Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 18

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 18

by Subhashri Srinivasan
4.9
(14)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 18

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

என்ன செய்வாளோ ஏந்திழை..!!

கதிரவன் தன் தங்க கிரணங்களால் நிலமகளை நனைக்க ஆரம்பித்து விட்டான்.. தன் அறையில் இருந்து உற்சாகமாக இறங்கி வந்தான் ஆதித்யா.. இரவு தான் நினைத்ததை எப்படி நடத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அதை முழுவதுமாக திட்டமிட்டு பிறகு தூங்கி போனான்..

காலையில் முதல் வேலையாக அதை செயல்படுத்துவதற்கான உற்சாகத்துடனே கிளம்பி இருந்தான் அவன்..

நேரே சாப்பாட்டு மேஜைக்கு வந்து அமர்ந்தவன் தன் தந்தை வந்து எதிரே அமரவும் “ஹாய் டாட்.. நைட் நல்லா தூங்குனீங்களா?” என்று கேட்டான்..

“நான் நல்லா தூங்குனேன்.. நீ ரொம்ப சந்தோஷமா இருக்க போல இருக்கு?” என்றார் அவர்..

“எஸ் டேட்.. இன்னிக்கு நிறைய வேலைகள் இருக்கு.. அதெல்லாம் முடிக்கணும்..  காலையிலேயே கொஞ்சம் எனர்ஜியோட போனாதான் நல்லபடியா முடிக்க முடியும்… அதான்..” என்றானவன்..

தந்தையோடு சிற்றுண்டி முடித்துவிட்டு கிளம்பி நேராக லில்லிஸ் மசாலா நிறுவனத்திற்கு சென்றான்..

இவன் உள்ளே செல்லவும் அல்லி மலர் அவள் அறையில் அமர்ந்திருந்தாள்… நிறுவனர் அமரும் இருக்கை காலி ஆகவே இருந்தது.. அவள் எதிர்பக்கம் இருந்த இருக்கைகளுக்குள் ஒன்றில் அமர்ந்திருந்தாள்..

அவன் இல்லாத போதும் அவள் அந்த இருக்கையில் அமரவில்லை என்பது அவன் முகத்தில் ஒரு இறுமாப்பு நிறைந்த சிரிப்பை தந்தது.. “அந்த பயம் இருக்கட்டும்” என்று மனதிற்குள் நினைத்தவன் உள்ளே சென்று “குட்மார்னிங் மிஸ்.சண்டி ராணி.. எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான்…

அவன் வரும் வரை ஏதோ ஒரு கோப்பிற்குள் மூழ்கி இருந்தவள் அவன் வந்ததும் மதிமுகம் பார்த்த அல்லி மலராய் உள்ளுக்குள் மலர்ந்து போனாள்..

ஆனால் அதை அவனிடம் வெளிப்படையாக காண்பிக்க மனம் இல்லாமல் “ஐயோ வந்து விட்டானே..!!” எனும் படியான ஒரு முக பாவத்தில் “குட்மார்னிங் ஆதி..!!” என்றாள்..

“நான் இன்னிக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு வந்திருக்கேன்”

அவன் சொன்னதும் அல்லிக்கு கிலி பிடித்துக் கொண்டது..

“ஐயையோ.. இவன் முக்கியமான விஷயம்ன்னாலே ஏதோ விவகாரமான விஷயம்ன்னு தானே அர்த்தம்… என்ன சொல்லி என்னை சித்ரவதை செய்ய போறானோ? ஒரு நேரம் நல்லவன் ஆதியா இருக்கான்.. ஒரு நேரம் ராட்சசன் ஆதியா இருக்கான்.. இன்னைக்கு நாள் முழுக்க இந்த ராட்சசன் ஆதியை தான் பாக்கணும் போல” என்று எண்ணிக் கொண்டே “என்ன விஷயம்?” என்பது போல் அவனை கேள்வியாய் பார்த்தாள்..

“அது… நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.. நேராவே விஷயத்துக்கு வந்துடறேன்.. ஆக்சுவலி எனக்கு என்னுடைய எல்லா கம்பெனியுமே தனியா சிங்கிளா மேனேஜ் பண்ணிதான் பழக்கம்.. இங்கதான் உன்னோட பார்ட்னரா இருக்கேன்.. ஆக்சுவலி இது எனக்கு பழக்கம் இல்லையா? ஒரு மாதிரி அன் ஈஸியா இருக்கு.. அதனால நேத்து முழுக்க யோசிச்சேன்.. இந்த கம்பெனியிலும் நம்மளே முழு ஓனரா இருந்தா எப்படி இருக்கும்ன்னு எனக்கு தோணுச்சு”

அவன் சொல்லி முடிக்கும் முன் அவள் அப்படியே அரண்டு நின்றாள்..

