Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 16

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 16

by Subhashri Srinivasan
4.8
(16)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 16

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

துணையாய் ஒரு மனம்..!!

எப்படியும் ஆதித்யா தன் காதுகளில் கேட்க முடியாத அளவுக்கு வசை பாடி தன்னை வறுத்தெடுக்க போகிறான் என்று அறிந்த அல்லி அதை எதிர்பார்த்தே காத்திருக்க அவளை ஏமாற்றாமல் இறுகிய குரலில் அவளை வார்த்தைகளால் இடிக்கத் தொடங்கினான் ஆதித்யா..

“மிஸ் அல்லி மலர்.. இந்த மாதிரி வேலை செய்ற நேரத்துல ஸ்டாஃப்ஸை வேலை செய்ய விடாம அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்கன்னா அதுக்கப்புறம் நம்ம கம்பெனிக்கு தான் நஷ்டம் வந்து சேரும்.. நீங்க மட்டும் இதுக்கு ஓனரா இருந்த வரைக்கும் இதெல்லாம் பெரிய விஷயமா இருந்திருக்காது.. ஆனா இப்ப நானும் 50% பார்ட்னர்.. எனக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்.. இந்த மாதிரி அரட்டை அடிக்கிறது இதுவே லாஸ்ட் டைமா இருக்கட்டும்.. அப்புறம் உங்க புடவை கட்டுற அழகை வர்ணிக்கணும்னா அதை அவரை வேலை டைம் முடிஞ்சப்புறம் சாயங்காலமா உங்க வீட்டு பக்கத்துல வந்து வச்சுக்க சொல்லுங்க..”

கோபமாக சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றான்..

“இப்பதான் நல்ல விஷயம் பண்ணி இருக்கான்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.. என் கண்ணே பட்டுடுச்சு.. இதோ அடுத்த நிமிஷம் வந்து வெறியேத்திட்டு போயிட்டான்.. இவனை..‌‌”

கருவியவள் “இப்படி என்ன தனியா புலம்ப வுட்டுட்டானே” என்று எண்ணியபடி உள்ளே சென்றாள்..

அன்று மாலை வேலை முடிந்து ஆதித்யா தன் வீட்டுக்கு வரவும் நேரே தன் தந்தையின் அறைக்கு சென்றான்..

இப்போதெல்லாம் தினமும் தன் தந்தையிடம் ஒரு அரை மணி நேரம் பேசி விட்டு போவதை வாடிக்கையாக வைத்திருந்தான்..

“வா ஆதித்யா..”

அவர் அமைதியாக அழைக்கவும் “என்ன டாட்.. ஒரே சீரியஸ் மோட்ல இருக்கீங்க.. என்ன விஷயம்? என் மேல ஏதாவது கோவமா இருக்கீங்களா?”

“கோவமா..? இல்லப்பா.. உன் மேல எப்படி நான் கோபப்பட முடியும்? நீ என் செல்ல புள்ளையாச்சே.. ஆனா கொஞ்சம் வருத்தமா இருக்கு..” என்றார் அவர்..

“என்ன வருத்தமா இருக்கா..? என்ன வருத்தம்? நீங்க வருத்தப்படுற மாதிரி யாரு என்ன செஞ்சா? சொல்லுங்க.. அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”

“வேற யாராவது பண்ணி இருந்தா நீ உண்டு இல்லைன்னு பண்ணுவ.. நீயே பண்ணி இருந்தா..?”

அவர் குரலில் நிஜமான வருத்தத்தோடு சொல்ல “நானா? நான் என்னப்பா பண்ணேன்?” யோசனையோடு கேட்டான் ஆதி..

“காலைல அருண் ஒரு ஃபைல் எடுத்துட்டு போக வந்தான்.. அப்போ நீ எப்படி வேலை செய்றனு நான் கேட்டேன்.. அப்பதான் நீ ஒரு புது கம்பெனி வாங்கி இருக்கேன்ற விஷயத்தை என்கிட்ட சொன்னான்”

அவர் சொன்ன உடனே அவர் எந்த விஷயம் பற்றி பேசுகிறார் என்று புரிந்து விட்டது ஆதிக்கு..

