ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர்.
அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து,
“டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?” என்று வினவினாள் ஜுவாலா.
” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்” உண்மையை கூறினால் நிச்சயம் அது அர்ஜுனின் காதிற்கு செல்லும், அவன் கண்டிப்பாக பிரச்சினை செய்வான், நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு அவனது நிம்மதியையும் கெடுத்து தனது நிம்மதியும் கெடுத்துக் கொள்ள விரும்பாது இவ்வாறு பொய் கூறினாள் மது.
” ஓ ஆனா டிரஸ் உனக்கு ஓவர் சைஸ்னு நினைக்கிறேன், ஓவர் கோட் ரொம்ப பெருசா இருக்கு” என்ற ஜூவாலாவிடம்,
” ஆமா ஆல்டர் பண்ணிக்கலாம்” என்றவள், “ஜூவாலு எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு, நான் வீட்டுக்கு போகட்டா” என்று கேட்டாள்.
” வீட்டுக்கு போறியா? என்ன சொல்ற இன்னும் நிறைய வாங்க வேண்டியது இருக்கே பா, உனக்கு வேணும்னா ஒரு காஃபி சாப்டுட்டு பர்சேஸ் கண்டின்யூ பண்ணுவோமா” என்றாள் ஜூவாலா.
” இல்லை ஜூவாலா ரொம்ப தலை வலிக்குது நான் போறேனே ” என்கவும்,
” அது இல்ல மது” என்று ஆரம்பித்த ஜுவாலாவை தடுத்த இளமாறன்,
“விடு ஜுவாலா அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், நாம பார்த்துக்கலாம், சரி மது மா வா நானே உன்னை ட்ராப் பண்றேன்” என்றான்.
” இல்ல அண்ணா நீ வேண்டாம் அதான் டிரைவர் இருக்காருல. நான் வீட்டுக்கு போயிட்டு காரை ரிட்டன் அனுப்புறேன், அர்ஜுன் கிட்ட சொல்லிடுங்க” என்றவள் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
மதுமதி வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது, பிரீத்தாவின் காரும் அங்கே நிற்பதை கண்டவள்,
பின்பு தனக்கு வாங்கிய பொருட்களை காட்டுவதற்காக ப்ரீத்தாவை தேடி அவரது அறைக்குள் சென்றவள், அங்கே அவர் இல்லாததும், அவரைத் தேடி மாடிக்கு வரவும், அங்கே மிருதுளாவின் அறையில் பிரீத்தாவின் குரல் கேட்க்க,
” ஓ சித்தி ரூம்ல இருக்காங்களா சரி அப்போ ரெண்டு பேருக்கும் காட்டிடலாம்” என்ற மது புன்னகையுடன் மிருதுளாவின் அறையை நெருங்கிய கணம், தான் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து விட்டாள்.
அறையினுள்,
“ப்ளீஸ் அண்ணி அப்படி மட்டும் பண்ணிடாதீங்க” கண்ணீர் மல்க ப்ரீத்தா மிருதுளாவின் கால்களை பற்றிக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, கால் மேல் கால் போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்த மிருதுளாவின் முகம் வழக்கத்துக்கு மாறாக கோபத்தில் சிவந்திருந்தது.
” உன் ஃப்ளீஸ் எல்லாம் எனக்கு வேண்டாம், நாளைக்கு உன் பையன் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டணும், இல்லை உன் பையன் உனக்கு இல்லை ப்ரீத்தா. அம்மாவுக்கும் பையனுக்கும் நிம்மதி இல்லாம பண்ணிடுவேன்.”
” ஐயோ ப்ளீஸ் அண்ணி அப்படி மட்டும் பண்ணிடாதீங்க”
” நான் சொன்னது நடக்கலனா கண்டிப்பா பண்ணுவேன்”
” கொஞ்சம் மதுவையும் அர்ஜுனையும் பத்தி யோசிங்க அண்ணி”
” அவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை, ஜூவாலா அர்ஜுன விரும்புறா, எனக்கு என் பொண்ணோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம். சோ நாளைக்கு அர்ஜுன், ஜூவாலா கழுத்துல தாலி கட்டணும் கட்டல நான் சொன்னதை செய்வேன். ராம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்ற மிருதுளா இன்னும் ஏதேதோ கூற, அது அனைத்தையும் கேட்ட மதுமதிக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அப்பொழுது ப்ரீத்தா அழுது கொண்டே வெளியே வருவது தெரியவும், வேகமாக தனது அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு, பிரீத்தாவின் நிலை எண்ணி அழுகையாக வந்தது.
