Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 23

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 23

by Subhashri Srinivasan
4.5
(16)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 23

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

திருமண பேச்சு…

“நான் இப்ப போய் அவங்க வீட்ல பொண்ணு கேக்க தான் போறேன்.. நீ என்னை கூட்டிட்டு போறியா இல்ல நான் டிரைவரோட போகட்டுமா?”

தன் தந்தை குரலில் கண்டிப்புடன் கேட்க வேறு வழியின்றி “நானே உங்களை கூட்டிட்டு போறேன்” என்று சொன்ன ஆதி அதற்கு மேல் பேசாமல் சென்று வண்டியை எடுத்தான்..

அல்லியின் வீட்டில் இறங்கியவர்கள் அழைப்புமணியை அழுத்தவும் அல்லி தான் கதவை திறந்தாள்..

வெளியே நின்றிருந்த ஆதித்யாவை பார்த்ததும் அப்படியே அவளுக்கு மூச்சு முட்டிப் போனது.. இதயம் தாறுமாறாய் துடித்தது..

“ஐயோ.. இவன் எதுக்கு இங்க வந்திருக்கான் இப்போ..?” என்று யோசித்தவள்  அவன் கூட வந்திருந்த வயதானவரை பார்த்ததும் அவர் அவன் தந்தையாய் தான் இருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்டாள்..

இவர்கள் என்ன பேச வந்திருக்கிறார்களோ என்று மனதிற்குள் சஞ்சலம் குடி புக “ஆதித்யா..!!” என்றாள்..

ஆதித்யா எதுவும் பேசாமல் நின்றிருக்க ஆதித்யாவின் அப்பா தான் பேசினார்..

“அம்மா.. நான் ஆதித்யாவோட அப்பா.. உங்க கல்யாணத்துக்கு பொண்ணு கேக்குறதுக்கு தான் நாங்க இங்கே வந்து இருக்கோம்.. நான் உங்க அப்பாவோட பேசணும்..” நிதானமாய் பேசினார் அவர்..

“உள்ள வாங்க.. வந்து உட்காருங்க..”

அவர்கள் இருவரும் உள்ளே வந்து அமர்ந்ததும் சமையலறைக்கு சென்று தன் அம்மாவிடம் “அம்மா.. அப்பாவை பார்க்க யாரோ வந்துருக்காங்க…” சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்..

தாமரை வரவேற்பறைக்கு வந்தவள் அங்கிருந்த ஆதித்யாவையும் அவனுடைய அப்பாவையும் பார்த்துவிட்டு யார் இவர்கள் என்று யோசித்தபடி தன் கணவனை கூப்பிட சென்றாள்..

வரவேற்பறைக்கு வந்த செழியன் “ஹலோ.. வணக்கம்.. வாங்க… நீங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியலையே.. என்னை பாக்க வந்ததா சொன்னா என் வைஃப்.. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?” என்றார் அவர்..

சைலேந்திர வர்மன் தான் பேச்சை ஆரம்பித்தார்..

“என் பேரு சைலேந்திர வர்மன்…  இது என் பையன் ஆதித்ய வர்மன்.. ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸோட சேர்மன்..”

அவர் சொன்னவுடன் தன் பெண் சொன்ன ஆதித்யா இவன் தான் என்பது தெரிந்து இருவருக்கும் தலையாட்டி வணக்கம் சொன்னார் செழியன்….

“அல்லி உங்களை பத்தி சொல்லி இருக்கா.. என் பொண்ணை ரெண்டு முறை ஆபத்துலருந்து நீங்க காப்பாத்தி இருக்கீங்க.. அதுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல..” என்று சொன்னவர் சைலேந்திர வர்மன் பக்கம் திரும்பி “உங்க பையன் இல்லேன்னா என் பொண்ணு மானத்துக்கு பெரிய ஆபத்து வந்து இருக்கும்.. நெஜமாவே ரொம்ப நல்ல பையனை தான் பெத்து இருக்கீங்க நீங்க..”

செழியன் சொன்னதை கேட்டு சைலேந்திர வர்மனுக்கு ஆனந்தப்படுவதா இல்லை வருத்த படுவதா என்று தெரியவில்லை.. ஆதி அல்லிக்கு செய்த நல்ல விஷயங்களை பற்றி மட்டும் சொல்கிறார் செழியன்..‌ ஆனால் இதுவரை அல்லிக்கு அவன் செய்த அநியாயங்களும் இனிமேல் செய்ய போகும் கொடுமைகளும் அவருக்கு தெரியுமே..

