Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 14

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 14

by Subhashri Srinivasan
4.9
(15)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 14

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

மன்மத ராட்சசனோ.. மாயக் கண்ணனோ…!!

“என்ன மசாலா ராணி ரொம்ப யோசிக்கிறீங்க..? ஏதாவது ப்ராப்ளமா இந்த வாடகை கொடுக்கிறதுல?” ஆதித்யா குரலில் ஏளனத்தோடு கேட்க அல்லிக்கு தலை முதல் கால் வரை பற்றிக் கொண்டு எரிந்தது..

   அவள் அவனை முறைத்துக் கொண்டு பார்த்திருக்கவும் “நீ சொல்ல வேண்டாம்.. நானே சொல்றேன் இதுல உனக்கு என்ன பிரச்சனை வரும்னு.. எனக்கு முழு வாடகை கொடுக்கணும்னா உனக்கு கையிருப்புல லாபம் கம்மியா தான் இருக்கும்.. அதிலிருந்து தான் எல்லா வர்க்கர்ஸ்சுக்கும் சம்பளம் கொடுத்துட்டு இருக்கே.. இத்தனை நாளா லாபம் அதிகமா வந்ததுனால அவங்களுக்கெல்லாம் நிறைய சம்பளம் கொடுத்துட்டு இருந்தே.. இப்போ முழு வாடகை கொடுத்தேனா அவங்க சம்பளத்தை குறைச்சு கொடுக்க வேண்டி இருக்கும்.. இதனால அவங்க வேலையை விட்டு போயிட்டாங்கன்னா கம்பெனியை தொடர்ந்து நடத்துறது கஷ்டம் ஆயிடும்.. கரெக்டா?” என்றான் அவன்..

அவள் தலையை குனிந்து கொண்டு பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. “எல்லாத்தையும் இவனே சொல்றான்.. எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் வந்திருப்பான் போல இருக்கு.. சரியான எம கிராதகன்.. இப்ப என்னதான் பண்ணனும்னு நினைக்கிறான்.. சொல்லித் தொலைய வேண்டியது தானே..”  மனதிற்குள் அவனை வசைப்பாடிக் கொண்டே அமர்ந்திருந்தாள்..

“என்னை நல்லா திட்டி முடிச்சாச்சா? விஷயத்துக்கு வருவோம்.. உன் கஷ்டம் எனக்கு புரியுது.. உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு.. திடீர்னு இந்த கம்பெனியை இழுத்து மூடிட்டு இன்னொரு இடத்துக்கு போய் புதுசா செட் பண்ணி கம்பெனி நடத்துறதை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு..

நான் உனக்கு ஒரு வழி சொல்றேன் இதிலிருந்து வெளியில வர்றதுக்கு.. இந்த இடத்தை நான் உனக்கு ஃப்ரீயாவே தரேன்.. ஆனா இந்த கம்பெனில என்னை 50% பார்ட்னரா நீ சேர்த்துக்கணும்.. இதுக்கு நீ ஒத்துக்கிறதா இருந்தா நீ வாடகையே கொடுக்க வேண்டாம்.. இந்த கம்பெனியை ஃப்ரீயாவே நடத்திக்கலாம்”

அவன் கூறவும் அவள் அப்படியே ஓய்ந்து சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்..

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே உறைந்து அமர்ந்திருந்தாள்..

“என்னம்மா கண்ணு.. ரொம்ப அதிர்ச்சியா இருக்கா? நான் உனக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம் தரேன்.. அதுக்குள்ள எனக்கு யோசிச்சு பதில் சொல்லு.  11-வது நிமிஷம் நீ பதில் சொல்லாம இருந்தேனா இந்த கம்பெனில இருந்து எல்லாரையும் வெளில அனுப்பிச்சுட்டு எல்லா சாமானையும் வெளிய தூக்கி போட்டுடுவேன்..”

அவள் நாற்காலியின் இருபக்கமும் தன் கைகளை அணை போல் வைத்தவன் சட்டென அவள் இரு கைகளையும் பிடித்து இழுத்ததில் நாற்காலியில் இருந்து எழுந்து அவள் அப்படியே அவன் மீது வந்து விழுந்தாள்..

