Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 20

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 20

by Subhashri Srinivasan
4.8
(17)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 20

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

மனம் என்னும் மாயக்குதிரை..!!

 

அல்லியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தான் ஆதி..

அங்கே தாமரை தன் கணவனுக்கு பக்க பலமாய் இருந்து கொண்டு அவனுக்காக அழுது கொண்டு அவனை அந்த துயரத்தில் இருந்து வெளியே கொண்டு வர படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள்..

இப்படியும் பெண்கள் இருப்பார்கள் என்று அல்லியின் குடும்பத்தின் மூலமாகத்தான் முதன்முதலில் அறிந்து கொண்டான் ஆதி..

தன் தந்தை அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்த அல்லி “அப்பா.. என்னப்பா ஆச்சு? எப்படிப்பா இப்படி ஆச்சு? திடீர்னு எப்படி கடை தீப்பிடிச்சுச்சு?”

ஏற்கனவே அழுது கொண்டிருந்த அன்னையும் தந்தையும் தான் அழுதால் மேலும் கவலைப்படுவார்கள் என்று உணர்ந்தவள் தன் மன அழுத்தத்தை வெளியே காட்டாமல் அவர்களுக்கு தைரியம் ஊட்டுவது போல் தெளிவாகப் பேசினாள்..

“அம்மாடி எனக்கு டீ குடிக்கலாம்னு தோணுச்சு.. ஆனா நம்ம கடையில வேலை செய்ற அந்த பொண்ணு இன்னைக்கு பர்மிஷன் போட்டு இருந்தா.. அவங்க வீட்ல ஏதோ ஃபங்க்ஷன் போல இருக்கு.. அதனால கடையை எப்படி விட்டுட்டு போறதுன்னு தெரியாம டீ குடிக்காமயே உட்கார்ந்து இருந்தேன்.. அப்ப அங்க நம்ம கடைக்கு எதிர்ல அந்த சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கான்ல மாலன் அவன் நம்ம கடைக்கு வந்தான்.. அவன் கடையில பார்த்துக்க ஆளுங்க இருக்காங்க.. அதனால நான் டீ குடிச்சிட்டு வர்ற வரைக்கும் நம்ம கடைய அவன் பாத்துக்கிறேன்னு சொல்லி என்னை டீ குடிக்க அனுப்பி வெச்சான்.. நானும் டீ கடைக்கு போயிருந்தேன் டா..

ஆனா திரும்பி வந்து பார்க்கும்போது எல்லாமே எரிஞ்சு போயிருந்ததுடா.. அங்க எதுவுமே மிச்சம் இல்லை.. என்னோட இத்தனை வருஷ உழைப்பு எல்லாமே போச்சு..”

அவர் சொல்ல சொல்ல அல்லிக்கோ அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை..

“ஏம்பா.. அந்த ஸ்விட்ச் போர்டு எல்லாம் நீங்க இப்பதானேப்பா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி மாத்தினீங்க? அது எப்படிப்பா ஷார்ட் சர்க்யூட் ஆச்சு?”

அவள் சிறிது யோசனையுடனேயே கேட்டாள்..

“அது தாம்மா எனக்கும் தெரியல.. நான்  வந்தப்போ மாலன் கடைக்கு வெளியில நின்னுகிட்டு குய்யோ முறையோன்னு கத்திக்கிட்டு இருந்தான்.. அங்க கடைக்குள்ள ஒரே அனலா இருந்தது.. அதனால என்னை யாரும் உள்ள போக விடல.. என்னை வெளியிலேயே இறுக்கி பிடிச்சுக்கிட்டாங்க.. மாலன் தான் சொன்னான்.. அந்த ஸ்விட்ச் போர்டு தான் ஷார்ட் சர்க்யூட் ஆகி தீ பிடிச்சிருச்சுன்னு..”

