Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 9

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 9

by Subhashri Srinivasan
4.8
(14)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 9

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

கவன ஈர்ப்பு…!!

அல்லியின் மானத்தை காப்பாற்றி விட்டோம்.. அதனால் அவள் நிச்சயம் தனக்கு நன்றி சொல்லுவாள் என்று எதிர்பார்த்து  வெளியே வந்த ஆதிக்கு  அவன் கையை உதறி அவள் பேசிய பேச்சு அதிர்ச்சியை தந்தது..

“நீங்க இன்னும் திருந்தலை இல்ல ஆதித்யா? திருந்தவும் மாட்டீங்க.. உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.. காலம் ஃபுல்லா திருட்டுத்தனம் பண்ணி பண்ணி உங்களுக்கு அதுவே பழக்கமா போச்சு..” என்று அவனை திட்ட ஆரம்பித்தாள்.

“ஏய் என்னடி ரொம்ப பேசுற? உன் வாய் இப்படி கிழிஞ்சிருக்கும்போதே இப்படி பேசுற.? நல்லா வேற இருந்துச்சுன்னா அவ்வளவுதான்..” என்றவன் தன் கைக்குட்டையை எடுத்து அவள் வாயோரத்தில் இருந்த ரத்தத்தை துடைத்து விட்டான்..

“உனக்கு ஆபத்துன்னு மானத்தைக் காப்பாத்த அங்கிருந்து ஓடி வந்தவனை பார்த்து அதுக்கு தேங்க்ஸ் சொல்லலைன்னா கூட பரவாயில்லை.. இப்படி புடிச்சு திட்டுற?”

அவளை முறைத்தபடி கேட்டான்…

“ஆமா.. இவர் வரலைனா எங்களுக்கு எங்களை காப்பாத்திக்க தெரியாது பாரு.. நீங்க வரலைன்னாலும் அவனோட உயிரை எடுத்தாவது நான் என்னை காப்பாத்திட்டு இருப்பேன்.. அதனால நீங்கதான் வந்து ஹீரோ மாதிரி என்னை காப்பாத்துனதுன்னு  நினைச்சு ரொம்ப மிதப்புல இருக்காதீங்க”

அவள் சொன்னதை கேட்டவனுக்கு பயங்கரமாய் கோபம் வந்தது..

“கிழிச்ச நீ.. அவன் போட்ட ஒரு அடில மயக்கம் போட்டு விழுந்தவதானே நீ.. அப்படியே அவனை கொன்னுட்டு தப்பிச்சு வருவாளாமா இவ..”

அவன் சொல்லிக்கொண்டே அவள்  உடை ஆங்காங்கே கிழிந்து இருந்ததை கவனித்தவன் தன் கோட்டை கழட்டி அவள் அனுமதி இல்லாமல் அவளுக்கு அதை மாட்டி விட்டான்..

அப்படி உரிமை எடுத்துக் கொண்டு அந்த கோட்டை அணிவித்ததில் அவன் பக்கம் திரும்பி முறைத்தவள், “அதான் அஞ்சு நிமிஷத்துல எழுந்துட்டேன் இல்ல? நிச்சயமா அவனை கொன்னுட்டு வெளிய வந்திருப்பேன்” என்றாள் அவள்..

“இப்ப எதுக்குடி என்னை சம்பந்தமே இல்லாம திட்டுற?” என்று அவன் கேட்க

“சம்பந்தமே இல்லாம திட்டுறேனா..? நீங்க பண்ண வேலைக்கு பின்ன பாராட்டவா செய்வாங்க.. இந்த கம்பெனியோட பியூனையே உங்களோட ஸ்பையா வெச்சு இங்க நடக்கிறதெல்லாம் நோட் பண்ணி நீங்க உங்க பிசினஸ்ல ஜெயிச்சுட்டு இருக்கீங்களே.. இப்படி கோல்மால் பண்ணித்தான் பிசினஸ் நடத்தணுமா..? ஏன் இதெல்லாம் பண்ணாம பிசினஸ் நடத்துனா ஓடாதா? மத்த விஷயத்துல எல்லாம் எவ்வளவு பெர்ஃபெக்டா இருக்கீங்க நீங்க? இந்த ஒரு விஷயத்துனால அதெல்லாம் அடிப்பட்டு போகுது.. உங்களுக்கு இதை புரிஞ்சிக்க முடியலையா?” சிறிது தழைந்த குரலில் கேட்டாள் அவள்..

“இன்னைக்கு அந்த ஸ்பை இல்லன்னா நான் வந்திருக்கவும் மாட்டேன்.. அந்த மிதுன் உன்னை சீரழிச்சிருப்பான்.. இது ஏன் உனக்கு புரியவே மாட்டேங்குது? என்னோட விதண்டாவாதம் பண்ணனும்னே பண்றியா?” எரிச்சலாய் கேட்டான் அவன்..

