Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 13

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 13

by Subhashri Srinivasan
4.8
(17)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 13

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

மகராணியின் மன்னவன்…!!

அல்லியின் அலுவலகத்தின் அறை கதவு தட்டப்படும் ஓசை கேட்க மிடுக்காய் “கம் இன்” என்றாள் அவள்..

உள்ளே வந்தவனை பார்த்து அவள் அப்படியே உறைந்து நின்றாள்..

“ஆதி….த்யா..!!!”

“இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான்.. ?! இவனுக்கு தான் பொண்ணுங்களை கண்டாலே பிடிக்காதே.. அப்புறம் இங்கே எதுக்கு வந்து இருக்கான்?”  யோசனையுடனேயே பார்த்தாள் அவனை..

அவனோ நேராக அவள் இருக்கை அருகில் வந்தவன் அவள் இருக்கையின் இரண்டு பக்கமும் கைகளை வைத்து அவளை அந்த இருக்கையிலேயே சிறை செய்வது போல் நின்றான்..

திடீரென உள்ளே அதிரடியாய் நுழைந்தவன் அப்படி அவனுடைய ஆளுமையான ஆறடி தேகத்தை வளைத்து அவ்வளவு அருகில் நெருக்கமாய் அவள் முகத்திற்கு நேராக  முகம் வைத்து பார்வையில் ஊரில் இருந்த அத்தனை திமிரும் தெனாவட்டும் மின்ன சின்ன இதழ் வளைப்போடு நின்றிருக்க அவன் அருகாமை அவளுக்குள் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியது..

தன் கண்களை சுருக்கி உடலை இருக்கையோடு ஒட்டிக் கொள்வது போல் பின்னுக்கு இழுத்தவள் அவன் வருகைக்கான காரணம் புரியாமல் அவனை கேள்வியாக பார்த்தாள்..

அவள் இதயமோ அவன் சுவாசத்தின் தீண்டலில் பட்டாம்பூச்சியின் இறக்கை என படபடவென வேகமாய் அடித்துக் கொண்டது.. பேசவும் நா எழாமல் மேல் அண்ணத்தோடு ஒட்டிக் கொள்ள தொண்டைக்குள்ளேயே வார்த்தைகள் சிக்கி கொண்டன.. தன் படபடக்கும் இதயம் எங்கே வாய் வழியாக வெளியே வந்து குதித்து விடுமோ என்று பயந்தாள் பெண் அவள்..

“ஹலோ மிஸ். அல்லி மலர்.. எப்படி இருக்கீங்க? ரொம்ப மேல பறந்துகிட்டு இருக்கீங்க போல இருக்கு..” கிண்டலாக கேட்டான் அவன்..

“ஆதித்யா.. நீங்க இங்க என்ன பண்றிங்க? உங்களுக்கு தான் பொண்ணுங்களை கண்டாலே ஆகாது இல்ல? இங்க நிறைய பொண்ணுங்க வேலை செய்றாங்களே.. ஏதாவது மோகினி பிசாசு பிடிச்சிட போகுது.. நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?”

என்ன தான் அவனுடைய மிரட்டலான நடவடிக்கையில் சிறிது ஆடி போனாலும் சட்டென சுதாரித்து தன் குரலிலும் மிடுக்கு குறையாமல் கேட்டாள் அவள்..

“ஏ… அல்லிராணி.. நீ வேணா இந்த கம்பெனிக்கு ராணியா இருக்கலாம்.. ஆனா எல்லா இடத்துக்கும் ராணியாக முடியாது.. இப்போ நீங்க பிசினஸ் பண்ணிட்டு இருக்கீங்களே இந்த இடம்.. இது என்னோடது.. ” ஆணவம் குரலில் ஏகத்துக்கு இழையோட சொன்னான் அவன்…

“என்னது.. உங்களுக்கு ஏதாவது மறை கழண்டு போச்சா..? இந்த இடம் அம்மணி பாட்டியோட பையனோட இடம்.. அவரோட பேசி வாடகைக்கு வாங்குனது நான்.. வாய்க்கு வந்ததெல்லாம் இங்க வந்து உளர்ற வேலை வச்சுக்காதீங்க.. முதல்ல நீங்க வெளில போங்க” என்றாள் அவள் முகத்தில் சீற்றத்தோடு வாசல் பக்கம் கையை காட்டி..

