Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 11

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 11

by Subhashri Srinivasan
4.6
(17)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 11

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

ஃபீனிக்ஸ் பறவை..!!

அந்த ஆசிரமத்தில் இருந்த பாட்டிகளின் புலம்பல்களை நிறுத்த தான் ஒரு வழி வைத்திருப்பதாக அல்லி சொல்லவும் அது என்னவென்று சொல்ல சொல்லி ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி மேடம்..

“மேடம்.. நான் இப்ப ரெண்டு இடத்துல வேலைக்காக போனேன்.. அந்த ரெண்டு இடத்திலயுமே பொம்பளைங்களை ஒழுங்கா ட்ரீட் பண்ண மாட்டேங்கறாங்க.. அதனால தான் நான் வேலையை விட்டுட்டு வந்தேன்.. திரும்பவும் வேலை தேடறதுக்கு எனக்கு இஷ்டம் இல்ல.. ஒரு இடத்துல போய் வேலை செய்யறதுக்கு பதிலா நம்மளே சுயமா ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாமான்னுதான் நான் யோசிச்சிட்டு இருந்தேன்..”

அல்லி சொன்னதை கேட்ட லட்சுமி மேடம் அவளுக்காக மிகவும் மகிழ்ந்தார்..

“சூப்பர் அல்லி.. நிச்சயமா பண்ணு.. உனக்கு இருக்குற புத்திசாலித்தனத்துக்கு நல்லா வரும்.. நீயும் நல்லா மேல வருவ..”

“அதை நான் தனியா பண்ணறதை விட இங்க பாட்டி எல்லாம் வேலை இல்லாம போர் அடிக்குதுன்னு சொல்றாங்க இல்ல? நான் அவங்க கிட்ட பேசினதுல அவங்க இந்த மசாலா பொடி.. அப்புறம் மத்த பொடிங்க.. ஊறுகாய்.. அப்பளம்.. இந்த மாதிரி ஐட்டம் எல்லாம் பண்ண முடியும்ன்னு சொல்றாங்க.. நம்ம இந்த ஆசிரமத்திலேயே சின்னதா மசாலா பாக்கெட் போடுற ஒரு தொழிலை ஆரம்பிக்கலாமான்னு எனக்கு தோணுச்சு.. அதான் உங்ககிட்ட கேட்டுட்டு செய்யலாமேனு யோசிச்சேன்..”

சிறிது தயக்கத்துடனேயே அந்த யோசனையை சொன்னாள் அல்லி..

“வாவ்.. நல்ல ஐடியா அல்லி.. ஆனா அதுக்கு முன்பணமா நிறைய போட வேண்டி இருக்குமே.. பொருள் எல்லாம் வாங்கணுமே…”

அவர் அடுத்த கட்ட கவலை கொண்டு கேட்கவும்

“அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க மேடம்.. நான் இந்த ரெண்டு மாசம் எனக்கு கிடைச்ச சம்பளம் அப்பறம் என்னோட சேவிங்க்ஸ் எல்லாம் அப்படியே பேங்க்ல தான் போட்டு வச்சிருக்கேன்.. அது தவிர நம்ம லோனும் வாங்கிக்கலாம்.. சின்னதா ஸ்டார்ட் பண்ணி முதல்ல இதை கடைக்கு எடுத்துட்டு போய் வித்து பார்க்கலாம்… நல்லா ஓடுச்சுன்னா இதை எப்படி மேல கொண்டு வர்றதுன்னு அப்புறம் யோசிக்கலாம்.. ஏன்னா பாட்டிங்களாலும் எந்த அளவு தொடர்ந்து செய்ய முடியும்னு நம்மளுக்கு தெரியல… செஞ்சு பார்த்தாதான் தெரியும்..”

அவள் விளக்கி சொன்னாள்..

“நீ சொல்றதும் கரெக்ட் தான்.. சரி.. நீ இதுக்கு வர்க்கிங் பிளான் எல்லாம் போட்டுகிட்டு வந்து கொடு.. நம்ம அதுக்கப்புறம் இதை எப்படி செய்யலாம்னு யோசிக்கலாம்”

அவர் முழு மனதோடு சம்மதம் சொல்லவும் அல்லி முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது..