இரவு நெருங்கிக் கொண்டிருக்க விடிந்தால் கல்யாணத்தை வைத்துக்கொண்டு, என்ன செய்வது என்று புரியாது தவித்த மதுமதி அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள்.
வெளியே சென்றவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்திருக்க, மதுமதிக்கு தலைவலி என்பதை அறிந்து கொண்டு அவளைப் பார்க்க வந்த அர்ஜுன் இளமாறன் மற்றும் ஜூவாலாவிடம் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள பெரும்பாடு பட்டுப் போனாள் பெண்ணவள்.
ஜூவாலாவின் விருப்பத்தை அறிந்து கொண்ட பிறகு மதுவின் மனமோ கனத்து போனது.
அப்பொழுது அதே நேரம், அர்ஜுனை எண்ணி பார்த்தவளுக்கு அவனது நிலை இன்னும் வேதனை கொடுக்க, அவனுக்காக திருமணம் செய்து கொண்டாலும், ஜூவாலாவின் கண்ணீரில் தன்னால் அர்ஜுனுடன் நிம்மதியாக வாழ முடியுமா என்று கேட்டால் அவளால் நிச்சயமாக முடியாது. மேலும் மிருதுளா, தான் சொன்னது போல செய்து விட்டால், பிரீத்தாவின் நிலையை எண்ணிப் பார்த்தவளுக்கு இதயத்தில் இன்னுமே பாரம் ஏறி போக, அதே கனத்த மனதுடன் ஜூவாலாவின் அறையின் கதவை தட்டினாள் மது.
அழுது கொண்டு இருந்திருப்பாள் போலும் சில நிமிடங்கள் கழிந்த பிறகு தான், வந்து கதவைத் திறந்தாள் ஜூவாலா. அழுகையை மறைப்பதற்காக அவள் தன் முகத்தை கழுவியிருக்க, பார்த்ததும் கண்டுபிடித்துக் கொண்ட மதுமதி,
‘ அர்ஜுன புடிக்கும்னு முதல்லயே சொல்லி இருக்கலாமே’ என்று தன் மனதிற்குள் எண்ணியவள் வேகமாக வந்து அவளை அணைத்துக் கொள்ள, ஜூவாலா தடுமாறி போனாள்.
“என்னாச்சு மது? இந்த நேரத்துல, ஏன் ஒருமாதிரி இருக்க” என்று கேட்டாள் ஜூவாலா.
” ஒன்னும் இல்லை ஜூவாலு, தூக்கம் வரல இன்னைக்கு மட்டும் உன் கூட தூங்கிக்கவா” என்று கேட்டாள் மதுமதி.
” சரி வா” என்ற ஜூவாலா மதுமதி அருகே இருந்ததால் அழக்கூட முடியாது அவளுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அப்படியே உறங்கிவிட, அவளது உறக்கத்தை உறுதி செய்த பிறகு அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அறையில் இருந்து வெளியேறியவள், நேரே அர்ஜுனின் அறைக்குள் சென்றாள்.
மகிழ்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தைப் வருத்தத்துடன் பார்த்தவள்,
” என் முடிவு உனக்கு நிச்சயம் வலிய தான் கொடுக்கும், என் மேல வெறுப்பு வரும், ஆனா ஜூவாலா உன்னை நல்லா பாத்துக்குவா. என் முடிவு உனக்கு இப்போ தப்பா தெரிஞ்சாலும், ஃபியூச்சர்ல நீ கண்டிப்பா சந்தோஷமா இருப்ப, நீ ரொம்ப நல்லவன் அர்ஜுன், கண்டிப்பா நீ ஜூவாலா கூட சந்தோஷமா இருக்கணும்” என்றவள் அழுது கொண்டே அறையை விட்டு வெளியேறி, உறக்கத்தில் இருந்த இளமாறன் மற்றும் அருள் நிதியை பார்த்துவிட்டு நேரகாக தனது அறைக்கு வந்த நேரம், அவள் எதிர் பார்த்தது போலவே பிரீத்தா அவளை தேடி வந்திருந்தார்.