“அப்பா ப்ளீஸ்.. அந்த அல்லி மலரோட கம்பெனியை வாங்கினது தப்புன்னு மட்டும் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க..”

“இவ்வளவு நிறைய கம்பெனி வெச்சிருக்கற நீ அந்த அல்லிமலரோட கம்பெனியை வாங்குறதுல என்ன மோட்டிவ் இருக்கும்னு நினைச்சு பார்த்தாலே எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. சொல்லு.. எதுக்காக அந்த கம்பெனியை வாங்கினே? நீ சொல்ற காரணம் சரியா இருந்ததுன்னா நான் அதுக்கப்புறம் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன்” என்றார் அவர்.

“அப்பா அந்த அல்லி மலர் என்னை தோக்கடிச்சவ.. எல்லா இடத்திலயும் நான் தான் அவளுக்கு பாஸா இருக்கணும்னு நினைச்சேன்.. ஒவ்வொரு இடத்திலயும் எங்கிட்ட மட்டும் அவ தோத்துக்கிட்டே இருக்கணும்னு நினைச்சேன்.. அதனாலதான் அந்த கம்பெனியை வாங்கினேன்.. இப்போ ஒவ்வொரு நாளும் என்னுடைய இன்ஸ்ட்ரக்ஷன் கேட்டுதான் அவ கம்பெனி நடக்குது.. அதுவே எனக்கு ஒரு விக்டரிதானே? அந்த விதத்துல நானும் சந்தோஷமா இருக்கேன்.. மத்தபடி நான் அவ கம்பெனி நடக்குறதுக்கு எந்த பிரச்சனையும் பண்ணல.. இன்ஃபாக்ட் எனக்கு பொண்ணுங்களே புடிக்காது.. அந்த கம்பெனில வச வசன்னு அவ்வளவு பொண்ணுங்க இருக்காங்க.. இருந்தாலும் அதெல்லாம் பொறுத்துக்கிட்டு அவளை ஜெயிக்கணுங்கறதுக்காகவே அந்த கம்பெனியை வாங்கி இருக்கேன்” கண்களில் தீ பறக்க சொன்னான் அவன்….

“ஆதி.. எவ்ளோ நாள் இப்படி இருக்க போற? பொண்ணுங்களே இல்லாம வாழ்க்கையில நீ என்னதான் பண்ண போற? இப்படியே போயிட்டு இருந்தா உன் வாழ்க்கை ரொம்ப வெறுமை ஆயிடும்டா.. எனக்கு பயமா இருக்குடா..” புலம்பினார் சைலேந்திரவர்மன்..

“அப்பா… வாழ்க்கையில பொண்ணுங்க எதுக்குப்பா? அவங்க செய்யறது எது நம்ம செய்ய முடியாது? சொல்லுங்க.. எல்லாம் செய்ய முடியும்.. சமைக்கிறது.. துவைக்கறது, வீட்டைப் பார்த்துக்கறது இதுக்கு பொண்ணு எதுக்குப்பா..? வேலைக்காரங்க போதும்.. இப்படியே வியாபார உலகத்துல சிங்கமா நான் சுத்தி வருவேன்.. யாரும் அசைக்க முடியாம.. என்னையும் என் கம்பெனியையும் நல்லா வளர்த்து இந்த ஆறு கம்பெனியை இன்னும் பத்து கம்பெனியா மாத்துவேன்.. எப்பவும் கொடி கட்டி பறப்பேன்….” அவன் பந்தயத்தில் ஓடும் குதிரையாய் பேசினான்..

“சரி.. என்னோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லு.. இதெல்லாம் செஞ்சு முடிச்சப்புறம் உனக்கும் என் வயசு வரும் இல்ல? அப்ப என்ன பண்ணுவ?”

