Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 10

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 10

by Subhashri Srinivasan
4.7
(15)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 10

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

அன்பால் ஆள்பவள்..!!

தன் தந்தையுடன் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த அல்லி படுக்கையில் படுத்து வெகு நேரம் ஆதித்யாவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்..

இன்று அவன் செய்த உதவி மிகவும் பெரியது என்று உணர்ந்துதான் இருந்தாள் அவள்.. ஆனால் அவளுக்கு ஏதோ அவன் வியாபார உலகில் வியாபார தந்திரம் என்று சொல்லி செய்து கொண்டிருக்கும் சின்ன சின்ன தவறுகள் பூதக்கண்ணாடி வழியே பார்ப்பது போல் பெரிதாக தோன்றின..

அவளையும் அறியாமல் அவன் செய்யும் தவறுகளால் அவனுக்கு எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்று கவலை கொள்ளலானாள் பாவையவள்..

அதன் விளைவு தான் அவன் அவளுக்கு அன்று அவ்வளவு உதவி செய்தும் அவன் செய்த தவறை சுட்டிக்காட்டி அவனை அவள் அர்ச்சித்து விட்டு வந்தது..

ஆனால் இப்போது நிதானமாக அவன் செய்த உதவியை நினைத்து பார்த்தவள் “தேங்க்ஸ்டா ஆதி.. நீ முரடன் தான்.. பொண்ணுங்க கிட்ட ரொம்ப ரூடா நடந்துக்கிறே.. பிசினஸில ஏமாத்தி ஜெயிக்கிற.. இதெல்லாம் இருந்தாலும் பொண்ணுங்களை தப்பா ஒரு பார்வை பார்க்காம எங்க அப்பா யாரோ எவரோ.. அவர் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு இன்னைக்கு என்னை துணி கடைக்கு கூட்டிட்டு போய் புதுசா டிரஸ் வாங்கி கொடுத்து அனுப்பிச்ச பாரு.. என்னவோ உன்னை எனக்கு கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சு இருக்குடா.. அதனால இனிமே என்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் மாதிரி உன்னையும் என்னோட ஒரு ஃப்ரெண்டா தான் நினைக்க போறேன்.. முடிஞ்ச வரைக்கும் உன்னை மீட் பண்ணும் போதெல்லாம் ஒரு ஃப்ரெண்டா உன்கிட்ட இருக்கிற தப்பான பழக்கங்களை எல்லாம் மாத்தி நல்ல வழியில உன்னை போக வைக்கிறதுக்கு முயற்சி செய்வேன்.. உனக்குள்ள ஏதோ கஷ்டம் இருக்கு இல்ல.. அதையும் என்னன்னு கண்டுபிடிச்சு மாத்தறதுக்கு ட்ரை பண்றேன்.. குட் நைட் டா ஆங்ரி மேன் ஆதித்யா..”

இப்படி மனதிற்குள் ஆதியோடு பேசியபடி அவன் கோவ முகம் கண் முன் வர புன்னகை பூத்தவள் கண்களை உறக்கம் தழுவ உறங்கியும் போனாள் அல்லி..

########################

இங்கே வீட்டுக்கு வந்த ஆதித்யா நேரே தன் தந்தையின் அறைக்கு சென்று, “டாட்.. ஃப்ரீயா இருக்கீங்களா? உங்களோட கொஞ்சம் பேசணும்” என்றான்..

“உன்கிட்ட ஒரு நல்ல சேஞ்ச் தெரியுது ஆதி.. முன்னாடி எல்லாம் வேலை வேலைன்னு எப்ப பாரு வேலைல தான் இருப்பே.. என் ஞாபகமே வராது உனக்கு.. எப்பயாவது தான் என்னோட வந்து பேசுவே.. ஆனா இப்பல்லாம் தினமும் என்னோட ஏதாவது பேசுறே.. எனக்கும் ரொம்ப நல்லா இருக்குப்பா.. தினமும் இப்படி ஒரு அரை மணி நேரம் என்னோட வந்து பேசு..” என்றார் அவர் இதழில் ஒரு சிறு புன்னகையினூடே…

தன் தந்தையை பார்த்தவன் “ஓகேப்பா..தெனமும் உங்களுக்குன்னு ஒரு டைம் ஒதுக்கி வெச்சுடறேன் போதுமா..? அப்பா…இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது.. அது பத்தி உங்ககிட்ட சொல்லணும்”

தன் மகனின் மனதை மிகவும் பாதித்த விஷயமாய் இருந்தாலொழிய அவன் தன்னிடம் வந்து அதை பகிர்ந்து கொள்ள மாட்டான் என்று அவருக்கு தெரியும்..