இருவருடைய கண்களும்  மற்றவருடைய கண்களில் மூழ்கி போயின.. தன் மேல் அவள் சாய்ந்திருக்க அவளின் மலர் தேகத்தின் தீண்டலில் தீ பற்றியது அவன் உடலில்.. ஒரு நொடி அவளை கூர்ந்து நோக்கிய அவன் பார்வையில் மோகம் ஏகத்துக்கும் சதிராடியது..

அந்த பார்வையில் பாவை அவளும் சிக்குண்டு தான் கிடந்தாள்.. ஆனால் இரண்டு நொடி தான் அந்த நிலை.. அடுத்த நிமிடம் அவளை திருப்பி அந்த பக்கம் நிறுத்தி வைத்துவிட்டு அவளுடைய சுழல்நாற்காலியில் தான் சென்று உட்கார்ந்தான் ஆதித்யா..

“சாரி.. லில்லி ராணி.. எனக்கு எப்பவுமே கம்பெனியோட பாஸா  இருந்துதான் பழக்கம்.. அதனால நான் இங்கே உட்கார்ந்துக்கறேன்.. அங்க போய் நீ உட்காரு” என்றான் அவன்..

அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.. இப்போதைக்கு அவளுக்கு வேறு வழி கிடையாது.. அவன் சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டும்.. ஆனால் 50% உரிமையை அவனுக்கு கொடுத்து விட்டால் அவன் அதை வைத்துக்கொண்டு என்னென்னவெல்லாம் இந்த நிறுவனத்தில் செய்வான் என்று அவள் ஓரளவு  அறிவாள்..

அதில் முதல் விஷயமாக அங்கு இருக்கும் பெண்களுக்கு எல்லாம் வேலை போய்விடும் என்பது நிச்சயம்..

யோசித்துக் கொண்டே இருந்தவளை “எட்டு நிமிஷம் ஆயிடுச்சு.. இன்னும் ஒரு தீர்மானத்துக்கு வராம இருக்க.. யோசிச்சு சொல்லு.. பத்தாவது நிமிஷம் இங்கே இருந்து நான் வெளிய போயிடுவேன்.. நான் வெளியில போனா என்ன நடக்கும்னு உனக்கு தெரியும்” என்று மிரட்டினான் அவளை..

அவள் மெதுவாக வாயை திறந்தாள்.. “எனக்கு உங்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்கறது பத்தி ஓகே தான்.. ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு..” என்றாள்.

“ஓ… மேடம் இப்பவும் உங்க சைடுல இருந்து கண்டிஷன் எல்லாம் போடுவீங்களா?” என்று அவன் கேட்கவும் “இதை கண்டிஷன்னு கூட எடுத்துக்க வேண்டாம்.. என்னோட ரிக்வெஸ்ட்டா எடுத்துக்கோங்க..” என்று அவள் சொன்னாள்…

அவள் குரலில் கெஞ்சும் தொனி இருக்க அதைக் கேட்டு புன்னகைத்தவன்..அப்படி வாடி வழிக்கு என்று நினைத்து இதழோரத்தை விரித்து முறுவலித்தான்..

“சரி சொல்லு.. என்ன விஷயம்?” என்றான்..

“எனக்கு தெரியும்.. உங்களோட எந்த கம்பெனியிலுமே பொண்ணுங்களே ஒர்க் பண்ணலன்னு.. ஆனா இந்த கம்பெனியில நான் வேலை கொடுத்து இருக்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் திடீர்னு வேலை போயிருச்சுனா ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அதனால அவங்களை கொஞ்சம் வேலையை விட்டு எடுக்காம இருக்கணும்..  உங்களுக்கு  50% பார்ட்னர்ஷிப் கொடுத்துட்டேன்னா அதுக்கப்புறம் நீங்க உங்க ரூல்ஸை இந்த கம்பெனியில் அப்ளை பண்ணனும்னு நினைப்பீங்க.. அந்த ரூல்ஸ்ல இந்த ரூலும் இருந்ததுன்னா அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. நான் அவங்களுக்கெல்லாம் வேலை கொடுத்து அவங்க வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கேன்.. அவங்களை திடீர்னு வேலையை விட்டு எடுத்தா அவங்க வாழ்க்கையில நம்பிக்கையே போயிரும்.. அதனால இதை மட்டும் கொஞ்சம்..”என்று இழுத்தாள்..