“ஹலோ.. கூல்.. கூல்… என்ன மிஸ்.அல்லி.. இவ்வளவு பெரிய கம்பெனி ஸ்டார்ட் பண்ணி ரன் பண்ணிட்டு இருக்கீங்க.. இவ்வளவு பேர் உங்களை நம்பி இங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க.. இப்ப உங்க கம்பெனி நடக்கிற இடம் கைமாறுனது கூட தெரியாம நீங்க வேலை செஞ்சிட்டு இருக்கீங்க.. ஹவ் பேதடிக்.. உங்களுக்கு சூடா அப்படியே பத்திக்கிற மாதிரி ஒரு நியூஸ் சொல்லட்டுமா? நேத்து சாயந்திரம் தான் அம்மணி பாட்டியோட பையன் கிட்ட இருந்து இந்த இடத்தை என் பேருக்கு மாத்தி எழுதிகிட்டேன்..” என்றவன் அவள் கண்களுக்குள் ஊடுருவுவது போல் கண் இமைக்காமல் தீர்க்கமாய் பார்த்தான்..

அந்த பார்வையில் தடுமாறி தான் போனாள் மலர் அவள்.. குரலில் சிறு தடுமாற்றத்துடன் “நீ.. நீங்க என்ன சொன்னாலும் நா..நான் நம்பணுமா? நீங்க வந்து இங்க ஏதாவது உளறினா அதை நான் நம்ப முடியாது.. முதல்ல இங்கிருந்து வெளியில போங்க..”

அவன் சொன்ன செய்தி தந்த பதட்டத்தில் அவள் கத்த அவள் இருக்கையின் கை பிடியிலிருந்து தன் கைகளை எடுத்து நிமிர்ந்து நின்றவன் இரு உள்ளங்கைகளையும் விரித்து தன் தோளை உயர்த்து இறக்கியவன் “கூல் கூல்.. மிஸ்.அல்லி.. கொஞ்சமாவது இந்த சின்ன மூளையை வச்சு யோசிங்க..” அவள் தலையின் பக்கவாட்டில் தன் சுட்டு விரலை வைத்து தட்டியபடி சொன்னான்..

“என் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு இங்க வந்து உங்க கூட வம்பு பண்ணிக்கிட்டு இருக்கறதுக்கு நான் என்ன வெட்டியாவா ஒக்காந்து இருக்கேன்.. எனக்கு இந்த மாதிரி பத்து பிசினஸ் இருக்கு.. அதெல்லாம் விட்டுட்டு உங்ககிட்ட வந்து இப்படி ஒரு விஷயத்தை சொல்றேன்னா அதுல உண்மை இருக்கும்ன்னு இவ்வளவு பெரிய்…ய பிஸினஸ் உமன் உங்களுக்கு புரிய வேண்டாம்.. இவ்வளவு சொன்ன பிறகும் நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லனா நீயே ஃபோன் பண்ணி அந்த அம்மணி பாட்டியோட பையன் கிட்ட கேளுடி..” என்றான் அவன் திமிராய்..

அவளை மரியாதை குறைவாய் அவன் பேசத் தொடங்க அவனை எரிப்பது போல் முறைத்தாள் அல்லி.. அவனோ அவளை அலட்சியமாய் பார்த்துவிட்டு அவள் பக்கவாட்டில் நடந்து அவள் இருக்கைக்கு பின் பக்கமாய் போய் நின்று கொண்டான்..

அம்மணி பாட்டியின் பையனின் எண்ணை அழைக்க உடனே அழைப்பை எடுத்தான் அவன்..

“சொல்லுங்க மிஸ்.அல்லி மலர்.. கம்பெனி எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” அவன் சாதாரணமாக அந்த நிறுவனத்தின் நலம் விசாரித்தான்..

