Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 19

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 19

by Subhashri Srinivasan
4.8
(17)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 19

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

இடியாய் வந்த செய்தி..!!

“சம்பளத்தில ஒரு 5,000 குறைஞ்சதுக்கே அவங்களால சமாளிக்க முடியலன்னு அவ்ளோ கஷ்டப்படுறாங்க.. நீ என்னடான்னா நான் சொல்ற கண்டிஷனுக்கு ஒத்துக்காம அவங்க வேலைக்கு உலை வைக்கிறேன்னு சொல்ற.. உனக்கு கொஞ்சமாவது அவங்க மேல கருணை இருக்கா? மனசாட்சி இருக்கா?”

ஏதோ நிஜமாகவே அவர்களுக்காக பாவப்படுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு ஆதித்யா கேட்க அல்லியோ அவன் மிரட்டலுக்கு பணிய மறுத்தாள்..

“நீ எப்படி என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணாலும் சரி.. கல்யாணம் பண்ணாம நான் நிச்சயமா குழந்தை பெத்துக்கறதுக்கு ஒத்துக்க மாட்டேன்.. அதுவும் உன் குழந்தையை பெத்து குடுக்கறதுக்கு.. நிச்சயமா ஒத்துக்க மாட்டேன்..”

தீர்மானமாய் அவள் சொல்லவும்.. “ஓகே தென்” என்றவன் கைபேசி எடுத்து அருணுக்கு அழைத்து “அருண் நான் காலையில உனக்கு ஃபோன் பண்ணி சொன்னேன் இல்ல.. அந்த பேப்பர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்று சொன்னான்..

அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அருண் அந்த பத்திரங்களோடு அலுவலகத்தில் இருந்தான்..

“ஏ மசாலா ராணி.. இங்க ரெண்டு விதமான டாக்குமெண்ட்ஸ் இருக்கு.. ஒண்ணு நீ என் குழந்தைக்கு வாடகை தாயா இருந்து குழந்தை பெத்து தரேன்னு ஒத்துக்கிட்டு கையெழுத்து போட வேண்டிய பேப்பர்ஸ்.. இன்னொன்னு மிச்சம் 50% பார்ட்னர்ஷிப் எனக்குன்னு கையெழுத்து போடவேண்டிய பேப்பர்ஸ்.. ரெண்டுல ஏதாவது ஒண்ணுத்துல நீ கையெழுத்து போட்டுதான் ஆகணும்… உனக்கு எனக்கு குழந்தை பெத்து கொடுக்க இஷ்டம் இல்லனா இந்த பார்ட்னர்ஷிப்பை முறிச்சுக்கற பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டுட்டு திரும்பி பார்க்காம அந்த பொண்ணுங்களையும் கூட்டிகிட்டு வெளியில போயிரு… இல்லன்னா நீ இந்த இடத்துக்கு எனக்கு எந்த பணமும் கொடுக்காம ஏமாத்தினேன்னு சொல்லி இந்த 50% ஷேரை நானே புடிங்கி வாங்கிக்க வேண்டி இருக்கும்.. உனக்கு எப்படி வசதி..? கோர்ட்டுக்கு வரியா.. இல்ல சைன் பண்ணிட்டு போறியா?” அலட்சியமாய் கேட்டான் அவன்..

“ஆதி.. நேத்து நீ காமாட்சி பாட்டிக்கு உதவி செஞ்சது.. இந்த கம்பெனில எல்லாருக்காகவும் வசதி பண்ணி கொடுத்தது.. இதெல்லாம் பார்த்து நான் உன்னை பத்தி தப்பா நெனைச்சுட்டனேன்னு வருத்தப்பட்டேன்.. ஆனா இல்ல.. உன்னை பத்தி நான் ரொம்ப சரியா தான் புரிஞ்சு வச்சிருக்கேன்..  அந்த மிதுனை போட்டு அன்னிக்கு அந்த அடி அடிச்சே..? உனக்கும் அவனுக்கும் என்னடா வித்தியாசம்? அவன் எனக்கு என்ன கொடுமை செய்யணும்னு நெனைச்சானோ  இப்ப நீயும் அதையேதானே வேற விதமா பண்ணிக்கிட்டு இருக்க..? அவனை மாதிரியே தானே நீயும் இந்த கம்பெனியை வச்சு..” அவள் முடிக்கு முன் அவள் கழுத்தில் அவன் கை இறுகி இருந்தது..

முதல் நாள் அவனை சந்தித்தபோது எப்படி அவளை தள்ளிக் கொண்டு போய் சுவற்றோடு வைத்து கழுத்தை இறுக்கினானோ அதேபோல இப்போதும் அவள் பின்னந் தலையை சுவற்றோடு வைத்து அழுத்தி கழுத்தை நெறித்தான்.. அப்படியே அந்த சுவற்றில் அவளை தூக்கி பிடித்தவன் கண்களில் அனல் பறந்தது..

