Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 17

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 17

by Subhashri Srinivasan
4.9
(15)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 17

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

அன்னையாய் அல்லிராணி…!!

“சரிப்பா இப்ப என்ன உங்களுக்கு நான் ஒரு பேரப்பிள்ளையோ பொண்ணோ பெத்து குடுக்கணும்.. அவ்வளவுதானே?”

அவன் ஏதோ ஒரு பொம்மையை கடையில் வாங்கி தரட்டுமா என்பது போல் கேட்க அவர் முகத்தில் ஒரு கேள்விக்குறியோடு  நிமிர்ந்து பார்த்தார்..

“என்ன இவன்… கூலா இப்படி கேட்கிறான் ..”

மனதிற்குள் நினைத்தவர் “என்ன ஆதி? ஏதோ கடைக்கு போய் பொம்மை வாங்கிட்டு வர்ற மாதிரி அவ்வளவு ஈஸியா சொல்ற?”

அவர் அரண்டு போய் கேட்க, “ஆமாம்பா.. இப்ப பிள்ளை பெத்துக்கறதெல்லாம் கடைக்கு போய் பொம்மை வாங்கற மாதிரி ஈஸி தான்பா.. அதுக்கு எதுக்குப்பா நான் கல்யாணம் பண்ணிக்கணும்? அதுக்கு எதுக்கு ஒருத்தியை கூட்டிட்டு வந்து வீட்ல மகாராணி மாதிரி வச்சுக்கணும்..? அதெல்லாம் தேவையில்லைப்பா.. இப்ப ஸயின்ஸும் டெக்னாலஜியும் எவ்வளவோ முன்னேறி இருக்கு.. அதனால கல்யாணம் பண்ணிக்காமயே என்னால ஒரு பேரக்குழந்தையை உங்களுக்கு பெத்துக் குடுக்க முடியும்… கல்யாணம்கிற ஒரு அமைப்பையே வெறுக்கிறேன்பா நான்.. கல்யாணம் காதல்ன்கிற பேர்ல ஒரு பொண்ணு வந்து என்னை அவளுக்கு அடிமை ஆக்கறதையோ… ஏமாத்தறதையோ.. அப்புறம் தூக்கி போட்டுட்டு போறதையோ என்னால நெனைச்சு கூட பார்க்க முடியலை.. எனக்கு நான்தான் ராஜா.. என்னை யாருமே தனக்கு அடிமையாக்க முடியாது..”

அவன் கண்களில் ஒரு திமிரோடு கூறியதை கேட்டு அவருக்கு  கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.. ஆனால் தன் அன்புக்கு  அவனை அடிமையாக்க ஒருத்தி பிறந்திருக்கிறாள் என்பதை அவன் அறியவில்லை..

“என்னதான் சயின்ஸ் முன்னேறி இருந்தாலும் அந்த மாதிரி குழந்தையை பெத்துக்க கூட ஒரு கர்ப்பப்பை வேணும் டா.. அந்த கர்ப்பப்பை ஒரு பொண்ணு கிட்ட இருந்து தான் உனக்கு கிடைக்கும்… எந்த ஆம்பளையும் தனியா புள்ள பெத்துக்க முடியாது… ஒரு பொண்ணோட உதவியே இல்லாம நீ எப்படி குழந்தை பெத்துப்ப?” என்று கேட்டார் அவர்..

“ரொம்ப சிம்பிள் பா.. டாக்டர் கிட்ட போயி ஒரு சின்ன ப்ரோசிஜர் பண்ணா போதும்.. அவங்க ஒரு வாடகை தாய் ஏற்பாடு பண்ணி பத்து மாசத்துக்குள்ள உங்க புள்ளைக்கு பொறந்த உங்க பேரக்குழந்தையை உங்க கையில கொடுத்துடுவாங்க… இதுக்கு எதுக்குப்பா கல்யாணம் பண்ணனும்? ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து வீட்ல வைக்கணும்? தேவையில்லை” என்றான் அவன் தோளை குலுக்கி..