“அதெல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு மிஸ்டர். நரேன்.. ஆனா எனக்கு இப்போ ஒரு விஷயம் கிளியர் பண்றீங்களா?” என்று அவள் குரலில் சிரமப்பட்டு நிதானத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்..

“நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு தெரியும்.. நான் அந்த இடத்தை ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கு கொடுத்துட்டேன்.. அந்த இடத்துக்கு அதோட வேல்யூவை விட பத்து மடங்கு வெலை  கொடுத்தார்.. அதனால அவருக்கு அதை கொடுத்துட்டேன்.. இனிமே அந்த இடத்துக்கான வாடகையை நீங்க அவர்கிட்ட தான் கொடுக்கணும்..” என்றான் அவன் அனாயாசமாக..

“மிஸ்டர் நரேன்.. ஒருத்தர் இவ்வளவு வெலை கொடுத்து உங்க இடத்தை வாங்குறார்ன்னா உங்களுக்கு இந்த இடத்தில கம்பெனி நடத்திட்டு இருக்கற என்கிட்ட ஒரு முறை கேக்கணும்னு தோணலையா? இப்ப நான் இங்க கம்பெனி நடத்துறதே ஒரு கேள்விக்குறியா ஆயிடுச்சு.. நீங்க ஒரு முறை என்கிட்ட கேட்டு இருக்கலாமே?”

அவள் வார்த்தைகளில் சூடு தெறிக்க கேட்கவும் அந்த பக்கத்தில் இருந்து அவன் கோபமாக கத்தினான்..

“ஹலோ மேடம்.. அது என்னோட இடம்.. நான் எதுக்கு என்னோட இடத்தை இன்னொருத்தர்க்கு கொடுக்கறதுக்கு உங்க கிட்ட கேக்கணும்.. எனக்கு ஆதியோட ஆஃபர் நல்ல ஆஃபர்னு தோணுச்சு.. அதான் கொடுத்தேன்.. இதுக்கு உங்க கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை..”

பட்டென சொல்லிவிட்டு  அழைப்பைத் துண்டித்து விட்டான் கோபமாக..

“என்ன மிஸ். அல்லிராணி உங்களுக்கு வேண்டிய பதில் கிடைச்சிருச்சா? இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? தொடர்ந்து எனக்கு வாடகை கொடுத்து இங்கயே இந்த கம்பெனியை நடத்த போறீங்களா? இல்ல.. வேற இடம் பார்க்க போறீங்களா?”

அவள் முன்னால் வந்து நின்று நிதானமாய் கேட்டான் ஆதி திமிராக சிரித்துக் கொண்டே..

மறுபடியும் அவள் அருகில் வந்து அவள் இரண்டு புறமும் கை வைத்தவன்.. “என்னை நீ தோக்கடிச்சவடி.. என்னோட தயவு இல்லாம நீ எதுவுமே பண்ண முடியாது.. உன்னோட பிசினஸ்ல இப்படி நீயா முன்னேறி வந்தாலும் அப்பவும் உன்னை தோக்கடிச்சிட்டே இருப்பேன்.. இவனை ஏன்டா தோக்கடிச்சோம்னு நீ ஒவ்வொரு முறையும் ஃபீல் பண்ணனும்..”

அவள் முகத்தின் அருகே முகத்தை வைத்து சொன்னவன் “ஓகே மிஸ்.அல்லிராணி.. எனக்கு டைம் வேஸ்ட் பண்றது பிடிக்காது.. நேரா விஷயத்துக்கு வருவோம்.. உங்க லில்லீஸ் மசாலா கம்பெனியை தொடர்ந்து நடத்த போறீங்களா? இல்ல வேற இடம் பார்த்துக்கறீங்களா?”

அவன் உறுதியாய் கேட்கவும்  அப்படியே அதிர்ந்து அவனையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் அல்லி..

சில நொடிகளிலேயே தனக்கு வேறு வழியில்லை என்று உணர்ந்தவள் கண்ணை இறுக்கமாய் மூடி திறந்து “நான் உங்களுக்கே வாடகை கொடுத்து தொடர்ந்து என் கம்பெனியை இங்கேயே நடத்திக்கிறேன்” என்றாள் தன் தலையை குனிந்து கொண்டு..