“சொல்லுப்பா எனக்கு அதை கேக்கறதை விட என்ன வேலை?”

அன்று அல்லிக்கு நடந்ததை முழுமையாக அவரிடம் தெரிவித்தவன் “அந்த அல்லிராணியை அவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்தினேன்பா.. கடைசியில வெளியில வந்து என்னை அந்த திட்டு திட்டறா.. இவ ஏன்பா இப்படி இருக்கா..?”  புலம்பினான் அவன்..

முதன் முதலில் மகன் அதிசயத்திலும்  அதிசயமாய் ஒரு பெண்ணைப் பற்றி அவரோடு கலந்து பேச வந்திருக்கிறான் என்பது அவருக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது… அவன் மாற்றத்தில் ஆச்சரியப்பட்டு தன் மகன் தானா இது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.. அதற்குப் பிறகு அவன் பேசியது எதுவுமே அவர் காதுகளில் விழவில்லை..

“சரி.. என் கேள்விக்கு பதில் சொல்லு.. அவ உன்னை திட்றான்னு சொல்றியே..அவ திட்டுறது நியாயம்னு நினைக்கிறியா..? இல்ல தப்புன்னு நினைக்கிறியா?”

“அவ சொன்னதெல்லாம் கரெக்டுதான்.. நான் ஸ்பை வச்சுதான் இதுவரைக்கும் டெண்டர் எல்லாம் வாங்கிருக்கேன்.. இது குறுக்கு வழிதான்.. ஆனா பிசினஸ்ல இப்படி சில டாக்டிக்ஸ் யூஸ் பண்றது சகஜம்தானேப்பா.. இதுக்கு ஏம்பா அவ அப்படி ஓவர் ரியாக்ட் பண்ணுறா?”

“ஒண்ணு சொல்லு.. உனக்கு அவ உன்னை திட்டுறான்னு வருத்தமா இல்ல நீ இவ்ளோ ஹெல்ப் பண்ணியும் அவ உனக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலையேன்னு வருத்தமா?”

“வருத்தமா..?  அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவ பெரிய இவ.. அவ தேங்க்ஸ் சொல்லலன்னா என்ன? திட்டுனா என்ன..?   ஐயாம் தி ஆதித்யா.. இவள்லாம் ஒரு ஆளுன்னு  மதிச்சு உட்கார்ந்து வருத்தப்பட்டுட்டு இருக்கணுமா..? அனாவசியமா அவளை காப்பாத்த போய் என் பிரஷ்யஸ் டைம வேஸ்ட் பண்ணிட்டேனோன்னு தோணுச்சு.. அதான் ..”

அவன் சொன்னதை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அல்லி அவன் மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறாள் என்று தோன்றியது அவருக்கு ..

ஆனாலும்  அவனுடைய இறுமாப்பு அதை அறிய விடாமல் செய்கிறது என்று புரிந்து கொண்டார்..

“அதான் கவலைப்படல இல்ல.. அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசிகிட்டு.. சரி இன்னைக்கு உன் ஆஃபீஸ்ல என்ன நடந்தது.. சொல்லு..”

சிரித்துக் கொண்டே அவர் கேட்டதும் அவர் மடியில் தலை வைத்து அப்படியே படுத்துக் கொண்டவன்.. அலுவலகத்தில் என்னவெல்லாம் நடந்தது என்று விவரிக்க ஆரம்பித்தான்..

விவரித்துக் கொண்டே இருந்தவன் தன் தந்தை தூக்கத்தில் கண்கள் சொக்கி போவதை பார்த்தவன் “சரிப்பா.. நீங்க படுங்க.. நான் ரூமுக்கு போறேன்.. உங்களுக்கு தூக்கம் வருது போல இருக்கு..” என்று சொல்லிவிட்டு அவர் மடியில் இருந்து எழுந்து தன்னறைக்கு சென்று விட்டான்..

அங்கே தன் கட்டிலில் படுத்தவனுக்கோ அன்றைக்கு மிதுனின் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் கண் முன்னால் காட்சியாக தோன்றியது..