“ஆதி.. இவ்வளவு தூரம் நீ பேசுற.. ஒண்ணு யோசிச்சு பார்த்தியா? அந்த மாதிரி யாரோ ஒரு முகம் தெரியாத ஒரு வாடகை தாய் வயித்துல வளர்ற உன்னோட குழந்தை நிச்சயமா சந்தோஷமான சூழ்நிலையில் வளரும்னு உறுதியா உன்னால சொல்ல முடியுமா? முடியாதில்ல? உங்க அம்மா மாதிரியே வெறும் பணத்தை மட்டுமே நினைக்கிற ஆள் வயித்துல உன் குழந்தை வளராதுன்னு என்ன நிச்சயம்? அப்போ அந்த குழந்தைக்கு வேண்டிய அன்பு பாசம் இதெல்லாம் கிடைக்காது.. அந்த குழந்தை ஒரு இறுக்கமான சூழ்நிலையில் தான் வளரும்… அந்த குழந்தை நல்லபடியா வளரணும்னா  தாய்மை அடையறதை பெருமையா வரமா நினைக்கிற… எல்லாருக்கும் அன்பு கொடுக்க தெரிஞ்ச.. ஒரு பொண்ணு அந்த குழந்தையை சுமந்தா தான் அது நடக்கும்.. உன்னால அந்த மாதிரி ஒரு பொண்ணை வாடகைத் தாயா ஏற்பாடு பண்ணி புள்ளைய பெத்துக்க முடியுமா? யோசிச்சு பாரு..  அந்த மாதிரி ஒரு நல்ல பொண்ணு நிச்சயமா கல்யாணம் செய்துக்காம உனக்கு வாடகை தாயா மட்டும் இருந்து புள்ளையை பெத்து கொடுக்க ஒத்துக்க மாட்டா.. அது நம்ம வீட்டு வாரிசு டா.. அப்படி இருக்கும்போது அந்தப் புள்ள உருவாகற நாள்ல இருந்து நம்ம கண் எதிரே நம்ம அதை பார்த்து பார்த்து கவனிக்க அன்பான ஆரோக்கியமான பிள்ளையா வளர வேண்டாமா?” அக்கறையோடு கேட்டார் அவர்..

சிறிது மௌனமாய் இருந்துவிட்டு சட்டென தன் தந்தையை நிமிர்ந்து பார்த்து “ கல்யாணங்கற லைஃப் டைம் கமிட்மென்ட் இல்லாமயே எல்லார்கிட்டயும் அன்பாவும் கருணையோடவும் நடந்துக்கிற ஒரு பொண்ணை வாடகை தாயா ஏற்பாடு பண்ணி குழந்தையை  பெத்து தர சொல்ல வேண்டியது என் பொறுப்பு.. அதனால இனிமே நீங்க அதை பத்தி கவலைப்படாதீங்க.. நல்ல முறையில நல்ல பொண்ணு மூலமா உங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ கையில கிடைக்கும்.. நீங்க அவங்களோட இந்த வீட்ல நேரம் போறது தெரியாம விளையாடலாம்..” என்று சொல்லிவிட்டு “சரிப்பா.. ரொம்ப டைம் ஆயிடுச்சு.. நீங்க இதை பத்தி எல்லாம் கவலைப்படாம தூங்குங்க.. நான் என் ரூமுக்குப்போறேன்.. குட் நைட் டாட்..” என்று சொன்னான்..

மனதினுள்ளே இதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு திட்டமிட்டு கொண்டே தன்னறைக்கு சென்றான் அவன்..

மறுபடி மறுபடி தன்னை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி நச்சரிக்கும் அப்பாவின் நச்சரிப்பில் இருந்து தப்பிப்பதற்கு இப்போது சொன்னதை சீக்கிரம் செய்து அவர்  கையில் ஒரு பேர பிள்ளையை கொடுத்து அவருக்கு வேறு எதைப் பற்றியும் தன்னை கேட்க நேரமில்லாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்..

அவன் தந்தையோ அடுத்து என்ன விபரீதம் செய்து வைக்க போகிறானோ என்ற கவலையோடு அவன் போவதையே பார்த்திருந்தார்.. தான் குழந்தையை பற்றி அவனிடம் பேசியது தவறோ என்று யோசிக்க தொடங்கினார் மனிதர்..