“ம்ம் ம்ம்.. குட் டெசிஷன்.. ஆனா இதுல ஒரு சின்ன பிராப்ளம் இருக்கு மிஸ்.அல்லிராணி”

மறுபடியும் அவளை நோக்கி குனிந்து  அவள் கண்களை பார்த்து சொன்னான்.. ஆனால் அந்தக் கண்களுக்குள் பார்த்தவன் அவள் விழியில் இருந்து தன் பார்வையை விலக்க முடியாமல் அவஸ்தைக்கு உள்ளானான்..

“என் பேரு அல்லி மலர்.. அல்லிராணி இல்ல” என்றாள் கோபமாக அவள்..

அவள் விழியில் தொலைந்து இருந்த அவனுக்கோ அவள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை.. அந்த அல்லி விழிகளை பார்த்து “என்ன கண்ணுடா இது?” மனதிற்குள் பிரமித்தபடி அதனுள் தொலைந்திருந்தான் அவன்..

அவன் பார்த்த பார்வையில் தடுமாறி போனவள் “மிஸ்டர் ஆதித்யா.. உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்.. முதல்ல என் பேரை சரியா கூப்பிடுங்க..” இன்னும் சத்தமாக சொன்னாள் அவள்..

அதில் அந்த விழிகளின் சிறையில் இருந்து விடுபட்டவன் “ம்க்கும்..” தொண்டையை கனைத்து அவள் புறம் இருந்து பார்வையை திருப்பி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்..

“நீ ஊருக்கு தான் மலர் மாதிரி சாஃப்டா இருக்கே.. என்னை பொறுத்த வரைக்கும் பெரிய ராணி மாதிரி பார்க்கும் போதெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருக்கே.. அதனால உன்னை இப்படி கூப்பிடுறதுதான் ஆப்ட்டா இருக்கு.. என்னை பொறுத்த வரைக்கும் உன் பேர் அல்லிராணி தான்.. சரி அதை விடு.. அது இப்ப பிரச்சனை இல்ல.. நீ எனக்கு வாடகை கொடுத்து இங்கேயே கம்பெனி நடத்துறேன்னு சொன்ன இல்ல..? அதுல என்ன பிராப்ளம் இருக்குன்னா.. இதுவரைக்கும் அந்த நரேன் உன்கிட்ட இந்த இடத்தை பாதி வாடகைக்கு தான் விட்டிருந்தான் இல்லையா..?” நிதானமாய் கேட்டான் அவன்…

அவனை நிமிர்ந்து அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பயத்தில் அவன் கண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லி..

அவன் சுட்டு விரலை நீட்டி அவள் கண்ணை நோக்கி காண்பித்து “வாவ்.. வாவ்… உன் கண்ணுல தெரியற இந்த பயம்.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எங்க நம்ம தோத்துப் போயிடுவோமோன்னு பயம் வருது இல்ல? சரி.. விஷயத்துக்கு வருவோம்.. எனக்கு முழு வாடகையும் மாசா மாசம் வந்தாகணும்.. என்னால குறைவான வாடகைக்கு எல்லாம் இந்த இடத்தை உனக்கு கொடுக்க முடியாது..”

அவன் கறாராய் சொல்லவும் அவளுக்கு இடியை தலையில் இறக்கினாற் போல் இருந்தது..

அவன் சொன்னபடி அவனுக்கு முழு வாடகை கொடுத்தால் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் சம்பளத்தை குறைக்க நேரிடும்.. அப்படி செய்தால் அவர்கள் அனைவரும் வேலையை விட்டு சென்று விடுவார்கள்..

இது என்ன புது பிரச்சனை என்று யோசித்து அவள் கையை பிசைந்து கொண்டே இருக்கவும் “என்ன மசாலா ராணி ரொம்ப யோசிக்கிறீங்க..? ஏதாவது ப்ராப்ளமா இந்த வாடகை கொடுக்கிறதுல?” அவன் குரலில் ஏளனத்தோடு கேட்க அவளுக்கு தலை முதல் கால் வரை பற்றிக் கொண்டு எரிந்தது..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!