அந்தியில் பூத்த சந்திரனே – 13

5
(8)

தன்னை மிரண்டு போய் பார்த்தவளை கண்டு, “எனக்கு குழந்தையே பிறக்காதுன்னு பொய் சொல்லி, என்னை வார்த்தைகளால எவ்வளவு காயப்படுத்திருப்ப? அதோட விட்டியா? என்னோட அப்பா, அம்மா முன்னாடியே வச்சு ஒரு குழந்தை பெத்துக்குற தகுதி எனக்கில்லைன்னு சொல்லிதான டிவோர்ஸ் வாங்கின?” என்று அதீத கோபத்துடன் அவன் கேட்க,

“ஆ.. ஆமா.. அது உண்மைதானே? மெடிக்கல் சர்டிபிகேட் கூட என்கிட்ட இருக்கு.” என்று பயத்தில் திக்கி திணறி கூறி முடிக்கும் முன்னரே அவள் கன்னத்தில் “பளார்..” என அறைந்திருந்தான் ஹர்ஷா. அதில் காதுகள் அடைத்து போனது தாரிக்காவிற்கு.

“ஏய்…. அப்படி சர்டிபிகேட் கொடுத்த டாக்டர்  உன்னோட ஃப்ரெண்ட். கொடுக்க சொன்னது நீ. எனக்கு இன்னமும் எதுவுமே தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியா?” என்றதும் விழிகள் அகல அதிர்ந்து பார்த்தாள் அவனை.

“என்ன? இவனுக்கு எப்படிடா எல்லாமே தெரியும்னு அதிர்ச்சியா இருக்கா?” என்றவன் அவளை நெருங்கி “உன்னோட ஹெல்த்த செக் பண்ணின ஒரு ஃபைல் என்னோட வீட்லதான் இருந்துச்சு. இவ்வளவும் பண்ணின நீ முட்டாள் தனமா அதை என்னோட வீட்லயே விட்டுட்டு போய்ட்டியே! அதை எடுத்து பார்த்தப்போதான் தெரிஞ்சுது குறை என்கிட்ட இல்லை உன்கிட்டதான்னு. அப்போவே வேற ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிட்டேன். உன்னோட கேவலமான பொய் அப்பட்டமா தெரிஞ்சு போய்டுச்சு.

அன்னைக்கே உன்னை தேடி கண்டுபிடிச்சு கொன்னு போடணும் போல ஆத்திரமா வந்துச்சு. அப்போதான் நீ வேற எவன்கூடவோ வாழ்ந்துட்டு இருக்கன்னு தெரிஞ்சது. நீ என்கூட வாழும்போதே அவன்கூடவும் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்க. அது கூட தெரியாம எவ்வளவு முட்டாள் தனமா நான் இருந்திருக்கேன்? உன்னை பத்தி முழுசா கேள்விப்பட்டதுமே, ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணான்னு உன்னை பார்க்கவே அருவருப்பா இருந்துச்சு. உன்னை ஒரு ஆளுன்னு மதிச்சு ஏதாவது பண்ணினா எனக்குதான் அசிங்கம். அதனாலதான் போய் தொலைன்னு விட்டுட்டேன்.” என்றவன் அவனது சேரில் அமர்ந்தவரே,  “எவ்வளவு பேசின நீ? எப்படியெல்லாம் நல்லவ மாதிரி நடிச்ச? இப்போ பேசுடி…” என்று அதட்ட, “வேற எவன்கூடவோ வாழத்தான போன? சொல்லு.”