“எனக்கு நடந்ததை சொல்லி சொல்லி நீங்க செஞ்சதை நியாயப்படுத்தாதீங்க..  என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது நியாயம் கிடையாது.. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.. தயவுசெஞ்சு இந்த பழக்கத்தை மாத்திக்கோங்க.. நீங்க செய்யற தொழிலை நேர்மையா செய்றதுக்கு ட்ரை பண்ணுங்க..”

என்னதான் அவள் அவனுடன் சண்டை போட்டாலும் அவள் குரலில் தான் எல்லா விதத்திலும் சரியானவனாக மாற வேண்டும் என்ற அக்கறை இருந்ததை அவன் கவனிக்காமல் இல்லை..

ஆனால் தன்னிடம் உள்ள குறையை சுட்டிக்காட்டி தன்னை திருத்த நினைப்பவள் தான் அவளுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியை கண்டு கொள்ளாமல் அதைப்பற்றி ஒரு நன்றி உணர்வு கூட இல்லாமல் பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு எரிச்சலை தந்தது..

“சரி.. இப்படியே பேசிட்டு இருந்தா இதுக்கு எண்டே கிடையாது.. கிளம்பு.. நான் உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுறேன்… ஆனாலும் உனக்கு இதே வேலையா போச்சு.. ஏதாவது பிரச்சனையில் போய் வான்டடா மாட்டிக்க வேண்டியது.. நான் வந்து உன்னை காப்பாத்தறது.. “

அவளை அர்ச்சித்தபடியே அவன் கார் கதவை திறந்து விட அவளும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஏறி  அமர்ந்தாள்..

“ஆமா.. இவரை நாங்க தான் வெத்தலை பாக்கு வச்ச அழைச்சோமாக்கும் எங்களை காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு”

உதட்டை சுழித்தபடி அவள் சொல்ல அவனோ “இவளை..” என்று பல்லை கடித்து கையை இறுக்கியவன் அவளை திருத்த முடியாது என்று உணர்ந்து ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்தான்..

அவள் புறம் திரும்பி அவளை பார்த்தவன் “இவ எவ்வளவு திட்டினாலும் நான் ஏன் இவளுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன்? ஏன்டா ஆதி இப்படி ஆயிட்ட நீ? இது எனக்கு தேவையா?”

ஸ்டியரிங்கை இறுக்கியபடி தன்னையே வாயில் போட்டு அரைத்துக் கொண்டவன் ஆக்சிலரேட்டில் காலை வைத்து வேகமாக வண்டியை கிளப்பினான்..

காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் நேரே ஒரு துணி கடைக்கு சென்றான்.. அவளை இறங்கச் சொல்லி அந்த கடைக்குள் கூட்டி சென்றான்…

“எதுக்கு இப்ப இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க? என்னை எங்க வீட்டுக்கு தானே கொண்டுவிடறேன்னு சொன்னீங்க..?” அவன் எதற்கு அவளை அங்கு கூட்டி வந்திருக்கிறான் என்று புரியாமல் கேட்டாள் அவள்..

“உன்னால கேள்வி கேட்காம இருக்கவே முடியாது இல்ல? இப்படியே உன் வீட்டுக்கு போனேனா உன்னோட கிழிஞ்ச டிரஸ் எல்லாம் பார்த்து உங்க அப்பா மனசுக்கு கஷ்டமா இருக்கும்.. அதனால இந்த துணி கடையில ஒரு நல்ல டிரெஸ்ஸா வாங்கி போட்டுக்கிட்டு அப்புறம் வீட்டுக்கு போ..”

அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனான் ஆதித்யா..

அவளுக்கு ஏற்றார் போல் ஒரு உடை வாங்கி கொடுத்து “போய்  இந்த ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா” என்றான் அவளிடம்..

அவளும் அப்போதைக்கு அமைதியாக சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தாள்..

“பரவால்லயே..இந்த ட்ரெஸ் உனக்கு ஃபிட்டா இருக்கு.. இந்த பிங்க் கலர் உனக்கு ரொம்ப அழகாவும் இருக்கு” என்றான் அவன்..

முதல் முறையாக தன்னையும் அறியாமல் ஒரு பெண்ணிடம் அவளுடைய உடை நன்றாக இருக்கிறது என்று சொல்கிறான் அவன்..

” தேங்க்ஸ்” என்றவள் அவன் அந்த உடைக்கு பணம் செலுத்தும் போது அந்த உடைக்கு எவ்வளவு ஆனது என்று கவனித்துக் கொண்டாள்..