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. நான் நாளைக்கு ஒரு டீடைல்ட் பிளானோட வரேன்.. நம்ப இந்த வாரத்துக்குள்ள இந்த மசாலா பாக்கெட் ப்ரொடியூஸ் பண்ணறதை ஆரம்பிச்சிடலாம்..”

அவள் உற்சாகமாய் சொல்லவும் “சரி மா” என்றார் லட்சுமி மேடம்..

அதன் பிறகு மடமடவென்று வேலைகள் நடந்தன.. அவள் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயில் முதலில் வாங்க வேண்டிய சின்ன சின்ன மூல பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தாள்..

வங்கியிலும் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு அதன் பிறகு யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று பாட்டிகளோடும் லட்சுமி மேடமுடனும் அங்கிருந்த மூன்று தாத்தாக்களுடனும் உட்கார்ந்து பேசி விளக்கிவிட்டு அடுத்த வாரம் ஒரு புதன்கிழமை அன்று மசாலா பொட்டலங்களை தயாரிக்க ஆரம்பிக்கலாம் என்று அவர்களுடன் சேர்ந்து முடிவு செய்தாள்..

அவர்கள் அனைவரும் ஆமோதிக்கவும் பாட்டிகளும் உற்சாகத்துடன் இருக்கவும் அவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை..

தன் தந்தையிடமும் தாயிடமும் விஷயத்தை சொன்னவுடன் அவர்களும் அந்த ஆஸ்ரமத்தில் அவளுக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற நிம்மதியுடன் அவள் அந்த தொழிலை தொடங்குவதற்கு சம்மதம் தெரிவித்தனர்..

லட்சுமி மேடம் பாட்டிகள் உட்பட பெண்கள் அனைவரும் மசாலா அரைத்து அதை பொட்டலம் போட்டு கொடுக்க அதை தாத்தாக்கள் அனைவரும் அக்கம்பக்கத்து கடைகளுக்கு எடுத்துக் கொண்டு போய் விற்றுவிட்டு வருகிறோம் என்று சொன்னார்கள்..

இப்படியே அந்த புதன்கிழமையும் வந்தது..

பூஜை போட்டு தயாரிப்பை ஆரம்பிக்கவும் வேலை வேக வேகமாக நடந்தது.. வேலையை முடித்துவிட்டு அல்லியும் ஒரு பையை எடுத்துக் கொண்டு தாத்தாக்களுடன் கிளம்பினாள்..

ஆனால் மசாலா பொருட்கள் புதிதாய் இருக்கவே கடைகளில் நிறைய வாங்க மறுத்தார்கள்.. எல்லோருமே ஒரே மாதிரியே சொன்னார்கள்..

“ரெண்டு பாக்கெட் கொடுத்துட்டு போங்கம்மா.. ஒருவேளை நல்லா வித்துச்சுன்னா அப்புறம் நிறைய வாங்குறோம்”

அவர்கள் இப்படி சொல்லவும் அவர்கள் சொன்னபடியே இரண்டு இரண்டு பொட்டலங்களை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்துவிட்டாள்.. தாத்தாக்களும்  அவர்கள் விற்க சென்ற கடைகளில் இருந்தும் இதே போல பதில்களோடு தான் வந்திருந்தனர்..

இரண்டு நாட்கள் இப்படியே சென்றன..

மூன்றாவது நாள் அல்லி கடைக்கு மசாலா பொருட்களை விற்க சென்றபோது அந்த கடைக்காரர் “வாங்கம்மா.. உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன்.. இந்த ரெண்டு நாளா உங்க மசாலா வாங்கிட்டு போனவங்க மசாலா ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி இன்னும் நிறைய மசாலா வேணும்னு கேட்டு இருக்காங்க.. அம்மா இன்னைக்கு எவ்ளோ பாக்கெட் எடுத்துட்டு வந்திருக்கே?”