இந்த திருமணம் ஒரு வருடத்திற்கான ஒப்பந்த திருமணம் என்பதும் அதன் பிறகு இருவரும் பிரிந்து விடுவார்கள் என்பதும் அல்லியை அவள் பெற்று தரப்போகும் பிள்ளையிடம் இருந்து ஆதி பிரிக்க போகிறான் என்பதும் செழியனுக்கு தெரியாதே.. இந்த விஷயம் எல்லாம் தெரியும் போது செழியன் எப்படி துடித்து போவார் என்று உணர்ந்த சைலேந்திர வர்மன் ஒரு சங்கடமான புன்னகையோடு அமைதியாக இருந்து கொண்டார்..

“நீங்க வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.‌ நானே உங்க பையனை பார்த்து நன்றி சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இப்போ நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியல.. என்ன விஷயம்?” பலத்த யோசனையுடனே கேட்டார் செழியன்..

ஆதித்யா “அது வந்து அங்கிள்..” என்று ஆரம்பிக்கும் போதே அவனுடைய தந்தை “ஆதித்யா.. நீ சும்மா இரு.. நான் பேசிக்கிறேன்”

அவனை அடக்கியவர் தான் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் செழியன் பக்கம் திரும்பி..

“சார் ஆதித்யா உங்க பொண்ணு அல்லியை விரும்புறான்..” சைலேந்திர வர்மன் சொன்ன அடுத்த நொடி அதிர்ச்சியோடு அவர் பக்கம் திரும்பி முறைத்துப் பார்த்தான் ஆதித்யா..

“இந்த சண்டி ராணியை நான் லவ் பண்றேனா? எல்லாம் என் தலை எழுத்து..”

மனதிற்குள் கருவியவனால் வெளியே எதுவும் சொல்லவும் முடியவில்லை.. செய்யவும் முடியவில்லை.. ஏனென்றால் பேசுவது அவனுடைய செல்ல தந்தை ஆயிற்றே.. தன் கையை இறுக்கிக் கொண்டு பற்களை கடித்து தன் கோபத்தை அடக்கியபடி தலையை குனிந்து அமர்ந்திருந்தான்..

சைலேந்திர வர்மனோ அதையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்..

“அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான்.. உங்க பொண்ணு அல்லி ரொம்ப நல்ல பொண்ணு..”

“ரொம்ப நொ.‌ள்..ள பொண்ணு தான்.. திமிரு பிடி..ச்சவ..” மனதிற்குள் அவளை அர்ச்சித்து தீர்த்தான் ஆதி..

“அவகிட்ட  ஆதி தன்னோட விருப்பத்தை பத்தி சொன்ன உடனேவே எங்க அப்பாவை வந்து கேளுங்கன்னு சொல்லிட்டா.. ”  தொடர்ந்து அல்லி புகழ் பாடினார் சைலேந்திர வர்மன்..

“உங்க பொண்ணை என் பையன் கல்யாணம் பண்ணிக்க விரும்புறான்னு நான் சொல்லிட்டேன்.. ஆனா அப்படி நீங்க உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னா ஒரு அப்பாவா என் பையனை பத்தி நீங்க முழுசா தெரிஞ்சுக்கணும்னு நெனப்பீங்கன்னு எனக்குத் தெரியும்… என் பையனை பத்தி நல்ல விஷயங்கள் சொல்றதுக்கு முன்னாடி அவன் கிட்ட என்னெல்லாம் நெகட்டிவ்ஸ் இருக்குன்னு நான் சொல்லிடறேன்.. அவனுக்கு பொண்ணுங்களை கண்டாலே பிடிக்காது.. அதுக்கு காரணம்..” ஒரு நொடி நிறுத்தியவர் தொடர்ந்தார்..

“என் மனைவி என் கூட இல்லாதது.. ரெண்டாவது அவன் எப்பவுமே வேலை வேலைன்னு வேலைல பிஸியா இருப்பான்.. அவன் தன்னை பத்தியும் தனக்கு பிடிச்சவங்களை பத்தியும் மட்டுமே யோசிப்பான்.. அவங்களுக்காக தான் எடுக்கிற முடிவுகள்னால மத்தவங்களுக்கு எல்லாம் என்ன பாதிப்பு வருமோ.. இழப்பு வருமோ.. வலி வருமோ.. வேதனை வருமோ.. அப்படின்னு எல்லாம் யோசிக்கவே மாட்டான்.. கொஞ்சம் உறவுகளுக்கு நேரம் கம்மியா தான் கொடுப்பான்… ஆனா அவன் கிட்ட நிறைய பாசிட்டிவ்ஸ் இருக்கு..” சிரித்தபடி மேலே சொன்னார் சைலேந்திர வர்மன்..