ஆனால் இனிமேல் அவர் வேண்டாம் என்றாலும் ஆதித்யா அவன் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டான் என்று அவருக்கு தெரிந்து தான் இருந்தது.. ஒரு பெருமூச்சை விட்டு நல்லதே நடக்கும் என்று எண்ணியபடி உறங்க சென்றார்..

தன்னறைக்குச் சென்ற ஆதி தன் தந்தையுடன் தான் பேசிய விஷயங்களை மீண்டும் அசை போட்டு பார்த்தான்..

தன் தந்தையிடம் அவ்வளவு நேரம் தனக்கு திருமணம் வேண்டாம்… தன் வாழ்வில் வேறு யாருடைய துணையும் வேண்டாம்.. தனியாகவே இருப்பேன் என்று வாதாடினாலும் கடைசியில் அவரிடம் வாடகைத் தாய் மூலம் தான் ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தது அவன் மனதில் ஏதோ ஒரு புதிய உணர்வை புதுப்பித்திருந்தது..

ஏனோ ஒரு சிறு ஆனந்தம் அவன் மனதில் பூத்திருந்தது.. அவனுக்கே அது வியப்பாகத்தான் இருந்தது.. தன் தந்தையுடன் தான் இருப்பது போல் தன்னுடன் ஒரு பிள்ளையோ பெண்ணோ இருப்பார்கள் என்று எண்ணும்போதே அவனுக்கு மனம் சிலிர்த்தது..

அவரிடம் தனக்கு பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தாயைப் பற்றி பேசும் போதே அவன் மனதில் அது யார் என்று முடிவு செய்து இருந்தான்..

மறுநாள் காலை அதற்கான வேலையை தொடங்க வேண்டும் என்று நினைத்தவன் தான் எடுத்துள்ள முடிவு சரியா என்று சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான்..

தன் மனதில் நினைத்திருக்கும் அந்த பெண்ணைத் தவிர வேறு எந்த பெண்ணும் தன்  குழந்தைக்கு தாயாக இருக்க தகுதியற்றவள் என்று தீர்மானமான முடிவுக்கு வந்தான்..

அந்தப் பெண்… அல்லி மலர்… அவனுடைய  இனிய எதிரி அல்லிராணி..!!

அவள் என்னதான் தன் எதிரியாக இருந்தாலும் மற்ற பெண்களினின்றும் எல்லா விதத்திலும் வேறுபட்டு இருக்கும் அவளை அவனுக்கு பிடித்து தான் இருந்தது.. அவளுடைய தன்னம்பிக்கை, போராடும் குணம், அடுத்தவரிடம் அவள் காட்டும் அன்பு, அவளுடைய நேர்மை, அவள் அழகு, ஆளுமை.. அவளுடைய கண்கள்.. இவை அனைத்துமே அவனை ஈர்த்து தான் இருந்தது..

அவள் அருகில் இருக்கும் போது ஏனோ கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பது போல் உணர்ந்தான் அவன்.. அது மட்டும் இல்லாமல் தினமும் ஒரு முறையாவது அவளை பார்த்து வம்பிழுக்க சொல்லி அவன் மனம் அவனை அவள் இருக்கும் திசையில் துரத்தியது..

அவள் கண்களை பார்க்கும் போதெல்லாம் தனக்கு ஏதோ சுற்றி இருக்கும் உலகமே தெரியாமல் அனைத்தும் ஸ்தம்பித்து போவது போல் இருப்பது ஏன் என்று புரியவில்லை ஆண் அவனுக்கு.. அது சிறிது குழப்பத்தையே தந்திருந்தது அவனுக்கு..

அப்பா.. என்ன கண்ணுடா அது..!! அதை பார்த்தா எதுவுமே ஓட மாட்டேங்குது.. ஆனாலும் அழகு தான்டி நீ சண்டிராணி..!!

இப்படி எண்ணிக் கொண்டிருந்தவன் தன் மனம் போகும் போக்கை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டான்..