என்றதும் ‘இதுவும் தெரிந்து விட்டதா, எல்லாமே தெரிஞ்சுடுச்சா?’ என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்தாள் தாரிக்கா. அதில் தடுமாறியவள், “இ.. இல்ல.. அது வந்து…” என்று இழுக்க,

“எவ்வளவு கேவலமான ஜென்மம் நீ?. உனக்கு அப்படி வேற ஒருத்தனை பிடிச்சிருக்குனு சொல்லிருந்தா நானே டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி உன் மூஞ்சிலயே விட்டெறிஞ்சிருப்பேனே? அதை விட்டுட்டு எதுக்குடி என்மேல பழி சொன்ன? உனக்கு நான் என்ன குறை வச்சேன்? சொல்லுடி.. எதுக்கு இப்படி பண்ணின?” என்று கேட்க, ஹர்ஷா இப்படியெல்லாம் பேசுவான் என்று அவள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

அவள் பார்த்த ஹர்ஷா எவ்வளவு பேசினாலும் பொறுத்து கொள்வான், பதிலுக்கு கோபமாக ஒரு வார்த்தையும் பேச தெரியாதவன். ஆனால் இப்போது இருப்பவனோ என்னுடைய கழுத்தை பிடிக்கிறான்!, இவ்வளவு கடுமையாக பேசுகிறான். இதையெல்லாம் சற்றும் எதிர்பார்த்திராதவள் தடுமாறித்தான் போனாள்.

“சொல்லுடி… ஏன் இப்படி பண்ணின?” என்று நீண்ட நாள் தன் மனதில் அரித்து கொண்டிருந்த கேள்விக்கு பதில் அறியும் நோக்கில் அவன் மீண்டும் கேட்க,

“ஆமா… உன்கூட இருக்கும்போதுதான் எனக்கு அவன் அறிமுகமானான். நீ எப்போ பார்த்தாலும் ரெஸ்டாரண்ட் பத்தியே யோசிக்கிற, இல்லனா நமக்கு பிறக்க போற குழந்தை பத்தி பேசுற. இதை தவிர என்ன தெரியும் உனக்கு? முதல்ல நீ என்னை ஓவரா கேர் பண்ணிகிட்டதே எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் என்ன குழந்தையா? என்னால என்னை பார்த்துக்க முடியாதா?

அவன் எனக்கு எல்லா விதத்திலும் ஃப்ரீடம் கொடுத்தான். என்னை ரசனையோட பார்த்தான். அது எனக்கு பிடிச்சிருந்தது ரிலேஷன்ஷிப் வச்சுக்கிட்டேன். உன்கிட்டருந்து நான் எப்படி விவாகரத்து கேட்டிருந்தாலும் கண்டிப்பா நீ கொடுத்திருக்க மாட்ட. அதான் இப்படி பொய் சொன்னேன்” என்றதும் அவள் கூறிய காரணங்களை கேட்டவனுக்கு தலை சுற்றி போனது.

‘என்ன கூறுகிறாள் இவள்? இவளுக்காக சம்பாதிக்கத்தானே ஓடி ஓடி உழைத்தேன்? அப்போதும் இவளுடன் நேரம் செலவிட தவறவில்லையே? திருமணத்திற்கு பிறகு வரப்போகும் குழந்தையை பற்றி பேசியது இவளுக்கு எப்படி தவறாக தெரிந்தது? அவன் ரசித்தான், சுதந்திரம் கொடுத்தான் என்கிறாளே. நான் என்ன இவளை அடைத்தா வைத்தேன்? என்னுடன் இருக்கும்போதும் இவள் விருப்பம் போலதானே இருந்தாள்?’ என்றெல்லாம் எண்ணியவன் தன் தலையை உலுக்கிக்கொண்டான். ‘என்னவாக இருந்தால் என்ன? இப்போது எதற்காக இதை பற்றியெல்லாம் பேச வேண்டும்?’ என்று நினைத்தவன்,

“அப்படியா? சரி. அதான் போய்ட்டல்ல? இப்போ எதுக்கு வந்த?  ஓ.. சாரி.. சாரி.. அதான் வந்ததுமே சொல்லிட்டியே. கல்யாணத்துக்கு விஷ் பண்ண வந்தேன்னு. தேங்க் யூ சோ மச்.. இனிமேல் என்னை பார்க்க வர வேலையெல்லாம் வச்சுக்காத. அப்புறம் நான் இந்த மாதிரி பேசிகிட்டு இருக்க மாட்டேன். கெட் லாஸ்ட்..” என அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜிக்க,

தனது கைப்பயை எடுத்து தோளில் மாட்டியவள், விட்டால் போதும் என்று ஓடியே விட்டாள். வெளியே சென்றவள்,  ‘புது பொண்டாட்டிகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு மிரட்டி பணம் பறிக்கலாம்னு வந்தா, இவன் ஏற்கனவே எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கானே!