“அவனுக்கு ஒருத்தரை பிடிச்சதுனா அவங்களுக்காக உயிரையே குடுப்பான்.. என்னை என் புள்ள பார்த்துக்கிற மாதிரி எந்த பிள்ளையுமே அவன் அப்பாவை பார்த்துக்க முடியாது.. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. சிகரெட் பிடிக்க மாட்டான்.. தண்ணி அடிக்க மாட்டான்.. பொண்ணுங்க…”

சற்று நிறுத்தி புன்னகை செய்தவர் “அவனுக்கு உங்க பொண்ணைத் தவிர மத்த பொண்ணுங்களை கண்டாலே பிடிக்காது.. அதனால உங்க பொண்ணை அவனை நம்பி அவனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கலாம்.. தப்பி தவறி என் புள்ள அவளுக்கு ஏதாவது தவறு செஞ்சா நிச்சயமா அவனை கண்டிக்கிற முதல் ஆள் நானா தான் இருப்பேன்.. உங்க பொண்ணு என் வீட்ல மகாராணி மாதிரி இருக்கிறதுக்கு நான் பொறுப்பு.. இப்போ நீங்க சொல்லுங்க.. இந்த கல்யாணம் நடக்கிறதுல உங்களுக்கு சம்மதமா?”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து அல்லி ஒரு பட்டு புடவையை உடுத்திக் கொண்டு வெளியே வந்து நின்றதைப் பார்த்த செழியன் இந்த திருமணத்தில் அவளுக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்..

சட்டென புன்னகை புரிந்தவர் “என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல ரொம்ப இஷ்டம் இருக்குன்னு எனக்கு தெரியுது.. அவ விருப்பம் தான் என் விருப்பம்.. அவளுக்கு இந்த கல்யாணத்துனால சந்தோஷம் கிடைக்கும்னா அதைவிட எனக்கு சந்தோஷம் தர்ற விஷயம் வேற எதுவுமே இல்லை.. நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றார் அவர்..

“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.. இதைவிட சந்தோஷம் தர்ற விஷயத்தை நான் இதுவரைக்கும் என் வாழ்க்கையில கேட்டதில்லை.. எனக்கும் என் பையனுக்கும் ஆடம்பரமா செலவு பண்ணி கல்யாணம் பண்றதுல அவ்வளவு விருப்பம் இல்ல.. அந்த பணத்தை ஒரு ஆசிரமத்துக்கு கொடுத்தா அவங்க ரெண்டு வேளை நல்லா சாப்பிடவாவது செய்வாங்க.. அதனால அவங்க கல்யாணத்தை ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல ரிஜிஸ்டர் பண்ணிட்டு ஒரு கோவிலுக்கு போய் நம்ம ரெண்டு குடும்பம் முன்னாடி  சிம்பிளா கல்யாணத்தை நடத்தலாம்னு நினைக்கிறேன்.. அதுக்கப்புறம் வேணும்னா சின்னதா ஒரு ரிசப்ஷன் கொடுத்துக்கலாம்.. நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் அவர்..

“நீங்க நல்ல விஷயம்தானே சொல்றீங்க? ஆடம்பரமா செலவு பண்ணறதை விட நீங்க சொல்ற மாதிரி செஞ்சா அங்க இருக்கிற மனசு நம்ம பிள்ளைங்களை வாழ்த்தும்… அதனால புள்ளைங்களும் சந்தோஷமா இருப்பாங்க.‌… நீங்க சொல்ற மாதிரி அதுக்கப்புறம் சின்னதா ரிசப்ஷன் வச்சுக்கலாம்.. ஏன்னா எங்க உறவுக்காரங்களுக்கு எல்லாம் இவர்தான் மாப்பிள்ளைன்னு தெரியணும்” என்றார் செழியன்..

ஆதித்யா அவன் தந்தையை முறைத்துக் கொண்டே இருந்தான்.. இப்ப எதுக்கு ரிசப்ஷன் அது இதுன்னு இவரு கமிட் பண்ணிக்கணும்..  என்று நினைத்தவன்.. ஆனாலும் தன் தந்தையை செழியன் எதிரே எதிர்த்து பேச மனமில்லாமல் அவனுடைய எரிச்சல் முகத்தில் தெரியாமல் இருப்பதற்காக தலையை குனிந்து கொண்டே அமர்ந்திருந்தான்..

செழியன் “தாமரை.. போய் காபி எடுத்துட்டு வா.. அவங்களுக்கு..” என “போறேங்க.. இவங்க திடீர்னு வந்து இந்த விஷயம் பேசினதால எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல.. “

சந்தோஷமாக உள்ளே சென்று தாமரை காபியை கலந்து அல்லியின் கையில் கொடுத்து அனுப்பினாள்..