“நீங்க இப்ப என்ன பண்றீங்களோ.. அதைத்தான் பண்ணுவேன்.. நானும்… சந்தோஷமா இருப்பேன்..” என்றான் அவன்..

“நான் சந்தோஷமா இருக்கேன்.. ஆனா அதுக்கு காரணம் என்ன தெரியுமா? என் புள்ள நீ.. என் கூட இருக்க.. ஆனா நீ சந்தோஷமா இருக்குறதுக்கு உன் புள்ள உன் கூட இருப்பானா ஆதி?”

அந்தக் கேள்வியை கேட்டுவிட்டு அவர் அவனை அர்த்தத்தோடு பார்க்க அவன் அமைதியாய் அவரையே புருவம் சுருக்கி கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“ஆதி தனிமை நம்ம கொன்னுடும்.. உனக்கு இப்ப தெரியாது.. இப்ப நீ வேலையில மூழ்கி போய் இருக்க.. உன் உடம்புல நல்லா தெம்பு இருக்கு.. இப்போ உனக்கு எந்த துணையும் தேவைப்படாது.. ஆனா வயசானப்புறம் உன்னை தாங்கிக்கறத்துக்கு ஒரு பொண்டாட்டி வேணும்.. புள்ள வேணும்னு தோணும்..  உன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்திருக்கிறது  ஒரு குடும்பம் வேணும்ன்னு தோணும்.. அப்ப நீ தனியா இருந்தேனா அதைவிட கொடுமையான வாழ்க்கை வேற எதுவுமே இருக்க முடியாதுபா..  நான் ரெண்டு கம்பெனியா உன்கிட்ட கொடுத்ததை நீ ஆறு கம்பெனியா ஆக்கியிருக்க.. நான் சம்பாதிச்சதோட நோக்கம் நிறைவேறிடுச்சு.. நான் சம்பாதிச்ச ரெண்டு கம்பெனியை என் பிள்ளைக்கு நான் கொடுத்துட்டேன்.. ஆனா நீ ஆறு கம்பெனி உருவாக்கியிருக்கியே.. நீ உருவாக்கி இருக்கற இந்த சாம்ராஜ்யத்தை உன் காலத்துக்கு அப்புறம் யாருக்கு நீ கொடுக்க போற ?””

அவர் கேட்ட அடுத்த நொடி யோசிக்காமல் “எதுக்குப்பா யாருகிட்டயும் கொடுக்கணும்? நான் அனுபவிச்சிட்டு அப்படியே அதை ஏதாவது ஒரு ஆஷ்ரமத்துக்கு எழுதி வெச்சுடறேன்.. அவங்களுக்கு அது உதவும் தானே..? என் குழந்தைக்கு கொடுத்தா அவன் ஒருத்தனை தான் அது காப்பாத்தும்.. இந்த மாதிரி கொடுத்தா நிறைய பேரை காப்பாத்துமேப்பா..” தெளிவாக சொன்னான் ஆதி..

அதைக் கேட்டு அவரும் விடாப்பிடியாக “என்னோட ஒரு கேள்விக்கு நீ பதில் சொல்லிட்ட.. இன்னொரு கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்ல.. வயசானப்புறம் இதோ இப்போ நானும் நீயும் பேசிட்டு இருக்கோம் இல்ல? அந்த மாதிரி உன் கூட பேசறதுக்கு யாராவது இருப்பாங்களா ஆதி? உனக்கு பிரண்ட்ஸ்சும் ரொம்ப கிடையாது.. சத்ரேஷை தவிர.. அவனும் இப்போ அவன் காதல் தோல்வியினால தனியா இருக்கான்… நாளை பின்ன அவனுக்கும் பொண்டாட்டி புள்ளனு வந்துட்டாங்கனா..”