வந்ததுக்கு இவன்கிட்ட அடி வாங்கினதுதான் மிச்சம்… ச்சே…  ஹர்ஷா.. என்னைவே அடிச்சுட்டல்ல? உன்ன சும்மாவே விடமாட்டேன் டா..’ என்று மனதுக்குள் கறுவி கொண்டவள், அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டாள்.

நல்ல மனநிலையில் வந்தவனுக்கு இவளை பார்த்ததும் பழைய நினைவுகள் அனைத்தும் கண்முன்னே தோன்றி மறைய.. ‘ச்ச… ஏன்தான் இங்க வந்து தொலைச்சாளோ?’ என்று நொந்து கொண்டான். பிறகு நடந்த அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன், தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கினான்.

நிரஞ்சனா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு அவள் காதலனுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட்டாள். பார்க்கிலே அமர்ந்து இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

“அதுதான் உன்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சே. இப்போ நம்ம ரூட் க்ளியர்.. அப்பா  அம்மாவை கூட்டிகிட்டு, உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரட்டுமா?” என்று அவன் கேட்க, 

 

“அதெல்லாம் இப்போ எதுவும் வேண்டாம். என்னோட படிப்பு முடியட்டும். இன்னும் ஒரு வருஷம்தான? அப்றமா பார்த்துக்கலாம்.”

“எங்க வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்கடி.”

“அது உன்னோட பிரச்சன. நீதான் பார்த்துக்கணும்.”

“உங்க அக்கா வீட்ல இருக்குறதுதான் பிரச்சனை. இல்லன்னா நம்ம கல்யாணம் நடந்திருக்கும்னு சொல்லுவ?”

“அதுவா… அவளை டார்ச்சர் பண்ண ஒரு வழி கெடச்சுது. அதான் அப்படி சொன்னேன்.”

“உனக்கு அப்படி என்னடி அவங்க மேல கோபம்?”

“பின்ன..? வரவன் போறவன் எல்லாம் உன்னைவிட உங்க அக்கா அழகா இருக்காளே..! உங்க அக்கா பேரு என்னனு கேக்குறதும், அவள் மொபைல் நம்பர் கேக்குறதும், இது பாத்தாதுன்னு சொந்தக்காரனுங்க எல்லாரும் சின்னவளை விட பெரியவ பொறுப்பானவ, நல்ல பொண்ணு அப்படி இப்படீன்னு என் காது படவே பேசுவானுங்க.” என்றாள் வெறுப்போடு.

“இதெல்லாம் ஒரு காரணமா?” என்று சலித்து கொண்டான் அவன்.

“ஓ… சார் வீட்டுக்கு ஒரே பையன்ல? அதான் தெரியல. இரண்டாவதா அதுவும் ஒரு அழகான, பொறுப்பான அக்காவுக்கு தங்கச்சியா பிறந்து பாருடா.. அப்போ புரியும் உனக்கு.”

“என்னவோ போ.” என்றவனது அலைபேசி ஒலிக்க அதை ஏற்று காதில் வைத்து பேச ஆரம்பித்து விட்டான்.