காரில் ஏறியவள் அவனிடம் “இந்த சுடிதாருக்கு நீங்க கொடுத்த அந்த 2500  ரூபாயை நாளைக்கு உங்க ஆஃபிஸ்க்கு வந்து நான் திருப்பி கொடுத்துடறேன்..” என்று அவள் கூறவும்.. அவள் இலவசமாக தன்னிடம் இருந்து எதையும் வாங்க மாட்டாள் என்று அறிந்தவன் அவளோடு விவாதிப்பதில் பயனும் இல்லை என்று முடிவு சேய்து  “சரி.. ஓகே” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு வண்டியை செலுத்தினான்..

தன்னை அந்த மிருகத்தினிடமிருந்து காப்பாற்றியது மட்டுமில்லாமல் தன்னுடை கிழிந்து இருப்பதை கவனித்து அப்படியே வீட்டுக்கு போனால் நன்றாக இருக்காது என்றும் யோசித்து தனக்கு உடையும் வாங்கி கொடுத்த அவனின் மனதை நினைத்து அவளுக்கு அவன் மேல் ஒரு நல்லெண்ணம் தோன்றினாலும் அவன் பெண்களை வெறுப்பதும் இப்படி குறுக்கு வழியில் வியாபாரம் செய்வதும் அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது…

இந்த இரண்டு விஷயங்களை அவன் மாற்றிக் கொண்டால் அவனை விட ஒரு சிறந்த மனிதன் இருக்க முடியாது.. அப்படி நினைத்தாலும் அவனிடம் அதைப் பற்றி வெளிப்படையாக அவள் பேசவில்லை..

வீட்டுக்குள் நுழைந்த அல்லி தன் அம்மா சமையலறையில் இருக்கவும் மெல்ல நடந்து அவள் அறைக்கு சென்று அவன் வாங்கி கொடுத்த புது உடையை கழட்டி வேறு ஒரு வீட்டில் அணியும் உடையை எடுத்து மாட்டிக் கொண்டாள்..

வெளியே வந்தவள் நேரே சமையலறைக்குச் சென்றாள்.. அவளைப் பார்த்த அவள் அன்னை “எப்ப டி வந்த? சத்தமே கேக்கல” என்றாள்.

“இப்பதான் அஞ்சு நிமிஷம் ஆச்சு.. ரூமுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கை கால் கழுவிட்டு வரேன்” என்றாள் அவள்..

“என்ன ஒரு மாதிரி ரொம்ப டயர்டா இருக்கே..? ரொம்ப வேலையா இன்னைக்கு?” என்று அவள் அம்மா கேட்கவும் “அது..” என்று பதில் சொல்ல ஆரம்பித்தவள் தன் பின்னால் தன் தந்தை வருவதை கண்டு “ஹாய் அப்பா” என்றாள்..

“என்னம்மா மலர்.. உடம்பு எதாவது சரியில்லையாமா? முகமே ஒரு மாதிரி வாடி இருக்கு..” தன் மகளை பார்த்த உடனேயே அவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு கேட்டார் அவர்..

“அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”

அவர்களைக் கூட்டிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தவள் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்…

பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு… “அப்பா.. இன்னிக்கு நான் பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சு வந்திருக்கேன்..” என்றாள் தயங்கியபடி மெதுவாக…

அதைக் கேட்ட அவள் பெற்றோர் பதறி போயினர்.. “என்ன.. ஆபத்தா..!? என்னடா சொல்ற? “என்று அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவள் தலையை தடவியபடி கேட்டார் அவளுடைய அப்பா..

பிறகு மெதுவாக அன்று நடந்த விவரங்கள் முழுவதையும் கூறியவள் “அந்த மிதுன் கொஞ்சம் ஆள் சரியில்லதான்பா.. ஆனா அவன் தடாலடியா இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல.. அவன் எந்த தப்பு செய்யறதுக்கும் துணிஞ்சவனா இருக்கான்..”

“நல்லவேளை.. அந்த ஆதித்யா வந்து உன்னை காப்பாத்திட்டாரேமா.. அவரை பார்த்து உன்னை காப்பாத்துனதுக்காக நான் நன்றி சொல்லணும்.. நீ சொல்ற மாதிரி அவர் ரொம்ப நல்ல மனுஷன்தான் போல இருக்கு.. நாளைக்கே நான் போய் அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்.. என் தங்க கட்டிய ஒண்ணும் ஆகாம காப்பாத்தி கொடுத்திருக்கிறார்.. ” என்றார் அவர்..