அவர் ஆர்வத்தோடு கேட்கவும் அல்லிக்கு சந்தோசம் தாங்கவில்லை..

தன்னிடம் இருந்த பாக்கெட் அத்தனையும் அவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தவள் நேரே ஆசிரமத்துக்கு சென்று அன்று கடையில் நடந்ததை அவர்களுக்கு கூறவும் மற்ற கடைகளில் விற்க சென்ற தாத்தாக்களும் அதையே வந்து சொல்ல லட்சுமி மேடமும் சந்தோஷம் அடைந்தார்..

“அல்லி உன்னால பாட்டிகளுக்கு ஒரு வேலையும் கிடைச்சது.. அதே சமயம் அவங்களுக்கு ஒரு வருமானமும் கிடைச்சிருக்கு.. நிஜமா சொல்றேன் நீ ரொம்ப கிரேட்.. இப்போ இந்த மசாலா பாக்கெட் விக்கிற தொழில் நல்லா வருதுன்னா அதுக்கு உன் நல்ல மனசு மட்டும் தான் அல்லி காரணம்” அவள் கன்னத்தில் தட்டியபடி சொன்னார் லட்சுமி மேடம்…

“ஆமாண்டி மா.. நீ ரொம்ப நல்லா இருப்ப.. இந்த வயசுல எங்களுக்கு ஒரு வேலை செஞ்சு தொழில் செஞ்சு சம்பாதிக்க முடியும்னு ஊக்கப்படுத்தி இப்போ நடத்தியும் காட்டி இருக்க பாரு.. நெஜமாவே நீ கிரேட் மா”

அம்மணி பாட்டி நா தழுதழுக்க சொல்லவும் அல்லி கண்கள் குளமாகின..

அதன் பிறகு சிறிது நேரம் அங்கிருந்து எல்லோரிடமும் சந்தோஷத்தை பகிர்ந்தவள் பிறகு தன் வீட்டிற்கு சென்று தன் பெற்றோரிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்தாள்..

அதன் பிறகு ஒரே மாதத்தில் அவர்கள் தயாரிப்புக்கு கடைகளில் பெரும் தேவை ஏற்பட்டு விட பாட்டிகளும் அவளும் சேர்ந்து அவ்வளவு மசாலாக்களை தயாரிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினாள் அல்லி..

நேரே லட்சுமி மேடமிடம் சென்றாள்..

“மேடம் இனிமே இந்த சின்ன லெவல்ல பிஸினஸ் பண்ணுனா சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன்.. நம்ம மசாலா பாக்கெட்டுக்கு பெரிய டிமாண்ட் வந்துருக்கு.. நிறைய கேட்கிறாங்க.. அதனால நம்ப ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து இன்னும் சில ஆளுகளை வேலைக்கு வச்சு தான் இதை தொடர்ந்து நடத்த முடியும்..”

“என்ன சொல்ற நீ அல்லி..? அது எப்படி திடீர்னு இவ்வளவு பெரிசா பண்ண முடியும்? இதுக்கு இடம் ஆளுங்க இதெல்லாம் கிடைக்கிறது அவ்வளவு ஈஸி இல்லையே அல்லி?”

அவர் சிறிது சஞ்சலத்தோடு கேட்க “நான் இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் மேடம்.. ஆளுங்க பத்தின பிரச்னைக்கு என்கிட்ட ஒரு சொல்யூஷன் இருக்கு..”

அல்லி சொல்ல எந்த விதமான பிரச்சனை‌ வந்தாலும் அவளுக்கு எப்படி உடனடியாய் ஒரு தீர்வு கிடைக்கிறது என்று அவளை ஆச்சரியமாக பார்த்தாள் லட்சுமி மேடம்..