‘இன்னைக்கு மறுவீட்டுக்கு வராளாம். அவ திரும்ப போறதுக்குள்ள ஏதாவது நல்லா மனசு நோகும்படியா செஞ்சுவிட்டு அனுப்பனும். திரும்ப அவ வீட்டுக்கு வரவே பயப்படணும்’ என்று மனதினுள் முடிவாக எண்ணிக் கொண்டவள்,

அவன் பேசி முடித்து அழைப்பை துண்டித்ததும், “சரி காலேஜ் முடியுற டைம் ஆகிடுச்சு. என்னை கூட்டிட்டு போய் பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுடு. நான் கிளம்புறேன்” என்று நிரஞ்சனா கூற,

“சரி வா கிளம்பலாம்” என்றவன் அவளை பைக்கில் அழைத்து கொண்டுபோய் பஸ் ஸ்ட்டாப்பில் இறக்கி விட்டான். வீட்டிற்கு வந்ததும் கல்லூரிக்கு சென்று வருவதை போலவே தன்னை காட்டிக் கொண்டவள், களைத்து போய் சோபாவில் அமர்ந்தாள். வீட்டில் வகை வகையான உணவு சமைக்கும் வாசனை வீசியது.

“ஓ.. மூத்த மக வரான்னு தடபுடலா விருந்து ரெடி ஆகுதோ? அவ இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள, ஏன்டா வந்தோம்னு யோசிக்க வைக்கறேன்னா இல்லையா பாரு.” என்று மனதிற்குள் சபதம் ஏற்றவளாக அமர்ந்திருந்தாள் நிரஞ்சனா.

“அம்ருதாவோ அனைத்தையும் எடுத்து வைத்தவள்  ஹர்ஷாவுக்காக காத்திருக்க தொடங்கினாள். அவளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் எப்போதும் வரும் நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தான் ஹர்ஷா. அறைக்குள் வந்தவன்,

“ரெடியா இருக்கியா? கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே உள் நுழைய “அப்பா..” என்று ஓடி வந்து கட்டி கொண்டாள் ஆத்யா. அவளை தூக்கி கொண்டவன் கொஞ்சியப்படியே அம்ருதாவை பார்க்க, “எல்லாமே ரெடிங்க. நீங்க வந்தா கிளம்பிடலாம்” என்றாள்.

“ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா? சாரி.. இதோ சீக்கிரம் கிளம்பிடலாம்.” என்றதும் “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க பொறுமையா கிளம்புங்க” என்றவள் காத்திருக்க தொடங்கினாள்.

அனைத்தையும் எடுத்து வைத்து முடித்த பிறகு குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன்

“அவ்வளவுதான் ரெடி. வாங்க போலாம்.” என கூறிவிட்டு முன்னோக்கி செல்ல, அவனை இருவரும் பின் தொடர்ந்தனர்.

கீர்த்தனாவிடம் வந்தவன் “ம்மா.. நாங்க கிளம்பறோம். மூணு நாளைல திரும்ப வந்துடுவோம்” என்று கூற,

“மூணு நாளா? அங்க போய் மூணு நாள் தங்கிட்டா, ரெஸ்டாரண்ட் வேலையெல்லாம் யார் பாக்குறது?”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் அவங்க வீட்லருந்தே அப்பப்போ போய் பார்த்துப்பேன்” என்று பேசியப்படியே கிளம்ப தயாராக,

“சரி. என்னவோ பண்ணு.” என்றதும் பார்த்திபனிடமும் கூறிவிட்டு இருவரும் வெளியேறினர். மூவரும் காரினில் ஏறி புறப்பட்டு செல்ல, போகும் வழியில் பழங்களையும் வாங்கி கொண்டு சென்றனர்.

வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் அரவம் கேட்க, காவேரிக்கும், ஆறுமுகத்துக்கும் சந்தோஷம் தாளவில்லை. இருவரையும் வரவேற்க வாசலுக்கு சென்றவர்களுக்கு ஒரு நாள் பேத்தியை பிரிந்து இருந்ததே பெரிய பிரிவை போல தோன்றியது.

அவர்கள் வந்ததும் ஆத்யாவை தூக்கி கொஞ்சி தீர்த்தவர்கள், இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து கொண்டு போக நிரஞ்சனா பெயருக்காக ஹர்ஷாவை “வாங்க” என்று கேட்டு வைத்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!