அவர் சொல்ல “சரிப்பா.. நீங்க ரொம்ப கவலைப் படாதீங்க.. எப்படியாவது சமாளிக்கலாம்.. நீங்க ஆரம்பத்துல இந்த கடையை தொடங்கறதுக்கு முன்ன வண்டில துணியைக் கட்டி தெருத்தெருவா எடுத்துட்டு போய் தானே வித்துக்கிட்டு இருந்தீங்க.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி தானே இவ்ளோ பெரிய கடை வெச்சீங்க.. அதே மாதிரியே இப்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்னா கூட ஆரம்பிக்கலாம் பா.. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.. நம்பிக்கையை மட்டும் இழந்திடாதீங்கப்பா.. நம்மளால நிச்சயமா முடியும்‌‌..”

தன் தந்தைக்கு நம்பிக்கையோடு பேசி உறுதி அளித்தாள் அல்லி..

“அது மட்டும் இல்லைங்க.. நமக்கு முன்ன மாதிரி நிலைமை எல்லாம் இல்லைங்க.. இப்போ அல்லியோட பிசினஸ் நல்லா வர ஆரம்பிச்சுடுச்சு…‌‌ இப்போ அவளும் கை நிறைய சம்பாதிக்கிறா‌.‌.. வீட்டு செலவை அவ பார்த்துக்க போறா.. அது கூட கொஞ்ச நாளைக்கு நீங்க மறுபடியும் தலை எடுக்குற வரைக்கும் தான்.. எனக்கு நம்பிக்கை இருக்குங்க.‌ நீங்க இப்ப ஆரம்பிச்சீங்கன்னா கூட ஆறு மாசத்துல உங்களால ஒரு கடையை வெச்சுட முடியும்..” தாமரை அவரை ஊக்கப்படுத்தும் விதமாய் பேசினாள்..

அல்லிக்கோ அவள் பேசியதை கேட்டு சிறிது பயம் தொற்றிக் கொண்டது.. ஆதியோ அவர்கள் ஒவ்வொருமுறை அல்லியின் வியாபாரத்தை பற்றி பேசும்போதும் ஏதோ ஒரு விதமான குற்ற உணர்வு தன் மனதிற்குள் படர்வதை உணர்ந்தான்..

அங்கு நிகழ்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதி கண்முன் ஏனோ ஷீலாவின் முகம் வந்து போனது.. தன்னுடைய தாய் மட்டும் ஏன் இப்படி தன் குடும்பத்துக்கு ஒரு துணையாக இல்லாமல் தன்னையும் தன் தந்தையும் தன்னந்தனியே விட்டுவிட்டு ஏமாற்றி விட்டுப் போனார் என்று அவனுக்கு உள்ளுக்குள் அந்த தாய் மடிக்கான ஒரு ஏக்கமே வந்தது..

கண்கள் லேசாக பனிக்க அதை உணர்ந்தவன் அப்படியே கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு தன் இறுகிய முகத்துக்கு மாறினான் மறுபடியும்..

அதன் பிறகு வெளியே வந்தவன் அல்லியின் கைபேசிக்கு அழைப்பு எடுத்து “அல்லி ஒரு நிமிஷம் வெளிய வா..” அவளை மிரட்டலாய் அழைத்தான்..

“எங்க அப்பா எல்லாம் இழந்து நொடிஞ்சு போய் அழுதுட்டு இருக்காரு.. இப்ப எதுக்கு என்னை கூப்பிடுற? ஓ இன்னும் உனக்கு அந்த டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டு கொடுக்கலையா? நாளைக்கு வந்து எவ்வளவு கையெழுத்து வேணும்னாலும் போட்டு கொடுக்கிறேன்.. இப்ப என்னை விட்டுடு..”

பல்லை கடித்துக் கொண்டு கைபேசியில் ரகசியமாய் பேசினாள் அல்லி..

“நீ எந்த கையெழுத்தும் போட வேண்டாம்.. ஒரு நிமிஷம் வெளியில வா.. ஃபோன்லயே எல்லாத்தையும் சொல்ல முடியாது..” என்றவன் அதோடு இணைப்பை துண்டித்து விட்டான்..