“என்ன பொண்ணுடா அவ.. அந்த மிதுன் கிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருந்தானா அவளுக்கு ஒரு பெரிய லைஃபே செட் ஆகியிருக்கும்.. நான் இதுவரைக்கும் பார்த்த எல்லா பொண்ணுங்களும் அதைத்தான் பண்ணி இருப்பாளுக.. ஆனா அது எதையுமே மதிக்காம அவனை காலால எட்டி உதைச்சிட்டு வந்து இருக்கா.. ரொம்ப டிஃபரண்டா இருக்கா.. ஸ்ட்ராங்கா இருக்கா.. இது வரைக்கும் எந்த பொண்ணையும் என் வாழ்க்கையில் நான் நுழைய விட்டதில்லை.. ஆனா ஏனோ உன்னை எனக்கு பிடிச்சிருக்கு டி.. அதனாலதான் என்னோட எதிரியா உன்னை என் வட்டத்துக்குள்ள நுழைய விட்டு இருக்கேன்.. இந்த ஆதித்யாவுக்கு எனிமியா இருக்கணும்னா கூட அதுக்கு ஒரு தகுதி வேணும்.. நீ அதுக்கு தகுதியான ஆள் தான்.. ஆனா நான் உன்கிட்ட போட்ட சேலஞ்ச் அப்படியே தான் இருக்கு.. இந்த ஆதித்யாவை ஒரு முறை தோற்கடிச்ச இல்ல..?  இனிமே உன்னை ஒவ்வொரு விஷயத்திலயும் தோற்கடிச்சு இந்த ஆதித்யா ஜெயிச்சுகிட்டே இருப்பான் .. ஆல் த பெஸ்ட் மை ப்யூட்டிஃபுல் எனிமி.. கெட் ரெடி ஃபார் தி பேட்டில்..!!”

உறக்கம் வந்து  கண்கள் சொக்கி அவன் தன் இமை மூட.. மூடிய விழிகளில் அல்லியின் பிம்பம் சிரித்து நின்றது.. அவன் இதழ் தன்னால் ஒரு சிறு புன்னகை உதிர்த்தது அல்லியை நினைத்த மறுநொடி..

அவளின் அழகுமுகம் அவனுக்குள் ஒரு இன்பமான உணர்வைத் தந்திருக்க அந்த உணர்விலேயே நித்திரை உலகத்திற்கு சென்றான் மறுநொடி…

#####################

அடுத்து வந்த ஒரு வாரத்திற்கு அல்லியின் மனம் அமைதியற்று இருந்தது.. என்னதான் அவள் தைரியமாக பேசினாலும் அன்று மிதுன் அவளிடம் நடந்து கொண்டது அவளுக்கு இன்னும் நினைவில் வந்து கொண்டு தான் இருந்தது.. சரியான தூக்கம் இல்லை..

இரண்டு இடங்களில் வேலை தேடி சென்று வேலை கொடுக்கப்படாமல் கசப்பான அனுபவங்களே பதிலாக கிடைத்ததால் மறுபடியும் வேலைத்தேடி செல்வதற்கு உற்சாகம் இல்லாமல் சோர்வாகவே இருந்தாள்..

ஒரு வாரத்திற்கு பிறகு அமைதியை தேடி தான் எப்போதும் செல்லும் முதியோர் இல்லத்திற்கு சென்றாள்.. அங்கே அம்மணிப்பாட்டி இருந்தாள்..

இவளை பார்த்தவுடன் “வாடிம்மா… அல்லி.. எப்படி இருக்க? என்ன ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்?” என்று அவர் கேட்டார்..

“நான் ஒரு வேலைக்கு போயிருந்தேன் பாட்டி.. அந்த வேலையில் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால வர முடியல..”

“வேலைக்கு போனியா? இப்ப மட்டும் எப்படி வர முடிஞ்சது? அதெல்லாம் நெனச்சா வர முடியும்.. சும்மா என்கிட்ட காரணத்தை சொல்லாதே..” என்றாள் முகத்தை நொடித்தபடி அம்மணி பாட்டி..

“இல்ல பாட்டி நெஜமாத்தான்.. இப்ப அந்த வேலையை விட்டுட்டேன்.. அதனால தான் வர முடிஞ்சது..” என்றாள் அவள்..

“வேலையை விட்டுட்டியா? இப்பதான் போனேன்னு சொன்னே.. அதுக்குள்ள ஏன் வேலைய விட்ட?” அக்கறையோடு கேட்டாள் அம்மணி பாட்டி..

“ரொம்ப வேலை ஜாஸ்தியா இருந்தது பாட்டி.. நைட்டு எட்டு மணி வரைக்கும் வேலை பார்க்க சொன்னாங்க… எனக்கு முடியல.. அதான் வேலையை விட்டுட்டேன்..”

“நீ வேலை செஞ்சு நேரமே இல்லாம இருந்திருக்க… இங்க பாரு… வேலை செஞ்சு செஞ்சு பழக்கமான உடம்பு.. இங்க வந்து ஒரு வேலையை என்னை செய்ய விட மாட்டேங்கிறாங்க.. அப்படியே ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்கிறதுக்கு என்னவோ மாதிரி இருக்கு.. சொன்னா இந்த லட்சுமி வேற உங்களுக்கு  வயசாயிடுச்சுன்னு சொல்லி இப்படியே ஒரு இடமா உட்கார வைக்கிறா.. சாயங்காலம் அப்படி ஒரு நடை வெளியில அந்த பார்க் வரைக்கும் போயிட்டு வரேன்.. மத்தபடி ஒண்ணும் செய்யறதில்லடிம்மா.. காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வீட்டு வேலை அத்தனையும் செஞ்சவளுக்கு இப்போ ஒரு வேலையும் இல்லாம  அப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கிறது சொல்லு.. இன்னும் கொஞ்ச நாள்ல கை கால் எல்லாம் இப்படியே முடங்கி போய்டுமோனு பயமா இருக்கு”  புலம்பினாள் பாட்டி..