எங்க வீட்டு பக்கத்துல நிறைய பொண்ணுங்களும் பையன்களும் படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாம இருக்காங்க.. அது மட்டும் இல்லாம வீட்ல ஹவுஸ் வைஃப்பா இருக்கிறவங்க கூட மத்தியான நேரம் ஃப்ரீயா தான் இருக்காங்க.. நான் அவங்களை எல்லாம் கூப்பிட்டு வேலை கொடுக்கலாம்னு பார்க்கிறேன்.. நீங்க என்ன சொல்றீங்க மேடம்..?”

“நல்ல ஐடியாவா தான் இருக்கு.. நீ ட்ரை பண்ணி பாரு..”

“நம்ம பாட்டிங்களோட அவங்களும் சேர்ந்து வேலை செஞ்சா நம்ம இதை பெரிய கம்பெனியா கொண்டு வந்துடலாம்..” .

அவள் நம்பிக்கையோடு சொல்லவும் “சரிமா நீ சொல்றதெல்லாம் கரெக்ட் தான்.. ஆனா இதுக்கு பெரிய இடம் வேணுமே.. அதை எங்க போய் தேடுறது?”

ஒரு பிரச்சனைக்கான தீர்வு கிடைத்து விட்டாலும் இன்னொரு பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் லட்சுமி மேடம் கேட்க  அதற்கான தீர்வோடு அங்கே வந்தார் அம்மணி பாட்டி..

“அம்மா.. என் புள்ள அமெரிக்கால இருக்கான்னு சொன்னேன்ல.. இங்கே ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கான்.. அது நல்ல பெரிய இடமா இருக்கும்.. அவன் சும்மா பணத்துக்காக தான் அதை வாங்கி போட்டு இருக்கான்.. அதை வாடகைக்கு விட முடியாம ஆள் இல்லாம சும்மாதான் கிடக்கு.. இப்போ நம்ம அந்த வாடகையை கொடுக்கிறோம்னு சொன்னா அவன் அந்த இடத்தை நம்மளுக்கு கொடுப்பான்..”

அவர் சொன்னதை கேட்ட அல்லியின் முகம் பிரகாசமானது..

“அவர் நம்பர் இருந்தா குடுங்க பாட்டி.. நான் அவரோட பேசுறேன்.. அந்த இடம் எங்க இருக்கு பாட்டி?”

அல்லி ஆர்வத்தோடு கேட்க “இங்கதான் ரெண்டு தெரு தள்ளி இடம் வாங்கி போட்டிருக்கான்.. அது முன்னாடி பெரிய மில்லா இருந்தது.. வாங்கி போட்டான்.. இப்போ அதுக்கு எதுவும் மேனேஜர் வச்சு அதை பார்த்துக்க சொல்ல போறேன்னு சொல்லிட்டு இருந்தான்.. மேனேஜர் ஏற்பாடு பண்ணிட்டானான்னு தெரியலமா..”

அவள் சொல்லவும் “சரி பாட்டி.. நீங்க உங்க பையன் நம்பர் குடுங்க.. நான் பேசுறேன் அவர்கிட்ட”

அல்லியின் மனதில் நம்பிக்கை விதை ஆழமாய் வேரூன்றியது..

பாட்டி அவள் பிள்ளையின் எண்ணை கொடுக்கவும் அவருடன் பேசிய அல்லி விஷயத்தை சொல்ல அவரும் தான் வாங்கி போட்ட இடத்தில் தன் அம்மாவும் வேலை செய்ய போகிறார் என்று தெரிந்து அம்மணி பாட்டியிடமும் பேசி அந்த இடத்தை அவர்களுக்கே வாடகைக்கு தருவதாக ஒப்புக்கொண்டார்..

அம்மணி பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் வழக்கமாக வாங்கும் வாடகையில் பாதி அளவே வாங்கினார் அவர்.. அல்லிக்கோ இந்த விஷயம் பல மடங்கு சந்தோஷத்தை தந்தது.. அம்மணி பாட்டிக்கு பலவாறு நன்றி கூறியவள் தன் வீட்டுக்கு சென்று வேலைக்கு ஆள் எடுக்கும் அடுத்த வேலைகளில் இறங்கினாள்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!