ஆழி 3
“கெட்டவன்தான். இன்னுமே அதில டவுட் இருக்கா?”
அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், ஒரே ஒரு பதில் சொல்லி பேசவிடாமல் செய்துவிட்டான்.
அதற்குப் பின்னர் அமைதி அமைதி அமைதியோ அமைதிதான். ஊருக்குள்ள போலீஸ் பயம், இங்க மிருகங்களைப் பத்தின பயம். “ஆழினி உனக்கு எதிரி உன்னோட வாய்தான். எதையாவது சொல்லப் போய் கோபத்துல அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டா உன் நிலைமை என்ன? ஜிப் போட்டு லாக் பண்ணிக்க” தனக்கே எச்சரிக்கை செய்தாள் ஆழினி.
“சத்தமா பேசு. காது கேட்கல”
“உன்கிட்ட பேசல மேன்” அவன் முதுகில் தலை சாய்த்து படுத்தே விட்டாள்.
“தவன் டைம் என்ன?” விடிந்தால் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணலாமேன்னு விசாரித்தாள் அவனை.
“எதுக்கு, இறங்கி நடந்து வர்றியா?” நக்கல் குரலில் கேட்டான்.
“தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்” அவள் குரலில் இருந்த சோர்வை அவன் மனது உணரவேயிலை.
தவனின் அழுத்தமான காலடி சப்தத்தில் இலை சருகுகள், காய்ந்த குச்சிகளும் உடைபட்டு தளதளவென ஒரு வினோதமான ஓசையை எழுப்பி, அடிமனதில் கருக் என ஒரு பயத்தை விளைவித்தது.
அந்த இருளிலும் மரங்களின் அடர்த்தியை அவளால் நன்றாகவே உணர்ந்திட முடிந்தது. தன்னை விட பலமடங்கு உயரமான மரங்களும், தன்னை சுமந்து நடந்தவனை பலமாக உரசிவிட்டு தன் மீது பட்டும் படாமல் உரசியது போலச் செல்லும் மரத்தின் கிளைகளும், இலைகளும் தங்களுடைய இடம் இது என்பதை வலிக்க அறிவுறுத்தியது மனிதர்களுக்கு.
பறவைகளும் விலங்குகளும் உறங்கும் இந்த நேரத்தில் தங்களுடைய காலடி சப்தம் மட்டும் கேட்க, அந்த சப்தம் கூட மரங்களின் அடர்த்தியில் அப்படியே அடங்கிப் போனது.
தங்களுக்கு என்ன ஆனாலும் வெளி உலகிற்கு நிச்சயம் தெரியாது, இதை உணரும் பொழுதே எலும்பு வரைக்கும் ஒரு நடுக்கம் தானாகப் பரவியது.
ஆனால் ஆழினிக்கு இருக்கும் பயம் படபடப்பு அவனுக்கு இல்லை. அடர்ந்த இருட்டிலும் காட்டுக்குள் அவன் நடந்து செல்லும் இயல்பிலுமே அவனுக்கு இதெல்லாம் பழக்கமான ஒன்றுதான் என்பது புரிந்து போனது.
இருட்டிலும் சர்வசாதாரணமாக, தன்னையும் சுமந்து செல்பவனை நினைத்து அந்த நேரத்திலும் வியந்து போனாள் ஆழினி. “எப்படி இவனால் முடிகிறது. யார் இவன்?” இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டாலும் ஒழுங்கான பதில் வராது என்பதால் மவுனமாகி விட்டாள்.
என்ன மிரண்டாலும், கேள்விகள் வந்தாலும் இப்போதைக்கு அவனைத்தான், தான் நம்பியாக வேண்டும். அதனால் அவன் தோளில் சாய்ந்தவளுக்கு கண்கள் சொக்கியது உறக்கத்தில்.
தவன் அப்படியே நடந்து செல்ல, பொழுது விடியும் அறிகுறியாக பறவைகளின் கீச் கீச் சப்தங்கள் மெல்லிசையாய் காற்றில் கலந்து தவனின் காதுகளை அடைய, மிருகங்களின் பாஷைகள் படித்தவனுக்கு அதன் மொழி புரியவும் புன்னகைக்கும் விதமாய் அவனது அழுத்தமான உதடுகள் மெல்ல விரிந்தது.