இவன் என்ன தினமும் வந்து ஏதாவது ஒரு குண்டு மழை பொழிஞ்சுக்கிட்டு இருக்கான்.. நேத்து தான் ஒரு  பத்திரத்தில கையெழுத்து போட்டேன்.. இப்போ மீதி 50% பார்ட்னர்ஷிப்பையும் வாங்கி என்னை வெளிய அனுப்ப பார்க்குறான்….. கடவுளே.. எனக்கு வேலை இல்லனா கூட பரவால்ல.. இங்க வேலை செய்றவங்களுக்கெல்லாம் வேலை இருக்கிற மாதிரி பார்த்துக்கோ..  மானசீகமாக ஆண்டவனிடம் வேண்டினாள் அவள்..

“இப்ப என்ன மிச்சம் இருக்குற 50% உங்களுக்கு எழுதி கொடுக்கணுமா..?” என்று அவள் கேட்கவும் “இதுதான் சண்டிராணி எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சது… நீ பக்குனு புடிச்சிக்கிற பாரு.. சொல்றதுக்கு முன்னாடி.. எக்ஸாக்ட்லி அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.. ஆனா இந்த கம்பெனி ஃபுல்லா என்னோடது ஆயிடுச்சுன்னா அதுக்கப்புறம் இங்க பொண்ணுங்க வொர்க் பண்றது ரொம்ப கஷ்டம்… அதனால அவங்களையும் வெளிய அனுப்பிடுவேன்… பேசாம நீ அந்த ஆசிரமத்தில் முன்னாடி பண்ணிட்டு இருந்த இல்ல… சின்னதா வேலை.. அந்த மாதிரி உங்க வீட்டுக்குள்ளேயே அந்த பத்து பொண்ணுங்களை வச்சு சின்னதா பிசினஸ் பண்ணி பொழச்சுக்கோ..” என்றான்..

“ஆதி நேத்து கையெழுத்து போடும்போது நீங்க பேசுனது என்ன? இன்னைக்கு நீங்க பேசறது என்ன? தினமும் இப்படி மாத்தி மாத்தி பேசறது ஒரு நல்ல பிசினஸ்மேன்க்கு அழகில்லை” என்று கூறினாள் அவள்..

“நானும் அப்படித்தான் நினைச்சேன்… ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல… என்னை தோற்கடிச்ச உனக்கு நான் ஏன் இவ்வளவு சலுகை தரணும்.. உன்கிட்ட எதுக்கு நான் 50% ஷேரை விட்டு வைக்கணும்.. இதெல்லாம் எனக்கு தோணுச்சு… அதனால முழுசா நானே எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..” என்றான் அவன் சாதாரணமாக..

“நான் முழுசா உனக்கே இந்த கம்பெனியை கொடுத்துடறேன்.. நீ என்னை இங்க வேலைக்கு கூட வச்சுக்க வேண்டாம்… நான் வெளியில போயிடுறேன்.. ஆனா இங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் இங்கேயே வேலைல இருக்கட்டும்… ப்ளீஸ் ஆதி… நான் இதை உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்..” அந்த பெண்களுக்காய் மன்றாடினாள் அவள்..

“உன்னை பாத்தாலும் பாவமாதான் இருக்கு.. திடீர்னு உனக்கு ஒண்ணுமே இல்லாம வேலையை விட்டு அனுப்புறதுக்கு எனக்கும் கஷ்டமாதான் இருக்கு… சரி ஒண்ணு வேணா பண்ணலாம்.. இதுக்கு பதிலா நான் உனக்கொரு ஆஃபர் தர்றேன்… நான் கேட்கறதை நீ செஞ்சன்னா நீ இங்க  50% பார்ட்னராவும் இருக்கலாம்.. அந்த பொண்ணுங்களுக்கு வேலையும் போகாது… ஆனா அதுக்கு இந்த டீல்க்கு நீ ஒத்துக்கணும்” என்றான் அவன்..

“ஓகே என்ன டீல்ன்னு சொல்லு.. ” என்று சொன்னவள் இவன் என்ன சொன்னாலும் ஒத்துக்கிட்டு அந்த பொண்ணுங்களுக்கு வேலை போகாம பார்த்துக்கணும் என்று மனதிற்குள் நினைத்தாள்.. ஆனால் அவன் கேட்க போவதை அவள் உயிரே போனாலும் செய்யமாட்டாள் என்பது வேறு விஷயம்..