“ஏன் பாட்டி வீட்ல வேலை செஞ்சேன்னு சொன்னீங்களே.. என்ன வேலை எல்லாம் செய்வீங்க?” என்று அவள் கேட்கவும் “என்னடி  அப்படி கேட்டுட்ட.. மசாலா பொடி அரைக்கறதுல இருந்து சமையல் வேலை முழுக்க செஞ்சு பாத்திரம் தேச்சு  சமையல் அறையை கிளீன் பண்ணி வைக்கிற வரைக்கும் நான் தான்டி செய்வேன்.. ஆனா என் புள்ள அவன் பொண்டாட்டியோட என்னை விட்டுட்டு அமெரிக்கா போனதுனால நான் பாதுகாப்பா இருக்கணும்னு இங்க விட்டுட்டு போயிட்டான்.. இங்க நான் பாதுகாப்பா இருக்கனோ இல்லையோ அப்படியே மரக்கட்டை மாதிரி ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கேன்..” சலித்து கொண்டாள் பாட்டி..

அப்போது அங்கே சரோஜா பாட்டி காமாட்சி பாட்டி மீனாட்சி பாட்டி எல்லோரும் வர அவர்களும் இதே விஷயத்தை சொல்லி புலம்ப ஆரம்பித்தார்கள்..

அல்லிக்கு ஒரு பொறி தட்டியது.. “சரி பாட்டி.. நீங்க இங்கே இருந்து பேசிட்டு இருங்க.. நான் லட்சுமி மேடம் கிட்ட போய் கொஞ்சம் பேசிட்டு வரேன்..” என்றபடி உள்ளே சென்று லட்சுமி மேடம் அறை கதவை தட்டி விட்டு உள்ளே அழைத்தவுடன் நுழைந்தாள்..

“ஹலோ மேடம்.. எப்படி இருக்கீங்க?” என்றாள்..

“நீ எப்படி இருக்க அல்லி… ரொம்ப நாளா இங்க வரல.. அப்புறம் உங்க வீட்ல அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தார்..

“எல்லாரும் நல்லா இருக்காங்க மேடம். நான் இப்ப வந்தப்போ அம்மணி பாட்டி காமாட்சி பாட்டி சரோஜா பாட்டி எல்லாரும்  எந்த வேலையும் செய்யாம ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்கோம்னு புலம்பிக்கிட்டு இருந்தாங்க… அப்போ எனக்கு ஒண்ணு தோணுச்சு.. சரி உங்ககிட்ட அதை பத்தி பேசலாம்னு வந்தேன்..”

“ஐயோ.. அதையேன் கேக்குற? காலையில் சமையல் இவங்க எல்லாம் சேர்ந்து தான் பண்றாங்க.. ஆனா இங்க 10 பேருக்கு மேல வயசானவங்க அதுவும் பொம்பளைங்க இருக்கறதுனால ஆளுக்கு ஒரு வேலை எடுத்துட்டு செய்றாங்க.. ஒரு மணி நேரத்திலேயே எல்லா வேலையும் முடிஞ்சுடுது.. அதுக்கப்புறம் நாள் முழுக்க நாங்க சும்மா இருக்கோம்னு சொல்லி ஒரே புலம்பல்.. என்னை ஏதாவது வேலை கொடு.. வேலை கொடுன்னா இந்த வயசுல நான் அவங்களுக்கு என்ன வேலை கொடுக்க முடியும்.. ? சொல்லு.. உங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னாலும் அவங்க தப்பா நினைச்சுக்கிறாங்க.. என்ன பண்ணறதுன்னே தெரியல அல்லி” என்றாள் லட்சுமி மேடம்..

“அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் மேடம்.. ஆனா உங்க பர்மிஷன் இல்லாம அதை பண்ண முடியாது” என்றாள் அல்லி…

“அவங்க புலம்பலை நிறுத்துவாங்கன்னா எந்த ஐடியாவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்.. சொல்லு.. என்ன ஐடியா வச்சிருக்க..”  ஆர்வத்தோடு கேட்டார் லட்சுமி மேடம்..

அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் லட்சுமி மேடம்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!