அவனுடைய கை அவள் கழுத்தில் இறுகிக் கொண்டே போனது.. அவள் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க அவளோ மூச்சுக்கு சிரமப்பட்டு அவன் கையில் இருந்து திமிற போராடிக் கொண்டிருந்தாள்..

“உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா போயும் போயும் அந்த மிதுனோட என்னை கம்பேர் பண்ணுவே..? அவனை மாதிரி நான் என்னடி உன்னை என்னோட படுக்கவா கூப்பிட்டேன்? நீயே வந்தாலும் அதுக்கு ஒத்துக்க மாட்டான் இந்த ஆதி.. உன்னை என்னவோ ரேப் பண்ண மாதிரி பேசுற? இனிமே இந்த ஆதி கிட்ட இருந்து உனக்கு எந்த ஆஃபரும் கிடையாதுடி.. மரியாதையா அப்படியே இந்த கம்பெனியை விட்டு வெளியில கிளம்புற வழியை பாரு.. ஒரு நிமிஷம் இங்க நிக்க கூடாது.. அப்படியே நீ கூட்டிட்டு வந்து வச்சியே பொண்ணுங்க அவளுகளையும் இழுத்துட்டு போ..”

அவன் அப்போதும் தன் பிடியை விடாமல் இறுக்கிக் கொண்டிருக்க அவன் அருகில் அருண் வந்து “பாஸ் பாஸ்.. விட்டுடுங்க பாஸ்.. என்ன பாஸ் நீங்க..? இந்த பொண்ணை பார்க்கும்போதெல்லாம் கழுத்தை புடிச்சு தூக்கிட்டு இருக்கீங்க.. விடுங்க பாஸ்.. ப்ளீஸ்..”

அவன் கெஞ்சவும் அவள் கழுத்தில் இருந்த கையை பட்டென எடுத்து விட்டான் ஆதித்யா..

தான் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து அவன் திடீரென விடுவித்ததும் சடார் என கீழே விழுந்தாள் அல்லி.. கழுத்தில் கை வைத்து தடவி கொண்டே மேலும் கீழுமாய் மூச்சு வாங்கியவள் அப்போதும் அவனை தீயாய் எரிப்பது போல் முறைப்பதை மட்டும் நிறுத்தவில்லை..

அவனை எரித்து சாம்பல் ஆக்கி விடுவது போலவே அவள் பார்த்துக் கொண்டிருக்க “என்னடி லுக்கு? முதல்ல கிளம்பு.. இன்னும் ஒரு செகண்ட் நீ இந்த இடத்தில இருந்தா கூட நீ உயிரோட இருக்க மாட்ட.. கொன்னுடுவேன் உன்னை..”

அவன் கர்ஜிக்க “இப்பவும் சொல்றேன்.. அந்த மிதுனை விட நீ கேவலமானவன் தான்.. உன்னோட பார்ட்னரா இருக்க ஒத்துக்கிட்டதை நினைச்சு எனக்கு அவமானமா இருக்கு.. குட் பை.” என்று சொல்லி திரும்பியவள் கைபேசி அலறியது..

அழைப்பை ஏற்றவள் எதிர்பக்கம் பேசிய குரலை கேட்டு அப்படியே சிலையாய் நின்றாள்..

அவள் அன்னை தாமரை தான் அவளை அழைத்து இருந்தார்..

“அல்லீ.. அல்..லீ..” அந்தப் பக்கம் தன் அன்னை அழுது கதறும் சத்தம் கேட்கவும் அல்லிக்கு ஒன்றுமே புரியவில்லை..

“அம்மா.. எதுக்குமா அழற? என்னம்மா ஆச்சு?” அவள் முகத்தில் கலவரம் குடி கொள்ள குரலில் பதட்டத்தோடு கேட்டாள் அவள்..

அதுவரை எங்கேயோ பார்த்து தன் கோபத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் கையை இறுக்கி பல்லை கடித்த படி முறைத்துக் கொண்டிருந்தவன் அவள் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்து அவள் புறம் திரும்பி அவள் முகத்தை பார்த்தபடி அவள் பேசுவதை கவனித்தான் ஆதி..

“அல்லி.. நம்ம கடை.. நம்ம கடையில..” தாமரை மேலும் மேலும் பதட்டத்தோடு சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க திணறிக் கொண்டிருக்க இவளுக்கோ பொறுமை போய்க்கொண்டிருந்தது..

“கடையில என்னம்மா ஆச்சு? அப்பாக்கு ஏதாவது..”

