அத்தியாயம் 14
“இப்போ என்ன” என்ற பல்லவியிடம், “சினிமாவுக்கு போயிட்டு வந்துட்டோம் அடுத்து ஷாப்பிங் போக வேண்டாமா?” என்றான் திலீப் வர்மன். “திலீப் உனக்கு என்ன பைத்தியமா ஏன் என்னை படுத்தி எடுக்கிற ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு நான் வீட்டுக்கு போகனும் என்னை விடு” என்றாள் பல்லவி.
“இதோ பாரு தக்காளி அதெல்லாம் உன்னை விட முடியாது இன்னைக்கு நீ என் கூடவே தான் இருந்தாகனும். நைட்டு எட்டு மணிக்கு உன்னை உன் வீட்டில் விடுகிறேன்” என்றான் திலீப்.
“உனக்கு அறிவு இருக்கா இல்லையா டா எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்ணுற நான் தான் சொல்றேன்ல எனக்கு உன்னை பிடிக்கவில்லைனு அப்புறமும் ஏன் என் பின்னாடியே வர” என்றாள் பல்லவி.
“அடியே சும்மா காதுக்குள்ளே வந்து கத்தாதேடீ காது வலிக்குது” என்று காதை குடைவது போல செய்தவன், “இப்போ என்ன உனக்கு என்னை பிடிக்கலை அதானே பரவாயில்லை. அதுக்காக எல்லாம் உன்னை விட்டுற முடியாது இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி, நான் மட்டும் தான் உனக்கு புருஷன் அதை யாராலும் மாற்ற முடியாது அதனால நம்ம கல்யாணம் முதலில் நடக்கட்டும் அதற்கு பிறகு நீ என்னை அடி, திட்டு , சண்டை போடு நான் சந்தோஷமா ஏத்துக்கிறேன்” என்றான் திலீப் வர்மன்.
“திலீப் நீ ஏன் இப்படி என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காமல் பேசிட்டு இருக்க” என்ற பல்லவியிடம், “இதோ பாரு பவி எனக்கு நல்லாவே தெரியும் உன் மனசுல என்னைத் தவிர வேற யாருக்குமே எப்பவுமே இடம் இல்லைன்னு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு உனக்கும், ராகவ்க்கும் நடக்க இருந்த என்கேஜ்மென்ட் நின்று போனப்ப நீ அதை ஒரு விஷயமாவே நினைக்க வில்லை அப்படித்தானே” என்றான் திலீப் வர்மன்.
“அதுக்காக நான் உன்னை காதலிக்கிறேன்னு அர்த்தமா” என்ற பல்லவி, “என்னால எந்த காயத்தையும் மறக்க முடியலை திலீப் என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு நீ விலகி போயிரு” என்றாள் பல்லவி.
“பவி” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் ப்ளீஸ்” என்று அவள் கையெடுத்து கும்பிட்டாள் பல்லவி. அவன் ஒரு முறை கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், “சரி பல்லவி வா உன்னை உன் வீட்டில் விடுகிறேன்” என்றான்.
“இல்லை எனக்கு போயிக்க தெரியும்” என்ற பல்லவி கிளம்பிட அவன் செல்லும் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன பல்லவி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட” என்ற அபிநயாவிடம், “ஸாரி அபி” என்றாள் பல்லவி. “ஏய் நான் சும்மா கிண்டலுக்கு தான் கேட்டேன் எங்கே நீ மட்டும் வர உன் ஹீரோ எங்கே” என்றாள் அபிநயா.
“அவன் ஒன்றும் என் ஹீரோ இல்லை” என்றாள் பல்லவி. “பவி என்னாச்சு டீ உன் குரலே ஒரு மாதிரியா இருக்கு” என்ற அபிநயாவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் பல்லவி.
“பவி ஏன் அழற” என்ற அபிநயா விடம், “என்னால முடியலை அபி அவனை மறக்கவும் முடியலை, நினைக்கவும் முடியலை மனசு ரொம்ப பாரமா இருக்கு” என்றாள் பல்லவி.
“என்ன நாயே என் வேலையைக் கெடுக்க தான் வேலை நேரத்தில் வரச் சொன்னீயா” என்ற ரஞ்சித்திடம், “ஆமாம் இவரு பெரிய கலெக்டர் அப்படியே ஆஃபீஸ்ல வெட்டி முறிச்சுட்டு இருக்காரு உண்மையை சொல்லு நாயே கம்ப்யூட்டரில் சீட்டு தானே விளையாடிட்டு இருந்த” என்றான் திலீப் வர்மன்.