“வேணாம்டா ஆதி..!! இது நல்லதுக்கில்ல.. பொண்ணுங்க எவளுமே நல்லவங்களா இருக்க முடியாது.. நம்பாதே எவளையும்.. உன் வேலைய மட்டும் முடிச்சிக்கிட்டு அந்த சம்பல் ராணி கிட்ட இருந்து தள்ளியே இரு..”

தனக்கு தானே அவன் எச்சரிக்கை விடுத்து எவ்வளவு தான் கட்டுப்படுத்தினாலும் அவன் இதயம் சொல் பேச்சு கேளாமல் அல்லியை சுற்றியே எண்ணமிட்டு கொண்டு இருந்தது..

ஆனால் எதற்காகவும் ஒரு பெண்ணை காதல்.. கல்யாணம்.. என்ற பெயரில் தன் வாழ்க்கையில் புகுத்தி கொள்ள அவனுடைய இறுமாந்திருக்கும் மனம் இம்மி அளவும் ஒப்பு கொள்ள வில்லை..

தான் நினைத்தபடி அல்லியை எப்படி தன் குழந்தைக்கு வாடகை தாயாய் இருக்க சம்மதிக்க வைப்பது என்று திட்டமிட தொடங்கினான் பாவி..!!

மறுநாள் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தீவிர யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன் தனக்கும் அல்லிக்கும் குழந்தை பிறந்தால் அது எப்படி இருக்கும் என ஆனந்தமாய் கற்பனையில் மூழ்க தொடங்கினான்..

இங்கே அல்லியோ தன் அறையில் படுத்தபடி ஆதித்யாவை பற்றி தான் எண்ணி கொண்டு இருந்தாள்..

என்ன மாதிரி ஆள் இவன்.. ஒரு நேரம் இவனை மாதிரி நல்லவன் உலகத்திலேயே கெடையாதுங்கற மாதிரி நடந்துக்கறான்..

ஒரு நேரம் அப்படியே இவன்லாம் ஒரு மனுஷன் தானான்னு யோசிக்கற மாதிரி ராட்சசனா நடந்துக்கறான்.. எனக்கென்னவோ அவன் என் முன்னாடி தான் அப்படி நடந்துக்கறானோன்னு டவுட்டாவே இருக்கு..

ஆனாலும் தெனமும் அவனை ஒரு தடவையாவது பார்க்கலன்னா அந்த நாளே ஒழுங்கா ஓட மாட்டேங்குது..

புதுசா கல்யாணம் ஆன பொண்டாட்டிக்கு புருஷன் தூங்கும் போது குறட்டை விடுறது மொதல்ல கஷ்டமா இருக்குமாம்.. ஆனா கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் அந்த குறட்டை சத்தம் இல்லைனா அவங்களுக்கு தூக்கமே வராதாம்..

அது மாதிரி இந்த ஆதித்யா திமிரா பேசறதெல்லாம் முதல்ல எல்லாம் கஷ்டமா இருந்தது.. ஆனா இப்ப அவன் முறைப்போடயும்  திமிர்பேச்சோடயும் திட்டோடயும் ஆரம்பிச்சாதான் அந்த நாளே நல்லா போகுது..

அவன் கோவக்காரன் தானே தவிர நல்லவன் தான்.. அந்த கோவமும் மிடுக்கும் திமிரும் கூட அவனுக்கு அழகா தான் இருக்கு..  தான் ஒரு மகாராஜாங்கற நெனைப்பு அவனுக்கு.. அவனுக்கு நான் சண்டி ராணின்னா எனக்கு அவன் இம்சை அரசன் தான்..

இம்சை அரசா..!!!

ஒரு முறை ராஜ உடையில் அவனை மனதில் நினைத்து பார்த்து அழைத்தவள் களுக்கென சிரித்தாள்.. “இந்த பேர் உனக்கு கரெக்டா தான்டா இருக்கு இம்சை..” என்று சொல்லிக் கொண்டே அடுத்த நாள் அவன் ஆடப் போகும் ஆட்டம் தெரியாமல் தலையணையில்

முகம் புதைத்து உறங்க முயற்சி செய்தாள் இம்சை அரசனின் சண்டி ராணி..!!

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!