 அல்லி பயந்து கேட்க ஏனோ அவள் முகத்தில் இருந்த கலவரம் கொஞ்சமாய் ஆதியின் முகத்திலும் ஒட்டிக்கொண்டது..

ஆதி முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை கவனித்துக் கொண்டிருந்த அருண் ஆச்சரியத்தோடு விழி விரித்து பார்த்தான் அவனை..

இவ்வளவு நேரம் அல்லியை கொலையே செய்து விடுமவானோ என்று பயந்து போகும் அளவுக்கு அவள் மேல் கொலை வெறி தாக்குதல் நடத்தி கொண்டு இருந்தவனுக்கு இப்போது அவள் முகத்தில் இருந்த கலவரமும் குரலில் இருந்த பதட்டமும் முகத்தில் கவலை ரேகைகளை படர செய்திருந்தது..

ஆதியின் மனதில் மற்ற பெண்களிடம் தோன்றாத ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு அல்லியின் பால் பிறந்து இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் அருண்..

“சரி அப்படியே ஏதாவது இருந்தாலும் நல்லது தான்” என்று மனதிற்குள் ஆதிக்காக சிறிது மகிழ்ச்சி அடைந்தவன் அங்கு நடப்பதை தொடர்ந்து அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..

தாமரை கைபேசியில் இன்னும் அழுது கொண்டுதான் இருந்தாள்..

 “நம்ம கடையில ஸ்விட்ச் போர்டுல  ஷார்ட் ஸர்க்யூட் ஆகி கடை முழுக்க தீப்பத்தி எரிஞ்சிருச்சுடி..”

தாமரை மெதுவாக விஷயத்தை சொல்லி முடித்திட அல்லியோ அப்படியே இடிந்து போனாள்..

“என்னம்மா சொல்ற? கடையில நெருப்பு புடிச்சிருச்சா? அப்பாக்கு ஏதாவது ஆயிடுச்சாம்மா..? எப்படிமா ஷார்ட் சர்க்யூட் ஆச்சு?”

அவள் முகத்தில் கலவரத்தோடு கேட்டுக் கொண்டிருக்க அதே கலவரத்துடன் ஆதி அவளிடம் “ஷார்ட் சர்க்யூட்டா? ஏன் உங்க கடையில் சுவிட்ச் போர்டெல்லாம் ஒழுங்கா மெயின்டெயின் பண்ண மாட்டீங்களா? இதுதான் நீங்க பிசினஸ் பண்ற லட்சணமா?”

அவன் இறுகிய முகத்துடன் கேட்க கேட்ட அடுத்த நொடி “உனக்கு என்ன வந்தது?” என்பது போல் அவனை தீவிரமாய் முறைத்தாள் அல்லி..

தொடர்ந்து கைபேசியில் பேசினார் தாமரை..

“எல்லாமே எரிஞ்சு போச்சு அல்லி.. உங்க அப்பா அப்படியே பிரம்மை புடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்காரு.. அவர் ரொம்ப இடிஞ்சு போயிருக்காருடி.. நெஞ்சை புடிச்சுட்டு அவரு உக்காந்து இருக்கறதை பார்த்தா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அல்லி.. கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரியா?”

அவள் அன்னை அழுது கொண்டே சொல்ல “அம்மா நான் உடனே வரேன்ம்மா.. நீ அப்பாவை பத்திரமா பாத்துக்கோ.. நான் இப்ப வந்துடறேன்..”

அவள் அன்னையை சமாதானப்படுத்தும் விதத்தில் சொன்னவள் உடனே கிளம்ப எத்தனிக்க ஆதித்யா “நானே உன்னை வண்டியில கொண்டு போய் விடுறேன்.. வா என்னோட..” என்று சொல்ல அவனை அனல் கக்கும் விழிகளால் முறைத்தாள் அல்லி..

“அதுக்கு வேற ஆளை பாரு.. இனிமே உன் சங்காத்தமே எனக்கு வேண்டாம்.. நீ இருக்கிற பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்..”

வேகவேகமாக நடந்து அவள் வெளியே போக “அருண்.. நீ இங்க ஆஃபீஸ்லயே இரு.. நான் ஒரு ஒன் ஹவர்ல திரும்பி வரேன்..” அருணிடம் சொல்லிவிட்டு அவள் பின்னாலேயே சென்றான் ஆதி..

அந்த நிறுவனத்தை விட்டு கோபமும் ஆற்றாமையும் ஒரு சேர முகத்தில் கொப்பளிக்க வெளியே வந்தாள் அல்லி.. அந்த வழியில் ஆட்டோ டாக்ஸி எதுவுமே கிடைக்கவில்லை அவளுக்கு.. அந்த சாலையே வெறிச்சோடி இருந்தது..