“சரி, சரி கம்பெனி சீக்ரெட்டை இப்படி பப்ளிக்கா சொல்லாதே” என்ற ரஞ்சித், “என்ன விஷயம் மறுபடியும் பல்லவி சண்டை போட்டாளா?” என்றான்.
“எப்படி மச்சி” என்ற திலீப்பிடம் , “அவள் துரத்தி விட்டால் தானே உன் கண்ணுக்கு நான் தெரிவேன்” என்ற ரஞ்சித்தை திலீப் முறைத்தான்.
“இப்போ ஏன் முறைக்கிற நான் சொன்னது உண்மை தானே” என்றான் ரஞ்சித். “உண்மை தான் அவளை எப்படி டா சமாதானம் செய்யுறது எட்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம் அதை இன்னும் தூக்கி பிடிச்சுக்கிட்டு எனக்கு புரியுது அவள் அன்னைக்கு நிறையவே காயப் பட்டுட்டாள் ஆனால் அவள் ஒரு விஷயம் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாள். அன்னைக்கு எனக்கு இருந்த மெச்சுரிட்டி ஒரு காரணம் ஆனால் அவள் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாள்” என்று கூறினான் திலீப்.
“பொறுமையா இரு டா எதுனாலும் யோசிச்சு அவளோட மனசை மாத்துவோம்” என்று நண்பனுக்கு நம்பிக்கை கொடுத்தான் ரஞ்சித்.
“என்ன பல்லவி உன் பிரச்சினை என்னன்னு சொல்லாமல் இப்படி அழுதுகிட்டே இருக்க நான் உன்னோட ஃப்ரெண்ட் தானே என்ன ஆச்சு என் கிட்ட சொல்லு துக்கத்தை மத்தவங்க கிட்ட சொல்லும் போது அது பாதியாக குறையும்” என்றாள் அபிராமி.
திலீப், ராகவ், ரஞ்சித், நான் நான்கு பேரும் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஸ். ராகவ் என்னோட ஃபேம்லி ஃப்ரெண்ட் அப்படிங்கிறதால இன்னுமே க்ளோஸ் தான். ராகவ்வை விட திலீப் தான் எனக்கு க்ளோஸ்.
நான்கு பேருமே ஒரே காலேஜ் தான். ஸ்கூல் படிக்கிற வரை ஃப்ரெண்ட்டா இருந்த திலீப் மேல காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு ஃபீலிங் வர ஆரம்பித்தது.
இந்த திலீப் எப்பவுமே ப்ராங்க் பண்ணிட்டே இருப்பான். சின்ன சின்ன விஷயத்தில் என்னை ஏமாத்துறது தான் அவனோட வேலை. அவன் கிட்ட ஏமாந்து போறது எனக்கும் பிடிக்கும். அவன் ரொம்ப அழகா இருப்பான். காலேஜ்ல நிறைய பொண்ணுங்களுக்கு அவன் தான் க்ரஷ் எனக்கும் தான்.
எனக்கு ரொம்ப பயம் எங்கே என் விருப்பத்தை சொல்லி அவன் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டான்னா அதை என்னால தாங்க முடியாது அதனால் தூரத்தில் இருந்தே அவனை ரசிச்சுக்கலாம்னு என்னோட காதலை அவன் கிட்ட நான் சொல்ல விரும்பவில்லை அப்போ தான் ஒரு நாள்..
“ஏய் தக்காளி இங்கே வா” என்ற திலீப்பிடம், “என்னடா” என்றாள் பல்லவி. “உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் டீ ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன் இன்னைக்கு தான் எனக்கே தைரியம் வந்திருக்கு” என்றான் திலீப்.
“தைரியம் வந்திருக்கா என்ன சொல்லுற திலீப் தைரியம் வரும் அளவுக்கு விஷயம் சீரியஸா” என்று பல்லவி கேட்டிட , “ஆமாம் டீ ரொம்ப ரொம்ப சீரியஸ்” என்று கூறிய திலீப், அவளது கையை எடுத்து தன் நெஞ்சினில் வைத்தான்.
“திலீப் என்ன பண்ணுற இது காலேஜ் கேண்டீன் எல்லோரும் நம்மளை தான் பார்க்கிறாங்க” என்றாள் பல்லவி. “பார்த்தால் பார்த்துட்டு போறாங்க எனக்கென்ன” என்ற திலீப், “என் கண்ணை பாரு பவி” என்றான். அவனது “பவி” என்ற அழைப்பில் அவள் உருகி தான் போனாள். அவளது அப்பா, அத்தை, அத்தை மகள் மூவரைத் தவிர அவளை பவி என்று உரிமையாக அழைப்பது திலீப் மட்டும் தான். அதுவும் எப்போதாவது தான் மற்ற நேரங்களில் பெங்களூர் தக்காளி என்று தான் அவளை அழைப்பான்.