அவன் மெதுவாக ஆரம்பித்தான் “நேத்து எங்க வீட்டுக்கு போனப்போ எங்கப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டார்” என்று அவன் சொல்ல தொடங்கவும் இவன் எதுக்கு இவன் வீட்ல நடந்த பர்சனல் கதையெல்லாம் என்கிட்ட சொல்றான் என்று யோசித்தவள்.. காரணம் இல்லாம இவன் எதுவுமே பண்ண மாட்டானே.. கேட்போம்.. என்னதான் சொல்ல வரான்னு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவன் சொன்னதை கவனித்தாள்..

“உனக்கு தான் தெரியுமே.. எனக்கு பொண்ணுங்கன்னாலே ஆகாது.. அதனால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னேன்.. ஆனா அவருக்கு விளையாடுறதுக்கு பேரன் பேத்தி வேணுமாம்.. அவருக்கு வெளையாடறத்துக்கு பேரன் பேத்தி வேணும்ங்கிறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? சொல்லு.. அதனால யோசிச்சேன்.. ஆனா எங்க அப்பா ஆசையை என்னால நிறைவேத்தாமயும் இருக்க முடியாது.. அதனால யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன்.. கல்யாணம் பண்ணிக்காம வாடகை தாய் மூலமா ஒரு குழந்தையை பெத்து எங்க அப்பாகிட்ட கொடுத்துடலாம்னு…”

“ஓ.. இப்பதான் நிறைய பேரு அந்த மாதிரி வாடகை தாயா இருந்து குழந்தை பெத்து கொடுக்கிறாங்களே.. இதை ஒரு டாக்டர் மூலமா அவங்க கிட்ட போய் கேட்க வேண்டியதுதானே..? இதை எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?”

அவள் குழப்பத்தோடு கேட்க “அதான் உன்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்..” அவன் இப்படி சொல்ல அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

புரியாமல் அவனை பார்த்தவளிடம் “என்னோட குழந்தையை வாடகை தாயாக இருந்து சுமக்கனும்னா அதுக்கு ஒரு தகுதி வேணும்.. அதனால அப்படி என் குழந்தைக்கு வாடகைத்தாயா இருக்கறதுக்கு யாரு சரியா வருவாங்கனு யோசிச்சப்போ எனக்கு தோணின ஒரே ஆளு நீதான்டி… என் சண்டிராணி..” என்றான் அவன் மனசாட்சியே இல்லாமல்…

அவள் அப்படியே அதிர்ந்து போய் அவனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டே “ஆதீ……ய்… அடப்பாவி..!!” என்று வாய் திறந்து கத்தியே விட்டாள்..

அவள் கை தன்னை தீண்டும் முன் அவள் கையை இறுக்க பிடித்து தடுத்தான் ஆதி.. அவன் கை பட்டதும் ஏதோ தீயை தொட்டாற் போல் உணர்ந்தவள் சட்டென தன் கையை உதறி அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தாள்..

அவன் சொன்ன விஷயத்தை கேட்டு அவள் உடல் அதிர்வில் நடுங்கி கொண்டிருந்தது.. உதடுகள் துடிக்க விழியில் கோவ சிவப்பு ஏறி கிடக்க பேசுவது ஆதித்யா தானா என்று நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

அவன் பெண்களை வெறுக்கிறான் என்று அறிந்து தான் இருந்தாள்.. ஆனால் அவன் இப்படி இருதயமே இல்லாத ஒரு அரக்கனாக இருப்பான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை..

அவளுக்கு கோவத்திலும் ஆற்றாமையிலும் நா உலர்ந்து போய் வார்த்தைகள் கூட வராமல் தொண்டையை அடைத்தது.. உள்ளுக்குள் சுக்கு நூறாக உடைந்து போயிருந்தாள் அவன் சொன்ன விஷயத்தை கேட்டு..

அவள் உடம்பிலிருந்த ஒவ்வொரு செல்லும் அவனை அந்நொடி வெறுத்தது.. அவனை எரித்து விடுவது போல் பார்த்தவள் முன்னாள் இரவு அவனைப் பற்றி எப்படி எல்லாமோ யோசித்ததற்காக அப்போது கூசி போனாள்..