“சொல்லுங்க அத்தை” என்ற மதுவிடம், எதுவும் பேச முடியாது தவித்த ப்ரீத்தா அவளது கரங்களைப் பற்றிக்கொள்ள வரவும், அவரை அணைத்துக் கொண்ட மது,
“ப்ளீஸ் நீங்க என்கிட்ட கெஞ்ச கூடாது அத்தை. நான் போயிடுறேன்” ப்ரீத்தாவின் கண்ணீரை துடைத்து விட்டபடி கூறினாள் பெண்ணவள்.
மதுவின் பேச்சில் நிஜமாகவே அதிர்ந்து போன பிரீத்தா அதே அதிர்ச்சியுடன் அவளை பார்க்க,
” மிருதுளா சித்தி உங்ககிட்ட பேசுனத நான் கேட்டுட்டேன் அத்தை ” என்றதும் ப்ரீத்தா ஒவ்வொன்று அழுது விடவும், அவரைத் தாங்கி பிடித்து கட்டிலில் அமர வைத்தவள்,
” ப்ளீஸ் அத்தை அழாதீங்க, பழசை பேச வேண்டாம் நான் போயிடுறேன். சித்தி சொன்னது போல நீங்க அர்ஜுனுக்கும் ஜுவாலாவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க. எல்லாம் சரியானதும் நான் வரேன். இந்த உண்மை உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரியட்டும், எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் தெரிய வேண்டாம். சும்மா நான் போனா அர்ஜுன் கண்டிப்பா தேடி வருவார், அதனால என்னோட டேபிள்ள வேற ஒருத்தரை விரும்புறதா, அவர் கூட போக போறதா லெட்டர் எழுதி வச்சிருக்கேன். அப்பதான் அவருக்கு என் மேல வெறுப்பு வரும், என் மேல வெறுப்பு வந்தா தான் ஜூவாலா கூட வாழ்வாரு ” என்றவள்,
” அழுதுட்டே இருக்காதிங்க அத்தை என்னை பத்தி கவலைப் படாதீங்க, என் ஃப்ரண்ட் சந்தியா வெளியில தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ கூட அவளோட சொந்த ஊருக்கு நான் போயிடுவேன், அங்க கொஞ்ச நாள் இருக்கேன், இங்க எல்லாமே நார்மல் ஆனதும் சொல்லுங்க நான் வந்துடுவேன். உங்கள பிரிஞ்சு எனக்கு ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது” என்றவள் அழும் பிரீத்தாவை மீண்டும் ஒருமுறை அணைத்து விடுவித்து விட்டு வீட்டை விட்டு வெளியேற, மதுவை தடுக்க முடியாத தன் நிலையை எண்ணி வேதனையுற்ற பிரீத்தாவின் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்தது.
@@@@@@@@@@@
நிலுவையில் உள்ள தன் பணிகளை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடிய தருணம், ஆதித்யாவின் அலைபேசி வைப்ரேஷனில் உறுமியது.
யோசனையுடன் அலைபேசியை தன் கையில் எடுத்தவன், வாட்சப்பில் புதிய எண்ணில் இருந்து வந்திருந்த
குறுஞ்செய்தியை புருவம் சுருக்கி பார்த்தவன், அதை ஓபன் செய்த பொழுது அவனது கண்கள் கோபத்தில் சிவந்தது.
அப்பொழுது உடனே ஆதித்யாவுக்கு அழைப்பு வர அழைப்பை ஏற்ற ஆதித்யா,
” சிவகுரு நீ உன் எல்லைய மீறிட்ட டா ” அடி தொண்டையில் இருந்து சீறினான்.
அதைக் கேட்டு எதிர் முனையில் இருந்த சிவகுரு,
” அப்படி தான் டா செய்வேன் உன்னால முடிஞ்சத செய்டா. உன் காதலி என் கையால கொஞ்சம் கொஞ்சமாக சாக போறா ஆதி. அக்கறை இருந்தா வந்து கூட்டிட்டு போ ” என்று கூறி எக்காளமாய் சிரிக்க,
” உன்னை போட்டுட்டு அவளை கூட்டிட்டு போறேன் டா ” என்று கர்ஜித்தான் ஆதித்யா.