அல்லி காஃபியை கொண்டு வந்து தன் மாமனாரிடமும் அப்பாவிடமும் கொடுத்துவிட்டு கடைசியாக ஆதித்யாவிடம் கொடுக்க அப்போதுதான் முதன் முதலில் அவளை பட்டு புடவையில் பார்த்தவன் கண்ணை அகற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

அந்தப் புடவையில் ஒரு அழகான சிலை போல் இருந்தாள் அவள்.. கண்ணை இந்தப் பக்கம் அந்த பக்கம் அசைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு காப்பியை எடுக்கவும் அது அவன் மேலே அப்படியே சாய்ந்து கொட்டியது..

“ஐயோ… மேல காப்பி கொட்டிடுச்சே.. சாரி ஆதி..” என்றாள் அவள் அவன் அடுத்து கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில்..

அவனோ என்றைக்கும் இல்லாத திருநாளாய் அமைதியாக “இல்லை.. நான் தான் க்ளாஸை தவற விட்டுட்டேன்.. இட்ஸ் ஓகே.. நீ எதுக்கு அல்லி சாரி கேக்குற? வாஷ்ரூம் எங்க இருக்கு?”

அவன் அமைதியாக ஒரு சிறு புன்னகையோடு கேட்கவும் அல்லிக்கோ அவன் நடவடிக்கையில் தலை சுற்றி மயக்கமே வரும் போல இருந்தது.. தன் முன்னே அமர்ந்திருப்பவன் ஆதித்யா தானா என்று நம்ப மறுத்தது அவள் மனம்.. கண்களை படபடவென அடித்துக் கொண்டவள் வியப்பில் விழி விரித்து அவனையே பார்த்திருந்தாள்..

“அல்லியோட அவ ரூமுக்கு போய் வாஷ் பண்ணிக்கோங்க” என்று செழியன் சொல்ல சட்டென தன் வியப்பிலிருந்து மீண்டவளை பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணடித்தான் ஆதி..

ரகசியமாய் அவள் காதில் மட்டும் கேட்பது போல் ரகசியமாய் “என்னடி.. எனக்கு பெஸ்ட் ஆக்டர்னு ஆஸ்கர் அவார்ட் கொடுக்கலாம்னு தோணுதா?”

அவன் கேட்க பதறியவள் “வாங்க.. உங்களை வாஷ் ரூம்க்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு அவனை அழைத்துக்கொண்டு தன் அறையில் இருந்த குளியலறை நோக்கிச் சென்றாள்..

அவள் அறையை சுற்றிப் பார்த்தவன் அது மிகவும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருப்பது கண்டு அவளை பாராட்டினான்..

“ரொம்ப நல்லா நீட்டா வச்சிருக்கே.. நானும் இப்படித்தான்.. நான் இருக்கிற இடம் எல்லாம் கொஞ்சம் நீட்டா இருக்கணும்..”

அதுதான் ஆதித்யா.. யாரேனும் நல்லது செய்தால் அதை பாராட்ட சிறிதும் தாமதிக்க மாட்டான்..

“தெரியும்.. நானும் பாத்திருக்கேன்.. என்ன… கோவம் வந்தா தான் எது எங்க இருக்கும்ன்னு தெரியாது” கேலி செய்தாள் அவள் புன்னகைத்துக் கொண்டே..

அவளை திரும்பி பார்த்தவன் “ஏ.. அல்லிராணி.. ஒண்ணு சொல்லவா? பொடவையில ரொம்ப அழகா இருக்கடி நீ.. அதனால தான் காபி கொட்டிடுச்சு என்மேல.. ” அவளிடம் சொன்னவன் “என்னவோ செய்யறடி நீ என்னை” என்று மனதில் நினைத்து கொண்டே அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் பாராட்டியதில் கன்னம் சிவந்து வெட்கப்பட்டவள்.. அவன் ஊடுருவும் பார்வையை தாங்க முடியாமல் “தேங்க்ஸ் ஆதி… சீக்கிரம் வாஷ்ரூம் போயிட்டு அந்த கறையை கழுவிடுங்க.. இல்லைனா அப்பறம் போகாது” என்றாள் அவன் பார்வையை தவிர்த்து..

அவனும் குளியலறை சென்று அந்த கரையை கழுவிவிட்டு வெளியே வந்தான்…

அப்போது அந்தக் குளியலறை வாயிலிலேயே நின்று அவனுக்காக காத்திருந்தவளின் அருகே வந்தவன் அவளை இன்னும் நெருங்கி செல்ல அவளுக்கோ உள்ளுக்குள் சொல்ல முடியாத ரசாயன மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து கொண்டு இருந்தது.. இதயம் படபடவென வேகமாக அடிக்க தொடங்க என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று போனாள் பாவை அவள்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!