“சரி.. ஓகே.. எனக்கு எப்படி இருந்தாலும் இங்கே இருக்கிற கேர்ள்ஸ் எல்லாம் வெளியில அனுப்பணும்கற தாட் இல்லை.. ஏன்னா இவங்க வேலை செஞ்சதனாலதான் இன்னைக்கு உன்னோட ப்ராடக்ட்ஸ் எல்லாம் நல்ல லெவல்ல சேல் ஆயிட்டு இருக்கு.. அதனால இவங்க யாரையுமே நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. நான் பக்கா பிசினஸ்மேன்.. எனக்கு லாபம் தர்ற எதையும் மிஸ் பண்ண மாட்டேன்.. கவலைப்படாதே..”

அவன் அவ்வாறு சொன்னது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது..

“அப்படின்னா உங்களுக்கு 50% பார்ட்னர்ஷிப் தர்றதுக்கு எனக்கும் ஓகேதான்.. “

அவள் கூறவும் அவன் கைபேசியை எடுத்து அருணுக்கு அழைத்தான்.. “அருண் நான் காலையில சொன்னேன் இல்ல.. அந்த பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிடு.. இன்னும்  ஒரு மணி நேரத்துல அந்த பேப்பர்ஸ் இங்க வந்திருக்கணும்.. ” என்றான்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் அருண் வந்து அந்த பத்திரங்களை கொடுக்க இருவரும் படித்து பார்த்து அதில் கையெழுத்திட்டார்கள்..

“ஓகே.. லீகலா இந்த கம்பெனியோட ஓனராகிட்டேன்.. 50% ஓனர்.. அதனால நான் தினமும் வந்து இந்த கம்பெனியோட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் சூப்பர்வைஸ் பண்ணுவேன்.. என்னோட எல்லா கம்பெனிக்கும் டெய்லி நான் போய் பாத்துட்டுதான் இருக்கேன்.. அதே மாதிரி இங்கேயும் வருவேன்.. நான் இங்க வர்ற நேரத்துல நான் தான் இந்த சேர்ல உக்காருவேன்.. என்னை பொறுத்த வரைக்கும் நான் தான் இந்த கம்பெனிக்கு ஓனர்.. நீ என்னோட பார்ட்னரா ஒர்க் பண்றே.. அவ்வளவுதான்..”

அவளிடம் மிடுக்காய் கூறியவன் “நான் கிளம்புறேன்..வரட்டா..?” என்று அவள் கன்னத்தை தட்டி சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான்..

அப்படியே அந்த  சுழல்நாற்காலியில் அமர்ந்தவள்.. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை.. அலுவலகத்தில் இருந்து ஒரு பெண் வந்து ஒரு கோப்பில் அவளை கையொப்பமிடச் சொல்லி கேட்கும் போது தான் அவள் பூமிக்கு வந்தாள்..

அல்லியின் அறையை விட்டு வெளியே வந்தான் ஆதி..

அங்கே காமாட்சி பாட்டி வேலை செய்து கொண்டே இருக்கும் போது திடீரென மயங்கி விழவும் பக்கத்தில் இருந்த பெண் ஓடிப்போய் அவளை பிடித்து “பாட்டி பாட்டி.. என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டாள்..

அவனுக்கு பெண்களைப் பிடிக்காது என்றாலும் அந்த வயதான பெண்மணி உடல்நிலை சரியில்லாமல் மயங்கி இருக்கவே அருகில் சென்று என்னவென்று பார்த்தான்..

“என்ன ஆச்சு இவங்களுக்கு?”

மிரட்டும் தொனியில் அந்த பெண்ணை கேட்கவும் “இல்ல.. மசாலா பொடி பேக் பண்ணிட்டு இருந்தோம்.. ஃபேன் போட்டா பொடி எல்லாம் பறக்கும்.. அதனால ஃபேன் போடாம வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க.. ரொம்ப வேர்த்து கொட்டிருச்சு போல இருக்கு.. அவங்களுக்கு லோ பிபி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.. அதான் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.. நான் போய் சக்கரை தண்ணி ஏதாவது எடுத்துட்டு வரேன்..” என்று சொல்லி அவள் சென்றாள்..