“இப்ப எப்படி வீட்டுக்கு போறது? பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் கிடைக்குதான்னு பார்க்கலாம்..”

அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து போக ஒரு அடி எடுத்து வைக்க அவள் பின்னால் வந்த ஆதி “இங்கே எல்லாம் பஸ் அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது.. நான் தான் என் வண்டியில கொண்டு விடுறேன்னு சொல்றேன்ல? மரியாதையா என் வண்டியில ஏறு..” அப்போதும் அடி குரலில் மிரட்டினான் அவளை..

“உனக்கு காது சரியா கேட்காதா? உள்ள நான் சொன்னது காதுல விழலை? உன் வேலைய பாத்துட்டு போ..” என்றவள் திரும்பி பேருந்து நிலையம் நோக்கி நடக்க இரண்டு அடி எடுத்து வைத்தவள் மேல் கையை இறுக பிடித்தவன் அவளை தரதரவென இழுத்து கொண்டு வந்து தன் காருக்குள் தள்ளி சீட் பெல்டையும் மாட்டி விட்டான்..

“ஆதி.. என்ன செய்ற? விடு என்னை..”

கத்தியவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வேகமாய் வண்டியை எடுத்தான் ஆதி..

அதன் பிறகு ஆதி சொல்லுவது போல் அந்தப் பகுதியில் அவ்வளவு சீக்கிரம் பேருந்து ஆட்டோ முதலியவை கிடைப்பது கடினம் என்று உணர்ந்தவள் தன் இக்கட்டான நிலையை எண்ணி பல்லை கடித்துக் கொண்டு ஏதோ நெருப்பின் மேல் உட்கார்ந்திருப்பது போல் அவன் அருகில் உட்கார்ந்து அமைதியாய் பயணப்பட்டாள்..

அவனும் வேகமாய் வண்டியை ஓட்டி சென்று அவள் வீட்டின் முன்னே காரை நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி பார்க்க அவளோ வண்டி சரியாய் நிற்பதற்கு முன்னாலேயே கார் கதவை திறந்து கொண்டு இறங்கி வீட்டினுள் ஓடி இருந்தாள்..

அங்கே அவள் தந்தை தலையில் கை வைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்த படி தரையில் உடைந்து போய் அமர்ந்திருந்தார்..

தாமரை அவர் பக்கத்தில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.. தன் கணவனின் வேதனை கண்டு அவள் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகி கொண்டு இருந்தது..

“என்னங்க.. எதுக்குங்க இப்படி உடைஞ்சு போயிருக்கீங்க? இப்ப கடையில இருக்கிறது போனா என்னங்க? நம்ம அல்லி தான் இப்ப நல்லா பிசினஸ் பண்ணி சம்பாதிக்கிறா இல்ல? அதை வச்சு சமாளிச்சுடலாங்க.. நீங்க கவலைப்படாதீங்க.. சொன்னா கேளுங்க..”

அவளின் அப்போதைய நிலை தெரியாமல் அவள் அன்னை தந்தைக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க அவர்களிடம் உண்மையை எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசித்து எச்சில் கூட்டி விழுங்கினாள் அல்லி..

“எவ்வளவு நேரம் இப்படி நெஞ்சை புடிச்சிக்கிட்டு உக்காந்து இருப்பீங்க? என்னங்க பண்ணுது உங்களுக்கு? என்னங்க.. நம்ம எப்படியாவது மேல வந்துடலாம்ங்க.. நான் சொல்றது காதுல விழுதா உங்களுக்கு..? என்னை பாருங்க..  அல்லியும் சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா.. நானும் வீட்டில துணி தைச்சு கொடுத்து ஓரளவுக்கு பணம் வருதுங்க.. அதை வச்சு சமாளிச்சுக்கலாம்.. நீங்க உடைஞ்சு போகாதீங்க..”

அவரை அணைத்த படி தலையை வருடிக் கொடுத்து அவரின் விரக்தி நிலையிலிருந்து அவரை வெளியில் கொண்டு வர படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள் தாமரை..

அல்லியின் பின்னாலே வந்து வாசற்படியின் அருகே நின்று கொண்டு உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா..

அல்லியை போலவே பணத்திற்கு முக்கியத்துவம் தராமல் தன் கணவனுக்காக அழுது கொண்டு அவன் துன்பத்தை தன் துன்பமாய் நினைத்து அவனுக்கு ஆறுதலாக இருக்கும் இன்னொரு பெண்ணை தாமரையின் உருவத்தில் பார்த்தவனுக்கு பெண்கள் மேல் இருந்த தவறான அபிப்பிராயம் கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தது.. 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!