சிறிது நிறுத்தியவர்..”வந்துட்டாங்கன்னா என்ன…நிச்சயமா வருவாங்க.. அதுக்கப்புறம் இந்த மாதிரி உன்னோட அவனாலே இருக்க முடியாது… என்னை தவிர  இன்னைக்கெல்லாம் நீ பேசுற ஆளுங்கனு பாத்தா உன் கூட வேலை செய்றவங்க, உன்னோட கிளையன்ட்ஸ், கஸ்டமர்ஸ்தான்.. என்னையும் சத்ரேஷையும் தவிர வேற யார்கிட்டயும் கேஷுவலா கூட நீ பேச மாட்டேங்குற.. அப்படி இருக்கும்போது நீ இப்ப என் கூட பேசுற மாதிரி உன் கூட பேசறதுக்கு ஒரு ஆள் வேண்டாமா? இப்ப திடீர்னு நான் படுத்த படுக்கையானா எனக்கு எல்லா வித ட்ரீட்மென்ட் பண்ணி என்னை நல்லா கவனிச்சுக்கறதுக்கு நீ இருக்க.. ஒரு வேளை உன் வயசான காலத்துல அந்த மாதிரி உனக்கு ஆனா உன்னை யாரு கவனிச்சுப்பா..?”

அவனோ எதற்கும் சலிக்காமல் பதிலை தயாராக வைத்திருந்தான்..

“அப்பா இந்த காலத்துல எல்லாத்துக்கும் ஆள் கெடைப்பாங்கப்பா.. நிறைய பணம் கொடுத்தா அவங்க நம்மளை நல்லா கவனிச்சுப்பாங்கப்பா…. பணம் தான்பா முக்கியம்.. அந்த பணத்தை கொடுத்தோம்னா நம்ப உறவுகளை விட நல்லா பார்த்துக்க ஆள் கெடைப்பாங்க..” அவன் அனாயாசமாய் சொல்லவும் அவன் தந்தை வாய்விட்டு சிரித்தார்..

“ஆதி இப்போ நீ என்னோட பேசறியே.. இந்த அரை மணி நேரம்… இந்த மாதிரி இந்த வீட்ல வேலை செய்ற யாரு வந்து பேசினாலும் என் மனசுக்கு சந்தோஷம் இருக்காது.. உன்னை ஒன்னு கேக்குறேன் நான் உன்னோட பேசறதும் இந்த வீட்ல வேலை செய்ற ஒருத்தர் உன்னோட பேசறதும் உனக்கு ஒரே மாதிரி ஃபீலிங்க கொடுக்குமா?”

“அது எப்படிப்பா அவங்களும் நீங்களும் ஒண்ணாக முடியும்..? நீங்க என் உயிர் பா.. நான் உங்க புள்ள பா..” என்று சொல்லி அவரைக் கட்டி அணைத்தவன் “ஏன் இப்படி எல்லாம் கேட்டு என் மனசை கஷ்டப்படுத்தறீங்க..?” என்றான் அவன்..

“உன் மனசை கஷ்டப்படுத்தணும்ங்கறதுக்காக நான் இதை சொல்லலப்பா.. உனக்கு புரிய வைக்கணும்ங்கிறதுக்காக சொல்றேன்..நமக்கு எதையும் எதிர்பார்க்காம நம்ம நல்லா இருக்கணும்னு நினைச்சு ஹெல்ப் பண்ணனும்னா ரெண்டே ரெண்டு பேரால தான் அது முடியும்.. ஒண்ணு ரத்த சம்பந்தம் இருக்கிறவங்க இல்ல நாம கட்டின நம்ப பொண்டாட்டி.. இவங்க ரெண்டு பேர் தான் எதையுமே எதிர்பார்க்காம நம்ம நல்லா இருக்கணும்னு நினைப்பாங்க.. சில பேருக்கு இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் அமையறது உண்டு.. இப்போ சத்ரேஷ் மாதிரி.. ஆனா அவங்களுக்குனு ஒரு குடும்பம் வந்ததுன்னா அவங்களே நினைச்சாலும் நம்ம கூட வந்து அவங்களால இருக்க முடியாதுப்பா.. அதனால நான் சொல்லறதை கேளு..  உன் வாழ்க்கை தனிமையா கொடுமையா போகக்கூடாதுன்னா நீ தயவு செஞ்சு ஒரு கல்யாணம் பண்ணிக்கோ..”