ஒரு நிமிடத்தில் அங்கு இருப்பவர்கள் யாருக்கும் அவன் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.. அப்படியே பாட்டியை கைகளில் தூக்கி அவன் நேரே சென்று தன் காரில் பின் இருக்கையில் படுக்க வைத்து விட்டு அங்கிருந்த இன்னொரு பெண்ணை பாட்டியோடு வந்து அமர சொல்லி காரை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு சென்றான்..

அங்கே பாட்டிக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் பாட்டிக்கு நினைவு வந்தவுடன் “அம்மா இப்ப எப்படி இருக்கு உங்களுக்கு?” என்று கேட்டார்..

“பரவால்ல தம்பி..”

அவர் பதில் சொல்லவும் அவரை சில கேள்விகள் கேட்டு பிறகு ஆதித்யாவை உள்ளே கூப்பிட்டார்..

“அம்மா நீங்க போயி வெளியில் வெயிட் பண்ணுங்க.. நான் இவர்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

காமாட்சி பாட்டியை வெளியே அனுப்பி வைத்தார் அந்த மருத்துவர்..

“சார்.. அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க..ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணி வேலை செஞ்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.. அவங்க கிட்ட கேட்டதுல இருந்து மசாலா பொடி பேக் பண்ற வேலை செஞ்சிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க.. அது மாதிரி கஷ்டமான வேலை எல்லாம் அவங்க செய்ற வயசு இல்ல சார்..  அது மட்டும் இல்லாம மசாலா பொடி பேக் பண்ற வேலை செய்யறதுனால ஃபேன்ல உட்காராம ரொம்ப ஸ்டஃப்பியா இருக்கிற இடத்தில உட்கார்ந்து வேலை செஞ்சிருக்காங்க.. அதனால அவங்களுக்கு வேர்த்து கொட்டி லோ பிபி ஆயிட்டிருக்கு.. அவங்களுக்கு டயாபடீஸ் கம்ப்ளெயின்ட் வேற இருக்கறதா சொல்றாங்க.. மெடிசன்ஸ் கொடுத்துருக்கேன்.. ஆனாலும் அவங்களை கொஞ்சம் பார்த்து வேலை செய்ய சொல்லுங்க.. ஏன்னா அவங்க வேலை செஞ்சு தான் ஆவேன்னு பிடிவாதமா இருக்காங்க.. கொஞ்சம் காத்தோட்டமா இருக்கிற இடத்துல வேலை செஞ்சாங்கன்னா அவங்களுக்கு நல்லது.. ஆக்டிவா இருக்கிறது நல்லது தான்.. அதே சமயம் அவங்க வயசுக்கு ஏத்த மாதிரி வேலை செய்யறது.. அவங்க உடம்புக்கு இந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கறதுக்கு உதவி பண்ணும்”

அந்த மருத்துவர் காமாட்சி பாட்டியின் நிலையை விளக்கி கூறி முடித்தார்..

“ஓகே டாக்டர்.. ரொம்ப தேங்க்ஸ்..”

பாட்டியை அழைத்து வந்து கம்பெனியில் விட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து போய் விட்டான்..

இங்கே அல்லியோ இதைப் பற்றி எதுவுமே அறியாமல் இரண்டு மணி நேரத்திற்குள் நடந்து போனவற்றை நினைத்து அதிர்ச்சிக்குள்ளாகி அறையை விட்டு வெளியே வரவே இல்லை..

எந்திரம் போல அதன் பிறகு வேலைகளை செய்தவள் மாலை சோர்வான முகத்துடன் வீட்டுக்கு சென்றாள்..

மறுநாள் காலை முன்னாள் நடந்ததை எண்ணி சிறிதும் உற்சாகம் இல்லாமல் தன் நிறுவனத்திற்கு வந்தவளின் கண்கள் உள்ளே நுழைந்ததும் ஆச்சரியத்தில் விரிந்தன..

அந்த நிறுவனம் முழுவதும் குளிரூட்டிகள் ( ஏர் கண்டிஷனர்) பொருத்தப்பட்டு இருந்தன.. நிறுவனத்திற்கு வெளியே மரத்தடுப்பு போட்ட அறையில் ஒரு செவிலி அமர்ந்து இருந்தார்.. ஒரு குட்டி வைத்தியசாலையே அங்கே இருந்தது..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!