“மனுஷனாடா நீ எல்லாம்..?! சீ…!! உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா..? இதை என்கிட்ட சொல்லுறதுக்கு கூட உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? எந்த தைரியத்துல நான் இதை பண்ணுவேன்னு எதிர்பார்த்தே?  என்னை பாத்தா அந்த மாதிரி  பொண்ணாவா தெரியுது உனக்கு? எங்க அப்பா  கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கிற அளவுக்கு கேவலமா என்னை வளர்க்கலைடா.. இதுக்காக நீ என் உயிரையே எடுக்கிறேன்னு சொன்னா கூட நான் ஒத்துக்க மாட்டேன்.. வேலை தானே..? எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நீயே இந்த கம்பெனி முழுக்க எடுத்துக்கோ… அந்த பொண்ணுங்களை நீ வெளிய அனுப்பிச்சாலும் நான் அவங்களை பார்த்துக்கிறேன்” என்றாள் அவள்..

அவள் பார்வை தீயாய் அவனை எரித்துக் கொண்டிருந்தது..

இப்படி அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் அந்த அறையின் உள்ளே வர வாயிலில் நின்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்கள்..

ஆதித்யா “எஸ் கம்மின்” என்று சொல்லவும் “குட் மார்னிங் சார்.. குட் மார்னிங் மேடம்..” என்று அவர்களுக்குள் ஒருத்தி பேச்சை ஆரம்பித்தாள்..

“மேம்.. இன்னிக்கு சேலரி டே… அக்கவுண்ட்டன்ட் எங்களோட சேலரி செக் கொடுத்தாரு.. அதுல எங்க சம்பளத்துல இந்த மாசம்  ஐயாயிரம் ரூபாய் கட் பண்ணி இருக்காங்க.. எதுக்குன்னு கேட்டா நீங்க தான் கட் பண்ண சொன்னிங்கன்னு சொல்றாரு.. எதுக்காக எங்க சம்பளத்தில் ஐயாயிரம் ரூபா கட் பண்ணீங்க? ஒரு மாசம் ஆயிரம் ரூபாய் குறைஞ்சுதுனாலே எங்க வீட்ல ரொம்ப மொடையாயிடும்.. மேடம் எங்களால சமாளிக்கவே முடியாது.. இங்க வந்ததிலிருந்து எங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்துட்டு இருக்கீங்க.. எங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் அந்த சம்பளத்துனால வேற வேற கமிட்மெண்ட் வச்சுக்கிட்டு இருக்கோம்.. இப்ப திடீர்னு 5000 புடிச்சீங்கன்னா எங்களால சமாளிக்கவே முடியாது மேடம்.. தயவு செஞ்சு அந்த ஐயாயிரம் ரூபாவை குடுக்க சொல்லுங்க மேடம்..”

அந்தப் பெண் சொல்லவும் அல்லி மலர் அப்படியே திரும்பி ஆதித்யாவை விழித்து பார்த்தாள்..

“ஐயோ ஐயாயிரம் ரூபா கட் பண்ணிட்டாரா? இல்ல இல்ல… நான் ஆக்சுவலி 500 ரூபா இன்கிரிமெண்ட் போட்டு கொடுக்க சொல்லணும்னு நெனச்சேன்.. அது ஏதோ வாய் தவறி அவர்கிட்ட தப்பா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.. ஒண்ணும் பிராப்ளம் இல்ல.. நீங்க இப்போ வெளியில போங்க.. நான் அவர்கிட்ட உங்க எல்லாருக்குமே ஐநூறு ரூபாய் சம்பளம் ஏத்தி கொடுக்க சொல்றேன்..”

அவன் அல்லியை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்துக்கொண்டே இதழில் ஒரு ஏளன சிரிப்போடு சொன்னான்..

அவர்கள் அனைவரும் 500 ரூபாய் சம்பளம் கூட கிடைக்கிறது என்ற சந்தோஷத்தில் வெளியே சென்று விட்டார்கள்..

“இது என்ன டிராமா? எதுக்கு இப்போ அவங்க சம்பளத்துல 5000 பிடிக்க சொன்னே.?.” அவள் தன் எரிக்கும் பார்வையை மாற்றாமல் கேட்டாள்..

“சம்பளத்தில ஒரு 5,000 குறைஞ்சதுக்கே அவங்களால சமாளிக்க முடியலன்னு அவ்ளோ கஷ்டப்படுறாங்க.. நீ என்னடானா நான் சொல்ற கண்டிஷனுக்கு ஒத்துக்காம அவங்க வேலைக்கு உலை வைக்கிறேன்னு சொல்ற.. உனக்கு கொஞ்சமாவது அவங்க மேல கருணை இருக்கா? மனசாட்சி இருக்கா?”

ஏதோ நிஜமாகவே அவர்களுக்காக பாவப்படுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் அவன்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!