அடர்ந்த இருளின் நிறத்தை அதற்கே தெரியாத அளவுக்கு மெல்ல மெல்ல மாற்றினான் கதிரவன். வெளிச்சம் சிறிது சிறிதாக சுற்றிலும் பரவ ஆரம்பிக்க, மெல்லிசையாய் காதில் விழுந்த பறவைகளின் இரைச்சல் இப்போது காதுகளை நிறைத்தது.
இறை தேடிச் செல்லும் பறவைகள், குஞ்சு பறவைகளின் கூச்சல்கள் என கலந்துகட்டி புதுவிதமான இசையை உருவாக்கியது காட்டுக்குள்.
தண்ணீர் ஊற்று ஒன்று கண்ணில் அகப்பட, அதனருகில் ஓய்வெடுக்க நினைத்தவன் அதனருகே கற்களைத் தாண்டி நடந்தான். அவன் அவ்வாறு தாண்டி செல்ல. அயர்ந்து உறங்கிய ஆழினியின் கரங்கள் விலக, அவன் மீதிருந்து கீழே விழுந்தாள்.
நன்றாக உறங்கிய பெண் இருந்திருந்தாற் போல விழவும், இம்முறை அதே காலில் இன்னொரு கீறலும் சேர்ந்தே விழ, துடித்துப் போனாள் பெண்.
விழுந்த இடமும் சிறு கற்கள் மண்டியிருந்த இடம்தான். கால்களெல்லாம் நறுக்கெனக் குத்தி வலியை இன்னும் கூட்டியது. அவளால் எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு வலி உயிர் போக, கீழ் உதட்டை மேல் பற்களால் அழுந்தக் கடித்து வலி பொறுக்க முயன்றவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீரானது தானாய் வலிந்தது.
இந்தக் கற்கள் இருக்குமிடத்திலிருந்து விலகினால் போதுமே, கொஞ்சம் வலி குறையுமென்று தோன்றவும், விழி உயர்த்தி தன்னையே உணர்வற்று நோக்குபவனைப் பார்த்தாள்.
“எப்படி விழுந்தேன்னு ஏதாவது லாஜிக் இல்லாத காரணம் சொல்லப் போறியா? காரணம் ஈஸியா சொல்லிடலாமே”
அவனது இரக்கமற்ற பேச்சானது மிளகாய் பொடியை தூவியது மாதிரி இன்னுமே எரிந்தது அவளுக்கு.
“என் மேலதான மங்கி மாதிரி உட்கார்ந்துட்டு வந்த? அதைக் கூட ஒழுங்கா செய்ய முடியாதா. என்னமோ கஷ்டப்பட்டு நடந்து வந்தது மாதிரி மல்லாக்க விழுந்து கிடக்கற? டாமிட். உன்னை அங்கயே வீசிட்டு வந்திருக்கணும். கொலை பண்ணிட்டு வந்தவளுக்கு இரக்கம் காட்டினேன்ல. அதான் ஏமாளி சிக்கிட்டான்னு வச்சு செய்யுற” அருகிலிருந்த கற்களை அவள் மீது உதைத்து தள்ளினான்.
பெண்களிடம் பழகியே இருக்காத மனிதனின் வாயிலிருந்துதான் இம்மாதிரிப்பட்ட பேச்சுகள் வரும்.
“நான் கொலைகாரின்னா உனக்கு அங்கென்ன வேல?” வலியிலும் அவமானத்திலும் வரவேண்டாம் என உள்ளே இழுத்தாலும் கண்ணீர் நிற்காமல் வழிந்திட, அவனையே வெறித்தவளுக்கு வெறுத்துப் போனது.
“வாவ். டெல் அகைன்?” அவள் கூந்தலை கொத்தாகப் பற்றி இழுத்தவன், “நான் யாருன்னு தெரியாம பேசாத. கொலைன்னு சொன்னாவே கோபம் வருதில்ல உனக்கு. பட் நான் அப்படியில்ல புரியுதா? கொன்னு வீசிட்டு போயிட்டே இருப்பேன்” அவனது பேச்சின் வீரியத்தில் பறவைகள் அச்சத்தில் சிறகடித்துப் பறந்து சென்றது அங்கிருந்து.
அவளோ அச்சத்தில் உறைந்து போய் அப்படியே அமர்ந்திருக்க, முழங்கால் வரையுமான உடைக்கும் கீழே ஏற்பட்ட காயத்திலிருந்து குறுதியானது இன்னும் வீரியமாய் சொட்டியது.