“பவி , பவி” என்ற திலீப்பை பார்த்து, “என்னடா” என்றாள் பல்லவி. “என் ஹார்ட் பீட் உனக்கு கேட்குது தானே” என்ற திலீப்பிடம், “ஹும் ஃபீல் பண்ணுறேன்” என்றாள் பல்லவி.
“அது உனக்காக தான் டீ துடிக்குது, உன்னை நினைச்சு தான் துடிக்குது ஐ லவ் யூ பவி என் காதலை ஏத்துப்பியா” என்று அவன் கேட்டிட, அவளுக்கு ஏனோ இதயம் ஜில்லென்று ஆனது. அவளது மனமோ ரெக்கையின்றி வானில் பறந்தது. அவளுக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அவனது கையை பிடித்துக் கொண்டவள் “நிஜமா தான் சொல்றியா திலீப், இதை தான் டா நானும் உன் கிட்ட சொல்ல நினைத்தேன்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “நம்பிட்டியா பவி ஹேய் நான் ஜெயிச்சுட்டேன்” என்று அவன் துள்ளி குதிக்க ஒன்றும் விளங்காத பல்லவி அதிர்ந்து போய் அவனைப் பார்த்திட, “டேய் ஆயிரம் ரூபாய் எடு” என்றான் திலீப்.
“என்ன பல்லவி நீ இவனைப் பற்றி தெரிந்தும் அவன் சொன்னதை நம்பிட்டியே வழக்கம் போல அந்த பரதேசி ப்ராங்க் தான் பண்ணினான் அதுவும் இந்த முறை ஆயிரம் ரூபாய் பெட் கட்டி” என்றான் ரஞ்சித்.
பல்லவிக்கு என்ன சொல்வது என்றே ஒன்றும் புரியவில்லை அவன் தன்னிடம் கூறியதை உண்மை என்று நம்பி அவனிடம் தன் காதலை சொன்னவளுக்கு அவனது ப்ராங்க் என்ற ஒற்றை வார்த்தை உயிரை வதைப்பது போல உணர்ந்தாள். அவளது கண்கள் நிற்காமல் கண்ணீரைச் சிந்திட அதைக் கண்ட ரஞ்சித், “டேய் அவள் அழறாள் பாரு” என்றான்.
“ஏய் தக்காளி என்னடீ அழுதுட்டு இருக்க புதுசா நான் என்ன உன்னை ஃபர்ஸ்ட் டைம்மா ப்ராங்க் பண்ணுறேன் அடச்சீ கண்ணைத் துடை” என்று அவன் கூறிட அவளுக்கு இருந்த கோபத்தில், “பளார் , பளார்” என்று அவனது கன்னத்தில் அறைந்து விட்டாள்.
“ஏய் பவி பைத்தியம் ஏன் டீ அடிக்கிற” என்ற திலீப்பிடம் பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தில் இருந்து அழுது கொண்டே ஓடி விட்டாள் பல்லவி.
“அவள் என்ன பைத்தியமா டா தக்காளி இல்லை பரங்கிக்காய் எப்படி அடிச்சுட்டு ஓடுறாள் பாரு” என்ற திலீப்பிடம், “ஐ திங்க் அவள் உன்னை லவ் பண்ணுறாள்னு நினைக்கிறேன் டா” என்றான் ரஞ்சித்.
“என்ன என்னை லவ் பண்ணுறாளா முட்டாள் நீ எதுவும் லூசு மாதிரி பேசாதே” என்று திலீப் கூறிட , “இதுக்கு முன்னாடி எவ்வளவோ ப்ராங்க் பண்ணி இருக்க எப்போவாச்சும் அவள் உன் கிட்ட கோபமா பேசி இருக்காளா? இன்னைக்கு கை நீட்டி அடிச்சுருக்காள் ஐ திங்க் அவள் உன்னை லவ் பண்ணுறாள்” என்றான் ரஞ்சித்.
“எனக்கு அந்த மாதிரி எந்த ஃபீலிங்ஸுமே அதுவும் பல்லவி மேல கொஞ்சம் கூட இல்லை” என்றான் திலீப் வர்மன்.
“உனக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவளுக்கு இருக்கும் போல அதனால் தான் நீ ப்ராங்க் பண்ணிட்டனு தெரிஞ்சதும் அவளால் தாங்கிக்கவே முடியலை” என்றான் ரஞ்சித்.
(…. அடியே..)