“அப்பா அவன் எல்லா விதத்திலும் சரியாதாம்ப்பா இருக்கான்.. ஆனா இந்த தொழில் பண்ற விஷயத்துலதான் அவன் நேர்மையா நடந்துக்க மாட்டேங்குறான்.. அவன் அதுலயும் நேர்மையா நடந்துக்கிட்டானா அவனை மாதிரி நல்லவன் உலகத்திலேயே கிடையாது.. ஆனா அவனுக்கு அது புரியவே மாட்டேங்குதுபா.. அவன் தன்னை  மாத்திக்கவே மாட்டேங்குறான்” என்று கவலைப்பட்டாள் அவள்..

தன் மகள் முதன்முதலாக ஒரு ஆண்மகனை பற்றி கவலையுடன் பேசுவதை பார்த்து அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவள் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் ஆதித்யா வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று அவருக்கு புரிந்தது..

“அதுக்கும் நேரம் வரும்மா நிச்சயமா… ஒரு நல்ல ஆள் ரொம்ப நாள் ஒரு கெட்ட விஷயத்தை பண்ணிட்டு இருக்க முடியாது.. ஏதோ ஒரு நேரத்துல அவருக்கு நல்லது தோணி நல்லவிதமா மாறுவார்..”

பேசிக்கொண்டே அவளை உற்று பார்த்தவர் அவளின் வாயோரத்தில் அடிபட்டு இருந்ததை பார்த்து “என்னம்மா இது வாயோரத்துல?” என்று கேட்டார்.

“அதான் சொன்னேனேப்பா.. அந்த மிதுன் என்னை அடிச்சிட்டான்.. அதுல வாயிலிருந்து கொஞ்சம் ரத்தம் வந்துருச்சு.. ஆனா இப்போ ஒண்ணும் வலி இல்லபா கவலைப்படாதீங்க..” என்றாள்.

உள்ளே சென்று அந்த காயத்துக்கு ஒரு களிம்பை எடுத்து வந்தவர் அதை அந்த காயத்தில் தடவி “சரிடா உனக்கு இன்னும் வேற எங்கேயாவது அடிபட்டு இருக்கா..?” என்று கேட்கவும் “இல்லப்பா.. வேற எங்கேயும் அடி இல்ல.. ஆனா அவன் புடிச்சு தள்ளுனதுல உடம்பெல்லாம் வலிக்குது..” என்றாள் தன் கை கால்களை முறுக்கியபடி..

“வெளியில் போனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா.. இந்த உலகமே கெட்டு கெடக்கு.. எல்லாரும் நம்மளை மாதிரியே நல்லவங்களா இருக்க மாட்டாங்க.. அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ..” என்று கூறியவர் “சரி.. நீ போய் படுத்துக்கோ.. ரெஸ்ட் எடு..” என்று சொல்லி அவளை அவளுடைய அறைக்கு அனுப்பினார்..

அவள் எழுந்து சென்றவுடன் “தாமரை.. எனக்கு இந்த பொண்ணை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.. ஒவ்வொரு இடத்திலயும் இவ கொஞ்சம் நெளிவு சுளிவோட இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க.. இந்த உலகமே இப்ப அப்படித்தான் இயங்கிட்டிருக்கு.. ஆனா நேர்மை.. நேர்மைன்னு இருக்கறதுனால அவளுக்கு நிறைய ஆபத்து வருது.. எப்படித்தான் சமாளிக்க போறாளோ தெரியல.. இன்னைக்கு ஆதித்யா மாதிரி ஒரு நல்ல மனுஷன் இவளை வந்து காப்பாத்திட்டார்.. ஆனா ஒவ்வொரு இடத்திலயும் இப்படி யாராவது வர மாட்டாங்க.. இல்ல?” தன் மகளை நினைத்து கவலைப்பட்டார் அவர்..

“நீங்களா இப்படி கவலைப்படுறீங்க? ஏங்க நாம யாருக்கும் கெடுதல் நினைக்கல.. அல்லியும் அப்படித்தான்.. இதுவரைக்கும் யாருக்கும் கெடுதல் நினைச்சதில்லை.. அதனால நிச்சயமா கடவுள் எப்பவும் அவளோட இருப்பார்.. இன்னைக்கு ஆதித்யா வந்தார்ன்னா அதே மாதிரி அவளோட வாழ்க்கையோட ஒவ்வொரு படியிலும் அவளுக்கு உதவறதுக்கு யாராவது வருவாங்க.. அதனால அவ வாழ்க்கைய பத்தி கவலைப்படாதீங்க” கணவனுக்கு தைரியம் சொன்னார் தாமரை..

“சரி.. அப்படியே நம்பு

வோம்.. கடவுள் இருக்கார்..” என்று கூறிவிட்டு தொலைக்காட்சியை இயக்கி பார்க்க ஆரம்பித்தார் செழியன்…

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!