“இவ்வ்….வனை‌‌… ஏன் தான் இப்படி இருக்கான்னு தெரியல..? அதான் கொண்டு விட்டுட்டான் இல்ல..? அப்படியே போய் சேர வேண்டியதுதானே? இன்னும் என் உயிரை எதுக்கு எடுத்துட்டு இருக்கான்?”

புலம்பியவள் வேறு வழி இன்றி வெளியே அவன் கார் இருந்த இடத்திற்கு சென்றாள்..

“என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு.. நான் இந்த நேரத்துல எங்க அப்பா கூட இருக்கணும்.. உனக்கு எது வேணுமா இருந்தாலும் நாளைக்கு காலையில நான் ஆஃபீஸ் வரேன்.. அங்க பேசிக்கலாம்..”

அவள் சொல்ல “முதல்ல கார்ல ஏறு.. நம்ம ஒரு இடத்துக்கு போகணும்..”

அவன் மறுபடியும் மிரட்டலாக சொல்ல அவளுக்கோ பற்றி கொண்டு வந்தது..

“என்னதான் நினைச்சுகிட்டு இருக்க நீ? எங்க வீட்ல என்ன நிலைமை இருக்கு? இப்போ வந்து என்னை மிரட்டிக்கிட்டு இருக்க.. கார்ல ஏறு.. அங்க போகணும் இங்க போகணும்ன்னு.. உனக்கு அறிவே கிடையாதா?”

சரமாரியாக கத்தியவள் கையை பிடித்தவன் முன்பு போலவே அவளை காருக்குள் இருந்த இருக்கையில் தள்ளி சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு கதவை சாத்தி வண்டியை எடுத்தான்..

அவளுக்கோ கோபத்தில் கண்கள் சிவந்து மேலும் கீழுமாய் மூச்சு வாங்கியது..

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பியவனை பார்த்து “ஆதி நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.. எதுக்கு இப்படி பண்ற?’ என்று கத்தினாள்..

“முதல்ல உங்க அப்பா கடை எங்க இருக்குன்னு சொல்லு.. நீ வழி சொல்லு.. நான் ஓட்டிட்டு போறேன்..”

அவன் ஆணையாய் சொல்ல புருவம் சுருக்கி அவனை பார்த்தாள் அல்லி..

“இப்ப நீ எதுக்கு எங்க அப்பா கடைக்கு வர்ற?”

அவள் கேட்க “எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்ல?வழியை சொல்றியா இல்ல இப்படியே இந்த நாலு தெருவுல சுத்திக்கிட்டே இருக்கட்டுமா கார்ல?”

அவன் இறுகிய குரலில் கேட்க அவன் செய்தாலும் செய்வான் என்று எண்ணியவள் “எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கான் பாரு..”

அவனை மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டே “நேரா போய் லெஃப்ட்டு திரும்பணும்..” என்று வழி சொல்ல ஆரம்பித்தாள்..

அவள் சொன்ன வழிப்படி சென்று கடை வாசலில் வண்டியை நிறுத்தியவன் கடைக்குள் செல்ல போக அல்லி அவன் கையை சட்டென பிடித்து நிறுத்தினாள்..

திரும்பியவன் அவளை கேள்வியாய் பார்க்க “இல்ல உள்ள ஒரே அனலா இருக்குன்னு அப்பா சொன்னாரு.. இப்ப நீ போகாதே.. அடி பட போகுது..”

அவளின் அக்கறை அவனுக்கு பிடித்து இருந்தாலும் தன் இறுகிய முக பாவனையை மாற்றாதவன்

“அதெல்லாம் இவ்வளவு நேரத்துக்கு அடங்கி இருக்கும்.. நீ என்னோட வா..”

அவளையும் அழைத்துக் கொண்டு அந்த கடைக்குள் சென்றான் ஆதி..