அவர் பேசி முடித்தார்..

“அப்பா..!!” என்று சத்தமாக கத்தியவன் “நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களேப்பா.. ஆனா நீங்க சொல்ற உங்க பொண்டாட்டி உங்க கூட இப்ப இல்லையேப்பா.. யாரோ ஒருத்தர் முக்கியம்னு அவங்களோட போயிட்டாங்களேப்பா.. தன் புருஷனும் பிள்ளையும் என்ன கதி ஆனாங்கன்னு கூட கவனிக்கலையேப்பா.. இப்படி இருக்கும்போது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் என் பொண்டாட்டி என்னை கவனிச்சுப்பான்னு என்னப்பா உத்தரவாதம்? இதே மாதிரி என் பொண்டாட்டியும் சுயநலமா இருக்க மாட்டான்னு உங்களால எப்படி உறுதியா சொல்ல முடியும்?” அடிபட்டவனாய் கேட்டான் அவன்..

“நீ சொல்றது கரெக்டு தான் பா.. கல்யாணங்கற விஷயத்துல என்னதான் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாம போனாலும் ஆனா எனக்கு புள்ளையா நீ கிடைச்ச விஷயத்துல நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன் பா.. உன்னைவிட என்னை நல்லா பார்த்துக்கற ஒரு நல்ல புள்ள எனக்கு கிடைச்சிருக்க முடியாது.. எனக்கு பொண்டாட்டி ஒழுங்கா அமையல.. ஆனாலும் தங்கம் மாதிரி புள்ள அமைஞ்சிருக்கே.. இந்த மாதிரி ஏதோ ஒரு உறவு உனக்கும் வேணுங்கிறதுக்காக தான் நான் இவ்வளவு நேரம் உன் கூட பேசிகிட்டு இருக்கேன்..”

அதன் பிறகு தன் கண்கள் கலங்க “நீயும் நாள் முழுக்க கம்பெனி வேலை அது இதுன்னு சுத்திட்டு சாயந்திரம் தினமும் ஒரு அரை மணி நேரம் என் கூட வந்து பேசுற பா.. மத்த நேரம் எல்லாம் நான் தனியா தான்டா இருக்கேன்.. என் கூட பேசறதுக்கு பொண்டாட்டி இல்ல.. அது என் தலையெழுத்து.. ஆனா மத்தவங்க மாதிரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பேரனோ பேத்தியோ கூட இருந்தா இந்நேரம் அவங்களை கொஞ்சிக்கிட்டே கவனிச்சுக்கிட்டே என் நேரம் போறதே தெரியாம நான் சந்தோஷமா இருந்திருப்பேன்.. இப்ப அதுக்கும் வழி இல்லாம சில நேரத்துல அப்படியே தனியா நான் உட்கார்ந்து இருக்கும் போது உயிரையே விட்டுடலாம் போல அவ்வளவு வெறுமையா இருக்குப்பா.. அது உனக்கு சொன்னா புரியாது.. உனக்கு அந்த நிலைமை வரக்கூடாதுங்கறதுக்காக தான் நான் சொல்றேன்.. “

நா தழுதழுக்க அவர் சொல்ல தந்தை தனிமையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று அறிந்தவன் மனதை என்னவோ செய்தது.. இப்படியே சென்றால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்று புரிந்து கொண்டான்..

“சரிப்பா இப்ப என்ன உங்களுக்கு நான் ஒரு பேரப்பிள்ளையோ பொண்ணோ பெத்து குடுக்கணும்.. அவ்வளவுதானே?”

அவன் ஏதோ பொருளை கடையில் வாங்கி தரட்டுமா என்பது போல் கேட்க அவர் முகத்தில் ஒரு கேள்விக்குறியோடு  “என்ன இவன்… இப்படி கேட்கிறான் கூலா..” என்று நிமிர்ந்து பார்த்தார்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!