“அடப் போங்கப்பா.. அப்புடி எப்புடித்தான் நடத்தப் போறாரு உங்கடை முதலாளி எண்டு நானும் பாக்கிறன்.. என்னைய நினைச்சு நீங்கள் வருத்தப் படாதேங்கோ நான் பாத்துக் கொள்ளுறன்..”
“இருந்தாலும்..”
“நான் பாக்கிறன் நீங்கள் என்னைய கூட்டிக் கொண்டு போங்கோ..”
“இப்ப நான் கூட்டிக் கொண்டு போறனே.. அதுகளோட கவனமா நடந்து கொள்.. சொல்லுற வேலையை வாயைத் திறக்காமல் செய் பிள்ளை.. அதுகள் மனுஷாளை நோகடிக்கிறதுல டிப்ளோமா முடிச்சதுகள்..”
“என்ரை மாமியை விடவோ உவையள் மோசமானவை..”
“மாமியோ அது ஆரு பிள்ளை..”
“என்ரை புகுந்த வீட்டு மாமி தான்..”
“என்ன பிள்ளை சொல்லுறாய் உனக்கு கலியாணம் ஆயிட்டுதோ..”
“ஓமப்பா..”
“பாத்தால் சின்னப்பிள்ளை போலக் கிடக்குது..”
“என்னையப் பாக்கவோ.. முதல்ல போட்டிருக்கிற கண்ணாடியை துடைச்சிட்டு போடுங்கோ.. எங்க மாமி என்னைய வயசான கழுதை எண்டு ஏசுது நீங்கள் என்னடாண்டால் சின்னப்பிள்ளை எண்டுறியள்..”
“உன்ரை மாமிக்கு கண்ணாடி மாட்டி விடு.. அது சரி நீ கிறிஸ்டியன்ஸ்ஸா..”
“இல்லையேப்பா நான் இந்துப் பொண்ணு தான் ஏன் கேக்கிறியள்..”
“இல்லை கலியாணம் ஆயிட்டுது எண்டு சொல்லுறாய் குங்குமத்தைக் காணோம் அது தான் கேட்டனான்..”
“ஓ அதுவா.. என்ரை வீட்டுக்காரர் மோசம் போயிட்டாரப்பா..”
“என்னம்மா சொல்லுறாய்.. அது தான் கலர்ப் புடவை உடுத்தாமல் வந்ததில இருந்து உந்தப் புடவையளைக் கட்டுறியோ.. சாரிம்மா தெரியாமல் கேட்டிட்டன்..”
“எதுக்குப்பா சாரி தெரியாது எண்டுறதால தானே கேட்டியள்..”
“இந்தச் சின்ன வயசுல இவ்வளவு விசியம் நடந்திட்டுதா உன்ரை வாழ்க்கையில..”
“இருபத்தைஞ்சு வயசு சின்ன வயசெண்டு உங்களுக்காவது புரியுதே.. ஆனா அங்கினை சொல்லுங்கள் வயசான கழுதையெண்டு..”
“எந்தக் கழுதை அப்புடி சொன்னது..”
“மாமிக் கழுதை தான்..”
“அவ கிடக்கிறாள் கிறுக்கி..”
என வியாகேசும் கோதையின் மனதறிந்து மெல்லச் சிரித்துப் பேசத் தொடங்கினார். ஆனாலும் அவருக்கு உள்ளூர அவள் கணவனை இழந்த சின்னப் பெண் என்பதை வேதனையாகவே இருந்தது.