அங்கே தண்ணீர் ஊற்றி நெருப்பு அத்தனையும் அணைத்து இருந்தார்கள்.. அந்த கடையில் துணிகள் அனைத்தும் பாதி எரிந்தும் மீதி கருகிய ஓரங்களோடு காட்சியளிக்க அல்லிக்கோ அதை பார்த்து மனம் வெந்து போனது..

“அப்பா எவ்ளோ வருஷமா இந்த கடையை தன் உயிர் மாதிரி பாத்துக்கிட்டு இருந்தாரு தெரியுமா? இன்னைக்கு மொத்தமா இப்படி கடையை சாம்பலா பார்க்கிறப்போ அவருக்கு உயிரே போன மாதிரி இருந்திருக்கும்..”

அவள் கண்ணில் கண்ணீரை கண்டவனும் சிறிது கலக்கம் கொண்டான்..

அந்த ஸ்விட்ச் போர்டு இருந்த இடத்திற்கு சென்றவன் அதை ஆராய அதை சுற்றி கருகி நெருப்பு எரிந்தது போல் இருந்தது.. ஆனால் அந்த ஸ்விட்ச் போர்டு எரியாமல் அப்படியே இருந்ததை பார்த்தவன் சட்டென கடையை விட்டு வெளியே வந்தான்..

தன் வண்டியில் ஒரு டூல் பாக்ஸ் இருக்க அதை எடுத்து வந்து அதிலிருந்த ஸ்குரு டிரைவர் வைத்து அந்த ஸ்விட்ச் பாக்ஸை திறந்தான்..

அதனுள் எந்த ஷார்ட்சர்க்யூட்டும் நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை..

“ஆமா இந்த கடையில வேற ஏதாவது ஸ்விட்ச் பாக்ஸ் இருக்கா?” அவன் கேட்க அல்லியோ “இல்ல.. இது ஒன்னு தான்..” என்றாள்..

“நான் அந்த மாலனோட கொஞ்சம் பேசணும்..”

“எதுக்கு?” பட்டென கேட்டாள் அல்லி..

“பேசணும்னு சொல்றேன் இல்ல?  சும்மா தொண தொணன்னு கேள்வி கேட்டுட்டு.. அவர் எங்க இருப்பாரு? அதை மட்டும் சொல்லு..”

கேட்டவனை தீவிரமாய் முறைத்தவள் “மாலன் அங்கிளை போய் சந்தேகப்படுறியா? அவர் எங்க அப்பாக்கு 20 வருஷமா ஃப்ரெண்ட்.. அவர் இப்படி எல்லாம் எதுவும் தப்பு பண்ண மாட்டார்..”

அவள் அழுத்தமாய் சொல்ல அவனோ “நீ அடங்கவே மாட்டியா? நான் அவரோட பேசணும்னு தான் சொன்னேன்.. அவர் தப்பு பண்ணார்ன்னு சொன்னேனா? என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போ..” என்றான் மிடுக்காக..

அவளும் எதிர்பக்கமாக இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு அவனை அழைத்துக் கொண்டு போய் மாலன் இருந்த இடத்துக்கு போனாள்..

அவளை பார்த்ததும் மாலன் சோகமாய் முகத்தை வைத்த படி “அம்மா அல்லி.. என்னம்மா இப்படி ஆயிடுச்சு? நானே எதிர்பார்க்கவே இல்லம்மா.. திடீர்னு அப்படியே கடை பத்தி எரிஞ்சிருச்சு..”

அவர் சொன்னதைக் கேட்டவள் “ஷார்ட் சர்க்யூட்டானா நீங்க என்ன அங்கிள் பண்ணுவீங்க? என்னமோ இப்படி நடக்கணும்னு இருந்திருக்கு..” என்றவளை இடவலமாக தலையாட்டிய படியே பார்த்த ஆதி “மிஸ்டர் மாலன்.. அந்த ஸ்விட்ச் போர்டு உள்ள தான்

ஷார்ட் சர்க்யூட் ஆச்சா?”

மாலனை கேட்டதும் அவர் முகத்தில் ஒரு பதட்டம் ஏற்பட்டதை கவனித்தான் ஆதி..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!